Thursday, June 22, 2017

மறக்க முடியுமா? : நாரண துரைக்கண்ணன் – எழில்.இளங்கோவன்



அகரமுதல 191, ஆனி 04, 2048 / சூன் 18, 2017

மறக்க முடியுமா? : நாரண துரைக்கண்ணன்

உ.வே.சாமிநாதரின் கையெழுத்துப் படிகள் அச்சிடுவதற்காக ஆனந்த போதினி அச்சகத்திற்கு வந்தன. அந்தக் கையெழுத்துகளைப் படித்துப் பார்த்த அச்சகப் பொறுப்பாளர் சீவா, அதில் சில பிழைகளைக் கண்டு, அவற்றைத் திருத்தி அச்சுக்கு அனுப்பிவிட்டார்.
  சற்றுத் தாமதமாக அப்பிழையை உணர்ந்த உ.வே.சா, தன் உதவியாளர் இராசகோபால(ஐயங்கா)ரை அனுப்பித் திருத்தி வரச்சொன்னார். இராசகோபால் அச்சகம் வந்தபோது, படிகள் அச்சாகி இருந்த-குறிப்பிட்ட பிழைகள் திருத்தத்துடன்.
 சீவாவின் தமிழறிவை வியந்த இராசகோபால், சீவாவை உ.வே.சாவிடம் தமிழ் கற்க ஏற்பாடு செய்வதாகச் சொன்னார்.
ஆனால் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் என்ற சூத்திரனிடம் தமிழ் பயின்ற உ.வே.சாமிநாத ஐயர், ‘‘நான் ஒரு சூத்திரனுக்குத் தமிழ் கற்றுத்தரமாட்டேன்’’ என்று  சீவாவைச் சொல்லியிருக்கிறார்.
அந்த சீவாதான் நாரண துரைக்கண்ணன்.  சீவா, மைவண்ணன், வேள், துலாம், தராசு, திருமயிலைக் கவிராயர், துரை, இலியோ இவை யெல்லாம் அவரின் புனை பெயர்கள்.
அவரின் இயற்பெயர் நடராசன். அவரின் புகழ்பெற்ற புதினமான உயிரோவியத்தின் நாயகன் நடராசன், தலைவி கற்பகம். இவ்விருவரும் காதலிக்கிறார்கள். அதை அவர்கள் இறுதிவரை பகிர்ந்து கொள்ளவில்லை கற்பகத்திற்கு வேறு திருமணம் நடைபெறுகிறது. இதை இலக்கிய நயத்துடன் உயிரோட்டமாகச் சொல்வதுதான் ‘உயிரோவியம்‘.
இப்புதினம் நாடகமாகவும் ஆனது. இந்நாடகம் பிரான்சு நாட்டில் கலை இலக்கிய இதழால் சிறந்த நாடகமாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
கோணாட்சி வீழ்ச்சி, நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன், தாசிராணி, தீண்டாதார் யார்?, காதலனா? காமுகனா?, புதுமைப்பெண், நடுத்தெரு நாராயணன், தரங்கினி, அரசியல் வேலைக்காரி, முத்தம்டா, பார்வதி, மேனகா, அழகாம்பிகை, தியாகத்தழும்பு, சீமான் சுயநலம், சபலம் என நிறைய நூல்கள் எழுதியிருக்கிறார்.
ஏறத்தாழ இவரின் 150 நூல்கள் அரசுடமையாகி உள்ளன.
இவரின் இளம் அகவையில் பரலி சு.நெல்லையப்பர் பரிந்துரையில்     ‘(உ)லோகோபகாரி’ வார இதழின் ஆசிரியரானார். 1932ஆம் ஆண்டு‘ஆனந்த போதினி’ இதழின் ஆசிரியர் ஆனார். இந்த இதழில்தான் இவரின் முதல் கதையான அழகாம்பிகை வெளியானது.
1934ஆம் ஆண்டில் ‘பிரசண்ட விகடன்’ இதழ் ஆசிரியரானார்.
தொ.மு.சி.இரகுநாதன்,  சீவானந்தம், பாரதிதாசனார், கம்பதாசன், வாணிதாசன், சுரதா, கா.மு.செரிப், தமிழொளி, கண்ணதாசன், அகிலன், தீபம் பார்த்தசாரதி, கு.அழகிரிசாமி, வல்லிகண்ணன் ஆகியோரின் படைப்புகள் இவரின் இதழ்களில் இடம்பெற்றுள்ளன.
சீவா பதிப்பகம் என்ற இவரின் சொந்தப் பதிப்பில் ஏற்பட்ட இழப்பின் காரணமாக, அக்கடனை அடைக்கத் தன் சொந்த வீட்டை விற்றிருக்கிறார்.
செந்தமிழ்ச்செல்வி, திராவிடன், தமிழ்நாடு, சிந்தாமணி, தேசபந்து போன்ற இதழ்களில் இவரின் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர், சென்னை கம்பர் கழகச் செயலாளர், முற்போக்குச் சங்க எழுத்தாளர் சங்கத் தலைவர், தென்னிந்தியப் பத்திரிக்கையாளர் பெருமன்றத் தலைவர், தமிழ்க் கவிஞர் மன்றத் தலைவர்  ஆகிய பொறுப்புகளைத் திறம்பட வகித்தவர் நாரண துரைக்கண்ணன்.
தந்தை பெரியார்  இரசியாவுக்குச் சென்று திரும்பியிருந்த நேரம். இவருக்குப் பத்திரிக்கையாளர் சார்பாகப் பெருமன்றத்தின் மூலம் வரவேற்பு அளிக்க வேண்டும் என்றார் துரைக்கண்ணன்.
பெருமன்றத்தில் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் அந்த எதிர்ப்பையும் மீறிப்ட பெரியாருக்குச் சென்னை தியாகராயர் நினைவு மன்றத்தில் சிறந்த வரவேற்பு விழாவை நடத்தினார் இவர்.
1946ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் தலைவர் அறிஞர் அண்ணா. இம்மாநாட்டில்தான் அண்ணாவைத் ‘தென்னாட்டு பெர்னாட்சா’ என்று பாராட்டினார் கல்கி கிருட்டிணமூர்த்தி. இம்மாநாட்டை நடத்தியவர் நாரண துரைக்கண்ணன்.
தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட இவர், 1948ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாநாட்டுக் குழுத் தலைவராகச் செயல்பட்டுள்ளார்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசனார் குறித்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
பாவேந்தர் பாரதிதாசனாரின் திருக்குறள் உரையைக் கையெழுத்துப் படியிலேயே படித்த இவர், உரையின் சிறப்பு- குறித்து எழுதிய ஆய்வுக்கட்டுரை ‘முரசொலி’ இதழில் வெளியாகியிருக்கிறது.
1939 & 45 காலக்கட்டங்களில் இந்திய விடுதலைக்கு ஆதரவாகவும், ஆங்கிலேய அரசுக்கு எதிராகவும் இவர் எழுதிய தலையங்கக் கட்டுரைகளால் ஆங்கிலேயர்களின் நெருக்கடிகளுக்கு ஆளானார். ஆனாலும் தொடர்ந்து எழுதினார் நெருக்கடிகளுக்கு நடுவே.
சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் மரணத்தைத் தொடர்ந்து அவரின் குடும்பம் வறுமையில் ஆழ்ந்தது. அக்குடும்பத்திற்கு உதவ முன்வந்த நாரண துரைக்கண்ணன் நிதி திரட்டினார்.
அந்நிதியில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் புதுமைப்பித்தனின் மனைவி கமலா அம்மையாரிடம் கொடுத்து விட்டு, எஞ்சிய தொகையில் இராசா அண்ணாமலைபுரத்தில் ஒரு வீடு வாங்கி அதையும் கமலா அம்மையாரிடமே ஒப்படைத்து விட்டார்.
சென்னை மயிலாப்பூரில் 1906ஆம் ஆண்டு ஆகத்து 24ஆம் நாள் க.வே.நாராயணசாமி- அலமேலு அம்மையாரின் மகனாகப் பிறந்தார் நாரண துரைக்கண்ணன்.
தொடக்கத்தில் திண்ணைப்பள்ளியில் படித்தார். பின்னர் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.
சென்னை அடிசன் நிறுவனத்திலும் அச்சகங்களிலும் தொடக்கத்தில் இவர் பணியாற்றினார்.
திருவல்லிக்கேணி கெல்லட் உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர் மைக்கேலிடம் ஆங்கிலம் கற்றார்.
மறைமலை அடிகளாரிடம் முறையாகத் தமிழ் பயின்றார். சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் திரு.வி.கல்யாணசுந்தரனார், மயிலை சீனிவேங்கட சாமி, கா.நமச்சிவாயம், பா.வே.மாணிக்கம் ஆகியோரிடம் சிறந்த நட்பு கொண்டிருந்த இவர் 1996ஆம் ஆண்டு  சூலைத்திங்கள் 22ஆம் நாள் தன் 90ஆம் அகவையில் மரணத்தைத் தழுவினார்.
எழில்.இளங்கோவன்

Thursday, June 15, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ) – இலக்குவனார் திருவள்ளுவன்




 

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ)

 ‘பேராசிரியர் இலக்குவனாரே மொழிப்போர்த் தந்தை என்பதை எடுத்தியம்பி ஆய்வுசெய்துள்ள திருவாட்டி து.சுசீலா பின் வருமாறு தம் ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ளார்:
  தி.மு.க. கை விட்டுவிட்ட பிறகும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மாணவர்கள் தொடர்ந்து நடத்திய செய்தி இப்போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியவர்கள் மாணவர்கள் என்பதை வலியுறுத்துகிறது. அத்தகைய மாணவர்களின் பங்களிப்பிற்கு மூலக் காரணமாகவும் விலைவாசிப் போரில் ஈடுபட்டிருந்த தி.மு.க. கழகத்தினரை இந்தி எதிர்ப்புப்போரில் ஈடுபடுத்திய கோட்பாட்டாளராகவும் (Theoretician) இலக்குவனார் தமிழ்உரிமைப் போர் வரலாற்றில் அழியா இடம் பெற்று விளங்குகிறார். எனவே, இவரை 1965 மொழிப்போர்த் தந்தை எனக் குறிப்பிடல் மிகையாகாது. (பக்கம் 105-106: பேராசிரியர் டாக்டர் சி.இலக்குவனார் மொழிப்போர்த்தந்தை)
  குறள்நெறி இதழுக்குப் பரவலான வரவேற்பிருந்தது. எனினும் தொழில்முறை விற்பனையாளர்கள் சரிவரத் தொகையை அனுப்பாத இடர்ப்பாடும் இருந்தது. கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் திரட்டிப் பணம் அனுப்பிக் குறள்நெறி இதழ்களைப் பெற்றமையே உதவியாக அமைந்தது. தமிழ் ஆர்வலர்களும் தாமே முன்வந்து முன்தொகை அளித்துக் குறள்நெறியைப் பெற்று ஊக்கப்படுத்தினர். அடுத்துப் பேராசிரியர் இலக்குவனார்,  குறள்நெறி இதழை ஆங்கிலத்திலும் (Kural Neri) திங்கள் இருமுறை இதழாக நடத்தினார். அதற்கான தேவையைப் பின்வருமாறு கூறினார்:
  தமிழகச் செய்திகள், தமிழ்த் தொண்டு பற்றிய நிகழ்ச்சிகள், தமிழர்களின் உள்ளக்கிடக்கை முதலியன பற்றி அயல்நாட்டவர்க்கு அறிவிக்க வேண்டியது தமிழ்ப் பற்றாளரின் தவிர்க்கலாகாக்  கடனாகும். ஆகவே, நமது குறள்நெறி இதழை ஆங்கிலத்திலும் வெளியிடத் துணிந்துள்ளோம்.
 துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி     
 இன்பம் பயக்கும் வினை
எனும் திருவள்ளுவரின் திருவாய்மொழிக்கொப்ப, சிறைப்படினும், பதவியை இழப்பினும், தமிழ்த் தொண்டில் இன்பம் காணும் யாம் இப் புது முயற்சியிலும் ஈடுபடத் துணிந்துள்ளோம்.
குறள்நெறி (மலர் 2 இதழ் 18): புரட்டாசி15,1996: 1.10.65
 சிறை வாழ்க்கையும் பதவிப்பறிப்பும் பேராசிரியர்  இலக்குவனாரை மாற்றி இருக்கும்; அவர், தம் கொள்கைப்பாதையில் இருந்து விலகிவிடுவார் அல்லது  சற்றேனும் இறங்கித் தம் உணர்வில் நீர்த்துப் போவார்; எனவே, எளிதில் மாணவர் பட்டாளத்தையும் இளைஞர் உலகத்தையும் திசை திருப்பி விடலாம் என அரசு கணக்குப் போட்டது பிழையாயிற்று. பேராசிரியர்  இலக்குவனார் முன்னிலும் முனைப்பாகத் தமிழ்க்காப்பிற்கான தமிழ்த்தொண்டில் ஈடுபட்டார். பதவியில் செலவழிக்க வேண்டிய நேரத்தையும் இந்தி முதன்மை எதிர்ப்பிற்கும் தமிழ்க்காப்பிற்கும் செலவிட வாய்ப்பு கிடைத்ததாக மகிழ்ந்தார். தடைமேடுகளையும் படிமேடைகளாக ஆக்குவதுதானே போராளியின் பண்பு? பேராசிரியர்  இலக்குவனாரும் அவ்வாறே தடைகளை உடைத்து முன்னேறினார். தமிழுக்கே முதன்மை, தமிழில்தான் எல்லாம் என்னும் நிலையை உண்டாக்க அயராது உழைப்பதே தம் வாழ்நாட்பணி என்றார். இதனைப் பின்வரும் ஆசிரிய உரைப்பகுதி விளக்கும்.
“ஒன்றே குலமும் ஒருவனே” தேவனும் எனும் கொள்கை அடிப்படையில், உறுபசியும் ஓவாப்பிணியும், செறு பகையும்   நீங்கிய மக்களினத்தை உருவாக்கவும் மொழிவழி மாநிலங்கள் முழுத் தன்னாட்சி பெற்று முழு உரிமையுடன் சாதி மத வருக்க வேறுபாடு அற்ற மக்களாட்சிச் சமநிலைக் குடியரசுகளாய் இணைந்து வாழும் வன்மைமிக்க பாரதக் கூட்டரசை உருவாக்கவும், அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகட்கே முதன்மை என்ற அடிப்படையில் மொழிகளின் சமஉரிமையை நிலைநாட்டவும், தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை  தமிழில்தான் எல்லாம் என்ற நிலையை விரைவில் உண்டாக்கவும், தமிழர் பங்குபெற உரிமையுள்ள இடங்களில் எல்லாம் தமிழும் இடம் பெறவும், காலத்துக்கேற்ப, மரபு கெடாது, தமிழை எல்லா வகையாலும் வளப்படுத்தவும் ஒல்லும் வகையால் அயராது உழைப்பதே இனி எனது வாழ்நாட் பணியாகும்.
குறள்நெறி (மலர்2: இதழ் 12): காரி 16: 1.12.65
 (தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) – வல்லிக்கண்ணன்


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.)

2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி)

தேயாத ஒருவான நிலவே அந்நாள்
செந்தமிழர் வாழ்வென்றால். வருங்காலத்தில்
ஒயாத புகழ்க்கதிரோன் வரவை நோக்கி
உழைப்போம் நாம் உறுதியுடன் வெற்றி காண்போம்
பேயாத விண்ணும் ஓர் நாளில் பெய்யும் பேரிருளும்
 பகல் வந்தால் பிணங்கி ஓடும்!
நாயாக நாமின்று தாழ்ந்த லைந்தால்
நமக்கும் ஓர் எதிர்காலம் உண்டோ? சொல்வீர்!’
எதிர்கால வளத்துக்காகச் செய்யப்பட வேண்டிய ஆக்கப்பணிகளை அறிவுறுத்துகிறார் கவிஞர்.
பல்கலை நற்கழகத்தில் தமிழ்முழக்கம்
பாய்ச்சும் நாள் அன்றோ நம் தமிழர் பொன்னாள்!
 எல்லாநல் லியல்களையும் தமிழ்ச் சான்றோர்கள்
எம் தமிழில் முழக்குகிறார் என்றே ஓங்கிச்
சொல் நாளே தமிழ்க்குலத்தார் உவந்துபோற்றும்
சுடர்ப்பொன்னாள்! இடர்நீங்கும் நன்னாள் என்பேன்!

 கல்விதரு கூடங்கள் மற்றும் உள்ள
 கல்லூரிப் படிப்பெல்லாம் தமிழர்நாட்டுள்
எல்லாமே இருக்கின்ற இயல்கள் முற்றும்
இணையில்லாத் தமிழ் மொழியில் இன்பம் பொங்கச்
சொல்லித் தரும் நாளென்றோ அந்நாள் எங்கள்
சோர்வகலும் வெற்றி நாள்! நன்னாள் அந் நாள்
இல்லாமல் போய்விடுமோ? தமிழா இன்றே
எழுந்தே நில்! தமிழ்முழக்கி எடுநீ வாளை!
 வெறும் உணர்ச்சி ஊட்டும் முழக்கமாக இல்லாது, பயனுள்ள யோசனைகளையும் கவிஞர் எடுத்துக் கூறுவது போற்றப்பட வேண்டியதாகும்.
அறிவியலை, அணுவியலை அண்டம் முற்றும்
ஆராயும் நல்லியலை வானம் தன்னின்
நெறியியல்கள் செறியியலை, அறிஞர்போற்றும்
நிலைக்கின்ற புதுமைதரு இயலை, நல்ல
பொறியியலை மற்றும் உள இயலை எல்லாம்
போற்றித்தேன் செந்தமிழில் சேர்க்க இன்றே
வெறிகொள்வோம்! இந்த வெறி ஒன்றே நம்மின்
விடிவெள்ளியாய்நின்று விளக்கம் நல்கும்!”

(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்