Tuesday, January 09, 2018

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 – வல்லிக்கண்ணன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35

கலைத்துறையில் காணப்படும் கீழ்நிலைகள் எண்ணிக் குமைகின்றார் பெருங்கவிக்கோ. அன்புத் தமிழர்கள் வளர்த்த அருங்கலையை இன்று “நாய் நரிகள் எல்லாம் புகுந்தே ஆடும் நாசத்தின் தலையுச்சி” ஆக்கி விட்ட அவலநிலையை நினைத்துக் கொதிக்கின்றார். படக்கலையில் காணப்படுகிற சிறுமைச் செயல்களை வருணித்து வருந்துகிறார். கலையின் பேரால் போடப்படுகிற கும்மாளங்கள், “நாடி நலக் கலை வளர்த்த தமிழர் நாடே! நாசமாய் நீ போவதும் உன் தலையெழுத்தா?” என்று வேதனைப்படுகிறார்.
நம் நாட்டு நாடகத்தை நசுக்கி விட்டார்!
நாசத்தால் கலைத்தாயைக் கொல்கின்றார்கள்
கும்மிருள்தான் சூழ்ந்ததின்று! பல நல்லோர்கள்
குடிப்பதற்குக் கூழின்றி, ஆடை யின்றி
அம்மம்மா, பெருந்துன்பச் சேற்றில் வீழ்ந்தார்
அம்மணிகள் வறுமையினால் கற்பைவிற்று
விம்முகிறார் மனதுக்குள்! வெளியே வந்து
வேடிக்கை காட்டுகிறார்! அந்தோ அந்தோ!
என்று அங்கலாய்க்கிறார் கவிஞர்.
‘பொதுத் தொண்டு’ குறித்துப் பாடும்போது, இன்றைய நிலையை வேதனையோடு அவர் குறிப்பிடுகிறார்.
இன்றுஎவன் நம் முன்னால் ஆள்கின்றானோ
இவனே நம் கடவுளென எண்ணி அன்னான்
பன்றியைப் போல் நடந்தாலும் பாதம் போற்றிப்
பணிகின்றோம்! நாயை விடக் கீழாய் முன்னோர்
நன்றியினை மறந்து விட்டோம் புத்தன் ஏசு
நற்காந்தி நபிகள் பிரான் போன்றோர் கொள்கை
கொன்று விட்டோம் குழிதோண்டிப் புதைத்தும் கூடக்
கொஞ்சமேனும் நாணமின்றி இருக்கின்றோம் நாம்!
பெரும் புகழைப் பெறவேண்டும் என்றால் நாட்டில்
பேசுதல் போல் செயவேண்டும்! உயிரை ஈந்தும்
அருஞ்செயலைச் செயவேண்டும்! அன்புவேண்டும்
அநியாயம்! நம்மவர்கள் என் செய்கின்றார்?
வருந்துகின்ற தீச்செயலைச் செய்தேனும் நல்
வாய்ப்பதனை ஏற்படுத்திப் புகழாம் இன்ப
விருந்து பெற நினைக்கின்றார்! இந்தப் போக்கை
விரட்டுகின்ற போர்ப்படையாம் என்றன் பாட்டு!
ஒழுக்கமில்லாப் பொதுவாழ்வு ஓட்டைப்பானை; உயிரில்லா நடைப்பிணமும் அதுவே என்று கூறும் கவிஞர், “படுதுரோகம் செய்யும் ஈனர் தம்மை இழுத்து வந்து சந்தியிலே நிறுத்த வேண்டும்; அவரை எல்லாம் கழுவேற்றுகின்ற நாளே விழாநாள் ஆகும்” என்று சீற்றமாய்ப் பேசுகிறார்.
நாட்டின் நிலையும் மக்களின் நிலையும் எண்ண எண்ணச் சீற்றம்தான் வெடிக்கிறது. பெருங்கவிக்கோவிற்கு. இக்கொடுமைகள் எல்லாம் மாறுவதற்கு வழியே இல்லையா என்று கொதிக்கிறது அவர் உள்ளம்.
உழைக்கின்ற மகனுக்குக் கஞ்சி இல்லை
உழுகின்ற உழவனுக்கு உடுத்த இல்லை
அழைக்கின்றார் அறிஞர்பேர் சொல்லி ஆனால்
      அவர் பெரிய அயோக்கியராய் வாழ்ந்து விட்டு
தழைக்கின்ற கொள்கைக்கு மதிப்பொன்றுண்டா?

தக்க முறை நீதிநேர்மையாய் நடந்தால்
பிழைப்பதற்கு வழியுண்டா? குற்றம் கொன்று
பெரும்பூமி வாழ்பவர் யார்? சிந்தியுங்கள்!
மக்களெல்லாம் முழுக்குருடர்! குருடர்க்குப் போய்
மற்றுமொரு முழுக்குருடன் வழியைக் காட்டத் போல்
தக்கோன் போல் வடிவெடுத்தான், நடித்துக் காடடித்
தமிழர்களை யேமாற்றுகின்றான்! ஈதை
முக்காலும் அறிகின்ற சான்றோ ரெல்லாம்,
முழுவயிற்றுக் கஞ்சிக்காய் வாழ்வை விற்றார்!
எக்காலம் இக்கொடுமை மாற்றுவோம் யாம்? 
என்னருமைப் பாவலரே! எண்ணிப் பாரீர்!
(தொடரும்)
படைப்பு: வல்லிக்கண்ணன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்

Monday, January 08, 2018

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 2.

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்

2

 முன்னுரை
ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனார், மரபியலில்,
‘மாவு மாக்களு மையறி வினவே.’
‘மக்கள் தாமே யாற்றி வுயிரே.’
என்பனவற்றால், மானிடரை மாக்கள், மக்கள் என இருதிறத்தினராகப் பகுத்தோதினார். மாக்கள் எனப்படுவார், ஐம்பொறியுணர்வுமட்டிற் பெற்று மனவுணர்ச்சி யிலராயினாரெனவும், மக்கள் எனப்படுவார், ஐம்பொறி யுணர்வேயன்றி மனமென்பதோ ரறிவும் உடையரயினர் எனவுங் கூறுவர். இது மானிடரை அறிவுவேற்றுமைபற்றிப் பகுத்த பகுப்பாகும்.
இனி, அவயவவெற்றுமைபற்றி, மானிடர், ஆண் பெண் என இருதிறத்தின ராவர். ஆணியல்பு மிக்க அலி ஆண்பால் எனவும், பெண்ணியல்பு மிக்க பேடி பெண்பால் எனவும் வழங்கப்படுமாதலின், அவயவம்பற்றிய பகுப்பும் இரண்டே என்னலாம். இவ்வாறே, ஒவ்வொரு குறையுடைய ஊமும் செவிடும் குருடும் பிறவும் இவ் விருபாலுள்ளே அடங்குதலுங் காண்க. அவயவ வெற்றுமையான் இருதிறத்தினராய மானிடரே அறிவுவேற்றுமையான் மாக்கள், மக்கள் எனப்பட்டனராதலின், ஆண்பாலினும் மாக்களும் மக்களும் உண்டென்பதும், அவ்வாறே பெண்பாலினும் மாக்களும் மக்களும் உன்டென்பதும அவர்க்கு உடன்பாடாம். இதனால் ஆசிரியர் எத்துணை அறிவுண்மையும் அறிவின்மையும் ஆண்பாற்கு உடன்பட்டாரோ அத்துணையும் பெண்பாற்கும் உடன்பட்டாராதல் தெளியப்படும். 
களவியலுள், ‘ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப’ என வுரைத்து, அத்தலைவற்கும் தலைவிக்கும் உள்ள ஒப்புமைவகையினை விரித்தோதுவாராய், மெய்ப்பாட்டியலில்,
‘பிறப்பே குடிமை யாண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
நிறையே யருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த வொப்பினது வகையே’
என்றாராகலின், ஆண்பாற்கொத்த ஆண்மையும், உணர்வும் பிறவும் பெண்பாற்கும் ஒக்கும் என்பதும் உடன்பட்டனராவர். இதனால், ஆண்மையும் அறிவும் ஆண்பாலார்க்கே சிறந்தது என்பது ஆசிரியர்க்கு உடன்பாடன்மை யுணரப்படும். மற்றுக் களவியலுள், ‘பெருமையும் உரனும் ஆடூஉ மேன’ என்றாராலெனின், அவர் பொருளியலுள்,
‘செறிவும் நிறைவுஞ் செம்மையுஞ் செப்பும்
அறிவு மருமையும் பெண்பா லான’
எனக் கூறினாராதலின், ஆண்பாலினை உயர்த்துரைக்கு முகத்தாற் பெண்பாலினை இழித்தாரென்றால் பொருந்தாதாகும். 
செறிவாவது அடக்கம்; நிறைவாவது மறை புலப்படாமல் நிறுத்தும் உள்ளம்; செம்மையாவது மனக்கோட்ட மின்மை; செப்பாவது செய்யத் தகுவன கூறுதல்; அறிவாவது நன்மை பயப்பனவும் தீமைபயப்பனவும் அறிதல்; அருமையாவது உள்ளக்கருத்தறித லருமை என்பர். இவ்வறுபெருங் குணங்களும் ஆண்பார்க் கோதிய பெருமை உரன் என்னும் இரண்டற்குஞ் சிறிதுந் தாழ்ந்தனவாகாமை உய்த்துணர்க. மகளிர்க்கே சிறந்த சில இயற்கை வேற்றுமையினை நன்றாய்ந்து, ஆசிரியர், கிழவோள் பணிவும் கிழவோன் உயர்வும் உடன்பட்டனரல்லது வேறு எவ்வகை அறிவு வேற்றுமையும் உடன்படாமை கண்டுகொள்க. இதுவே தெய்வப்புலமை திருவள்ளுவனார்க்கும் கருத்தென்பது, அவர், ‘அறிவறிந்த மக்கட்பேறு’, ‘நன்மக்கட் பேறு’, ‘பேதையார் கேண்மை’, ‘பேதையார் சொன்னோன்றல்’, ‘மடவார்ப் பொறை’ என்னுமிடங்களில், ஆண் பெண் இருபாலார்க்கும் பொதுப்பட வழங்கிய பெயர்களானே ஆய்ந்தறியத் தக்கது. ‘வகைதெரிவான் கட்டே யுலகு’ என்பது முதலாக ஆண்பாலாற் கூரியனவெல்லாம் ‘நஞ்சுண்டான் சாம்’ என்புழிப்போல ஒருபாற் கிளவி எனைப்பாற்கண்ணுஞ் சேறற்குரிய என்பதுபற்றித் தலைமையாற் கூறினாராவர்.
இனி, வடநூலுள் ஒருசாராசிரியர் மதம் பற்றிப் பரிமேலழகர் பெண்பாலாரை ஆண்பாலாரோடு ஒத்த அறிவெய்தற்கு உரியரல்லராகக்கொண்டு,
‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோ னெனக்கேட்ட தாய்’
என்புழி, ‘பெண்ணியல்பாற் றானாக அறியாமையிற் “கேட்ட தாய்” எனக் கூறினார்’ என்றார். அவர், ஆடவருடைய அறிவொழுக்கங்களின் அருமையறிதற்கும் உரியரல்லரெனக் கருதியமை காண்க. அந்நிலைய பெண்பாலார் பலருளரால் எனின், அந்நிலைய ஆண்பாலாரும் பலருளர் என்க. தன் மகனென்னுந் தொடர்புபற்றி யுளதாகும் அன்புமேலீட்டாற் குணமும் குற்றமும் நாடுமிடத்துக் குற்றந் தோன்றாது மறையினும் மறையும்; அவற்றை யுள்ளவாறாராய்ந்து குணமிகுதிகண்டு சான்றோரெனவல்லார் பிறரே யாதலானும், தானறிந்ததனோடொப்பத் தன்னையொத்தாரும் மிக்காரும் கூறியவழியே தனக்கு மகிழ்ச்சி யுளதாதலானும், ‘கேட்டதாய்’ என்றார் எனக்கூறல் ஆண்டைக் கியைபுடைத்தாம். பிறர் கூறியவழித் தன்னறிவு மாறுபடினும், தானறிந்த வழிப் பிறர்கூற்று மாறுபடினும் தனக்கு மகிழ்ச்சியின்றாதலுங் கண்டுகொள்க. ‘சான்றோ ரென்கை யீன்றோர்க் கின்பம்’ என்பதூஉம் இக்கருத்தேபற்றி வந்தது.
(தொடரும்)
இரா. இராகவையங்கார்

Sunday, January 07, 2018

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 2

சங்ககாலச் சான்றோர்கள்   2

 1. கபிலர்
 ஈராயிரம் ஆண்டுகட்குமுன் நம் தாயகமாம் தமிழகம் இயற்கை வளனும் செயற்கைத் திறனும் நிறைந்து, அறிவும் ஆண்மையும் அருளும் பொருளும் நிறைந்த இன்பத் திருநாடாய்க் காட்சியளித்தது. கலை வளமிக்க புலவர் கவித்திறத்தாலும், கொடை வளமிக்க புரவலர் கருணைத் திறத்தாலும், வேலெதிர் வரினும் அஞ்சி இமையாத விழிகள் படைத்த வீரர் நெஞ்சுரத்தாலும், ‘மக்களின் உயிர் நான்,’ என உணரும் உணர்வு சிறிதும் குறையாது குடி தழீஇக் கோலோச்சிய கோவேந்தரின் நெறி பிறழா ஆட்சியின் மாட்சியாலும் புகழ் மண்டிக் கிடந்த நம் பழந் தமிழ் நாடு, அலைகடல் சூழ்ந்த உலக மக்கள் அனைவரது கவனத்தையும் ஒருங்கே கவர்ந்ததோடன்றி, அவர்களது உளமார்ந்த மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய தகுதியும் பெற்றுத் திகழ்ந்தது.
அத்தகைய பெருமை மிக்க திருநாட்டில் மாநில மாந்தர் அறிவைக் கூரியதாக்கி-உணர்வை நுண்ணியதாக்கி ஒழுக்கத்தை விழுப்பமுடையதாக்கி- கலைமகள் கொழுநன் படைக்கும் வெற்றுடம்புகளைப்போல அழியாது என்றும் நின்று நிலவி மன்பதைக்கு ஒளி காட்டி வழிகாட்டும் மணி விளக்குகளாய்த் திகழச்செய்யவல்ல தீஞ்சுவைக் கவிதை களைச் செய்தளித்த பாகுதமிழ்ப் புலவர் கணக்கிலடங்காப் பெருந்தொகையினர் ஆவர். அத்தகைய புலவர் திருக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் சிறப்புப் பெற்றோருள் தனிச்சிறப்புப் படைத்தவர் கபிலர் ஆவர். புலவர் போற்றும் புலவரேறாய்த் திகழ்ந்த அவர்தம் தீஞ்சுவைப் பாட்டின் இன்பமும், ‘தெய்வக் கவிதை’யின் திறனும், தமிழ் இலக்கியத் தொகையுள்ளேயே மிகப் பழையதும் விழுமியதுமாகிய ‘மூத்தோர் பாடியருள் பத்துப்பாட்டுள்’ ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டினுள்ளேயே காட்சியளிக்கின்றன. ஆம்! தீந்தமிழின் சுவையை முற்றுமுணர வாய்ப்பின்றித் திகைத்திருந்த ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவுறுத்தும்பொருட்டு அருந்தமிழ்க் கவிஞர் உள்ளத்தினின்றும் மலையருவி போலக் கிளர்ந்தெழுந்த பாட்டமுதன்றோ அத்தீஞ்சுவைக் கவிதை? பத்துப்பாட்டுள் மட்டுமேயன்றிப் பழந்தமிழ்ச் செல்வங்களான புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை, ஐங்குறு நூறு போன்ற நூல்களையும் தம் அமிழ்தினுமினிய தமிழ்க் கவிதைகளால் அணி செய்யும் பேற்றினைப் பெற்ற பெரும் புலவர் அல்லரோ கபிலர்பெருமானார்?
இத்தகைய பெருமை பெற்ற புலவர் பெருந்தகையார் வையை என்னும் பொய்யாக் குலக்கொடி பாய்ந்து வளங்கொழிக்கும் பாண்டி வளநாட்டில்-திருவாதவூரில்- தோன்றினார். மாசு மறுவற்ற வீரத்திற்கும் மதுரத் தமிழ் மொழியின் வாழ்விற்கும் என்றென்றும் இடமாய் விளங்கும் ஏற்றம் பெற்ற பாண்டி வளநாட்டில் தோன்றிய கபிலர் பெருமான், சங்கத் தமிழைத் துங்கமுற வளர்த்த தம் வாழ்வாலும் வாக்காலும் மன்பதைக்கு என்றென்றும் வழி காட்டும் வான்பொருளாய்-தமிழ்ச் சான்றோராய் -விளங்குவதில் வியப்பொன்றுமில்லை அன்றோ?
கொடி படர்வதற்கேற்ற கொழுகொம்பே போலப் பண்டைத் தமிழகத்தில் புலவரைப் போற்றும் புரவலர் கூட்டம் பல்கி இருந்தது. வீரத்தால் நிகரற்றுத் திகழ்ந்த அம்மேலோர் ஈரத்தாலும் இணையின்றிச் சிறந்து விளங்கினர். அவ்வாறு விளங்கிய பெருமக்களுள் ‘முடிகெழு வேந்தர் மூவரினும் சிறந்து விளங்கிய வள்ளலர் எழுவர் ஆவர். அவ்வெழுவரும் கடைச்சங்க காலத்து வாழ்ந்த காரணத்தால் ‘கடையெழு வள்ளல்கள்’ எனப் பெயர் பெறலாயினர். அவருள் முடிமணியாய்த் திகழும் பெருமை பெற்றவன் பாரி வள்ளல் ஆவன். இப்பாரி வள்ளலே நம் சான்றோராகிய கபிலரின் உள்ளங்கவர் நட்புடை உத்தமனாய்த் திகழ்ந்தான். கலையுணர்வாலும் வீரத்தாலும் கருணையுள்ளத்தாலும் ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கிய பாரியின் பால் கபிலர் பெருமனார் நெஞ்சைப் பறி கொடுத்தார். அப்பாவலர்தம் நுண்ணுணர்விலும் ஒழுக்க மேம்பாட்டிலும் நட்பின் இன்பத்திலும் திளைத்த கைவண்பாரியும் தன் நெஞ்சைக் கபிலர் பெருமானுருக்கே காணிக்கை ஆக்கினான். இவ்வாறு நீல வானமும் கோல மதியமும் போல விளங்கிய இருவர்தம் நட்பு, இருநிலத்தார் இதயத்தை எல்லாம் இன்ப ஆழியில் ஆழ்த்துவதற்கோர் ஏதுவாயிற்று.
பாரியின் பெயரையும் புகழையும் அறியாத தமிழருண்டோ? பாரிற் பிறந்த அருளாளர் எவருக்கும் இளைக்காத கருணைத்திறம் படைத்தவன் வள்ளல் பாரி. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்!” எனக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கிப் பாடினர் அருட்பெரு வள்ளலாராகிய இராமலிங்க அடிகளார். அப்பெருமானாரது அமுத வாக்கிற்கோர் இலக்கியமாய்த் திகழ்ந்த வாழ்க்கை பாரியின் தியாக வாழ்க்கை. அவ்வாழ்க்கையின் பல்வேறு பண்புகளையும் ‘புலனழுக்கற்ற அந்தணாளராகிய’ கபிலர் பெருமானார், காலம் உள்ள வரையில் நாம் படித்துப் படித்துப் பாறைநெஞ்சமெல்லாம் பனிநீர் போல உருகிப் பண்படப் பைந்தமிழ்க்கவிதைகளாய்ப் பாடியுள்ளார். பறம்பு மலையின் வற்றா அருவி வெள்ளம் போலத் தம் நெஞ்சிற் பொங்கியெழுந்த அன்புப் பெருக்கை-உணர்வு வெள்ளத்தையெல்லாம்-நாமும் அள்ளி அள்ளிப் பருகி அமர நிலை காணத் தெள்ளமுதக் கவிதைகளில் தேக்கி வைத் துள்ளார் தீஞ்சுவைக் கவிஞராகிய கபிலர் பெருமானார்.
கபிலர் வாழ்ந்த காலம் தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த இன்ப வாழ்க்கை நடத்திய காலம். அதனாலன்றோ பழந்தமிழ் இலக்கியங்களெல்லாம் இயற்கை இன்பத்தின் சுவைப் பிழிவாய்க் காட்சியளிக்கின்றன? சங்கச் சான்றோருள்ளும் கபிலர் பெருமானார் இயற்கையின் தலை சிறந்த அடியாராய் விளங்கிய பெருமை படைத்தவர். அவர் பாடியுள்ள அகப்பாடல்களிலும் புறப்பாடல்களிலும் இயற்கை அன்னை இன்ப நடம் புரிகின்றாள்.
(தொடரும்)
முனைவர் ந. சஞ்சீவி:
சங்கக்காலச் சான்றோர்கள்

Monday, January 01, 2018

திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 1

திருவள்ளுவர்: 1


சங்கப் புலவர் சரிதங்களுள் ஒன்றுமே சரியாகத் தெரிந்தபாடில்லை. நீண்ட இடைக்கால இருளால் விழுங்கப்பட்ட இலக்கியங்கள் பலவாக வேண்டும். சிதிலமான பழைய சுவடிகளைத் தேடியெடுத்துச் சென்ற சில வருடங்களாக அச்சியற்றி வெளிப்படுத்திவரும் சில பேருபகாரிகளின் அரிய முயற்சியாற் கிடைத்துள்ள சில சங்க இலக்கியங்கள் தவிரப் பழம்பண்டைத் தமிழகச் செய்தி தெரிவிக்கும் தக்க சாதனங்கள் வேறு கிடையா. கிடைக்கும் சில சங்க நூல்களிலும் சங்கப் புலவர் சரிதம் பற்றிய குறிப்புக்கள் காண்பது அரிது. இந்த நிலையில், திருவள்ளுவரைப் பற்றிய சரிதக் குறிப்புக்களைத் தெளிந்து துணிதல் எளிதன்று. எனினும், சங்க நூல்களிலும் பழைய பாட்டுக்களிலும் கிடைக்கும் சில குறிப்புக்கள் வள்ளுவர் சரித முழுதையும் திரட்டித் தராவேனும், தற்காலத் தமிழுலகில் வழங்கிவரும் அவர் கதையின் உண்மையை ஆராய்வதற்கு ஒருவாறு உதவுகின்றன. அவையிற்றை உற்றுநோக்குங்கால். பிரஸ்தாபக் கதைகளில் நம்பிக்கை நலிவடையக் காண்போம்.
வள்ளுவரின் காலம், ஊர், குடியிருப்பு, சமயம் முதலியவற்றைப் பலரும் பலபடியாகப் பேசிவருகின்றனர். இவை பற்றிய தற்காலச் செய்திகளுக்கு உள்ள ஆதரவுகளைச் சிறிது விசாரிப்போம்
 கடைச்சங்கத்தின் கடைக்காலத்திற் சங்கப் புலவர் இறுமாப்பை யடக்கின அவதார புருடர் வள்ளுவர் என்பார் பலர். இறவாப் புகழுடைய தம் குறணூலைக் கடைச் சங்கத்தில் அரங்கேற்றவந்த வள்ளுவரைப் புறக்கணித்து, அவர் தம் அரிய நூலையும் அவமதித்த சங்கத்தாரை வள்ளுவர், தம் தெய்விகத்தன்மையாற் பொற்றாமரைக் குளத்தில் வீழ்த்தி அலமரச் செய்ததாயும். புலவர்கள் வள்ளுவரையும் அவர்தம் குறணூலையும் புனைந்துபாடித் தம்முயிரை இரந்து பெற்றதாயும் குறட்புகழின் பிறப்பே சங்கப் புகழின் இறப்பாக முடிந்ததென்றும் கதைப்பார் பலர் கதைக்கின்றனர். சில தலைமுறையாகப் புலைமை இரத்தக் கலப்புடைய பார்ப்பான் ஒருவனுக்கும், புலைப்பிறப்பும் பார்ப்பன வளர்ப்புமுள்ள கீழ்மகள் ஒருத்திக்கும் பிறந்த சிறார் எழுவருள், கடைமகவே வள்ளுவரென்றும், குறிசொல்லுபவரும் பறையருக்குப் புரோகிதருமான் வள்ளுவ வகுப்பினரால் வளர்க்கப்பெற்றமையின் வள்ளுவரென்பது இவருக்குக் காரணப் பெயராயிற்றென்றும். இவர் மயிலாப்பூர் வணிகனான ஏலேலசிங்கனால் வறுமை வருத்தங்கள் நீக்கப்பெற்று வாசுகியென்னும் வேளாண் மகளை மணந்து வாழ்ந்து மதுரைச் சங்க வீறழித்துப் பேறுபெற்றாரென்றும் தற்காலக் கதைகள் கேட்கின்றோம். இவற்றுள் ஒன்றுக்கேனும் பழநூலாதரவு இருப்பதாகத் தெரியவில்லை. கிடைக்குஞ் சில பண்டைக் குறிப்புக்களும் இக்கதைகளின் பொய்ம்மைகுறிக்கக் காண்கின்றோம்.
முதலில், வள்ளுவர் மூன்றாஞ் சங்கத்தை முற்றுவித்த வரலாற்றின் உண்மையைச் சிறிது துருவியாராய்வோம். குறட்சுவடிகளிற் காணப்படும் திருவள்ளுவமாலை எனும் புனைந்துரைப் பாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இக்கதை நடக்கின்றது. வள்ளுவமாலை உள்ளபடி கடைச்சங்கப் புலவராற் பாடப்பட்டதுதானா? என்ற வினா நிற்க; அப்புலவர் பாக்களே வள்ளுவமாலையெனக் கொள்ளினும், சங்கப் புலவர் வள்ளுவரை அவமதித்து அவரால் வீறடக்கப்பட்டதற்கேனும், அவர் தம் இறவாக் குறணூல் அப்புலவர்முன் அரங்கேற்றப்பட்டதற் கேனும் ஆன்ற சான்று ஏதும் அவ்வள்ளுவமாலைப் பாக்கள் சுட்டக் காண்கின்றிலம். கடைச்சங்கப் புலவராற் பாராட்டிச் சேமித்துவைக்கப்பட்ட நூற்றிரட்டுக்களுள் அப்புலவர் சிலர் புனைந்துரைத்த பாக்கள் காணப்படுகின்றன. கடைச்சங்கத்தார் நூற்றிரட்டுக்களில் திருக்குறளும் ஒன்றென்பது தமிழர் யாவருக்கும் ஒப்பமுடிவதாகும். அத்திரட்டு நூல்களுள்ளும் வள்ளுவர் நூல் தலை சிறந்ததென்பதற்கு இடை நெடுங்காலம் பிற பல நூலும் வழக்கிழந்தொழியவும், என்றும் பிரபல நூலாகக் குறள் நின்று நிலவியதே போதிய சான்றாம்.
நாம் அறிந்த சங்கத்திரட்டு நூல்களாவன: பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு முதலியன ஆம். இவையனைத்தும் கடைச்சங்கப் புலவரியற்றியனவும் அவர்க்கு முற்பட்ட புலவர் இயற்றியவற்றுள், சேமித்து வைக்கத்தக்க சிறப்புடையனவாகக் கடைச் சங்கத்தாரும், பிறரும் கண்டு திரட்டியனவுமாக முடியும். இத்திரட்டு நூல்களுள், தகவுமிகவுடைய திருக்குறளின் பெருமை நோக்கிச் சங்கப் புலவரனைவரும் இதனைப் புனைந்து பாடியிருக்கலாம். அன்றி, வேறு சில நூல்களுக்கும் இவ்வாறே அவரனைவரும் சிறப்புக் கவிகள் தந்திருப்பின் அந்நூல்கள் வழக் கிழந்த காலத்தே சிறப்புப்பாயிரச் செய்யுட்கள் இறப்பின் வாய்ப்பட்டும் இருக்கலாம். குன்றாவழக்குடைக்குறளொடு அதன் புகழ்மாலைப் பாக்களும் நின்று நிலவி வந்திருக்கலாம். இதனுண்மை எப்படியாயினும், திருவள்ளுவ மாலையில் வள்ளுவர் கடைச்சங்கத்தின் கடைக்காலத்திற் சங்கத்தை வீறழித்த கதை சுட்டுங்குறிப்பு ஒன்றேனும் இல்லை. 
கடைச்சங்கக் கடைநாளிற் றோன்றித் தம் குறணூல் அரங்கேற்றுதலினிடையே வள்ளுவர் மதுரைச் சங்கத்தை அழித்த கதை மெய்யாமேல், புலவர் சங்கமிருந்து இயற்றிய பழம்பனுவல்களிற் குறளடிகள் குறிக்கப்படக் காரணமில்லை. மூன்றாஞ் சங்கப்புலவர் நூல்களிலேயே சுட்டப்படமுடியாத பின்வந்த திருக்குறளருந்தொடர்கள், அச்சங்கத்தாருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுந்து அவராற் பாராட்டிச் சேமித்துப் பாதுகாக்கப்பட்ட பழந்தொகைப் பனுவல்களிற் சுட்டப்படுமாறில்லை யென்பது ஒருதலை. ஆனால் மதுரைச் சங்கச் சதுரர் நூல்கள் பலவற்றுள்ளும், அவர் போற்றுதற்கான அவருக்கு முற்பட்ட மிகப்பழைய தமிழ்த் திரட்டு நூல்களுள்ளும் வள்ளுவரும் அவரற நூலும் பலவேறிடங்களிலும் பாராட்டப்பட நாம் காணுங்கால், வள்ளுவரை அப்படிப்பாராட்டியெடுத்தாளும், பாவலருக்கு அவர் சம காலத்தவராதல் வேண்டுவதொன்று; அன்றேல் முன்னோராதல் வேண்டுவதொன்று; இஃதன்றிக் காலத்தாற் பிந்தியவராகக் கருதற் கிடமில்லையன்றோ!
தமக்கு முற்பட்ட இடைச்சங்கச் செய்யுளும் பிறவுஞ் சேர்த்துக் கடைச்சங்கத்தார் திரட்டிய கலித்தொகை, புறநானூறு முதலிய பழைய நூல்களிலும் குறளை மதிப்புடன் எடுத்தாளக் காண்கின்றோம். குறளடிகள் இவ்வாறு கடைச்சங்கப் புலவராலும் அவர்க்கு முற்பட்ட புலவராலும் எடுத்தாளப்பட்டதுமட்டுமில்லை: குறள் வாக்கியங்கள் அறத்தெய்வக்கூற்றாயும் வள்ளுவர் மெய்த்தெய்வப் புலவராயும் அவர் பலராலும் வாயார வாழ்த்தப்படவும் காணும் நாம், வள்ளுவர் அவர்க்குச் சமகாலத்தவரென்று கொள்ளுதலினும் அவர்க்கு முற்பட்டவராகக் கருதலே சால்புடைத்தாம். புலவரெவரும் தம் காலத்தவரால் தலைநின்ற தேவநாவலராய் மதிக்கப்படும் வழக்கம் யாண்டும் இல்லை. பெரும்பாலும் சமகாலத்தவரால் அவமதிப்பும் தாமியற்றிய நூலின் மெய்ப் பெருமைவலியாற் பிற்காலத்தவரால் மேம்பாடும் அடைவதே புலவருலகியல்பு.
(தொடரும்)
நாவலர் சோமசுந்தர பாரதியார்

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் : இராகவ(ஐயங்கா)ர் – 1.

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்
1.

முகப்புரை

பூவெலாம் புகழும் நாவலம்பொழிற்கண் அமிழ்தினு மினிய தமிழ்பயில் தென்னாட்டின் பண்டை அறிவுவளர்ச்சி, அரசியன்மேம்பாடு, இல்லற வாழ்க்கை கலம், கொடைவீரம், படைவீரம், கடவுள்வழிபாடு இவற்றைச் செவியும் உள்ளமும்களிகூரக் கவர்ந்துண்ணும்வண்ணம் இயற்றும் விழுமிய செய்யுட்டிறன் முதலிய நாகரிகப் பெருமைகள் எத்துணையோ அறிந்துகொள்ளற்கு வாயிலாக ஒப்புயர்வற்று விளங்குவன, சங்கக்காலத்து வழங்கிய இலக்கண இலக்கிய நூல்கள். அவ்வரியபெரிய நூல்களாற் றெளியக் கிடக்குந் தமிழர் சிறப்பியல்புகள் பலவற்றுள் அறிவுவளர்ச்சியில் ஆண்மக்க ளொப்பப் பெண்பா லாரும் தலைசிறந்து நிலவிய பேரியல்பு, நல்லோர் பலரானும் மிகவும் பாராட்டப்படுவது ஒன்று. இக்காலத்துப் பலபல நாடுகளிற் காணப்படும் பெண்கல்வி. முயற்சி சற்றேறக்குறைய ஈராயிரம் வருடங்கட்கு முன்னரே இத் தென்னட்டாரால் இனிதாளப்பட்டுப் பயன்பெற்றுச் சிறந்ததென்று துணியப்படுமாயின், அஃது ஒருவர்க்கு எவ்வளவோ வியப்பும் இன்பமும் விளக்குமென்பதில் ஐயமில்லை.
சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.” (திருக்குறள், அறிவுடைமை. உ)
என்பதனால், குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன். போல மனத்தைப் புலமறிந்து தீயதி னீக்கி நல்லதன்கட் செலுத்துவது அறிவு என்று கண்டு, அவ்வறிவால் நிரம்பினராதல் இருபாலார்க்கும் இன்றியமையாததென்று துணிந்து அவ் விருபாலாரையும் அவ் வறிவின்கண் ஒப்ப வளர்வித்த பெருநாகரிகம், முன்னைத்தமிழர் நன்புகழ் முடியில் நடுநாயக மணிபோல் ஒளிவிட்டு விளங்குவதாகும்.இவ்வருமையைப் பலருந்தெரிந்தின்புற வெண்ணியே, இன்றைக்கு 29 வருடங்கட்குமுந்தி மதுரைத்தமிழ்ச்சங்கத்துச் செந்தமிழ்ப்பத்திரிகைக்கண் இவ்வுரைகடை என்னால் எழுதப்பட்டது. இதனைக் கற்ற தமிழறிஞர் பலர் தமிழின்கணுள்ள ஆர்வ மிகுதியால் இதனைப் புத்தகவடிவாக்கித் தரும்வண்ணம் வேண்டுதலான், இஃது இப்போது அச்சிடலாயிற்று. என்மீதுள்ள அன்புகாரணமாகவே இதனை அச்சிடுதற்கு மனமுவந்து ஏற்றுக்கொண்டு, இதனைச் சிறிதுங் காலதாமதமின்றி வெளியிட்டுதவிய என்னருமை நண்பர் (Chairman, Tamil Board of Studies, University of Madras) சிரீமான் சி.ஆர். நமச்சிவாய(முதலியா)ரவர்கட்கு என் மனமார்ந்த நன்றியைச் செலுத்துகின்றேன். அவர்கள் நெடுங்காலம் இனிதுவாழ உள்ளுவதல்லது அவர்கள் கொள்ள நல்குவதோர் கைம்மாறு காண்கிலேன்.
இங்ஙனம்
இரா. இராகவையங்கார்
(தொடரும்)