(ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 4/4 – சி.பா. தொடர்ச்சி)
6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்- 1/6
1. வாழ்வு
‘இருபதாம் நூற்றாண்டின் நக்கீரர்’ என்று தமிழ் கூறு நல்லுலகு பெருமையுடன் பேசும் பேராசிரியர், முனைவர் நாவலர் கணக்காயர் சோமசுந்தர பாரதியார் ஆவர். சான்றோருடைத்தான தொண்டை நாட்டில் சென்னை மாநகரின் மேற்பால் சூளை என்னும் ஊரில் வாணிக வாழ்க்கை நடத்தி வளமுடன் வாழ்ந்து வந்தவர். ‘சைவ சித்தாந்த சண்டமாருதம்’ எனப் பாராட்டப் பெற்ற சோம சுந்தர நாயகர் ஆவர். இவர்தம் அம்மான் அருணாசல நாயகரின் மைந்தர் சுப்பிரமணிய நாயகர், ‘தேனிருந்த சோலை சூழ் தென்விளசை நன்னகர்’ என்று செல்வ வளத்தாற் பாராட்டப் பெற்ற எட்டையபுரத்தினைக் கோநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த முத்துசாமி எட்டப்ப நாயகரின் நண்பராவர். எட்டையபுரத்துக் குறுநில மன்னர் சென்னைக்கு வரும்போதெல்லாம், சுப்பிரமணிய நாயகரைப் பார்த்து அளவளாவிப்போதல் உண்டு. அரசரின் அழைப்பிற் கிணங்கிச் சுப்பிரமணிய நாயகர் சென்னை விடுத்து எட்டையபுரம் சென்று, ‘எட்டப்ப பிள்ளை’ என்ற புதுப் பெயருடன் அரசரின் உட்படுகருமத் தலைவராய் விளங்கினார். இவர் மணம் செய்திருந்தும் மகப்பேறு கிட்டாத காரணத்தால், அரசர் தூண்டுதலின் பேரில் அரண்மனையில் வளர்ந்து வந்த முத்தம்மாள் என்னும் மங்கை நல்லாளைத் திருமணம் செய்து கொண்டார்.
பிறப்பு
இவ்விருவரின் மனமொத்த இல்வாழ்வின் பயனாய். கி.பி. 1879-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 27ஆம் நாள் ஒர் ஆண் மகவு பிறந்தது. இம்மகவுக்குத் தம் உறவினரும், சைவ சித்தாந்தக் கடலாகவும் விளங்கிய சோமசுந்தர நாயகரின் பெயருடன் ‘சத்தியானந்த’ என்ற அடை மொழியையும் சேர்த்துச் ‘சத்தியானந்த சோமசுந்தரம்’ என்று பெயரிட்டனர்.
இளமை வாழ்வு
அரண்மனையில் அரசியாரின் ஆதரவில் இளமை தொட்டு இக்குழந்தை வளர்ந்தது. ஐந்தாம் அகவை நிகழும் பொழுது அரண்மனை ஆத்தான ஆசிரியர் சங்கர சாத்திரி யாரிடம் தமிழ். வடமொழி எனும் இரண்டு மொழிகளிலும் எழுத்தறிவிக்கப் பெற்றார். மேலும் அவ்வூர்ப் பெருமாள் கோவில் கூடத்தில் நடைபெற்று வந்த திண்ணைப் பள்ளிக் கூடத்தில் தெய்வசிகாமணி ஐயங்கார் எனும் ஆசிரியரிடம் ஒரு சில நாள் கல்வி பயின்றார் சோமசுந்தரர். பள்ளி ஆசிரியர் தன் பக்கலில் அமர்ந்திருந்த மாணவனிடம் கடுமை யாக நடந்து கொண்டதனால், இவர் பள்ளிப்படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைத்து, அரசியார் கொடுத்த செல்லத்தில் தம் பதின்மூன்றாவது வயது வரையிலும் விளையாடியே வீணே பொழுது போக்குவாராயினர். இவர்தம் வளர்ப்பு அன்னையார் மறைவிற்குப் பின்னர் இவர் பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் பள்ளிக்குச் சென்று எட்டையபுரத்தில் எட்டாம் வகுப்பு வரை படித்துப் பின்னர்த் திருநெல்வேலி சென்று ‘சர்ச் மிசன்’ உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை வகுப்பு வரை-அக்காலத்தில் F. A, (Fellow of Arts) என வழங்கப் பெற்ற ‘இண்டர்மீடியட்டு’ வகுப்பு வரை பயின்றார். ஆங்கிலமும் அருந்தமிழும் பாங்குறப் பயின்று இரண்டு பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்றார். இதன் பின்னர், சென்னை சென்று கிறித்தவக் கல்லூரியில் புகழ் பெற்ற வில்லியம் மில்லர் என்னும் பெருமகனாரிடம் பயின்று பட்டம் பெற்றார். அது காலை அங்கு இவருக்குத் தமிழாசிரியராக வாய்த்தவர் இருவர். ஒருவர் தனித்தமிழ் இயக்கங்கண்ட மறைமலையடிகளார்; மற்றொருவர் பரிதிமாற் கலைஞர் எனத் தம் பெயரையே தமிழ்ப் படுத்திக் கொண்ட வி. கோ. சூரியநாராயண சாத்திரியார்.
இவ்விருவரின் தொடர்பு இயல்பிலேயே தமிழார்வமும் தமிழறிவும் மிக்கிருந்த சோமசுந்தரரை மேலும் உயர்வுடையோராக்கியது.
வழக்கறிஞர் வழக்கு
பி.ஏ. படிப்பு முடிவுற்றதும், சென்னைச் சட்டக் கல்லூரியில் சேர்ந்து பி.எல். படிப்பைப் பல இடையூறுகளுக்கிடையில் 1905ஆம் ஆண்டில் முடித்தார். தூத்துக்குடியில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார். பொதுவாகச் சட்டக்கல்லூரியிற் படிப்பை முடித்தவர்கள் ஏற்கெனவே சட்டம் முடித்துப் பெயர் பெற்ற வழக்கறிஞராக இருப்பவரிடம் சில காலம் பயிற்சி பெற்ற பின்னரே தனியாக வழக்காடுதல் வழக்கம். ஆயினும் நாவலர் எடுத்த எடுப்பில் தாமே தனியே வழக்குகளை நடத்தத் துணிந்தார். இவர் நாட்டுக்கோட்டை நகரத்தார் வழக்குகளை மேற்கொண்டு நடத்திய காரணத்தால், அதன் பொருட்டு அடிக்கடி தேவகோட்டைக்குச் சென்றுவர வேண்டி வந்தது. இதனாற் பெரும் பொருட் செலவும் காலக்கழிவும் ஏற்பட்டதனால் நகரத்தார் பெருமக்கள் செட்டிநாட்டுக்கு அண்மையிலுள்ள மதுரைக்கு வந்து தொழில் நடத்துமாறு இவரிடம் பலமுறை வற்புறுத்தவும், இவர் 1920ஆம் ஆண்டு தூத்துக்குடி மேலூரை விட்டு மதுரைக்கு வந்து தொழில் நடத்தத் தொடங்கினார் தொடக்க நாள் தொட்டு இவர் நேர்மையுடனும் நியாயத்துடனும் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வந்ததால், பேரும் புகழும் பணமும் இவரைத் தேடிவந்தன. தம்மிடம் வரும் வழக்கு எத்தன்மை வாய்ந்ததாயிருப்பினும் நாளொன்றுக்கு ஒரு நூறு உ ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் வாங்கமாட்டார். தம் வழக்கறிஞர் பணிக்கிடையேயும் தாமாகமே 1913ஆம் ஆண்டில் எம்.ஏ. தேர்வு எழுதி வெற்றியும் பெற்றிருந்தார்.
அரசியல் வாழ்வு
நாட்டு விடுதலையில் நாட்டமிக்கவராய் நம் நாவலர் வீறுடன் விளங்கினார். சுதேசிக் கப்பலோட்டிய வ.உ. சிதம்பரம் பிள்ளையவர்களுடன் நெருங்கிய நேயம் கொண்டி ருந்தார். திங்கள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கு மேல் வருவாய் வந்து கொண்டிருந்த வழக்கறிஞர் பணியை விடுத்து. நூறு ரூபாய் திங்கள் ஊதியம் பெற்றுக்கொண்டு கப்பல் கம்பெனியின் ஆட்சிப் பொறுப்பினைத் திறம்பட நடத்தினார். இஃது இவரது கரைகடந்த நாட்டுப் பற்றினைக் காட்டும். இரண்டு கப்பல்களை உடைத்தாயிருந்த வ. உ. சி. மூன்று கப்பல்கள் தம்மிடம் உள்ளது என்று கூறுவர். மூன்றாவது கப்பல் எங்கே என்றால், “எசு. எசு. (Steam ship) பாரதி என்ற தமிழ்க் கப்பலை ஏன் மறந்து விட்டீர்கள்?” என்பார். அதுகாலை வ. உ. சி. யோடு தொடர்பு கொண்டிருந்த அனைவரையும் அன்னிய ஆங்கில அரசினர் குற்றக்கண் கொண்டு நோக்கினர். எனவே ஐயப்பட்டியலில் நாவலர் பெயரையும் சேர்த்தனர். 1905 முதல் 1919 வரையில் இவர் பெயர் ஐயப்பட்டியலில் இருந்தது. நண்பர்கள் பலர் வற்புறுத்தியும், அருமை வாய்ந்த அரசாங்கப் பணியினை வாங்கித் தருவதாக நயங்காட்டிப் பலர் அழைத்துங் கூட நாவலர் நாட்டு விடுதலை வேள்விக்கான தம் பணியி லிருந்து நீங்கினாரல்லர்.
(தொடரும்)
சான்றோர் தமிழ்
சி. பாலசுப்பிரமணியன்
No comments:
Post a Comment