Sunday, August 20, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 11 : நடுப் பருவம்

      21 August 2023      அகரமுதல



(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 10 : தாய் மரணம் – தொடர்ச்சி)

என் சுயசரிதை : அத்தியாயம் 5. நடுப் பருவம்

பி.ஏ. தேறினவுடன், நான் வழக்குரைஞராக வேண்டுமென்று தீர்மானித்து சட்ட வகுப்பில் சேர்ந்தேன். சட்டக்கல்லூரியில் படித்தபோது பெரும்பாலும் எங்கள் தகப்பனார் புதிதாய் கட்டிய எங்கள் எழும்பூர் பங்களாவிலிருந்து கல்லூரிக்கு மிதிவண்டியில் போய்க்கொண்டிருந்தேன். இந்தச் சட்டக்கல்லூரியில் நான் சேர்ந்தவுடன் நான்கைந்து வருடங்களாக என்னை விட்டுப்பிரிந்த என் உயிர் நண்பராகிய வி. வி. சீனிவாச ஐயங்கார் தானும் பி.ஏ. பரிட்சையில் தேறினவராய் என்னுடன் சேர்ந்தார். அவர் அப்படி சேர்ந்தவுடன் எங்கள் பழைய ஏற்பாட்டின்படி எப்பொழுதும் வகுப்பில் நாங்களிருவரும் ஒன்றாய் உட்கார்ந்து பேசிக் கொண்டு காலங்கழிப்போம். இதற்கு ஒத்தாசையாக நான் முன்பு கூறிய வாமன்பாய், சீனிவாச பாட்(டு) என்னும் இரண்டு மங்களூர் நண்பர்களும் கே. ஆர். சீதாராம ஐயரும் சேர்ந்தார்கள். எந்த வகுப்பிலும் நாங்கள் பஞ்சபாண்டவர் களைப்போல் எந்நேரமும் உட்கார்ந்து பேசிகொண்டிருப்போம், வாசுதவமாய் சொல்லுமிடத்து.

நான் சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது 1895-ஆம் வருடம் என் ஆயுளில் மற்றொரு துக்ககரமான சம்பவம் நேர்ந்தது. அதாவது அவ்வருடம் மே மாதம் 26-ந் தேதி என் தந்தை சிவலோகப்பிராப்தி ஆனார். உண்மையைக் கூறுமிடத்து அவரது மரணம் என் தாயாரின் மரணத்தைப் போல் அவ்வளவு துக்க சாகரத்தில் ஆழ்த்தவில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர் மரணத்திற்கு 6 மாதம் முன்பாகவே ஓர் கொடிய வியாதியால் அவர் துன்பப்பட்டபோது இனி இதனின்றும் அவர் பிழைப்பது அரிது என்று வைத்தியர்கள் எங்களுக்கு தெரிவித்ததேயாம். அக்காலம் முதல் கொஞ்சம் கொஞ்சம் இனி வரப்போகிற துக்ககரமான சம்பவத்திற்கு நமது மனத்தைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முயன்று வந்தேன். ஆயினும் சிலகாலம் பொறுத்தே என் மனத்தைத் தேற்றிக்கொள்ள சக்தி பெற்றேன். அவற்றையெல்லாம் பற்றி இதைப் படிக்கும் எனது நண்பர்களுக்கு எழுதுவானேன்? இச் சந்தர்ப்பத்தில் ஓர் ஆங்கில கவி எழுதிய இரண்டு அடிகள் ஞாபகம் வருகிறது. அதன் மொழி பெயர்ப்பை எழுதுகிறேன். “சிரித்தையேல் உலகெல்லாம் சிரித்திடும் உன்னுடன், அழுதையேல் நீதான் தனியாக அழவேண்டும்” அன்று முதல் ஒரு தீர்மானம் செய்து கொண்டேன். அது என் சந்தோசத்தை உலகுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். என்னுள்ளே என் துயரத்தை அடக்கிக்கொள்ள வேண்டும் என்பதாம்.

என் தந்தையின் தேக அசௌக்கியத்தின் காரணத்தினாலோ அப்பொழுது சுகுணவிலாச சபைக்காக தமிழ் நாடகங்களை எழுதி அவற்றில் நடித்த காரணத்தினாலோ நான் சட்டப் புத்தகங்களைச் சரியாகப் படிக்கவில்லை. இவ்வருசம் முதல் சட்டப் பரிட்சைக்கு (First Examination in Law) போனபோது நான் தேறுவேனோ என்னவோ என்று சந்தேகப் பட்டேன். ஆயினும் தெய்வாதீனத்தால் அதில் தேறினேன்.

1896-ஆம் வருசம் கடைசியில் திசம்பர் மாதம் பரிட்சையில் நாலும் சீனிவாச ஐயங்காரும் தேறினோம். அந்த பரிட்சைக்காக நாங்களிருவரும் ஒன்றாய்ப் படித்தோம் எங்கள் சடடப் புத்தகங்களை.

1897-ஆம் வருசம் சட்டப் பரிட்சையில் தேறி நாங்களிருவரும் உயர்நீதிமன்றத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தோம். சீனிவாச ஐயங்கார் சேம்சு சார்ட்டுசு (James Sharts) என்பவரிடம் பயிற்சியாளராகச் சேர்ந்தார். நான் சிறுவழக்கு நீதிபதியாயிருந்து பெயர் பெற்ற இரங்கநாத சாத்திரியாரின் குமாரரான சுந்தரம் சாத்திரியாரிடம் பயிற்சியாளனாகச் சேர்ந்தேன். என் தமையனாராகிய, அச்சமயம் உயர்நீதிமன்ற வழக்குரைஞராக நடவடிக்கை நடத்திக்கொண்டிருந்த ஐயாசாமி முதலியாரின் அபிப்ராயப்படி என் துர் அதிர்ட்டத்தினால் சுந்தரம் சாத்திரியார் 4 மாதத்திற்குள்ளாக தேகவியோகமாக அவரது குமாரர் பிறகு உயர்நீதிமன்ற நீதிபதியாகிய குமாரசாமி சாத்திரியாரிடம் பயிற்சியாளனாக அமர்ந்தேன். 1897-ஆம் வருசம் முழுவதும் ஏறக்குறைய சீனிவாச ஐயங்காரும் நானும் வெவ்வேறு உபாத்தியாயர்களிடம் நீதிமன்றத்தில் நிருவகிக்கவேண்டிய விசயங்களைக் கற்க வேண்டியவர்களாய் இருந்தபோதிலும் இருவரும் ஒன்றாய் சேர்ந்து நீதிமன்றங்களைச் சுற்றி, பேசிக் கொண்டு வேடிக்கையாய் காலங்கழிப்போம். ஒவ்வொரு நாட்களில் ஏதாவது பிரிய வேண்டி யிருந்தபோதிலும் மத்தியானம் சிற்றுண்டி சாப்பிடுவதற்காக ஒருங்கு சேர்வோம். சாயங்காலங்களில் இருவரும் சுகுணவிலாச சபைக்கு ஓடிப் போவோம்!

வெளிப்படையாகக் கூறுமிடத்தில் முதல் வருசமெல்லாம் நீதிமன்றங்களைச் சுற்றி வேடிக்கைப் பார்ப்பதிலேயே கழித்தேன். 1898-ஆம் வருசம் ஆரம்பத்தில் ‘நாம் வழக்குரைஞனாக நீதிமன்ற ஆவணங்களில் பதிப்பிக்கபட்டு பதிவு(enrol) ஆகி வழக்குரைஞர் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கவேண்டுமே’ என்று பயந்தவனாய் 6 மாதம் சேம்சு சார்ட்டுசு அலுவலகத்தில் வி. வி. சீனிவாச ஐயங்காருடன் ஒத்துழைத்து நீதிமன்ற நடவடிக்கைகளை நடத்தும் விதங்களையெல்லாம் சற்றேறக்குறைய முழுவதும் கற்றுக் கொண்டேன். குமாரசாமி சாத்திரியார் அவர்களிடம் வித்தியார்த்தியாய் இருந்தபோதிலும் அவாது அலுவலகத்தில் நான் அதிகமாக ஒன்றும் கற்றவனன்று. இது அவர் தப்பிதம் அல்ல. என் தப்பிதம் தான் என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டும். 1898-ஆம் வருசம் சூலை மாதம் நான் உயர்நீதிமன்ற வழக்குரைஞனாகப் பதிவு(enrol} செய்யப்பட்டேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, August 19, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 1/2

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 48 : மாயூரப் பிரயாணம் 2/2 தொடர்ச்சி)

அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 1/2

மாயூரத்திற்கு நாங்கள் காலையில் வந்தசேர்ந்தோம். உடனே என் தந்தையார் குளியல் முதலியன செய்துவிட்டுப் பூசை செய்யத் தொடங்கினார். என் தாயார் இல்லாத காலங்களில் அவரது பூசைக்கு வேண்டிய பணிவிடைகளை நானே செய்வது வழக்கம். அவ்வாறே அன்றும் செய்தேன். அன்று புரிந்த பூசையில் என் நல்வாழ்வைக் குறித்து அவர் கடவுளைப் பிரார்த்தித்து உருகியிருக்க வேண்டுமென்று தெரிந்தது.

பூசைக்குப் பின் போசனம் செய்தோம். அப்பால் தந்தையார் சிரமபரிகாரம் பண்ணிக்கொண்டார். பிறகு பிற்பகல் மூன்று மணியளவில் நானும் அவரும் பிள்ளையவர்களைப் பார்க்கப் புறப்பட்டோம். போகும் வழியில் சிரீ மாயூரநாதர் ஆலயம் இருந்தமையின் உள்ளே சென்று சுவாமி சந்நிதானத்தில் நமசுக்காரம் செய்துவிட்டுச் சென்றோம்.

அக்காலத்தில் பிள்ளையவர்கள் மாயூரத்தில் திருவாவடுதுறை யாதீனத்துக்குரிய கட்டளை மடத்தை அடுத்து மேல்பாலுள்ள வீட்டில் இருந்து வந்தனர். நாங்கள் அவ்வீட்டிற்குச் சென்றோம்.

இருவர்

அங்கே முன்கட்டில் இருவர் இருந்தனர். அவருள் ஒருவர் விபூதி உருத்திராட்சம் தரித்துக்கொண்டு விளங்கினார். என் தந்தையாரும் நானும் அவரையே பிள்ளையவர்களென்று எண்ணினோம். மற்றொருவரிடம் மெல்ல என் தந்தையார், “பிள்ளையவர்கள் இவர்களா?” என்று கேட்டார். அவர் என் தந்தையாரது தோற்றத்தில் ஈடுபட்டு இனிய முகத்தினராகி, “இவர் திருவாவடுதுறை மகாலிங்கம் பிள்ளை” என்று கூறினார்.

உடனே தந்தையார், “மகாவித்துவான் பிள்ளையவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்று கேட்டனர்.

இந்த இரண்டு கேள்விகளுக்கும் இடையே மிகவும் சிறிதளவு காலமே சென்றிருக்கும். அதற்குள் என் மனத்தில் பயமும் சந்தேகமும் இன்பமும் மாறிமாறிப் பொருதன. அங்கே பிள்ளையவர்கள் இல்லையென்பதை அறிந்தவுடன், “அவர்கள் எங்கேயாவது வெளியே சென்றிருக்கலாம்” என்ற எண்ணம் எனக்கு முதலில் தோற்றவில்லை. “அவர்கள் ஊரில் இல்லையோ? வெளியூருக்குச் சென்றிருக்கிறார்களோ! நாம் வந்த காரியம் இப்போது கைகூடாதோ? நாம் திரும்பி ஊருக்குப்போக நேர்ந்துவிடுமோ?” என்று பலவாறு எண்ணினேன்.

“இந்த வீட்டின் பின்புறத்துள்ள தோட்டத்தில் வேலை நடப்பதால் பிள்ளையவர்கள் அதைக் கவனித்துக் கொண்டு அங்கே இருக்கிறார்கள்” என்று அக்கனவான் கூறினார். அப்போதுதான் எனக்குத் தைரியம் உண்டாயிற்று.

என் தந்தையாரிடம் பேசிக்கொண்டிருந்தவர் மாயூரத்துக்கு அருகிலுள்ள குற்றாலம் என்னும் ஊரினராகிய தியாகராசமுதலியாரென்னும் செங்குந்தச் செல்வர். பிள்ளையவர்களைக்கொண்டு அந்தத் தலத்தின் புராணத்தைத் தமிழில் இயற்றுவித்தவர். அப்புராணம் திருத்துருத்திப் புராணம் என வழங்கும்.

என் தந்தையார் அங்கிருந்த மற்றொருவராகிய மகாலிங்கம் பிள்ளையைப் பார்த்து, “திருவாவடுதுறைக் கந்சாமிக் கவிராயரை உங்களுக்குத் தெரியுமா? அவர் சௌக்கியமாக இருக்கிறாரா?” என்று கேட்டார்.

“அவர் சில காலத்திற்கு முன்பு சிவபதம் அடைந்தார்” என்று அவர் விடை கூறினார்.

தந்தையார் அச்செய்தியைக் கேட்டு வருத்தமடைந்தார். கந்தசாமிக் கவிராயர் என் பிதாவுக்குப் பழக்கமானவர். திருவாவடுதுறை யாதீன வித்துவானாக இருந்தவர், அரியிலூர்ச் சடகோபையங்காரின் ஆசிரியர். என்னை அவரிடம் படிக்கச் செய்யலாமென்று எந்தையார் நினைத்ததுண்டு. அவருக்கும் தமக்கும் பழக்கம் உண்டென்றும் மிக்க அடக்கம் உள்ளவரென்றும் கூறி அவருடைய குணவிசேடங்களைப் பற்றித் தந்தையார் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கே பிள்ளையவர்களுடைய தவசிப்பிள்ளை(பூசைப்பணியாள்) ஒருவர் வந்தார். அவரிடம் என் தகப்பனார் பிள்ளையவர்களை நாங்கள் பார்க்க வந்திருக்கும் செய்தியைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அவர் அங்ஙனமே போய்ச் சொல்ல, பிள்ளையவர்கள் நாங்கள் இருந்த இடத்திற்கு வந்தனர்.

முதற் காட்சி

அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப்போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சியடைந்த தோற்றமும் இளந்தொந்தியும் முழங்கால் வரையில் நீண்ட கைகளும் பரந்த நெற்றியும் பின்புறத்துள்ள சிறிய குடுமியும் இடையில் உடுத்திருந்த தூயவெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வரென்று தோற்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை; ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பதுபோன்ற அமைதியே தோற்றியது. கண்களில் எதையும் ஊடுருவிப்பார்க்கும் பார்வை இல்லை; அலட்சியமான பார்வை இல்லை; தம் முன்னே உள்ள பொருள்களில் மெல்லமெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வைதான் இருந்தது.

அவருடைய நடையில் ஓர் அமைதியும், வாழ்க்கையில் புண்பட்டுப் பண்பட்ட தளர்ச்சியும் இருந்தன. அவருடைய தோற்றத்தில் உத்சாகம் இல்லை; சோம்பலும் இல்லை. படபடப்பில்லை; சோர்வும் இல்லை. அவர் மார்பிலே உருத்திராட்ச கண்டி விளங்கியது.

பல காலமாகத் தவம்புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாசகனைப்போல நான் இருந்தேன்; அவனுக்குக் காட்சியளிக்கும் அத்தெய்வம்போல அவர் வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என் மனத்தில் உத்சாகம் பொங்கி அலை எறிந்தது. அதன் விளைவாக ஆனந்தக்கண்ணீர் துளித்தது அத்துளி இடையிடையே அப்புலவர்பிரானுடைய தோற்றத்தை மறைத்தது. சுற்றிலுமுள்ள எல்லாவற்றையும் விலக்கிவிட்டு அவரது திருமேனியில் உலவிய என் கண்கள் அவர் முகத்திலே பதிந்துவிட்டன.

வந்த காரியம் என்ன?

அவர் வந்தவுடன் நின்றுகொண்டிருந்த எங்களை உட்காரும்படிச் சொன்னார். அந்தத் தொனியிலும் அமைதியைத்தான் நான் உணர்ந்தேன். எல்லாம் சாந்தமயமாக இருந்தன. அவரும் அமர்ந்தார்; என் தகப்பனாரைப் பார்த்து, “நீங்கள் யார்? வந்த காரியம் என்ன?” என்று விசாரித்தனர்; அவ்வார்த்தைகள் அன்புடன் கலந்து வெளிவந்தன.

“நாங்கள் பாபநாசத்துக்குப் பக்கத்திலுள்ள உத்தமதானபுரத்திலிருந்து வருகிறோம். தங்களைப் பார்க்கத்தான் வந்தோம். இவன் என் குமாரன். தமிழ் படித்து வருகிறான். சிலபேரிடம் பாடம் கேட்டிருக்கிறான். சங்கீதமும் அப்பியாசம் செய்திருக்கிறான். தங்களிடம் பாடம் கேட்க வேண்டுமென்று மிகுந்த ஆவல்கொண்டிருக்கிறான். தமிழைத் தவிர வேறு ஒன்றிலும் இவன் புத்தி செல்லவில்லை. எப்போதும் தங்கள் ஸ்மரணையாகவே இருக்கிறான். ஆகையால் தங்களிடம் இவனை அடைக்கலமாக ஒப்பித்துவிட்டுப் போக வந்தேன்.”

“உங்கள் பெயர் என்ன?”

“என் பெயர் வேங்கடசுப்பன் என்பர். இவன் பெயர் வேங்கடராமன்” என்றார் என் தந்தையார்.

“வேங்கடசுப்பனென்பது நல்ல பெயர். வேங்கட சுப்பிரமணியனென்பதன் மரூஉ அது. திருவேங்கட மலையில் முருகக் கடவுள் கோயில்கொண்டிருக்கிறாரென்பதற்கு இந்த வழக்கு ஓர் ஆதாரம்.”

அவர் பேச்சிலே ஒரு தனி இனிமையை நான் உணர்ந்தேன். “சாதாரணமாகப் பேசும்போதே அருமையான விசயம் வெளிவருகின்றதே!” என்று நான் ஆச்சரியம் அடைந்தேன். பிறகு பிள்ளையவர்கள் என்னைப் பார்த்து, “நீர் யார் யாரிடம் என்ன என்ன நூல்களைப் பாடங் கேட்டிருக்கிறீர்?” என்று வினவினர். நான் மெல்ல என் வரலாற்றைச் சொன்னேன்; சடகோபையங்காரிடம் படித்தது முதல் செங்கணம் விருத்தாசல ரெட்டியாரிடம் காரிகைப் பாடம் கேட்டது வரையில் விரிவாக எடுத்துரைத்தேன்.

“இவருக்கு இசையில் எந்த மட்டும் பயிற்சி உண்டு?” என்று என் தந்தையாரை நோக்கி அவர் கேட்டார். சங்கீதத்தை இசையென்று அவர் சொல்லியதை நான் கவனித்தேன். தாம் எனக்குச் சங்கீதத்தை முறையாகக் கற்பித்து வந்ததை என் தந்தையார் தெரிவித்தார். அப்பால் தாம் கனம் கிருட்டிணையரிடம் குருகுலவாசம் செய்து சங்கீதம் கற்றதையும் சொன்னார்.

“இந்த ஊரிலுள்ள கோபாலகிருட்டிண பாரதியாரைத் தெரியுமோ?” என்று பிள்ளையவர்கள் கேட்டனர்.

“நன்றாகத் தெரியும். அவரும் கனம் கிருட்டிணையரிடம் சிலகாலம் அப்பியாசம் செய்ததுண்டு.”

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.

Sunday, August 13, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 10 : தாய் மரணம்

      14 August 2023      No Comment



(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 9 தொடர்ச்சி)

‘என் சுயசரிதை’ 10 : தாய் மரணம்


முதலில் துக்ககரமானதைப்பற்றி எழுதுகிறேன். இவ் வருசம் செப்டம்பர் மாதம் 10-ஆந்தேதி என் தெய்வத்தின் ஒரு கூறான என் தாயார் திடீரென்று வாந்திபேதி கண்டு சிவலோகப் பிராப்தி அடைந்தார்கள். இது பகற்காலத்தில் வானம் களங்கமில்லாமலிருக்கும்போது இடி விழுந்தது போல் என்னை மகத்தான துயரத்தில் ஆழ்த்தியது. இனி நமக்கு இவ்வுலகில் சந்தோசமே கிடையாதென்று நினைத்தேன். ஆயினும் சற்றேறக்குறைய மூன்று மாதத்திற்குள் அவர்கள் இறந்ததே நலம் என்று சந்தோசப்பட்டேன். இதற்குக் காரணம் அந்த மூன்று மாதத்தின் பிறகு என் கடைசித் தங்கை தனது 16-வது வயதிற்குள் தன் புருசனை இழந்து விதவையானதேயாம். இது நேர்ந்தபோது அக்கோர சம்பவத்தைக் காணாது என் தாயார் இறந்ததே நலமென்று உறுதியாய் நம்பினேன். என் தாயார் உலகில் ஒரு பெண்மணி அனுபவிக்கவேண்டிய சுகங்களையெல்லாம் அனுபவித்தே இறந்தார்கள் என்று நான் கூறவேண்டும். தனது எட்டு குழந்தைகளுக்கும் விவாகமாகி (எனக்கு 1890-ம் வருசம் விவாகமானது) பேரன் பேத்திகளெடுத்து தன் கணவனுக்கு சசுட்டிபூர்த்தியாகி சுமங்கலியாய் ஒரு மாங்கல்யத்திற்கு இரண்டு மாங்கல்யங்களாகப்பெற்று சிவ சாயுக்தமடைந்தது வருந்தத்தக்க விசயமல்ல என்று என் மனதைத் தேற்றிக் கொண்டேன். அவர்களுடைய உடல் அவர்கள் கோரிக்கையின்படியே சமாதியில் வைக்கப்பட்டது.

இரண்டாவது சம்பவம் என் ஆயுளுள் நேரிட்டவைகளுள் மிகவும் சந்தோசகரமானது. இவ் வருசம் கோடைக்கால விடுமுறையில் காலஞ்சென்ற ஆந்திர நாடகப் பிதா மகன் என்று கௌரவப் பெயர் பெற்ற வெ. கிருட்டிணமாச்சார்லு என்பவர் பல்லாரியிலிருந்து சென்னைக்கு வந்து தான் ஏற்படுத்திய சரச வினோத சபை அங்கத்தினருடன் தெலுங்கு நாடகமாட அதற்கு ஓர் இரவு நான் என் தகப்பனாருடன் போய்ப் பார்க்கும்படி நேரிட்டதேயாம். இதுதான் பிற்காலம் நான் தமிழ் நாடகங்கள் எழுதுவதற்கும், தமிழ் நாடகங்களில் நடிப்பதற்கும் அங்குரார்ப்பணமாயிருந்த சம்பவம். இதைப்பற்றி விவரமெல்லாம் அறிய விரும்புவோர் எனது “நாடக மேடை நினைவுகள்” என்னும் புத்தகத்தில் கண்டு கொள்ளும்படி வேண்டுகிறேன், பி.ஏ. சரித்திர பரிட்சையில் நேரிட்ட இன்னெரு விசயத்தை இங்கு எழுதுகிறேன். நான் மாநிலக் கல்லூரியிலிருந்தும், வி. வி. சீனிவாச ஐயங்கார் பச்சையப்பன் கல்லூரியிலிருந்தும் போனோம். இப்பரிட்சைக்கு. இருவரும் பேரவை இல்லத்தில்(செனெட் அவுசில்) பரிட்சைக்காக, தினம் சந்தித்து மத்தியான போசன காலத்தில் ஒன்றாய் உட்கார்ந்து பேசுவது வழக்கம். பரிட்சையில் ஒருநாள் மத்தியானம் பேசிக் கொண் டிருந்தபோது எனது நண்பர் “சம்பந்தம், நான் சரித்திரத்தில் சிறப்புப் பாடப் புத்தகத்தை நன்கு படிக்கவில்லை. சாயங்காலப் பரிட்சைத்தாளில் என்ன கேட்கப் போகிறார்கள் சொல் பார்ப்போம்” என்று சொன்னார். நான் யோசித்து “இந்த யுத்தத்தைப் பற்றி கேள்வி வரலாம் என்று நினைக்கிறேன்” என்று சொல்லி அதன் விவரங்களைச் சொல்லி வைத்தேன். உடனே பரிட்சை மணி அடிக்க இருவரும் தேர்வுக்கூடத்துக்குப் போய் உட்கார்ந்தோம். இருவர்களுடைய பெயர்களும் S எனும் ஆங்கில எழுத்தில் ஆரம்பமாகிறபடியால் எங்கள் நாற்காலிகள் சற்று அருகாமையிலிருந்தன. பரிட்சைக்காகிதம் (Examination paper) எங்களுக்குக் கொடுக்கப் பட்டவுடன் அதில் நான் ‘சோசியம்’ சொன்ன கேள்வியே கேட்டிருந்தது! இதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். வி.வி. சீனிவாச ஐயங்காரும் ஆச்சரியப்பட்டு புன்முறுவலுடன் என்னைப் பார்த்தது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது.


1892-ஆம் வருசம் மாநிலக் கல்லூரியில் இன்னொரு வருசம் படித்தேன். ஆங்கிலம் தமிழ் பரிட்சைகளில் முதல் வகுப்பில் தேறினதுபோல் சரித்திரம் (History) பிரிவிலும் முதல் வகுப்பில் தேற வேண்டுமென்று நான் ஆசைப்பட்டதே இதற்குக் காரணம் தெய்வத்தின் கருணையினால் என் கோரிக்கையின்படியே முதல் வகுப்பில் தேறினேன். அன்றியும் இப் பரிட்சையில் முதல் வகுப்பில் தேறினவன் நான் ஒருவன்தான் மாகாண முழுவதிலும். இதைப்பற்றி சில விவரங்கள் எழுத இச்சைப்படுகிறேன். நான் மாநிலக் கல்லூரியில் படித்த போது சரித்திரத்தில் முதலாவதாகத் தேறினதற்காக, கார்டன் பரிசும், தமிழில் முதலாவதாக தேறியதற்காக, போர்டீலியன் பரிசும் பெற்றேன். அன்றியும் தமிழ் வியாசப் பரிட்சையில் முதலாவதாக இருந்ததற்காக நார்டன் தங்கப் பதக்கம் (Norton gold medal) பெற்றேன். பிறகு பவர் வர்னாகுலர் பரிசும் பெற்றேன். இப்பரிசு ஆமர்டன் என்னும் அமெரிக்க ஆசிரியர் எழுதிய ஒரு புத்தகத்தில் சில பாகங்களை மொழி பெயர்த்ததற்காகக் கொடுக்கப்பட்டது. மேற்கண்ட மூன்று பரிசுகளின் மொத்த தொகை எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் சுமார் உரூபாய் 144 ஆயிற்று. இதற்காக கொடுக்கப்பட்ட காசோலையை என் தகப்பனாரிடம் கொடுத்து சந்தோசப்பட்டேன். அவரும் சந்தோசப்பட்டார்.


1893-ஆம் வருசம் நான் பி.ஏ. பட்டம் பெற்றபோது சென்னை சர்வ கலாசாலையாரால் சரித்திரத்தில் முதலாவதாக தேறினதற்காக நார்த்விக் (Northwick) பரிசு கொடுக்கப்பட்டது.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, August 12, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 48 : மாயூரப் பிரயாணம் 2/2

 


(உ.வே.சா.வின் என் சரித்திரம் 47 : மாயூரப் பிரயாணம் 1/2 தொடர்ச்சி)

என் சரித்திரம் – பாகம் 2

மாயூரப் பிரயாணம் 2/2

“என்ன செய்வது! நம்முடைய கால வித்தியாசம் இப்படி இருக்கிறது. இதுவரையிலும் அவன் படிப்பையே முக்கியமாக எண்ணி எங்கெங்கே போனால் அவன் படிப்பும் நம் காலட்சேபமும் நடைபெறுமோ அங்கங்கெல்லாம் போய் இருந்தோம். இப்போதோ மாயூரத்தில் நாம் போய் இருப்பது சாத்தியமன்றே! கிராமங்களில் உள்ள சனங்களைப் போல நகரவாசிகள் நம்மை ஆதரிக்க மாட்டார்களே! தவிர, அரியிலூரைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருப்பவர்கள் என்னிடம் அபிமானமுள்ளவர்கள். மாயூரத்தில் அப்படி யார் இருக்கிறார்கள்? இவனுக்கே ஆகாரம் முதலிய சௌகரியங்கள் கிடைக்குமோவென்று சந்தேகப்படுகிறேன். அவற்றிற்கு வேண்டிய ஏற்பாடு செய்யப் பணம் வேண்டும். பணத்திற்கு என்ன செய்வது!” என்று என் தந்தையார் வருந்தினார்.

மந்திரோபதேசம்

“ஈசுவர சகாயம் இருந்தால் எல்லாம் கை கூடும” என்ற கொள்கையையுடைவர் என் தந்தையார். சிவபூசை, மந்திர சபம் முதலியவற்றில் அவருக்கு நம்பிக்கை அதிகம். எனக்குச் சில மந்திரங்களைத் தக்கவர்களைக்கொண்டு உபதேசம் செய்விக்கவேண்டுமென்று அவர் கருதினார்.

உத்தமதானபுரத்திற்கு வடக்கிலுள்ள தியாகசமுத்திரமென்னும் ஊரில் நீலகண்டைய ரென்பவர் கிராமக் கணக்கு வேலைபார்த்து வந்தார். அவருக்கும் என் தந்தையாருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்தது. அவர் சங்கீதப் பயிற்சி உடையவர். கனம் கிருட்டிணையருடைய கீர்த்தனங்கள் பல அவருக்குத் தெரியும். மந்திர சாத்திரத்திலும் அவர் வல்லவர். பல தெய்வங்களை உபாசித்து வந்தார். பலவகையான மந்திர சபங்களையும் யந்திர பூசையையும் அவர் செய்து வந்தார். சர்ப்ப விசத்தைப் போக்குவதில் நிபுணர். நல்லபாம்பு கடித்து மயக்கமுற்ற ஒருவனை ஞாபகமே இல்லாத நிலையில் அவரிடம் எடுத்து வந்தால் பத்து நிமிசத்தில் மந்திரித்து அவன் தானே எழுந்து நடந்து செல்லும்படி செய்வார்.

என் தந்தையார் அவரிடத்தில் என்னை அழைத்துச் சென்று சிரீ வல்லபகணபதி மந்திரம், சிரீ நீலகண்ட மந்திரம், சிரீ சுப்பிரமணிய சடாட்சரம் என்பவற்றை உபதேசம் செய்யச் சொன்னார். அவர் அவற்றை உபதேசித்து, “உனக்கு மேலும் மேலும் சௌக்கியம் உண்டாகும்” என்று ஆசீர்வாதம் செய்தார். சில தினம் அவரோடு இருந்து பழகிய பின் அவரிடம் விடைபெற்று உத்தமதானபுரம் வந்து சேர்ந்தோம்.

பிரயாண ஏற்பாடு

மாயூரப் பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினோம். என் தந்தையார் கையிலோ பணம் இல்லை. அதனை அறிந்து அவர் நண்பரும் உத்தமதானபுரத்துக்கு மிகவும் சமீபமான உத்தமதானி என்னும் ஊரில் இருந்தவருமான சாமு மூப்பனர் என்பவர் செலவுக்காக உரூபாய் இருபத்தைந்து கடனாகக் கொடுத்தார். அந்தத்தொகை அப்பொழுது மிகப்பெரிய சம்பத்தைப்போல உதவியது; என் படிப்புக்கு மூலாதாரமாக இருந்தது. உத்தமதானபுரத்திலும் பக்கத்திலுமுள்ள பந்துக்களிடம் நான் மாயூரம் போவதாக விடைபெற்றுக்கொண்டேன்.

என் தாயார் அப்போது கருவுற்றிருந்தமையால் என் தந்தையார் அவரையும் என்னையும் அழைத்துக்கொண்டு சூரியமூலைக்குச் சென்றார். அங்கே நாங்கள் சில தினம் இருந்தோம். என் மாதாமகர் (தாயின் தகப்பனார்)நான் பிள்ளையவர்களிடம் படிக்கச் செல்வதை அறிந்து மகிழ்ந்து என்னை ஆசீர்வதித்தார்.

மாயூரம் சென்றது

அப்பால் என் தாயாரை அங்கே விட்டுவிட்டு நானும் என் தந்தையாரும் மாயூரம் வந்து சேர்ந்தோம். அவ்வூரில் மகாதானபுரத் தெருவில் என் சிறிய தந்தையார் வேட்டகத்தில் (மனைவி பிறந்த வீட்டில்) தங்கினோம். அப்பொழுது அங்கே என் சிறிய தாயாரும் வந்திருந்தார். எனக்கு நிமிடத்திற்கு நிமிடம் சந்தோசத்தினால் உண்டாகும் படபடப்பு அதிகமாயிற்று. என் தந்தையாருக்கோ வரவரக் கவலையின் அறிகுறி முகத்தில் தோற்றத் தொடங்கியது. பல நாட்களாக நினைந்து நினைந்து எதிர்பார்த்து ஏங்கியிருந்த நான் ஒரு பெரிய பாக்கியம் கிடைக்கப் போகிறதென்ற எண்ணத்தால் எல்லாவற்றையும் மறந்தேன். அக்காலத்தில் கோபாலகிருட்டிண பாரதியார் மாயூரத்தில் இருந்தார். அச்செய்தியை நான் அறிவேன். வேறு சந்தர்ப்பமாக இருந்தால் நான் மாயூரத்தில் அடிவைத்தேனோ இல்லையோ உடனே அவரைப் போய்ப் பார்த்திருப்பேன்; மாயூரத்திலுள்ள அழகிய சிவாலயத்திற்குச் சென்று சுவாமி தரிசனம் செய்திருப்பேன்; அந்நகரிலும் அதற்கருகிலும் உள்ள காட்சிகளைக் கண்டு மகிழ்ந்திருப்பேன். அப்போதோ என் கண்ணும் கருத்தும் வேறு ஒரு பொருளிலும் செல்லவில்லை.

ஒரு நல்ல காரியத்திற்கு எத்தனை தடைகள் உண்டாகின்றன! நான் தமிழ் படிக்க வேண்டுமென்று தொடங்கிய முயற்சி வறுமையாலும் வேறு காரணங்களாலும் தடைப்பட்டுத் தடைப்பட்டுச் சோர்வடைந்தது. ஆனாலும் அப்படியே நின்றுவிடவில்லை. பந்துக்களில் பலர் நான் சம்சுகிருதம் படிக்க வேண்டுமென்று விரும்பினார்கள். இராமாயண, பாரத, பாகவத காலட்சேபம்செய்து சம்சுகிருத வித்துவானாக விளங்க வேண்டுமென்பது அவர்கள் கருத்து. வேறு சில கனவான்களோ நான் இங்கிலீசு படித்து விருத்திக்கு வரவேண்டுமென்று எண்ணினார்கள். உதவி செய்வதாகவும் முன்வந்தனர். நான் உத்தியோகம் பார்த்துப் பொருளீட்ட வேண்டுமென்பது அவர்கள் நினைவு. என் தந்தையாரோ சங்கீதத்தில் நான் வல்லவனாக வேண்டுமென்று விரும்பினார். அவர் விருப்பம் முற்றும் நிறைவேறவில்லை; எல்லாருடைய விருப்பத்திற்கும் மாறாக என் உள்ளம் இளமையிலிருந்தே தமிழ்த் தெய்வத்தின் அழகிலே பதிந்துவிட்டது. மேலும் மேலும் தமிழ்த்தாயின் திருவருளைப் பெறவேண்டுமென்று அவாவி நின்றது. சம்சுகிருதம், தெலுங்கு, இங்கிலீசு இவற்றுள் ஒன்றேனும் என் மனத்தைக் கவரவில்லை. சில சமயங்களில் அவற்றில் வெறுப்பைக்கூட அடைந்தேன். சங்கீதம் பரம்பரையோடு சம்பந்தமுடையதாகவும் என் தந்தையாரது புகழுக்கும் சீவனத்துக்கும் காரணமாகவும் இருந்தமையால் அதன்பால் எனக்கு அன்பு இருந்தது. ஆனால் அந்த அன்பு நிலையாக இல்லை. என் உள்ளத்தின் சிகரத்தைத் தமிழே பற்றிக்கொண்டது; அதன் ஒரு மூலையில் சங்கீதம் இருந்தது. எந்தச் சமயத்திலும் அந்தச் சிறிய இடத்தையும் அதனிடமிருந்து கவர்ந்துகொள்ளத் தமிழ் காத்திருந்தது.

மற்ற யாவரும் வேறு வேறு துறையில் என்னைச் செலுத்த எண்ணியபோது என் எண்ணம் நிறைவேறுவது எவ்வளவு கட்டமானது! திருவருளின் துணையால் அது நிறைவேறும் நிலைமையில் இருந்தது. “தமிழ்நாட்டிலே இணையற்று விளங்கும் ஒரு தமிழாசிரியரிடம் நான் அடைக்கலம் புகுந்து தமிழமுதத்தை வாரி நுகர்ந்து செம்மாந்து நிற்பேன்” என்ற நினைவில் முன் பட்டபாட்டையும் மேலே என்ன செய்வது என்ற யோசனையையும் மறந்தேன். ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகத் தோற்றியது. பிள்ளையவர்கள் முன்னே சென்று அவரைக் கண்ணாரக் கண்டு அவர் பேசுவதைக் கேட்டு அவர் மாணாக்கர் கூட்டத்தில் ஒருவனாகச் சேரும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து நின்றேன்.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.

Sunday, August 06, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 9: படிப்புதவித்தொகை

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 8 தொடர்ச்சி)

என் சுயசரிதை’ 9: படிப்புதவித்தொகை

ஒரு சிறு வேடிக்கையான விசயத்தை இங்கு எழுதுகிறேன். மேற்கண்ட கணிதப் புத்தகங்களுடன் நான் படித்துப் போராடும் போது பன்முறை இப்பரிட்சையில் நான் தேறினால் அப்புத்தகங்களை யெல்லாம் ஒரு கட்டாகக்கட்டி முத்திரத்தில் எறிந்துவிடவேண்டுமென்று தீர்மானித்தேன். பிறகு தேறினவுடன் அப்புத்தகங்களின்மீது பச்சாதாபப்பட்டு எங்கள் கல்லூரியில் படித்துவந்த ஒரு ஏழைப் பிள்ளைக்குக் கொடுத்து விட்டேன். எப். ஏ. பரிட்சையில் திரு. நாராயணாச்சாரி, சகதீச ஐயர், வே. பா. இராமேசம், சிங்காரவேலு, நான் ஆகிய ஐந்து பெயரும் முதல் வகுப்பில் தேறினோம்.


எப். ஏ. வகுப்பில் தேறினவுடன் என் தலைமீதிருந்த பெரும் பாரம் நீங்கினவனாய் பி. ஏ. பரிட்சைக்கு என்ன விருப்பப்பாடம் எடுத்துக்கொள்வது என்று ஆலோசிக்கலானேன். அச்சமயம் முனைவர் போரன் என்பவர் உயிரியல் (Biology) பேராசிரியராக இருந்தார். எங்கள் கல்லூரியில், அவர் என்னைச் சந்தித்தபோது நான் தனக்குப் பிரியமான உடற்கூறு சாத்திரத்தில் மாநிலக் கல்லூரியில் முதலாவதாக இருந்ததற்காக என்னைச் சிலாகித்து “நீ உயிரியல் எடுத்துக் கொண்டு என் வகுப்பில் வந்து சேர்” என்று கூறினார். நானும் இசைந்தேன். முதல் நாள் அவர் வகுப்பில் என்னைப் பக்கலில் உட்காரவைத்துக்கொண்டு ஒரு தவளையைக் கொன்று கூறுபோட்டுக் காண்பித்தார்; என் மனம் அதைக்கண்டு தாளவில்லை! உடனே நான் இந்த படிப்பிற்கும் நமக்கும் பொருத்தமில்லை என்று தீர்மானித்து என் தகப்பனாரிடமிருந்து உத்தரவு பெற்று கல்லூரி முதல்வராகிய திரு இசுடூவருடிடம் போய் என் பாடத்தை உயிரியலில் இருந்து சரித்திரத்திற்கு மாற்றிக்கொண்டு பிறகுதான் சரியாகத் தூங்கினேன். சரித்திரமானது நான் எப்பொழுதும் பிரியப்பட்ட நூல். சிறு வயது முதல் என் ஞாபகசக்தி கொஞ்சம் நன்றாய் இருந்தபடியால் சரித்திரத்தில் எந்த பரிட்சையிலும் முதலாவதாக வந்து நல்ல மதிப்பெண் வாங்கினேன்.

பரிட்சையில் தேறுவோமோ என்னவோ என்று பயமின்றி நான் படித்தது பி. ஏ. வகுப்பில்தான், பி. ஏ. வகுப்பில் அக்காலம் பரிட்சைக்குப் போகுமுன் மாணவர்கள் இரண்டு வருடம் படிக்கவேண்டியிருந்தது. முதல் வருசம் முடிந்தவுடன் நடக்கும் பரிட்சையில் ஆங்கிலத்தில் எந்தப் பிள்ளை முதலாவதாக தேறுகிறானோ அவனுக்கு ஒரு படிப்புதவித்தொகைஉண்டு. அதற்கு தாம்சன்சு படிப்புதவித்தொகை என்று பெயர். இது ஒரு வருடத்திற்கு மாதம் 10 உரூபாயாம். இதை எப்படியாவது பெறவேண்டுமென்று தீர்மானித்தேன். ஆகவே என் காலத்தையெல்லாம் ஆங்கிலத்தில் பாடப் புத்தகங்களைப் (Text) படிப்பதிலேயே செலவழித்தேன். 1889-ஆம் வருசம் அக்டோபர் மாதத்தில் பரிட்சை வந்தது. அதில் நான் நன்றாய் பதில் எழுதியபோதிலும் எனக்கு அந்த படிப்புதவித்தொகை பெறுவோமோ என்று சந்தேகமாயிருந்தது. நமக்கு மேல் கெட்டிக்காரர்களான பல பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆகவே அது நமக்குக் கிடைப்பது அரிது என்று அந்த ஆசையை விட்டேன். 1890-ஆம் வருசம் எங்கள் வகுப்புப் பிள்ளைகளெல்லாம் நான்காவது வகுப்பாகிய முதுநிலை  பி. ஏ. வகுப்புக்கு மாற்றப்பட்டோம். ஒரு நாள். என்னுடைய சிநேகிதர்களாகிய சகதீச ஐயர், திருநாராயணாச்சாரி முதலியோருடன் சாயங்காலம் வகுப்புகளெல்லாம் விட்டபிறகு மட்டைப்பந்து (Cricket) ஆடும் மைதானத்தில் பேசிக்கொண்டிருந்த சமயம், தனக்கு தேக அசௌக்கியமாயிருந்தபடியால் ஆங்கிலப் பரிட்சைக்கு வராதிருந்த திருமலை ஐயங்கார் எனும் பிராம்மண பிள்ளை வந்து சேர்ந்தார். வந்தவுடன் சகதீச ஐயரைப் பார்த்து “சகதீசன் இவ்வருசத்து தாம்சன்சு படிப்புதவித்தொகை உனக்குத்தானே கிடைத்தது?” என்று கேட்க சகதீச ஐயர் “இல்லையடா” என்று வெறுப்புடன் பதில் உரைத்தார். உடனே திருமலை ஐயங்கார் “ஆனால் அது திருநாராணாச் சாரியாருக்குத்தான் கிடைத்திருக்கும்” என்று அவரைப் பார்த்துச் சொன்னார். உடனே சகதீசன் “அவனுக்கு கிடைத்தாலும் பரவாயில்லையே ‘திஸ் சாப் கெட்ஸ் இட்’ (This chap gets it) இந்த பையன் பெறுகிறான்” என்று என்னை நோக்கிக் கூறினார். அப்பாழுதுதான் எனக்குத் தெரிய வந்தது அதை நான் பெற்றதாக!

சகதீச ஐயர் என்னை விட ஆங்கிலத்தில் பயிற்சி பெற்றவர் என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டும். நாங்களிருவரும் 1891-ஆவது வருசம் பி.ஏ. பரிட்சைக்குப் போனபோது முதல் வகுப்பில் நாங்கள் இருவர்தான் தேறினோம். அவர் முதலாவதாக இருந்தார். நான் இரண்டாவதாக இருந்தேன். ஆகவே அப்படி யிருக்கும்போது தனக்கு தாம்சன்சு படிப்புதவித்தொகை கிடைக்கவில்லை என்று வருந்தியது தவறே அல்ல. ஆயினும் தனக்குக் கிடைக்காவிட்டாலும் போகிறது. மற்றொரு பிராம்மணப் பிள்ளையாகிய திரு நாராயணாச்சாரிக்காவது கிடைக்கலாகாதா, சம்பந்தத்திற்குக் கிடைத்ததே என்று கூறியது தவறென்று நினைக்கிறேன். மேற்கண்ட சம்பாசனை நடந்தவுடன் நான் கல்லூரி இயக்குநரிடம் போய் எனக்குத்தான் படிப்புதவித்தொகை கிடைக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அன்றிரவு இதை என் தகப்பனாருக்குத் தெரிவித்தேன். அவர் என் தாயாரிடம் தெரிவித்தார். எனக்கிருந்த சந்தோசத்தை விட அவர்களிருவரும் அதிக சந்தோசப்பட்டனர் என்று நான் கூறவேண்டியதில்லை. கொஞ்ச நாள் பொறுத்து. இந்தப் படிப்புதவித்தொகைப் பணத்திற்காக முதல் காசோலை பெற்றதை என் தாயாரிடம் கொடுத்த போது அவர்கள் சந்தோசப்பட்டதும் அவர்கள் அன்றிரவு இதைப்பற்றி என் தகப்பனாரிடம் கூறிய வார்த்தைகள் இன்னும் எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கின்றன. என் பெற்றோர்களுக்கு இந்த சிறு சந்தோசத்தையாவது கொடுத்தோமே. ஈசன் கருணையினால் என்று இதைப்பற்றி எழுதும் போதும் சந்தோசப்படுகிறேன்.


1931-ஆம் வருசம் என் ஆயுளில் இரண்டு முக்கியமான சம்பவங்கள் நேர்ந்தன. ஒன்று மிகவும் துக்ககரமானது. மற்றொன்று மிகவும் சந்தோசமானது. சகதீசன் சீவராசிகளுக்கு துக்கத்தையும் சுகத்தையும் ஏன் இவ்வாறு கலந்து கலந்து அனுப்புகிறார். இதற்கு விடையளிக்க என்னால் முடியாது; அதற்கு விடை. அவருக்குத்தான் தெரியும் போலும்;

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, August 05, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 47 : மாயூரப் பிரயாணம் 1/2

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 46 : பெரும்புலியூர் தொடர்ச்சி)

என் சரித்திரம் – பாகம் 2

26. மாயூரப் பிரயாணம் 1/2

செங்கணத்தில் நாங்கள் பிரமோதூத வருlம் மார்கழி மாதமுதல் பங்குனி வரையில் (1870 திசம்பர் முதல் 1871 மார்ச்சு வரையில்) இருந்தோம். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் நாகப்பட்டின புராணம் அரங்கேற்றிப் பூர்த்தி செய்துகொண்டு நாகபட்டினத்திலிருந்து மீண்டும் மாயூரத்திற்கே வந்துவிட்டார்களென்று அங்கே கேள்வியுற்றோம். அப்புலவர்பிரானிடம் படிக்கப் போகிறோமென்ற எண்ணம் என் மனத்தில் ஒரு புதிய கிளர்ச்சியை உண்டாக்கியது. அவர்களைப் பற்றி நான் கேள்வியுற்றிருந்த செய்திகளெல்லாம் ஒருங்கே என் ஞாபகத்துக்கு வந்தன. உத்தமதானபுரம் பள்ளிக்கூட உபாத்தியாயராகிய சாமிநாதையர் முதல் செங்கணம் விருத்தாசல ரெட்டியார் வரையில் யாவரும் அவ்வப்போது சொன்ன விசயங்களால் என் மனத்துக்குள்ளே பிள்ளையவர்களைப் போல ஓர் உருவத்தைச் சிருட்டி செய்துகொண்டேன். ஆசிரியர்களுக்குள் சிறந்தவர், கவிகளுக்குள் சிகாமணி, குணக்கடல் என்று அவரை யாரும் பாராட்டுவார்கள். அவர் எனக்குப் பாடம் சொல்லுவது போலவும் நான் பல நூல்களைப் பாடம் கேட்பது போலவும் என்னிடம் அவர் அன்பு பாராட்டுவது போலவும் பாவனை செய்துகொள்வேன்; கனாவும் காண்பதுண்டு.

செங்கணத்தினின்றும் புறப்பட்டது

நல்ல நாளில் விருத்தாசல ரெட்டியார் முதலியவர்களிடம் விடைபெற்றுச் செங்கணத்திலிருந்து நாங்கள் புறப்பட்டோம். அந்தப் பக்கங்களில் எங்கள் குடும்ப நன்மையிலும், என் கல்வி அபிவிருத்தியிலும் கருத்துடைய பலர் பல ஊர்களில் இருந்தனர். அவர்கள் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு விடைபெற எண்ணினோம். ஆனால் அது சாத்தியமன்று என்று கருதிக் குன்னத்திற்குச் சென்று அங்குள்ள நண்பர்களிடம் மாத்திரம் சொல்லிக்கொண்டோம். பார்த்த நண்பர்களிடம் மற்றவர்களுக்கும் சொல்லும்படி கேட்டுக்கொண்டோம். அங்கிருந்து அரியிலூர் வந்து சேர்ந்தோம்.

அரியிலூரில்

என் முதல் தமிழாசிரியராகிய சடகோபையங்காரிடம் எனக்குக் கிடைக்கப் போகும் பாக்கியத்தைப் பற்றிச் சொல்லி அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற எண்ணி அவர் வீட்டிற்குச் சென்றேன். அப்போது அவர் வெளியே சென்றிருந்தார். ஓரிடத்தில் ஒரு புதிய புத்தகம் இருந்தது. அந்த வீட்டை என் சொந்த வீட்டைப்போலவே எண்ணிப் பழகியவனாதலால் அப்புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். அது பிள்ளையவர்கள் இயற்றிய திருநாகைக்காரோணப் புராணமாக இருந்தது. நான் பிள்ளையவர்களுடைய புலமையைப் பற்றிக் கேட்டிருப்பினும் அவர் இயற்றிய நூல் எதனையும் பார்த்ததில்லை. அப்புராணம் அச்சந்தர்ப்பத்தில் கிடைத்ததை ஒரு பெரிய நன்னிமித்தமாக எண்ணினேன். அதில் ஒவ்வோர் ஏடாகத் தள்ளிப் பார்த்தேன்; சில பாடல்களையும் படித்தேன். யாப்பிலக்கணத்தை நன்றாகப் படித்து முடித்த சமயமாதலால் அச்செய்யுட்களின் அமைப்பையும் எதுகை, மோனை நயங்களையும் ஓசை இன்பத்தையும் தெரிந்து அனுபவித்து மகிழ்ந்தேன். பலவிடங்களில் திரிபுயமகங்களும் சித்திரகவிகளும் அதில் அமைந்திருந்தன. “இந்த நூலையும் இது போன்ற பல நூல்களையும் இயற்றிய மகா புருடரிடம் படிக்கப் போகிறோம்” என்று எண்ணி எண்ணி நான் பெருமிதம் அடைந்தேன்.

அப்புத்தகத்தை ஆவலோடு புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டே இருக்கையில், “வேங்கடராமா, எப்பொழுது வந்தாய்?” என்று சொல்லியவண்ணம் சடகோபையங்கார் உள்ளே வந்தார். அவரை நான் கண்டவுடன் நமசுக்காரம் செய்தேன். பின்பு, நான் பிள்ளையவர்களிடம் படிக்கப் போவதாக அவரிடம் சொன்னேன்.

“நல்ல காரியம். அவர் ஒரு மகா கவி; சிறந்த புலவர்; மிகவும் பெரியவர்; இந்தப் புராணம் அவர் இயற்றியதுதான். இங்குள்ள வக்கீல் பாலகிருட்டிணபிள்ளை என்பவர் சில காலமாக இதனைப் பாடங் கேட்டு வருகிறார். அதனால் இதை நான் படிக்க நேர்ந்தது. வாக்கு மிகவும் கம்பீரமாகச் செல்லுகிறது. அத்தகைய பெரியவரிடத்தில் பாடங் கேட்பதற்கு மிகுந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவரிடம் மனம்கோணாதபடி நடந்துகொண்டு கற்றுக்கொள். நீ எப்போது அவரிடம் போவதாக நிச்சயித்தாயோ அப்போதே உன் கட்டமெல்லாம் தீர்ந்ததென்றே சொல்வேன். நன்றாகப் படித்துப் பெரிய வித்துவானாக விளங்க வேண்டும்” என்று ஆசீர்வாதம் செய்தார்.

“எல்லாம் நீங்கள் ஊட்டின தமிழ்ச் சுவையினால் உண்டான பயனே!” என்று பணிவாக நான் விடை கூறினேன்.

சில அன்பர்கள் விரும்பியபடி நாங்கள் பத்து நாட்கள் அரியிலூரில் தங்கியிருந்தோம். சடகோபையங்காரிடம் திருவரங்கத்தந்தாதியில் பாடங் கேளாமல் பாக்கியிருந்த செய்யுட்களை அக்காலத்தில் கேட்டுப் பொருள் தெரிந்துகொண்டதன்றி முன்புள்ள செய்யுட்களில் உள்ள சந்தேகங்களையும் கேட்டுத் தெளிந்தேன்.

கீழைப்பழுவூர்

அரியிலூருக்கு அருகில் உள்ள கீழைப்பழுவூர் என்னும் தலத்திலிருந்த செல்வராகிய சபாபதி பிள்ளை யென்பவர் என் தந்தையாரைச் சந்தித்துத் தம் ஊருக்கு வந்து சில தினங்கள் இருக்கவேண்டுமென்று கூறவே, அவர் விருப்பத்தின்படியே அங்கே சென்றோம். ஒரு வாரம் அவ்வூரில் தங்கியிருந்தோம். அவர், தஞ்சையில் வக்கீலாக இருந்த இராவ்பகதூர் கே. எசு. சீனிவாசபிள்ளையின் தமையனார். அவர்களுடைய தந்தையாராகிய சிவசிதம்பரம் பிள்ளைக்கும் என் தந்தையாருக்கும் இளமை முதற் பழக்கம் உண்டு. அவர் எங்கள் குடும்பத்திற்கு அதிக உதவி செய்தவர்.

சபாபதி பிள்ளை தமிழ்ப் பயிற்சியுடையவர். அவர் தஞ்சைவாணன் கோவை மூலமுள்ள புத்தகத்தையும் வேறு சில புத்தகங்களையும் எனக்குக் கொடுத்து உதவினார். செங்கணத்தில் திருக்கோவையாரைப் படித்த காலத்தில் ரெட்டியார் மூலமாக அகப்பொருளிலக்கணத்தை ஒருவகையாகத் தெரிந்துகொண்டிருந்தேன். அதனால் தஞ்சைவாணன் கோவையிலுள்ள பொருளமைதி எனக்கு நன்கு விளங்கியது. அதன் செய்யுள் நடைசிக்கலின்றித் தெளிவாக இருத்தலின் எனக்கு எளிதிற் பொருள் புலப்பட்டது. சில நாட்களில் அதைப் படித்து முடித்தேன்.

உத்தமதானபுரம் வந்தது

அப்பால் அவ்வூரிலிருந்து புறப்பட்டுப் பெரிய திருக்குன்றம் வந்து சிலநாள் தங்கிப் பிறகு உத்தமதானபுரம் சென்றோம். உத்தமதானபுரத்திலிருந்து அப்பால் மாயூரம் செல்ல வேண்டியதுதான். இந்த நிலையில் அதுகாறும் என்னைப் பிரிந்திராத என் பெற்றோர்கள் நான் தனியே மாயூரத்தில் இருக்கவேண்டுமே என்பது பற்றிக் கவலைகொள்ளத் தொடங்கினர்.

“நம்முடைய காலநிலை இப்படி இருக்கிறது. குழந்தையைவிட்டு நான் எப்படித் தனியே இருப்பேன்! இவனுக்கு வேண்டிய ஆகாரத்தை அங்கே பிரியத்துடன் யார் செய்துபோடுவார்கள்? இவனுக்குத் தன் கையாலேயே எண்ணெய் தேய்த்துக்கொள்ளக்கூடத் தெரியாதே!” என்று என் தாயார் வருந்தினார்.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.