(ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் ¼ – சி.பா. தொடர்ச்சி)

சான்றோர் தமிழ்

5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவையங்கார் 2/4

அடுத்து 1915இல் வெளிவந்த ‘சேரன் செங்குட்டுவன்’ என்ற நூல் செங்குட்டுவனின் வரலாற்றை ஆய்வது. செங்குட்டுவனைப் பற்றிய பல்வேறு செய்திகளும் பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், புறநானூறு இவற்றின் அடிப்படையில் விளக்கம் பெறுகின்றன. சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தை இனிய உரைநடையில் விளக்கும் இந்நூல், இவர்தம் புலமைத் திறத்திற்கும் ஆராய்ச்சி வன்மைக்கும் தக்கதோர் காட்டாகும்.

1926ஆம் ஆண்டில் தமிழ் உலகத்தில் உலா வந்தது ‘ஆழ்வார்கள் கால நிலை’ என்ற நூல். ஈரோட்டு இலக்கியச் சங்கத்தில் எச்.ஏ. பாப்லி துரையின் அழைப்பின் பேரில் ஆற்றிய ஆராய்ச்சி உரையின் வடிவமே இந்நூல்.

ஆழ்வார்கள் பாடல்களில் அருகிக் காணப்படும் சில செய்திகளைக் கொண்டு பிற சான்றுகளுடன் ஒப்பு நோக்கி ஆழ்வார்களின் காலநிலை வரையறுக்கப்படுகின்றது.

அடுத்ததாக 1929ஆம் ஆண்டில் வெளிவந்த ‘சாசனத் தமிழ்க்கவி சரிதம்’ சென்னைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பற்றி ஆற்றிய உரையின் வடிவம். இதில் எண்பதுக்கும் மேற்பட்ட புலவர்களைப் பற்றிய செய்திகள் அனைத்தும் இலக்கியச் சான்றுகளுடனும், சாசனச் சான்றுகளுடனும் மொழியப்படுகின்றன. சேனாவரையரும் பரிமேலழகரும் சமகாலத்தவர் என்பதை இந்நூலில் இவர் தெளிவுபடுத்துகின்றார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய சொற் பொழிவின் எஞ்சிய பகுதி ‘இலக்கிய சாசன வழக்காறுகள்’ என்ற பெயரில் நூலாக வெளியிடப் பெற்றது. இஃது இவர் மறைவுக்குப்பின் வெளிவந்த நூலாகும்; அரசர், தலைவர் வழக்குகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இது சென்னை அரசாங்கப் புத்தக வெளியீட்டுக் குழுவினரால் வெளியிடப் பெற்றது. கல்வெட்டுகளும், இலக்கியங்களும் தமிழிலக்கியக் காலப் பரப்பை ஆராய்வதற்கு உதவி புரிவதை இந்நூல் தெளிவாக்குகிறது. ஆழ்வார் நாயன்மார் பாடல்களில் இடம்பெறும் சொல் வழக்குகள் சாசனங்களில் பயிலு மாற்றை இந்நூல் விளக்கம் செய்கிறது.

இலக்கிய ஆராய்ச்சி

இலக்கிய ஆராய்ச்சியாக மலர்ந்த நூல்கள் பல. 1938ஆம் ஆண்டில் பேராசிரியரின் மணிவிழா நினைவாக ‘ஆராய்ச்சித் தொகுதி’ என்ற நூல் வெளிவந்தது. முப்பத்தைந்து கட்டுரைகள் இந்நூலின்கண் இடம் பெற்றுள்ளன. ஆராய்ச்சிக் கட்டுரைகள் . பலவற்றின் தொகுப்பு நூல் இது. 1947ஆம் ஆண்டில் ‘சேர வேந்தர் செய்யுட் கோவை’ என்ற நூலின் முதற் பகுதி வெளிவந்தது. திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையில் பேராசிரியராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளில் இந்நூல் வெளிவந்தது. இப்பல்கலைக்கழகம் வெளியிட்ட முதல் ஆராய்ச்சி நூல் இது. இதை உருவாக்கும் பெருமை மு. இராகவையங்கார் அவர்களையே சாரும். இது சங்க காலச் சேர வேந்தர்களைப் பற்றிய தொகுப்பு நூல். பாடல் பெற்ற சேர வேந்தர், பாடிய சேரவேந்தர், சேரவேந்தர் கிளையினர், சேரவேந்தர் நாடு நகர் முதலியன, சேர மண்டலப் பகுதிகளை ஆண்ட பிற தலைவர்கள் என்ற ஐந்து பிரிவுகளாக இந்நூல் அமைந்துள்ளது.

1951ஆம் ஆண்டில் இந்நூலின் இரண்டாம் தொகுதி வெளியிடப் பெற்றது. இஃது இடைக்கால பிற்காலச் சேர வேந்தர்களைப் பற்றிய பாடல்களின் தொகுப்பு நூல். இதில் பாடல் பெற்ற சேரவேந்தர், பாடிய சேரவேந்தர், சேரநாடு, நகர் முதலியன, சேரர் வரலாறு என்னும் பிரிவுகள் அடங்கியுள்ளன.

ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் தொகுக்கப்பட்ட இந்நூல் சேரர் தொடர்பான இலக்கிய வரலாற்று ஆராய்ச்சிகளுக்குத் துணையாக அமைகின்றது.

1948ல் ‘செந்தமிழ் வளர்த்த தேவர்கள்’ என்ற பெயரிய நூல் தோற்றம் பெற்றது. இது கடந்த நூற்றாண்டில் தோன்றித் தமிழ் வளர்த்த சேது நாட்டுப் பெருமக்களின் வரலாற்றைக் கூறுகின்றது.

1950-ஆம் ஆண்டில் ‘Some Aspects of Kerala and Tamil Literature’ என்ற நூல் வெளிவந்தது. திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவுகளின் வடிவம் இந்நூல். தமிழில் ஆற்றிய உரையினை மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் இந்நூல் எழுதப்பெற்றது. இந்நூல் இரண்டு பகுதிகளாக திருவிதாங்கூர்ப் பல்கலைக் கழகத்தினரால் வெளியிடப்பெற்றது.

இந்த ஆண்டிலேயே வெளிவந்த ‘இலக்கியக் கட்டுரைகள்’ என்ற நூல் வானொலிப் பேச்சுகள், இதழில் வெளிவந்த கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பு நூலாகும். இந்நூலில் இடம் பெற்ற அனைத்துக் கட்டுரைகளும் இலக்கிய விளக்கமாக அமைந்தனவாகும்.

அடுத்து 1959ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற கட்டுரை மணிகள் தெரிந்தெடுத்த பதினான்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் எனலாம்.

மு. இராகவையங்கார் அவர்களின் மறைவுக்குப் பின் வெளிவந்த ‘தெய்வப் புலவர் கம்பர்’ என்ற பெயரிய நூல் 1969ஆம் ஆண்டில் தமிழ் உலகிற்கு அறிமுகமாகியது. கம்பராமாயண விமரிசனக் கட்டுரைகள் இந்நூலின்கண் இடம் பெறுகின்றன.

1939ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்ற ‘திருவிடவெந்தை எம்பெருமான்’ என்ற நூல் திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களின் விளக்கமாகும்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்