(உ.வே.சா.வின் என் சரித்திரம் 14 தொடர்ச்சி)

உ.வே.சா.வின் என் சரித்திரம்

அத்தியாயம் 9
குழந்தைப் பருவம்

அரியிலூரில் என் தந்தையார் ஒருவாறு திருப்தியோடு காலங்கழித்து வந்தாராயினும், அவருடைய உள்ளத்துள்ளே ஒரு வருத்தம் இருந்தே வந்தது. தம் குடும்பக் கடனாகிய 500 உரூபாயைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்ற எண்ணமே அதற்குக் காரணம். அதனால் அவருக்கு இடையிடையே ஊக்கக்குறைவு ஏற்பட்டது. ‘எவ்வாறேனும் 500 உரூபாய் சம்பாதித்துக் குடும்பக் கடனைத் தீர்த்து நிலங்களை மீட்க வேண்டும்’ என்ற கவலை அவருக்கு வரவர அதிகரித்து வந்தது.

இல்லறத் தருமத்தை மேற்கொண்ட பிறகு அவருக்குக் குடும்ப பாரம் அதிகமாயிற்று. ‘குடும்பத்தைப் பாதுகாப்பதற்கே பெரு முயற்சி செய்ய வேண்டியிருக்கையில் பழங்கடனைத் தீர்ப்பதற்கு மார்க்கம் ஏது? என்று அவர் எண்ணி எண்ணிக் கலக்க முற்றார். சமசுதான சங்கீத வித்துவானாக இருந்ததில் அவருக்குப் பெருமையும் பல அன்பர்களுடைய பழக்கமும் உண்டாயின. சமசுதான நிலத்திலிருந்து கிடைத்த வருட வருவாய் உரூபாய் ஐம்பது; ஊரிலுள்ள மூன்று மா நிலத்திலிருந்து வந்த வரும்படி அதிகமன்று. இந்த நிலையில் நண்பர்களிடமிருந்து காரணமின்றிப் பொருளுதவி பெறுவதையும் அவர் விரும்பவில்லை. அதனால் இராமாயணக் கீர்த்தனங்களை இசையுடன் முறையாகச் சில நாட்கள் படித்துப் பொருள் சொல்லிப் பட்டாபிசேகம் செய்து முடிக்கும் ஒரு முயற்சியைத் தொடங்கினார். அம்முயற்சியினால் நல்ல பயன் உண்டாயிற்று. சில இடங்களில் ள்ளவர்கள் அவரைத் தங்கள் தங்கள் ஊருக்கு வருவித்து இராமாயணக் கீர்த்தனம் கேட்கத் தொடங்கினர்.

ஒவ்வொரு முறையும் இராமாயணம் நிறைவேறியவுடன் அன்பர்கள் ஒரு தொகை தொகுத்து அளிப்பார்கள். அந்தத் தொகை குடும்பத்துக்கு மிகவும் உபயோகமாக இருக்கும், இவ்வாறு தொடங்கிய இராமாயண முயற்சியே என்னுடைய தந்தையாரின் உள்ளக் கவலையைத் தீர்ப்பதற்கு உதவியாயிற்று.

அரியிலூருக்கு கிழக்கே மணலேரி என்னும் ஊரொன்று உண்டு. அங்கே மணிகட்டி உடையார் என்ற செல்வர் ஒருவர் இருந்தார். அவர் என் தந்தையாரிடம் அன்புடையவர்; அடிக்கடி தம் ஊருக்கு வருவித்து அவர் பாட்டைக் கேட்டு இராமாயணப் பிரசங்கமும் நடைபெறச் செய்து பொருளுதவி செய்து வந்தார். ஒரு சமயம் குடும்பக் கடனைத் தாமே தீர்த்து விடுவதாகவும் சொன்னார். அது கேட்ட என் தகப்பனாரது கவலை குறைந்தது. எவ்வாறேனும் கடன் சுமையைப் போக்கிவிடலாமென்ற நம்பிக்கை உதயமாயிற்று.

மணிகட்டி உடையாரைப் போன்ற பல வேளாளச் செல்வர்களுடைய ஆதரவு அக்காலத்தில் என் பிதாவுக்குக் கிடைத்தது. என் ஆண்டு நிறைவு அரியிலூரிலே மிகவும் சிறப்பாக நடந்தது. முற்கூறிய செல்வர்கள் செய்த உதவிகளே அச்சிறப்புக்குக் காரணம்.

அக்காலத்தில் என் தந்தையாரை ஆதரித்தவர்கள்[1] அல்லிநகரம் சோமசுந்தரம் பிள்ளை, சுந்தர சபாபதி பிள்ளை, கொத்தவாசல் குமர பிள்ளை, சிவசிதம்பரம் பிள்ளை, இராமகிருட்டிண பிள்ளை, இராமசாமி பிள்ளை, முத்துவேலாயுதம் பிள்ளை, பாலகிருட்டிண பிள்ளை, ஆறுமுகம் பிள்ளை முதலியோர். அரண்மனையில் இராயசமாக இருந்த இராம பத்திரைய ரென்பவரும், சமீன்தாரின் குருவாகிய தாத்தாசாரியா ரென்பவரும், கிராம முன்சீபாக இருந்த வேங்கட சுப்பைய ரென்பவரும் வக்கீல் இரங்காசாரியா ரென்பவரும் அவ்வப்போது தங்கள் தங்களால் இயன்ற உபகாரத்தைச் செய்து வந்தார்கள்.

நான் பிறந்தபோது எனக்குச் சாமிநாதன் என்னும் பெயர் இடப்பட்டது. சாமிமலை என்னும் தலத்திலுள்ள முருகக் கடவுளுக்குச் சாமிநாத னென்பது திருநாமம். எங்கள் ஊரினரும் பிறரும் அந்த தலத்துக்குச் சென்று வருவார்கள். எங்கள் குடும்பத்தினருக்கும் அதில் ஈடுபாடு அதிகம். அது பற்றியே எனக்கு அப்பெயர் இட்டார்கள். எல்லோரும் என்னை, ‘சாமா’ என்றே அழைப்பார்கள். சாமிநாதனென்பதே மருவி அவ்வாறு ஆயிற்று.

என் தந்தையார் இராமாயணப் பிரசங்கம் செய்யுங் காலங்களில் என் சிறிய தந்தையாரான சின்னசாமி ஐயர் உதவி புரிவார். அரியிலூர்ச் சடகோபையங்கார் வீணை வாசிப்பதிற் பழக்கமுள்ளவராதலின் அவரிடம் என் சிறிய தகப்பனார் வீணை பயின்றார்.

நாங்கள் அரியிலூரில் இருந்த காலத்தில் என் சிறிய தந்தையாருக்குக் கலியாணம் நடைபெற்றது. மாயூரத்தில் மகாதானத் தெருவில் இருந்த சேஷையரென்பவர் குமாரியாகிய லக்ஷ்மியை அவர் மணந்து கொண்டார். இராமாயணப் பிரசங்கத்தினாற் கிடைத்த பணமும் சில செல்வர்களுடைய உதவியாற் கிடைத்த பொருளும் அந்தக் கலியாணத்திற்கு உபயோகமாயின.

 அந்த மணத்தின் முன்பும் பின்பும் என் தந்தையார் சில முறை மாயூரம் செல்ல நேர்ந்தது. அக்காலத்தில் அங்கே கோபால கிருட்டிண பாரதியார் இருந்து வந்தார். அவருடைய பழக்கம் என் தந்தையாருக்கு உண்டாயிற்று. கோபால கிருட்டிண பாரதியார் சில காலம் கனம் கிருட்டிணையரிடம் பயின்றவராதலின் அந்த வித்துவானுடைய பந்துவும் மாணாக்கருமாகிய என் பிதாவிடம் அவருக்கு மிக்க அன்பு உண்டாயிற்று. என் தந்தையாரை அவர் காணும் போதெல்லாம் கனம் கிருட்டிணையருடைய கீர்த்தனங்களைச் சொல்லச் செய்து கேட்டு இன்புறுவார். அவருடன் பழகும்போது என் பிதாவுக்குத் தம் குருகுல வாசம் நினைவுக்கு வந்தது. இருவரும் சங்கீத சம்பந்தமான சம்பாசணையிற் பொழுது போக்குவார்கள். இரண்டு பேரும் சிவபக்தர்கள்; அத்துவைத சாத்திரப் பயிற்சியுடையவர்கள்.

அக்காலத்தில் [2] கோபாலகிருட்டிண பாரதியார் நந்தனார் சரித்திரக் கீர்த்தனத்தை இயற்றிப் புகழ் படைத்திருந்தார். பல இடங்களில் அந்தச் சரித்திரத்தைப் பிரசங்கம் செய்து வந்தார். தமிழ்நாடு முழுவதும் நந்தன் சரித்திரத்திற்கு ஒரு பிரசித்தி உண்டாகி இருந்தது. தாம் நந்தனார் சரித்திரத்தை இயற்றுவதற்குக் காரணமாக இருந்த நிகழ்ச்சிகளையும் தம் அநுபவங்களையும் என் தந்தையாரிடம் அவர் சொல்லி மகிழ்வார்; தம்முடைய கீர்த்தனங்களையும் பாடிக் காட்டுவார். என் தத்தையார் அவரிடமிருந்து பல கீர்த்தனங்களைத் தெரிந்துகொண்டார்; மாயூரத்திற்கு எந்தையார் எப்பொழுது சென்றாலும் பாரதியாரைப் பாராமல் வருவதில்லை.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

குறிப்பு

1.
 இவர் தஞ்சையில் வக்கீலாக இருந்தவரும் தமிழறிஞரும் என் அன்பருமாகிய இராவுபகதூர் திரு கே. எசு. சீரீநிவாச பிள்ளையின் தந்தையார்.

2.  இவற்றை நான் எழுதிப் பதிப்பித்துள்ள கோபால கிருடட்டிண பாரதியார் சரித்திரத்திற் காணலாம்.