(சொல்லின்செல்வர் சேதுப்பிள்ளை 3/5 தொடர்ச்சி)

9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 4/5


ஆய்வு நூல்கள்

நெல்லையில் வழக்கறிஞராக இருந்தபோதே இவரது ஆய்வுப்பணி முகிழ்ந்துவிட்டது. முதன்முதலில் 1926ஆம் ஆண்டில் திருக்குறளை ஆராய்ந்து ‘திருவள்ளுவர் நூல் நயம்’ என்ற நூலை வெளியிட்டார். இந்நூலின் மேன்மையினையும், ஆசிரியரின் ஆய்வுத் திறனின் மாண்பினையும் திரு. கா. சு. பிள்ளை அவர்கள்,

உலகமெலாம் உய்வான் பொதுமறை வகுத்த ஆசிரியர் திருவள்ளுவனாரது அளப்பரிய மாண் பினைப் பாவலரும் நாவலரும் கற்றோரும் மற்றோரும் இந்நாள்வரை பொதுவகையாற் பலபடப் பாராட்டிச் சீராட்டிப் போந்தனர். ஆசிரியரது நூலின் பிண்டப் பொருளை நுணுகி ஆய்ந்து, அதன் சொற்பொருள் நயங்களை யாவருக்கும் எளிதில் விளங்கும் வண்ணம் தெள்ளென வகுத்தோதி ஊக்கமூட்டும் செவ்விய உரைநடை நூல் ஒன்று இல்லாத குறையை நிறைவுசெய்த பெரும் புலவர் இத் ‘திருவள்ளுவர் நூல் நயம்’ எழுதிய திருவாளர் சேதுப்பிள்ளையேயாவர்.

திருக்குறட் பெருநூலை நன்கு கற்றாராய்ந்து உணர விரும்பும் மாணவர் யாவருக்கும் அந்நூற் சொற்பொருள் வளப் பண்டகசாலைக்கு நயமிக்க தோர் திறவுகோலாக இவ்வுரைநடைச் செந்தமிழ்ச் சீரிய நூலை இயற்றிய தமிழ்வாணர்க்குத் தமிழுலகு என்றும் கடப்பாடுடையது”

என்று அந்நூலுக்குத் தாம் வழங்கிய முன்னுரையில் போற்றியுரைக்கின்றார்.

இதே ஆண்டில் வெளிவந்தது ‘சிலப்பதிகார நூல் நயம்’ என்ற மற்றொரு நூல். ஆசிரியர் பெருமை, அரச நீதியும் அரசியலும், ஆரிய அரசரும் தமிழரும், கண்ணகியின் கற்பின் திறம். வினைப்பயன், பண்டைத் தமிழ் மக்கள் நாகரிகம், சிலப்பதிகார நூல்நயம் என்னும் ஏழு தலைப்புகளில் இந்நூல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து 1932ஆம் ஆண்டில் வெளிவந்த ‘வீரமாநகர்’ என்னும் நூல் கம்பராமாயணம் பற்றிச் செய்த அரியதோர் அருமையான ஆய்வு நூல், இந்நூலின் இனிமையை நூலுக்கு முன்னுரை வரைந்த வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் அவர்கள்,

பலர்க்கும் தெரிந்த பழங்கதைகளை, ஆசிரியர் தம் புலமைத் திறமையால் புதுமையானவையாக்கிப் படிப்பவர் மனத்தை மகிழ்விக்கிறார். கதைப் போக்கில் வரும் தக்க இடங்களில் தக்க அறிவுரைகள் இலக்கியச் சுவையோடு இனிது கலந்தூட்டி இன்பமும் பயனும் எய்தச் செய்தல் இந்நூலிற் பல இடங்களில் காணலாம். இதில் ஒவ்வொரு பக்கமும் இனிமையா யிருப்பதை வாசிப்போர் சில பக்கங்கள் வாசித்த அளவில் தெரிந்துகொள்வர் என்பது திண்ணம். இந்நூலின் இனிமை நுனியிலிருந்து நுகரப்படும் கரும்பின் இனிமை போன்றிருக்கின்றது.”

என்று எடுத்துரைக்கின்றார்.

அடுத்து 1945இல் வெளிவந்த ‘தமிழ் விருந்து’ தமிழர்தம் கலைத்திறன், தமிழரின் வாழ்க்கை மேன்மை, தமிழ் மொழி யின் செம்மை, தமிழ் இலக்கியத்தின் சீர்மை ஆகியவற்றை எடுத்தியம்புகிறது.

அடுத்த ஆண்டில் 1946இல் வெளிவந்த ‘தமிழகம் ஊரும் பேரும்’ என்ற நூல், இவர்தம் ஆய்வின் மணி முடியாகத் திகழ்வது. ஆயிரத்து முந்நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்கள் இந்நூலில் ஆய்விற்குட்பட்டுள்ளன. தமிழ்ப் பண்பாட்டு நூலாகவும் வரலாற்று நூலாகவும் இந்நூல் துலங்குகின்றது. இந்நூல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின பரிசு பெற்ற பெருமை உடையது. திரு. வி. க. அவர்களின் மதிப்புரை இந்நூலின் தரத்திற்கும் ஆசிரியர்தம் ஆய்வுத் திறனுக்கும் உரை கல்லாக ஒளிாகின்றது.

“ஆசிரியர், நிலம்- மலை-காடு-வயல்-ஆறு-கடல்-நாடு-நகரம்-குடி-படை-குலம்-கோ-தேவு-தலம் முதலியவற்றை அடியாகக் கொண்டு இந்நூற்கண் நிகழ்த்தியுள்ள ஊர்பேர் ஆராய்ச்சியும், ஆங்காங்கே பொறித்துள்ள குறிப்புகளும் பிறவும் தமிழ்ச் சரித்திர உலகுக்குப் பெருவிருந்தாகும் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டில் சில ஊர்ப் பேர்கள் சிதைந்தும், திரிந்தும், மருவியும், மாறியும் தத்தம் முதல் நிலையை இழந்துள்ளன. அவை மீண்டும் பழைய நிலை எய்திப் பண்புறுதற்கு இந்நூல் பெருந்துணை செய்தல் ஒருதலை. இந்நூலுள் பொலிதரும் சில ஊர்ப் பேர்களின் வரவாறு, சாம்பியும் சோம்பியும், நலிந்தும் மெலிந்தும் கிடக்கும் நம் மக்கட்கு அமிழ்தாகிப் புத்துயிர் வழங்கல் உறுதி. நூலின் நடைக்கண் நடம் புரியும் பீடும் மிடுக்கும் வீறும் நாட்டின் சவலையை நீக்கி, அதன் மாட்டு வேட்கையை எழுப்பி, அதை ஊக்குவனவாகும்.”

1947இல் வெளிவந்த ‘தமிழர் வீரம்’ என்னும் பெயரிய நூல் தமிழர்தம் போர்த் திறத்தையும், படைத் திறத்தையும் விளக்குகிறது.

அடுத்த 1948இல் வெளியிடப் பெற்ற ‘தமிழின்பம்’ பாரதப் பேரரசின் சார்பில் இயங்கும் சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்றது. இந்நூலுக்கென வழங்கப்பட்ட ஐயாயிரம் வெண்பொற் காசுகளுடன் பத்தாயிரம் வெண்பொற் காசுகளைச் சேர்த்துப் பல்கலைக்கழக நிதி வளர்ச்சிக்காக இவர் கொடுத்தார். இதனால் பலரும் இவரைப் பாராட்டினர்.

ஐந்தாண்டுகள் இடைவெளிக்குப்பின் வந்த ‘வழி வழி வள்ளுவர்’ வள்ளுவரைப் பிற புலவர்கள் எடுத்தாளும் திறனை விளக்கி நிற்கிறது.

இறுதியாக 1958இல் வெளிவந்த ‘தமிழகம் அலையும் கலையும்’ தமிழ்நாட்டின் கலைச்சிறப்பையும். கலை வளர்த்த நகரங்களின் நல்லியல்புகளையும் ஆய்கின்றது.

ஆய்வு நூல்களாக அன்றிக் கட்டுரைத் தொகுப்புக்களாக வந்தவை ‘கடற்கரையிலே’, ‘ஆற்றங்கரையினிலே,’ வேலும் வில்லும்’ என்பன. ‘வேலும் வில்லும்’ என்ற நூல் கம்பரும் கச்சியப்பரும், மூவர் தமிழும் முருகனும், திருச்செந்துார் முருகன் என்ற மூன்று கட்டுரைகளின் தொகுப்பாகும். கவிஞரும் கலைஞரும் உரையாடுவது போன்று அமைந்தது ‘கடற்கரையிலே’ என்ற நூல். விருதைத் தமிழ்க் கழகத்தின் சார்பில் வெளிவந்த தமிழ்த் தென்றல் என்ற இதழில் வெளி வந்த தொடர்கட்டுரைகள் இருபதின் தொகுப்பு நூல் இது. தமிழக ஆறுகளின் சிறப்பு, அவற்றின் கரைகளில் அமைந்த நகரங்களின் வரலாற்றுச் சிறப்பு, இலக்கியச் சிறப்பு இவற்றை எடுத்துக் கூறும் ‘ஆற்றங்கரையினிலே’ கல்கியில் வெளிவந்த தொடர் கட்டுரைகள் நாற்பத்தெட்டின் தொகுப்பு நூல் ஆகும். இது 1961 இல் வெளிவந்தது.

‘வேலின் வெற்றி’, ‘திருக்காவலூர்க் கலம்பகம்’ என்ற இரு நூல்களும் முறையே கந்த புராணத் திரட்டையும் திருக்காவலூர்க் கலம்பகத்தையும் தழுவி எழுதப்பட்ட உரை நூல்கள் ஆகும்.

Words and their Significance. Dravidian Comparative Vocabulary, Common Dravidian Proverbs என்பன இவர் ஆங்கிலததில் எழுதி வெளியிட்ட நூல்கள் ஆகும்,

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்