Saturday, September 28, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 107 – இராவுபகதூர் திரு. பட்டாபிராம பிள்ளை



(உ.வே.சா.வின் என் சரித்திரம் 106 – திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை-தொடர்ச்சி)

திருச்சிராப்பள்ளியில் என் ஆசிரியருக்கு மிகவும் பழக்கமான இராவுபகதூர் திரு. பட்டாபிராம பிள்ளையென்னும் கனவான் ஒருவர் இருந்தார். அவருடைய சொந்த ஊர் திருவேட்டீசுவரன் பேட்டை. அவர் தமது கல்வித் திறமையாலும் இடைவிடா முயற்சியாலும் நல்ல ஒழுக்கத்தாலும் சிறிய உத்தியோகத்திலிருந்து படிப் படியாக அக்காலத்தில் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்பெற்ற டிப்டி கலெக்டர் என்னும் பெரிய உத்தியோகத்தை அடைந்து புகழ் பெற்றார். அவருடைய மேலதிகாரிகளுக்கு அவரிடத்தில் விசேடமான மதிப்பும், கீழ் உத்தியோகத்தர்களுக்குப் பயமும் இருந்தன. தமிழில் நல்ல பயிற்சியும் தமிழ் வித்துவான்களிடத்தில் உண்மையான அபிமானமும் உடையவர். எந்த இடத்திற்குப் போனாலும் ஆங்காங்குள்ள வித்துவான்களை விசாரித்து அறிந்து அவர்களைப் பார்த்துச் சல்லாபம் செய்து இன்புறுவார். உத்தியோக முறையில் மிகவும் கண்டிப்பாக இருப்பார். ஆனால் உண்மையான உழைப்பாளிகளை முன்னுக்குக் கொண்டு வருவதில் சிறிதும் பின் வாங்கமாட்டார். வைணவ மதத்தர்; சிறந்த தெய்வ பக்தியுள்ளவர். ஏழைகள் பால் இரக்கமும் உபகாரச் சிந்தையும் கொண்டவர். அவர் மகா வித்துவான் பிள்ளையவர்களிடத்தில் மிகவும் ஈடுபட்டவர். அவர்கள் மூலம் திருவாவடுதுறை மடத்தின் பெருமையைப் பற்றியும், சுப்பிரமணிய தேசிகருடைய குண விசேடங்களைப்பற்றியும் அறிந்து கொண்டவர். நாங்கள் திருவாவடுதுறையிலிருந்தபோது அவர் திரிசிரபுரத்தில் உசூர் சிரேத்தராக இருந்தார். அவர் ஒரு நாள் சில அன்பர்களோடு திருவாவடுதுறைக்கு வந்தார்.

அரசாங்க உத்தியோகத்தர்கள் பலருடன் பழகிப் பெரிய காரியங்களையெல்லாம் நிருவாகம் செய்யும் ஆற்றல் படைத்திருந்த பட்டாபிராமபிள்ளை அவ்வாதீனத்தின் அமைப்பையும் நாள்தோறும் ஒழுங்காகப் பூசை, தருமம், வித்தியாதானம் முதலியன நடைபெற்று வருவதையும் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தார். “இங்கே போலீசு இல்லை; படாடோபம் இல்லை; ஆனாலும் காரியங்களெல்லாம் எவ்வளவு ஒழுங்காக நடக்கின்றன! வித்தியா விசயத்தில் இங்குள்ளவர்களுக்கு எவ்வளவு சிரத்தையும் அன்பும் இருக்கின்றன! தலைவரிடத்தில் எல்லாரும் எவ்வளவு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்கள்!” என்று விம்மிதமடைந்து பாராட்டினார். சுப்பிரமணிய தேசிகருடைய அறிவுத் திறமையையும் தூய ஒழுக்கத்தையும் அன்பையும் அறிந்து, “இவர்கள் இருக்கும் இடம் இந்த மாதிரி தான் விளங்கும். இவர்களைப் போல் தமிழ் நாட்டில் சிலர் இருந்தால் போதும்; நம்முடைய பாசை முதலியன பழைய காலம் போல் சிறப்பை அடையும்” என்று புகழ்ந்தார்.

தேசிகரிடம் அவர் ஒரு முறை பேசுகையில் தமிழ்ப் பாசைக்கு நல்ல அகராதி ஒன்று வேண்டுமென்றும் பிள்ளையவர்களைக் கொண்டு அதனைச் சித்தம் செய்யச் சொல்லலாமென்றும் சொன்னார். தேசிகர் அப்படியே செய்யச் சொல்வதாகக் கூறியிருந்தார். ஆயினும் அது நிறைவேறவில்லை.

அது முதல் பட்டாபிராம பிள்ளை அப்பக்கம் வரும்போதெல்லாம் திருவாவடுதுறைக்கு வந்து சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து அன்புடன் சல்லாபம் செய்து செல்வார்.

தாது வருடம் புரட்டாசி மாத ஆரம்பத்தில் (செட்டம்பர் 1877) ஒரு முறை அவர் திருவாவடுதுறைக்கு வந்தார். மாணாக்கர் கூட்டம் அதிகமாக இருந்ததைக் கண்டு சந்தோசமடைந்தார். அவர்களுடைய கல்வித் திறமையைப் பரீட்சித்துத் திருப்தி அடைந்தார். தேசிகருடைய விருப்பத்தின்படி மாணாக்கர்களில் ஒவ்வொருவரும் அவர் விசயமாக ஒவ்வொரு செய்யுள் இயற்றிச் சொன்னோம். நான் இயற்றிக் கூறிய செய்யுள் வருமாறு:-

கார்நோக்கி நிற்கு மயில்போல நீங்கிய காதலன்றன்
தேர்நோக்கி நிற்கு மடந்தையர் போலத் திகைப்பறவிப்
பார்நோக்கி நிற்குநற் பட்டாபி ராம பராக்கிரம
நேர்நோக்கி நின்றனம் யாங்களெல் லாநின் னிகழ்வரவே.”

எல்லாவற்றையும் கேட்டு மகிழ்ந்த பட்டாபிராம பிள்ளை சுப்பிரமணிய தேசிகரைப் பார்த்துத் தம்முடைய பழைய வேண்டுகோளை ஞாபகப்படுத்தினார். “இவ்வளவு மாணாக்கர்கள் இங்கே இருக்கிறார்கள். சந்நிதானம் மனம் வைத்தால் அகராதியை விரைவில் நிறைவேற்றலாம்” என்று விண்ணப்பம் செய்தார். “பிள்ளையவர்கள் இந்த உபயோகமான காரியத்தைச் செய்திருக்கலாம். அவர் எப்போதும் புராணங்களும். பிரபந்தங்களும் பாடியே தமது வாழ்க்கையைக் கழித்து விட்டார். பெரிய வித்துவான்கள் உலகத்திற்கு உபகாரமான காரியங்களைச் செய்ய முன் வந்தால் தமிழ் எவ்வளவோ விருத்தியடையும்” என்றார். தேசிகர் “பார்ப்போம்” என்று சொல்லி விடை கொடுத்தனுப்பினார்.

பாட்டாபிராம பிள்ளை திரிசிரபுரம் சென்று தாம் திருவாவடுதுறைக்கு வந்திருந்த காலத்தில் தமக்கு உண்டான மகிழ்ச்சியைப் புலப்படுத்தியும் தம் வேண்டுகோளை நினைவுறுத்தியும் நான்கு பாடல்கள் எழுதி அச்சிட்டுச் சுப்பிரமணிய தேசிகருக்கு அனுப்பினார். அவை வருமாறு:-

  1. இனியதமிழ் நாடெங்கு மிங்கிலீசு பரவிதமிழ்க்
    கேற்ற மின்றிக்
    கனியகன்ற மாபோலக் கைவிடப்பெற் றிருப்பதையான்
    கண்டாற் றாது
    முனியினுருக் கொண்டவுன்றன் முன்றிலிடை முத்தமிழும்
    முழங்கு மென்றே
    தனியுறுசுப் பிரமணியத் தேசிகா நினையன்று
    தரிசித் தேனே.

    [மா – மாமரம். தனி – ஒப்பற்ற பெருமை]
  2. தரிசித்த வன்றுகண்டேன் றமிழ்மடந்தை தளிர்த்துலகில்
    தன்பேர் நாட்டிப்
    பரிசுபெற நினையடைந்து பலவாறாய் முயல்வதுவும்
    பாரின் மன்னர்
    தரிசிகா மணியேநீ தமிழ்மயிலைக் காப்பதுவும்
    தமிழர் யார்க்கும்
    பொருவில்பாண் டியன்சோழன் சேரனென வயங்குமுனைப்
    புனித னென்றும்.

[‘பரிசு – உலகத்தில் சிறந்த பாசையென்று மெச்சப்படுவதாகிய பரிசு’ (பட்டாபிராம பிள்ளையின் குறிப்பு.) பொரு – ஒப்பு.]

  1. அகராதி தமிழிலிணை யற்றதென் வியப்புறவொன்
    றான்றோர் யாரும்
    பகராதி ருத்தலினிப் பாரிலுள தமிழ்மடப்பண்
    ணவர்கட் கெல்லாம்
    நிகராதி ருக்குநெடும் பழியென்று முன்புகன்று
    நெடிய சீட்டுத்
    தகராதி ருக்குமொரு சிறுகுழையி லிட்டனுப்பித்
    தளர்வாய் நின்றேன்.

[மடப்பண்ணவர் – மடாதிபதிகள். பட்டாபிராம பிள்ளை அகராதி எழுத வேண்டுமென்ற வேண்டுகோளை எல்லா மடாதிபதிகளுக்கும் அனுப்பினாரென்று தெரிகின்றது. சீட்டு – கடிதம்.]

  1. தளர்ந்துருகிச் சமுசயத்தா லாற்றேனாய்த் திருமுகத்தைத்
    தரிசித் தேன்காண்
    வளர்ந்தோங்கு மதியுடையாய் ஞானிகட்கோர் தாயகமே
    வள்ள லேயுன்

கிளர்வசனத் தாற்றளர்ந்தேன் கெட்டியென நிச்சயித்தேன்
கேட்டுக் கொண்ட
வளம்வாய்ந்த வகராதி வருமென்றே திரும்பினன்காண்
வனப்பின் மிக்கோய்.

திரிசிரபுரம், கலி, 4978-தாது ௵ புரட்டாசி ௴ 13௳ ந (27-9-1877) [சமுசயம் – சந்தேகம். கெட்டி – திறமையையுடையோய்]

இந்தக் கடிதத்தைக் கண்டு நாங்களெல்லாம் வியப்புற்றோம். இப்பாட்டுகள் புலவர் பாடல்களைப் போன்றனவாக இராவிட்டாலும் பட்டாபிராம பிள்ளைக்கு எவ்வளவு தமிழன்பு இருந்ததென்பதை வெளிப்படுத்துகின்றன. ஓர் அரசாங்க உத்தியோகத்தர் அவ்வளவு அன்புடன் செய்யுள் இயற்றி விண்ணப்பம் செய்யும் திறமை படைத்திருப்பதே பெரிய ஆச்சரியமன்றோ?

அவர் கடிதம் வந்த சில நாட்கள் வரையில் சுப்பிரமணிய தேசிகரும் நாங்களும் அகராதியைப் பற்றிப் பேசினோம், வீரமா முனிவரென்னும் பெசுகி பாதிரியார் இயற்றிய சதுரகராதியின் அச்சுப் பிரதியும் ஏட்டுப் பிரதியும் வருவிக்கப்பட்டன. நிகண்டுகளை எடுத்துத் தட்டிக் கொட்டி வைத்தோம். இந்த உறசாகம் சில நாட்கள் வரையில் இருந்தது. பிறகு அகராதியைப் பற்றிய பேச்சே நின்று போயிற்று. பட்டாபிராம பிள்ளையைப் பற்றிய பேச்சு வந்தால் மட்டும், “திடீரென்று வந்து அகராதி எந்த மட்டில் இருக்கிறது?” என்று அவர் கேட்டால் என்ன செய்வது? என்ற யோசனை உண்டாகும்.

அக்காலத்தில் என்னிடம் படித்து வந்தவர்களுள் விசுவலிங்கத் தம்பிரான் முதலிய சிலர், சுப்பிரமணிய தேசிகர் பகற் போசனத்தின் பின் சிரமபரிகாரம் செய்து கொள்ளும்போது அவர் பாதங்களை வருடிப் பணிவிடை புரிவது வழக்கம். அவ்வாறு அவர்கள் செய்யும் பொழுது தேசிகர் நடைபெறும் பாடங்களைப் பற்றி விசாரிப்பார்; பாடங்களுக்குப் பொருளும் அவற்றிற் கண்ட விசயங்களிற் சில கேள்விகளையும் கேட்பார். அவற்றிற்கு விடை கூறிய பின் தேசிகர் சந்தோசமாக இருக்கும் சமயம் பார்த்துத் தம்பிரான்கள் என்னைத் திருவாவடுதுறையிலேயே வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் இருப்பதற்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டுமென்றும் மாதச் சம்பளம் ஏற்படுத்த வேண்டுமென்றும் சொல்லிக் கொள்வார்களாம். தேசிகர் என்னைக் காணும்பொழுது, “என்ன ஐயா! உம்மைப் பற்றி உம்முடைய மாணாக்கர்களாகிய தம்பிரான்கள் சிபாரிசு செய்கிறார்கள். உமக்குச் சௌகரியம் பண்ணிவைக்க வேண்டுமென்றும் சொல்லுகிறார்கள்” என்று சந்தோசத்துடன் சொல்லி, “நன்றாய்ப் பாடம் சொல்லவேண்டும்” என்று கட்டளையிடுவார்.

அவ்வார்த்தைகள் என் உள்ளத்தைக் குளிர்விக்கும். அவர்கள் வேண்டுகோள் பலிப்பதைப் பற்றி நான் அதிகக் கவலை கொள்ளவில்லை. அவர்கள் என்பால் கொண்டிருந்த அன்பையும் என் உழைப்பு வீணாகவில்லை

(தொடரும்)

Friday, September 27, 2024

காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¾ – முனைவர் சான் சாமுவேல்

 




(காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் 2/4 –தொடர்ச்சி)

மேற்கூறிய பிற உலகமொழிகளோடு தமிழை ஒப்பிட்டு ஒப்புமைக் கூறுகளைக் காலுடுவெல் வெளிப்படுத்தியதன் விளைவாகத் தமிழ்மொழி குறித்து 19-ஆம் நூற்றாண்டு வரை நிலவிய குறுகலான எண்ணங்கள் தூள்தூளாகச் சிதைந்தன. தமிழக மண்ணின் அடிவரை ஆணிவேரை மிக ஆழமாகச் செலுத்தி உலகெங்கிலும் விழுதுகளைப் பரப்பி, விழுதுகள் தாங்கிப் பிடிக்கும் நிலையில் உலகெங்கும் கிளை பரப்பிய மிகப் பிரமாண்ட ஆலமரமாக காலுடுவெல்லின் ஆய்வால் தமிழ்மொழி காட்சிதரத் தொடங்கியது. சமற்கிருதத்தின் திரிந்த வடிவமாக 18-ஆம் நூற்றாண்டுவரை எண்ணப்பட்ட தமிழ்மொழி ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட உலக மொழிகளின் தாயாக உருமாற்றமெய்தும் வாய்ப்புக்கள் அரும்புவது மொழியியலாளர்களை வியப்படையச் செய்தது. நடு ஆசியாவில் தோன்றி மெல்ல மெல்ல பிராகுயி மொழி பேசப்படுகின்ற பலுச்சிசுத்தான் வழியாகத் தமிழ்மொழி நகர்ந்து சிந்து சமவெளி வழியாக இந்தியாவை வந்தடைந்திருக்க வேண்டும் என்பது கால்டுவெல்லின் கருத்து.

காலுடுவெல்லின் இந்தத் தொடக்கநிலை ஆய்வுகள் உலகளாவிய நிலையில் தமிழ்மொழி குறித்த பல்வேறு ஆய்வுகளுக்குப் பல புதிய களங்களை அமைத்துத் தந்தன. திராவிடவியலின் துணையின்றி இந்தியவியல் இயங்க முடியாது என்ற நிலைப்பாடு இந்தியவியலாய்வாளர்களிடம் மெல்லமெல்ல வலுப்பெறத் தொடங்கியது. காலுடுவெல்லின் தமிழாய்வு குறித்த முயற்சிகளில் பல குறைபாடுகளும் முரண்பாடுகளும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. தொடக்கநிலைப் படைப்புகளில் இவை இயல்பானவையே. எனினும் இது வலிமைமிக்க காளையின் வேகத்தோடு இணைந்த முழுமையான ஒரு கன்னி முயற்சி என்பதில் ஐயமில்லை. உலக நாகரிகத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த ஓர் இனத்தை – அடக்கு முறையால் நலிந்துபோன ஓர் இனத்தை, நானிலம் தொழும் அமரர்களாக எண்ணப்படும் நிலைக்கு உயர்த்திய கால்டுவெல்லின் இரசவாத முயற்சி-அற்புதத்திலும் அற்புதமான ஒரு புதுமை என்பதில் ஐயமில்லை.

சப்பானிய மொழி எந்த மொழிக்குடும்பத்தைச் சார்ந்தது என்பதை நிலைநாட்ட முடியாமல் சப்பானியர்கள் பல ஐயத்தை எழுப்பிக் கொண்டிருந்த காலம் அது. உருசிய தீபகற்பப் பகுதியில் பிறந்த உரல் அல்டெயிக்கு மொழிக்குடும்பத்தைச் சார்ந்ததுதான் சப்பானிய மொழி என்பதைக் காலுடுவெல் உறுதிப்படுத்தினார். சப்பானிய மொழி தமிழோடு உறவுடையது என்று 1856-இல் காலுடுவெல் வரைந்த குறிப்பு காலப்போக்கில் சப்பானிய-தமிழ்மொழி ஆய்வு மிகப்பெரிய களமாகப் பரந்து விரிய வித்திட்டது.

ஏறத்தாழ 120 ஆண்டுகள் நீறுபூத்த நெருப்பாகக் கிடந்த காலுடுவெல்லின் இந்த சிந்தனைகள் 1974-ஆம் ஆண்டு சப்பானிய அறிஞர்களிடம் புத்துயிர் பெறத் தொடங்கியது. 1974-ஆம் ஆண்டு பேராசிரியர் சுசுமே சிபா என்பவர் திராவிட மொழிகளுக்கும் சப்பானிய மொழிக்குமிடையில் காணப்பெறும் உறவுகளை ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட்டார். 1988ஆம் ஆண்டு திராவிட மொழிகளும் சப்பானிய மொழியும் (Dravidian Language and Japanese) என்ற தலைப்பில் விரிவான நூலினை இவர் வெளியிட்டார். இவற்றைத் தொடர்ந்து அகிரா பூசிவாரா அவர்களின் தமிழ்-சப்பானிய உறவு தொடர்பான 14 ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்தன. இக்கட்டுரைகள் தமிழுக்கும் சப்பானிய மொழிக்கும் இடையேயுள்ள நெருக்கமான உறவுகளைப் பறைசாற்றின. இக் கட்டுரைகளால் ஈர்க்கப்பட்ட மினாருகோ என்னும் சப்பானியப் பேராசிரியர் அலுடெயிக்கு மொழிக் குடும்பத்திற்கும் சப்பானிய மொழிக்கும் இடையேயுள்ள உறவை ஆய்ந்ததோடு நில்லாமல் தமிழுக்கும் அலுடெயிக்கு மொழிகளுக்கும் இடையேயுள்ள உறவுகளையும் ஆராயத் தொடங்கினார்.

சப்பான் நாட்டு முதுபெரும் மொழியியல் பேரறிஞர் பேராசிரியர் சுசுமோ ஓணோ இத்துறையில் ஆழமான ஆய்வுகளை இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளைச் சார்ந்த தமிழ்ப்பேராசிரியர்களோடு இணைந்து மேற்கொண்டபோது மொழி என்னும் எல்லையைத் தாண்டி, இலக்கியம், சமயம், வாழ்வியல் சிந்தனைகள் போன்ற பல துறைகளைத் தழுவி, தமிழ்-சப்பானிய உறவு குறித்த ஆய்வுகள் மலர்ந்தன. சப்பானிய காதல் கவிதைகளின் பழந்தொகுப்பான மன்யோசு. சங்க அகப்பாடல்கள், தமிழர்களின் பொங்கல், சப்பானியர்களின் கோசகட்சு விழா ஆகியன தொடர்பான ஆய்வுகள் உலகையே வியப்பில் ஆழ்த்தின. தமிழிலிருந்து சப்பானிய மொழியானது வரலாற்றுக்கு முற்பட்ட காலமான நெல் பண்பாட்டுக் காலத்தில் (Age of Rice Culture)  தோன்றியிருக்கலாம் என்ற பேராசிரியர் சுசுமோ ஓணோவின் ஆராய்ச்சி முடிவு மொழியியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த அரிய ஆய்வுக்களத்திற்கு அடிக்கல் நாட்டியவர் காலுடுவெல் என்பது குறிப்பிடத்தக்கது.

1856-இல் கொரிய-தமிழ் உறவு பற்றியும் காலுடுவெல் குறிப்பிட்டு அரிய இத்துறைக்கு கால்கோள் இட்டார். கொரிய-இந்திய அல்லது கொரிய-தமிழ்ப்பண்பாட்டு உறவு குறித்த ஆய்வுகள் வரலாற்று நிலையிலும் மொழியியல் கண்ணோட்டத்திலும் வளர்ச்சியடைய காலுடுவெல்லின் பார்வை ஓரளவிற்கு உதவியது எனலாம். பழைய கொரிய நாட்டு ஆவணங்கள் இந்திய நாட்டிலிருந்து வந்த பேரரசி ஒருத்தியால் கொரியப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது என்ற அரிய வரலாற்றுச் செய்தியைத் தருகின்றன. இதன் விளைவாகப் பல்வேறு அறிஞர்கள் இந்த வரலாற்றைத் தேடும் ஆராய்ச்சி முயற்சியில் இறங்கத் தலைப்பட்டனர். அயோத்தியில் இருந்து இந்த அரசி வந்திருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் அயோத்தியில் அவருக்கு நினைவு மண்டபமும் இவர்களால் கட்டப்பட்டது. கொரிய-தமிழ்மொழி உறவு குறித்து ஆய்ந்த அறிஞர்கள் தென் தமிழகத்தின் நாகப்பட்டிணம் எனும் பகுதியிலிருந்து இந்த அரசி கொரிய நாட்டை நோக்கிப் பயணத்திருக்கலாம் என நம்புகின்றனர்.

மொழியடிப்படையில் கொரிய திராவிட உறவுகள் குறித்து விரிவாக ஆய்ந்து தம் ஆய்வினை 1905 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டுத் தூதுவராகக் கொரிய மன்னர்களிடம் பணியாற்றிய  எச்சு.பி.ஈபருட்டு என்பவர் வெளியிட்டுள்ளார். அவர் எழுதிய Comparative Grammar of the Korean Language and the Dravidian Language of India என்ற நூல் இத்துறையில் மிகவும் குறிப்பிடத்தக்கது. பல காலங்களுக்குப் பின் 1990-இல் திரு காம் கில் ஊர் (Kang KiL-Ur) என்பவர் எழுதிய திராவிடமும் கொரிய மொழியும் என்ற நூலும் இந்த வரிசையில் மிகவும் சுட்டத்தக்கது. தற்போது பேராசிரியர் சங் -நம் கிம் என்பவரும் அவரைச் சார்ந்த பலரும் காலுடுவெல் தொடங்கி வைத்த இத்துறையில் பல்வேறு கோணங்களில் விரிவாராய்ச்சி செய்து  வருகின்றனர்.

(தொடரும்)

Saturday, September 21, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 106 – திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 105 – சந்திரசேகர கவிராச பண்டிதர்- தொடர்ச்சி)

நானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் சில தம்பிரான்களும் கம்பராமாயணத்தை ஆராய்ந்து படித்து வந்தபோது இடையிடையே சந்தேகங்கள் எழுந்தன. அவற்றைத் தெளிந்துகொள்ள வழியில்லாமல் மயங்கினோம். அக்காலத்தில் திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை என்னும் வித்துவான் கம்பராமாயண பாடம் சொல்வதில் சிறந்தவரென்று நாங்கள் கேள்வியுற்றோம்.

அவர் கம்பராமாயணம் முழுவதையும் அச்சிட்டவர்; சுந்தர காண்டத்தைத் தாம் எழுதிய உரையுடன் வெளிப்படுத்தியவர்; ‘வித்வத்ஜன சேகரர்’ என்னும் பட்டமுடையவர்; திவ்விய பிரபந்த வியாக்கியானங்களிலும் வைஷ்ணவ சம்பிரதாய நூல்களிலும் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு. அவரை வருவித்தால் இராமயணத்தைக் கேட்டுப் பயன் பெறலாமென்பது எங்கள் கருத்து. அவர் அக்காலத்தில் பாபநாசத்துக்கு வடக்கேயுள்ள கபிஸ்தலமென்னும் ஊரில் இருந்தார். அங்குள்ள பெருஞ் செல்வராகிய ஸ்ரீமான் துரைசாமி மூப்பனார் என்பவருக்கு அவர் பல நூல்கள் பாடம் சொல்லிவிட்டு அப்போது கம்ப ராமாயணம் சொல்லி வந்தாரென்று தெரிந்தது.

கோவிந்தபிள்ளை கபிஸ்தலத்தில் இருப்பதையும் அவரிடம் கம்ப ராமாயணம் பாடம் கேட்கும் விருப்பம் எங்களுக்கு உள்ளதென்பதையும் நாங்கள் சமயம் அறிந்து சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தோம். அவர் கோவிந்தபிள்ளையின் திறமையைப்பற்றி முன்பே கேள்வியுற்றவர். அவர் மடத்திற்கு அதுவரையில் வராமையால் அவரது பழக்கம் தேசிகருக்கு இல்லை. மாணாக்கர்களது கல்வியபிவிருத்தியை எண்ணி எந்தக் காரியத்தையும் செய்ய முன்வரும் தேசிகர் உடனே மூப்பனாரிடம் தக்க மனிதரை அனுப்பிச் சில காலம் கோவிந்த பிள்ளையைத் திருவாவடுதுறையில் வந்து இருந்து மாணாக்கர்களுக்கு இராமாயண பாடம் சொல்லச் செய்யவேண்டும் என்று தெரிவிக்கச் செய்தார்.

மூப்பனார் உடனே கோவிந்த பிள்ளையிடம் திருவாவடுதுறை மடத்தின் பெருமையை எடுத்துச் சொல்லி அவரைத் தக்க சௌகரியங்கள் செய்வித்துத் திருவாவடுதுறைக்கு அனுப்பினார். அவருடன் தேரழுந்தூர் வாசியாகிய சிரீ வைணவ ஆசாரிய புருசர் ஒருவரும் வந்தார். சுப்பிரமணிய தேசிகர் அவர்களுக்குத் தக்க விடுதிகள் ஏற்படுத்தி உணவு முதலியவற்றிற்கு வேண்டிய பொருள்களும் அனுப்பி அவர்களுக்குக் குறைவின்றிக் கவனித்துக் கொள்ளும் படி ஒரு காரியத்தரையும் நியமித்தார். எல்லாம் ஒழுங்காக நடை பெறுகின்றனவா என்பதை விசாரித்துக் கொள்ளும்படி என்னிடமும் கட்டளையிட்டார். அந்த வித்துவானுடன் பழகிப் பல விசயங்களைத் தெரிந்துகொள்ளலாமென்ற உற்சாகம் எனக்கு இருந்தது.

திருவாவடுதுறைக்குக் கோவிந்த பிள்ளை வந்த மறுநாள் பிற்பகலில் அவர் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து, “இவ்விடத்திலுள்ள அமைப்புகளையும் மாணாக்கர் கூட்டத்தையும் கண்டு என் மனம் மிக்க திருப்தியை அடைகிறது” என்று சொன்னார். கம்ப ராமாயணத்தில் ஏதேனும் ஒரு பாகத்தைச் சொல்லிப் பொருள் சொல்ல வேண்டுமென்று தேசிகர் கூறவே அவர் சுந்தர காண்டத்தில் காட்சிப் படலத்தின் முதற் பாடலிலிருந்து சொல்லத் தொடங்கினார். அவர் அருகிலிருந்து செய்யுட்களை நான் படிக்கலானேன். அவர் மிக்க செவிடராதலால் அவரது காதிற்படும்படி படிப்பது எனக்குச் சிரமமாக இருந்தது. போதாக் குறைக்கு, “என் காதிற் படும்படி ஏன் படிக்கவில்லை?” என்று அடிக்கடி அவர் அதட்டுவார்.

நான் இராகத்துடன் படிப்பது அவருக்குத் திருப்தியாக இல்லை. “இசையைக் கொண்டுவந்து குழப்புகிறீரே. இதென்ன சங்கீதக் கச்சேரியா?” என்று சொல்லிவிட்டுத் திரிசிரபுரம் முதலிய இடங்களிற் சொல்லும் ஒருவிதமான ஓசையுடன் பாடலைச் சொல்லிக் காட்டி, “இப்படியல்லவா படிக்க வேண்டும்? உமக்குப் படிக்கத் தெரியவில்லையே!” என்று கூறினார். எனக்கு உள்ளுக்குள்ளே சிரிப்பு உண்டாயிற்று. “பிள்ளையவர்கள் ஒருவரே இசை விரோதி என்று எண்ணியிருந்தோம். இவர் கூட அந்த இனத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரே” என்று எண்ணினேன். அவர் சொன்ன இசையும் எனக்குத் தெரியும். பிள்ளையவர்களும் தியாகராச செட்டியாரும் அந்த ஓசையோடுதான் பாடல் சொல்வார்களாதலால் எனக்கும் அந்தப் பழக்கம் இருந்தது. ஆதலால் கோவிந்த பிள்ளை சொன்ன இசையிலே நான் பாடலைப் படித்துக் காட்டினேன். “இப்படியல்லவா படிக்க வேண்டும்!” என்று அவர் பாராட்டினார்.

தேசிகர், “ஏது, சாமிநாதையருக்கு இந்த இராகம்கூட வரும்போல் இருக்கிறதே!” என்று சொல்லி நகைத்தார்.

“இதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் நேர்வதில்லை; இப்போது நேர்ந்திருக்கிறது” என்று சொன்னேன். ‘இராகம்’ என்று அவர் பரிகாசத் தொனியோடு கூறினாரென்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

கோவிந்த பிள்ளையின் காதிலே படும்படி படித்துப் படித்து ஒரே நாளில் தொண்டை கட்டிவிட்டது. அவர் தொடர்ச்சியாகக் கம்ப ராமாயணத்திற்குப் பொருள் சொல்லி வந்தார். இடையிடையே அவர் திவ்யப்பிரபந்த வியாக்கியானங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டினார். மணிப்பிரவாள நடையிலுள்ள அவற்றைக் கேட்டுச் சுப்பிரமணிய தேசிகர் மிக்க சந்தோசத்தை அடைந்தார். அந்த வியாக்கியானங்களில் அவருக்கு விருப்பம் உண்டு. வைணவ நூல்களில் பயிற்சியுடையவர் யாரேனும் வந்தால் அவரிடம் அவ்வியாக்கியானங்களிலிருந்து சில பகுதிகளைச் சொல்லச் செய்து கேட்டு மகிழ்ந்து சம்மானம் வழங்குவார்.

ஒரு நாள் சுப்பிரமணிய தேசிகர் எங்களையெல்லாம் பரீட்சிக்கும் படி கோவிந்த பிள்ளையிடம் சொன்னார். அவர் அப்படியே இலக்கண இலக்கியங்களில் ஒவ்வொருவரையும் சில சில கேள்விகள் கேட்டார். என்னைப் பரீட்சிக்கையில் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் “ஓதக்கே ணெஞ்சே” என்னும் பாட்டைக் கூறிப் பொருள் சொல்லும்படி ஏவினார். நான் சொல்லி வரும்போது அதில் வரும் ‘அஞ்சை மாமணியைப் போற்று’ என்பதற்கு ‘அஞ்சை-பஞ்சா யுதத்தை, மாமணியை-திருமார்பில் அணிந்த சௌத்துபத்தை, போற்று-வழிபடு” என்று பொருள் சொன்னேன். உடனே அவர் கை மறித்து, “அதற்கு அர்த்தம் அப்படிச் சொல்லக் கூடாது. அஞ்சு ஐ மாமணியை என்று பிரித்து இருபத்தைந்து அட்சரங்களாலாகிய இருதலை மாணிக்கமென்னும் மந்திரத்தை என்று பொருள் சொல்ல வேண்டும்” என்றார். நாங்கள் கேட்டு வியந்தோம்.

“சம்பிரதாயம் தெரிந்தவர்களிடம் கேட்பதில் உள்ள பிரயோசனத்தைப் பார்த்தீர்களா?” என்று எங்களை நோக்கிச் சொல்லிவிட்டுத் தேசிகர் அவ் வித்துவானைப் பாராட்டினார்.

மறுநாட் காலையில் கோவிந்த பிள்ளை என்னைப் பார்த்து, “நான் சிறிது தூரம் வெளியே போய் வரவேண்டும். சகாயத்துக்கு யாரையாவது வரச்சொல்லும்” என்றார். அப்பொழுது என்னிடம் படித்துக் கொண்டிருந்த இராமகிருடடிண பிள்ளை என்பவரை அவருடன் அனுப்பினேன். அம்மாணாக்கர் திருமண் அணிபவர்; வைணவ சம்பிரதாயத்திலே பற்றுடையவர். பாடம் கேட்கும்போது விட்ணு தூசணையாக உள்ள பகுதிகள் வந்தால் மிகவும் கடினப்படுவார். “இப்படிதான் ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தினரைத் தூசிப் பார்கள். நாம் அதைக் கவனியாமல் இலக்கியச் சுவையைமட்டும் அனுபவிக்க வேண்டும்” என்று நான் சமாதானம் சொல்வேன்,

சைவ மயமாயிருந்த அங்கே வைணவ சம்பந்தமே இல்லாமையால் அவர், “யாரேனும் வைணவர் வரமாட்டாரா?” என்ற ஏக்கம் பிடித்தவராக இருந்தார். கோவிந்த பிள்ளை வந்தபோது மிக்க தாகமுடையவன் பானகத்தைக் கண்டது போன்ற ஆனந்தத்தை அடைந்தார். அந்த வித்துவான் எங்கே போனாலும் அவரோடு நிழல் போலச் செல்வார். அவர் எதைச் சொன்னாலும் பரம சந்தோசத்தோடு கேட்பார்.

அவர் கோவிந்த பிள்ளையைப் பயபக்தியோடு அழைத்துச் சென்றார். “ஒருவரும் வராத இடமாக இருக்கட்டும்” என்று கோவிந்த பிள்ளை சொல்லவே, “அப்படியே ஆகட்டும்” என்று வழிகாட்டிச் சென்றார். கோவிந்த பிள்ளை காலைக் கடன்களை முடித்துக் கொள்ள எண்ணினாரென்பது இராமகிருட்டிண பிள்ளையின் கருத்து. அவரோ, “இன்னும் எங்கே போகவேண்டும்?” என்று அடிக்கடி அவசரமாகக் கேட்டுக் கொண்டே நடந்தார்.

“இதோ வந்துவிட்டோம்” என் சொல்லியபடியே ஒரு கல் தூரத்துக்கு அப்பாலுள்ள இலட்சத்தோப்பென்னும் இடத்துக்கு அவரை அம்மாணாக்கர் அழைத்துச் சென்றார்.

அவ்வளவு தூரம் நடந்து வந்த சிரமத்தால் அம்முதியவருக்கு மிகுதியான கோபம் உண்டாயிற்று. “சுருட்டுக் குடிப்பதற்குத் தனியான இடம் வேண்டுமென்று கேட்டால் நீ சமீபத்தில் ஓர் இடத்தைக் காட்டாமல் இவ்வளவு தூரம் அழைத்து வந்தாயே” என்று சொல்லித் தம் கையில் இருந்த தடியினால் அவரை அடிக்க ஓங்கினார்.

இராமகிருட்டிண பிள்ளை, “அட பாவி! நீர் சுருட்டுக் குடிப்பது யாருக்கையா தெரியும்?” என்று முணுமுணுத்துக் கொண்டே ஓடி வந்து விட்டார். கோவிந்த பிள்ளை தம் காரியத்தை முடித்துவிட்டு மீண்டு வந்தார். அவர் கோபம் அப்போதும் ஆறவில்லை. “என்னுடன் இவ்வளவு முட்டாளையா அனுப்புவது? மிகவும் சிரமப்படுத்தி விட்டானே” என்று வந்தவுடன் என்னைக் கேட்டார். முன்பே வந்த இராமகிருட்டிண பிள்ளை மூலமாக விசயத்தை அறிந்து கொண்ட நான் ஒருவாறு அவருக்குச் சமாதானம் சொன்னேன். ஏறுவெயிலில் மரமில்லாத சாலை வழியே நடந்து வந்த சிரமத்தால் அவர் களைப்புற்றிருந்தார். அவர் கோபம் தணிந்ததாகத் தெரியவில்லை.

அன்று பிற்பகலில் தேசிகரைப் பார்க்க அவர் வந்து இருந்த போது தடியை எடுத்துக்கொண்டு நான்கு பக்கங்களையும் பார்த்தார். “என்ன பார்க்கிறீர்கள்?” என்று கேட்டேன். “அந்தப் பயல் இருக்கிறானா என்றுதான் பார்க்கிறேன்: சந்நிதானத்திடம் சொல்லி அவனைத் துரத்திவிடச் சொல்கிறேன்” என்றார். நான் குறிப்பாக அவரை மௌனமாக இருக்கச் செய்துவிட்டு இராமகிருட்டிண பிள்ளையிடம் போய், “இவர் கண்ணிலே படவேண்டா” என்று எச்சரிக்கை செய்தேன். பாவம்! அம்மாணாக்கர் நெடுங்காலமாகத் தம் மனத்தில் அடக்கி வைத்திருந்த குறைகளையும் எண்ணங்களையும் இந்த வைணவரிடம் சொல்லி ஆற்றிக் கொள்ளலாமென்று எவ்வளவோ ஆவலாக இருந்தார். அவர் விருப்பம் நிறைவேறாமல் விபரீதமாக முடிந்தது. தேசிகருக்கும் விசயம் பிறகு தெரிந்தது.

கோவிந்த பிள்ளை திருவாவடுதுறையில் சில நாட்கள் இருந்து கம்பராமாயணம் சொல்லி வந்தார். வைணவ சம்பிரதாய விசயங்களைச் சொல்லும்போது அவை புதியனவாக இருந்தன. மற்ற எங்களுக்கு அவரிடம் மதிப்பு உண்டாகவில்லை. சில சமயங்களில் தம்பிரான்கள் அவரிடம் வேறு நூல்களில் சந்தேகம் கேட்பவர்களைப் போலவே சில கேள்விகள் கேட்பார்கள். அவர் சொல்லத் தெரியாமல் மயங்குவார்; இல்லையெனின் வேறு எதையாவது சொல்வார். பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டோமென்ற கருவத்தால் இப்படி அம்முதியவரைச் சில சமயங்களில் தம்பிரான்கள் கலங்க வைத்தார்கள்.

முதிர்ந்தவராகிய அவர், இளமை முறுக்கினாலும் படிப்பு மிடுக்கினாலும் தம்பிரான்கள் கேட்ட கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் மயங்கி, “நீங்களெல்லாம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்டிருக்கிறீர்கள். அவர் திரிசிரபுரத்தில் இருந்தபோதே நன்றாகப் படித்திருந்தார் இங்கே வந்து சிவஞான சுவாமிகள் முதலியவர் இயற்றிய நூல்களைப் படித்து விருத்தியடைந்தார். உங்களுக்குப் பாடம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நீங்களே ஒரு தடவைக்கு இரண்டு தடவை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்” என்று சொல்வார்.

“பிள்ளையவர்கள் தங்களிடம் படித்தார்களென்று சொல்லுகிறார்களே. உண்மைதானா?” என்று நான் கேட்டேன்.

“இல்லை; அது பொய். அவர் என்னைக் காட்டிலும் பிராயத்தில் பெரியவர், படிப்பிலும் சிறந்தவர்” என்று அவர் கூறினார்.

வைணவராகிய அவருக்குச் சைவ சமூகத்தில் பழகுவது சிறிது சிரமமாகவே இருந்தது. அதனாலும் தம்பிரான்கள் கேள்வி கேட்டமையாலும் அவருக்கு அங்கே தங்கியிருக்க விருப்பமில்லை. ஊருக்குப் போகவேண்டுமென்று தேசிகருக்குச் சொல்லியனுப்பினார். அவரது குறிப்பறிந்து சுப்பிரமணிய தேசிகர் சால்வை மரியாதையும் தக்க பொருள் சம்மானமும் செய்து, “அடிக்கடி வந்து போகவேண்டும்” என்று சொல்லி விடைகொடுத்து அனுப்பினார். அவர் மீண்டும் கபித்தலம் போய்ச் சேர்ந்தார்.

(தொடரும்)

Friday, September 20, 2024

காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் 2/4 – முனைவர் சான் சாமுவேல்

 




(காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¼ –தொடர்ச்சி)

1856-இல் தென்னிந்தியாவில் பேசப்படும் ஒன்பது மொழிகளைத் திராவிட மொழிக்குடும்பமாக இனங்கண்ட காலுடுவெல் தமது இரண்டாவது பதிப்பில், அஃதாவது 1875-இல், மேலும் மூன்று மொழிகளையும் இணைத்து 12 மொழிகளைத் திராவிட மொழிகளாக இனங்கண்டு காட்டினார். இன்று திராவிட மொழிகளின் எண்ணிக்கை         35-ஐத் தொட்டுள்ளது. வட இந்தியாவில் பேசப்படும் பிராகுயி போன்ற சில மொழிகள் திராவிட மொழிகளின் பட்டியலில் இணையவே தென்னிந்திய மொழிகளாகத் திராவிட மொழிகளை நோக்கிய பழைய குறுகிய பார்வை பரந்து விரிந்து இந்திய நாட்டின் இரண்டாவது மொழிக் குடும்பமாக, இந்திய நாட்டின் 30 விழுக்காட்டு மக்கள் பேசும் மொழிகளாகத் திராவிட மொழிக்குடும்பத்தின் பரப்பு மேலும் பரந்து விரிவடைந்துள்ளது. இந்திய மொழிகள் குறித்த பழைய ஆய்வுக் கண்ணோட்டத்தில் காலுடுவெல்லின் ஒப்பிலக்கண நூல் வியத்தகு திருப்பு முனைகள் பலவற்றை ஏற்படுத்தி மாபெரும் கருத்துப் புரட்சியினைத் தோற்றுவித்துள்ளது.

தமிழகம் வந்த ஏனைய அருட்தொண்டர்களுக்கு இல்லாத தனிப் பெரும் சிறப்பாகக் காலுடுவெல்லுக்கு அவரது ஆழமான மொழியியற் புலமை அமைந்தது. கிளாசுக்கோ  பல்கலைக்கழகத்தில் அவர் பயின்ற மொழியியல் (philology) கல்வி காலுடுவெல்லின் இந்த உலகளாவிய இச்சாதனைக்கு அடித்தளமாக அமைந்தது.  

தமிழைத் திராவிட மொழிக் குடும்பத்தின் தலைமை மொழியாகக் கொண்டு ஆய்ந்த காலுடுவெல்லின் அணுகுமுறை தமிழ் மொழியாய்வில் ஒப்பியன் அணுகுமுறையினை இணைத்து ஒரு புதிய படிநிலையைத் தோற்றுவித்தது. அடுத்த நிலையில், இந்திய நாட்டின் பிற மொழிகளோடு தமிழையும், ஏனைய திராவிட மொழிகளையும் காலுடுவெல் ஒப்புநோக்கி ஆராய்ந்துள்ளார். இது காலுடுவெல்லின் ஒப்பிலக்கண நூல் வட்டார எல்லையைத் தாண்டி தேசிய நிலையில் ஏற்படுத்திய இரண்டாவது வளர்ச்சிநிலையாகும். இவ்விரு படிநிலைகளும் தமிழ் தழுவிய ஆய்வுகள் தென்னிந்திய அளவில் வட்டார நிலையிலும், இந்திய மொழிகள் என்ற அளவில் தேசிய நிலையிலும் செழித்து வளர உதவின. இப்படிநிலைகள் 19-ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டிலும் நடந்தேறிய தமிழ்மொழி குறித்த அனைத்து ஆய்வுகளிலும் பளிச்சிட்டுத் துலங்கின.

காலுடுவெல்லின் ஒப்பிலக்கண நூலின் மூன்றாவது படிநிலையாக அமைவது அவரது உலகுதழுவிய ஒப்பியல் நோக்கு மலிந்த ஆய்வாகும். இங்கு பொதுவாகத் திராவிட மொழிகளுக்கும், சிறப்பாகத் தமிழுக்கும் பிற உலக மொழிகளுக்கும் இடையேயுள்ள உறவுகள் போதிய தரவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன. 21-ஆம் நூற்றாண்டிலும் அடுத்து வருகின்ற பல நூற்றாண்டுகளிலும் மேற்கொள்ளப்படவிருக்கின்ற உலகளாவிய தமிழாய்வுக்கு இங்கு வலுவான கால்கோள் செய்யப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது.

காலுடுவெல் தோற்றுவித்த இந்த மூன்றாவது படிநிலை அவரால் ஏற்கெனவே கட்டியெழுப்பப்பட்ட ஆராய்ச்சி மாளிகையின் இருபெரும் உப்பரிகைகளை வலுவாகத் தூக்கி நிறுத்தும் அடித்தளமாக அமைந்தது. தமது ஆராய்ச்சிக் கோட்டையின் அடித்தளத்தை யாராலும் எக்காலத்திலும் தகர்க்க முடியாத வலுவினையும் உறுதியினையும் இது காலுடுவெல்லின் படைப்புக்கு நல்கியது.

காலுடுவெல் வாழ்ந்த 19-ஆம் நூற்றாண்டில் மொழியியல் சிந்தனைகள் அறிவியல் கண்ணோட்டத்தில் முழு வளர்ச்சியினைப் பெற்றுவிட்டதாகக் கூறமுடியவில்லை. ஒலியனியல், உருபனியல், தொடரியல் பற்றிய குறிப்பிடத்தகுந்த அடிப்படைப் பார்வைகளே தொடக்க நிலையில் பிறந்திருந்தன. உலக மொழிகள் பற்றிய பரந்த கண்ணோட்டமும் ஒப்பியல் நோக்கும் முழு அளவில் இக்காலக் கட்டத்தில் அரும்பவில்லை. ஒப்பியன் மொழி நூல் தொடக்க நிலையில் தளிர் நடை மட்டுமே பயிலத் தொடங்கியிருந்தது. குமுகவியல் மொழியியல் போன்றனவும், மாற்றிலக்கண நெறிமுறைகளும் அக்காலக்கட்டத்தில் பிறக்கவே இல்லை. வலுவில்லாத இத்தகைய பின்னணியில் தாம் பல்கலைக்கழகத்தில் பயின்ற அடிப்படை மொழிநூல் அறிவினையும், தமக்கிருந்த மொழிநூல் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும், தாம் தேடிக்கற்ற நூல்கள் அள்ளி வழங்கிய சிந்தனைகளையும் வழிகாட்டிகளாகக் கொண்டு ஆழ்ந்த இறை ஒப்படைப்புடன் ஒப்பியன் மொழித்துறையில் பீடுநடை பயின்றவர் காலுடுவெல் என்பது குறிப்பிடத்தக்கது

நடு ஆசிய மொழிகள், தென்கிழக்கு ஆசிய மொழிகள், தெற்காசிய மொழிகள், கிழக்காசிய மொழிகள், ஐரோப்பிய மொழிகள், குறிப்பாகச் சித்திய மொழிக் குடும்ப மொழிகள், எபிரெயம், அரபி, அரமைக்(கு) ஆகியவற்றை உள்ளடக்கிய செமிட்டிக்(கு) மொழிகள், கிரேக்க, இலத்தீன் மொழிகள், சுமேரிய மொழிகள், எலாமைட்டு மொழி, உரல் அல்டெயிக்கு குடும்பம் சார்ந்த சப்பானிய, கொரிய, அங்கோரிய மொழிகள், மங்கோலிய இன மொழிகள் ஆகியன குறித்த செய்திகள் திராவிட மொழிகள் குறித்த தமது கோட்பாட்டினை உலகந்தழுவிய நிலையில் நிலைநிறுத்த காலுடுவெல்லுக்கு துணைபுரிந்தன. உலகமொழிகளின் பின்னணியில் தமிழ் இலக்கணக் கோட்பாடுகள் அரிய தரவுகளின் அடிப்படையில் தமிழ்மொழி வரலாற்றில் நிறுவப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்பது சுட்டத்தக்கது.

ஆதியில் மக்கள் ஒரே மொழியைப் பேசினர் என்றும் அந்த ஒரே மொழி பல மொழிகளாகக் கடவுளால் சிதைக்கப்பட்டது என்றும் கிறித்தவத் திருமறை தரும் மொழிகளின் தோற்றம் குறித்த இறையியல் சிந்தனையும் காலுடுவெல்லின் அடிமனத்திலிருந்து அவரை இயக்கிக் கொண்டிருந்தது என்பதில் எந்த ஐயமுமில்லை. எனினும், கடவுள் படைத்த அந்த ஆதிமொழி தமிழ்தான் என்று காலுடுவெல் வாதிடவில்லை. கடவுள் படைத்த அந்த மொழி தமிழே என்று நெஞ்சத் துணிவோடு எடுத்துரைத்த கிறித்தவ மொழியியலாளர் பாவாணரின் கருத்தியலுக்கு காலுடுவெல் அடித்தளமிட்டவர் என்பதை மறந்துவிடக் கூடாது.   

பெரிதும் ஆய்வரங்குகளுக்கு வராத ஈரானைச் சார்ந்த நடு ஆசியச் சார்புடைய சித்திய மொழிகளை காலுடுவெல் வாய்ப்புக் கிடைக்குமிடமெல்லாம் தமிழோடு ஒப்பிட்டு ஆய்வது வியப்புக்குரியது. சித்திய மொழிகள் திராவிட மொழிகளோடு இன ஒப்புமையால் பின்னிப் பிணைந்துள்ள பாங்கினை அவர் விரிவாக எழுதிச் செல்கின்றார்.   

ஃபின்னிசு, தர்கி, மங்கோலியன், துங்குசியன் ஆகிய மொழிக் குடும்பங்களை உள்ளடக்கிய ஒரு மாபெரும் மொழிக்குடும்பமாகச் சித்திய மொழிக்குடும்பம் சுட்டப்பட்டுள்ளது. உக்கிரைன் போன்ற மொழிகளையும் சித்திய மொழிக்குழுவில் இணைத்துப் பேசும் மரபு உள்ளது.  

செமிட்டிக்கு மொழிகளைவிடவும் பழமைவாய்ந்த சித்திய மொழிகளோடு உறவு கொண்ட திராவிட மொழிகள் பலுச்சிசுதான் வழியாகச் சிந்து சமவெளிப்பகுதிக்கு வருவதற்குமுன் செமிட்டிக்கு மொழி பேசும் மக்களுடனும் உறவு கொண்டிருந்தன என்பது காலுடுவெல்லின் கருத்து. எனவே திராவிட மொழிக்குடும்பத்தில் சித்திய மொழிகளின் தாக்கமும், செமிட்டிக்கு மொழிகளின் ஆதிக்கமும், இந்தோ ஆரிய மொழிகளின் பாதிப்பும் ஒருங்கே காணக்கிடப்பதாகக் காலுடுவெல் நம்பினார். அதோடு, நடு ஆப்பிரிக்க மொழிகளோடும் திராவிட மொழிகள் உறவு கொண்டுள்ளன என்பது காலுடுவெல்லின் கருத்து. நடு ஆப்பிரிக்கப் பகுதியைச் சார்ந்த கனுரி (Kanuri) எனும் ஆப்பிரிக்க மொழி திராவிட மொழிகளைப் போன்று ஒட்டுநிலை மொழியாக அமைவதையும் காலுடுவெல் குறிப்பிட்டுச் செல்கின்றார்.  

(தொடரும்)

Saturday, September 14, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 105 – சந்திரசேகர கவிராச பண்டிதர்

 



(உ.வே.சா.வின் என் சரித்திரம் 104 – மடத்திற்கு வருவோர்-தொடர்ச்சி)

சுப்பிரமணிய தேசிகரது அன்பு வர வர விருத்தியானதை நான் பல வகையிலும் உணர்ந்தேன். கும்பகோணம் முதலிய இடங்களிலுள்ள கனவான்களை ஏதேனும் முக்கியமான விஷயமாகப் பார்த்துப் பேசி வர வேண்டுமானால் தேசிகர் என்னை அனுப்புவார்.

அக்காலத்திற் கும்பகோணத்துக்கு இருப்புப்பாதை ஏற்படாமையால் திருவாவடுதுறையிலிருந்து நான் பெரும்பாலும் கும்பகோணத்துக்கு அடிக்கடி நடந்தே செல்வேன். கிட்டத்தட்ட 12 கல் தூரம் இருக்கும். அங்கே பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துப் பேசவேண்டியவற்றைப் பேசி விசயங்களை அறிந்து வருவேன். இரவு கும்பகோணத்தில் தங்கும்படி நேரிட்டால் எனக்கு ஆகாரம் கிடைப்பது கடினமாகி விடும், தெரிந்தவர் யாரும் இல்லாமையால் எந்த வீட்டுக்கும் போவதில்லை. சாப்பாட்டு விடுதியில் போய்ச் சாப்பிடக் கையில் பணம் இராது. இந்நிலையில் எங்கேனும் தருமத்துக்குச் சாப்பாடு கிடைக்குமாவென்று விசாரிப்பேன்.

கும்பகோணம் மகாமகதீர்த்தத்தின் கீழ்பாலுள்ள அபிமுகேசுவர ஸ்வாமி கோவிலில் தேசாந்தரிகளுக்கு உணவு அளிப்பதற்கு ஒரு தருமசாலை இருந்தது. அங்கே சென்று என் பசியைத் தீர்த்துக் கொண்டு தரும சாலையை ஏற்படுத்திய மகா புருசனை மனமார வாழ்த்துவேன். சில சமயங்களில் நான் யாரைப் பார்க்கப் போவேனோ அவர் என்னோடு நெடுநேரம் பேசியிருந்துவிட்டால் தரும சாலையில் அகாலமாய்விடும். ஆகாரம் கிடைக்காது.

நான் போகும் இடங்களில் அங்கேயுள்ளவர்கள் எனக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுப்பார்களென்று சுப்பிரமணிய தேசிகர் எண்ணியிருப்பார். நான் மடத்தில் வேண்டிய பொருள்களை எளிதிற் பெற்றுக் கொள்பவனாதலால் இத்தைய சந்தர்ப்பங்களில் எனக்கு வேண்டிய சௌகரியங்களை நானே செய்து கொள்வேனென்று நினைத்திருக்கலாம். அக்கனவான்களோ, மடத்திலிருந்து வரும் எனக்கு மடத்தாராலேயே எல்லாவித சௌகரியங்களும் அமைந்திருக்குமென்று நினைப்பார்கள். இவ்விருசாராரும் இவ்வாறு நினைப்பதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் ஒன்றையும் வெளிக்காட்டாமல் நான் துன்பத்துக்கு உள்ளானேன். உண்மை தெரிந்தால் இருசாராரும் மிகவும் வருத்தமுறுவார். “அவர்களே தெரிந்து கவனித்தாலன்றி நாம் தெரிவிப்பது சரியன்று” என்று எண்ணி வந்த காரியத்தைக் கவனிப்பதையே கடமையாக நான் கொண்டிருந்தேன்.

கும்பகோணம் கல்லூரியில் இருந்த தியாகராச செட்டியார் 1-8-1876 முதல் ஆறு மாதங்கள் இரசா எடுத்துக் கொண்டார். அவருடைய தானத்தில் சித்தூர் உய்நிலைப்பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த தில்லையம்பூர் சந்திரசேகர கவிராச பண்டிதரென்பவரை நியமித்தார்கள். அவர் சென்னையில் மிக்க புகழ் பெற்ற வித்துவானாக விளங்கிய சிரீ விசாகப் பெருமாளையரிடம் பாடம் கேட்டவர்; அவர் எழுதிய பஞ்ச இலட்சண வினாவிடை, பால போதவிலக்கணம் என்பவற்றையும், நன்னூல் விருத்தியுரை, யாப்பருங்கலக் காரிகையுரை, தண்டி யலங்கார வுரை, வச்சணந்தி மாலை முதலிய நூல்களையும் அச்சிட்டவர்; தமிழ் நாட்டில் அங்கங்கே வழங்கும் தனிப் பாடல்களையெல்லாம் திரட்டித் தனிப் பாடற்றிரட்டு என்ற பெயரோடு முதல் முதல் வெளியிட்டவர் அவரே.

சென்னையில் பலகாலமிருந்து தாண்டவராய முதலியார் முதலிய வித்துவான்களோடு பழகிய அவரைப் பார்த்துப் பேச வேண்டுமென்ற விருப்பம் சுப்பிரமணிய தேசிகருக்கு இருந்தது. அவர் வேலையிலமர்ந்து ஒரு மாத காலமாயிற்று. சுப்பிரமணிய தேசிகருடைய புலமையையும் சிறந்த குணங்களையும் அவரும் கேள்வியுற்றவராதலின் அப் பெரியாரைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆவலோடிருந்தார். ஆனாலும், “பெரிய இடமாயிற்றே; நாம் போனால் அவர்களைச் சுலபமாகப் பார்க்க முடியுமோ முடியாதோ! அவர்கள் விசயமாக ஏதேனும் ஒரு பிரபந்தம் இயற்றிக் கொண்டு போய்ப் பார்க்கலாம்” என்று எண்ணிச் சுப்பிரமணிய தேசிகர் விசயமாக ஒரு நான்மணிமாலையை இயற்றினார்.

சுப்பிரமணிய தேசிகருக்குப் பண்டிதரைப் பார்த்துப் பேச வேண்டுமென்ற ஆவல் அதிகமாயிற்று. ஆதீன வித்துவானும் தேசிகருக்குத் தமிழ்ப் பாடம் சொன்னவருமான தாண்டவராயத் தம்பிரானென்னும் புலவர் சிகாமணி சென்னையில் சில காலம் இருந்தவர். அங்குள்ள வித்துவான்களோடு பழகினவர். சுப்பிரமணிய தேசிகர் அத்தம்பிரான் மூலமாகச் சென்னைப் புலவர்களுடைய பெருமையை அறிந்திருந்தார். சந்திரசேகர கவிராச பண்டிதர் மூலமாகப் பின்னும் விரிவாகத் தெரிந்து கொள்ள அப்போது எண்ணினார்.

ஒரு நாள் தேசிகர் என்னை அழைத்து, “இன்று கும்பகோணம் வரையில் போய் வர வேண்டும்” என்று சொன்னார்.

வழக்கப்படி மடத்துக் காரியமாக யாரிடமேனும் அனுப்புவார் என்று எண்ணினேன். “சந்திரசேகர கவிராச பண்டிதரிடம் நாம் பார்த்துப் பேச விரும்புகிறோமென்று தெரிவித்து அவரை அழைத்து வர வேண்டும்” என்று அவர் சொன்னபோது ஒரு வித்துவானுடைய பழக்கத்தைத் தாமே வலிந்து செய்து கொள்வதை அவர் ஒரு குறையாக எண்ணவில்லையே யென்பதை உணர்ந்து நான் விம்மிதம் அடைந்தேன்.

சந்திரசேகர கவிராச பண்டிதரைப் பார்த்துப் பழக வேண்டுமென்ற விருப்பம் எனக்கும் மற்ற மாணாக்கர்களுக்கும் இருந்தது. என் இளமையில் தமிழில் சுவை உண்டாக்கிய தனிப்பாடற்றிரட்டு அவராற் பதிப்பிக்கப் பெற்றதென்ற நினைவு அவரிடம் எனக்கு அதிக மதிப்பை உண்டாக்கியது. நான் உடனே கும்பகோணத்தை நோக்கிப் புறப்பட்டேன்.

கும்பகோணத்தில் அவரைக் கண்டு விசயத்தைத் தெரிவித்த போது அவர், “நான் பெரிய அபசாரம் செய்துவிட்டேன். சந்நிதானத்தின் பெருமையை நான் நன்றாக கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த ஊருக்கு நான் வந்தவுடனே அங்கே வந்து சந்நிதானத்தைத் தரிசித்திருக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. ஒரு பிரபந்தமும் இயற்றியிருக்கிறேன்” என்று சொன்னார். திருவாவடுதுறை மடத்தைப் பற்றியும் சுப்பிரமணிய தேசிகரைப் பற்றியும் பிள்ளையவர்களைப் பற்றியும் விசாரித்தார். நான் சொல்லச் சொல்ல அவர் கேட்டு மிக்க மகிழ்ச்சியை அடைந்தார். அப்பால், “இன்று கல்லூரிக்குப் போக வேண்டியிருக்கிறது. இந்தச் சனிக்கிழமை காலையில் அங்கே வந்து சந்நிதானத்தை அவசியம் தரிசிக்கிறேன். அப்படியே சொல்ல வேண்டும்” என்றார்.

திரும்பி நான் திருவாவடுதுறைக்குப் பிற்பகல் மூன்று மணிக்கு வந்து தேசிகரிடம் நடந்த விசயத்தைத் தெரிவித்தேன். தாம் சொன்னபடியே சந்திரசேகர கவிராச பண்டிதர் சனிக்கிழமை காலையில் தம் குமாரராகிய சிவகுருநாத பிள்ளை என்பவரை அழைத்துக் கொண்டு திருவாவடுதுறைக்கு வந்தார். தேசிகர் அவரோடு மிக்க சந்தோசமாகச் சம்பாசணை செய்தார். விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளையர். மகாலிங்கையர், தாண்டவராய முதலியார், இராமானுச கவிராயர் முதலிய வித்துவான்களைப் பற்றி விசாரித்தார். அவர்களுடைய குணவிசேடங்களையும், அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவையுள்ள வரலாறுகளையும் பண்டிதர் எடுத்துச் சொன்னார்.

தாம் தேசிகர் மீது இயற்றி அச்சிட்டுக் கொணர்ந்த நான்மணி மாலையை அன்று பிற்பகலில் பண்டிதர் மடத்திற் படித்துப் பிரசங்கம் செய்தார். அப்போது தம்பிரான்களும், வேறு மாணாக்கர்களும், மதுரை இராமசாமி பிள்ளையும், சில வித்துவான்களும் இருந்தார்கள். அப்பிரபந்தத்தில் செய்யுள்தோறும் சுப்பிரமணிய தேசிகருடைய பெயர் வரவில்லை. அது முறையன்றென்று தம்பிரான்கள் ஆட்சேபம் செய்தார்கள். அப்போது அங்கே வந்திருந்த கும்பகோணம் நகர் உணர்நிலைப்பள்ளி சம்சுகிருதப் பண்டிதர் சடகோபாசாரியரென்பவர் அவரை நோக்கி, “என்ன, பதில் சொல்லாமலிருக்கிறீர்களே? இந்த நூலை எடுத்துக் கொண்டு போய் மற்றோர் ஆதீனத்தில் இதே பாட்டைப் படித்துக் காட்டலாமே. இந்த ஆதீனகர்த்தரைப் பற்றியதுதானென்பதற்கு ஒவ்வொரு பாட்டிலும் அடையாளம் இருக்க வேண்டாமோ?” என்று கேட்டார். அப்படி அவர் வெட்டெனப் பேசியதைக் கேட்டபோது எனக்கே மிக்க வருத்தமுண்டாயிற்று. கவிராச பண்டிதரோ பொறுமையோடு பேசாமலிருந்து விட்டார். அந்தத் தடைக்கு விடை சொல்லும் ஆற்றல் அவருக்கு இருந்தாலும் அனாவசியமாக விவாதத்தைக் கிளப்ப அவர் விரும்பவில்லை.

நான்மணிமாலை முற்றும் பிரசங்கம் செய்து நிறைவேறியது. மறுநாள் பண்டிதர் தேசிகர் மீது பல புதிய பாடல்களை இயற்றிச் சொல்லிக் காட்டினார். அவரைப் பாராட்டி அப்போது பின்வரும் பாடலை நான் சொன்னேன்:-

வற்றா வருட்சுப் பிரமணி யப்பெயர் வள்ளல் மலர்ப்

பொற்றாட் புகழைப்பல் பாமாலையாகப் புனைந்தழகாச்

சொற்றா னியற்சந் திரசே கரபண்டித சுகுணன்

சற்றாய் பவர்களும் முற்றா மகிழ்வு தலைக்கொளவே.

சுப்பரிமணிய தேசிகர் தம் சந்தோசத்தைக் குறிப்பாகப் புலப்படுத்தினர். பண்டிதர் மகிழ்ந்து என்னைப் பாராட்டி,

நேமிநா தன்வழுத்தும் நித்தன் கைலையுறை

வாமிநா தன்புகழை வாழ்த்து மென்மேல்-தோமினற்சீர்

சாமிநா தக்கவிஞன் சாற்றும் பனுவலைப் போல்

பாமினா ளும்பகர் வளோ

என்ற செய்யுளைச் சொன்னார்.

[நேமிநாதன் – திருமால். வாமிநாதன் – சிவபெருமான்; வாமி – உமை. பாமினாள் – கலைமகள்.]

தம்பிரான்களும் சடகோபாசாரியரும் கேட்ட கேள்விகளால் மன அமைதியை இழந்திருந்த பண்டிதர் என்னுடைய பாட்டினால் மிக்க மகிழ்ச்சியுற்றார். அதன் விளைவாக எழுந்ததே இச்செய்யுள்.

மடத்திலிருந்து எல்லோரும் வெளியே வந்தவுடன் அவர்கள் பண்டிதரைப் பற்றி என்னிடம் குறைகூறத் தொடங்கினார்கள். “என்னையா பண்டிதர் அவர்? தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு. அவரிடத்தில் சந்நிதானத்துக்கும் உங்களுக்கும் அவ்வளவு மோகம் ஏற்பட்டது ஏன்? அவர் பாட்டு ஒன்றாவது இரசமாயில்லையே. அவர் சொன்ன பாட்டு உங்களைப் பாராட்டுவதற்காக உத்தேசித்ததன்று. நீங்கள் பாடியது போல விரைவில் பாடத் தமக்கும் முடியு மென்பதைச் சந்நிதானத்துக்குத் தெரிவிக்க வேண்டுமென்பதுதான் அவர் நோக்கம். பாடினாரே அந்தப் பாட்டுத்தான் எவ்வளவு இலட்சணம்! ‘வாமிநாதன் புகழை வாழ்த்து மென்மேல்’ என்று தம்மைத் தாமே புகழ்ந்து கொள்கிறாரே. கடைசியடியில் சரியான படி மோனையையே காணோமே.”

நான் அவர்களைக் கையமர்த்தி, “வித்துவான்களை இப்படி அவமதிப்பது பிழை. அவர் இந்த ஆதீனத்தைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார்? உங்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமலா அவர் பேசாமலிருந்தார். சில பழைய நூல்களில் இத்தகைய அமைப்பு உண்டு. அவர் பெருமை உங்களுக்குத் தெரியாது. பெரிய வித்துவானிடம் பாடங் கேட்டவர்” என்று சமாதானம் சொன்னேன்.

பண்டிதர் சில நாள் திருவாவடுதுறையிலேயே தங்கினார். அப்போது நான் அவருடனிருந்து பல அரிய விசயங்களைத் தெரிந்து கொண்டேன். சுப்பிரமணிய தேசிகரிடம் அவர் சாத்திர விசயமான சந்தேகங்களைத் தெரிந்து கொண்டார். தனிப் பாடற்றிரட்டை இரண்டாமுறை பதிப்பிக்க உத்தேசித்திருப்ப தாகவும் எனக்குத் தெரிந்த தனிப் பாடல்களையும் திரட்டி அனுப்பினால் சேர்த்துக் கொள்வதாகவும் சொன்னார். தேசிகர் அவருக்குத் தக்க மரியாதை செய்து விடை கொடுத்தனுப்பினார்.

கும்பகோணத்தில் இருந்த காலத்தில் கவிராச பண்டிதர் சில முறை திருவாவடுதுறைக்கு வந்துபோனதுண்டு. பிற்காலத்தில் எனக்கும் அவருக்கும் அடிக்கடி கடிதப்போக்கு வரவு நடை பெற்றது. அவர் விரும்பியபடியே தனிப்பாடற்றிரட்டு இரண்டாம் பதிப்பில் உபயோகித்துக் கொள்ளும்படி நான் பல பாடல்களை எழுதியனுப்பினேன். அவற்றுள் என் பாடல்களும் சில உண்டு. அவர் எல்லாவற்றையும் சேர்த்துப் பதிப்பித்தார். அவர் என் பாடல்களை, “திருவாவடுதுறைச் சாமிநாத கவிராயர் பாடியவை” என்று தலையிட்டு அச்சிட்டிருந்தார். பார்த்த சுப்பிரமணிய தேசிகர் “சம்பிரதாயம் தெரியாமல் இப்படிப் போட்டிருக்கிறாரே!” என்று புன்முறுவல் பூத்தார்: நாங்களும் சிரித்தோம்: “கவிராயர் வாள்” என்று நண்பர் சிலர் என்னை அழைத்து நகைக்கலாயினர்.

(தொடரும்)