(புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 1/3  தொடர்ச்சி)

8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 2/3

நந்திக் கலம்பக ஆசிரியர் காதலனைப் பிரிந்திருக்கும் மகளிர், நிலவைப் பார்த்து,

பெண்ணிலா ஊரிற் பிறந்தாரைப் போலவரும்
வெண்ணிலா வேயிந்த வேகமுன க் காகாதே!”
– நந்திக் கலம்பகம்; தலைவி நிலவைப் பழித்தல்.

என்று குறிப்பிடுவதாகக் கவிதை படைத்துள்ளார். இவ்வாறு கவிஞர் பலர் கண்ட நிலவினைப் பாரதிதாசனின் கற்பனையுள்ளமும் காணுகின்றது; முகிழ்க்கின்றது. தேனார் செந்தமிழ்க் கவிதை:

முழுமை நிலாஅழகு நிலா
முளைத் ததுவிண் மேலேஅது
பழமையிலே புதுநினைவு
பாய்ந்தெழுந்தாற் போலே
……………………………………….
குருட்டுவிழியும் திறந்தது போல்
இருட்டில் வான விளக்கு
– இசையமுது ; நிலவு

இம்மட்டோடு நிற்கவில்லை கவிஞர். பிறிதோரிடத்தில் பசித்த மக்கள் பசியாற உண்ண உணவு தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண் சோற்றினைக் காணும் இன்பமே வெண்ணிலவைக் காணும் இன்பம் என்று வாழ் வோடு ஒப்புமைப்படுத்திக் காண்கின்றார்,

உனைக்காணும் போதினிலே என் உள்ளத்தில்
ஊறிவரும் உணர்ச்சியினை எழுதுதற்கு
நினைத்தாலும் வார்த்தை கிடைத் திடுவ தில்லை
நித்திய தரித்திரராய் உழைத்து ழைத்துத்
தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால்பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!
– — பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி : புரட்சிக்கவி.

புரட்சிக் கவி

பாரதிதாசன் அவர்கள் ‘புரட்சிக் கவி’ என்றே ஒரு நெடுங்கவிதையினைப் படைத்துள்ளார். பெயருக்கேற்பவே, இந்நெடுங்கவிதையில் பல்வேறு புரட்சிக் கருத்துகள் நிறைந்திலங்கக் காணலாம்.

காரிருளால் சூரியன்தான்
மறைவ துண்டோ?
கறைச்சேற்றால் தாமரையின்
வாசம் போமோ?
பேரெதிர்ப்பால் உண்மைதான்
இன்மை யாமோ?
பிறர் சூழ்ச்சி செந்தமிழை
அழிப்ப துண்டோ?
நேர் இருத்தித் தீர்ப்புரைத்துச்
சிறையிற் போட்டால்
நிறைதொழிலா ளர்களுணர்வு
மறைந்து போமோ?”

என்று ‘புரட்சிக் கவி’யில் முழங்குகின்றார் கவிஞர்,

முதலாவது நால்வருணம் என்று மக்களைப் பிரித்து வைத்த கயமைப் பண்பினைச் சாடுகின்றார் :

சித்தம் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு
இரத்தவெறி கொண்டலையும் நால்வருணம் ஏனிரங்கும்?”

என்று கேள்விக் குரல் எழுப்புகின்றார்.

ஏற்றக் குறைவற்ற இனியதொரு சமுதாயத்தினைப் படைப்பதே நோக்கமாக இருக்கவேண்டும் எனப் புரட்சிக் கவியிடம் அவன் காதலி அமுதவல்லி கூறக் காண்க :

சாதி உயர்வென்றும்
தனத்தால் உயர்வென்றும்
போதாக் குறைக்குப
பொதுத்தொழிலாளர் சமூகம்
மெத்த இழிவென்றும் மிகுபெரும்
பாலாரை யெல்லாம்
கத்திமுனை காட்டிக்
காலமெல்லாம் ஏய்த்துவரும்
பாவிகளைத் திருத்தப்
பாவலனே நம்மிருவர்
ஆவிகளை யேனும்
அர்ப்பணம் செய்வோம்

அரசென ஒருசாதிஅதற்கு
அயலென வேறொரு சாதியுண்டோ?”

என்றும்,

“… ….. …. அநீதிசெய்த
நவையுடைய மன்னனுக்கு நாட்டுமக்கள்
 ற்பாடம் கற்பியா திருப்பதில்லை

என்றும்,

“………… அவரெல்லாம் இந்தநேரம்
எலியாக முயலாக இருக்கின்றார்கள்!
ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன்
புலிவேடம் போடுகின்றான்பொதுமக் கட்குப்
புல்லளவு மதிப்பேனும் தருகின் றானா?”

என்றும்,

ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்
உண்டென்றால்இத்தேசம் ஒழிதல் நன்றாம்

என்றும் வரூஉம் புரட்சிக் கருத்துகள் நெஞ்சிலே என்றும் நிலையாகக் கொள்ளத் தக்கவைகளாம்,

சமுதாயப் புரட்சிக் கருத்துகள்

பாரதிதாசன் அவர்களின் நோக்கு. பெரிதும் சமுதாயச் சீர்திருத்தத்தினை நோக்கியே சிந்தித்துச் செயல்பட்டது எனலாம். சமுதாயத்தினைப் புரட்டிக் கீழ் மேலாக்கிப் புதுமையினைப் புகுத்திப் புதியதொரு மறுமலர்ச்சிச் சமுதாயத்தினைக் காணவேண்டுமென்று தம் வாழ்நாள் இறுதிவரையில் அயராது பாடுபட்டவர் அவராவர்.

மகளிர் சமுதாயத்தின் சரிபாதிப் பகுதியாவர்; ஏன் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர் அவரேயாவர். இறைவனையே உமையொருபாகனாகக் கண்ட இத்திரு நாட்டில், ‘இல்லாள்’ என்றும், ‘வாழ்க்கைத்துணை’ என்றும் திருவள்ளுவர் மகளிரைப் போற்றியெழுதிய இத்திருவிடத்தில், மகளிர் நிலை மதிப்பிற்குரியதாக இல்லை என்று பாடுகிறார், பாவேந்தர் அவர்கள்.

ஆடை அணிகலன்,
ஆசைக்கு வாசமலர்
தேடுவதும் ஆடவர்க்குச்
சேவித் திருப்பதும்
அஞ்சுவதும் நாணுவதும்
ஆமையைப்போல் வாழுவதும்
கெஞ்சுவது மாகக்
கிடக்கும் மகளிர்குலம்
மானிடர் கூட்டத்தில்
வலிவற்ற ஒர்பகுதி
– பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி : வீரத்தாய்

எனவே பெண் கல்வி இன்றியமையாதது என்பதனை,

கல்வியில் லாதபெண்கள்
களர்நிலம் அந்நிலத்தில்
புல்விளைந் திடலாம்நலல
புதல்வர்கள் விளைதல் இல்லை
கல்வியை யுடைய பெண்கள்
திருந்திய கழனிஅங்கே
நல்லறி வுடைய மக்கள்
விளைவது நவில வோநான்
– குடும்ப விளக்கு : இரண்டாம் பகுதி.

என்று திறமாகக் குறிப்பிட்டு, தந்தை பெண்ணுக்குக் கூறும் ‘இசையமுது’ பாடலில்,

தலைவாரிப் பூச்சூடி உன்னைப்பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை

என்று பெண் கல்வியின் இன்றியமையாமையினைக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்துப் பெண்ணுரிமை வேண்டி முதன் முதலில் கவிதையில் புரட்சி செய்தவர் என்பது கீழ்க்காணும் பாடற் பகுதியால் விளங்கும்.

பெண்ணுக்குப் பேச்சுரிமை
வேண்டாம் என் கின்றீரோ? –
மண்ணுக்குக் கேடாய்
மதித் தீரோ பெண்ணினத்தை?
பெண்ணடிமை தீருமட்டும்
பேசு ந் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்துவருதல்
முயற்கொம்பே!”
– சஞ்சீவி பர்வதத்தின் சாரல்.

‘காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டது இன்பம்’ என்பர் ஆன்றோர். ஒட்டும் இரண்டுள்ளத்தைத் தம்மில் ஓங்கிய காதலினைக் குட்டை மனத்தாலே கோபப் பெருக் காலே வெட்டிப் பிரிக்க வரும் வீணரைச் சாடி,

காதலிருவர்களும்தம்
கருத்தொருமித்த பின்
வாதுகள் வம்புகள் ஏன்இதில்
மற்றவர்க் கென்ன உண்டு

என்றும்,

“………… புவியேஇரண்
டெண்ணம் ஒருமித்தபின்
நின்று தடைபுரிந்தால்நீ
நிச்சயம் தோல்வி கொள்வாய்

என்றும்,

மண்படைப்பே காதலெனில் காதலுக்கு
மறுப்பெதற்குக் கட்டுப்பா டெதற்குக் கண்டார்?”

என்றும் கூறிக் காதல் மணத்தை வாழ்த்தி வரவேற்கின்றார்.

வயது முதிர்ந்த ஆடவனுக்கு இளம் பெண்ணொருத்தியைத் திருமணத்தில் தந்து இளமை வாழ்வினைப் பலியாக்கும் அநீதியினைச் சாடுகிறார்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்