(புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 2/3  தொடர்ச்சி)

8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 3/3

‘கலப்பு மணம் ஒன்றே நல்வழிக்குக் கைகாட்டி’ என்று கலப்பு மணத்தை ஆதரிக்கும் கவிஞர், விதவைத் திருமணத்தையும் முதன் முதலில் பெரிதும் வற்புறுத்திக் கவிதைப் புரட்சி செய்தவர் ஆகிறார்.

வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ
பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?”
– பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி,

என்ற வினாவினைச் சமுதாயத்தினை நோக்கி எழுப்புகின்றார். ‘ஒரு கட்டழகன் திருத்தோளினைச் சார்ந்திடச் சாத்திரம் பார்க்காதீர்’ என்று கைம்மைப் பழியினைக்களைய முனைகிறார் கவிஞர்.

‘மனைவியை அவள் முதிய பருவத்திலும் அவள் கணவன் அன்பு செய்து வாழ வேண்டும் எனும் அறிவுரை சங்க இலக்கியங்களிலே காணப் பெற்றாலும் கூடப் பாரதிதாசன் அக்கருத்தைக் கூறும் நயம் போற்றற்குரியது. குடும்ப விளக்கில் முதியோர் காதற் பகுதியில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

புதுமலர் அல்லகாய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும்மூ தாட்டி
மதியல்ல முகம்  வட்கு
வறள்நிலம்குழிகள் கண்கள்
எதுஎனக் கின்பம் நல்கும்?
இருக்கிறாள்” என்ப தொன்றே
– குடும்பவிளக்கு : முதியோர் காதல்.

இன்று விரிவாக, விளக்கமாக விளம்பரமாகப் பேசப்படும் குடும்பக்கட்டுப்பாட்டினையும் அன்றே கவிஞர் கூறியிருக் கின்றார் என்பதும் அறியத்தக்கது. பகுத்தறிவுப் புரட்சி

இருட்டறையில் உள்ளதடா!
உலகம்சாதி
இருக்கின்ற தென்பானும்
இருக்கின் றானே!
மருட்டுகின்ற மதத்தலைவர்
வாழ்கின் றாரே!
வாயடியும் கையடியும்
மறைவ தெந்நாள்
சுருட்டுகின்றார் தம்கையில்
கிடைத்த வற்றைச்
சொத்தெல்லாம் தமக்கென்று
சொல்வார் தம்மை
வெருட்டுவது பகுத்தறிவே!
இல்லை யாயின்
விடுதலையும் கெடுதலையும்
ஒன்றே யாகும்
– பாண்டியன் பரிசு; இயல் 36—3

இதனால் பகுத்தறிவின் பான்மையும் சிறப்பும் புலப்படும். பெண் குழந்தைத் தாலாட்டில்,

மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!”

என்றும், ஆண் குழந்தைத் தாலாட்டில்,

“ ‘எல்லாம் அவன் செயலே
என்று பிறர்பொருளை
வெல்லம்போல் அள்ளி
விழுங்கும் மனிதருக்கும்
காப்பார் கடவுள் உமைக்
கட்டையில் நீர் போகுமட்டும்
வேர்ப்பீர் உழைப்பீர்
என உரைக்கும் வீணருக்கும்
மானிடரின் தோளின்
மகத்துவத்தைக் காட்டவந்த
தேனின் பெருக்கே
என்செந்தமிழே கண்ணுறங்கு

என்றும் மூடத்தனத்திற்குச் சாவுமணி அடிக்கிறார். மேலும் அவர்,

மதம் எனல் தமிழ் வையத்தின் பகை!
ஆள்வோர் என்றும் அடங்குவோர்
என்றும் பிறந்தார் என்பது சரடு
தனிஒரு மனிதன் தன்விருப்பப்படி
இனிநாட்டை ஆள்வ தென்பதில்லை
மக்கள் சரிநிகர்……………….”
– கடல்மேற் குமிழிகள் 35

என்கிறார்.

தக்கதோர் ஆட்சி மக்களின் மன்றம்
சரிநிகர் எல்லோரும் என்றோம்
பொய்க்கதை மறையெனல் புரட்டே
புரட்சியில் மலர்க இன்ப வாழ்வே
– இறுதி அடிகள்

மேலும்,

உழையானை நோயாளி ஊர்திருடி என்போம்

என்றும்,

ஒருகடவுள் உண்டென்போம்!
உருவணக்கம் ஒப்போம்
உள்ளபல சண்டையெல்லாம் ஒழியும்
மதம் ஒழிந்தால்
திருக்கோயில் தொழிற்சாலை

என்றும்,

நமது கொள்கை மக்களெல்லாம் நிகர்
நான்கு சாதிகள் ஆரியர் கொள்கையே

என்றும்,

இந்நிலத்துப் பெருமக்கள் ஓர் கடல்
இடர்செய் மன்னவர் அக்கடற் குமிழிகள்

என்றும்,

நால்வகுப் பென்பது
நூல்வகுப்பா தமிழ்நாட்டில்!
நற்றமிழ் மக்கள் ஒரே வகுப்பே
தமிழ் ஏட்டில்

என்றும் கூறும் அடிகளில் புரட்சித் தீயின் நாக்குகளை நன்கு காணலாம்.

பொதுவுடைமைப் புரட்சி

சாதி சமய பேதங்களைத் தகர்த்தெறிந்து, மூடப் பழக்கங்களை முறியடித்து, கண்மூடி வழக்கங்களை மண் மூடிப் போகச் செய்து ஒரு புத்துலகம் காண அவாவுகின்றார் கவிஞர்.

சாதிமத பேதங்கள் மூடவழக்கங்கள்
தாங்கிநடை பெற்றுவரும் சண்டையுல கிதனை
ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்
பின்னர் ஒழித்திடுவோம்புதியதோர் உலகம் செய்வோம்.”

ஏழை பணக்காரர் அற்ற சமத்துவ சமுதாயங் காண அவர் அறிவுறுத்தும் வழி வருமாறு :

ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!”

பேதம் வளர்க்கப் பெரும்பெரும் புராணங்கள் இருக்கும் தமிழ்நாட்டில், ‘மக்கள் உழைப்பில் மலையாத நம்பிக்கை எக்களிக்க வேண்டும் இதயத்தில்’ என்கிறார்.

எல்லோர்க்கும் தேசம்,
எல்லோர்க்கும் உடைமைளலாம்!
எல்லார்க்கும் எல்லா
உரிமைகளும் ஆகுகவே!
எல்லார்க்கும் கல்வி
சுகாதாரம் வாய்ந்திடுக!
வல்லார்க்கும் மற்று முள்ள
செல்வர்க்கும் நாட்டுடைமை
வாய்க்கரிசி என்னும்
மனப்பான்மை போயொழிக!”

என்று பாரதிதாசன் அவர்கள் ‘பொதுவுடைமைச் சமுதாயம் ஒன்று பூக்க வேண்டும்’ என்று பூரிப்போடு பாடுகின்றார்.

தன்பொருட்டு வாழ்வானோர் ஏழைமக்கள்
தம்பொருட்டு வாழ்வானோர் செல்வன்.”
– பாண்டியன் பரிசு : இயல்; 57: 18

என்று ஏழை பணக்காரன் பற்றிப் புதியதொரு புரட்சி விளக்கத்தினைத் தருகின்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

இதுகாறும் எடுத்துக்காட்டப்பெற்ற செய்திகளால் பாரதிதாசன் ஒரு புரட்சிக் கவிஞர் என்பதும், அவர் பாடல் களாகிய தோட்டத்தில் புரட்சி மலர்கள் பல பூத்துக் குலுங்குகின்றன என்பதும் பெற்றாம். புரட்சிக் கவிஞர் அவர்கள் மறைந்தபொழுது சான்றாண்மைக்கு ஆழியெனத் திகழும் பேராசிரியர்முனைவர்மு. வரதராசனார் அவர்கள், பாரதிதாசன் பற்றிக் கூறிய சொற்களை ஈண்டு நினைவிற் கொள்ளல் இக்கட்டுரைக்குப் பொருத்தமாகும்.

“புரட்சிக் கவிஞர் என்றாலே இந்த நூற்றாண்டிலும் இதற்கு முந்தைய நூற்றாண்டிலும் வேறு யாரையும் குறிக்காமல் பாரதிதாசன் ஒருவரையே குறிக்குமாறு தமிழிலக்கிய வரலாற்றிலே அவர் சிறப்பிடம் பெற்றுவிட்டார். சிறந்ததை மிகமிக விரும்பிப் போற்றுதலும், தீயதை மிகமிக வெறுத்துத் தூற்றுதலும் அவர் இயல்பு. இந்த நாட்டில் புகுந்து, சமுதாயத்தில் இடம் பெற்றுவிட்ட தீய பழக்க வழக்கங்களையும் முடக்கருத்துகளையும் கடிந்து பாடிப், படிப்பவர் உள்ளத்தில் புத்துணர்ச்சியை எழுப்பிய புரட்சியாளர் அவர். அவருடைய பாட்டுகளில் விழுமிய கற்பனையும் உண்டு. வேகமான உணர்ச்சியும் உண்டு; பழந்தமிழ் மரபும் உண்டு. புத்துலகச் சிந்தனையும் உண்டு. தமிழர்தம் வாழ்வுக்கு அவர் தம் எழுத்தும் பேச்சும் அரண் செய்து வந்தன.”

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்