(சொல்லின்செல்வர்சேதுப்பிள்ளை 1/5 தொடர்ச்சி)

9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 2/5

வள்ளுவரிடம் ஈடுபட்ட இவர்தம் உள்ளம் கம்பனிடம் செல்லுமாறு திசைமாற்றியவர் சுப்பையா(முதலியார்) அவர்கள் ஆவர். கம்பனில் திளைத்தபின் இவருடைய ஆர்வம் கம்பன் கவி நலத்தை வெளிப்படுத்துவதில் முனைந்தது. தமிழுக்குக், கதியான கம்பரையும், வள்ளுவரையும் தெளிந்தவரின் உள்ளம் பாரதியாரின் பாநலத்திலும் ஈடுபட்டது. பாரதியின் கவிதையில் திளைத்ததன் பயனாகச் செந்தமிழ்நாடு, முப்பெருங்கவிஞர், கலையின் விளக்கம், பண்டாரப் பாட்டு, தமிழ்த் தாய் வாழ்த்து முதலிய கட்டுரைகள் முகிழ்த்தன. பாரதியார் கண்ட புலவர்களில் இளங்கோவடிகளும் ஒரு சிறந்த புலவர் ஆதலின், இளங்கோவடிகளும் இவரைக் கவர்ந்தார். இவ்வாறு நெவ்லையில் இவர் ஆற்றிய அரிய கலைப் பணியைக் கண்ட நெல்லை மாவட்ட ஆட்சியாளர், மாவட்டக் கல்விக்குழு உறுப்பினர்களுள் ஒருவராகத் தெரிந்தெடுத்தார். அக்குழு நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டு இளைஞர்கள் நன்மைக்கான நோக்கங்களை இவர் எடுத்துரைத்தார்.

நகர் மன்றத் தொடர்

1924ஆம் ஆண்டில் நெல்லையில் நடைபெற்ற நகர்மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தலின் பின் நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் (1926,28) வாகை சூடியவர் இவரே. மூன்றாவது முறை இவர் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன். இவர் திறமையைக் கண்டு நகரமன்றத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். துணைத்தலைவராக இருந்தபோது. நெல்லை நகரத் தெருப் பெயர்களின் வரலாற்றை அறிந்து, அவற்றின் உண்மைப் பெயரை நிலை நாட்டிய பெருமை சேதுவுக்கே உரியதாகும்!

பல்கலைக் கழகங்களில் தமிழ்ப்பணி

நெல்லை நகர்மன்றப் பணிபுரிந்த இரா. பி. சே. அவர்கள் 1930ஆம் ஆண்டு கா.சு. பிள்ளை அவர்களின் உதவியால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் பொறுப்பை ஏற்றார். 1931 ஆம் ஆண்டில் தமிழ் ஆனர்சு வகுப்பு மாணவர்களுக்குக் கம்பராமாயணம்; மொழிநூல் ஆகிய பாடங்களை எடுத்தார். அந்நாளில் மொழி நூல் ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கப்பட்டது. இவர்தம் மொழி நூல் புலமைக்கும் ஆங்கில அறிவிற்கும் உரை கல்லாகத் துலங்குவது ‘Words and their significance’ என்ற ஆங்கில நூல். அதே ஆண்டில் தமிழ் வித்துவான் பயிலும் மாணாக்கர்க்குத் திருக்குறள், சிலம்பு முதலிய பகுதிகளைக் கற்பித்தார். பல்கலைக் கழகத்தாரால் ஏற்படுத்தப்பட்ட சொற்பொழிவு நிகழ்ச்சியில் சிலப்பதிகாரம் பற்றிச் சொற் பொழிவாற்றினார். சொற்பொழிவினைச் செவிமடுத்த ஆங்கிலப் பேராசிரியர் சுந்தரம் அவர்கள்,

“அன்பர்.சேதுவே! தமிழ் என்றால் இனிமை இனிமை என்று இயம்புகின்றார்கள்; அது பற்றுக் காரணமாகக் கூறும் வெற்றுரை என்றே நான் இதுகாறும் எண்ணியிருந்தேன். இன்று தங்கள் தமிழ்ப் பேச்சைக் கேட்ட பிறகுதான் தமிழ் இனிமை என்பது முற்றிலும் உண்மையெனக் கண்டேன். இன்று முதல் நானும் நற்றமிழ் நூல்களைக் கற்று இன்புறுவேன்”
என்று பாராட்டினர். சொற்பொழிவின் தலைமை இடத்தை அணிசெய்த விபுலானந்த அடிகளார் :

“முன்பு சேரன் தம்பியாகிய இளங்கோ சிலப்பதிகார நூலைப் பாடினார். இன்று என் அருமைத் தம்பி யாகிய சேதுப்பிள்ளை சிலம்பின் ஒலி எல்லோருடைய சிந்தையிலும் செவியிலும் ஒலிக்குமாறு செய்தார்.”

என்று பாராட்டினர். ஆறாண்டுகள் அண்ணாமலையில் அரும்பணி ஆற்றிய சேதுப்பிள்ளை அவர்களுக்கு இறுதியாக அளிக்கப்பட்ட அண்ணாமலை நகர்த் தேநீர் விருந்தில் கலந்து கொண்ட சுநீதி குமார் சட்டர்சி அவர்கள், அவர் உரையைக் கேட்டு,“தமிழின் இனிமையே உருவெடுத்து வந்தது
போல் இருக்கிறது தங்கள். பேச்சு”

என்று பாராட்டினார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியவுடன், அந்நாளில் இராமகிருட்டிண மடத்தில் சமயப் பணிபுரிந்த விபுலானந்த அடிகளாரின் முயற்சியால் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் பணியினை ஏற்றார். அடுத்த ஆண்டில் தமிழ் ஆய்வுத்துறைத் தலைவர் எசு. வையாபுரிப் பிள்ளை அவர்களின்கீழ் அத்துறைத் துணைத்தலைவர் ஆனார். அப்போது வையாபுரிப் பிள்ளை அவர்கள் ஈடுபட்டிருந்த தமிழ்ப் பேரகராதிப் பணியினை முடித்தலில் உற்ற துணையாயிருந்தார். வையாபுரிப்பிள்ளை அவர்களுக்குப்பின், அந்த இடத்தை சேதுப்பிள்ளை அணி செய்தார். இதன் பயனாகப் பல நூல்களை ஆழ்ந்து கானும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது,

நாளடைவில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘இலாசரசு’என்பவரின் பெண் மக்கள் இருவர்.திம் கொடையால் உருவாக்கப்பட்ட ‘பேராசிரியர்’ இடத்தை முதன் முதலில் அணி செய்தார். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையின் முதல் பேராசிரியர் என்ற பெருமையைத் தேடிக் கொண்டவர் இவர். அப்போது பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரித் தமிழ் ஆனர்சு பயிலும் மாணவர்களுக்கும் முதுகலை மாணவர்களுக்கும் வகுப்பு எடுத்தார். எம்.லிட்,. பிஎச்.டி. பட்டங்கள் பெறுவவற்காக ஆய்வு செய்த மாணவர்கள் பலருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

மேலும் இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்த போது மொழி, இலக்கிய நலம் கருதி நிபுணர் குழுக்கள் ஏழில் உறுப்பினராக இருந்தார். அவையாவன :

1. சென்னை அரசினர் நியமித்த கவி பாரதியார் நூல்கள் வெளியீட்டுக் குழு.

2. இந்திய அரசினர் அரசியலமைப்பை முக்கிய இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் பொருட்டு அமைத்த அரசியலமைப்புச் சொற்கள் மொழியாக்க நிபுணர் குழு.

3. சாகித்திய அகாதெமியின் ஆலோசனைக் குழு, நிருவாகக் குழு. 4. தென்னிந்திய மொழிகள் புத்தக டிரசுட்டின் ஆலோசனைக் குழு.

5. சென்னை அரசினர் சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம் தயாரித்த நிருவாகச் சொற்களை முடிவு செய்ய அமைத்த நிபுணர் குழு.

6. அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கம்பராமாயண ஆராய்ச்சிப் பதிப்புக் குழு.

7. சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழ் அகராதியின் ஆலோசனைக் குழு.

இத்துடன் நில்லாமல், இந்திய மொழித்துறைகள் பலவற்றிற்கும் துணைவராகவும் வழிகாட்டியாகவும் விளங்கினார். 1937 முதல் 1955 வரை ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பெற்ற அனைத்திந்தியக் கீழைக்கலை மாநாடுகளில் கலந்துகொண்டு அரிய பொழிவுகள் பல ஆற்றிச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பெருமையை உலகறியச் செய்தார். இவர் காலத்தில் வெளிவந்த சென்னைப் பல்கலைக்கழக வெளியீடுகள் 1. திராவிடப் பொதுச் சொற்கள் (Dravidian common Vocabulary) 2. திராவிடப் பொதுப் பழமொழிகள் (Common Dravidian Proverbs).

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்