Monday, April 27, 2020

ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்! – இலக்குவனார் திருவள்ளுவன்


ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்!

கேட்டாரையும் கேளாரையும் பிணிக்கும் நாவரசர் ஒளவை நடரசான் அவர்களின் எண்பத்தைந்தாவது பிறந்தநாள் பெருமங்கலம் இன்று(24.04.2020). அவரிடம் அலைபேசியில் பேசும் பொழுது “புதுச்சொல் புனையும் திறனாளர் பல்லாண்டு வாழ்க” என வாழ்த்தி மகிழ்வித்தார்.
நான், மதுரையில் உள்ள தியாகராசர் நன்முறை உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயின்ற பொழுது அவர் ஒரு நிகழ்ச்சிக்கு வந்து உரையாற்றினார். அவருடைய தம்பி மெய்கண்டான்,(இப்பொழுது குழந்தைகள் நரம்பியல் மருத்துவ வல்லுநர் முனைவர் ஒளவை மெய்கண்டான்) என்னுடன் படித்தார். மிகவும் சிரிப்பாகவும் கல்வியை வலியுறுத்தியும் சிறப்பாக அவர் பேசினார்.
அப்பொழுது எல்லோரையும் சிரிக்க வைத்த ஒன்று,
தம்பி வாடா
கடைக்குப் போடா
வாங்கிட்டு வாடா
வின்செண்ட்டு சோடா
என்பது. (மதுரையில் மிகவும் புகழ் பெற்றது வின்செண்ட்டு நிறுவனம்.) இப்பொழுது இதைக் கேட்பவர்களுக்குச் சிரிப்பு ஒன்றும் தோன்றாமல் இருக்கலாம். ஆனால், அன்று அதை நாங்கள் பல நாள் சொல்லிச் சிரித்து மகிழ்ந்திருக்கிறோம்.
தந்தையார் இருந்த பொழுது அவர் நடத்திய ‘குறள்நெறி’ இதழில் திரைப்படக் கருத்துரை எழுதினார். பூம்புகார் பற்றிய கண்ணோட்டத்தை அவர் எழுதியதன் மூலம் திரைப்படத் திறனாய்விற்கு நல்ல தமிழ் அழகு சேர்க்கிறது என்பதைப் புரிய வைத்தார். இவ்வாறு அவ்வப்பொழுது அவரைப்பற்றிய செய்திகளைத் தமையன்மார் மூலமும் செய்திகள் மூலமும் அறிய வந்தாலும் சென்னை வந்தபின்தான் நேரடிப்பழக்கம் தொடர்ந்தது.
நான் கலைச்சொற்கள் தொடர்பாக  மறைமலை அண்ணனிடம் அடிக்கடி ஏதேனும் கேட்டுக்கொண்டிருப்பேன். 1979 இல் நான் சென்னை வந்தபொழுது, அவர் உனக்குச் சரியான ஆள் ஒளவை நடராசன்அண்ணன்தான் அவரைச் சந்தி என்றார். அப்பொழுது அவர் மொழிபெயர்ப்பு இயக்குநராக இருந்தார். உயர் பொறுப்பில் இருக்கும் அவரை எப்படிச்சந்திப்பது என்று தயங்கினேன்.
அதிகாரப் பகட்டு எல்லாம் அவரிடம் இருக்காது. அவரைச் சந்தி” என்றார்.அதன் பின்னர் அவரைச் செயலகத்தில் சந்தித்தேன். எளிமையாகப் பழகும் அவரிடம் மறைமலை அண்ணன் ஆற்றுப்படுத்தியது சரிதான் என்று உணர்ந்தேன். அவரைச்சந்திக்கும் பொழுதெல்லாம் சில சொற்களைப்பற்றியேனும் உரையாடுவது வழக்கம். அவரும் என்னிடம் சில சொற்கள் குறித்து, இது சரியா என்றெல்லாம் கேட்பார். அல்லது “இதற்குச்சரியான சொல் கிடைக்கவில்லை. ஏதேனும் சுருக்கமான சொல் கூறுங்களேன் தம்பி” என்பார். (தம்பி அல்லது இராசா என்றுதான் விளிப்பார்.)
நானும் அவரும் கலைச்சொற்களைக் குறித்து வைத்துக் கொண்டு சந்திக்கும் பொழுது அவை குறித்துப்பேசி முடிவெடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.
அவர் என்னிடம் என்று இல்லை. யாராக இருந்தாலும் “இந்த இடத்தில் என்ன சொல் சொல்வீர்கள்” என்பார். அல்லது “இந்தச் சொல்லில் நீங்கள் புரிந்து கொள்வது என்ன” என்று கேட்டு சொற்களின் பயன்பாட்டு நிலையை முடிவெடுப்பார். நான் இதில் ஈடுபாடு காட்டுவதால் என்னிடம் மிகுதியாகப் பேசும் நிலை வந்தது.
எனினும் இதைக் குறிப்பிடுவதன் காரணம்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(திருவள்ளுவர், குறள் எண்:423)
என்பதற்கேற்ப மெய்ப்பொருள் காண்பதுதான் நோக்கம் என்பதால் மிகக் கீழ்நிலையில் உள்ளவரிடமும் கருத்து கேட்பார்.
அப்பொழுதும் பின்னர் அவர் தமிழ்வளர்ச்சித்துறை செயலராக இருந்த பொழுதும் அவரரைச் சந்திக்கும் பொழுது பிறர் அவரைச் சந்திக்க வருவார்கள். அவரைச் சந்திப்பதன் மூலம் ஊக்கம் பெற்றுச் செல்வார்கள். அவரவர் தேவைக்கேற்ப நல்லாற்றுப்படுத்துவார். அப்படி அவரைச் சந்தித்தவர்கள், பேராசிரியர்களாக, உயர் அலுவலர்களாக, சட்ட மன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, மாநில அமைச்சராக, மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்கும் நிலைக்கு வந்தார்கள். கூர்த்த உளவியலறிவு இருந்தால்தான் யாவரையும் நெறிப்படுத்தி உயர் நிலை அடையச் செய்ய முடியும்.
அவர் தமிழ்வளர்ச்சித்துறைச் செயலராக இருந்த பொழுது தமிழ் வளர்ச்சித்துறைக்குத் தமிழ்க்குருதியை ஏற்றினார். கலைஞர் மு.கருணாநிதி முதன்முறை தமிழக முதல்வராக இருந்த பொழுது தமிழறிஞர்களின் பிள்ளகளைத் தமிழ் வளர்ச்சித் துறையில் பணியேற்கச் செய்து தமிழ் உணர்வுள்ள துறையாக மாற்ற வேண்டும் என விரும்பினார். ஆனால் மற்றொரு மூத்த அமைச்சர், இவர்களால் ஆய்விற்குச் செல்ல இயலாது. உள்ளாட்சித் துறை முதலான பிற துறைப்பணிகளில் உள்ளவர்களால்தான் இயலும எனக்கூறி அதனைத் தடுத்து விட்டார். தமிழ் வளர்ச்சித் துறையில் பணியாற்றியவர்கள், தாங்கள் அத்துறையின் தமிழ்ஆட்சிப்பணிக்கான தனி அலுவலர்களாக / உதவி இயக்குநர்களாக வரவேண்டும் என்ற ஆசையை வைத்துக் கொண்டு தாங்கள் அதற்குரிய தகுதியைப் பெறும்வரை யாரும் அமர்த்தப்படாமல் பார்த்துக் கொண்டார்கள். அவ்வாறு வெவ்வேறு துறைகளில் இருந்து தமிழ்வளர்ச்சி இயக்ககப் பணிக்கு வந்தவர்கள், பதவி உயர்வைமட்டும் நாடினார்களே தவிர, தமிழ்வளர்ச்சியில் உரிய நாட்டம் இல்லை. எனவே, தமிழ் முனைவர் பட்டம் பெற்றவர்களை அமர்த்த வேண்டும்  என்பதே பலரின் எண்ணமாக இருந்தது. இதன் தொடர்ச்சியாகச் செயலர் ஒளவை நடராசன், தமிழக முதல்வர் கலந்து பேசிய எடுத்த முடிவே அத்தகையோரைத் தமிழ் வளர்ச்சித் துறையில் பணிகளில் அமர்த்த வேண்டும் என்பது.  உதவி இயக்குநராக நேரடியாக அமர்த்தப்பட முடியாது என்பதால் தமிழ் ஆய்வு அலுவலர்கள் என்ற பதவிப்பெயர்களில் உதவி இயக்குநர் பணிக்கு ஒரு நிலை கீழாக வைத்து அமர்த்தப்பட்டார்கள். சில ஆண்டுகளுக்குப்பின்னர் அனைவருக்கும் த.வ.உ.இ.பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன.
            த.வ. இயக்ககத்தினர் இதை வேண்டா வெறுப்பாகப் பொறுத்துக் கொண்டார்கள். ஆனால், பிற துறைகளில் இருந்து அலுவலர் நிலையில் வருகின்றனர். இங்குள்ளோர் வெறும் கண்காணிப்பாளர் நிலைதான். எனினும் இதைத் தடுப்பதற்கு எவ்வளவோ முயன்றனர். பிற துறைகளில் இருந்து அறுவரும் த.வ.துறையில் அறுவரும் பணியமர்த்தத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். பிற துறைகளில் ஒருவர் அரசு நிறுவனம் ஒன்றில் கண்காணிப்பாளர் நிலையில் இருந்த பொழுது  விண்ணப்பித்திருந்தார். ஆனால், பணியமர்த்த ஆணைக்குப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் உதவியாளராகக் கீழிறக்கம் செய்யப்பட்டு அழுகையில் ஆழ்ந்து விட்டார். த.வ. இயக்ககத்தினர் அவர் பணியமர்த்தத்திற்குத் தகுதியற்றவர்; எனவே, அவர் பெயரை நீக்கிவிட்டு அமைச்சருக்குக் கோப்பை அனுப்ப வேண்டும் என்றனர். நான் அந்தப் பாதிப்புற்றவரிடம் “உங்கள் பழைய பணிகளை விட்டுவிட்டு நேரடியாக வருவதாக இருந்தால் அதற்கு விதி இருக்கிறது. வருகிறீர்களா?: என்றேன். :நான், த.வ.உதவி இயக்குநராகப் போகப்போவதாக எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். போகவில்லை என்றால் நான் அவமானமாக உணர்வேன். ஆனால், வழியில்லையே” என்றார்.  நான் ஒளவை அவர்களிடம், நேரடி நியமனத்திற்கு விதிகளில் இடம் இருக்கிறது. இவரைப் பணிமாறுதலில் இல்லாமல் நேரடி நியமனத்திற்குப் பரிந்துரைக்கலாம் என்ற என் கருத்தைச் சொன்னேன். அவரும் உடன்பட்டார். அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து அவர் உதவி இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டார். த.வ.இயக்ககத்தில் தமிழ் படித்த ஒருவர் வருவதற்கும் உள்ளடி வேலை செய்து விதிகளில் இடமில்லை எனப் போர்க்கொடி தூக்கினர். முன் நிகழ்வு இருப்பதால் அவரைத் தேர்ந்தெடுக்கத் தடையில்லை என்பதை ஒளவை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதுதான் சரி என ஒளவை அவர்கள் அவர் பணியமர்த்தத்திற்கும் வழி வகுத்தார்.
துறைக்கு வரும் முன்பே இவன் ஏதோ செய்கிறானே. இவனை வரவிடக்கூடாது என எண்ணிய சிலர் செயலரிடம், “திருவள்ளுவன் தமிழ்வளர்ச்சி உதவிஇயக்குநர் ஊதியததை விடக் கூடுதல் ஊதியம் பெறுகிறார். எனவே வர விரும்பமாட்டார். அவருக்கு மாற்றாக வேறொருவரை அமர்த்தலாம்” என்றார்.
ஆணைக்கான ஒப்பம் பெற முதல்வரிடம் கோப்பு சென்ற நிலையில்தான் இது நடந்தது.  உடன் ஒளவை அவர்கள், “நான் அவருக்காகத்தான் இதில் சேர எண்ணுவதாகவும் ஊதிய ஆதாயம இல்லை என்பதால் விருப்பமின்றி இருப்பதாகவும் கூறுகிறார்களே. நான் ஆணையை வெளியிடட்டுமா? அல்லது வேறு யாரையும் அமர்த்தலாமா” என்றார். முன்னர் ஒரு முறை நான் அவரிடம் மொரிசீயசில் தமிழாசிரியர் வேலைக்கு ஆள்எடுக்கிறார்களாம். விண்ணப்பிக்கலாமா என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர், “நீண்டகாலமாக அரசிடம் கேட்டுக்கொண்டுதான் உள்ளனர். ஆனால், இந்திய அரசு தடையாக உள்ளது. எப்பொழுதும் அப்பணி அமர்த்தத்திற்கான வாய்ப்பு இல்லை. ஆனால், விண்ணப்பம் அளித்தால், திருவள்ளுவன் மொரிசியசு செல்ல உள்ளார். அதனால் அவர் பெயரை எடுத்துவிடலாம் எனச்சொல்லி எடுத்து விடுவார்கள். எனவே,அதை மறந்துவிடுங்கள்” என்றிருந்தார். எனவே, இப்போதைய் குழப்பத்தில் உண்மை இருக்கலாமோ என்ற ஐயத்தில்தான் கேட்டார். நான், ஊதிய நிலை குறித்தது உண்மைதான் என்றும் ஆனால், தமிழ்வளர்ச்சித் துறைக்கு வருவதில் ஆர்வமாக உள்ளேன் என்றும் கூறினேன். உடன் “ஆணை ஆங்கிலத்தில் உள்ளது.  மற்றொருவரைக் குறிப்பிட்டு அவருடன் இணைந்து தமிழ் ஆணை எழுதுங்கள்” என்றார். இவையெல்லாம் செயலகப்பணிதானே. ஏன், பிறரிடம் கூறுகிறார் என எண்ணலாம். துறையில் பலர் கழித்துக் கட்டியவர்களாக இருப்பார்கள். மேலும், அவர்களிடம் இருந்து த.வ.இயக்ககத்தினர் செய்தியை அறிந்து கொள்வார்கள். எனவேதான் எங்களிடம் கூறினார். நாங்களும் தமிழ் ஆணையை எழுதித் தந்தோம்.
நாங்கள் பணியில் சேர்ந்தாலும் ஆணையம் ஒன்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர் சேரவில்லை. அவர்களைக் காரணம் கேட்ட பொழுது “பணிக்கான விண்ணப்பத்தைத் துறைவழியாக அனுப்பவில்லை எனக்கூறி அவர்களைப் பணிகளில் இருந்து விடுவிக்கவில்லை. எனவே, சேர இயலவில்லை” என்றனர். இருவர் வராததால் அந்த இடத்தில் காத்திருப்புப் பட்டியலில் உள்ள இருவரை அமர்த்த த.வ.இ.னர் முயன்றனர். இதை அறிந்த நான், ஒளவையிடம் கூறினேன். “துறை அமைச்சரான பேராசிரியர்(அன்பழகன்) இதில் உடனடி நடவடிக்கை எடுப்பார். அவரைச் சந்திக்க அவர்களிருவரும் போகவேண்டா. இச்சூழலில் அவர்கள் அஞ்சுவார்கள். நீங்களே சந்தித்துக் கூறுங்கள்” என்றார்.
 நானும் பேராசிரியரைச் சந்தித்து இன்னும் இருவர் மட்டும் த.வ.உதவி இயக்குநர் பணியில் சேரவில்லை என்றேன். ஏனென்றார். விவரத்தைக் கூறினேன். அவர் எப்பொழுதும் யார் உதவிகேட்டாலும் அது முறையானதுதானா என்று அறிந்துதான் உதவுவார். “ஆணையம் செய்தது சரிதானே” என்றார். நான், “அவர்கள் விண்ணப்பங்கள்  அனுப்பி அதன் முன்படிகளை அரசிற்கு அனுப்பியுள்ளார்கள். ஆட்சிமொழி ஆணையத்தில் பணியாற்றுபவர்கள் இங்கிருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் அரசு அவர்களை பணியமர்த்தியுள்ளது. ஆனால், அவர்களை வெளியே விடக் கூடாது என்பதற்காக அந்த ஆணையத்தில் இருந்து விண்ணப்பத்தை அரசிற்கு அனுப்பவில்லை” என்றேன். உடனே உதவியாளர் மூலம் அந்த ஆணையத்திற்குத் தொலைபேசி இணைப்பு கொடுத்து, ஏன் அவர்களை விடுவிக்கவில்லை எனக் கேட்டார். “துறை மூலமாக அவர்கள் விண்ணப்பிக்கவில்லை. எனவே, விடுவிக்கவில்லை” என்றார்கள். ”துறை என்பது அரசைவிடப் பெரியதா? முதலமைச்சர் தெரிவுசெய்து பணி ஆணை வழங்கிய பின்னர் நீங்கள் எப்படிக் கூறமுடியும்? உடனேஅவ்விருவரையும் விடுவியுங்கள். இல்லையேல் அரசே விடுவிப்பாணை வழங்கும்” என்றார். உடனே ஆணையத்திலிருந்து இருவரையும் விடுவித்தனர்.
உடன் ஒளவையிடம் இதனைத் தெரிவிததேன். “நீங்கள் சரியாகவும் துணிவாகவும் விளக்குவீர்கள் என்பதால்தான் உங்களைப் போகச்சொன்னேன். மகிழ்ச்சி” என்றார்.
இ.ஆ.ப.இல்லாத முதல் செயலர், இதுவரை ஒரே செயலர் என்ற பெருமை இவருக்கு உண்டு என்பதை அனைவரும் அறிவர். எனினும் அதனால் இடர்ப்பாடுகளையும் சந்தித்துள்ளார். இ.ஆ.ப., இ.கா.ப. அலுவலர்களிடம் நேரடியாகத் தெரிவுசெய்யப்பெற்று வந்தவர்கள், பதவி உயர்வில் வந்தவர்கள், மாநில வகையினர், இன வகையினர் என்றெல்லாம் பாகுபாடு உண்டு. உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களிடம்தான் தாழ்ந்த எண்ணம் இருக்கிறது. அதற்கு மற்றோர் காரணம் தங்கள் உரிமை போய்விடுமோ என்ற அச்சம்தான்.
ஆனால், இ.ஆ.ப.இல்லாத செயலர் என்ற வகையில் இவர் ஒருவர் மட்டுமே. இவரை அறிஞராக மதித்தவர்கள் இவருக்கு உரிய மதிப்பு தரத் தவறவில்லை. இ.ஆ.ப.வாலில்லாததை இளக்காரமாக எண்ணிய அதிகாரிகள் சிலரும் உண்டு. அவர்களுள் ஒருவர் தலைமைச்செயலராக வந்தார். அவர் இவர் சந்திக்கச் சென்றால் காத்திருக்கச் செய்து இவரது கட்டுப்பாட்டிலுள்ள இ.ஆ.ப. அலுவலர்களை எல்லாம் சந்தித்து நீண்ட நேரம் உரையாடிவிட்டு இறுதியில் இவரை ஒப்புக்கு அழைப்பார். தமிழ் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாகப் பேச வருபவருக்குத்தான் இந்த நிலை. இது குறித்து வருத்தப்பட்டாலும் “இதனால் துறை சரியாக இயங்காது என்பது இவருக்குத் தெரியவில்லையே” என்பார்.
ஒருமுறை ஏணறை(மின்னேணி)யில் அந்தத் த.செ. செல்லும்பொழுது இவரைப்பார்த்த ஏணறை இயக்கியர் இவருக்காக அதனை நிறுத்திவிட்டார். தன்னுடன் இவரா என முகம்சுளித்த அந்தத் த.செ. வேண்டா வெறுப்பாக உள்ளே வாருங்கள் எனச்செய்கையில் தெரிவித்தார்.  உடனே உள்ளே நுழைந்த ஒளவை அவரிடம், “ஐயா, நீங்கள்தான் மிகப்பெரிய அலுவலர். இது யாவரும் அறிந்ததே. இயக்கியர், என்னைத் தொலைக்காட்சியில் அவ்வப்பொழுது பார்த்துவிட்டு ஏதோ பெரியவன் என எண்ணி நிறுத்தி விட்டார். ஆனால், நான் சிறியவன். நீங்கள்தான் பெரியவர் என அவரும் அறிவர்” என்றார்.
ஒருமுறை இவர் முதல்வரைச் சந்திக்கச் சென்றிருந்தார். இவருக்கு முன்னதாக அந்தத் த.செ.உம் மேலும 20பேரும் இருந்தனர். அந்தக் காத்திருப்புக் கூடத்திற்கு வந்த முதல்வர் செயலலிதா நேரடியாக இவரைப் பார்த்து “என்ன திரு.ஒளவை எப்படி இருக்கின்றீர்கள்” என்று கேட்டுக்கொண்டேவந்தார். அப்பொழுதாவது அந்த த.செ.வுக்கு “முதல்வரே மதித்கிறாரே நாம் புறக்கணிக்கிறோமே” என்ற உணர்வு வந்ததா எனத் தெரியவில்லை.
எல்லாரிடமும் கலகலப்பாகப் பேசுவதால் அனைவரிடமும் சரணடையும் போக்கு உடையவர்போல் தோன்றும். ஆனால், தன்மானத்திலும் தன்மதிப்பிலும் கருத்தாக இருப்பார். அதற்கோர் எடுத்துக்காட்டு. ஒரு முறை சென்னையில் நடைபெறும் இவர் மகன் திருமணத்திற்காக உறவினர்கள் தங்குவதற்கு இடம் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நாளில் முன்னரே அறைகள் பதிவாகி இருந்தமையால் எங்கும் கிடைக்கவில்லை. நான் அவரிடம் அவரின் செல்வந்த நண்பர் வைத்திருக்கும் விருந்தினர் மாளிகை சும்மாதா்ன இருக்கிறது. கேட்டுப் பார்க்கலாமே என்றேன். உடனே அவர், “நாம் கேட்கலாமா? நாம் கேட்கலாமா? தமிழ்மண்டியிடுவதா? அவராக விவரம் அறிந்து மகனுக்குத் திருமணமாமே என் விருந்தினர் மாளிகையப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றாலும், ஐயா, நன்றி. நான் முன்னரே ஏற்பாடு செய்துவிட்டேன் என்றல்லவா சொல்ல  வேண்டும். நாம் போய் உதவி என்று நிற்கலாமா” என்றார்.
இவைபோல் ஒளவை பற்றிக் கூறுவதற்கு நிறைய செய்திகள் உள்ளன. நான் கேட்ட அவரது இலக்கிய உரைகளை எழுதினால் அவை என்உரைபோல் அமையும் என்பதால்தான் அவற்றை எழுதவில்லை. எனினும் பிறவற்றை நேரம் வாய்க்கும் பொழுது எழுதுவேன்.
இத்தகு தன்மான உணர்வும் தன்மதிப்பு உணர்வும் மிக்க, நான் போற்றும்,என் மீது அன்பு கொண்டுள்ள, எனக்கு வழிகாட்டும் தகைமையாளர் வாழ்த்தின் தொடர்பான என் எண்ணங்களைப்பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான்!
இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, April 03, 2020

திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5


திருவள்ளுவர்: 5

இனித் தொல்காப்பியம் முதற்சங்கக் காலத்து ஆக்கப்பெற்று இடைச்சங்கத்தாருக்கு இலக்கணமாயிற் றென்பது தமிழரெல்லார்க்கும் ஒப்ப முடிந்ததொன்று. கடைச் சங்கக் காலத்தினும் தொல்காப்பியம் ஆட்சியிலிருந்ததாயினும் அதன் விதிகளுக்கு மாறுபட்ட வழக்குகள் அச்சங்க நூல்களிற் பயிலக் காண்கின்றோம். உதாரணமாக: மொழிக்கு முதலாகாதென்று தொல்காப்பியம் விதந்து விலக்கிய சகரத்தை முதலாகக்கொண்ட தமிழ்மொழிகள் பல கடைச்சங்க இலக்கியங்களிற் பயிலக் காண்கின்றோம். வள்ளுவர் நூலில் வடசொல்லாய்வந்து வழங்கும் சமன், சலம் என்ற இரண்டொன்று தவிரத் தனித்தமிழ்ச் சகர முதன்மொழிகள் காணல் அரிது. இதனால், தொல்காப்பிய விதிகள் சில வழக்கிழந்த கடைச்சங்கக் காலத்துக்கு முன்னரே அவ்விதிகள் பிறழாமற் பேணப்பெற்ற இடைச் சங்கப் பழங்காலத்தையடுத்தே வள்ளுவரின் குறள் எழுந்திருக்கவேண்டுமென்று ஊகிப்பதும் இழுக்காது.

சாணக்கியம் முதலிய ஆரியநீதிநூல்களினின்று அறங்களைத் திரட்டி வள்ளுவர் நூல் செய்திருக்க வேண்டுமென்றும், ஆதலால், சாணக்கியர் முதலியோருக்கு வள்ளுவர் பிற்காலத்தவரா யிருக்க வேண்டுமென்றும் சிலர் கூறுகின்றனர். இதற்குப் பரிமேலழகர் 662-ஆம் குறளின் விசேடக் குறிப்பில் “வியாழ வெள்ளிகளது துணிபுதொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின்” என்று எழுதியுள்ள வாக்கியத்தை ஆதாரமாக்கி, அவ்வாக்கியத்திற் கண்ட ‘பின் நீதிநூலுடையார்’ என்ற சொற்றொடர் சாணக்கியர் முதலாயினாரைச் சுட்டுவதாகக் கொள்கின்றனர். இதுவே பரிமேலழகர் கருத்தாயின் அவர் விசதமாக்கியிருப்பர். அன்றியும், பின் னீதிநூலுடையார் யாரேயாயினும் அவர் தம் வழி நூல்களுக்குக் குறள் சார்புநூலாகும் என்னுங் கருத்தைப் பரிமேலழகர் இவ்வாக்கியத்தாற் குறித்ததாக ஏற்படுமாறில்லை. ஆழச்சிந்தித்தால் வியாழ வெள்ளிகளின் நீதி நூல்களுங்கூடக் குறளுக்கு முதனூலெனப் பரிமேலழகர் இவ்வாக்கியத்திற் சுட்டிலரென்பது தெற்றென விளங்கும். வியாழ வெள்ளிகளின் துணிபுகளைத் தொகுத்த ஆரியநீதி வழி நூலுடையார் முறைக்கும் குறளாசிரியர் அறம்வகுத்த முறைக்கும் எடுத்துக்கொண்ட குறட் பொருள்பற்றியுள்ள ஒப்புமையை இவ்வாக்கியத்தாற் கூறியதன்றி, ஈண்டுப் பரிமேலழகர் காலமுறையால் முதல் வழி சார்புநூல்களாமாறு வகுத்துக்கூற வந்தாரில்லை. இவ்வாறே பிற இடங்களிலும் குறட்கருத்துக் களோடு வடநூலுடையார் கொள்கைகளின் ஒப்பும் மாறுபாடும் பரிமேலழகர் எடுத்துக்காட்டிச் செல்லுதலும் கவனிக்கத்தக்கது.

சங்கத்தார் பாடியதாகக் கொள்ளப்படும் திருவள்ளுவ மாலைச் செய்யுட்கள்பல குறளை ஆரியமறைகளுக்கு ஒப்பதும் மிக்கதுமாமென்று விசதமாகப் பாராட்டுகின்றன். வேதங்களுக்கு மிகப்பிந்திய மனுவாதி வடமொழி நூலொன்றுமே குறளுக்கு முதனூலாகாதென்னுங் குறிப்பும் திருவள்ளுவமாலைச் செய்யுட்களிற் காணலாம். இவ்வாறு மனுவாதி வடமொழி அறநூலுடையாரே வள்ளுவருக்கு முதனூலுடையராகாத போது, அவரைப் பின்பற்றிய மிகப் பிற்பட்ட கேவலம் நீதிநூலுடைய சாணக்கியராதியர் வள்ளுவருக்கு வழிகாட்டிகளாவது எப்படியோ?

மேலும், நீதி அறத்தில் அரசனால் வற்புறுத்தப்படும் ஒரு கூறேயாமாகலின், அறநூல்களினின்று நீதிநூல்களைப் பிரித்துத் தொகுக்க லாவதன்றிக் கேவலம் நீதிநூல்களினின்று அறநூல்க ளியற்றப்படுமாறில்லை. பரிமேலழகரே பலவிடத்தும் நீதிநூலின் வேறாய அறநூல்களுண்மையைச் சுட்டியுள்ளார். திருக்குறள் அறநூலாகவே, அறத்தின் ஒரு பகுதியான நீதிகளை மட்டுங்கூறும் வடமொழி நூல்களின் வழிநூலாக வள்ளுவர் குறளை இயற்றினார் என்பது பொருந்தாக்கூற்றாம்.
இன்னும், ஆரிய தருமசாத்திரமுறை வேறு, தமிழற நூன்மரபு வேறாகும். இருமுறைகளையும் ஒத்துணர்ந்த வள்ளுவர் திருக்குறள், தமிழ் மரபுவழுவாது பொருளின் பகுதிகளான அகப்புறத் துறையறங்களை மக்கள் வாழ்க்கை முறைக்காமாறு ஆராய்ந்து அறுதியிட்டு வடித்தெடுத்து விளக்கும் தமிழ்நூல். தமிழ்மரபும் ஆரியர் சம்பிரதாயமும் அறிந்த பரிமேலழகர் தம் குறளுரையில் ஆங்காங்கே இவ்விருபெருவழக்குக்களின் இயையும் முரணும் எடுத்துக் காட்டிச் சொல்லுமழகு பாராட்டத்தக்கது. இதை விட்டுத் திருக்குறள், சாணக்கியராதி வடமொழி நீதி வழி நூல்களுக்குப்பின் அவறறின் சார்புநூலாக எழுந்ததென்பர் தமது ஆரியமதிப்பும் காதலும் வெளிப்படுத்துவதன்றிச் சரிதவுண்மை துலக்குபவராகார். தமிழிற் பெருமையுடைய அனைத்தும் ஆரிய நூல்களினின்று திரட்டப்பட்டிருப்பதாகக் காட்டி மகிழ்வார் சிலர்க்கன்றி, நடுநிலையாளருக்கு வள்ளுவர் குறள் தமிழில் தனி முதலற நூலேயாகுமென்பது வெள்ளிடைமலையாம்.
(தொடரும்)

Monday, March 23, 2020

நானிலம் புகழும் நாவரசர் ஒளவை நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்

நானிலம் புகழும்

நாவரசர் ஒளவை நடராசன்

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்க சிலருள் ஒருவர் அறிஞர் முதுமுனைவர் ஒளவை து.நடராசன்; எந்தத் தலைப்பாக இருந்தாலும் கையில் எந்தக் குறிப்புமின்றிச் சிறப்பாகப் பேசும் சீரிய சிந்தனையாளர்; பட்டிமன்றங்கள், பொது நிகழ்ச்சிகள் வாயிலாக நாடறிந்த நல்லறிஞராகத் திகழ்பவர். நகைச்சுவையாகப் பேசும் பலரும் அந்தந்த நேரத்திற்கான ஆரவாரத் துணுக்குகளை உதிர்ப்பவர்களாக உள்ளனர். அவ்வாறில்லாமல், நகைச்சுவையாக, அதே நேரம் அறிவார்ந்த கருத்துகளைப் பேசும் நாவரசர்.  இவரது உரை வளமும் குரல் வளமும் கேட்டவர்களை இவர் பக்கம் பிணைத்துப் புகழ் ஏணியில் இவரை ஏற்றுகின்றன. உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி அவர்களின் உரை வளம் இவரின் சொல்வளமாக மாறித் தமிழ் உலகை மகிழ்விக்கிறது.
குடும்பம்:   
 தமிழறிஞர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி – உலோகாம்பாள் இணையரின் திருமகனாக சித்திரை 32. 1967 / 24.04.1936 இல் இன்றைய  திருவண்ணாமலை (அன்றைய வடஆர்க்காடு) மாவட்டத்திலுள்ள செய்யாறு என்னும் ஊரில் பிறந்தார். தமக்கை, மூன்று தங்கையர், நான்கு தம்பியர் உடையவர். மனைவி குழந்தை நல மருத்துவர் தாரா நடராசன் அரசின் மருத்துவக் கல்லூரித் தலைமையாளராக( Dean)ப் பணி நிறைவு பெற்றவர். மரு. கண்ணன் நடராசன், முனைவர் அருள் நடராசன், மருத்துவர் பரதன் நடராசன்  என்னும் நன்மக்கள் மூவர் இவ்விணையருக்கு உள்ளனர்.
கல்வி
தமிழில் முதுகலைப் பட்டம்(மதுரை தியாகராசர் கல்லூரி), இளமுனைவர் பட்டம்(சென்னை பச்சையப்பன் கல்லூரி)முனைவர் பட்டம் பெற்றவர். இவர் அளித்துள்ள ‘சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு’ என்னும் தலைப்பில் இள முனைவர் பட்டத்திற்கான ஆய்வேடும்(1958) ‘சங்க காலப் புலமைச் செவ்வியர்’ என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வேடும் இவரின் சங்க இலக்கிய ஈடுபாட்டையும் ஆய்வுப் புலமையையும் உணர்த்துவன.
நாநலம்
நாநலம் என்னும் நலனுடைமை இவருக்கு மாணவப்பருவத்திலேயே வாய்த்தது. அதனால் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கும் வகையில்  பல்வேறு கல்லூரிகளுக்கும் செல்லும் வாய்ப்பைப் பெற்றார். இளைஞர் கூட்டம் இவரால் ஈர்க்கப்பட்டு இவரை மொய்த்தன. படித்தபின்பு பணியாற்றும் பொழுதும் இவரைச் சுற்றி இளைஞர் கூட்டம் இருந்தது. அல்லது இளைஞர்கள் இருந்த இடத்தில் இவர் இருந்தார். அந்தப் பேச்சுத்திறமைதான் இவரைக் கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஞ்சிராமச்சந்திரன் முதலானவர்களின் அன்பிற்கு ஆட்படுத்த வைத்தது. இதுவே உரிய காலத்தில் மும்முதல்வர்களால் சிறப்பு மிக்கப் பணிப்பொறுப்பு ஏற்கும் வாய்ப்புகளை நல்கியது.
பணி
மதுரையில் உள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப்பயிற்றுநராக இவரது பணி வாழ்க்கை தொடங்கியது. பின் தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோசி கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும் பொழுது மாணாக்கர்கள்பலர் வெளியே செல்வது வழக்கமாக உள்ளது. ஆனால், இவர் வகுப்பு எடுக்கும் பொழுது பிற வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களும் இவர் பாட உரையைக் கேட்க வந்து நெருக்கியடித்து உட்கார்ந்து கொள்வார்களாம். அவ்வாறு பாடங்களையும் நகைச்சுவையாகவும் பிறரை ஈர்க்கும் வகையிலும் விளக்கியுள்ளார்.
அடுத்துப் புதுதில்லியில் அனைத்து இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் எனப் பணியாற்றி வானலை வழியும் புகழ் பெற்றார். அங்கிருந்து விலகிய பின்னர், காந்தி-இராமலிங்கர் பணி மன்றச் செயலாளராகப் பணியாற்றி அருட்பணிகளையும் தமிழ்ச்சிறப்புகளையும் பரப்புவதில் ஈடுபட்டார். இப்பணி அவருக்கு எண்ணற்ற ஆன்றோர்கள் அறிஞர்களின் தொடர்பை ஏற்படுத்தித் தந்தது.
மக்களைக் கவரும் பேச்சாற்றல் மிக்க இவர் தமிழகஅரசில் பணியாற்ற வேண்டும் என விரும்பினார். அதே எண்ணங் கொண்டிருந்த அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி இவரைச் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் துணை இயக்குநராகப் பணியமர்த்தினார். பின்னர் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநரானார்(1975-84). இந்திய ஆட்சிப்பணித் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டும் பணியாற்றும் அரசு செயலர் பணியிடத்தில் அப்போதைய முதல்வர்  புரட்சித்தலைவர் எம்ஞ்சிஇராமச்சந்திரன் இவரை அமர்த்தி,  தமிழ் வளர்ச்சி- பண்பாட்டுத்துறைச் செயலாளராகப் பணியாற்றச் செய்தார்(1984-92). இவருக்கு முன்னரும் பின்னரும் இ.ஆ.ப. அல்லாத எவரும் அரசு செயலராகப் பணியாற்றியதில்லை என்னும் சிறப்பு இவருக்குரியது. அதிகாரப் பகட்டு இல்லாமல் எளிமையாய் யாவருடனும் பழகும் நேர்த்தியும் அடுத்தவர் கருத்துகளுக்குச் செவிமடுத்து அவர்களை மதிக்கும் பண்பும் எந்நாளும் எப்பொழுதும் இவர் அறையில் பலரும் வந்து செல்லும் நிலையை ஏற்படுத்தியது.
பின்னர் அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவி செ.செயலலிதாவினால் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பினை (1992 திசம்பர் 16ஆம் நாள் முதல் 1995 திசம்பர் 15ஆம் நாள் வரை) வகித்தார். 2014 ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராக  இருந்தார். 2015 ஆம் ஆண்டு முதல் சென்னையிலுள்ள பாரத்து பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்து வருகிறார்.
வழிகாட்டி
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகச் செயல்பட்டிருக்கிறார். உலகின் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் நடைபெற்ற மாநாடுகளில் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார். 1982-இல் சான்பிரான்சிசுகோவில் நடைபெற்ற அனைத்து நாடுகளின் கவிஞர்கள் மாநாட்டில் தமிழகச் சார்பாளராகப் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார். மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் செயலாளராகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் மருத்துவத் தொழில்நுட்ப சொல்லாக்கக் குழுத் துணைத்தலைவராகப் பங்கேற்று சிறப்பித்திருக்கிறார். இவ்வாறு பல்வேறு பொறுப்புகள் மூலம் திறம்படப் பணியாற்றித் தமிழ்த்தொண்டாற்றி உள்ளார். இவர் பொறுப்பிலிருந்தும் வாளாவிருக்க வேண்டிய சூழல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக  இருந்த பொழுது ஏற்பட்டது. ஆனால், பிற எல்லா நிலைகளிலும் இவரது சுறுசுறுப்பும் விரிந்து பரந்த அறிவும் தமிழுலகு தழைக்கவும் தமிழன்பர்கள் உயரவும் உதவின என்பதில் ஐயமில்லை.
விருதுகள்
அரசுகளாலும் அமைப்புகளாலும் இவருக்குப் பல்வேறு விருதுகள் வழங்கப்பெற்றுள்ளன.  அவற்றுள் குறிப்பிடத்தக்கவை வருமாறு
  1. தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது
  2. இந்திய ஒன்றிய அரசின் ‘தாமரைத்திரு’(பத்மசிறீ) விருது(2011)
  3. இலங்கை, கம்பர் கழகத்தின் ‘“தன்னேரில்லாத தமிழ் மகன்’ விருது
  4. தமிழக அரசின் 2009ஆம் ஆண்டிற்கான ‘அறிஞர் அண்ணா ‘விருது
  5. கொழும்புக் கம்பன் கழகத்தின் ‘கம்பன் புகழ்’ விருது (2012)
  6. தினத்தந்தி நாளிதழின் ‘சி. பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர்’ விருது. (2014)
நூல்கள்
நூற்றுக்கணக்கான மாநாடுகளிலும் கருத்தரங்கங்களிலும் இவர் ஆற்றியுள்ள தொடக்கவுரைகள், மையக் கருத்துரைகள், சிறப்புரைகள் முதலியன இலக்கியச் சிறப்பு மிக்கன. ஆங்கிலத்திலும், தமிழிலும்  ஆய்வுக் கட்டுரைகளை  எழுதியுள்ளார். ஒளவை நடராசனார்க்கு இருக்கும் அறிவு வளத்திற்கு எண்ணற்ற நூல்களை எழுதியிருக்கலாம். இருந்தாலும் இவரது  பணிச்சூழலும் இலக்கியச் சூழலும் அதற்கான வாய்ப்புகளை வழங்கவில்லை. எனினும் இவரது சொற்பொழிவுகள் சில நூல்வடிவம் பெற்றுள்ளன. அவை வருமாறு:
  1. வாழ்விக்க வந்த வள்ளலார்
  2. பேரறிஞர் அண்ணா
  3. கம்பர் காட்சி
  4. கம்பர் விருந்து
  5. திருப்பாவை விளக்கம்
  6. திருவெம்பாவை விளக்கம்
  7. சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்
  8. அருளுக்கு ஔவை சொன்னது
  9. Self Confidence
  10. Saying of Stalwart
  11. Art Panaroma of Tamils
  12. Thirukkovaiyar
மொழிபெயர்ப்புத் திறன்    .
மொழிபெயர்ப்பிலும் சொல்லாக்கங்களிலும் இவரது பணி சிறப்பானதாகும். அரசின் ஆணைய அறிக்கைகள் முதலானவற்றில் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் நீண்ட தொடர்களைப் பயன்படுத்திப் படிப்போரை மிரளச் செய்து கொண்டிருந்தனர். அப்போக்கை முற்றிலும் மாற்றியமைத்து, எளிய சிறிய சொற்கள் மூலம் மொழிபெயர்ப்புகளை வழங்கித் தமிழின் சிறப்பைப் புரியச் செய்தார். 
பணிப்பாங்கும் பழகும் பண்பும் 
            இவரது செயல் திறனும் சொற்றிறனும்  புரட்சித்தலைவர் எம்ஞ்சிஇராமச்சந்திரன், முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, புரட்சித் தலைவி செ.செயலலிதா ஆகிய  மூன்று முதல்வர்களின் அன்பிற்கு இவரை ஆட்படச் செய்தன.
இவர் உயர்பணிகளில் இருந்த பொழுதிலும் இவரை நாடி இருபால் இளைஞர்களும் குழுமி இவரின் வழிகாட்டுதல்களைப் பெற்றனர். அதனால் இளம் பேச்சாளர்கள் பலரை உருவாக்கினார். அத்தகையோர்தான் பிற்காலத்தில் – அஃதாவது இக்காலத்தில் – மேடைப் பேச்சாளர்களாகவும் பட்டிமன்றப் பேச்சாளர்களாகவும் விளங்குகின்றனர்.  இன்றைக்கு மேடையில் முழங்கும் பலரும் இவரது வழிகாட்டுதலால் உருவானவர்களே!
   எந்தப் பணியில் இருந்தாலும் கூட்டங்களுக்கான அழைப்பை ஏற்றுச் சொற்பொழிவாற்றச் செல்லத் தவறுவதில்லை. நகைச்சுவையுடனும் புதிய புதிய தகவல்களுடனும்  இலக்கியச் சுவையுடனும் ஆற்றும் இவரது உரைகள் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைத்துத் தரப்பாரையும் மகிழ்விக்கின்றன. பட்டிமன்றங்களில் இவர் பாங்குடன் ஆற்றும் உரைகள் துணுக்குத் தோரணங்களாக அமையாமல் இலக்கியத்தரம் வாய்ந்தனவாய் அமைந்தன. எனவே, பொதுமக்களிடையே இவருக்கென ஓர் அன்பர் கூட்டம் இன்றும் இருக்கிறது.
வாழ்க வாழ்கவே
தமிழுண்டு தமிழ் மக்களுண்டு — இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
என்னும் பாவேந்தர் பாரதிதாசனின் முழக்கத்தையே வாழ்நாள் இலக்காகக் கொண்டு செயல்படும்,  
தந்தையார் உரைவேந்தர் வழியில் உரையாளராக உலகத்தமிழர்கள் போற்ற வாழும், 
நாவரசர் ஒளவை நடரசானார்  நானிறலம் சிறக்க நூறாண்டுகள் கடந்தும் நற்றமிழ்த் தொண்டாற்றி வாழ்வாராக!
இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, November 16, 2019

உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது




உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்

தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்புகள் சில ஒன்று சேர்ந்து இன்று – நவம்பர் 17 – உலகத்தமிழ்நாள் கொண்டாடுகின்றன. பாராட்டிற்குரிய நிகழ்வாக இது உள்ளது. தாய்மொழி நாள் என ஒன்று யுனெசுகோ அறிவிப்பிற்கிணங்கக் கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்த நாளில் இந்திய அரசு சமசுகிருத நாளைத்தான் கொண்டாடுகிறது. தமிழையும் பிற மொழிகளையும் புறக்கணிக்கிறது. ஆனால், உலகத்தமிழ் நாள் என்றால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட முடியும். தமிழ்நாட்டுச் சூழலை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல் தமிழர்கள் வாழும் அந்தந்தப் பகுதிகளுக்குரிய சூழலை அடிப்படையாகக் கொண்டு, கதை, கவிதை, பிற படைப்புகள் வர இந்த நாள் உந்துதலாக இருக்க வேண்டும். தமிழையும் தமிழரையும் மேம்படுத்த இந்தநாளில் திட்டங்கள் தீட்டிச் செயற்படுத்த வேண்டும்.
தமிழறிஞர்களையும்தமிழ்க்கலைஞர்களையும் போற்றும் நாளாக இந்த நாள் இருக்க வேண்டும். எனவே, உலகத்தமிழ்நாளை வாழ்த்துவோம்!
இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியராகவும் நக்கீரராகவும் போற்றப்படும் பேராசிரியர் சி.இலக்குவனாரின் பிறந்த நாளே நவம்பர் 17. தமிழ்ப்பேராசிரியராக மட்டுமல்லாமல் களப்போராளியாகவும் திகழ்ந்தவர் பேராசிரியர் இலக்குவனார் மட்டுமே! எனவே, அவரது பிறந்த நாள் உலகத்தமிழ் நாளாகக் கொண்டாடப்படுவது பொருத்தத்திற்கும் சிறப்பிற்கும் உரியது.
தந்தை பெரியார் அவருக்குத் ‘தமிழர் தளபதி’ எனப்பட்டம் சூட்டி மகிழுந்தில் உட்கார வைத்து ஊர்வலம் நடத்தி மகிழ்ந்தார். தமிழக அரசின் காவல் துறை அவரை ‘இந்திஎதிர்ப்புப் போரின் படைத் தளபதி’ என்று குற்றம் சாட்டிச் சிறையில் தள்ளியது. இரண்டுமே அவரின் பணிக்கான அங்கீகாரமே! 1967 இல் ஆட்சியில் இறந்து இறங்கிய காங்கிரசு இன்னும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அதற்குக் காரணம் 1965 ஆம் ஆண்டு மொழிப்போர். அந்த மொழிப்போரைத் தலைமை தாங்கி நடத்தியவர் தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார் என்னும் பொழுது 1967 முதல் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஆட்சியில் இருப்பதற்குக் காரணம் அவரின் மொழிப்போர் உழைப்பே எனலாம்.
இலக்குவனார், திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் மாணாக்கராக இருக்கும் பொழுதே தொல்காப்பியத்தை முழுமையாகக் கற்றார். அக்கல்லூரியில் மொழியியல் குறித்து ஆங்கில நூல்கள் மிகுதியாக இருந்தன. அனைத்தையும் நன்கு கற்றார். கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தைப் பல முறை படித்து அதன் நிறைகுறைகளை அறிந்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். கல்லூரி முதல்வர் பி.சா.சு. தொல்காப்பியத்தை நடத்தும் பொழுது ஆரியத் தழுவலாகத் திரித்துக் கூறும் பொழுதெல்லாம் உடனுக்குடன் மறுத்துத் தொல்காப்பியம் மூலநூலே என்பதை மெய்ப்பித்தார். இதனால் உடன்படித்த மாணவர்களின் நாயகனாகத் திகழ்ந்தார். அப்பொழுது ஆங்கிலத்தில் தொல்காப்பியத்தை மொழி பெயர்த்து உலகெங்கும் பரப்ப வேண்டும் என முடிவெடுத்தார்.  அதற்கேற்பப் பின்னாளில் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் திறனாய்வுரையும் எழுதி முனைவர் பட்டமும் பெற்றார். இந்த ஆங்கில மொழிபெயர்ப்பைப் பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்து வெளிநாடு சென்ற பொழுது சென்ற இடங்களில் எல்லாம் கொடுத்து வந்தார்.
படிக்கும் பொழுதே ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும் தனித்தமிழ்ப் பாவியம் எழுதினார். அதற்குப் பின்னரும் இலக்குவனார் ‘துரத்தப்பட்டேன்’ முதலான பல்வேறு தனித்தமிழ்ப் பாடல்களை எழுதினார். இது குறித்துக் கவிஞர் சுரதா, “பேராசிரியர் இலக்குவனார் தமிழ்க்காப்புப் போரில் களத்தில் நின்றமையால் தமிழுலகம் நோபள் பரிசுபெறும் தகுதியுடைய கவிஞரை இழந்து விட்டது” என்று கூறியுள்ளார். தமிழ்க்காப்புப்போரில் தம் வாழ்நாளில் பெரும்பகுதியை இலக்குவனார் செலவழித்தமையால் அவரது படைப்புப்பணி குறைந்தது. எனினும் அவர் முப்பதிற்கும் மேற்பட்ட  இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், பழந்தமிழ், தொல்காப்பிய ஆராய்ச்சி, அமைச்சர் யார்?, திருக்குறள் எளிய பொழிப்புரை, வள்ளுவர் கண்ட இல்லறம், வள்ளுவர் வகுத்த அரசியல் முதலான தமிழ் நூல்களையும்   Origin and Growth of Tamil, The Making of Tamil Grammar, A Brief Study of Tamil Words-The Chronology of Tamil Grammarians, Semantemes and Morphemes in Tamil Langugage, Tamil Language. Tholkappiam in English with Critical Studies முதலான ஆங்கில நூல்களையும் எழுதித் தமிழின் சிறப்புகளை உலகறியச் செய்தார்.
அறியாமையாலும் வஞ்சகத்தாலும் ஆயிரக்கணக்கான தமிழ் இலக்கியங்களை ஆடிப்பெருக்கின் பொழுது ஆற்றிலே தொலைத்தனர் நம் முன்னோர். அவ்வாறு சங்க இலக்கியங்களும் அழிந்து போயிருக்கும். ஆனால் அதனைக் காத்துப் பரப்பிய பெருமைக்குரியவர் இலக்குவனார். திருநெல்வேலியில் ‘வட்டத் தொட்டி’ என்னும் குழுவினர் நடத்திய ஒரு கூட்டத்தில் “சங்க இலக்கியத்தைத் தூக்கி வங்கக் கடலில் எறிவோம்” என்னும் முழக்கம் எழுப்பப்பட்டது. ஆற்றிலே தமிழ் இலக்கியங்களை அழித்த மூடர்கள் கடலிலும் அழிக்க முன் வந்தனர். சங்க இலக்கியம் என்றென்றும் வழிகாட்டும் மக்கள் இலக்கியம்  என்பதை உணர்த்தி அதனைத் தடுத்தவர் இலக்குவனார். மக்களிடம் இலக்கியங்களைக் கொண்டு செல்லாமையால்தான் இந்த அவலம் நேர்ந்துள்ளது எனக் குறிப்பிட்ட இலக்குவனார் ‘சங்க இலக்கியம்’ என்னும் வார இதழைத் தொடங்கினார். அதன் மூலம் சங்கத்தமிழின் சிறப்புகளை எளிய நடையில் மக்களிடையே பரப்பினார். “சங்கத்தமிழ் பாடித் தமிழர் புகழ் வளர்ப்போம்” என்று மக்களை முழங்கச் செய்தார். எனவே, சங்கத்தமிழைச் சுவைத்த தமிழ் மக்கள் அதனைக் காக்கவும் போற்றவும் தொடங்கினர். தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் சங்கத் தமிழ்ப்புலவர்களுக்கு விழா எடுத்தார். சங்க இலக்கியங்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்கச் செய்து வளரும் தலைமுறையினர் அதன் சிறப்புகளை உணரச்செய்தார். தாம், சங்க இலக்கியம் தொடர்பான கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியதுடன் நில்லாது, பிற அறிஞர்களையும் தொடர்பு கொண்டு அவ்வாறு எழுதத் தூண்டுதலாக அமைந்தார்.
சங்க இலக்கியம், இலக்கியம், குறள்நெறி, திராவிடக் கூட்டரசு,Dravidian Federation, Kural Neri     முதலான தமிழ், ஆங்கில இதழ்கள் மூலம் பொது மக்களிடையேயும் தமிழ் நெறிகள் பரவக் காரணமாக இருந்த இதழியல் அறிஞர் இலக்குவனார்.
தந்தை பெரியார், தமிழ் இலக்கியங்களும் தமிழ்ப்புலவர்களும் மூட நம்பிக்கைகளைப் பரப்புவதாக எண்ணிக் கொண்டிருந்தார். அந்த எண்ணத்தைப் போக்கியவர்களில் இலக்குவனாரும் முதன்மை இடத்தில் உள்ளார். முதலில் சிலப்பதிகாரத்திற்கு எதிரான கருத்துகளைக் கூறி வந்த பெரியார், இலக்குவனாரின் சிலப்பதிகாரச் சிறப்புரைகளை வெளியிட்டார். இலக்குவனாரின் திருக்குறள் உரைகளையும் நிகழ்ச்சிகளையும் வெளியிட்டார். புதுக்கோட்டையில் திருவள்ளுவர் கழம் மூலம் வாரந்தோறும் திருக்கறள் சொற்பொழிவு ஆற்றி வந்தார் இலக்குவனார். இது குறித்துப் பெரியார்,  “தொடர்ச்சியாக ஞாயிறு தவறாமல் ஒலிபெருக்கியுடன் சொற்பொழிவுகள் ஆற்றியமை முற்றிலும் புதுமையாகும்இராமாயணம்பாரதம் போன்ற புராண நூல்களைத்தான் இதுவரை தொடர்ச்சியாகக் காலட்சேபம் செதுவந்துள்ளமை அறிவோம்ஒரு நீதிநூலைத் தொடர்ச்சியாகச் சொல்லுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கேட்பதும் என்றால் எங்கும் காணாத புதுமை என்றுதான் கூறுதல் வேண்டும்”. (விடுதலை, 04.04.1952) எனக் குறிப்பிட்டார்.
அது மட்டுமல்ல திராவிடர் கழக மாநாடுகளுடன் திருக்குறள் மாநாடுகளும் நடத்தச் செய்தார். திருக்குறள் பற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டிருந்த பெரியாரையே திருக்குறள் மாநாடு நடத்தச் செய்த பெருமைக்குரியவர் இலக்குவனார்.
இலக்குவனாரை இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் எனக் கூறுவதன் காரணம் தமிழுக்கு எதிராக யார் கூறினாலும், அவர் உயர்ந்த பொறுப்பில் உள்ளவரா? உயர் செல்வரா? என்று பார்க்காமல் உடனே துணிந்து கண்டிப்பதுதான். எடுத்துக்காட்டு ஒன்று பார்ப்போம். 1952இல் தமிழக ஆளுநராக சிரீ பிரகாசா என்பவர் இருந்தார். அவர் கூட்டம் ஒன்றில் தமிழ்ப்பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஒரு கருத்தைத் தெரிவித்தார். உடனே இலக்குவனார் வெகுண்டெழுந்து அவரைக் கண்டித்தார். மேலும்,
“இனிமேலாவது, விகடம் என்றெண்ணி அறிவற்ற இந்த வீண் மொழிகளைத் திரு சிரீபிரகாசா விளம்பாமலிருக்கட்டும். வயது முதிர்ச்சியின் காரணமாக அறிவு நிலை தடுமாறி அவர் இப்படி உளறினாலும் அதனைக் கேட்டுத் தம் தன்மானத்தையும் மறந்து, அங்குக் கூடியிருப்பவர்கள் இருக்க வேண்டா. அதற்கு மாறாக ஆரியப் பண்பாட்டிலே ஊறித்திளைத்து, அவர்கள் குண இயல்புகளைக் கூறும் திரு சிரீ பிரகாசாவுக்கு மற்ற பெண்களின் உயர்ந்த பண்பாடுகளை எடுத்தோதி அவரைத் திருத்துவதுதான் அவர்கள் கடமை. உங்கள் தீர்ப்பென்ன?” (திராவிடக் கூட்டரசு 31.10.52  மலர் 1 இதழ் 7) என உரைத்தார். தமிழ்ப்பண்பாட்டைப் பழித்துக் கூறியவர் ஆளுநராக இருந்தாலும் எதிர்ப்பைக்காட்டாத அஞ்சா நெஞ்சர் அவர்.
இன்றைய தமிழ் எழுச்சி ஊர்வலங்களுக்கு எல்லாம் வித்திட்டவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரே ஆவார். தாம் பணியாற்றிய ஊர்களில் எல்லாம் வீதிக்கு வந்து மக்களை ஒன்று திரட்டித் தமிழ்க்காப்பு ஊர்வலங்களை நடத்தி மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தினார். அவற்றில் ஓர் ஊர்வலமான  25.8.63 இல் நடைபெற்ற தமிழ்க்காப்புக் கழக ஆண்டுவிழா ஊர்வலம் குறித்துப் புலவர்மணி இரா.இளங்குமரன் கூறியதைப் பார்ப்போம்(செந்தமிழ்க்காவர் சி.இலக்குவனார்: பக்கம் 48):
 “தமிழே உணர்வான ஊர்வலம்; தமிழே முழங்கிய ஊர்வலம்; தமிழுக்காகவும் ஒரு பெரும்படை உண்டு என்பதை மெய்ப்பித்த ஊர்வலம்! கட்சிகளின் ஊர்வலமே கண்ட பொதுமக்களுக்குப் புதுப்பொலிவான – எழுச்சிமிக்க இளையரும் முதியரும் நடையிட்டு வந்த ஊர்வலம்! தெருத்தோறும் கூடியும்,மாடி தோறும் ஏறியும் பொது மக்களும் முழக்கமிட நிகழ்ந்த ஊர்வலம்!”
இவ்வாறு அறிஞர்களிடையே இருந்த தமிழ் இலக்கியங்களை மக்களிடையே பரப்பியவர். தமிழ் படித்தவர்களிடையே ஏற்பட்ட எழுச்சியை மக்களிடம் உண்டாக்கியவர். தமிழர்களின் தேசிய மொழி தமிழே என அறிவுறுத்தியவர். இந்தியத் துணைக்கண்டம், மொழி வழித் தேசிய இனங்களின் கூட்டரசாகத் திகழ வேண்டும் என வலியுறுத்தியவர். தமிழ் காக்க இரு முறை சிறை சென்ற பேராசிரியர். தனித்தமிழை வலியுறுத்தும் தமிழ்க்காப்பு உணர்வை மாணவர்களிடமும் மக்களிடமும் ஊட்டியவர். அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்குப் பல்வேறு பன்முகச் சிறப்புகள் கொண்ட தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பிறந்த நாளை உலகத்தமிழ் நாளாகக் கொண்டாடுவது மிகப் பொருத்தமே!
உலகெங்கும் உலகத்தமிழ் நாள் கொண்டாடும் காலம் விரைவில் வரட்டும்! தமிழ்ப்போராளி இலக்குவனாரின் பின் வரும் முழக்கத்தை நடைமுறைப்படுத்த உலகத் தமிழ் நாள் உதவட்டும்!
தமிழகம் உலகத்தின் தாயகம்! – இதைத்
தரணியோர் மதித்திடச் செய்குவோம்
பூ.(இ)ரியாசு அகமது
நன்றி : தினச்செய்தி 17.11.2019 (விரிவு)