Monday, March 20, 2023

8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 2/3 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்



(புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 1/3  தொடர்ச்சி)

8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 2/3

நந்திக் கலம்பக ஆசிரியர் காதலனைப் பிரிந்திருக்கும் மகளிர், நிலவைப் பார்த்து,

பெண்ணிலா ஊரிற் பிறந்தாரைப் போலவரும்
வெண்ணிலா வேயிந்த வேகமுன க் காகாதே!”
– நந்திக் கலம்பகம்; தலைவி நிலவைப் பழித்தல்.

என்று குறிப்பிடுவதாகக் கவிதை படைத்துள்ளார். இவ்வாறு கவிஞர் பலர் கண்ட நிலவினைப் பாரதிதாசனின் கற்பனையுள்ளமும் காணுகின்றது; முகிழ்க்கின்றது. தேனார் செந்தமிழ்க் கவிதை:

முழுமை நிலாஅழகு நிலா
முளைத் ததுவிண் மேலேஅது
பழமையிலே புதுநினைவு
பாய்ந்தெழுந்தாற் போலே
……………………………………….
குருட்டுவிழியும் திறந்தது போல்
இருட்டில் வான விளக்கு
– இசையமுது ; நிலவு

இம்மட்டோடு நிற்கவில்லை கவிஞர். பிறிதோரிடத்தில் பசித்த மக்கள் பசியாற உண்ண உணவு தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண் சோற்றினைக் காணும் இன்பமே வெண்ணிலவைக் காணும் இன்பம் என்று வாழ் வோடு ஒப்புமைப்படுத்திக் காண்கின்றார்,

உனைக்காணும் போதினிலே என் உள்ளத்தில்
ஊறிவரும் உணர்ச்சியினை எழுதுதற்கு
நினைத்தாலும் வார்த்தை கிடைத் திடுவ தில்லை
நித்திய தரித்திரராய் உழைத்து ழைத்துத்
தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால்பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!
– — பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி : புரட்சிக்கவி.

புரட்சிக் கவி

பாரதிதாசன் அவர்கள் ‘புரட்சிக் கவி’ என்றே ஒரு நெடுங்கவிதையினைப் படைத்துள்ளார். பெயருக்கேற்பவே, இந்நெடுங்கவிதையில் பல்வேறு புரட்சிக் கருத்துகள் நிறைந்திலங்கக் காணலாம்.

காரிருளால் சூரியன்தான்
மறைவ துண்டோ?
கறைச்சேற்றால் தாமரையின்
வாசம் போமோ?
பேரெதிர்ப்பால் உண்மைதான்
இன்மை யாமோ?
பிறர் சூழ்ச்சி செந்தமிழை
அழிப்ப துண்டோ?
நேர் இருத்தித் தீர்ப்புரைத்துச்
சிறையிற் போட்டால்
நிறைதொழிலா ளர்களுணர்வு
மறைந்து போமோ?”

என்று ‘புரட்சிக் கவி’யில் முழங்குகின்றார் கவிஞர்,

முதலாவது நால்வருணம் என்று மக்களைப் பிரித்து வைத்த கயமைப் பண்பினைச் சாடுகின்றார் :

சித்தம் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு
இரத்தவெறி கொண்டலையும் நால்வருணம் ஏனிரங்கும்?”

என்று கேள்விக் குரல் எழுப்புகின்றார்.

ஏற்றக் குறைவற்ற இனியதொரு சமுதாயத்தினைப் படைப்பதே நோக்கமாக இருக்கவேண்டும் எனப் புரட்சிக் கவியிடம் அவன் காதலி அமுதவல்லி கூறக் காண்க :

சாதி உயர்வென்றும்
தனத்தால் உயர்வென்றும்
போதாக் குறைக்குப
பொதுத்தொழிலாளர் சமூகம்
மெத்த இழிவென்றும் மிகுபெரும்
பாலாரை யெல்லாம்
கத்திமுனை காட்டிக்
காலமெல்லாம் ஏய்த்துவரும்
பாவிகளைத் திருத்தப்
பாவலனே நம்மிருவர்
ஆவிகளை யேனும்
அர்ப்பணம் செய்வோம்

அரசென ஒருசாதிஅதற்கு
அயலென வேறொரு சாதியுண்டோ?”

என்றும்,

“… ….. …. அநீதிசெய்த
நவையுடைய மன்னனுக்கு நாட்டுமக்கள்
 ற்பாடம் கற்பியா திருப்பதில்லை

என்றும்,

“………… அவரெல்லாம் இந்தநேரம்
எலியாக முயலாக இருக்கின்றார்கள்!
ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன்
புலிவேடம் போடுகின்றான்பொதுமக் கட்குப்
புல்லளவு மதிப்பேனும் தருகின் றானா?”

என்றும்,

ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்
உண்டென்றால்இத்தேசம் ஒழிதல் நன்றாம்

என்றும் வரூஉம் புரட்சிக் கருத்துகள் நெஞ்சிலே என்றும் நிலையாகக் கொள்ளத் தக்கவைகளாம்,

சமுதாயப் புரட்சிக் கருத்துகள்

பாரதிதாசன் அவர்களின் நோக்கு. பெரிதும் சமுதாயச் சீர்திருத்தத்தினை நோக்கியே சிந்தித்துச் செயல்பட்டது எனலாம். சமுதாயத்தினைப் புரட்டிக் கீழ் மேலாக்கிப் புதுமையினைப் புகுத்திப் புதியதொரு மறுமலர்ச்சிச் சமுதாயத்தினைக் காணவேண்டுமென்று தம் வாழ்நாள் இறுதிவரையில் அயராது பாடுபட்டவர் அவராவர்.

மகளிர் சமுதாயத்தின் சரிபாதிப் பகுதியாவர்; ஏன் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர் அவரேயாவர். இறைவனையே உமையொருபாகனாகக் கண்ட இத்திரு நாட்டில், ‘இல்லாள்’ என்றும், ‘வாழ்க்கைத்துணை’ என்றும் திருவள்ளுவர் மகளிரைப் போற்றியெழுதிய இத்திருவிடத்தில், மகளிர் நிலை மதிப்பிற்குரியதாக இல்லை என்று பாடுகிறார், பாவேந்தர் அவர்கள்.

ஆடை அணிகலன்,
ஆசைக்கு வாசமலர்
தேடுவதும் ஆடவர்க்குச்
சேவித் திருப்பதும்
அஞ்சுவதும் நாணுவதும்
ஆமையைப்போல் வாழுவதும்
கெஞ்சுவது மாகக்
கிடக்கும் மகளிர்குலம்
மானிடர் கூட்டத்தில்
வலிவற்ற ஒர்பகுதி
– பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி : வீரத்தாய்

எனவே பெண் கல்வி இன்றியமையாதது என்பதனை,

கல்வியில் லாதபெண்கள்
களர்நிலம் அந்நிலத்தில்
புல்விளைந் திடலாம்நலல
புதல்வர்கள் விளைதல் இல்லை
கல்வியை யுடைய பெண்கள்
திருந்திய கழனிஅங்கே
நல்லறி வுடைய மக்கள்
விளைவது நவில வோநான்
– குடும்ப விளக்கு : இரண்டாம் பகுதி.

என்று திறமாகக் குறிப்பிட்டு, தந்தை பெண்ணுக்குக் கூறும் ‘இசையமுது’ பாடலில்,

தலைவாரிப் பூச்சூடி உன்னைப்பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை

என்று பெண் கல்வியின் இன்றியமையாமையினைக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்துப் பெண்ணுரிமை வேண்டி முதன் முதலில் கவிதையில் புரட்சி செய்தவர் என்பது கீழ்க்காணும் பாடற் பகுதியால் விளங்கும்.

பெண்ணுக்குப் பேச்சுரிமை
வேண்டாம் என் கின்றீரோ? –
மண்ணுக்குக் கேடாய்
மதித் தீரோ பெண்ணினத்தை?
பெண்ணடிமை தீருமட்டும்
பேசு ந் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்துவருதல்
முயற்கொம்பே!”
– சஞ்சீவி பர்வதத்தின் சாரல்.

‘காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டது இன்பம்’ என்பர் ஆன்றோர். ஒட்டும் இரண்டுள்ளத்தைத் தம்மில் ஓங்கிய காதலினைக் குட்டை மனத்தாலே கோபப் பெருக் காலே வெட்டிப் பிரிக்க வரும் வீணரைச் சாடி,

காதலிருவர்களும்தம்
கருத்தொருமித்த பின்
வாதுகள் வம்புகள் ஏன்இதில்
மற்றவர்க் கென்ன உண்டு

என்றும்,

“………… புவியேஇரண்
டெண்ணம் ஒருமித்தபின்
நின்று தடைபுரிந்தால்நீ
நிச்சயம் தோல்வி கொள்வாய்

என்றும்,

மண்படைப்பே காதலெனில் காதலுக்கு
மறுப்பெதற்குக் கட்டுப்பா டெதற்குக் கண்டார்?”

என்றும் கூறிக் காதல் மணத்தை வாழ்த்தி வரவேற்கின்றார்.

வயது முதிர்ந்த ஆடவனுக்கு இளம் பெண்ணொருத்தியைத் திருமணத்தில் தந்து இளமை வாழ்வினைப் பலியாக்கும் அநீதியினைச் சாடுகிறார்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Saturday, March 18, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 28

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 27 தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 16 தொடர்ச்சி

தானிய வருவாய்

நாங்கள் குன்னத்திற்குச் சென்ற காலம் அறுவடை நாள். அவ்வூரிலுள்ளவர்கள் நவதானியங்களுள் கம்பு, சோளம், சாமை, கேழ்வரகு, தினை முதலியவற்றைத் தங்கள் தங்களால் இயன்றவளவு கொணர்ந்து எங்களுக்கு அளித்தார்கள். அவற்றில் உபயோகப்படுவன போக மிகுந்தவற்றை நாங்கள் விற்று நெல்லாக மாற்றி வைத்துக்கொண்டோம்.

இராமாயணப் பிரசங்கம்

குன்னத்தில் நாட்டாண்மைக்காரர்கள் நான்கு பேர் இருந்தனர். அவர்களும் சிதம்பரம் பிள்ளையும் சேர்ந்து யோசித்து என் தந்தையாரைக் கொண்டு அருணாசலகவி இராமாயணத்தை இரவிற் பிரசங்கம் செய்வித்து செய்வித்துக் கேட்க விரும்பினார்கள் அவ்வாறே பிரசங்கம் தொடங்கப் பெற்றது தினந்தோறும் இரவில் சிதம்பரம் பிள்ளையின் வீட்டுத் திண்ணையில் அது நடைபெற்றது. அக்காலத்தில் என் சிறிய தகப்பனாரும் உத்தமதானபுரத்திலிருந்து வந்திருந்தார்.

இராமாயணப் பிரசங்கம் நன்றாக நடந்தது. ஊராருடைய ஆதரவு அதிகமாக இருந்தமையால் என் தந்தையாருக்கு மிக்க ஊக்கம் உண்டாயிற்று. அவரோடு சிறிய தந்தையாரும் சேர்ந்து கொண்டார். நானும் இடையிடையே பாடி வந்தேன். என் சாரீரம் பழக்கத்தால் வன்மை பெற்று வந்தது. அதனால் வரவர இராமாயணப் பிரசங்கத்தில் அதிகமாகப் பாடிவந்தேன். என் பாட்டைக் கேட்டவர்கள், “சிறு பையன் இப்படிப் பாடுகிறானே” என்று ஆச்சரியமடைந்தார்கள். அதனால் எனக்கும் ஊக்கம் உண்டாயிற்று. பிரசங்கத்திடையே என் தந்தையார் கம்பராமாயணத்திலிருந்து உசிதமான செய்யுட்களை இசையோடு சொல்லுவார். அக்காலத்தே சாதாரண சனங்களுக்கும் கம்பராமாயணத்திலே சுவை இருந்தமையால் அவருடைய பிரசங்கம் சபையோருடைய மனத்தை மிகவும் கவர்ந்தது. குன்னத்திலுள்ளோரும் அயலூரினரும் கூட்டமாக வந்து கூடினர். தந்தையார் சந்தோசத்தின் உச்சியிலிருந்து கதையை நடத்தி வந்தார். ஒவ்வொரு நாளும் சனங்களுக்கு உண்டான திருப்தி அதிகமாயிற்று.

இரண்டு மாத காலமாக இராமயணப் பிரசங்கம் நிகழ்ந்து வந்தது. யுத்த காண்டம் நடைபெறுகையில் ஒரு நாள். அனுமார் சஞ்சீவி மலையைக் கொணர்ந்து, பிரம்மாசுத்திரத்தால் கட்டுண்டு கிடந்த இலட்சுமணர் முதலியோரை எழுப்பின கட்டம் வந்தது. இலட்சுமணர் பிரம்மாசுத்திரத்தாற் கட்டுண்டு வீழ்ந்தது கண்டு இராமர் அடைந்த சோகத்தையும், அவர் சோகத்தால் மூர்ச்சையுற்றுக் கிடந்ததையும் கேட்டவர்கள் உருகினார்கள். தம்முடைய அநுபவத்தில் எவ்வளவோ துன்பங்களை உணர்ந்து புண்பட்டவராகிய என் தந்தையார் அந்தச் சோக இரசத்தைத் தாமும் அநுபவித்துப் பிறரும் அநுபவிக்கச் செய்தார். சோகம் நிரம்பிய அச்சமயத்தில் ‘அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்தார்; அதன் காற்றுப் பட்ட மாத்திரத்திலே இலட்சுமணர் முதலியோர் உயிர்த்து எழுந்தனர்’ என்ற விசயம் வரும்போது சோகக் கடலில் ஆழ்ந்திருந்த சனங்கள் அனைவரும் சந்தோச ஆரவாரம் செய்தனர். அவர்கள் இராமாயணக் கதையைக் கேட்பவர்களாகத் தோற்றவில்லை. போர்க்களத்தில் இருந்து இராம இலட்சுமணர் சோகத்தைக் கண்டு துயருற்றும் அனுமாரது வீரத்தைக் கண்டு சந்தோ சமடைந்தும் நிற்பவர்களைப்போல இருந்தனர். என் தந்தையாருக்கோ அரியிலூரைவிட்டுப் பிரிந்ததனால் உண்டான துயரம் பிரம்மாசுத்திரம் போல இருந்தது; குன்னத்திற் பெற்ற ஆதரவு சஞ்சீவி மலையைப் போலாயிற்று. இவ்வாறு துன்பமும் அதனைப் போக்கி நிற்கும் இன்பமும் அநுபவத்திலே ஒரு யுத்தக்காண்டத்தை உண்டாக்கினமையால் என் தந்தையார் அந்த அநுபவத்தைக் கொண்டு மிகவும் இரசமாகப் பிரசங்கம் செய்தார். சோகரசம் உள்ள இடங்களில் தாமே சோகமுற்றும் சந்தோசச் செய்தி வருமிடங்களில் தாமே மகிழ்ச்சியுற்றும் அவர் செய்த கதாப்பிரசங்கம் கேட்டவர்களுடைய உள்ளத்தைக் கவர்ந்தது.

அன்று கதை முடிந்தவுடன் எல்லாரும் என் தந்தையாரைப் பற்றிப் பாராட்டிப் பேசியதற்கு அளவில்லை. சிதம்பரம் பிள்ளை முதலியவர்கள், “இந்த இராமாயணம் இன்னும் சில நாட்களிற் பூர்த்தியாகிவிடும். இதை ஒரு தடவை கேட்ட மாத்திரத்தில் நமக்குத் திருப்தி யுண்டாகாது; பலமுறை கேட்க வேண்டும்” என்று ஆலோசித்தார்கள். ‘இவர்களை இந்த ஊரிலேயே நிரந்தரமாக இருக்கும்படி செய்ய வேண்டும்’ என்று எண்ணி அதற்குரிய ஏற்பாட்டையும் செய்யத் தொடங்கினார்கள். பிறகு சிதம்பரம் பிள்ளை முதலிய பன்னிரண்டு பேர்கள் மாதத்திற்கு ஒருவராக ஐந்தைந்து ரூபாய் கொடுப்பதென்று தீர்மானித்து அந்த விசயத்தை ஒரு பனை ஓலையில் எழுதி அப்பன்னிருவரும் கையெழுத்திட்டார்கள். அதை என் தந்தையாரிடம் கொடுத்து, “நாங்கள் செய்துள்ள இந்த ஏற்பாட்டை அங்கீகரித்துக் கொள்ளவேண்டும்” என்றார்கள். தந்தையார் ஏற்றுக்கொண்டு நன்றியறிவு புலப்படும் வார்த்தைகளைக் கூறிப் பாராட்டினார்.


அது முதல் ஒவ்வொரு மாதமும் தவறாமல் அவர்கள் உதவி கிடைத்து வந்தது. வேறு வகையில் கிடைத்த வரும்படிகளும் சேர்ந்தமையின் எங்கள் வாழ்க்கை சுகமாக நடைபெறலாயிற்று.

இராமாயண பட்டாபிசேகம் நடந்தபோது அவ்வூரினரும் பிறரும் பொதுவில் இருபது வராகன் (70 உரூபாய்) சேர்த்துக் கொடுத்தார்கள். குன்னத்திலேயே சுப்பராய படையாட்சி என்ற செல்வர் ஒருவர் இருந்தார். சிலருடைய முயற்சியால் அவர் வீட்டிலும் இராமாயணப் பிரசங்கம் நடைபெற்றது. பட்டாபிசேகக் காலத்தில் அவரிடமிருந்து என் தகப்பனாருக்கு இருபது வராகன் சம்மானம் கிடைத்தது. அவற்றைக் கொண்டு குடும்பக் கடனில் ஒரு பகுதியைத் தீர்த்துக் கொள்ளலாமென்று எந்தையார் எண்ணினார்.

ஆபரணம் பெற்ற அன்னையார்

என் பாட்டனாரது சிராத்தம் நடத்த எங்களை அழைத்துக்கொண்டு என் பிதா உத்தமதானபுரம் சென்றனர். தாம் கொணர்ந்திருந்த தொகையைக்கொண்டு தாம் நினைத்தவாறே குடும்பக் கடனில் ஒரு பகுதியை அடைக்க முயலும்போது பந்துக்களில் முதியவர்களாகிய சிலர் அவ்வாறு செய்வதைத் தடுத்தார்கள்; “இப்போதுதான் நீ ஏதோ சம்பாதித்துக்கொண்டு வந்திருக்கிறாய். உன் மனைவிக்கு ஒரு நகை கூட இதுவரையிற் பண்ணிப் போடவில்லை. முதலில் அவளுக்கு ஏதாவது தங்கத்தில் பண்ணிப் போடு. இவ்வளவு நாள் இருந்த கடனுக்கு இப்போது என்ன அவசரம்? இனிமேல் நீ சம்பாதிக்கப் போவதில்லையா? கடன் அடைபடாமலே நின்றுவிடப் போகிறதா? சரியான காலத்தில் திரீகளுக்கு நகை பண்ணிப் போட்டால்தானே அழகு? பிராயம் ஆன பிறகு போட்டு என்ன பயன்? நகை பண்ணிப் போட்ட பிறகு மிகுந்ததைக் கடனுக்குக் கொடு” என்று சொன்னார்கள்.

என் தாயாருக்கு அக்காலத்தில் திருமங்கலியம் ஒன்றுதான் தங்கத்தில் இருந்தது. மற்றவை எல்லாம் பித்தளையே. என் தந்தையார் உறவினர் கூறியதைக் கேட்டு அவ்வாறே அத்தொகையைக் கொண்டு காது ஓலை, குடைக் கடுக்கன், பஞ்ச கலசவாளி ஆகியவற்றைத் தங்கத்தாற் செய்வித்து என் தாயாருக்கு அணிவித்தார். என் தாயார் அவற்றை அணிந்துகொண்ட போது அடைந்த மகிழ்ச்சி இவ்வளவென்று சொல்ல முடியுமா? அரியிலூர்ப் பெருமாள் கோவில் வாசலில் நடந்த தீபாராதனையை அவரும் மறக்கவில்லை. அவர் காதிற் பொன்னகையும் முகத்திற் புன்னகையும் விளங்க நின்ற கோலம் என் கண்முன் நிற்கிறது.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.