Saturday, March 18, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙை) – இலக்குவனார் திருவள்ளுவன்




[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே) – தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙை)

இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி
  “பேராசிரியர் இலக்குவனார் இலங்கைத் தமிழர் நலன் குறித்து அப்பொழுதே பேசினார். வரைபடம் ஒன்றில் இலங்கையில்  தமிழர்பகுதியைத் தனியாகக் காட்டிப்  புத்தகம் ஒன்றில் வெளியிட்டார். திருச்சி வானொலி உரை ஒன்றில், இலங்கையில் உள்ள தமிழர்கள் தன்னுரிமையுடன் வாழ்ந்தால்தான் அவர்கள் அங்கே உரிமையுடன் நிலைத்து வாழ முடியும் என்றார். அக்காலக்கட்டத்தில் இலங்கைக்குச் செல்ல அழைப்பு வந்தபொழுது இவர் வந்தால் இலங்கை இரண்டாகும் என்று காரணம் சொல்லி இலங்கை நுழைவுரிமையை மறுத்து விட்டது”
என்றார். ஓர் உண்மையான தலைமைப் போராளியால்தானே  விடுதலை வேட்கையைத் தொலைநோக்குக் கண்ணோட்டத்துடன் கணிக்க இயலும். இந்திய அரசு தன் நாட்டு நலனுக்காக இலங்கைத் தமிழர்களைப் பலி கொடுக்கும் என்று எழுதியும் பேசியும் வந்தவரல்லவா? அவரது முன் விழிப்புணர்வை நாம் சரியாகப் பயன்படுத்தாததால்தானே ஈழத்தில் இன்றைய  இனப்படுகொலைகள் பெருமளவு பெருகி நம் ஆருயிர் தமிழர்களை இழந்து வருகிறோம்.
  பணி இல்லாத பொழுதும் மனச்சான்றுக்கு ஏற்ப நேர்மையாய் வாழ்ந்த பேராசிரியரின் சால்பிற்குச் சான்றாகவும் ஒரு நிகழ்ச்சியைத் திரு முருகு பாண்டியன் தெரிவித்தார்.
 “ஐந்தாம் படிவம்(பத்தாம் வகுப்பு)வரைதான் பள்ளியில் நடத்தப்பட்டது. பேராசிரியர் இலக்குவனார் வந்த பின்புதான் பள்ளி இறுதி வகுப்பு எனப்படும் (ஆறாம்படிவ)பதினொன்றாம் வகுப்பிற்கான  இசைவைப் பெற்றார். இதுவும் மக்கள் நலனையே நாடும் அவரது உயரிய பண்பைக் காட்டும். அப்பொழுது பள்ளிக் கல்வி இயக்குநராக இருந்த தம் நண்பர் திரு நெ.து.சுந்தரவடிவேலு அவர்களைச் சந்தித்துப் பள்ளிக்கு ஆறாம் படிவத்தின் (பதினொன்றாம் வகுப்பின்) தேவையை வலியுறுத்தினார். பேராசிரியர் இலக்குவனார் கல்லூரியில் பணியாற்றுவதற்குரிய முழுத் தகுதி உடையவராக இருப்பினும் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்தான் தலைமை ஆசிரியராக முடியும். பதினொன்றாம் வகுப்பிற்கு இசைவு தந்தால் வேறு ஒருவரைத் தலைமை ஆசிரியராக ஆக்க வேண்டும். பேராசிரியர் இலக்குவனார் இயக்குநர் என்ற முறையில் செயல்பட வேண்டும் என்று இயக்குநர் தெரிவித்தார். விதிக்குக் குறுக்கே தான் நிற்கவில்லை என்றும் பகுதி மக்களின் வளர்ச்சிக்காகக் கட்டாயமாகப் பதினொன்றாம் வகுப்பு தேவை என்றும் சொல்லி இசைவாணை பெற்று வந்தார். வந்த பின்பு பள்ளியை நடத்துவோருக்குப் பெரும் அதிர்ச்சி. பதினென்றாம் வகுப்பு இப்போதைக்குத் தேவையில்லை என்றும் பேராசிரியர் இலக்குவனாரே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பேராசிரியர் இலக்குவனாரோ, இச்செயல் மாணவர் நலனுக்கு எதிரானது எனக் கூறி இதனை ஏற்கவில்லை. பள்ளிக்கல்வி இயக்குநர் கூறியவாறு பள்ளி இயக்குநராகவாவது தொடர வேண்டும் என வேண்டினர். “பள்ளியின் பொருளியல் நிலைக்கு அது வீண் செலவாகும். எனவே, பள்ளி நலனுக்கு எதிராக இச்செயல் அமையும்” என்று பேராசிரியர் இலக்குவனார் மறுத்து விட்டார். தனக்கு வேண்டியவாறு விதிகளை உருவாக்கிப் பதவிகளை அடைவோர் நடுவே நடைமுறை விதிகளுக்கு இணங்கப் பதவியைத் துறந்த பேராசிரியர்போல் ஒரு மாமணியை எங்கும் பார்க்க இயலாது.”
    திருவெறும்பூரில் பணியைத் துறந்த பின் முன்பு விருதுநகரில் தம்மிடம் பயின்ற மாணவர் அழைப்பிற்கிணங்கப் புதுக்கோட்டை சென்றார். அங்குத் தனிப்பயிற்சிக் கல்லூரி எதுவும் இல்லை யாதலின் பேராசிரியர் இலக்குவனார் அதனைத் தொடங்க வேண்டும் என்றே அவர் அழைத்திருந்தார். அப்பணியுடன் வழக்கமான தமிழ்த் தொண்டுகளை ஆற்றவும் பேராசிரியர் இலக்குவனார் தவறவில்லை.
(தொடரும்)
 – இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, March 11, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙெ) தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே)

இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி
  பெரியார் அவர்கள், தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டுப் பிரிவினையை வேண்டப் போவதாக அறிவித்துள்ளார்கள். ஆனால், தேர்தலில் காங்கிரசுக்கட்சி வெற்றி பெற உழைத்துவிட்டுப் பின்னர்ப் பிரிவினை கேட்கப் போகிறேன் என்பது அறிவுக்குப் பொருந்துவதாக இல்லை. மொழிவழி மாநிலங்கள் உரிமையுடன் வாழ வேண்டுமானால் காங்கிரசுக்கட்சி மறையவேண்டும். காங்கிரசுக்கட்சியால்தான் மாநிலங்கள் உரிமையற்றுக் கிடக்கின்றன. ஒரே இந்தியா என்ற கொள்கையை உறுதியாகப்பற்றி நிற்கும் காங்கிரசை அகற்றினாலன்றிப் பிரிவினைக் கொள்கை வெற்றி பெறாது. ஆகவே, பெரியார்  அவர்கள் காங்கிரசுக் கட்சிக்கு உதவுவதை விடுத்துத் தம் உயிர்க் கொள்கைக்கு உறுதுணையாய் நிற்போரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென வேண்டுகிறேன்.
  பிரிவினை என்பது நாட்டைத் துண்டுபோடுவது அன்று. உரிமை ஆட்சியை ஒவ்வொரு மாநிலத்துக்கும் அளித்துப் பின்னர்க் கூடிவாழும் சூழ்நிலையை உருவாக்குதலே.
(குறள்நெறி 15.5.66)
  பேராசிரியர் இலக்குவனார் நடத்திய இதழின் தலைப்பில் (திராவிடக்) கூட்டரசு இருப்பினும் முன்னர்த் தெரிவித்ததுபோல் தனி உரிமை உடைய மொழிவழி நாடுகள் அமைய வேண்டும் என்றும்  அவை விருப்பத்திற்கேற்ப கூட்டரசு அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பேராசிரியர் வலியுறுத்தி வந்தார். இந்தியத்திற்கு மட்டுமல்லாமல் தனித் திராவிடத்திற்கும் எதிராகவே மொழிவழித் தேசியத்தை அன்றைய நிலையில் வேறு யாரும் வலியுறுத்தவில்லை.  பேராசிரியர் தொலைநோக்கு உணர்வுடன் கூறுவது போல் இந்தியக் கண்டம் மொழி வழி அமையும் நாடுகளின் கூட்டரசாகத் திகழ்ந்தால் அக்கூட்டரசு வலிவும் பொலிவுமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
 திருவெறும்பூரில் உள்ள முக்குலத்தோர் பள்ளியை நடத்த பணியாட்சி அறிந்த கல்வியாளர் தேவை என்பதால் பேராசிரியரை அழைக்க அவரும் அங்கே சென்று முதல்வர் பொறுப்பை ஏற்றார் (30.11.52-30.09.53). கல்லூரியில் இருந்து பள்ளிக்கு வந்து விட்டோமே என எண்ணாமல் கல்விக்கூடம் யாவுமே கோயில் என எண்ணிப் பணியாற்றினார்.
   திருவெறும்பூர் முக்குலத்தோர் பள்ளியின் முதல்வராகப் பேராசிரியர் பணியாற்றிய பொழுது அங்கே எழுத்தராக இருந்த பல்குரல் மன்னன் திரு முருகு பாண்டியன் பேராசிரியர் பற்றிய நினைவைப் பின்வருமாறு போற்றுகிறார்:
 “இப்பள்ளி நிதிநிலையில் மிகவும் இடர்ப்பட்ட நிலையில் இருந்த பொழுதுதான் பள்ளிச் செம்மைக்கெனப் பேராசிரியரை முதல்வராக ஆக்கினர். அவர் வந்தபின்புதான் பாண்டியராசன் என்னும் பெயரை மாற்றி முருகுபாண்டியன் எனப் பெயர் சூட்டி, நான் தமிழ் படிக்கவும் வழி செய்து தந்தார். பள்ளியில் சம்பளத்திற்கான பொருளுதவி வராத சூழலில் பேராசிரியர் நகைகளை அடகு வைத்துப் பள்ளிச் செலவிற்கென அளித்து விடுவார். என்றேனும் ஒரு நாள் அவருக்குப் பணமுடை மிகுதியாக இருந்தால் ‘என்னய்யா பள்ளிக்கு எதுவும் வருவாய் வந்துள்ளதா’ என்பார். அவ்வாறு ஏதேனும் வருவாய் வந்திருக்கும் பொழுது நான் அதில் இருந்து அவர் தந்த பணத்தில் ஒரு பகுதியைத் திருப்பிக் கொடுப்பேன். இதை மறவாமல் குறித்துக் கணக்கு வைத்துக் கொள் என்பார். ஆனால், ஒரு நாளும் அவர் பள்ளிக்கு நிதி உதவிய பொழுது அதைக் கணக்கில் வைத்துக் கொள் என்று சொன்னதில்லை.
 அவர் இப்பள்ளியை விட்டு நீங்கி ஐந்தாண்டுகள் ஆன பின்புதான் அவருக்கு வர வேண்டிய சம்பளத் தொகை வந்தது. அதை மட்டும் தவறாமல் அனுப்பி வைத்தோம். அப்பொழுது கூட அவர், ‘நான் பள்ளிக்குத் தந்த பணம் வரவில்லையா? எப்பொழுது வரும்?’ என்றெல்லாம் கேட்டதில்லை.”
  இவ்வாறு நினைவுகூர்ந்து வியக்கும் திரு முருகுபாண்டியன் பேராசிரியர் பற்றிய மற்றொரு செய்தியையும் உணர்ச்சியுடன் தெரிவிக்கின்றார்.
(தொடரும்)

Thursday, March 09, 2017

மறக்க முடியுமா? பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்





மறக்க முடியுமா?

பெருமழைப்புலவர்

பொ.வே.சோமசுந்தரனார்

  சங்க இலக்கியங்களைப் பெருமளவு பதிப்பித்து வெளியிட்ட பெருமை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைச் சேரும்.
 இக்கழகத்தின் ஆட்சியாளராக இருந்த வ.சுப்பையா(பிள்ளை)அவர்கள் தேர்ந்த உரையாசிரியர்களைக் கொண்டு சங்க இலக்கியங்களுக்கு உரை எழுதவும், வரலாற்று ஆய்வாளர்களைக் கொண்டு வரலாறு – ஆய்வு நூல்களையும் எழுதவும் பெரும் காரணமாக இருந்தவர்.
  இவரால் மிகச் சிறந்த உரையாசிரியர்களாகத் தமிழ் உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பெரும் புலவர்களுள் ‘பெருமழை’ பெ.வே.சோமசுந்தரரும் ஒருவர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், மேலப்பெருமழை என்ற ஊர்தான் சோமசுந்தரனாரின் சொந்த ஊர்.
தாயார் : சிவகாமி அம்மாள்.
தந்தை : வேலு(த்தேவர்).
பிறந்த ஆண்டு : ஆவணி 21, 1940 / 05.09.1909.
மறைந்த ஆண்டு : மார்கழி 19, 2003 / 03.01.1972
இவரின் கல்வி திண்னைப்பள்ளியிலிருந்து  தொடங்கியது.
திண்ணைப்பள்ளியில் ஆத்திசூடி, அரிச்சுவடி, வெற்றி வேட்கை, நிகண்டு நூல்கள், நைடதம், அருணாசலப் புராணம் போன்ற நூல்களைத் தெளிவுறப் படித்துத் தேர்ந்தார்.
இவரின் தந்தையார் வேளாண்மைத் தொழில் செய்து வந்தார்.
தன் மகனின் கல்வியில் இவருக்கு நாட்டம் இல்லை. எனவே தன் மகன் சோமசுந்தரனாரை இவர் உழவுத் தொழிலில் ஈடுபடுத்தினார்.
ஆனால் நம் சோமசுந்தரனாருக்குக் கல்வியின் மேல் பெரு நாட்டம் இருந்தது.
தந்தை சொல் மீறாமல் பகலில் உழவுத் தொழில் செய்தார். இரவில் தந்தைக்குத் தெரியாமல் நூல்களைத் தேடிப் படிக்கத் தொடங்கினார்.
இவரின் 10ஆம் அகவையில் தாயார் மரணம் அடைந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்டார்.
வேண்டிய பாசமும், போதிய பேணுகையில் இல்லாத நிலையில், இவர் தன் தாய் மாமன் வீட்டிற்குச் சென்று அங்கு வளர்ந்தார்.
  இந்நிலையில் மாமன் வீட்டிற்கு அருகில் சருக்கரைப் புலவரைச் சந்தித்த சோமசுந்தரனார், அவரிடம் தன் கல்வி வேட்கையையும், தான் படிக்க விரும்புவதையும் சொல்லியிருக்கிறார்.
  சருக்கரைப் புலவரோ, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பூவராகம்(பிள்ளை) அவர்களுக்கு ஒரு பரிந்துரை மடல் எழுதி சோமசுந்தரனாரை அனுப்பி வைத்தார்.
 சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த சோமசுந்தரனார், அங்குக் கல்வி பயிற்றுவித்துக் கொண்டிருந்த அறிஞர் பெருமக்களான பண்டித மணி கதிரேசஞ்(செட்டியார்), சோமசுந்தர பாரதியார், விபுலானந்த அடிகளார் ஆகியோரிடம் கல்வி பயின்றார்.
  அப்பல்கலைக் கழகத்தில் புலவர் தேர்வில் முதல் மாணவராக இவர் தேர்ச்சி பெற்றார்.
  ஆனாலும் எர்சுகின் பிரபு என்ற ஆங்கிலேய ஆளுநர் ஏனோ தெரியவில்லை, இவரின் மீது இருந்த கோபத்தால் இவரின் தேர்ச்சிச் சான்றிதழைக் கிழித்து எறிந்து விட்டார்.
  நொந்து போன சோமசுந்தரனார் தன் ஊரான பெருமழைக்குத் திரும்பி மீண்டும் உழவுத் தொழிலைச் செய்யத் தொடங்கினார்.
  இந்நிலையில், ஆற்றா மனநிலையில் ஒரு முறை தன் ஆசிரியரான பண்டிதமணி கதிரேசஞ்(செட்டியாரை) இவர் போய் பார்த்து இருக்கிறார்.
  தன் மாணவனின் அறிவாற்றலை நன்கு அறிந்திருந்த பண்டிதமணி அவர்கள், தான் உரை எழுத வேண்டும் என்று நினைத்திருந்த திருவாசகத்தை சோமசுந்தரனாரிடம் கொடுத்து அதற்கு உரை எழுதப் பணித்தார்.
 சோமசுந்தரனார் எழுதிய முதல் உரை இதுதான். திருவாசக உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
  அப்போது சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் புலவர் கருப்பக்கிளார் இராமசாமிஅவர்கள் இலக்கிய நூல்களுக்கு உரை எழுதிக்கொண்டு இருந்தார்.
 திருவாசக உரையின் தாக்கம், சோமசுந்தரனாரைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஈர்த்துக் கொண்டது.
அங்கே,
  நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, ஐங்குறுநூறு,  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி, நீலகேசி, பெருங்கதை, புறப்பொருள் வெண்பாமாலை, பரிபாடல், கல்லாடம், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, பட்டினத்தார், திருக்கோவையார் ஆகிய 21 நூல்களுக்கு உரை எழுதினார்.
  சங்க இலக்கியங்களுக்கு இவரின் உரையில் திணைகள், துறைகள் குறித்த விளக்கம், பழைய உரைக் குறிப்புகள், அதற்கான விளக்கம், தெளிவான சொற்பொருள், இலக்கணக் குறிப்புகள் செம்மையாக இருக்கும்.
இவர் மிகச் சிறந்த நாடக நூலாசிரியர். ‘செங்கோல்’, ‘மானனீகை’ ஆகிய இரண்டு மிகச் சிறந்த நாடக நூல்களை எழுதியிருக்கிறார்.
  பண்டிதமணியின் வரலாற்றை, வரலாற்று நூலாகவும் எழுதியிருக்கிறார்.
 பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் மறைவுக்குப் பிறகு இவரின் இரண்டு மக்களும் வறுமைக்குள்ளானார்கள்.
  அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள், பெருமழைப் புலவரின் தமிழ்த் தொண்டு, ஆற்றிய பணிகள், எழுதிய உரைகள் அவற்றின் சிறப்புகளை விரிவாக எடுத்துச் சொல்லி அவரின் குடும்பம் இருக்கும் வறுமை நிலையைச் சுட்டிக் காட்டி அவரின் மக்களுக்கு புரட்டாசி 01, 2041 / 17.09.2010 ஆம் நாள் உரூபாய் 10 இலட்சம் நிதியுதவி செய்தார்.
 கலைஞரின் இந்த அரசாணை விளக்கத்தில் பெருமழைப்புலவரின் நூல்களை நாட்டுடைமையாக்க சில இடர்கள் இருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
  மேலப் பெருமழை ஊரின் ஊராட்சி நூலகம் பொ.வே.சோமசுந்தரனார் நினைவாக அவரின் பெயரிலேயே இயங்கி வருகிறது.
  இவர் ஒரு கவிஞரும் ஆவர்.
  தஞ்சாவூரில் ஒரு முறை சூறாவளியுடன் கடுமையான மழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
  அதைப் பார்த்த நம் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நெஞ்சம் நெகிழ்ந்து எழுதிய கவிதையின் ஒரு பகுதி:
“எளியோர்கள் சிறுகுடிலும் எழிலோங்கு
மாளிகையும் இரைந்து சீறித்
துளியோங்கு மழையோடே சூறாவளி
சாடுதலால் சுவர்கள் சாயப்
புளியோங்கு மாமரமே தென்னைமரம்
வாழைமரம் புல்பூண் டோடே
களியோங்கு பைங்கூழும் கரும்புகளும்
பாழாகிக் கழிந்த வாறே!’’
இவரை நாம்
மறக்கமுடியுமா?
எழில்.இளங்கோவன்
கருஞ்சட்டைத்தமிழர்: மார்ச்சு 01-15, 2017