Sunday, November 06, 2022

5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவையங்கார் 2/4

 அகரமுதல


 அகரமுதல

     07 November 2022      No Comment



(ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் ¼ – சி.பா. தொடர்ச்சி)

சான்றோர் தமிழ்

5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவையங்கார் 2/4

அடுத்து 1915இல் வெளிவந்த ‘சேரன் செங்குட்டுவன்’ என்ற நூல் செங்குட்டுவனின் வரலாற்றை ஆய்வது. செங்குட்டுவனைப் பற்றிய பல்வேறு செய்திகளும் பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், புறநானூறு இவற்றின் அடிப்படையில் விளக்கம் பெறுகின்றன. சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தை இனிய உரைநடையில் விளக்கும் இந்நூல், இவர்தம் புலமைத் திறத்திற்கும் ஆராய்ச்சி வன்மைக்கும் தக்கதோர் காட்டாகும்.

1926ஆம் ஆண்டில் தமிழ் உலகத்தில் உலா வந்தது ‘ஆழ்வார்கள் கால நிலை’ என்ற நூல். ஈரோட்டு இலக்கியச் சங்கத்தில் எச்.ஏ. பாப்லி துரையின் அழைப்பின் பேரில் ஆற்றிய ஆராய்ச்சி உரையின் வடிவமே இந்நூல்.

ஆழ்வார்கள் பாடல்களில் அருகிக் காணப்படும் சில செய்திகளைக் கொண்டு பிற சான்றுகளுடன் ஒப்பு நோக்கி ஆழ்வார்களின் காலநிலை வரையறுக்கப்படுகின்றது.

அடுத்ததாக 1929ஆம் ஆண்டில் வெளிவந்த ‘சாசனத் தமிழ்க்கவி சரிதம்’ சென்னைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பற்றி ஆற்றிய உரையின் வடிவம். இதில் எண்பதுக்கும் மேற்பட்ட புலவர்களைப் பற்றிய செய்திகள் அனைத்தும் இலக்கியச் சான்றுகளுடனும், சாசனச் சான்றுகளுடனும் மொழியப்படுகின்றன. சேனாவரையரும் பரிமேலழகரும் சமகாலத்தவர் என்பதை இந்நூலில் இவர் தெளிவுபடுத்துகின்றார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய சொற் பொழிவின் எஞ்சிய பகுதி ‘இலக்கிய சாசன வழக்காறுகள்’ என்ற பெயரில் நூலாக வெளியிடப் பெற்றது. இஃது இவர் மறைவுக்குப்பின் வெளிவந்த நூலாகும்; அரசர், தலைவர் வழக்குகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இது சென்னை அரசாங்கப் புத்தக வெளியீட்டுக் குழுவினரால் வெளியிடப் பெற்றது. கல்வெட்டுகளும், இலக்கியங்களும் தமிழிலக்கியக் காலப் பரப்பை ஆராய்வதற்கு உதவி புரிவதை இந்நூல் தெளிவாக்குகிறது. ஆழ்வார் நாயன்மார் பாடல்களில் இடம்பெறும் சொல் வழக்குகள் சாசனங்களில் பயிலு மாற்றை இந்நூல் விளக்கம் செய்கிறது.

இலக்கிய ஆராய்ச்சி

இலக்கிய ஆராய்ச்சியாக மலர்ந்த நூல்கள் பல. 1938ஆம் ஆண்டில் பேராசிரியரின் மணிவிழா நினைவாக ‘ஆராய்ச்சித் தொகுதி’ என்ற நூல் வெளிவந்தது. முப்பத்தைந்து கட்டுரைகள் இந்நூலின்கண் இடம் பெற்றுள்ளன. ஆராய்ச்சிக் கட்டுரைகள் . பலவற்றின் தொகுப்பு நூல் இது. 1947ஆம் ஆண்டில் ‘சேர வேந்தர் செய்யுட் கோவை’ என்ற நூலின் முதற் பகுதி வெளிவந்தது. திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையில் பேராசிரியராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளில் இந்நூல் வெளிவந்தது. இப்பல்கலைக்கழகம் வெளியிட்ட முதல் ஆராய்ச்சி நூல் இது. இதை உருவாக்கும் பெருமை மு. இராகவையங்கார் அவர்களையே சாரும். இது சங்க காலச் சேர வேந்தர்களைப் பற்றிய தொகுப்பு நூல். பாடல் பெற்ற சேர வேந்தர், பாடிய சேரவேந்தர், சேரவேந்தர் கிளையினர், சேரவேந்தர் நாடு நகர் முதலியன, சேர மண்டலப் பகுதிகளை ஆண்ட பிற தலைவர்கள் என்ற ஐந்து பிரிவுகளாக இந்நூல் அமைந்துள்ளது.

1951ஆம் ஆண்டில் இந்நூலின் இரண்டாம் தொகுதி வெளியிடப் பெற்றது. இஃது இடைக்கால பிற்காலச் சேர வேந்தர்களைப் பற்றிய பாடல்களின் தொகுப்பு நூல். இதில் பாடல் பெற்ற சேரவேந்தர், பாடிய சேரவேந்தர், சேரநாடு, நகர் முதலியன, சேரர் வரலாறு என்னும் பிரிவுகள் அடங்கியுள்ளன.

ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் தொகுக்கப்பட்ட இந்நூல் சேரர் தொடர்பான இலக்கிய வரலாற்று ஆராய்ச்சிகளுக்குத் துணையாக அமைகின்றது.

1948ல் ‘செந்தமிழ் வளர்த்த தேவர்கள்’ என்ற பெயரிய நூல் தோற்றம் பெற்றது. இது கடந்த நூற்றாண்டில் தோன்றித் தமிழ் வளர்த்த சேது நாட்டுப் பெருமக்களின் வரலாற்றைக் கூறுகின்றது.

1950-ஆம் ஆண்டில் ‘Some Aspects of Kerala and Tamil Literature’ என்ற நூல் வெளிவந்தது. திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவுகளின் வடிவம் இந்நூல். தமிழில் ஆற்றிய உரையினை மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் இந்நூல் எழுதப்பெற்றது. இந்நூல் இரண்டு பகுதிகளாக திருவிதாங்கூர்ப் பல்கலைக் கழகத்தினரால் வெளியிடப்பெற்றது.

இந்த ஆண்டிலேயே வெளிவந்த ‘இலக்கியக் கட்டுரைகள்’ என்ற நூல் வானொலிப் பேச்சுகள், இதழில் வெளிவந்த கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பு நூலாகும். இந்நூலில் இடம் பெற்ற அனைத்துக் கட்டுரைகளும் இலக்கிய விளக்கமாக அமைந்தனவாகும்.

அடுத்து 1959ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற கட்டுரை மணிகள் தெரிந்தெடுத்த பதினான்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் எனலாம்.

மு. இராகவையங்கார் அவர்களின் மறைவுக்குப் பின் வெளிவந்த ‘தெய்வப் புலவர் கம்பர்’ என்ற பெயரிய நூல் 1969ஆம் ஆண்டில் தமிழ் உலகிற்கு அறிமுகமாகியது. கம்பராமாயண விமரிசனக் கட்டுரைகள் இந்நூலின்கண் இடம் பெறுகின்றன.

1939ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்ற ‘திருவிடவெந்தை எம்பெருமான்’ என்ற நூல் திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களின் விளக்கமாகும்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Thursday, November 03, 2022

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 5/5- ப. மருதநாயகம்

 

அகரமுதல





(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 4/5 தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

பின்னிணைப்பு

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்

5/5

  • 15. அகழ்வாய்வாளர்கள்

நிறைவாகப் பதினைந்தாவதாக அகழ்வாய்வாளர்கள் குறித்த கட்டுரையை அளித்துள்ளார்.

“ஓர் இனத்தின் தொன்மைபற்றியும் பண்பாட்டின் தனிச்சிறப்பு பற்றியும் பேசுவதும் எழுதுவதும் தேவையா? அவ்வாறு செய்வது பிற இனங்களுக்கு அதன்பால் வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் வளர வழி செய்வதாகாதா? பழம் சமுதாய, மொழி, இலக்கிய, பண்பாட்டு வரலாற்றைக் கிளறி உண்மை யறிய முயல்வதால் ஏதேனும் நன்மை உண்டா?” எனத் தொன்மை வரலாற்றுச் சிறப்பு இல்லாதவர்களும் பொய்யான வரலாற்றைப் பரப்பி வருபவர்களும் கூறி வருகிறார்கள்.

திருவிழாக் கூட்டத்தில் தவறவிட்ட குழந்தையை அலறித் துடித்துத் தேடும் தாயின் செயலுடன் ஒப்பிட்டு விவேகானந்தர், அதே பதைபதைப்புடன் இந்தியர் தம் தொல்வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய முனைந்து செயலபட வேண்டும் என்று தெரிவித்ததன்படி நாம் இருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். உலகப்பண்பாடடிற்குத் தமிழரின் பங்களிப்பு, தமிழ்ப்பண்பாட்டின் தொன்மை, ஆகியவைபற்றி விவேகானந்தர் கூறியுள்ளதை நம்மவர் நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார் ஆகிரியர்.

இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வு வல்லுநர் கிரகாம் ஆன்காக்குஅரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்தினும் தொன்மையானது பூம்புகார் நாகரிகம் எனக் கண்டறிந்தவை;

சிந்துவெளிப்பண்பாடு ஆரியப்பண்பாடே என ஆதாரமில்லாமல் தவறான கருத்துகளை அறைகூவும் ஆரிய  சமாசத்தை உருவாக்கிய தயானந்த சரசுவதி போன்றோரின் பொய்யுரைகளை மறுக்கும் வகையில் அகழ்வாராய்வாளர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் கருத்துகள்;

வரலாற்றுப் பேராசிரியர் உரோமிலா தாப்பர்(Romila Thapar) மாடுமேய்த்து வந்த வேதகால மக்கள் நகரப்பண்பாடு அறியாதவர்கள், சிந்துவெளிப்பண்பாடு கல்வியறிவு உடைய இனத்தின் நகரப் பண்பாடு எனக் கூறிய கருத்துகள்;

முதலான பல ஆய்வுரைகள் அகழ்வாராய்வாளர்களால் தமிழின் செம்மொழிச் சிறப்பையும் தொன்மையையும் உலகிற்கு உணர்த்துவன.

4500 ஆண்டுப் பழமையுடைய அரியானாவின் இராக்கிகரியில் கிடைத்த எலும்புக்கூடுகளின் மரபணு மாதிரிகள், சிந்து வெளிப்பண்பாடு வேதகாலத்திற்கு முந்தையது என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.

ஆதி வேதங்கள் சிந்துவெளிநகரங்கள் அழிந்து வெகுகாலத்திற்குப் பின் தோற்றம் பெற்றவை; சிந்துவெளிமக்கள் பேசியது மூலத்திராவிடமொழி;    


பின்லாந்து அறிஞர் அசுக்கோ பார்ப்போலா(Asko Parpola) சிந்துவெளிப்பண்பாடு பழந்தமிழர் பண்பாடே என நிறுவிய கருத்துகள்; தமிழரின் நாகரிகம் மிகமிகப் பழமை வாய்ந்தது எனப் பலவகைகளில் ஆதாரங்களுடன் நிறுவிய ஈராசு பாதிரியார் கருத்துகள்;

மனிதச்சாதியாரின் தொட்டில் தென்னிந்தியாவாக இருக்கலாம் எனக் கூறும் இயோவான் எவன்சு(Sir John Evans) ஆதாரங்கள்;

என அகழ்வாராய்வாளர்கள் மூலம் வெளிவந்துள்ள உயர்தனிச்செம்மொழியாம் தமிழின் சிறப்புகளை நமக்கு ஆசிரியர் விளக்கியுள்ளார்.

நடுநிலையற்ற பிராமணர்கள் தங்கள் இனத்திற்கு இல்லாத உயர்வைப் புனைந்து கூறுவதையும் தவறான தொன்மை வரலாற்றை இட்டுக்கட்டிக் கூறுவதையும் காலங்காலமாக வழக்கமாகக்கொண்டுள்ளார்கள். பின் அவை பொய்கள் என அம்பலப்பட்டுப்போனாலும் கவலைப்படாமல் பொய்களையே திரும்பத்திரும்பக் கூறி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒன்று வருமாறு

“பழம் இந்திய வரலாறுபற்றி நடந்துவரும் உள்நாட்டுப்போரில் ஆரிய இனச்சார்புடையோரால் பொய்யும் புரட்டுமு் அவர்கள் கையிலுள்ள ஊடகவழியாகப் பரப்பப்படலாமென்பதை இராக்கிகிர் அகழ்வாய்பு பற்றி இந்தியா இன்று(India Today – sep.10.2018) இதழில் கட்டுரை எழுதிய ஆசிரியர் குறிப்பிடுவார். ஓர் இந்தி நாளேடானது நீரசுபாய் மரபணு ஆய்வால் வடஇந்தியப் பார்ப்பனரே சிந்துவெளிப்பண்பாட்டின் மரபினர் என்றும் இந்தியாவே இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் தாயகமென்றும் ஒரு நேர்காணலில் கூறியதாக சனவரி 2018இல்  ஒரு கட்டுரையில் எழுதியதை அவர் அம்பலப்படுத்துவார்.இச்செய்தி தாவீதுவெசலாவுசுக்கி (David Wesolowski) என்னும் அறிஞரிடம் தெரிவிக்கப்பட்டபோது அவர்  அருவருப்பூட்டும் பொய் (utter crud) என்று விடையளித்ததாகவும் இராக்கிகரி கட்டுரைஆசிரியர் பதிவு செய்துள்ளார்.”

சிந்துவெளிப்பண்பாட்டு ஆராய்ச்சி அறிஞர் அசுகோ பார்ப்போலா (Asko Parpola), சிந்துவெளிப்பண்பாடு, பழந்தமிழர் பண்பாடே என்பதையும் சிந்துவெளி எழுத்து திராவிட மொழிக்குடும்பத்து மூத்த மொழியான தமிழுக்கே உரியதென்பதையும் அசைக்க முடியாத உறுதியான ஐயத்திற்கிடமில்லாத அகழாய்வுச் சான்றுகள் தந்து நிறுவியுள்ளதை ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார்.

வடமேற்குப்பகுதியில் உள்ள இந்தோ ஆரிய மொழிகளிலும் இரிக்கு வேதத்திலும் உள்ள தமிழ்ச்சொற்களையும், தொல்திராவிடமொழிக்குடும்பத்திலிருந்து எடுக்கப்பட்ட சொற்களையும் அறிஞர்கள் பலரும் எடுத்துரைத்துள்ளதையும் விளக்கியுள்ளார். தமிழின் செவ்வியல் தன்மைகளை உணர்த்தும் பண்புகளை அகழ்வாய்வாளர்கள் தெரிவிக்கும்  செய்திகள் பதின்மூன்றையும் தொகுத்து அளித்துள்ளார்.

மொகஞ்சதாரோ, அரப்பா, சாஞ்சுதாரோ ஆகியவற்றின் நாகரிகச் சிறப்புகள், சிந்துவெளிப்பண்பாட்டின் தொடர்ச்சி இன்னும் தமிழ்நாட்டில் உயிரோடிருக்கின்றன என்று ஈராசு பாதிரியார் முதலானவர்கள் கூறுவதையும் ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டறிந்தவை யாவும் தமிழை உயர்தனிச்செம்மொழியாக உலகிற்கு அறிவுறுத்தும் முன்மொழிவுகளாக அமைந்துள்ளன.

உயர்தனிச் செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் நூல் மூலம், வெவ்வேறு காலங்களில் ஆராய்ச்சியறிஞர்கள் செந்தமிழ்ச்சிறப்பை உலகிற்குப் பறைசாற்றி வந்ததை ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார்.

ஒவ்வொருவர் கைகளிலும் தவழவேண்டிய நூல்

தமிழ்க்குடும்ப மொழிகளின் தனித்தன்மையை வெளிப்படுத்தியவர்கள், மொழிபெயர்ப்பு மூலம் தமிழ்ச் செவ்விலக்கியங்களைப் பரப்பியவர்கள்  தமிழின் தனித்தியங்கும் ஆற்றலையும் சொல்வளத்தையும் எடுத்துரைத்தவர்கள், பொய்யுரை மூலம் நடுவுநிலையின்றி சமற்கிருதத்தை உய்த்தித் தமிழைத் தாழ்த்தியவர்களின் முகத்திரையைக் கிழித்தவர்கள்,  சமற்கிருத இலக்கணத்தைக் காட்டிலும் தமிழ்மொழி இலக்கணம் எவ்வாறெல்லாம் சிறந்து விளங்குகின்றது என்பதை ஆராய்ந்து தெரிவித்தவர்கள், சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகளினின்றும்  தமிழை நீக்கிட முயற்சிகள் மேற்கொண்டபொழுது அவற்றிற்கு எதிராகப் போராடித் தமிழை நிலைக்க வைத்தவர்கள், பிற மொழிக்கலப்பும் மாற்றமும் தேவை யெனப் பிதற்றுவோர்க்குத் தக்க மறுமொழி தந்தவர்கள்,  தமிழ்ச் செவ்விலக்கியங்களை வியந்து வியந்து பாராட்டியவர்கள், தமிழே முதல்மொழி, தமிழினமே முதல் மாந்த இனம், தமிழர் நிலமாகிய குமரிக்கண்டமே மாந்தர் முதலில் வாழ்ந்த நிலப்பரப்பு என ஆராய்ந்து உரைத்தவர்கள்,  தமிழ் அக இலக்கிய மரபுகள்  ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று நிறுவியவர்கள், அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்தினும் தொன்மையானது பூம்புகார் நாகரிகம் என நிறுவியவர்கள், காலங்காலமாகநடுநிலையற்ற பிராமணர்கள் தங்கள் இனத்திற்கு இல்லாத உயர்வைப் புனைந்து கூறுவதையும் தவறான தொன்மை வரலாற்றை இட்டுக்கட்டிக் கூறுவதையும்  மறுத்து ஆய்வுரை வழங்கியவர்கள், எனப் பல்வேறு வகையிலும் உயர்தனிச் செம்மொழியை உலகறியச் செய்தவர்களின் ஆய்வுகளைத் திறம்படவும் நிரல்படவும் ஆய்வுலகக் கலங்கரை விளக்கமாகத்திகழும் பேரா.ப.மருதநாயகம் இந்நூல் மூலம் நமக்கு விளக்கியுள்ளார்.

உயர்தனிச்செம்மொழியைப் போற்ற விரும்பும் ஒவ்வொருவர் கைகளிலும் தவழவேண்டிய நூல் இந்நூல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

– இலக்குவனார் திருவள்ளுவன்

உயர்தனிச் செம்மொழி முன்ெமாழிந்த மூதறிஞர்கள்

ப.மருதநாயகம்

செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை 600 100

விலை உரூபாய் 500/-



Tuesday, November 01, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம் 14

 அகரமுதல





(உ.வே.சா.வின் என் சரித்திரம் 13 தொடர்ச்சி)

அத்தியாயம் 8
எனது பிறப்பு

விவாகம் ஆன பிறகு என் தந்தையார் உடையார்பாளையத்திலேயே இருந்து வந்தனர். அக்காலத்தில் தம் தாய் தந்தையரையும் தம்பியாரையும் அழைத்து வந்து தம்முடன் இருக்கச் செய்தனர். நடுவில் சில காலம் உத்தமதானபுரம் சென்று இருக்க வேண்டுமென்ற ஆவல் அவருக்கு உண்டாயிற்று. அதனால் உடையார்பாளையம் சமீன்தாரிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு தாய் தந்தையாரோடும் தம்பியாரோடும் உத்தமதானபுரம் வந்து தம் வீட்டில் தங்கியிருந்தார். தம்முடைய தந்தையாரால் போக்கியத்திற்கு விடப்பட்ட குடும்ப நிலங்களை மீட்க வேண்டுமென்ற கவலை அவருக்கு அதிகமாக இருந்தது.

அக்காலத்தில் நிலங்களின் விலை அதற்கு முன்பிருந்ததைவிட ஏறிக்கொண்டு வந்தது. குடும்ப நிலமாகிய பன்னிரண்டு மாவும் கணபதி அக்கிரகாரத்தில் இருந்த அத்தாந்தரம் கணபதி இராமைய ரென்பவரிடம் 500 உரூபாய்க்காக என் பாட்டனாரால் போக்கியத்துக்கு வைக்கப்பட்டிருந்தது. உத்ததானபுரத்தில் இருந்த [1] அண்ணாத்துரை ஐய ரென்பவரிடம் என் பிதா 500 உரூபாய் கடன் வாங்கி அத்தொகையைக் கொண்டு பன்னிரண்டு மா நிலத்தையும் மீட்டார்.


அப்பால் அந்நிலத்தில் ஆறு மாவை அண்ணாதுரை ஐயரிடம் தாம் பெற்ற தொகைக்காகப் போக்கியத்துக்கு வைத்தார். எஞ்சியிருந்த ஆறு மாநிலத்தில் ஒரு பாதியாகிய மூன்று மாவைத் தம் சிறிய தந்தையாராகிய ஐயாக்குட்டி ஐயருக்கு அளித்தார். எல்லாம் போக இருந்தது மூன்று மாநிலமே.


அதிலிருந்து கிடைத்த வருவாய் குடும்பச் செலவுக்குப் போதவில்லை. அக்காலத்தில் புன்செய் நிலங்களில் கறிகாய் போட்டு வீட்டுக்கு உபயோகித்துக் கொள்வதும் மிகுந்தனவற்றை விற்று மற்றச் செலவுக்கு வைத்துக் கொள்வதும் வழக்கம். அப்படிச் செய்து பார்த்தும் கட்டம் தீரவில்லை.

பரம்பரையாக வந்த நிலத்தில் ஒரு பகுதி சுவாதீனமானது குறித்து என் பாட்டனாருக்கும் தந்தையாருக்கும் ஒரு வகையில் திருப்தி உண்டாயிற்று. ஆயினும் எஞ்சியுள்ள பகுதியையும் கடனிலிருந்து மீட்பதற்கு வழியில்லையே என்ற வருத்தம் என் பிதாவுக்கு இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் என் தாயாருடன் இல்லறம் நடத்தத் தொடங்கினார்.
    
அக்காலத்தில் கபித்தலம் ‘எசுடேட்’டில் மானேசராகத் தாவீது பிள்ளை என்னும் கிறித்தவ கனவான் ஒருவர் இருந்தார். அவர் சங்கீதத்தில் விருப்பம் உடையவர். கனம் கிருட்டிணையருடைய நண்பர். என் தந்தையார் கிருட்டிணையருடைய  மாணாக்கரென்பதை அறிந்தவராதலின் அவர் என் தந்தையாருடைய சேம இலாபங்களைப் பற்றி விசாரித்துக்கொண்டே இருப்பார். உத்தமதானபுரத்தில் எந்தையார் இருப்பதையும், அவரது குடும்ப நிலையையும் உணர்ந்து தம்மாலான உதவி புரிய வேண்டுமென்று எண்ணினார். என் பிதாவை அடிக்கடி கபித்தலத்துக்கு வருவித்து அவருடைய சங்கீதத்தைக் கேட்டு மகிழ்ந்து பொருளுதவி செய்து வந்தார். அவர் எந்தையார் பால் காட்டிய மரியாதையைக் கண்ட பிறரும் அவருடைய பெருமையை அறிந்து கொண்டனர். ஐயம்பேட்டையிலிருந்த சௌராட்டிரச் செல்வர்களும், கணபதி அக்கிரகாரத்தில் இருந்த அப்பாவைய ரென்பவரும் இங்ஙனமே உபகாரம் செய்து வந்தனர். இத்தகைய அன்பர்களுடைய உதவியைப் பெற்றுச் சில காலம் என் தகப்பனார் உத்தமதானபுரத்தில் தங்கியிருந்தனர். அப்போது அவருக்கு ஸீமந்தம் நடைபெற்றது.

இவ்வாறு இருக்கையில் மேற்கூறிய தாவீது பிள்ளை வேறு உத்தியோகத்தை மேற்கொண்டு அயலூருக்குச் சென்றுவிட்டமையால் அவரால் கிடைத்து வந்த பொருளுதவி நின்று போயிற்று. அதனால், காலட்சேபத்திற்குக் கட்ட முண்டாகுமென்று அறிந்த என் தந்தையார் மீட்டும் குடும்பத்துடன் உடையார்பாளையம் சென்று சமீன்தாருடைய உதவியைப் பெற்று வாழ்ந்து வரலானார்.

அவர் உடையார்பாளையம் சென்ற மயத்தில் கருப்ப தீட்சை வளர்த்திருந்தார். கறுகறுவென்று மீசையும் தாடியும் செழிப்பாக வளர்ந்திருந்தன. அவற்றைக் கண்ட ஜமீன்தார், “வேங்கடசுப்பு, உனக்கு இருக்கும் இந்த மீசையைக் கண்டு எனக்கு அதிகப் பொறாமை உண்டாகிறது. எனக்கு இப்படி இல்லையே என்று வருந்துகின்றேன்” என்றாராம்.


ஒரு சமயம் அரியிலூர் சமீன்தார் உடையார்பாளையத்திற்கு வந்திருந்தார். அவர் உடையார்பாளையம் சமீன்தாருக்கு மாப்பிள்ளை. அவர் வந்த காலத்தில் அவருக்கும் என் தந்தையாருக்கும் பழக்கம் உண்டாயிற்று. என் தந்தையாரது சங்கீத ஞானத்தை அவர் அறிந்து தம்முடன் வந்து அரியிலூரில் இருக்கும்படி வேண்டினார்; தம்முடைய மாமனாராகிய கச்சிக் கல்யாண இரங்கரிடமும் தமது கருத்தைத் தெரிவித்தார். அவர் அதற்கு இணங்கவே என் தந்தையார் தம் குடும்பத்துடன் அரியிலூர் சென்று அந்த சமீன் சங்கீத வித்துவானாக இருந்து வரத் தொடங்கினார்.

அக்காலத்தில் என் தந்தையார் தம்முடைய சங்கீதத்தால் யாவரையும் மகிழ்விக்கும் ஆற்றலை நன்றாகப் பெற்றிருந்தார். அவருக்குப் பல பெரியோர்களின் கீர்த்தனங்கள் பாடமாக இருந்தன. கனம் கிருட்டிணையர், பெரிய திருக்குன்றம் சுப்பராமையர், சீரங்கம் சீநிவாசன் , பல்லவி கோபாலையர், பாபநாச முதலியார், ஆனை ஐயா முதலியவர்களுடைய கீர்த்தனங்களை அவர் பாடுவார். பல்லவி பாடுவதும் கீர்த்தனங்கள் பாடுவதும் இராக ஆலாபனம் செய்வதும் ஆகியவற்றில்ல் அவர் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். தாம் பாடும்போது கனமார்க்க முறையைப் புலப்படுத்துவார்; அருணாசல கவி இயற்றிய இராம நாடகக் கீர்த்தனங்கள் அவருக்கு முற்றும் பாடம். தனியே சங்கீத வினிகைகள் நடத்துவதையன்றி இராமாயணக் கீர்த்தனங்களை இசையுடன் பாடிச் சுருக்கமாகப் பொருள் கூறுதலும் அவருக்கு வழக்கமாக இருந்தது. அவர் பாடும் போதெல்லாம் என் சிறிய தகப்பனாராகிய சின்னசாமி ஐயரும் சேர்ந்து பாடுவார்; பின்பாட்டும் பாடுவதுண்டு. தமிழ், தெலுங்கு, வடமொழி என்னும் மூன்று பாசைகளிலும் உள்ள பல உருப்படிகள் எந்தையாருக்குப் பாடமாக இருந்தன. பக்திச் சுவையுள்ள கீர்த்தனங்களையும் வேதாந்த பரமான கீர்த்தனங்களையும் மனத்தை உருக்கும் வண்ணம் பாடுவார்.

இத்தகைய ஆற்றல் இருந்தமையால் ஜனங்களுக்கு அவரிடத்தில் மிக்க மதிப்பு இருந்தது. கனம் கிருட்டிணையருடைய மாணாக்க ரென்பதனாலும் பெருமை உண்டாயிற்று. கனம் கிருட்டிணையருடன் சில காலம் என் தகப்பனார் திருக்குன்றத்தில் இருந்த காரணம் பற்றி அவரைத் திருக்குன்றத்து ஐயரென்றே பெரும்பாலோர் வழங்கி வந்தனர். சங்கீத வித்தையினால் ஒருவாறு காலக்ஷேபம் செய்யலாம் என்ற தைரியம் தந்தையாருக்கு இருந்து வந்தது.



அரியிலூரில் இருந்தபோது அவ்வூர் ஜமீன்தார் எந்தையாரை மரியாதையோடு ஆதரித்து வந்தார். அந்த ஜமீனைச் சேர்ந்த இலந்தங்குழி என்னும் கிராமத்தில் பத்துக்காணி நிலம் அவருக்கு ஸர்வமானியமாக அளிக்கப்பட்டது. ஒவ்வொரு காணிக்கும் வருஷம் ஒன்றுக்கு ஐந்து உரூபாயாக ஐம்பது உரூபாய் வரும்படி கிடைத்தது. அதைக் கொண்டும், இடையிடையே அன்பர்களிடமிருந்து கிடைக்கும் உதவியைக் கொண்டும் அரியிலூரில் திருப்தியாக என் தந்தையார் வாழ்ந்து வந்தார். அரண்மனை உத்தியோகத்தர்களுடைய அன்பையும் அந்த ஆத்தானத்துச் சங்கீத வித்துவானும் தமிழ் வித்துவானுமாக இருந்த சடகோப ஐயங்காரென்பவருடைய பிரீதியையும் அவர் பெற்றார். அந்த உத்தியோகஸ்தர்களாகிய கார்காத்த வேளாளச் செல்வர்களும் வேறு சிலரும் அவரை திரமாகவே அவ்வூரில் இருக்கச் செய்ய வேண்டுமென்று எண்ணி, பெருமாள் கோயில் சந்நிதி வீதியில் வட சிறகின் கீழ் கோடியில் அனுமந்தராயன் கோயிலுக்கு வடக்கே ஒரு கூரை வீடு கட்டிக் கொடுத்தனர். இது சென்ற ஆனந்த வருடத்திற்கு முந்திய ஆனந்த வருஷம் நிகழ்ந்தது (1854).

உத்தமதானபுரத்தில் என் தந்தையாருக்கு சீமந்தம் நடைபெற்ற பிறகு என் மாதாமகர் என் தாயாரைத் தம் ஊராகிய சூரியமூலைக்கு ஒரு நல்ல தினம் பார்த்து அழைத்துச் சென்றனர். அங்கே ஆனந்த வருஷம் மாசி மாதம் 9-ஆம் தேதி திங்கட்கிழமை (19-2-1855) இரவு நான் பிறந்தேன். என் சாதகம் வருமாறு:


ஆனந்த வருடம் மாசி மாதம்  9-ஆம் திங்கட்கிழமை; திரிதியை 35, உத்திரட்டாதி 391/2 சாத்யநாம யோகம் 261/2, தைதுலாகரணம் 161/2, திவி 51/4; இந்தச் சுபதினத்தில் இராத்திரி51/2  நாழிகை யளவில் கன்னியா லக்கினத்தில் சுப சனனம்.



சாதக அட்டவணை

 



நான் பிறந்த பிறகு ஐந்து மாதங்கள் என் அன்னையார் சூரியமூலையில் இருந்தனர். பிறகு என் பாட்டனார் என் அன்னையாரையும் என்னையும் அரியிலூருக்குக் கொணர்ந்து வந்து விட்டுச் சென்றனர். எங்களுக்காகப் புதிதாகக் கட்டப்பெற்ற வீட்டில் நான் என் தாயாருடன் புகுந்தேன்.

ஒவ்வொரு தாயும் தன்னுடைய குழந்தையை அதிர்ட்டசாலி யென்று கருதுவது வழக்கம். தங்களுக்குக் கிடைத்த இலாபங்களெல்லாம் அக்குழந்தையின் அதிர்ட்ட பலனாகவே பாராட்டுவர். என்னுடைய அன்னையாரும் அவ்வாறு சொல்லுவதுண்டு. நான் பிறந்த வருடத்தில் எங்களுக்கென்று அரியிலூரில் ஒரு வீடு ஏற்பட்டது என் அதிர்ட்டத்தின் பலனென்றே நம்பினார். அது மட்டுமன்று; அந்தப் பக்கத்தில் இருந்த ஒரு சந்நியாசி இறந்து போகும்போது, “ஆனந்த வருடத்தில் இங்கே ஓர் அதிசயம் நடக்கப் போகிறது; அதைக் காணாமல் போகிறேன்” என்று சொல்லி உயிர் நீத்தாராம். இந்த நாட்டிற்கு முதல் முதலாக இரெயிலும் தந்தியும் வந்தமையே அவர் கூறிய அதிசயம் என்று எல்லோரும் கூறினார்கள். அந்த அதிசயம் நிகழ்ந்த வருடத்தில் நான் பிறந்ததும் ஒர் அதிசயமென்றே என் தாயாரின் உள்ளத்துள் ஒரு சந்தோச உணர்ச்சி உண்டாகி யிருக்கக்கூடும். ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்வதில்லை. “இப்படி ஒரு சந்நியாசி சொன்னராம். அந்த வருடத்தில்தான் நீ பிறந்தாய்” என்று பிற்காலத்தில் பலமுறை என் அருமை அன்னையார் அன்புடன் கூறியிருக்கிறார். 

அடிக்குறிப்பு- சி.ஏ.வைத்தியராமையர், இராவுபகதூர் சி.ஏ.நடேசையர் இவர்களுடைய பாட்டனார் இவர்.


(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.



Sunday, October 30, 2022

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்- ப. மருதநாயகம்

 

அகரமுதல




(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 3/5 தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

பின்னிணைப்பு

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்

4/5

  • 10. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்

பத்தாம் கட்டுரை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் குறித்தது.

“தேவநேயப் பாவாணர், தமிழ்மொழியே முதல் மாந்தன் பேசிய மொழியென்றும் தமிழினமே முதலில் தோன்றிய மாந்த இனமென்றும் குமரிக் கண்டமே மாந்தர் முதலில் வாழ்ந்த நிலப்பரப்பென்றும் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாட்டிற்கு வடமொழி இலக்கணம் பண்பாடு ஆகியவை பெரிதும் கடன்பட்டிருக்கின்றனவென்றும் தக்க சான்றுகளுடன் நாளும் முழங்கி வந்தவர். … மொழியியல் துறைக்கும் தமிழ்மொழி ஆய்விற்கும் அவரது பங்களிப்பு பெருமைக்கு உரியது  எனக் கூறுகிறார் ஆசிரியர். உலக முதன்மொழி ஆய்வாளர் இலெவிட்டு (Stephen Hillyer Levitt) தேவநேயன் ஒரு மொழியியல் விற்பன்னர்  … உலகெங்குமுள்ள விற்பன்னர்களால் மதிக்கப்பட வேண்டியவராகிறார். “தமிழ்மொழியின் பெருமையை வேர்ச்சொல் ஆய்வின் மூலம் எடுத்துரைத்த பாவாணர் தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியற்றின் உயர்வைத் தமதுதமிழ்இலக்கிய வரலாற்றின் மூலம் உலகிற்கு உணர்த்தினார்” என்கிறார் ஆசிரியர்.

  • 11. பேராசிரியர் கைம் இராபின்

பதினோராம் கட்டுரை பேராசிரியர் கைம் இராபின் குறித்தது.

இசுரேல் பல்கலைக்கழகத்தில் பணி செய்த யூதப் பேராசிரியராகிய கைம்ராபின் ஓர் அரிய ஆங்கிலக் கட்டுரையின் மூலம் இருபதாம் நூற்றாண்டின் எழுபதுகளிலேயே தமிழ் செம்மொழித் தகுதியுடையது என்பதை ஐயத்திற்கிடமின்றி நிறுவியுள்ளார். …. நீண்ட காலமாக வழக்கொழிந்திருந்த எபிரேய மொழிக்குப் புத்துயிர் தந்த பின் அது கல்லூரிகளிலும் பாடமொழியாகிறதென்றால், சொல் வளம் மிக்கதும் எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து உயிர்த்துடிப்புடன் செயல்படுவதுமான தமிழ் ஏன் பயிற்றுமொழியாக இருத்தல் கூடாது என்று வினா எழுப்பியதை ஆசிரியர் நமக்கு எடுத்துரைக்கிறார்.

தமிழின் உட்பகைவர்களும் புறப்பகைவர்களும் தமிழகத்து முச்சங்கங்கள் சைவர்கள் கட்டிவிட்ட கற்பனைக் கதையென்றும் கடைச்சங்க இலக்கியங்களெல்லாம் கி.பி. ஆறு, ஏழாம் நூற்றாண்டிற்குப் பின் எழுதப்பட்டவை யென்றும் வெற்றியோடு பரப்புரை செய்துகொண்டிருந்த காலத்தில் தமிழ் அக இலக்கிய மரபு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று நிறுவும் கட்டுரையைக் கைம் இராபின் எழுதியது அவர்களுக்கு விடுக்கும் அறைகூவலாகும். அதற்கு எதிர்வினை ஏதும் செய்யாது அவ்வறிஞர்கள் வாயடைத்துப் போயினர் என்பதைச் சொல்லத் தேவையில்லை என்று கட்டுரையை முடிக்கிறார் ஆசிரியர்.

  • 12. அ. கி. இராமானுசன்

பன்னிரண்டாம் கட்டுரை அறிஞர் ஏ.கே.இராமானுசன் குறித்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், சமற்கிருதம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளையும் கற்றறிந்த அறிஞர் அ.கி.இராமானுசன், ஒப்புமைக் கருத்துகள் மூலமும் ஆய்வுக் கருத்துகள் மூலமும் ஆய்வறிஞர்கள் கருத்துகள் மூலமும் மொழிபெயர்ப்புகள் மூலமும் உயர்தனிச்செம்மொழிக்குக் குரல் கொடுத்துள்ளார்.

குப்புதர்களின் காலத்தில் சமற்கிருதமும் பிராகிருதமும் பேச்சுவழக்கில் இல்லை, கி.பி.ஐந்தாம் நூற்றாண்டின் காளிதாசன், அரசவையில் சமற்கிருதத்தையும் குடும்பம், அன்றாட நடவடிக்கை ஆகியற்றில் உஞ்செயின் கிளைமொழி ஒன்றையும் பயன் படுத்தியிருப்பார், இந்தோ-ஆரிய மொழிகளுக்குப் பத்தாம் நூற்றாண்டு வரை எந்த விதமான இலக்கிய வடிவமும் இல்லை  எனச் சமற்கிருதத்தோடு ஒப்பிட்டுத் தமிழின் சிறப்பை விளக்கியுள்ளார்.

அறிஞர் தானியல் இங்கால்(Daniel H.H.Ingalls) சமற்கிருதம் ஒரு குடும்ப மொழியாக இருந்ததில்லை என்றும் தொடர்பாகவும் கூறிய கருத்துகளையும் சமற்கிருதத்தின் “அகில இந்தியத் தன்மை”பற்றிய பேச்சிற்கு வரலாற்று உண்மை அறிந்த அறிஞர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதையும் மொழியியல் பேராசிரியர்கள் ஏ.எல்.பெக்கர் (A.L.Becker), கீத்து தெயிலர் (Keith Tailor) ஆகியோருடனான கலந்துரையாடலில் உலக மொழி இலக்கண நூல்களிலெல்லாம் தொல்காப்பியத்தை ஒத்தது வேறில்லை என்று உரைத்ததையும் அறிஞர் இராமானுசன் விளக்குவதை ஆசிரியர் நமக்கு எடுத்துத் தருகிறார்.

மொழிபெயர்ப்புகள் மூலமாகச் சங்க இலக்கியங்களை உலக அறிஞர் அரங்கிற்குக் கொண்டு சென்றவர்களில் பெரும்பங்களிப்பு செய்தவர் அ.கி.இராமானுசன் என ஆசிரியர் பாராட்டுகிறார். சங்கக் கவிதையானது பிற இந்தியமொழிக் கவிதைகளினின்றும் முற்றிலும் வேறுபட்டதென்பதையும் உலகிற்கு உணர்த்தியவர் அ.கி.இராமானுசன் என்கிறார் ஆசிரியர். தமிழ்,கன்னட இலக்கிய மொழிபெயர்ப்புகளுடன் இராமானுசனின் ஆங்கிலக் கவிதைகளும் இலக்கிய உலகில் சிறப்பு பெற்றவை என்கிறார் ஆசிரியர். அவற்றின் சுவையறிவதற்காகச் சில மொழிபெயர்ப்புப் பாடல்களையும் நமக்கு அளித்துள்ளார் ஆசிரியர்.

மொழிபெயர்ப்பிற்குக் கடினமான நம்மாழ்வாரின் 83 பாடல்களைப் பிறர் பாராட்டும் வண்ணம் மொழிபெயர்த்துள்ளார். இராமானுசன் பல பாடல்களை ஆங்கிலத்தில் தரும்போது வெற்றி பெறுகின்றாராயினும் அவருடைய இந்து சமய வெறுப்பும் சிகாகோ பின்புலமும் சிற்சில இடங்களில் மூலத்திற்கு ஊறுசெய்யும் வகையிலும் மூலத்தைத் தவறாகப் புரிந்து கொள்ள நேரும் முறையிலும் அமைந்துள்ளன என நடுநிலையுடனும் ஆசிரியர் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழி பற்றியும் தொல்காப்பியம் பற்றியும் தொல்காப்பிய-சங்கக்கவிதையியல் பற்றியும் அரிய ஆய்வுமுடிவுகள், புத்தொளிகள் நிறைந்த கட்டுரைகள் மூலமாகவும் தேர்ந்தெடுத்த சங்க இலக்கியப் பாடல்களின் மொழிபெயர்ப்புகள் மூலமாகவும் உலக இலக்கிய அரங்கில் தமிழுக்கு உரிய இடத்தைப் பெற்றுத்தந்தவர் என்ற பெரமைக்குரியவர் என்னும் முத்தாய்ப்புடன் ஆசிரியர் இராமானுசன் குறித்த கட்டுரையை முடிக்கிறார்.

  • 13. அறிஞர் பிரான்சுவா குரோ

பதின்மூன்றாம் கட்டுரை பிரான்சு நாட்டு அறிஞர் பிரான்சுவா குரோ குறித்தது.

தமிழ் மொழி, இலக்கணம், இலக்கியம், பண்பாடு, நாகரிகம்பற்றிப் பொதுவாகவும் பரிபாடல், திருக்குறள், உரையாசிரியர்கள், பெரியபுராணம்பற்றிக் குறிப்பாகவும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ள குரோ, தமிழின் செவ்வியல் தகுதியை உரிய முறையில் எடுத்துச்சொன்ன விரல்விட்டு எண்ணக்கூடிய மேலை அறிஞர்களுள் ஒருவர் என்பதில் ஐயமில்லை என்கிறார் ஆசிரியர்.

  • 14. சியார்சு ஆர்த்து

பதினான்காம் கட்டுரை பேராசிரியர் சியார்சு ஆர்த்து (George L.Hart)குறித்தது.

செம்மொழிக்குரிய தகுதிகளையெல்லாம் பட்டியலிட்டு அவையெல்லாம் தமிழுக்கிருப்பதால் அதனைச் செம்மொழியென்று இந்திய அரசு அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தியவர் சியார்சு ஆர்த்து. செம்மொழித்தமிழ் பற்றியும் தமிழில் உள்ள செவ்விலக்கியங்கள் பற்றியும் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழ், சமற்கிருதஇலக்கியங்களின் தரம் பற்றியும் அவற்றிற்கிடையே நிகழ்ந்த கொள்ளல் கொடுத்தல் பற்றியும் சமற்கிருதப் பேராசிரியரும் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், தமிழ், சமற்கிருதம் ஆகிய ஐந்து செவ்வியல் மொழி இலக்கியங்களையும் முறையாகப் பயின்றவருமாகிய சியார்சு ஆர்த்து கூறும் கருத்துகள் செம்மொழித் தமிழின் உண்மையான சிறப்பை ஒப்பிட்டு முறையில் உலகிற்கு உணர்த்துபவை என்கிறார் ஆசிரியர்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

உயர்தனிச் செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்

.மருதநாயகம்

செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம்சென்னை 600 100

விலை உரூபாய் 500/-