Monday, March 13, 2023

8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 1/3 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 1/3


கவிஞன் தான் பிறந்த காலத்தின் கருவாகவும் பின்னர்க் கருத்தாவாகவும் துலங்கக் காணலாம். தன்னைக் சுற்றிலுமுள்ள சூழலை, சமுதாயத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது என்பது ஒருமுறை: அச்சமுதாயத்தை விவரிக்கவும் செய்து தன்னுடைய கருத்துகளைப் பரப்பி ஒரு புதிய மறுமலர்ச்சிக்குச் சமுதாயத்தினைப் படைக்க வேண்டும் என்ற பேரார்வத்தில் பிறங்கிடுவது பிறிதொரு வகை. முன்னவர் உள்ளதை உள்ளவாறே கூறுபவராகவும். பின்னவர் உள்ளதை உணர்ந்தவாறு கூறுபவராகவும் அமைவர்.

உள்ளதை உள்ளவாறு உணர்த்துபவர், உருவத்தைப் பிரதிபலித்து நிற்கும் கண்ணாடி போல்பவராவர். கவிஞன் காலத்தின் கண்ணாடியாக மட்டும், இருந்தால் போதாது. காலத்தின் கருத்தாவாகவும் அவன் துலங்குதல் வேண்டும். அப்போதுதான் அவன் படைக்கும் இலக்கியம் பூந்தோட்டமாக மட்டும் அமையாமல் காய்கறித் தோட்டமாகவும் அமைந்து பலன்தர முடியும்.

“மக்கள் ஆக்கா மனுவேந்தர்கள் கவிஞர்கள்” (Poets are the unacknowledged legislators of the world) என்று கவிஞர் செல்லி குறிப்பிட்டார். பொதுமக்களின் வாக்குரிமை பெற்றுச் சட்டமன்றத்தில் அமர்ந்து நாட்டு மக்களுக்கு நலம் பயக்கும் திட்டத்தினைக் தீட்டிச் செயலாற்றும் வாய்ப்பு அரசியல்வாதிகளுக்கு உண்டு. ஆனால் கவிஞர்களோ-வெனில் கற்பனையில் சில காட்சிகளைக் கண்டு, அக்கற்பனைக்காட்சிகள் நடைமுறை வாழ்வில் நனவுகளாகி மக்களுக்குப் பயன் நல்க வேண்டும் என்ற விழுமிய நோக்கம் உடையவர்களாகத் துலங்குவர். அமெரிக்கர்கள் நிலவுப் பயணத்தை மேற்கொள்வதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டுக் கவிஞர் பாரதியார் “சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம்” என்று பாடிவிட்டார். சுதந்திரம் பெறுவதற்கு முன்பே ஆடுவோமே பள்ளுப் பாடுவோமேஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று” சுதந்தரப் பள்ளுப் பாடினார். சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்றும் பாரதியார் பாடியுள்ளமை அவர்தம் எதிர்கால நோக்கினைப் புலப் படுத்தும். கங்கையில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்” என்று என்றோ பாடிவிட்டுப் போனார். இன்று கங்கையையும் காவிரியையும் இணைக்க முடியுமா? என்று உலக நிபுணர் குழு ஆராய்வதனைக் காண்கின்றோம்.


நாட்டின் விடுதலைக்கு-நாட்டு மக்களின் நல் வாழ்விற்குச் சில பல கருத்துக்களைப் பாரதியார் எண்ணியுரைத்தமை போன்றே. அவர் பால் கொண்ட ஈடுபாட்டால் தம் இயற்பெயரான கனகசுப்புரத்தினத்தைப் பாரதிதாசன் என்று மாற்றியமைத்துக் கொண்ட புதுவைக் கவிஞர்புதுமைக் கவிஞர்தம்-புரட்சிக் கருத்துகளை இனிக் காண்போம்.

காலத்திற்கேற்பக் கவிஞர் தோன்றுவர் என்பது பொது நியதியாகும். பாண்டிச்சேரியில் பாரதியார் வாழ்ந்திருந்த பொழுது அவரோடு தொடர்பு கொண்டார் நம் கவிஞர் பாரதிதாசன். ஒரு விருந்தில் சந்தித்தனர் இருவரும். பாரதியார் பாரதிதாசனைப் பாடுமாறு பணிக்க, எங்கெங்குக் காணினும் சக்தியடா!—தம்பி ஏழு கடல் அவள் வண்ணமடா!” என்ற பாடலைப் பாரதிதாசன் பாடியதாக அறிகிறோம். இந்தப் பாடலை முழுதும் நாம் படித்துப் பார்த்தால் புரட்சிக் கவிஞர் எனக் கொண்டாடப்படுவதற் கேற்பப் புரட்சி வித்துகள் இம்முதற் பாடலிலேயே தென்படக் காணலாம்.


“இயற்கை அனைத்தும் அழகே, அந்த அழகு செந்தாமரை யென்றும், நிலவென்றும், கதிரென்றும் சிரித்தது. காணும் பொருளிலெல்லாம் அழகைக் காணவும், கண்டவாறு தாமேயாகச் செல்லோவியம் செய்யவும் திறம் பெறுதல் வேண்டும் தமிழர்கள் என்று அழகின் சிரிப்பு நூலின் முன்னுரையில் கவிஞர் குறிப்பிடுவர்.


இயற்கை வருணனையிலும் புரட்சி உள்ளம்


இயற்கைப் பொருள்களைக் கூர்ந்து நோக்கும் கவிஞர்தம் மதி வியத்தற்குரியது. கடலைகளைப் பார்க்கும் கவிஞர்க்கு இளைஞர் தம் எழுச்சியும் ஒருங்கே நினைவுக்கு வருகின்றன.

நேரிடும் அலையோ, கல்வி
நிலையத்தின் இளைஞர் போலப்
பூரிப்பால் ஏறும்; வீழும்
புரண்டிடும், பாராய் தம்பி”

– அழகின் சிரிப்பு : கடல் : 1.

அடுத்து, புறாவின் வாழ்வினை வருணிக்க வருகின்ற கவிஞர் புரட்சிக் கருத்துகளை நம் முன் படைக்கின்றார். ஓர் ஆண் புறாவிற்கு ஒரு பெண் புறா என வாழும் கற்பு நெறியின் திண்மையினை நமக்கு எடுத்துக் காட்டு கின்றார்.

“ஒருபெட்டை தன் ஆண் அன்றி
வேறொன்றுக் குடன்ப டாதாம்:
ஒரு பெட்டை மத்தாப் பைப்போல
ஒளிபுரி ந் திடநின் றாலும்
திரும்பியும் பார்ப்ப தில்லை
வேறொரு சேவல்! தம்மில்
ஒருபுறா இறந்திட் டால்தான்
ஒன்று மற் றொன்றை நாடும்,”

– அழகின் சிரிப்பு; புறாக்கள் : 5

ஆணோ பெண்ணோ ஒருவர் இறந்தபின் மற்றவர் திருமணம் செய்து கொண்டு வாழ்வதே நேரிய செயல் என்பதனையும் இறுதி அடியிற் புலப்படுத்தி விடுகின்றார்.

கிளியை வருணிக்கப் புகுகின்ற கவிஞர், நெஞ்சத்திலே ஓர் எண்ணமும், நடைமுறை வாழ்வு நலத்திற்காகப் பிறி தொரு செயலுங் கொண்டு இலங்கும் இரட்டை வேடத் தினரைச் சாடக் காணலாம்.

காட்டினில் திரியும்போது
கிரீச்சென்று கழறு கின்றாய்
கூட்டினில் நாங்கள் பெற்ற
குழந்தை போல் கொஞ்சு கின்றாய்
வீட்டிலே தூத்தம் என்பார்
வெளியிலே பிழைப்புக் காக
ஏட்டிலே தண்ணிர் என்பார்
உன்போல்தான் அவரும் கிள்ளாய்!”
– அழகின் சிரிப்பு: கிளி; 7.

நிலவைப் பாடிய கவிஞர் பலர் நிலவினைக் காதல் வாழ்வு ஏற்றம் பெற அமையும் பின்புலமாகக் கண்டுள்ளதனைப் பார்க்கலாம். நற்றிணைத் தலைவன் பொருள்வயிற் பிரிந்து, பொருள் முற்றித் தம் மனை நோக்கி மீளும்போது நிலவைக் காண்கிறான். பின் வருமாறு பாடுகிறான்.

குன்றூர் மதியம் நோக்கி நின்று நினைந்து
உள்ளினேன் அல்லனோ யானே……
………………………………………………..
எமது முண்டோர் மதிநாள் திங்கள்
– நற்றிணை : 62.

இதுபோன்றே திருவள்ளுவர் காமத்துப்பாலில், தலை மகன்-ஒருவன் நிலவை நோக்கி, நின் முகமும் என் தலைவி யின் முகமும் அழகு-அமைப்பு-கவர்ச்சி முதலியவற்றில் ஒன்றேயெனலாம், ஆயினும் இருவரிடையிலும் ஒரு வேறு பாடு உளது என் தலைவி நான் காணமட்டுமே தோன்றுவாள்; நீயோ பலரும் காண நாணமின்றி வான வீதியில் உலா வருகின்றாய்’ என்று கூறுவதாகக் குறிப்பிடுகின்றார்.

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி
– திருக்குறள் : 1119.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Saturday, March 11, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 27

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 26 தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 16
கண்ணன் காட்சியின் பலன்

காலை எட்டு நாழிகையளவில் குன்னம் போய்ச் சேர்ந்தோம். சிதம்பரம் பிள்ளையும் அவர் நண்பர்களும் எங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அங்கே எங்களுக்காக அமைக்கப் பெற்றிருந்த வீட்டில் இறங்கினோம்.

அந்தச் சாகை அவ்வூரிலிருந்து சிரீ வைணவராகிய இராம ஐயங்கா ரென்பவருடைய வீட்டின் ஒரு பகுதியாகும். அவர் என் தந்தையாருக்கு இளமை முதல் நண்பர்; சித்த வைத்தியத்தில் நல்ல பயிற்சி யுடையவர். அவர் வசிட்டபுரத்தா ரென்னும் வகையைச் சேர்ந்தவர். குன்னத்திலும் அதைச்சார்ந்துள்ள ஊர்களிலும் அவ்வகையினர் இருந்தனர். அவர்கள் வைதிகத் தொழில் செய்து வந்தனர். பிறரை ஆதரிக்கும் குணமும் எல்லாரோடும் மனமொத்துப் பழகும் தன்மையும் வாய்ந்தவர்கள்.

என் தந்தையார் அரியிலூரிலிருந்து வந்தமையால் அவரை ‘அரியிலூரையர்’ என்ற பெயரால் குன்னம் முதலிய இடங்களிலுள்ளவர்கள் வழங்கலாயினர். அப்பக்கங்களில் உள்ளவர்கள் அவருடைய கதைகளையும் சங்கீதத்தையும் முன்னமே கேட்டவர்கள். “அரியிலூரையர் இங்கே வந்திருக்கிறார்” என்ற செய்தி எல்லாரிடத்தும் பரவியது. அவரவர்கள் அன்போடு தங்கள் தங்களால் இயன்ற பொருள்களைக் கொணர்ந்து கொடுத்து என் தந்தையாரைப் பார்த்துச் சென்றார்கள். அரிசி, பருப்பு, காய், கறி முதலிய உணவுப் பொருள்கள் வீட்டில் நிரம்பி விட்டன. அவற்றைப் பார்த்தபோது என் தந்தையார், அரியிலூர்க் கோயில் வாசலில் நிகழ்ந்த தீபாராதனையையும் கண்ணன் காட்சியையும் நினைந்து நினைந்து இன்புற்றார். ஊர் ஊராய்த் திரிந்து சீவிக்க வேண்டி நேர்ந்தால் என் செய்வது!’ என்று அவருக்கிருந்த சிந்தனை மாறியது.

ஊற்றை நாட்டாரும் பிறரும்

குன்னத்திற்கு எங்களை வருவித்த சிதம்பரம் பிள்ளை கார்காத்த வேளாளர். அவ்வூரிலுள்ள மற்ற வேளாளர்களிற் பெரும்பான்மையோர் ஊற்றை நாட்டார். குன்னத்திற்கு அருகில் ஊற்றத்தூரென்ற தேவார வைப்பு தலமொன்று இருக்கிறது. அதைத் தலைநகராகக் கொண்ட ஊர்களின் தொகுதி ஊற்றை நாடு என்று பழங்காலத்தில் வழங்கி வந்தது. அங்கே வாழ்ந்தமையால் அவ்வேளாளர்களுக்கு ஊற்றை நாட்டாரென்னும் பெயர் வந்தது. ஊற்றத்தூரிலுள்ள சுத்தரத்தினேசுவர ரென்னும் கடவுளே அவ்வகுப்பினருக்குக் குல தெய்வம். படையாட்சிகள், உடையார்கள் முதலிய வேறு சாதியினரும் குன்னத்தில் இருந்தனர். யாவரும் தெய்வ பக்தியும் தரும சிந்தையும் உடையவர்கள். காலை மாலைகளிற் கோயில்களிற் சென்று சுவாமி தரிசனம் செய்து தேவார திருவாசகங்களைச் சொல்லித் தோத்திரம் பண்ணிவிட்டு வருவார்கள். தங்கள் வருவாயில் ஒரு பகுதியைத் தருமத்திற் செலவிடுவார்கள்.

அவர்களுள் நல்ல நூல்களைக் கற்றவர்கள் பலர்; கல்லாவிடினும் பல நூல்களிலுள்ள விசயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டோரும் உண்டு. கல்வி, கேள்வி இல்லாதவர்களும் கற்றவர்களிடத்தில் அன்பு வைத்து மரியாதையோடு நடப்பார்கள். செல்வத்தினால் உண்டாகும் அகங்காரம் முதலிய குற்றங்களும் தம்முள் விரோதமும் அவர்கள்பால் இருக்கலாம்; ஆனாலும் கல்வியுடையவர்களைக் கண்டால் அவர்களை ஆதரிப்பதில் எல்லோரும் ஒரு முகப்பட்டு நிற்பார்கள். இந்த நிலை அக்காலத்தில் தமிழ்நாட்டுக் கிராமங்கள் எங்கும் காணப்பட்டதுதான்.

‘ஆனந்தமான பரம்’

குன்னத்திற்குச் சென்ற தினம் பிற்பகலில் தந்தையாரும் நானும் சிதம்பரம் பிள்ளையின் வீட்டிற்குச் சென்றோம். அவ்வீட்டுத் திண்ணையிற் பலர் கூடியிருந்தார்கள். சிதம்பரம் பிள்ளையும் அவர் தமையனாராகிய அப்புப் பிள்ளை என்பவரும் அங்கேயிருந்தனர். எல்லாரும் எங்களை வரவேற்றனர். அவர்கள் முகத்தில் விளங்கிய புன்னகையில் எங்கள் மனங்கள் திளைத்துத் தளிர்த்தன. சிதம்பரம் பிள்ளை தந்தையாரை அழைத்துத் தம் வீட்டுக்குள் சென்று இடைகழியிலுள்ள தம் புத்தக அலமாரியைக் காட்டினார். அதிலே பல புத்தகங்கள் இருந்தன. அதில் ஒரு புத்தகத்தை என் தந்தையார் எடுத்தார்; அது தாயுமானவர் பாடலாக இருந்தது. அதைப் பிரித்து என் கையிற் கொடுத்து “இவர்களுக்குப் படித்துக்காட்டு” என்று கூறினார். பிரித்த இடம் ஆனந்தமான பரமென்னும் பகுதி. நான் வாசல் திண்ணையில் உள்ளவர்களுக்கு அப்பகுதியிலுள்ள பாடல்களில் ஒவ்வொன்றையும் தோடி முதலிய ஒவ்வொரு இராகத்தில் வாசித்துக் காட்டினேன். தாயுமானவர் யாவருக்கும் விளங்கும் சொற்களில் தம் அனுபவ   உணர்ச்சியை நன்றாக வெளியிட்டுள்ள அப்பாடல்களின் பொருளும், இளமைக்குரிய முறுக்கோடு வெளிவரும் என் தொனியும் அங்கிருந்தவர்களுக்கு இன்பத்தை விளைவித்தன. “அரியிலூர் ஐயர் தம் குமாரரையும் நன்றாகப் பழக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களைப் போலவே இவரும் நல்ல நிலைக்கு வருவார்” என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள். குன்னத்திற் புகுந்த முதல் நாளே ‘ஆனந்தமான பரத்’ தைத் துணையாகக் கொண்டு அவர்கள் உள்ளத்திலும் நாங்கள் புகுந்து கொண்டோம்.

தலங்கள்

தலங்களைப்பற்றிய வரலாறுகளைத் தெரிந்து கொள்வதில் அக்காலத்தினருக்கு அதிக விருப்பம் இருந்தது. தலத்தில் விருட்சம், மூர்த்திகளின் திருநாமம், வழிப்பட்டவர்கள் வரலாறு, தீர்த்த விசேடம் முதலிய விசயங்களை அங்கங்கே உள்ளவர்கள் நன்றாகத் தெரிந்துகொண்டு மற்றவர்களுக்குச் சொல்வார்கள். தங்கள் ஊர் சிறந்த தலமென்றும் பலவகையான மாகாத்மியங்களை உடையதென்றும் சொல்லிக் கொள்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. குன்னத்தின் தல மாகாத்மியங்களை என் தந்தையார் விசாரிக்கத் தொடங்கினார். நானும் அவற்றைத் தெரிந்துகொண்டேன்.

மிகச் சிறந்த தலங்களுக்குச் சென்று அங்குள்ள மூர்த்திகள் பால் ஈடுபட்டவர்கள் தங்கள் ஊரிலும் அந்த தலங்களைப் போன்ற அமைப்புக்களை உண்டாக்கி வழிபடுதல் பழங்காலத்து வழக்கம். பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் சோழ நாட்டிலுள்ள திருநாகேசுவரமென்னும் சிவ தலத்தில் ஈடுபாடுடையவர். அவர் சென்னைக்கருகே உள்ள தம் ஊராகிய குன்றத்தூரிலும் ஒரு திருநாகேசுவரத்தை உண்டாக்கினார். நடுநாட்டில் பெண்ணையாற்றங் கரையில் சிரீரங்கம், சம்புகேசுவரம், தாயுமானவர் கோயில் என்னும் மூன்று தலங்களுக்கும் பிரதியாக மூன்று தலங்கள் உள்ளன. அரியிலூரில் உள்ள ஆலந்துறேசர் கோயில் தேவாரத் தலமாகிய கீழைப் பழுவூரிலுள்ள கோயிலைக் கண்டு அமைத்ததே யாகும். இவ்வாறே கும்பகோணத்தில் கும்பேசுவரரைத் தரிசித்த ஒருவர் குன்னத்தில் ஒரு கோயில் நிருமித்து அங்கே பிரதிட்டை செய்த மூர்த்திக்கு ஆதி கும்பேசரென்னும் திருநாமத்தையும் அம்பிகைக்கு மங்களாம்பிகை என்னும் பெயரையும் இட்டனர். அன்றியும் கும்கோணத்துக்குக் கிழக்கே திருவிடைமருதூர் இருப்பது போலக் குன்றத்திற்குக் கிழக்கே வெண்மணி என்னும் ஊர் இருக்கிறது. திருவிடைமருதூருக்கு மத்தியார்சுனம் என்று பெயர். அதற்கு வெண்மையாகிய இருதயாகாசத்தின் மத்தியென்று பொருள் செய்து, திருவிடை மருதூர் தகராகாசத்திற்குச் சமானமானதென்று தத்துவார்த்தம் கூறுவர் சிலர். (அர்சுனம்-வெள்ளை) வெண்மணி என்னும் பெயர் மத்தியார்சுன மென்னும் பெயரோடு ஒருவாறு ஒப்புமையுடையதாகவே, அவ்வூரில் தோன்றிய கோயில் மூர்த்திக்கு ஆதி மகாலிங்கமென்ற திருநாமம் உண்டாயிற்று. மகாலிங்கமென்பது திருவிடை மருதூர் சுவாமியின் திருநாமம். பிருகத்து குச நாயகியென்பதே இரண்டிடங்களிலும் உள்ள அம்பிகையின் திருநாமம். இத்தகைய அமைப்புக்களால் ஆலய வழிபாட்டைப் பழங்காலத்தில் எவ்வளவு அவசியமானதாகக் கருதின ரென்பதை உணரலாம். என் இளமையிலும் அந்நிலை மாறாமலே இருந்தது.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.

Saturday, March 04, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 26

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 25 தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 15 தொடர்ச்சி

தமிழ்த் திருவிளையாடற் புராணத்தில் அந்த வரலாறு உள்ள பாகத்திற்கு ‘விருத்த குமார பாலரான படலம்’ என்று பெயர். ஐயாக்குட்டி ஐயர் அந்தச் சரித்திரத்தைச் சொல்லும்போது, “கௌரிக்கு அவள் தகப்பனார் கௌரீ மந்திரத்தை உபதேசம் செய்தார். அந்த மந்திரம் மிக்க நன்மையைத் தரவல்லது” என்று கூறி அந்த மந்திரத்தையும் எடுத்துரைத்தார். அவர் உரைத்த மந்திரத்தையும் அதை உச்சரிக்கும் முறையையும் அப்பொழுதே நான் மனத்திற் பதியச் செய்துகொண்டேன். அவர் அன்றிரவு மந்திரத்தைச் சொன்னதையே உபதேசமாகக் கருதி அது முதல் அதனை நானும் சபித்து வரலானேன்.


துன்பத்தின்மேல் துன்பம்

என் தந்தையார் அரியிலூரைச் சூழ்ந்துள்ள இடங்களுக்கு அழைப்பின் மேல் அடிக்கடி சென்று தம் சங்கீதத்தால் சனங்களை உவப்பித்து அங்கங்கே உள்ள அன்பர்களாற் பொருளுதவி பெற்று வருவார். சில கிராமங்களில் கிடைத்த பொருள் வருவாயிலிருந்து என் உபநயனத்திற்குக் குமரபிள்ளை உதவிய தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். சமத்தான வித்துவானென்ற பெயரே ஒழிய சமீன்தாரது ஆதரவு வர வரக் குறையலாயிற்று. சமீன்தாரே கடனில் மூழ்கியிருந்தார். கடன்தாரர்கள் கடனை வற்புறுத்திக் கேட்டபோது அவர் தம் கிராமங்களை விற்று அதனை அடைக்கத் தொடங்கினார். சுரோத்திரியமாகவிட்ட நிலங்களையும் விற்றார். எங்களுக்கு இலந்தங்குழி என்னுமிடத்தில் விட்டிருந்த சருவமானியத்தையும் அவர் விற்றுவிட்டார். சமத்தானத்து உதவி இவ்வாறு அடியோடு நின்று போயிற்று.

இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் ஒரு துன்பம் போனால் மற்றொன்று வருவதற்குக் காத்து நிற்பதை என் தந்தையார் அநுபவத்தில் அறிந்தார். சமீனது சம்பந்தமும் ஆதரமும் அற்றுவிடவே, “இனி என்ன செய்வது?” என்ற யோசனை அவருக்கு உண்டாயிற்று. குடும்பம் நடத்தும் விசயத்தில் ஏற்பட்ட கவலையை விட அதிகமான கவலை என் கல்வி விசயத்தில் ஏற்பட்டது. அரியிலூரில் கல்விக்கு வேண்டிய உதவி இருந்தது; ஆனால் வருவாய் இல்லை. “இவ்வூரை விட்டால் வேறு எங்கே போவது?” என்னும் கவலை அவர் மனத்தை அலைக்கத் தொடங்கியது.


குன்னம் சிதம்பரம் பிள்ளை

இவ்வளவு சங்கடங்களில் அகப்பட்டுக் கலங்கும் எந்தையாரது உள்ளக் குறிப்பைச் சிதம்பரம் பிள்ளை என்னும் ஒருவர் ஒருவாறு ஊகித்து அறிந்துகொண்டார். அரியிலூருக்கு வடக்கே உள்ள குன்னம் (குன்றம்) என்னும் கிராமத்துக் கணக்குப் பிள்ளை அவர்; கார்காத்த வேளாளர்; நல்ல செல்வாக்குள்ளவர்; என் தந்தையாருடைய பால்ய நண்பர். அவருடைய பந்துக்கள் அரியிலூரில் இருந்தனர். அவர்கள் வீட்டிற்கு அவர் அடிக்கடி வருவார். அப்படி வரும்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கும் வந்து என் தந்தையாரிடம் பேசி அளவளாவி விட்டுச் செல்வார் அவர் தமிழிலும் அறிவு வாய்ந்தவர். நான் தமிழ் படித்து வருவதை அறிந்து என்னிடம் பிரியமான வார்த்தைகளைப் பேசிப் பாராட்டி ஊக்கம் உண்டாக்குவார்.
 
என் தகப்பனார் ஒரு நாள் சிதம்பரம் பிள்ளையோடு பேசிக்கொண்டிருந்தார். அவர் பேச்சில் பழைய கம்பீரம் காணாமையால் சிதம்பரம் பிள்ளை அவர் உள்ளத்துள் இருக்கும் கவலையே அதற்குக் காரணமென்று ஊகித்து அறிந்தனர். பிறகு மெல்ல மெல்ல விசாரித்து சமீன் ஆதரவு இன்மையை உணர்ந்து வருந்தினார் குடும்பக் கடனைப் பற்றியும் அவர் அறிந்தார். உடனே, “நீங்கள் இனிமேல் இங்கே இருக்க வேண்டாம். குன்னத்திற்கு வந்துவிடுங்கள் அங்கே திரமாக இருந்து வரலாம். உங்களுக்குக் குடும்பக் கவலை இல்லாதபடி நானும் என் அன்பர்களும் கவனித்துக் கொள்ளுகிறோம். உங்கள் குடும்பக் கடன் அடைவதற்கும் ஏதாவது வழி செய்கிறோம்” என்றார்.


என் தந்தையாருக்குப் புத்துயிர் உண்டாயிற்று. ஆண்டவன் கைவிடாமல் காப்பாற்றுவா னென்ற எண்ணம் உறுதி பெற்றது. குன்னம் வருவதாகச் சிதம்பரம் பிள்ளையிடம் கூறினார். அந்தச் செல்வர் ஊருக்குப் போனவுடனே நாங்கள் குடியிருப்பதற்காக ஒரு வீடு திட்டம் செய்து எங்கள் வரவை எதிர்பார்த்திருந்தார். அடிக்கடி மனிதர்களை அனுப்பி வரும்படி சொல்லி யனுப்பிக்கொண்டும் வந்தார்.


குன்னத்துக்குப் பிரயாணம்


என் தந்தையாருக்கு அரியிலூரைவிட்டுச் செல்ல மனம் துணியவில்லை. பழகிய மனிதர்களை விட்டுப் பிரிவது எளிதான காரியமா? என் படிப்பு விசயத்திற் கருத்துடைய அவருக்குச் சடகோபையங்காரிடம் நான் கற்று வருவதில் திருப்தி இருந்தது. அரியிலூரைவிட்டுச் சென்றால் அதற்குத் தடை உண்டாகுமென்ற எண்ணமும் அவரைத் துன்புறுத்தியது. உணவுக்கு அடுத்தபடிதான் கல்வியாதலின் குன்னம் போவதே சரியென்று தீர்மானம் செய்து, அதற்குரிய நாளொன்றும் பார்த்து, அச்செய்தியைச் சிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லியனுப்பினார்.


வண்டி நகர்ந்தது


நாங்கள் ஒரு நாள் விடியற்காலையில் புறப்பட்டுக் குன்னம் செல்வதாக ஏற்பாடாகி இருந்தது. முதல் நாள் அரியிலூரில் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டோம். புதிய ஊர்களைப் பார்ப்பதில் எனக்கு விருப்பம் அதிகமே; ஆயினும் சடகோபையங்காரிடத்தில் பாடம் கேட்க முடியாதே என்று வருந்தினேன். அதனை அறிந்த அவர், “நீ எப்போது வந்தாலும் இங்கே சில தினம் இருந்து பாடம் கேட்கலாம்” என்று சொல்லி விடையளித்தார்.

எங்கள் பிரயாணத்திற்காக ஒரு வண்டி, திட்டம் செய்துகொண்டு குமரபிள்ளை வந்தார். செலவுக்கும் பணம் அளித்து அவர் விடைபெற்றுச் சென்றார், விடிய ஐந்து நாழிகையளவில் எங்கள் வீட்டு வாசலில் வண்டி வந்து நின்றது. என் தந்தையாரும் நானும் வீட்டைவிட்டு வெளியே வந்தோம். தந்தையார் ஈசுவரப் பிரார்த்தனை செய்துகொண்டே என்னை எடுத்து வண்டியில் உட்கார வைத்தார். அந்தச் சமயத்தில் பெருமான் கோயிற் பக்கம் மேளவாத்தியத்தின் சத்தம் கேட்டது. தந்தையார் திரும்பிப் பார்த்தார். அங்கே காளிங்க நர்த்தன மூர்த்தியைப் படிச்சட்டத்தின் மீது எழுந்தருளுவித்துக் கோயில் வாயிலில் தீபாராதனை செய்தார்கள். என் தந்தையாருக்குப் மயிர்க்கூச்செறிந்தது. “நல்ல சகுனமாக இருக்கிறது. தெய்வத்தை நம்பிப் பிரயாணப்படுகிறோம்” என்று அவர் மனமுருகிக் கூறினார்.

பெருமாள் கோவிலுக்குத் திருப்பணி செய்வதற்காக அயலிலுள்ள கிராமங்களுக்குச் சென்று பொருள் சேகரிக்க எண்ணிய கோவிலதிகாரிகள் அதன் பொருட்டு அந்தக் கிருட்டிண விக்கிரகத்தை எழுந்தருளப் பண்ணி சந்நிதிக் கெதிரில் நிறுத்தித் தீபாராதனை செய்தார்கள். அந்தச் சமயமும் எந்தையார் என்னை வண்டியில் ஏற்றிய சமயமும் ஒன்றாக இருந்தன. கிருட்டிண பகவானது திருமுக மண்டலத்தை விளக்கிய அந்தக் கற்பூர ஒளி, “பழகிய இடத்தை விட்டுவிட்டுப் புதிய இடத்திற்குப் போகிறோமே!” என்ற கவலையுடன் இருந்த என் தந்தையாருடைய உள்ளத்தையும் விளக்கியது. எதிர்காலத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத வாழ்க்கைப் பிரயாணத்தில் தெய்வத்தின் திருவருள் துணை செய்யுமென்ற ஆறுதல் அவர் நெஞ்சிற் குடிகொண்டது.

என் தாயார் வண்டியில் ஏறினார்; தந்தையாரும் வண்டியில் அமர்ந்தார். குன்னத்தை நோக்கி எங்கள் வண்டி நகர்ந்தது.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.

அகரமுதல