தமிழால் தமிழுக்காகவும் திருக்குறளால் திருக்குறளுக்காகவும் வாழ்ந்து அறப்பணிகள் ஆற்றிவரும் பெருமகனார்தான், திருச்சி மாவட்டம், திருத்தவத்துறை என்னும் இலால்குடியை அடுத்த பூவாளூர் என்னும் ஊரில் பிறந்து தற்போது புள்ளம்பாடியில் வாழ்ந்து வருகின்ற தயாபரனார் அவர்கள்.
ஆளாளுக்கு ஓர் ஆசை உண்டு. இவருக்கும் இவர்தம் குடும்பத்தார்க்கும் திருக்குறளைப் பரப்புவதில் மிகுந்த ஆசை. அத்தோடு அறப்பணிகள் செய்வதில் இவருக்கு மிகுந்த ஆசை.
இளமையிலேயேஉள்ளத்தில்ஊறியதமிழ்
இவருடைய இளமைக் காலத்தில் பூவாளூரில் இவர் தந்தை முதலானவர்களால் முன்னெடுக்கப்பட்ட சைவ சித்தாந்த சங்கத்திற்கு வருகை தந்த ஏராளமான தமிழ்ச் சான்றோர்களுக்குத் தொண்டாற்றியுள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் பரம்பரையைச் சேர்ந்த பெரும்புலவர் செகவீர பாண்டியனார், பெரும்புலவர் வச்சிரவேலு (முதலியார்), “சைவசித்தாந்த சரபம்” அருணை வடிவேல் (முதலியார்), பெரும்புலவர் நடேச (முதலியார்), தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகளின் மகன் மறை.திருநாவுக்கரசு, தொல்காப்பியச் செம்மல் பேரா.கு.சுந்தரமூர்த்தி, தமிழ்ப் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை. ப.சுந்தரேசனார் முதலான பற்பலருக்கு ஊழியம் செய்துள்ளார். அவர்களின் வாய்ச்சொற்களைச் செவிமடுத்துள்ளார். பெரியவர்களின் அணுக்கம், தமிழார்வத்தை இளமையிலேயே இவர் நெஞ்சில் ஊறச் செய்துள்ளது.
இந்தத் தமிழார்வம், தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையரின் ஆசிரியர் தியாகராச செட்டியாரின் பெயரில் தமிழ்ப்பேரவை ஒன்றை நிறுவ இவருக்கு உதவியது. பூவாளூரில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின்வழி 13 ஆண்டுகள் அறிஞர்களை அழைத்துவந்து சங்க இலக்கியங்கள் குறித்துச் சொற்பொழிவாற்றச் செய்துள்ளார். குமரிமுதல் புதுதில்லிவரை பூவாளூரின் பெயரைக் கொண்டுசேர்த்த பெருமை இவரைச் சாரும்.
இலவசமாய்த்தமிழ்வகுப்புகள்
பூவாளூரில் தமது 20ஆம் அகவையில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் இலக்கண வகுப்புகளை இலவசமாய் நடத்தத் தொடங்கினார். பின்னர் திருக்குறளையும் ஏழிளந்தமிழ் எனப்படும் ஆத்திசூடி முதலான நீதி நூல்களையும் 48 ஆண்டுகளாகத் தொடர்ந்து கற்பித்து வருகிறார். இதற்காக ஏறக்குறைய 9500 மணி நேரத்தைச் செலவிட்டுள்ளார். கூடுதலாக 20 மணித்துளிகள் ஓகமும்(யோகாவும்) கற்றுத் தருகிறார்.
பெற்றபிள்ளைகளைப்போல்மற்றபிள்ளைகளும்
இவருடையமகன்திருமூலநாதன்நான்குஅகவையிலேயேதிருக்குறள்முழுமையும்கற்றுஉலகச்சாதனைபடைத்தார். மேலும் 22 தமிழ் இலக்கிய நூல்களிலிருந்து ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார். இந்தியாவிலும் கடல்கடந்து சென்றும் ஏராளமான மேடைகளில் பாடியும் பேசியும் கவனகங்களைச் செய்தும் பல பதக்கங்களையும் எண்ணற்ற பரிசுகளையும் பெற்றுள்ளார். இவருக்கு நான்குஅகவையிலேயேமதிப்புறுமுனைவர்பட்டத்தைக் கலிபோர்னியாவிலுள்ள World Academy of Arts and Culture என்ற அமைப்பு வழங்கியுள்ளது.
இவருடையமகள்காந்திமதிஏழுஅகவையில்திருக்குறள்முதலாகப் பல இலக்கியங்களிலிருந்துபலநூறுபாடல்களைத்தம்பியுடன்சேர்ந்துகூறும்ஆற்றல்பெற்றிருந்தார்.
தன்னுடைய பிள்ளைகளைப் போல அறிவார்ந்த பிற பிள்ளைகளும் இருக்கக்கூடுமே என்று நினைத்த இவர், தென்காசியை அடுத்த ஆய்குடியில், தன் மகன் பெயரில் ‘திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை’ என்ற ஓர் அறக்கட்டளையை 1997இல் தொடங்கி, 1330 குறள்களையும் கூறும் சிறுவர்களுக்கு உரூபா.1330-உம் திருக்குறள் செல்வன் / செல்வி விருதும் வழங்க ஏற்பாடு செய்தார். கடந்த 22 ஆண்டுகளில் தமிழகம், புதுவை ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பணமுடிப்பும் விருதும் பெற்றுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகப் பரிசுத்தொகை 2000 உரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஆகும் செலவுகளுக்காக இதுவரை யாரிடமும் எந்த நன்கொடையும் இவர் பெற்றதில்லை.
கலைவல்லதுணைவியார்
இவருடையதுணைவியார் திருமதி நாகவல்லிஅம்மையார்பன்மொழிஅறிவுடையவர். 1330 அருங்குறளும் மனப்பாடம் செய்தவர். இந்தியிலும் சமற்கிருதத்திலும் பட்டங்கள் பெற்றவர். முதல் 15 ஆண்டுகள் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் தலைவராக இருந்தார். இவரிடம் 13ஆண்டுகள் இந்தி படித்த மாணவர்கள் அனைவரும் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். பல சிறுகதைகளை இந்தியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
(தொடரும்)
-முனைவர் கி.சிவா,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
காந்திகிராம ஊரக நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் – 624 302, பேசி: 97517 79791
சங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை
கணிணி உகத்தில் கணிணி வழியாகத் தமிழ்த் தொண்டாற்றுபவர் சங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசா. அன்றைய மதுரை /இன்றைய தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி என்னும் சிற்றூரில் சித்திரை 17, 1974 / 30.04.1943 இல் பிறந்தவர்; தமிழ் வளர்ச்சிக்கான அரும்பெரும் பணிகளை ஆற்றி வருகிறார். ஆசிரியர் ப.பரமசிவத்திற்கும் ஆசிரியை ஞா.பொன்னுத்தாய்க்கும் திருமகனாகப் பிறந்ததால் ஆசிரியப்பணியில் இயல்பாகவே நாட்டம் கொண்டார். ஆசிரியக் குடும்பத்தைச் சேர்ந்த ஆசிரியரான இவரின் வாழ்க்கைத்துணைவி திருவாட்டி சு.வனசாவும் இளம் முனைவர் பட்டமும் கல்வியியல் முதுகலைப்பட்டமும் பெற்ற ஆசிரியரே.
தமிழியல், கணக்கியல், கணிணியியல் ஆகிய துறைகளில் பட்டங்கள் பெற்றவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 37 ஆண்டுகள்(1964 – 2001) கணக்கறிவியல் துறையில் ஆசிரியப்பணி யாற்றியுள்ளார். இவர் கணக்கில் முதுஅறிவியல் பட்டம் படித்துப் பணியில் சேர்ந்தாலும் பின்னர்(1971-72) இத்துறையில் இளமுனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1964 இல் கணக்குப் பயிற்றுநராகப் பணியில் சேர்ந்தவர் 2001இல் முதுகலைக் கணக்குத் துறையின் தலைவராகப் பணிநிறைவு எய்தினார்.
கல்விமீதும் தமிழ் மீதும் தணியா ஆர்வம் கொண்டுள்ள இவர், தொடர்ந்து மொழியியல் சான்றிதழ்(1978-79), தமிழ் முதுகலை(1980), மொழியியல் முனைவர் பட்டம்(2001) பெற்றுள்ளார். இடையில், கணிணியியலில் பட்டயமும் பட்டமேற்படிப்புப் பட்டயமும் பெற்றுள்ளார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஏற்கப்பட்ட இவரது முனைவர் ஆய்வுப் பட்டத் தலைப்பு: “எழுத்துத் தமிழின் மொழியியல் கூறுகளின் புள்ளிவிவரப் பகுப்பாய்வு – தொல்காப்பியம் முதல் இக்காலம் வரையிலான கால முறைப்படியும் ஒத்தக் காலத்தின்படியுமான மொழியியல் கூறுகள் ஆய்வு (A Statistical Analysis of Linguistic Features in Written Tamil – A diachronic and synchronic study of linguistic features starting from tolka:ppiyam and up to modern times.)” என்பதாகும்.
இக்காலக்கட்டத்தில், விடுதிக்காப்பாளர்(1983-86), கணிணிச் செயல்பாட்டிற்கான பட்டமேற்படிப்புப் பட்டயக்கல்வியின் மாலைநேரப் படிப்பிற்கான இயக்குநர்(1986-1995), கணிணி அறிவியல் துறைத் தலைவர்(1991-1995),கணிணி சார் புலத்தலைவர்(1995-97), துணை முதல்வர் (1997-98) எனப் பல பொறுப்புகள் மூலம், கல்விநலனிலும் மாணாக்கர் நலனிலும் சிறப்பாகக் கருத்து செலுத்தி அனைவர் பாராட்டையும் பெற்றார்.
சங்க இலக்கியத்தில் சொல்லாக்கம் (Coining of Technical words in Sangam literature) என்னும் இவரது முதல் கட்டுரை அறிவியல் இதழான கலைக்கதிரில் வெளிவந்தது. தொடர்ந்து செம்மொழித் தமிழ் இலக்கிய இலக்கணம் சார்ந்து, தமிழ் இலக்கணத்திற்கு வளம் சேர்க்கும் வகையிலும் தமிழ்க்கணிணிப் பயன்பாட்டிற்கு வழி வகுக்கும் வகையிலும் தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் பதினெட்டுக் கருத்தரங்கங்களில் பங்கேற்குக் கட்டுரைகள் அளித்துள்ளார்.
தஞ்சாவூர், தமிழ்ப்பல்கலைக்கழகம் நடத்திய கணக்கு-புள்ளியியல் கலைச்சொற்கள் புனைவு, திரட்டல், தொகுத்தல் கருத்தரங்கத் தலைவராக இரு முறை (6/1984,6/985) இருந்து வழிநடத்தியுள்ளார்.
இவரது குறிப்பிடத்தக்கப் பணி தமிழ் இலக்கியத் தொடரடைவு(Concordance for Tamil Literature) என்னும் இணையப்பதிப்பாகும். சங்க இலக்கியச்சொல்லடைவு வையாபுரியாராலும் பிறராலும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. ஆசியவியல் நிறுவனம், செருமானிய அறிஞர்கள் தாமசு இலெகுமண், தாமசு மிலிடென் ஆகியோரைக் கொண்டு பழந்தமிழ்ச்சங்க இலக்கியச் சொல்லடைவை வெளியிட்டது(A word index of old Tamil caṅkam literature / by Thomas Lehmann and Thomas Malten, 1992). முனைவர். பெ. மாதையனை நூலாசிரியராகக் கொண்டு தமிழ்ப்பல்கலைக்கழகம் சங்க இலக்கியச் சொல்லடைவு வெளியிட்டுள்ளது(2003). தமிழ் இணையக்கல்விக்கழகமும் சங்க இலக்கியச் சொல்லடைவினை இணையத்தில் பதிப்புள்ளது. பேரா.காமாட்சி முதலான அறிஞர்களும் இப்பணியில் இறங்கி உள்ளனர். எல்லாப்பணிகளுக்கும் தலைமை நிலையில் உள்ளதாகப் போற்றத்தக்கது இவரது இணையவழியிலான தொடரைவுப்பணியாகும்.
தொல்காப்பியம், சங்க இலக்கியம் (பத்துப்பாட்டு + எட்டுத்தொகை), பதினெண்கீழ்க்கணக்கு, (திருக்குறள் உட்பட அனைத்து 18 நூல்கள்), திருக்குறள்(மட்டும் – தனியாக), ஐம்பெருங்காப்பியங்கள், முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள், கம்பராமாயணம், நளவெண்பா, பெருங்கதை, கலிங்கத்துப்பரணி, வில்லி பாரதம் (புதியது), பக்தி இலக்கியம், கூட்டுத்தொடரடைவுகள், இடம் பெற்றிருக்கும்.
மேலும், படிப்போருக்குப் பயன்தரும் வகையில் சொற்பிரிப்பு நெறிகள் குறித்தும் அருமையாக விளக்கியுள்ளார்.
தொடரடைவில் குறிப்பிட்ட சொல், எந்தெந்த இடத்தில் வருகிறது என்பது வரிசைப்படியாகத்தரப்படுகின்றன. ஒரே சொல், வெவ்வேறு பொருளில் வருவதை இதன் மூலம் அறிய இயலாது. சொற்களை வகைப்படுத்தி, அந்த வகைகளுக்கேற்ற முறையில் சொல்வகுப்புத் தொடரடைவு அளித்துள்ளார். எனவே, படித்துப்புரிந்து கொள்வதற்கு எளிதாகும்.
சான்றுக்கு ஒன்று: அகல் என்னும் சொல் வினைச்சொற்களாகவும் பெயர்ச்சொற்களாகவும் நீங்கு, விலகு அகன்ற, அகலமான, அகலமான இடம் என்னும் பொருள்களில் வருவதை வகைப்படுத்தித் தருகிறார்.
சொல்லடைவுகளைப் பயன்படுத்தும் பொழுது சொற்களுக்கான பொருள்களை வேறு நூல்களிலோ வேறு தளங்களிலோ தேடாமல், இங்கேயே அறிய வந்தால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் வரும்.
அந்த எண்ணத்தை ஈடேற்றும் வண்ணம் இப்போது முனைவர் பாண்டியராசா உருவாக்கி யுள்ளதுதான் சங்கச்சோலை < sangacholai.in > என்ற இணையதளத்தில் உள்ள சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியம் என்ற பகுதி.
“சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூற்களில் காணப்படும் அரிய சொற்களை, அவற்றுக்கான தமிழ், ஆங்கிலப் பொருள்களுடன், அச்சொற்கள் அப் பாடல்களில் பயின்று வருகின்ற இடங்களில் சிலவற்றையும் கொடுத்து, தேவையான இடங்களில் படங்களையும் கொடுத்து, விளக்க முற்படும் தளம் இது”.
இப்போது ‘அ’ முதல் ‘ஔ’ முடிய உள்ள உயிர் எழுத்துக்களுக்குரிய 495 சொற்களும்
‘க’ முதல் ‘கௌ’ முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 352 சொற்களும்
‘ச’ முதல் ‘சோ’ முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 250 சொற்களும்,
‘ஞ’,’ஞா’,’ஞி’,’ஞெ’,’ஞொ’- வுக்குரிய 40 சொற்களும்
‘த’ முதல் ‘தௌ’ முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 440 சொற்களும்,
‘ந’ முதல் ‘நௌ’ முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 315 சொற்களும்,
‘ப’ முதல் ‘பௌ’முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 795 சொற்களும்
‘ம’ முதல் ‘மௌ’முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 641 சொற்களும
தேவையான சொல்லின் முதல் எழுத்தைத் தட்டினால், அந்த எழுத்தில் தொடங்கும் எல்லாச் சொற்களும் இடது பக்கம் அட்டவணைப் படுத்தப்பட்டிருக்கும். அதில் நாம் தேடும் சொல்லைச் சொடுக்கினால், அச் சொல்லைப் பற்றிய விவரங்கள் கிடைக்கும்.
இணைய வழியிலான பல்வேறு அகராதிகள் உள்ளன. அவற்றில் சிறப்பாக உள்ளது தமிழ்ப்புலவர் அகராதி < https://www.tamilpulavar.org/ > யாகும். இதில் பொதுச்சொற்கள், கலைச்சொற்கள், முதலான வகைகளுடன் ஆங்கில அகராதிகளும் இடம் பெற்றுப் பேருதவியாக அமைந்துள்ளது. ஆனால் இவற்றில் நாம் சொல்லைக் குறிப்பிட்டுப் பொருள்காண வேண்டும். தொடரடைவில் சங்க இலக்கியம் முதலான நூல்களில் உள்ள அனைத்துச் சொற்களும் இருக்கும். அதனைத் தேர்ந்தெடுத்து வரும் இடத்தைக் காண முடியும். சங்கச்சோலையில் உள்ள சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியத்தில், சங்க இலக்கியத்தில் உள்ள அரிய சொற்களை அவற்றின் பொருளுடன் காண முடியும்.
எவ்வாறு இஃது அமைந்துள்ளது என்பதற்கு ஒரு சான்று.
அஃகு – (வி) நுண்ணியதாகு, சுருங்கு, குறை, become minute, shrink, be reduced in size, quantity etc.,
அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து
இலம் என மலர்ந்த கையர் ஆகி – மலை 551,552
பரந்த அரச உரிமையையும், குறுகிய அறிவினையும்,
‘இல்லை’ என்று விரித்த கையினையும் உடையோராய்;
நல்லகம் நயந்து, தான் உயங்கிச்
சொல்லவும் ஆகாது அஃகியோனே – குறு 346/8
நமது நல்ல நெஞ்சத்தை விரும்பி வருந்தி
அதை நமக்குக் கூறவும் இயலாது மனம் குன்றினான் .
இவ்வாறு சொல்லின் தமிழ்ப்பொருள், ஆங்கிலப்பொருள், சொல் இடம் பெற்றுள்ள இலக்கிய அடிகள், நூலின் பெயர், பாடல் / அடி எண் முதலியவை நமக்குக்கிடைக்கின்றன.
ஏறக்குறைய ஈராண்டுகளில் இவ்வருவினைப் பணியை முடித்துள்ளார். மீளாய்வு செய்து, விட்டுப்போன சொற்கள், கிடைக்கக்கூடிய தேவையான படங்கள், சொற்களுக்கான இணைப்புகள் தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எனவே, விடுபாடு, தேவைப்படும் மாற்றம் முதலியவற்றைத் தெரிவிக்க வேண்டி யுள்ளார். நானும் ‘அர்’ விகுதியில் உள்ள சொல்லின் ‘அன்’ விகுதிச்சொல்லையும் சேர்த்து அஃது இடம் பெறும் இடங்களைக் குறிக்க வேண்டும் என்றும் இடம் பெற்ற சொல்லில் பயன்பாட்டு இடம் ஒன்று விட்டுப்போனைதயும் தெரிவித்துள்ளேன். இதுபோல் அனைவரும் தெரிவிப்பின் அவர் எண்ணப்படி இதனைத் தனி இணையதளமாக மாற்றிச் செவ்வையாய்த் தர இயலும்.
இன்றைய அவரின் 77ஆம் பிறந்தநாளின் பொழுது அவர் நலம், வளம்,புகழ் நிறைந்து தமிழுடன் நூறாண்டு வாழ வாழ்த்துகிறோம். இந்நன்னாளில் அவரின் செயற்கரிய பணிகளைக் குறிப்பிடுவதன் காரணம், தமிழ் மாணாக்கர்கள், இலக்கிய ஆர்வலர்கள், சொல் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் முதலான அனைவரும் இவரது தளத்தை நன்கு பயன்படுத்திப் பிறருக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதற்குத்தான்.
மேலும், தமிழக அரசு இவரது பணிக்கான செலவினைவிடக் கூடுதல் தொகையைப் பரிசாக அளித்து இவரைப் போற்ற வேண்டும்! அஃது இதுபோன்ற பணிகளில் ஈடுபடத் தமிழ் ஆர்வலர்களுக்கு உந்துதலாக அமையும். செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனமும் நல்கைத் தொகை வழங்க வேண்டும்!வாய்ப்புள்ள கொடை உள்ளம் கொண்ட நல்லோரும் உதவலாம்!
தமிழ்ச்சொற்கள் தேடுகருவியை அளித்துள்ள முனைவர் பாண்டியராசா, பைந்தமிழுக்கு மேலும் வளம் சேர்ப்பாராக!
கேட்டாரையும் கேளாரையும் பிணிக்கும் நாவரசர் ஒளவை நடரசான் அவர்களின் எண்பத்தைந்தாவது பிறந்தநாள் பெருமங்கலம் இன்று(24.04.2020). அவரிடம் அலைபேசியில் பேசும் பொழுது “புதுச்சொல் புனையும் திறனாளர் பல்லாண்டு வாழ்க” என வாழ்த்தி மகிழ்வித்தார்.
நான், மதுரையில் உள்ள தியாகராசர் நன்முறை உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயின்ற பொழுது அவர் ஒரு நிகழ்ச்சிக்கு வந்து உரையாற்றினார். அவருடைய தம்பி மெய்கண்டான்,(இப்பொழுது குழந்தைகள் நரம்பியல் மருத்துவ வல்லுநர் முனைவர் ஒளவை மெய்கண்டான்) என்னுடன் படித்தார். மிகவும் சிரிப்பாகவும் கல்வியை வலியுறுத்தியும் சிறப்பாக அவர் பேசினார்.
அப்பொழுது எல்லோரையும் சிரிக்க வைத்த ஒன்று,
தம்பி வாடா
கடைக்குப் போடா
வாங்கிட்டு வாடா
வின்செண்ட்டு சோடா
என்பது. (மதுரையில் மிகவும் புகழ் பெற்றது வின்செண்ட்டு நிறுவனம்.) இப்பொழுது இதைக் கேட்பவர்களுக்குச் சிரிப்பு ஒன்றும் தோன்றாமல் இருக்கலாம். ஆனால், அன்று அதை நாங்கள் பல நாள் சொல்லிச் சிரித்து மகிழ்ந்திருக்கிறோம்.
தந்தையார் இருந்த பொழுது அவர் நடத்திய ‘குறள்நெறி’ இதழில் திரைப்படக் கருத்துரை எழுதினார். பூம்புகார் பற்றிய கண்ணோட்டத்தை அவர் எழுதியதன் மூலம் திரைப்படத் திறனாய்விற்கு நல்ல தமிழ் அழகு சேர்க்கிறது என்பதைப் புரிய வைத்தார். இவ்வாறு அவ்வப்பொழுது அவரைப்பற்றிய செய்திகளைத் தமையன்மார் மூலமும் செய்திகள் மூலமும் அறிய வந்தாலும் சென்னை வந்தபின்தான் நேரடிப்பழக்கம் தொடர்ந்தது.
நான் கலைச்சொற்கள் தொடர்பாக மறைமலை அண்ணனிடம் அடிக்கடி ஏதேனும் கேட்டுக்கொண்டிருப்பேன். 1979 இல் நான் சென்னை வந்தபொழுது, அவர் உனக்குச் சரியான ஆள் ஒளவை நடராசன்அண்ணன்தான் அவரைச் சந்தி என்றார். அப்பொழுது அவர் மொழிபெயர்ப்பு இயக்குநராக இருந்தார். உயர் பொறுப்பில் இருக்கும் அவரை எப்படிச்சந்திப்பது என்று தயங்கினேன்.
“அதிகாரப் பகட்டு எல்லாம் அவரிடம் இருக்காது. அவரைச் சந்தி” என்றார்.அதன் பின்னர் அவரைச் செயலகத்தில் சந்தித்தேன். எளிமையாகப் பழகும் அவரிடம் மறைமலை அண்ணன் ஆற்றுப்படுத்தியது சரிதான் என்று உணர்ந்தேன். அவரைச்சந்திக்கும் பொழுதெல்லாம் சில சொற்களைப்பற்றியேனும் உரையாடுவது வழக்கம். அவரும் என்னிடம் சில சொற்கள் குறித்து, இது சரியா என்றெல்லாம் கேட்பார். அல்லது “இதற்குச்சரியான சொல் கிடைக்கவில்லை. ஏதேனும் சுருக்கமான சொல் கூறுங்களேன் தம்பி” என்பார். (தம்பி அல்லது இராசா என்றுதான் விளிப்பார்.)
நானும் அவரும் கலைச்சொற்களைக் குறித்து வைத்துக் கொண்டு சந்திக்கும் பொழுது அவை குறித்துப்பேசி முடிவெடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.
அவர் என்னிடம் என்று இல்லை. யாராக இருந்தாலும் “இந்த இடத்தில் என்ன சொல் சொல்வீர்கள்” என்பார். அல்லது “இந்தச் சொல்லில் நீங்கள் புரிந்து கொள்வது என்ன” என்று கேட்டு சொற்களின் பயன்பாட்டு நிலையை முடிவெடுப்பார். நான் இதில் ஈடுபாடு காட்டுவதால் என்னிடம் மிகுதியாகப் பேசும் நிலை வந்தது.
எனினும் இதைக் குறிப்பிடுவதன் காரணம்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(திருவள்ளுவர், குறள் எண்:423)
என்பதற்கேற்ப மெய்ப்பொருள் காண்பதுதான் நோக்கம் என்பதால் மிகக் கீழ்நிலையில் உள்ளவரிடமும் கருத்து கேட்பார்.
அப்பொழுதும் பின்னர் அவர் தமிழ்வளர்ச்சித்துறை செயலராக இருந்த பொழுதும் அவரரைச் சந்திக்கும் பொழுது பிறர் அவரைச் சந்திக்க வருவார்கள். அவரைச் சந்திப்பதன் மூலம் ஊக்கம் பெற்றுச் செல்வார்கள். அவரவர் தேவைக்கேற்ப நல்லாற்றுப்படுத்துவார். அப்படி அவரைச் சந்தித்தவர்கள், பேராசிரியர்களாக, உயர் அலுவலர்களாக, சட்ட மன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, மாநில அமைச்சராக, மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்கும் நிலைக்கு வந்தார்கள். கூர்த்த உளவியலறிவு இருந்தால்தான் யாவரையும் நெறிப்படுத்தி உயர் நிலை அடையச் செய்ய முடியும்.
அவர் தமிழ்வளர்ச்சித்துறைச் செயலராக இருந்த பொழுது தமிழ் வளர்ச்சித்துறைக்குத் தமிழ்க்குருதியை ஏற்றினார். கலைஞர் மு.கருணாநிதி முதன்முறை தமிழக முதல்வராக இருந்த பொழுது தமிழறிஞர்களின் பிள்ளகளைத் தமிழ் வளர்ச்சித் துறையில் பணியேற்கச் செய்து தமிழ் உணர்வுள்ள துறையாக மாற்ற வேண்டும் என விரும்பினார். ஆனால் மற்றொரு மூத்த அமைச்சர், இவர்களால் ஆய்விற்குச் செல்ல இயலாது. உள்ளாட்சித் துறை முதலான பிற துறைப்பணிகளில் உள்ளவர்களால்தான் இயலும எனக்கூறி அதனைத் தடுத்து விட்டார். தமிழ் வளர்ச்சித் துறையில் பணியாற்றியவர்கள், தாங்கள் அத்துறையின் தமிழ்ஆட்சிப்பணிக்கான தனி அலுவலர்களாக / உதவி இயக்குநர்களாக வரவேண்டும் என்ற ஆசையை வைத்துக் கொண்டு தாங்கள் அதற்குரிய தகுதியைப் பெறும்வரை யாரும் அமர்த்தப்படாமல் பார்த்துக் கொண்டார்கள். அவ்வாறு வெவ்வேறு துறைகளில் இருந்து தமிழ்வளர்ச்சி இயக்ககப் பணிக்கு வந்தவர்கள், பதவி உயர்வைமட்டும் நாடினார்களே தவிர, தமிழ்வளர்ச்சியில் உரிய நாட்டம் இல்லை. எனவே, தமிழ் முனைவர் பட்டம் பெற்றவர்களை அமர்த்த வேண்டும் என்பதே பலரின் எண்ணமாக இருந்தது. இதன் தொடர்ச்சியாகச் செயலர் ஒளவை நடராசன், தமிழக முதல்வர் கலந்து பேசிய எடுத்த முடிவே அத்தகையோரைத் தமிழ் வளர்ச்சித் துறையில் பணிகளில் அமர்த்த வேண்டும் என்பது. உதவி இயக்குநராக நேரடியாக அமர்த்தப்பட முடியாது என்பதால் தமிழ் ஆய்வு அலுவலர்கள் என்ற பதவிப்பெயர்களில் உதவி இயக்குநர் பணிக்கு ஒரு நிலை கீழாக வைத்து அமர்த்தப்பட்டார்கள். சில ஆண்டுகளுக்குப்பின்னர் அனைவருக்கும் த.வ.உ.இ.பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன.
த.வ. இயக்ககத்தினர் இதை வேண்டா வெறுப்பாகப் பொறுத்துக் கொண்டார்கள். ஆனால், பிற துறைகளில் இருந்து அலுவலர் நிலையில் வருகின்றனர். இங்குள்ளோர் வெறும் கண்காணிப்பாளர் நிலைதான். எனினும் இதைத் தடுப்பதற்கு எவ்வளவோ முயன்றனர். பிற துறைகளில் இருந்து அறுவரும் த.வ.துறையில் அறுவரும் பணியமர்த்தத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். பிற துறைகளில் ஒருவர் அரசு நிறுவனம் ஒன்றில் கண்காணிப்பாளர் நிலையில் இருந்த பொழுது விண்ணப்பித்திருந்தார். ஆனால், பணியமர்த்த ஆணைக்குப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் உதவியாளராகக் கீழிறக்கம் செய்யப்பட்டு அழுகையில் ஆழ்ந்து விட்டார். த.வ. இயக்ககத்தினர் அவர் பணியமர்த்தத்திற்குத் தகுதியற்றவர்; எனவே, அவர் பெயரை நீக்கிவிட்டு அமைச்சருக்குக் கோப்பை அனுப்ப வேண்டும் என்றனர். நான் அந்தப் பாதிப்புற்றவரிடம் “உங்கள் பழைய பணிகளை விட்டுவிட்டு நேரடியாக வருவதாக இருந்தால் அதற்கு விதி இருக்கிறது. வருகிறீர்களா?: என்றேன். :நான், த.வ.உதவி இயக்குநராகப் போகப்போவதாக எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். போகவில்லை என்றால் நான் அவமானமாக உணர்வேன். ஆனால், வழியில்லையே” என்றார். நான் ஒளவை அவர்களிடம், நேரடி நியமனத்திற்கு விதிகளில் இடம் இருக்கிறது. இவரைப் பணிமாறுதலில் இல்லாமல் நேரடி நியமனத்திற்குப் பரிந்துரைக்கலாம் என்ற என் கருத்தைச் சொன்னேன். அவரும் உடன்பட்டார். அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து அவர் உதவி இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டார். த.வ.இயக்ககத்தில் தமிழ் படித்த ஒருவர் வருவதற்கும் உள்ளடி வேலை செய்து விதிகளில் இடமில்லை எனப் போர்க்கொடி தூக்கினர். முன் நிகழ்வு இருப்பதால் அவரைத் தேர்ந்தெடுக்கத் தடையில்லை என்பதை ஒளவை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதுதான் சரி என ஒளவை அவர்கள் அவர் பணியமர்த்தத்திற்கும் வழி வகுத்தார்.
துறைக்கு வரும் முன்பே இவன் ஏதோ செய்கிறானே. இவனை வரவிடக்கூடாது என எண்ணிய சிலர் செயலரிடம், “திருவள்ளுவன் தமிழ்வளர்ச்சி உதவிஇயக்குநர் ஊதியததை விடக் கூடுதல் ஊதியம் பெறுகிறார். எனவே வர விரும்பமாட்டார். அவருக்கு மாற்றாக வேறொருவரை அமர்த்தலாம்” என்றார்.
ஆணைக்கான ஒப்பம் பெற முதல்வரிடம் கோப்பு சென்ற நிலையில்தான் இது நடந்தது. உடன் ஒளவை அவர்கள், “நான் அவருக்காகத்தான் இதில் சேர எண்ணுவதாகவும் ஊதிய ஆதாயம இல்லை என்பதால் விருப்பமின்றி இருப்பதாகவும் கூறுகிறார்களே. நான் ஆணையை வெளியிடட்டுமா? அல்லது வேறு யாரையும் அமர்த்தலாமா” என்றார். முன்னர் ஒரு முறை நான் அவரிடம் மொரிசீயசில் தமிழாசிரியர் வேலைக்கு ஆள்எடுக்கிறார்களாம். விண்ணப்பிக்கலாமா என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர், “நீண்டகாலமாக அரசிடம் கேட்டுக்கொண்டுதான் உள்ளனர். ஆனால், இந்திய அரசு தடையாக உள்ளது. எப்பொழுதும் அப்பணி அமர்த்தத்திற்கான வாய்ப்பு இல்லை. ஆனால், விண்ணப்பம் அளித்தால், திருவள்ளுவன் மொரிசியசு செல்ல உள்ளார். அதனால் அவர் பெயரை எடுத்துவிடலாம் எனச்சொல்லி எடுத்து விடுவார்கள். எனவே,அதை மறந்துவிடுங்கள்” என்றிருந்தார். எனவே, இப்போதைய் குழப்பத்தில் உண்மை இருக்கலாமோ என்ற ஐயத்தில்தான் கேட்டார். நான், ஊதிய நிலை குறித்தது உண்மைதான் என்றும் ஆனால், தமிழ்வளர்ச்சித் துறைக்கு வருவதில் ஆர்வமாக உள்ளேன் என்றும் கூறினேன். உடன் “ஆணை ஆங்கிலத்தில் உள்ளது. மற்றொருவரைக் குறிப்பிட்டு அவருடன் இணைந்து தமிழ் ஆணை எழுதுங்கள்” என்றார். இவையெல்லாம் செயலகப்பணிதானே. ஏன், பிறரிடம் கூறுகிறார் என எண்ணலாம். துறையில் பலர் கழித்துக் கட்டியவர்களாக இருப்பார்கள். மேலும், அவர்களிடம் இருந்து த.வ.இயக்ககத்தினர் செய்தியை அறிந்து கொள்வார்கள். எனவேதான் எங்களிடம் கூறினார். நாங்களும் தமிழ் ஆணையை எழுதித் தந்தோம்.
நாங்கள் பணியில் சேர்ந்தாலும் ஆணையம் ஒன்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர் சேரவில்லை. அவர்களைக் காரணம் கேட்ட பொழுது “பணிக்கான விண்ணப்பத்தைத் துறைவழியாக அனுப்பவில்லை எனக்கூறி அவர்களைப் பணிகளில் இருந்து விடுவிக்கவில்லை. எனவே, சேர இயலவில்லை” என்றனர். இருவர் வராததால் அந்த இடத்தில் காத்திருப்புப் பட்டியலில் உள்ள இருவரை அமர்த்த த.வ.இ.னர் முயன்றனர். இதை அறிந்த நான், ஒளவையிடம் கூறினேன். “துறை அமைச்சரான பேராசிரியர்(அன்பழகன்) இதில் உடனடி நடவடிக்கை எடுப்பார். அவரைச் சந்திக்க அவர்களிருவரும் போகவேண்டா. இச்சூழலில் அவர்கள் அஞ்சுவார்கள். நீங்களே சந்தித்துக் கூறுங்கள்” என்றார்.
நானும் பேராசிரியரைச் சந்தித்து இன்னும் இருவர் மட்டும் த.வ.உதவி இயக்குநர் பணியில் சேரவில்லை என்றேன். ஏனென்றார். விவரத்தைக் கூறினேன். அவர் எப்பொழுதும் யார் உதவிகேட்டாலும் அது முறையானதுதானா என்று அறிந்துதான் உதவுவார். “ஆணையம் செய்தது சரிதானே” என்றார். நான், “அவர்கள் விண்ணப்பங்கள் அனுப்பி அதன் முன்படிகளை அரசிற்கு அனுப்பியுள்ளார்கள். ஆட்சிமொழி ஆணையத்தில் பணியாற்றுபவர்கள் இங்கிருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் அரசு அவர்களை பணியமர்த்தியுள்ளது. ஆனால், அவர்களை வெளியே விடக் கூடாது என்பதற்காக அந்த ஆணையத்தில் இருந்து விண்ணப்பத்தை அரசிற்கு அனுப்பவில்லை” என்றேன். உடனே உதவியாளர் மூலம் அந்த ஆணையத்திற்குத் தொலைபேசி இணைப்பு கொடுத்து, ஏன் அவர்களை விடுவிக்கவில்லை எனக் கேட்டார். “துறை மூலமாக அவர்கள் விண்ணப்பிக்கவில்லை. எனவே, விடுவிக்கவில்லை” என்றார்கள். ”துறை என்பது அரசைவிடப் பெரியதா? முதலமைச்சர் தெரிவுசெய்து பணி ஆணை வழங்கிய பின்னர் நீங்கள் எப்படிக் கூறமுடியும்? உடனேஅவ்விருவரையும் விடுவியுங்கள். இல்லையேல் அரசே விடுவிப்பாணை வழங்கும்” என்றார். உடனே ஆணையத்திலிருந்து இருவரையும் விடுவித்தனர்.
உடன் ஒளவையிடம் இதனைத் தெரிவிததேன். “நீங்கள் சரியாகவும் துணிவாகவும் விளக்குவீர்கள் என்பதால்தான் உங்களைப் போகச்சொன்னேன். மகிழ்ச்சி” என்றார்.
இ.ஆ.ப.இல்லாத முதல் செயலர், இதுவரை ஒரே செயலர் என்ற பெருமை இவருக்கு உண்டு என்பதை அனைவரும் அறிவர். எனினும் அதனால் இடர்ப்பாடுகளையும் சந்தித்துள்ளார். இ.ஆ.ப., இ.கா.ப. அலுவலர்களிடம் நேரடியாகத் தெரிவுசெய்யப்பெற்று வந்தவர்கள், பதவி உயர்வில் வந்தவர்கள், மாநில வகையினர், இன வகையினர் என்றெல்லாம் பாகுபாடு உண்டு. உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களிடம்தான் தாழ்ந்த எண்ணம் இருக்கிறது. அதற்கு மற்றோர் காரணம் தங்கள் உரிமை போய்விடுமோ என்ற அச்சம்தான்.
ஆனால், இ.ஆ.ப.இல்லாத செயலர் என்ற வகையில் இவர் ஒருவர் மட்டுமே. இவரை அறிஞராக மதித்தவர்கள் இவருக்கு உரிய மதிப்பு தரத் தவறவில்லை. இ.ஆ.ப.வாலில்லாததை இளக்காரமாக எண்ணிய அதிகாரிகள் சிலரும் உண்டு. அவர்களுள் ஒருவர் தலைமைச்செயலராக வந்தார். அவர் இவர் சந்திக்கச் சென்றால் காத்திருக்கச் செய்து இவரது கட்டுப்பாட்டிலுள்ள இ.ஆ.ப. அலுவலர்களை எல்லாம் சந்தித்து நீண்ட நேரம் உரையாடிவிட்டு இறுதியில் இவரை ஒப்புக்கு அழைப்பார். தமிழ் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாகப் பேச வருபவருக்குத்தான் இந்த நிலை. இது குறித்து வருத்தப்பட்டாலும் “இதனால் துறை சரியாக இயங்காது என்பது இவருக்குத் தெரியவில்லையே” என்பார்.
ஒருமுறை ஏணறை(மின்னேணி)யில் அந்தத் த.செ. செல்லும்பொழுது இவரைப்பார்த்த ஏணறை இயக்கியர் இவருக்காக அதனை நிறுத்திவிட்டார். தன்னுடன் இவரா என முகம்சுளித்த அந்தத் த.செ. வேண்டா வெறுப்பாக உள்ளே வாருங்கள் எனச்செய்கையில் தெரிவித்தார். உடனே உள்ளே நுழைந்த ஒளவை அவரிடம், “ஐயா, நீங்கள்தான் மிகப்பெரிய அலுவலர். இது யாவரும் அறிந்ததே. இயக்கியர், என்னைத் தொலைக்காட்சியில் அவ்வப்பொழுது பார்த்துவிட்டு ஏதோ பெரியவன் என எண்ணி நிறுத்தி விட்டார். ஆனால், நான் சிறியவன். நீங்கள்தான் பெரியவர் என அவரும் அறிவர்” என்றார்.
ஒருமுறை இவர் முதல்வரைச் சந்திக்கச் சென்றிருந்தார். இவருக்கு முன்னதாக அந்தத் த.செ.உம் மேலும 20பேரும் இருந்தனர். அந்தக் காத்திருப்புக் கூடத்திற்கு வந்த முதல்வர் செயலலிதா நேரடியாக இவரைப் பார்த்து “என்ன திரு.ஒளவை எப்படி இருக்கின்றீர்கள்” என்று கேட்டுக்கொண்டேவந்தார். அப்பொழுதாவது அந்த த.செ.வுக்கு “முதல்வரே மதித்கிறாரே நாம் புறக்கணிக்கிறோமே” என்ற உணர்வு வந்ததா எனத் தெரியவில்லை.
எல்லாரிடமும் கலகலப்பாகப் பேசுவதால் அனைவரிடமும் சரணடையும் போக்கு உடையவர்போல் தோன்றும். ஆனால், தன்மானத்திலும் தன்மதிப்பிலும் கருத்தாக இருப்பார். அதற்கோர் எடுத்துக்காட்டு. ஒரு முறை சென்னையில் நடைபெறும் இவர் மகன் திருமணத்திற்காக உறவினர்கள் தங்குவதற்கு இடம் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நாளில் முன்னரே அறைகள் பதிவாகி இருந்தமையால் எங்கும் கிடைக்கவில்லை. நான் அவரிடம் அவரின் செல்வந்த நண்பர் வைத்திருக்கும் விருந்தினர் மாளிகை சும்மாதா்ன இருக்கிறது. கேட்டுப் பார்க்கலாமே என்றேன். உடனே அவர், “நாம் கேட்கலாமா? நாம் கேட்கலாமா? தமிழ்மண்டியிடுவதா? அவராக விவரம் அறிந்து மகனுக்குத் திருமணமாமே என் விருந்தினர் மாளிகையப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றாலும், ஐயா, நன்றி. நான் முன்னரே ஏற்பாடு செய்துவிட்டேன் என்றல்லவா சொல்ல வேண்டும். நாம் போய் உதவி என்று நிற்கலாமா” என்றார்.
இவைபோல் ஒளவை பற்றிக் கூறுவதற்கு நிறைய செய்திகள் உள்ளன. நான் கேட்ட அவரது இலக்கிய உரைகளை எழுதினால் அவை என்உரைபோல் அமையும் என்பதால்தான் அவற்றை எழுதவில்லை. எனினும் பிறவற்றை நேரம் வாய்க்கும் பொழுது எழுதுவேன்.
இத்தகு தன்மான உணர்வும் தன்மதிப்பு உணர்வும் மிக்க, நான் போற்றும்,என் மீது அன்பு கொண்டுள்ள, எனக்கு வழிகாட்டும் தகைமையாளர் வாழ்த்தின் தொடர்பான என் எண்ணங்களைப்பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான்!
இனித் தொல்காப்பியம் முதற்சங்கக் காலத்து ஆக்கப்பெற்று இடைச்சங்கத்தாருக்கு இலக்கணமாயிற் றென்பது தமிழரெல்லார்க்கும் ஒப்ப முடிந்ததொன்று. கடைச் சங்கக் காலத்தினும் தொல்காப்பியம் ஆட்சியிலிருந்ததாயினும் அதன் விதிகளுக்கு மாறுபட்ட வழக்குகள் அச்சங்க நூல்களிற் பயிலக் காண்கின்றோம். உதாரணமாக: மொழிக்கு முதலாகாதென்று தொல்காப்பியம் விதந்து விலக்கிய சகரத்தை முதலாகக்கொண்ட தமிழ்மொழிகள் பல கடைச்சங்க இலக்கியங்களிற் பயிலக் காண்கின்றோம். வள்ளுவர் நூலில் வடசொல்லாய்வந்து வழங்கும் சமன், சலம் என்ற இரண்டொன்று தவிரத் தனித்தமிழ்ச் சகர முதன்மொழிகள் காணல் அரிது. இதனால், தொல்காப்பிய விதிகள் சில வழக்கிழந்த கடைச்சங்கக் காலத்துக்கு முன்னரே அவ்விதிகள் பிறழாமற் பேணப்பெற்ற இடைச் சங்கப் பழங்காலத்தையடுத்தே வள்ளுவரின் குறள் எழுந்திருக்கவேண்டுமென்று ஊகிப்பதும் இழுக்காது.
சாணக்கியம் முதலிய ஆரியநீதிநூல்களினின்று அறங்களைத் திரட்டி வள்ளுவர் நூல் செய்திருக்க வேண்டுமென்றும், ஆதலால், சாணக்கியர் முதலியோருக்கு வள்ளுவர் பிற்காலத்தவரா யிருக்க வேண்டுமென்றும் சிலர் கூறுகின்றனர். இதற்குப் பரிமேலழகர் 662-ஆம் குறளின் விசேடக் குறிப்பில் “வியாழ வெள்ளிகளது துணிபுதொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின்” என்று எழுதியுள்ள வாக்கியத்தை ஆதாரமாக்கி, அவ்வாக்கியத்திற் கண்ட ‘பின் நீதிநூலுடையார்’ என்ற சொற்றொடர் சாணக்கியர் முதலாயினாரைச் சுட்டுவதாகக் கொள்கின்றனர். இதுவே பரிமேலழகர் கருத்தாயின் அவர் விசதமாக்கியிருப்பர். அன்றியும், பின் னீதிநூலுடையார் யாரேயாயினும் அவர் தம் வழி நூல்களுக்குக் குறள் சார்புநூலாகும் என்னுங் கருத்தைப் பரிமேலழகர் இவ்வாக்கியத்தாற் குறித்ததாக ஏற்படுமாறில்லை. ஆழச்சிந்தித்தால் வியாழ வெள்ளிகளின் நீதி நூல்களுங்கூடக் குறளுக்கு முதனூலெனப் பரிமேலழகர் இவ்வாக்கியத்திற் சுட்டிலரென்பது தெற்றென விளங்கும். வியாழ வெள்ளிகளின் துணிபுகளைத் தொகுத்த ஆரியநீதி வழி நூலுடையார் முறைக்கும் குறளாசிரியர் அறம்வகுத்த முறைக்கும் எடுத்துக்கொண்ட குறட் பொருள்பற்றியுள்ள ஒப்புமையை இவ்வாக்கியத்தாற் கூறியதன்றி, ஈண்டுப் பரிமேலழகர் காலமுறையால் முதல் வழி சார்புநூல்களாமாறு வகுத்துக்கூற வந்தாரில்லை. இவ்வாறே பிற இடங்களிலும் குறட்கருத்துக் களோடு வடநூலுடையார் கொள்கைகளின் ஒப்பும் மாறுபாடும் பரிமேலழகர் எடுத்துக்காட்டிச் செல்லுதலும் கவனிக்கத்தக்கது.
சங்கத்தார் பாடியதாகக் கொள்ளப்படும் திருவள்ளுவ மாலைச் செய்யுட்கள்பல குறளை ஆரியமறைகளுக்கு ஒப்பதும் மிக்கதுமாமென்று விசதமாகப் பாராட்டுகின்றன். வேதங்களுக்கு மிகப்பிந்திய மனுவாதி வடமொழி நூலொன்றுமே குறளுக்கு முதனூலாகாதென்னுங் குறிப்பும் திருவள்ளுவமாலைச் செய்யுட்களிற் காணலாம். இவ்வாறு மனுவாதி வடமொழி அறநூலுடையாரே வள்ளுவருக்கு முதனூலுடையராகாத போது, அவரைப் பின்பற்றிய மிகப் பிற்பட்ட கேவலம் நீதிநூலுடைய சாணக்கியராதியர் வள்ளுவருக்கு வழிகாட்டிகளாவது எப்படியோ?
மேலும், நீதி அறத்தில் அரசனால் வற்புறுத்தப்படும் ஒரு கூறேயாமாகலின், அறநூல்களினின்று நீதிநூல்களைப் பிரித்துத் தொகுக்க லாவதன்றிக் கேவலம் நீதிநூல்களினின்று அறநூல்க ளியற்றப்படுமாறில்லை. பரிமேலழகரே பலவிடத்தும் நீதிநூலின் வேறாய அறநூல்களுண்மையைச் சுட்டியுள்ளார். திருக்குறள் அறநூலாகவே, அறத்தின் ஒரு பகுதியான நீதிகளை மட்டுங்கூறும் வடமொழி நூல்களின் வழிநூலாக வள்ளுவர் குறளை இயற்றினார் என்பது பொருந்தாக்கூற்றாம்.
இன்னும், ஆரிய தருமசாத்திரமுறை வேறு, தமிழற நூன்மரபு வேறாகும். இருமுறைகளையும் ஒத்துணர்ந்த வள்ளுவர் திருக்குறள், தமிழ் மரபுவழுவாது பொருளின் பகுதிகளான அகப்புறத் துறையறங்களை மக்கள் வாழ்க்கை முறைக்காமாறு ஆராய்ந்து அறுதியிட்டு வடித்தெடுத்து விளக்கும் தமிழ்நூல். தமிழ்மரபும் ஆரியர் சம்பிரதாயமும் அறிந்த பரிமேலழகர் தம் குறளுரையில் ஆங்காங்கே இவ்விருபெருவழக்குக்களின் இயையும் முரணும் எடுத்துக் காட்டிச் சொல்லுமழகு பாராட்டத்தக்கது. இதை விட்டுத் திருக்குறள், சாணக்கியராதி வடமொழி நீதி வழி நூல்களுக்குப்பின் அவறறின் சார்புநூலாக எழுந்ததென்பர் தமது ஆரியமதிப்பும் காதலும் வெளிப்படுத்துவதன்றிச் சரிதவுண்மை துலக்குபவராகார். தமிழிற் பெருமையுடைய அனைத்தும் ஆரிய நூல்களினின்று திரட்டப்பட்டிருப்பதாகக் காட்டி மகிழ்வார் சிலர்க்கன்றி, நடுநிலையாளருக்கு வள்ளுவர் குறள் தமிழில் தனி முதலற நூலேயாகுமென்பது வெள்ளிடைமலையாம்.