(உ.வே.சா.வின் என் சரித்திரம் 25 தொடர்ச்சி)
என் சரித்திரம்
அத்தியாயம் 15 தொடர்ச்சி
தமிழ்த் திருவிளையாடற் புராணத்தில் அந்த வரலாறு உள்ள பாகத்திற்கு ‘விருத்த குமார பாலரான படலம்’ என்று பெயர். ஐயாக்குட்டி ஐயர் அந்தச் சரித்திரத்தைச் சொல்லும்போது, “கௌரிக்கு அவள் தகப்பனார் கௌரீ மந்திரத்தை உபதேசம் செய்தார். அந்த மந்திரம் மிக்க நன்மையைத் தரவல்லது” என்று கூறி அந்த மந்திரத்தையும் எடுத்துரைத்தார். அவர் உரைத்த மந்திரத்தையும் அதை உச்சரிக்கும் முறையையும் அப்பொழுதே நான் மனத்திற் பதியச் செய்துகொண்டேன். அவர் அன்றிரவு மந்திரத்தைச் சொன்னதையே உபதேசமாகக் கருதி அது முதல் அதனை நானும் சபித்து வரலானேன்.
துன்பத்தின்மேல் துன்பம்
என் தந்தையார் அரியிலூரைச் சூழ்ந்துள்ள இடங்களுக்கு அழைப்பின் மேல் அடிக்கடி சென்று தம் சங்கீதத்தால் சனங்களை உவப்பித்து அங்கங்கே உள்ள அன்பர்களாற் பொருளுதவி பெற்று வருவார். சில கிராமங்களில் கிடைத்த பொருள் வருவாயிலிருந்து என் உபநயனத்திற்குக் குமரபிள்ளை உதவிய தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். சமத்தான வித்துவானென்ற பெயரே ஒழிய சமீன்தாரது ஆதரவு வர வரக் குறையலாயிற்று. சமீன்தாரே கடனில் மூழ்கியிருந்தார். கடன்தாரர்கள் கடனை வற்புறுத்திக் கேட்டபோது அவர் தம் கிராமங்களை விற்று அதனை அடைக்கத் தொடங்கினார். சுரோத்திரியமாகவிட்ட நிலங்களையும் விற்றார். எங்களுக்கு இலந்தங்குழி என்னுமிடத்தில் விட்டிருந்த சருவமானியத்தையும் அவர் விற்றுவிட்டார். சமத்தானத்து உதவி இவ்வாறு அடியோடு நின்று போயிற்று.
இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் ஒரு துன்பம் போனால் மற்றொன்று வருவதற்குக் காத்து நிற்பதை என் தந்தையார் அநுபவத்தில் அறிந்தார். சமீனது சம்பந்தமும் ஆதரமும் அற்றுவிடவே, “இனி என்ன செய்வது?” என்ற யோசனை அவருக்கு உண்டாயிற்று. குடும்பம் நடத்தும் விசயத்தில் ஏற்பட்ட கவலையை விட அதிகமான கவலை என் கல்வி விசயத்தில் ஏற்பட்டது. அரியிலூரில் கல்விக்கு வேண்டிய உதவி இருந்தது; ஆனால் வருவாய் இல்லை. “இவ்வூரை விட்டால் வேறு எங்கே போவது?” என்னும் கவலை அவர் மனத்தை அலைக்கத் தொடங்கியது.
குன்னம் சிதம்பரம் பிள்ளை
இவ்வளவு சங்கடங்களில் அகப்பட்டுக் கலங்கும் எந்தையாரது உள்ளக் குறிப்பைச் சிதம்பரம் பிள்ளை என்னும் ஒருவர் ஒருவாறு ஊகித்து அறிந்துகொண்டார். அரியிலூருக்கு வடக்கே உள்ள குன்னம் (குன்றம்) என்னும் கிராமத்துக் கணக்குப் பிள்ளை அவர்; கார்காத்த வேளாளர்; நல்ல செல்வாக்குள்ளவர்; என் தந்தையாருடைய பால்ய நண்பர். அவருடைய பந்துக்கள் அரியிலூரில் இருந்தனர். அவர்கள் வீட்டிற்கு அவர் அடிக்கடி வருவார். அப்படி வரும்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கும் வந்து என் தந்தையாரிடம் பேசி அளவளாவி விட்டுச் செல்வார் அவர் தமிழிலும் அறிவு வாய்ந்தவர். நான் தமிழ் படித்து வருவதை அறிந்து என்னிடம் பிரியமான வார்த்தைகளைப் பேசிப் பாராட்டி ஊக்கம் உண்டாக்குவார்.
என் தகப்பனார் ஒரு நாள் சிதம்பரம் பிள்ளையோடு பேசிக்கொண்டிருந்தார். அவர் பேச்சில் பழைய கம்பீரம் காணாமையால் சிதம்பரம் பிள்ளை அவர் உள்ளத்துள் இருக்கும் கவலையே அதற்குக் காரணமென்று ஊகித்து அறிந்தனர். பிறகு மெல்ல மெல்ல விசாரித்து சமீன் ஆதரவு இன்மையை உணர்ந்து வருந்தினார் குடும்பக் கடனைப் பற்றியும் அவர் அறிந்தார். உடனே, “நீங்கள் இனிமேல் இங்கே இருக்க வேண்டாம். குன்னத்திற்கு வந்துவிடுங்கள் அங்கே திரமாக இருந்து வரலாம். உங்களுக்குக் குடும்பக் கவலை இல்லாதபடி நானும் என் அன்பர்களும் கவனித்துக் கொள்ளுகிறோம். உங்கள் குடும்பக் கடன் அடைவதற்கும் ஏதாவது வழி செய்கிறோம்” என்றார்.
என் தந்தையாருக்குப் புத்துயிர் உண்டாயிற்று. ஆண்டவன் கைவிடாமல் காப்பாற்றுவா னென்ற எண்ணம் உறுதி பெற்றது. குன்னம் வருவதாகச் சிதம்பரம் பிள்ளையிடம் கூறினார். அந்தச் செல்வர் ஊருக்குப் போனவுடனே நாங்கள் குடியிருப்பதற்காக ஒரு வீடு திட்டம் செய்து எங்கள் வரவை எதிர்பார்த்திருந்தார். அடிக்கடி மனிதர்களை அனுப்பி வரும்படி சொல்லி யனுப்பிக்கொண்டும் வந்தார்.
குன்னத்துக்குப் பிரயாணம்
என் தந்தையாருக்கு அரியிலூரைவிட்டுச் செல்ல மனம் துணியவில்லை. பழகிய மனிதர்களை விட்டுப் பிரிவது எளிதான காரியமா? என் படிப்பு விசயத்திற் கருத்துடைய அவருக்குச் சடகோபையங்காரிடம் நான் கற்று வருவதில் திருப்தி இருந்தது. அரியிலூரைவிட்டுச் சென்றால் அதற்குத் தடை உண்டாகுமென்ற எண்ணமும் அவரைத் துன்புறுத்தியது. உணவுக்கு அடுத்தபடிதான் கல்வியாதலின் குன்னம் போவதே சரியென்று தீர்மானம் செய்து, அதற்குரிய நாளொன்றும் பார்த்து, அச்செய்தியைச் சிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லியனுப்பினார்.
வண்டி நகர்ந்தது
நாங்கள் ஒரு நாள் விடியற்காலையில் புறப்பட்டுக் குன்னம் செல்வதாக ஏற்பாடாகி இருந்தது. முதல் நாள் அரியிலூரில் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டோம். புதிய ஊர்களைப் பார்ப்பதில் எனக்கு விருப்பம் அதிகமே; ஆயினும் சடகோபையங்காரிடத்தில் பாடம் கேட்க முடியாதே என்று வருந்தினேன். அதனை அறிந்த அவர், “நீ எப்போது வந்தாலும் இங்கே சில தினம் இருந்து பாடம் கேட்கலாம்” என்று சொல்லி விடையளித்தார்.
எங்கள் பிரயாணத்திற்காக ஒரு வண்டி, திட்டம் செய்துகொண்டு குமரபிள்ளை வந்தார். செலவுக்கும் பணம் அளித்து அவர் விடைபெற்றுச் சென்றார், விடிய ஐந்து நாழிகையளவில் எங்கள் வீட்டு வாசலில் வண்டி வந்து நின்றது. என் தந்தையாரும் நானும் வீட்டைவிட்டு வெளியே வந்தோம். தந்தையார் ஈசுவரப் பிரார்த்தனை செய்துகொண்டே என்னை எடுத்து வண்டியில் உட்கார வைத்தார். அந்தச் சமயத்தில் பெருமான் கோயிற் பக்கம் மேளவாத்தியத்தின் சத்தம் கேட்டது. தந்தையார் திரும்பிப் பார்த்தார். அங்கே காளிங்க நர்த்தன மூர்த்தியைப் படிச்சட்டத்தின் மீது எழுந்தருளுவித்துக் கோயில் வாயிலில் தீபாராதனை செய்தார்கள். என் தந்தையாருக்குப் மயிர்க்கூச்செறிந்தது. “நல்ல சகுனமாக இருக்கிறது. தெய்வத்தை நம்பிப் பிரயாணப்படுகிறோம்” என்று அவர் மனமுருகிக் கூறினார்.
பெருமாள் கோவிலுக்குத் திருப்பணி செய்வதற்காக அயலிலுள்ள கிராமங்களுக்குச் சென்று பொருள் சேகரிக்க எண்ணிய கோவிலதிகாரிகள் அதன் பொருட்டு அந்தக் கிருட்டிண விக்கிரகத்தை எழுந்தருளப் பண்ணி சந்நிதிக் கெதிரில் நிறுத்தித் தீபாராதனை செய்தார்கள். அந்தச் சமயமும் எந்தையார் என்னை வண்டியில் ஏற்றிய சமயமும் ஒன்றாக இருந்தன. கிருட்டிண பகவானது திருமுக மண்டலத்தை விளக்கிய அந்தக் கற்பூர ஒளி, “பழகிய இடத்தை விட்டுவிட்டுப் புதிய இடத்திற்குப் போகிறோமே!” என்ற கவலையுடன் இருந்த என் தந்தையாருடைய உள்ளத்தையும் விளக்கியது. எதிர்காலத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத வாழ்க்கைப் பிரயாணத்தில் தெய்வத்தின் திருவருள் துணை செய்யுமென்ற ஆறுதல் அவர் நெஞ்சிற் குடிகொண்டது.
என் தாயார் வண்டியில் ஏறினார்; தந்தையாரும் வண்டியில் அமர்ந்தார். குன்னத்தை நோக்கி எங்கள் வண்டி நகர்ந்தது.
(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.
No comments:
Post a Comment