(புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 3/3 தொடர்ச்சி)

9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 1/5

தோற்றுவாய்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றித் தமிழ் வளர்த்த பெரியார்களுள் ஒருவர்; திரு. வி. க. மறைமலையடிகள் போன்றோரின் சமகாலத்தவர்; ‘செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை’ என்று சுத்தானந்த பாரதியாரால் போற்றப்பட்டவர்; ‘சொல்லின் செல்வர்’ என்று சீராட்டப் பெற்றவர்; தமிழ் இலக்கிய அரங்கில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்; உரைநடை உலகில் எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் உண்டாக்கியவர்; பழமையான கவிதைக்கும், புதுமையான உரைநடைக்கும் இடையே சேதுவாகத் திகழ்ந்தவர்; தமிழ் ஆர்வத்துடன் தமிழ் ஆராய்ச்சித் திறனையும் பரப்பியவர்; ஆங்கில மோகம் கொண்ட அவர் காலத் தமிழரின் செவிகளில் சிந்தைக்கினிய செந்தமிழ் நடைகளை ஓதி அவர்தம் நெஞ்சக்களனில் தமிழ் உணர்வைப் பாய்ச்சியவர்; இத்தகு பீடுசால் பெருமைகளைத் தனக்கே உரியதாக்கிக் கொண்ட தமிழ்த் திருமகன்-தமிழிலக்கிய வானின் விடிவெள்ளி இரா. பி. சேதுப்பிள்ளை அவர்களின் வாழ்க்கை ஏற்றம் உடைத்து. அவர்தம் தமிழ்த்தொண்டு உரையிட்டுச் சொல்லொணா அருமை வாய்ந்தது.

தோற்றம்

திருநெல்வேலியில் நெல்லை மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இராசவல்லிபுரத்தில் தோன்றியவர். 1895ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் இரண்டாம் நாள் துன்முகி ஆண்டு பூச நன்னாளில் பிறந்தவர். இவரை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் கார்காத்த வேளாளர் மரபில் கொழுவடைக் கோத்திரத்தில் வந்த பிறவிப்பெருமாள் பிள்ளையும், அவர்தம் வாழ்க்கைத் துணையான சொர்ணத் தம்மாளும் ஆவர். தம் பெற்றோர்க்குப் பதினோராவது பிள்ளையாகத் தோன்றியவர். இவர்க்கு முன் தோன்றிய பதின்மரும் இவ்வுலகை நீத்து அவ்வுலகடைந்தனராதலின் பதினோராவது பிள்ளையானாலும் தவமிருந்து பெற்ற தவப்புதல்வர் இவர். பெற்றோர்க்கு ஒரு பிள்ளையாய் செல்லப்பிள்ளையாய்-செல்வப் பிள்ளையாய் வளர்ந்தவர்.

கல்வி

இரா. பி. சேதுப்பிள்ளையின் ஆரம்பக்கல்வி இராசவல்லி புரத்துத் திண்ணைப் பள்ளிக்கூடத்திலே தொடங்கியது. அந்நாள் நண்பர் அழகிய கூத்தர் என்பவர். தொடக்கப் பள்ளியில் கல்வி பயிற்றுவித்தவர்கள் அருணாசல தேசிகரும் செப்பறை அடிகளாரும் ஆவர். அருணாசல தேசிகரிடம் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், ஆறுமுக நாவலரின் பாலபாடப் பகுதிகள் போன்றவற்றைப் பயின்றார். செப்பறை அடிகளார் சிவஞான மாபாடியத்தைப் பயிற்றுவித்தார்.

ஐந்தாம் வகுப்புவரை இராசவல்லிபுரத்துத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்ற இவர் தம் உயர்நிலைக் கல்வியைத் திருநெல்வேலியைச் சார்ந்த பாளையங்கோட்டையில் கத்தோலிக்கப் பாதிரிமார்களால் நடத்தப்பெறும் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார். அப்பள்ளியில் இவர் தம் செல்லப் பெயர் இரும்பு மனிதர். இவர்தம் திண்மையைக் கண்டே மாணவர்கள் இவ்வாறு அழைத்தனர். உயர்நிலைப் பள்ளியில் தமிழ் பயிற்றுவித்தவர் சுப்பிரமணியப் பிள்ளை என்பவர். உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்புப் பயிலும்போது நல்லொழுக்கப் பரிசாகத் திருக்குறள் நூலினைப் பெற்றார். பெற்றவர் ஊர் வந்தபோது தொடக்கப்பள்ளி ஆசிரியரான செப்பறை அடிகளாரின் அறிவுரையால் நாள்தோறும் திருக்குறளை மனனம் செய்தார். இதுவே பின்னாளில் திருக்குறள் வல்லுநராக இவர் திகழ்தற்குக் காரணமாகியது. பள்ளி மாணவராக இருந்த காலத்தில் பாளையங்கோட்டைக்குச் சைவ சபைத் தொண்டர்படைத் தலைவராக இருந்தார். அக்காலத்தில் சோழவந்தான் அரசஞ்சண்முகனாரால் சிறுத்தொண்டன்’ என்று பாராட்டப் பெற்றார். பதினைந்தாம் ஆண்டில் தம் பள்ளி வாழ்க்கையை முற்றுவித்த இவர், அதே ஆண்டில் தம் அருமைத் தாயையும் இழந்தார்.

பள்ளிப் படிப்பை முடித்த இவர் திருநெல்லிவேலி இந்துக் கல்லூரியில் தம் இடைக்கலை (Indermediate) வகுப்பினைத் தொடர்ந்தார். இடைக்கலையில் இவருக்குத் தமிழ் பயிற்று வித்தவர் தொல்காப்பிய வல்லுநர் சிவராமபிள்ளை என்பவர். இந்துக் கல்லூரி தமிழ்ப் பேரவைத் தலைவராகத் திகழ்ந்த இவர், முதலாண்டில் ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு முதன்மையாக வெற்றி பெற்றார். இதனால் அரசினரால் வழங்கப்பட்ட உதவிப்பணத்தையும், நூல்களுக்கெனத் தனியாக ஐம்பது வெண்பொற்காசுகளையும் பெற்றார். இடைக்கலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இடைக்கலை வகுப்பில் தேர்ச்சி பெற்ற இவர் 1915 ஆம் ஆண்டில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தம் கல்லூரி வாழ்க்கையைத் தொடங்கினார். பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் வரலாறும் பொருளாதாரமுமே இவர் தம் விருப்பப் பாடங்களாக அமைந்தன. காரணம் அந்நாளில் தமிழுக்குத் தனியிடம் இல்லை. பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த அடுத்த ஆண்டில் 1916இல் கல்லூரி மன்றத்தில் நடை பெற்ற தமிழ்ப் பேச்சுப் போட்டியில் முதன்மையாக நின்றார். அப்பேச்சுப் போட்டியில் இவர்தம் உரையினைச் செவிமடுத்த கல்லூரி முதல்வர், ஆங்கிலப் பேராசிரியர், தமிழ்த்துறைத்தலைவர் திருமணம் செல்வக் கேசவராய முதலியார், நடுவர் சதாசிவ ஐயர் ஆகியோர் அனைவரும் போற்றினர். இதன் விளைவாக இளங்கலை முடித்த உடனேயே பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறையில் சிற்றா சிரியராகப் பணிபுரியும் வாய்ப்புக் கிட்டியது. பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறைச் சிற்றாசிரியர் (Tutor)சேதுப்பிள்ளை சட்டக் கல்லூரி மாணவராகச் சேர்ந்து சட்டக் கலையினையும் பயின்றார், இரண்டாண்டுகளில் சட்டக் கல்வியையும் வெற்றியுடன் முடித்துக் கொண்டு நெல்லை சென்றார்.

மகட் கொடை மன்றல்

நெல்லை சென்ற இவர் நெல்லையில் பிள்ளையன் மரபில் தோன்றிய நெல்லையப் பிள்ளை என்பவருக்கும் அவர்தம் இரண்டாவது மனைவி பருவதத்தம்மாள் என்பவருக்கும் மகளாகத் தோன்றிய ‘ஆழ்வார் சானகி’ என்பவரைத் தம் இருபத்து மூன்றாவது வயதில் வதுவை நன்மணம் புரிந்து கொண்டார்.

வழக்கறிஞர் பணி

திருமணம் முடிந்தபின் வழக்கறிஞர் தொழிற் பயிற்சிக்காகச் சென்னை சென்றார். அங்கு முன்னாள் மாநில அமைச்சரும், புகழ்பெற்ற வழக்கறிஞருமான எசு. முத்தையா (பிள்ளை) அவர்களிடம் இரண்டாண்டுகள் வழக்கறிஞர் தொழிற்பயிற்சி பெற்றார். 1923இல் நெல்லை மீண்டு தனியாகவே வழக்கறிஞர் தொழிலை நடத்தினார். இத் தொழிலை நடத்தியபோது இவர்தம் தமிழார்வம் தணிய வில்லை. நெல்லை மாணவர் சங்கத்தில் குறள் பற்றி உரை நிகழ்த்தியவர். வள்ளுவரை மேலைநாட்டு அறிஞர்களுடன் ஒப்பிட்டு அவரின் தனித்தன்மையை வெளிப்படுத்தினார். குறள் பற்றிய விளக்கத்துடன் அமையாமல் சைவ சமய இலக்கியங்கள் குறித்தும் சொற்பொழிவாற்றினார்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்