Tuesday, June 08, 2021

நிறைவாகப் பேரா.ப.மருதநாயகத்தின் தற்பணி நூல்

 

அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 68/69  இன் தொடர்ச்சி)



 




பேராசிரியர் ப. மருதநாயகம்தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

69/69

 

நானும் என் தமிழும் – ஆங்கிலத்தை ஏவல் கொண்ட தமிழ்த்தேடல். (2011)

கோவைஞானியின் தமிழ்நேயம் இதழின் 43 ஆவது வெளியீடாக இவரின் இந்நூல் வெளிவந்துள்ளது. தமிழிலக்கியச் சிறப்பை வெளிப்படுத்தும் மேனாட்டாரின கருத்துகளை  மேற்கோள்களாக ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். இவர் பெற்ற ஆங்கிலக் கல்வி தமிழின் அருமை பெருமைகளைப் பாரறிய பரப்புவதற்கே என்பதைக் கொள்கையாகக் கொண்டு வாழ்கிறார் என்பதை இந்நூல் மூலம் அறியலாம். இவரது கல்விப்பணி, நூற்பணி, பிற படைப்புப்பணி முதலியவற்றை உணர்த்தும் தன் வரலாற்று நூல்.

இதன் முன்னுரையில் கோவை ஞானி அவர்கள், “அறிஞர் மருதநாயகம் கையெழுத்தில் 180பக்க அளவில் கட்டுரையை அனுப்பியிருந்தார்; பக்க வரம்பு கருதி, அவற்றில் சிலவற்றை அவரின் ஒப்புதலுடன் விட்டுவிட்டேன்; இன்னும் விரிவாக அவர் எழுத வேண்டிய இந்தக் கட்டுரையைப் பின்னர் நூல்வடிவில் அவரே வெளியிடுவார் என நம்புகிறேன்”; எனக் குறிப்பிட்டுள்ளார். பேரா.முனைவர் ப.மருதநாயகம் அவர்கள் தம்முடைய முழுமையான தன் வரலாற்று நூலை எழுதி வெளியிடுவது அவரின் தமிழ்த்தேடலை நன்கு அறிய வாய்ப்பாக இருக்கும்.

பேரா.முனைவர் ப.மருதநாயகம் எழுதிய பெரும்பான்மை நூல்களிலிருந்து அவரது கருத்துச் சுருக்கங்களைப் பார்த்துள்ளோம். வேண்டிய சில நூல்களைத் தந்துதவிய பேரா.ப.மருதநாயகம் ஐயாவிற்கும் அச்சுப்பதிப்பில் இருந்தாலும் வேண்டியதற்கிணங்கக் கணியச்சுப்படிகளைத்தந்துதவிய பதிப்பகத்தாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தொடர் கட்டுரைகளில் என் குறிப்பில் அமைந்த வரிகள் தவிரப் பிற யாவும் நூல்களில் உள்ள நூலாசிரியர்  கருத்துகளே. ஒவ்வொரு முறையும் அவர் பெயரைக் குறிப்பிடும் பொழுது படிப்பதற்கு இடராக இருக்கும் எனக் கருதிப் பேரா.ப.ம.நா.பெயரைக் குறிப்பிடவில்லை. முன்னரே படித்திருந்த நூல்களைத்தவிரப் பிற  நூல்களைகடக் கடந்த ஆண்டே பெற்றாலும் முழுமையாகப் படித்து எழுதக் காத்திருந்ததால் காலத்தாழ்ச்சி ஏற்பட்டது. நூல்களைப் படிக்கும் பொழுது எதைச் சேர்ப்பது எதை விடுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. எனினும் சில கருத்துகளை மட்டுமே கையாண்டுள்ளேன். அவரது நூல்களை நேரடியாகப் படித்துப் பயனுறுமாறு அன்பர்களை வேண்டுகிறேன்.

அவரது நூல்களில் இடம் பெறாக் கட்டுரைகள், கருத்தரங்கக் கட்டுரைகள், சொற்பொழிவுகள் முதலியவற்றை அறிய நேர்ந்தால், இவரது நுண்மாண் நுழைபுலம் மேலும் தெற்றென விளங்கும். இலக்கியங்களின் சிறப்புகளை மட்டுமல்ல, மறைக்கப்பட்ட தமிழ் குறித்த உண்மைகளை வெளிக்கொணர்தல், தமிழுக்கு உட்பகைவர்கள் செய்த சிதைவுகளையும் கேடுகளையும் உணரச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தல், சமற்கிருதத்தின் உருவாக்கப்பட்ட பொய்யான உயர்வு மாடங்களை உடைத்தெறிதல், சமற்கிருதமே தமிழுக்கு மூலம் என்று மக்களை ஏமாற்றி வந்ததை ஆய்வறிஞர்கள் வாயிலாகக் கிழித்தெறிதல் முதலான தம் ஆய்வுப்பணிகள் மூலம், தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

தாங்கள் போற்றும் / அறிந்துள்ள பேரா.ப.மருதநாயகத்தின் முழு ஆய்வுப்புலமையை அறிய இக்கட்டுரைத்தொடர் உதவியதாகப் பெரும்பான்மையர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சாதிப்பற்றின் காரணமாக மூவர் இவர் காழ்ப்புணர்ச்சியுடன் கருத்துகளை வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். உண்மையில் அத்தகைய தவறான கண்ணோட்டம கொண்டவர்கள்தாம் காழ்ப்புணர்ச்சியில் நோக்குகின்றனர்.

ஆனால் பேரா.ப.மருதநாயகம் ஆழ்ந்து படித்து, நடுவுநிலைமையுடனும் துணிவுடனும் சொல்ல வேண்டிய கருத்துகளைச் சொல்லி ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறார். பதவி நலன்களுக்காக உண்மையை மறைக்கும் கயமை இவரிடம் இல்லை.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு

(திருவள்ளுவர், திருக்குறள் 397)

 என்பதற்கு எடுத்துக்காட்டாக தம் கல்வியையும் ஆய்வையும் தொடரும் ஈடுபாட்டாளராகத் திகழ்கிறார்.

இன்றும்கூடச், சமற்கிருத நூல்களே தமிழ் நூல்களுக்கு மூலம் என்னும் பொய்யான குப்பைக் கருத்துகளைத் தாங்கி நூல்கள் வந்து கொண்டுள்ளன.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

(திருவள்ளுவர், திருக்குறள் 423)

என்னும் பொதுமறைக்கிணங்கச் சொல்லியவர் யார் என்னும் பின்புலம் பாராமல் சொல்லப்பட்ட கருத்துகளின் உண்மைத் தன்மையை உறுதியாக எடுத்துரைத்து வருகிறார்.

தமிழின் தொன்மையையும் முதன்மையையும் தாய்மையையும் முன்னரே அறிஞர்கள் கூறியிருந்தாலும் அவை இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. அவற்றையும் குன்றின்மேலிட்ட விளக்காக ஏற்றி வருகிறார். இவரது படைப்புகளில் ஆங்காங்கே மொழிபெயர்ப்புக் கவிதைகளும் மேற்கோள்களும் இடம் பெறுகின்றன. இவற்றின் மூலம் இவரின் சிறப்பான மொழிபெயரப்புத் திறனும்  கவிதை ஆக்கச் சிறப்பும் வெளிப்படுகின்றன. இவரின் திறமான திறனாய்வும் ஒப்பற்ற ஒப்பாய்வுப் புலமையும் இவரது ஆராய்ச்சி முறைக்குப் பிறரை ஈர்க்கின்றன.

ஏற்கெனவே கூறியவாறு தமிழைப் போற்றுவதற்காக பேரா.முனைவர் ப.மருதநாயகத்திற்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும். இவரது நூல்களும் நூற்பகுதிகளும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடங்களாக வைக்கப்பட வேண்டும்

ஆய்வுலகக் கலங்கரை விளக்கம் பேராசிரியர் முனைவர் ப.மருதநாயகம் மங்காப்புகழுடன் நூறு ஆண்டுகள் கடந்தும் வாழியவே!

– இலக்குவனார் திருவள்ளுவன்

 



Monday, June 07, 2021

போராளி அறிஞர் இலக்குவனார் – பேரா.ப.மருதநாயகம்

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 67/69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

68/69

  1. Ilakkuvanar: Scholar as Warrior

(அறிஞர் இலக்குவனார்: போராளியாக)

பேராசிரியர் சி.இலக்குவனார் குறித்துத் தமிழில் சில வரலாற்று நூல்கள் வந்துள்ளன. சாகித்திய அகாதெமியும் வெளியிட்டுள்ளது. அவர் ஆய்வு குறித்து ஆய்வேடுகளும் வந்துள்ளன. எனினும்  தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பால்  அயல் மொழியாளராலும் அறியப்பட்ட அவர் குறித்த ஆங்கில நூல் எதுவும் வரவில்லை. இலக்குவனாரின் கவிதைகளைத் தொகுத்து ஆய்வு நூல் வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ள பேரா.ப.மருதநாயகம் அதற்கு முன்னதாக அறிஞர் இலக்குவனார்: போராளியாக(Ilakkuvanar: Scholar as Warrior) என்னும் ஆங்கில நூலை வெளிக் கொணருகிறார்.

தகைசால் பேராசிரியராக, அறிஞராக, இலக்கியத் திறனாய்வாளராக, இலக்கணப் புலவராக, மொழியியல் ஆய்வாளராக, இதழாளராக, மொழிபெயர்ப்பு வல்லுநராக, யாவற்றினும் மேலாகப் பதவி இழப்புகளுக்கும் சிறைத் தண்டனைகளுக்கும் அஞ்சா நெஞ்சினராகப் போற்றப்படும் பேரா.சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமையை இதில் விளக்கியுள்ளார். தமிழினம், மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்பைத் தம்முடைய எழுத்துகளின் மூலம் புலப்படுத்தியதோடு, அவற்றைக் காக்கக் களத்தில் இறங்கிப் போராடிய பெருமையும் இவருக்கு உண்டு.

முதல் கட்டுரை இலக்குவனாரின் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பின் சிறப்பை விளக்குகிறது. பேரறிஞர் அண்ணா மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்தின்போது போப்பாண்டவரிடம் அளித்த இரண்டு நூல்களில் இலக்குவனாரின் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பும் திறனாய்வும் ஒன்றாகும். அதனை அவர், “Tolkaappiyam is a capsule of Tamil Culture” என்று அறிமுகப்படுத்தினார். இக்கருத்தை இலக்குவனாரின் நூல்களிலிருந்தே அண்ணா பெற்றிருக்க வேண்டும்.  தொல்காப்பியரின் கால வரையறை, தொல்காப்பிய இடைச் செருகல்கள், தொல்காப்பியர் குறிப்பிடும் அந்தணர் மறை சமற்கிருத வேதத்தைக் குறிக்கவில்லை, தொல்காப்பியம் மூல நூலே, அயல்மொழிச் சொற்களைத் தமிழ்மைப்படுத்தியே எழுத வேண்டும், ‘நிருத்த’ என்னும் நூலை இயற்றிய யசுகர், சில இடங்களில் தொல்காப்பியரைப் பின்பற்றியுள்ளார், தொல்காப்பியர் குறிப்பிடும் என்ப, என்மனார் ஆகிய சொற்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு வாழ்ந்த தமிழ்ப்புலவர்களையே குறிப்பிடுகிறது, ‘உம்’ என்பது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் குறிக்கும், அரிசுடாட்டிலுக்கு முன்னரே தமிழ்ப்புலவர்கள் செழுமை வாய்ந்த இலக்கியங்களைப் படைத்திருந்தனர் முதலான இலக்குவனாரின் பல்வேறு முடிபுகளை இதில் உரைக்கிறார்.

இரண்டாம் கட்டுரை ‘இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்:சங்கக்காலம்’ என்னும் நூல் குறித்தது. சங்க இலக்கியக் கருவூலத்தினை நாடும் நகரங்களும், மக்கள், அரசு, கல்வி, இல்லறம், கடவுட் கொள்கை, மெய்யுணர்வுக் கொள்கை, பண்பாடு, நாகரிகம், பொழுதுபோக்கு, பழக்க வழக்கங்கள், வணிகம், போர்கள், புலவர்கள் ஆகிய தலைப்புகளில் பேரா.இலக்குவனார் அளித்துள்ளதைக் குறிப்பிடுகிறார். தொல்காப்பியம் முதலான நூல்களின்  கால வரிசைக்கிணங்கத் தமிழ் இலக்கியக் காலங்களைப் பகுத்துள்ளதையும் எடுத்துரைக்கிறார்.

துணைக்கண்டமாக இருக்கும் பகுதியில் அக்காலத்தில் குமரி முதல் இமயம் வரை தமிழே வழங்கி வந்தது; பல பெயர்களால் குறிக்கப்பெறும் ஒரு கடவுட் கொள்கையே அக்காலத் தமிழர்கள் அறிந்தது; தொல்காப்பியரும் திருவள்ளுவரும் பெளத்தரோ சமணரோ அல்லர்; கிரேக்கம், உரோம், அரபு நாடுகளுடன் தமிழர்கள் கடல் வழி வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்; கற்றறிந்த சிலரே அறிந்திருந்த சங்க இலக்கியத்தை மக்களிடையே பரப்புவதற்காகச் ‘சங்க இலக்கியம்’ என்னும் வார இதழை நடத்தினார்; சங்க இலக்கியங்களில் தமிழ் என்னும் சொல் காணப்படுவதால் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் காணப்பெறும் திராவிட என்னும் சொல்லில் இருந்து தமிழ் என்னும் சொல் உருவானது எனக் கூறுவது முற்றிலும் தவறாகும்;  என்பன போன்ற பேரா.சி.இலக்குவனாரின் முடிவுகளை நமக்கு விளக்குகிறார்.

சங்க இலக்கியங்களை மக்களிடம் எடுத்துச் சென்ற முதல் நூலாக வும் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் துணை செய்யும் கருத்துக் கருவூலமாகவும் இலக்குவனாரின் இந்நூல் விளங்குகிறது.

மூன்றாவது கட்டுரையாக இலக்குவனாரின் திருக்குறள் தொடர்பான நூல்கள் குறித்து விளக்குகிறார். அமைச்சர் யார்? எல்லாரும் இந்நாட்டு அரசர்,வள்ளுவர் வகுத்த அரசியல், வள்ளுவர் கண்ட இல்லறம், திருக்குறள்-எளிய பொழிப்புரை ஆகிய நூல்களே அவை. மேலும் பொதுமக்களிடையே திருக்குறளைப் பரப்புவதற்காக இலக்குவனார், குறள்நெறி(தனிச்சுற்று இதழ்), குறள்நெறி திங்களிருமுறை இதழ், குறள்நெறி நாளிதழ், குறள்நெறி ஆங்கிலத் திங்கள் இருமுறை இதழ் ஆகிய இதழ்களையும் நடத்தியுள்ளார்.

திருக்குறளின் கட்டமைப்பை ஆழமான ஆய்வுக்குட்படுத்தி,ஒவ்வொரு பாலிலும் அதிகார வைப்பு முறையையும் ஒவ்வோர் அதிகாரத்திலும் பாடல் வைப்பு முறையையும் உரையாசிரியர்களிலிருந்து வேறுபட்ட வகையில் எடுத்துக்காட்டி, அதன் செம்மையை(integrity of the text) இலக்குவனார் புலப்படுத்துகிறார்.

திருக்குறளுக்குப் பரிமேலழகர் முதலானோர் ஆரியச் சார்புடன் தவறான விளக்கம் அளித்தமைக்கான மறுப்புகளை நடுநிலையுடன் ஆய்ந்து அளித்துள்ளார்; திருக்குறளுக்கு அறிவியல் நோக்கில் விளக்கங்கள் அளித்துள்ளார்;   மாணாக்கர்களிடையேயும் மக்களிடையேயும் ஆய்வாளர் களிடையேயும் திருக்குறளை ஆழப் பதித்துள்ளார் என்கிறார் பேரா.ப.ம.நா.

     நான்காவதாகப், பேரா.இலக்குவனாரின் பாவியங்களை நமக்கு அறிமுகப்படுத்தி விளக்குகிறார். இலக்குவனார் புலவர் மாணாக்கராக இருந்த பொழுதே ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’(1933) என்னும் தனித்தமிழ்ப்பாவியத்தை எழுதியுள்ளார். ஒப்பற்ற ஆங்கிலப் புனைவியல் கவிஞராகிய கீட்சின்  ‘இசபெல்லா’ என்னும் ஆங்கில இலக்கியத்தைத் தழுவி எழுதியது என்ற வகையில் மொழிபெயர்ப்பு ஆக்கத்திலும் சிறப்பாக ஈடுபட்டுள்ளார். மூலநூலின் படியாக(நகலாக) இல்லாமல், இலக்குவனாரின் காவியம் மூலநூலின் சிறப்பை வெளிப்படுத்தும் தனித்தமிழ்ப் பனுவலாகச் சிறக்கக் காணலாம். பேச்சிலும் எழுத்திலும் சமற்கிருதம் கலக்கவேண்டிய தேவை இல்லை என்பதை எடுத்துக்காட்டும் வண்ணம் இனிய எளிய தமிழில் பாவியம் படைத்துள்ளார்; அவர் கையாண்ட உவமைகளைப் பின்னர் பெருஞ்சித்திரனார், இலெனின் தங்கப்பா முதலானோர் பின்பற்றியுள்ளனர்; இவ்வாறு எழிலரசி பாவியத்தின் சிறப்புகளையும் அதன் கதைச்சுருக்கத்தையும் நயமான பாடல்வரிகளுள் சிலவற்றையும் நமக்குப் பேரா.ப.ம.நா.அளிக்கிறார்.

தம் தமிழ்க்காப்புப் போராடடங்களினாலும் நேர்மையாலும் பேரா.இலக்குவனார் தாம் பணியாற்றிய  கல்வி நிறுவனங்களின் தலைவர்களால் துன்புறுத்தலுக்கு ஆளானார், பணி நீக்கம் செய்யப்பட்டார்.அத்தைகய நேரங்களில் தம் சிந்தையைப் படைப்புலகின் பக்கம் திருப்பினார்.

அவ்வாறு உருவானதுதான் ‘துரத்தப்பட்டேன்’ என்னும் சிறு பாவியம். இந்நூல் இவரின் தன்வரலாற்று நூலாக அமைந்துள்ளது. விருதுநகர் செந்திற்குமார நாடார் கல்லூரியில் பணியாற்றிய பொழுது அரசியல் காரணங்களால் பணி நீக்கம் செய்யப்பெற்றார். இவருக்கு ஆதரவாக மாணவர்களும் பொதுமக்களும் கிளர்ந்தெழுந்தனர். அப்பொழுது திருக்குறள் முதலான இலக்கிய நூற்கருத்துகளைப் பெய்து எளிய நடையில் ஆசிரியப்பா வகையில் இந்நூலை அளித்துள்ளார். இந்நூல் பெரும்பெயர் பெற்ற தமிழறிஞர்கள் எழுதியுள்ள தன் வரலாற்று நூல்களுக்கு முன்னோடி என்பதோடு அவற்றிற்கான முன்மாதிரியும் ஆகும்.

வன்னியர் வாக்கு அன்னியர்க் கில்லை

அன்னியர் வாக்கு வன்னியர்க் கில்லை

நாடார் வாக்கைப் போடார் பிறர்க்கு

செட்டியார் வாக்குக் கிட்டிடா பிறர்க்கு

தேவர் வாக்கு வேறெவர்க்கும் இல்லை

முதலியார் வாக்கு முதலியார் தமக்கே

என அன்றைய அரசியல் சூழலைப்படம் பிடித்துக்காட்டியுள்ளமை இன்றைக்கும் பொருந்துகிற தல்லவா?

சாதிமுறைகள் சாகுநாள் என்றோ

என அவர் கேட்பது இன்றைக்கும் கேள்வியாக இருக்கும் அவலம்தானே உள்ளது!

புதுக்கோட்டையில் வாழ்ந்த கல்விப்புரவலர் அண்ணல் சுப்பரிமணியனாரிடம் ஆற்றுப்படுத்தும் மற்றொரு பாவியம் மாணவர் ஆற்றுப்படை. தமிழ்ச்சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான ஆற்றுப்படையை இக்காலப் பாடுபொருள்களுக்கும் பயன்படுத்த இயலும் என்பதற்குத் தலையாய சான்றாகத் திகழ்வது இந்நூல்.

பிறவியில் எவரும் பேதையர் அல்லர்

வாய்ப்பும் வசதியும் வாய்க்கப் பெற்றால்

எவரும் பெரியராய் இனிதே உயரலாம்

என மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

ஆற்றுப்படை என்னும் பண்டைத்தமிழரின் இலக்கிய வகையைப் பயன்படுத்தி இக்காலச் சூழலுக்கேற்ப இவர் படைத்துள்ள இலக்கியப்பணியைப் பேரா.ப.ம.நா. பெரிதும் பாராட்டுகிறார்.

பெரியார், அண்ணா, நேரு, திரு.வி.க. பாரதி, பாரதிதாசன் முதலான ஆன்றோர்களைப்பற்றிய சொல்லோவியப் பாடல்களைப் பேராசி.இலக்குவனார் படைத்துள்ளார்.  புறநானூற்றுத்  துறையான இயல்நிலை வாழ்த்துபோல் இவற்றைத் திறம்படவும் அழகுபடவும் அளித்துள்ளார்.   

‘பழந்தமிழ்’, ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ முதலான இவரின் பிற நூல்களில் வெளிப்படும்  பேரா.இலக்குவனாரின் மொழியியல் ஆய்வுத்திறனையும் பழந்தமிழ்ச்சிறப்புகளை எடுத்தோதும் பெருமிதப் பாங்குகளையும் பேரா.ப.ம.நா.விளக்குகிறார்.

தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பால் பிறநாட்டு அறிஞர்  உலகால் அறியப்பட்ட இலக்குவனாரின் பணிச்சிறப்புகளையும் அறியும் வண்ணம் வாழ்க்கை ஓவியமாக இந்த ஆங்கில நூலைப் பேரா.ப.ம.நா. படைத்துள்ளார். அடுத்து இலக்குவனாரின் கவிதைச் சிறப்புகளை ஆங்கிலத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்னும் இவர் நோக்கமும் சிறப்பாக நிறைவேறும் எனலாம்.

 (தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 69/69)



Sunday, June 06, 2021

அச்சில் உள்ள பேரா.மருதநாயகத்தின் தமிழ், ஆங்கில நூல்கள்

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் மருதநாயகம் 66/69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

67/69

  அச்சில் உள்ள தமிழ் நூல்கள்

மேற்குறித்த நூல்கள்தவிர, மேலும் சில நூல்களையும் எழுதியுள்ளார். அவை அச்சில் உள்ளன. அவற்றில் தமிழ் நூல்கள் வருமாறு:

  1. தமிழ் அழகியல் – உலகளாவிய ஒப்பு நோக்கு

தமிழரின் அழகுணர்வு நீண்ட நெடுங்காலமாகவே மொழி, இலக்கியம், கவிதையியல், இசை, நடனம், சிற்பம், ஓவியம் ஆகிய துறைகளிலெல்லாம் வெளிப்படுத்தப் பெற்றுள்ளது. இதன் தொன்மையையும் சிறப்பையும் எபிரேய, கிரேக்க, உரோமானிய, ஆரிய இனத்தாரின் மொழிகளிலும் கலைகளிலும் இலக்கியங்களிலும் காணப்பெறும் அழகுணர்வோடு ஒப்பிட்டுப் பார்க்கு்ம் பொழுது நன்கு உணர முடியும். இத் தொகுதியிலுள்ள பதினெட்டுக் கட்டுரைகளும் காய்தல், உவத்தல் இன்றி இத்துறைகளில் ஆய்வை மேற்கொண்டுள்ளன. இக்கட்டுரைகளில் கூறப்பட்டுள்ள எல்லா முடிவுகளும் செய்திகளும் தக்க ஆதாரங்களுடன் அவ்வத்துறைகளில் ஆழ்ந்த பயிற்சியுடைய மேலைநாட்டு விற்பன்னர்களின் கருத்துகளுடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. தமிழின் உட்பகைவர்களும் புறப்பகைவர்களும் மறைக்கும் மறுக்கும் பல உண்மைகளை நம்மவர் அறிந்து கொள்ள வேண்டுமென்பதே இந்நூலின் தலையாய நோக்கமாகும்.

 சிறந்த ஒப்பிலக்கிய அறிஞரான பேரா.ப.ம.நா. தமிழ் அழகியலை உலகளாவிய ஒப்பு நோக்கில் சிறப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார் எனலாம்.

2. ஒப்பில் தொல்காப்பியம்

மொழியியல் அறிஞரான பேரா.ப.ம.நா. தொல்காப்பியத்தை இடைச்செருகல்கள் இன்றிப்பதிப்பித்தும் தொல்காப்பிய ஆய்வுக் கட்டுரைகளைப்படைத்தும் தம் தொல்காப்பியப் புலமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் எனும் மூன்று அதிகாரங்களில் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடுபற்றிக் கூறும் கருத்துகளையும் அவர் வரையறை செய்யும் தமிழ்க்கவிதை இயலையும் பிளேட்டோ, அரிசுடாட்டில், இலாஞ்சைனசு, ஓரசு, ஆனந்த வர்த்தனர், அபிநவகுப்புதர், குந்தகர், இராசசேகரர்,தண்டின் போன்றோரும் இன்றைய மேலைத்திறனாய்வாளர்களும் கவிதையின் பிறப்பு, தன்மை, பயன்பற்றிக் கூறும் ஆய்வுமுடிவுகளோடு ஒப்பிட்டுக் காட்டித் தொல்காப்பியரே இத்துறையில் தலைமையிடம் பெறத்தக்கவர் என்பதை நிறுவும் இருபதுக்கு மேற்பட்ட கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். சமற்கிருத இலக்கண, இலக்கிய நூல்கள் பலவும் தொல்காப்பியத்திற்குக் கடன்பட்டிருப்பதையும் தொல்காப்பியத்திற்குப் பின் வந்த தமிழ் இலக்கண நூல்களும் கன்னட மலையாள மொழிகளில் எழுதப்பெற்ற கவிசரா மார்க்கம், (இ)லீலா திலகம், போன்றவையும் தொல்காப்பியத்தின் வழி நூல்களே யென்பதையும் இக்கட்டுரைகள் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன. பிற மொழி நூல்களுக்கும் தொல்காப்பியம் மூல முதல் நூலாக இருக்கும் சிறப்பை இந்நூல்போல் வேறு நூல் உணர்த்தவில்லை.

3. ஒப்பில் கம்பன்

‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்னும் பழமொழி கம்பனின் கவிச்சிறப்பை உணர்த்தும். ‘ஒப்பில் வள்ளுவம்’, ‘ஒப்பில் தொல்காப்பியம்’ என நூல்களை அளித்துள்ள ஒப்பிலக்கிய அறிஞர் பேரா.ப.ம.நா. ‘ஒப்பில் கம்பனையும்’ நமக்கு அளித்துள்ளார்.

கிரேக்க மொழியிலுள்ள இலியத்து, ஒதிசி எனும் ஓமரின் வாய்மொழிப்பாடல்கள், இலத்தீன் மொழியிலுள்ள ஈனியித்து என்னும் வரைமொழிக் காப்பியம் இத்தாலிய மொழியிலுள்ள தாந்தேயின் தெய்விக இன்பியல் நாடகம் எனும் செவ்விலக்கியம் சமற்கிருதத்திலுள்ள வியாசபாரதம், வால்மீகி இராமாயணம், ஆங்கிலத்திலுள்ள விண்ணுலக இழப்பு என்னும் மிலட்டனின் அரிய நூல் ஆகியவை உலகப் பன்மொழி அறிஞர்கள் அறிந்தவை. இவற்றை யெல்லாம் படைப்பிலக்கியங்கள் என்று மதிப்பீடு செய்யும்போது கம்பனின் இராமகாதை பிற எல்லாவற்றையும் விடப் பல கூறுகளில் உயரந்திருப்பதைப் பன்மொழியறிவும் நேர்மையுணர்வும் இலக்கியத் திறனாய்வுத்திறனும் உடைய மேனாட்டறிஞர் சிலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். விபுலானந்தர் அடிகளார் தமது செகசிற்பியர்பற்றிய ‘மதங்க சூளாமணி’ என்ற நூலின் முன்னுரையில், “கம்ப நாட்டாழ்வார் அகலக் கவிகளுள் முதன்மை பெற்று விளங்குவதுபோல் செகசிற்பியார் நாடகக் கவிகளுள் முதன்மை பெற்று விளங்குகிறார்” என்று கூறுவார்.

ஐந்நூறு பக்கங்கள் கொண்டபேரா.ப.மருதநாயகத்தின் நூல் உலகக்காப்பியங்களோடெல்லாம் ஒப்பிட்டுக் கம்பனின் காப்பிய உயர்வை நிறுவுகிறது.

அச்சில் உள்ள ஆங்கில நூல்கள் வருமாறு:

  1. Tirukkural as the Book of the World

(உலக நூலாகத் திருக்குறள்)

திருவள்ளுவரின் திருக்குறளை உலகப்பொதுநூலாக ஏற்க வேண்டுமென்று தமிழன்பர்கள் வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளனர். அதற்கிணங்கத் திருக்குறளைக் கிரேக்க, உரோமானிய, ஆரிய, மேலை ஐரோப்பிய இனத்தவர்களின் அறநூல்களோடெல்லாம் ஒப்பிட்டு அஃதே உலக நூலென்னும் தகுதிக்கு உரியதென்று உலகப் பன்மொழி அறிஞர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று இந்நூல் வேண்டுகிறது. பிளேட்டோ, அரிசுடாட்டில், கேட்டோ, மார்க்கசு அவுரேலியசு, மனு, கெளடிலியர், பத்துருகரி,மாக்கியவல்லி, இசுப்பினோசோ,மோந்தேயின், பேகன் போன்றோர் விட்டுச்சென்றுள்ள படைப்புகளெல்லாம் கடடமைப்பிலும் கருத்துச் செறிவிலும் இலக்கியத்தரத்திலும் வள்ளுவரின் நூலைச் சற்றும் நெருங்க முடியாதவை என்னும் கருத்தை இந்நூலிலுள்ள கட்டுரைகள் ஐயத்திற்டமின்றி நிறுவுகின்றன.

  1. On translating Tamil Classics

(தமிழ்ச்செவ்விலக்கியங்களை மொழிபெயர்ப்பதுபற்றி)

பழந்தமிழ் இலக்கிய நூல்களை முழுமையாகவும் தேவைக்கேற்ப சிற்சில பாடல்களையும் மொழி பெயரத்துள்ளனர். இவ்வாறு, சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றையும் திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, பெரிய புராணம் போன்ற காப்பியங்களையும் ஆங்கிலத்திலும் பிற மேலை மொழிகளிலும் மொழி பெயர்க்கும்போது ஏற்படும் இடையூறுகளையும் சிக்கல்களையும் மொழிபெயர்ப்பு வல்லுநர்கள் அறிவர். சங்க இலக்கியஙக்ளில் சிலவற்றை ஏ.கே.இராமானுசன், சியார்சு ஆர்த்து, மார், அ.வெ.சுப்பிரமணியன்போன்றோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். திருக்குறளைப் போப்பு அடிகளாரும் எல்லீசரும் தமிழ் அறிஞர்கள் பலரும் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்துள்ளனர். சிலப்பதிகாரத்தை அலெயின் தேனியலு, ஆர்.பார்த்தசாரதி போன்றோரும் மணிமேகலையைப் பிரேமா நந்தகுமார் முதலியோரும் ஆங்கிலத்தில் தந்துள்ளனர்.

இம்மொழிபெயர்ப்புகளின் நிறைகளையும் குறைகளையும் இந்நூல் சுட்டிக் காட்டுகின்றது. இதன் மூலம் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இந்நூல் அமைந்துள்ளது.

  1.  Tamil Poetry Since Bharati

(தமிழ்க்கவிதை: பாரதிக்குப் பின்)

பாரதியைத் தொடர்ந்து தமிழ்க்கவிதைக்கு வளம் சேர்த்த பன்னிருவர் பற்றிய நூல் இது. இந்நூலில் பாரதி, பாரதிதாசன், கவிமணி தேசிகவிநாயகம்,இலெனின் தங்கப்பா, பெருஞ்சித்திரனார், கலைஞர் மு.கருணாநிதி, அபுதுல் இரகுமான், குலோத்துங்கன், சிற்பி, வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோருடைய கவிதைகள் மேலை நோக்கில் ஆராயப்படுகின்றன. இறுதிக் கட்டுரையில் இன்று வாழும் கவிஞர்கள் பலரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ளன. இவையெல்லாம் இக்காலத் தமிழ்க்கவிதைகளைத் தமிழறியாதார்க்கு ஆங்கிலத்தில் அறிமுகம் செய்வதோடு, தமிழ் இன்னும் உயிர்த்துடிப்புள்ள கவிதை ஊடகமாகச் செயல்பட்டு வருகிறது என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. மொழி பெயர்ப்பு வல்லுநரான பேரா.ப.ம.நா. எளிய முறையில் சிறப்பாக இப்பணியை முடித்துக் கவிஞர்களைச் சிறப்பித்துள்ளார்.

  1. Twelve Custodians of Tamil Culture

(தமிழ்ப்பண்பாட்டுப் பாதுகாவலர்கள் பன்னிருவர்)

தமிழின் அகப்பகைவர்களும் புறப்பகைவர்களும் இணைந்து காலந்தோறும் , தமிழினம், மொழி,இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் மீது பன்முகத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை. இத்தாக்குதல்களிலிருந்து தமிழ்மொழி, தமிழினம் முதலியவற்றைக் காக்கும் வகையில், பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்ப்பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு முன்னிலை வகித்த பன்னிருவர்பற்றிய கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். எல்லீசர் எனும் ஆங்கிலேயரும் விபுலானந்த அடிகள், தனிநாயக அடிகள் ஆகிய ஈழத்தமிழறிஞர் இருவரும் மறைமைலயடிகள் என்னும் தனித்தமிழ் இயக்க முன்னோடியும் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு, பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி அரிய நூல்களும் கட்டுரைகளும் எழுதியதோடு, தமிழுக்காகக் களத்தில் இறங்கிப் போராடிச் சிறை செல்லத் துணிந்தவரும் ஆகிய இலக்குவனாரும், ஆட்சியிலிருந்தபோதும் இல்லாதபோதும் ஆங்கிலத்திலும் தமிழிலும் கட்டுரைகள் சொற்பொழிவுகள் மூலமாகத் தமிழ்ப்பணியாற்றிய அறிஞர் அண்ணாவும் புலவராகவும புரவலராகவும் திகழ்ந்து தமிழுக்குப் பலவழிகளில் தொண்டு செய்த சிற்பி பாலசுப்பிரமணியமும் அறிவியல் அறிஞராகத் இருந்தும் ‘மானுடயாத்திரை’ எனும் அரிய காப்பியம் யாத்த வா.செ.குழந்தைசாமியும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் கவிப்பேரரசு வைரமுத்துவும் பன்மொழிப்புலவர் தெ.பொ.மீ.யும் இந்நூலில் இடம் பெறுகின்றனர்.

  1. Overshadowed Classics in Tamil

(புகழ் மங்கிய தமிழ்ச்செவ்விலக்கியங்கள்)

சங்க இலக்கியங்கள் உலக அறிஞர்களால் போற்றப்பட்டு வருகின்றன. எனினும் சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களாகிய குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, பரிபாடல், கலித்தொகை ஆகியவையும் பத்துப்பாட்டு நூல்களாகிய திருமுருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு ஆகியவையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகிய திருக்குறள், நாலடியார் ஆகிய இரண்டும் பின்வந்த காப்பியங்களில் சிலம்பு, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவையும் மட்டுமே உலக அறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இவற்றிற்குக் கிடைத்த வரவேற்பு ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, மலைபடுகடாம், ஐந்திணை நூல்கள், பழமொழி நானூறு,மணிமேகலை, பெரியபுராணம், தேம்பாவணி போன்ற தகுதியுடைய செவ்வியலக்கியங்களுக்குக் கிடைக்கவில்லை. எனேவ, இந்நூல்களின் மேல் உலக அறிஞர்களின் பார்வைபடவேண்டும் என்பதற்காக இவற்றின்மீது ஒளிவீச்சைப் பாய்ச்சியுள்ளார் பேரா.ப.ம.நா. இவற்றின் சிறப்புகளைத் தக்க சான்றுகளுடன் எடுத்துரைக்கும் கட்டுரைகளை இந்நூலில் அளித்துள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 68/69)

Saturday, June 05, 2021

தமிழின் செவ்வியல் தகுதி – ப. மருதநாயகம்

 அகரமுதல,


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 65/69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

66/69

தமிழின் செவ்வியல் தகுதி(2012)

பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்ச்செம்மொழித் தகைமையுடன் விளங்குகிறது. எனினும் கடந்த நூற்றாண்டு இறுதியில்தான் அதற்கான அறிந்தேற்பு கிடைத்தது. இருப்பினும் பலர் தமிழ்ச்செம்மொழித் தகைமையை முற்றுமாக அறியவில்லை. அனைவரும் அறிய ‘தமிழின் செவ்வியல் தகுதி’ என்னும் நூலைப் படைத்தார்.  இந்நூலில் தமிழின் தனிப்பெருங்கொடை என இறைச்சி, உள்ளுறைக் கோட்பாடுகளை நிறுவுகிறார். அத்துடன் சமற்கிருதத் தொனியும் வக்குரோக்குதியும் வெறும் படிகளே(நகல்களே) என்பதையும் தெளிவுபடுத்தி யுள்ளார்.  இந்நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசும் கிடைத்துள்ளது.

இந்நூல் ஒரு மீட்டுருவாக்கப் பதிப்பாகும். முதல் தொகுதி வெளிவந்தபோது தமிழ் ஒரு செவ்வியல் மொழி என்று இந்திய அரசால் அறிவிக்கப்படவில்லை. எனவே, அதில் தமிழின் செம்மொழிப் பண்புகள் வலியுறுத்தப்பட்டு, உலகம் தமிழைச் செம்மொழியாக ஏற்கப்பட வேண்டுமென்று வாதிடும் வகையில் எழுதியிருந்தார். அவற்றுடன் வேறு சில கட்டுரைகளையும் சேர்த்து இதை வெளியிட்டுள்ளார். எனவே, இந்நூலில் உள்ள சில கட்டுரைகள் இவரின் வேறு நூல்களிலும் உள்ளன.

இந்நூலில் 12 கட்டுரைகளில் தமிழின் செவ்வியல் தகுதிகளையும் உலக அறிஞர்களின் பார்வையில் தமிழ்ச் செம்மொழி இலக்கியங்களையும் காளிதாசன் பாடல்களில் உள்ள சங்கத்தமிழ்ச் செல்வாக்கையும் மண்ணுலக வாழ்வு குறித்த திருவள்ளுவர்,  பிளேட்டோ கருத்துகளையும் விளக்குகிறார்.

சங்கக்காலம் கட்டுரையில் முச்சங்க வரலாற்று உண்மைகளை உரைக்கிறார். சங்கக்காலத்தைக் கற்பனையாகக் கூறுவோருக்கும் அதன் காலங்களைப் பின்னுக்குத் தள்ளுவோருக்கும் தக்க மறுமொழிகள் அளித்துச் சங்கங்கள் உண்மையை உணர்த்துகிறார்.

நம் நாட்டில் வேண்டுமென்றே சமற்கிருத இலக்கியங்களை முற்பட்டதாகப் பொய்யுரைத்தும் தமிழ் இலக்கியங்களைப் பிற்பட்டதாக இட்டுக்கட்டியும் போலி நடுநிலையாளர்கள் உள்ளனர். இதுபோல் வெளிநாட்டிலும் சிலர் உள்ளனர். அவர்களில் ஒருவர், எருமன் திக்கென்(Hermen Ticken). இவர் ‘தென்னிந்தியாவில் காவியம்: பழந்தமிழ்ச் சங்கக்கவிதை(Kavya in South India: Old Tamil Cangam Poetry)’ என்னும் ஆங்கில நூலில் கி.பி.எட்டாம் நூற்றாண்டிற்குப் பின்பகுதிக்கு முன்னதாகச் சங்க இலக்கியம் தோன்றியிருக்கவில்லை என்றும் சமற்கிருத இலக்கியம் தமிழ்நாட்டில் நுழைந்த பின்னர்தான் சங்க இலக்கியம் தோன்றியிருக்கின்றது என்றும் இதுபோன்று பல பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார். அவற்றிற்குத் தக்க சான்றுகளுடன் மறுப்பு எழுதி நான்காம் கட்டுரையாக வெளியிட்டுள்ளார். அதன் தலைப்பு ‘சங்க இலக்கியம்: எருமன் திக்கெனின் பிதற்றல்கள்” என்பதாகும். எனவே, மேனாட்டாரின் சங்கஇலக்கியம் குறித்த கருத்துகளை எடுத்துக்கொள்வதுடன் நிற்கவில்லை. யாரேனும் எதிராகத் தவறாகக் கூறியிருந்தால் அவற்றையும் குறிப்பிட்டுத் தக்க மறுப்பு விளக்கமும் அளித்துள்ளார் பேராசிரியர் ப.மருதநாயகம். ஆய்வாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறையாகும் இது.

காய்தல் உவத்தலின்றித் தமிழின் செவ்வியல் தகைமை பிறமொழிகளால் எட்டப்படாத உயரத்தில் உள்ளதை இந்நூல் நமக்குப் புரிய வைக்கிறது. ஆனால், தமிழ்க்குடும்ப மொழியினர்  பொறாமையுற்றுத் தத்தம் மொழிக்கும் செவ்வியல் ஏற்பு வேண்டி அரசியலடிப்படையில் பெற்றும் விட்டனர் என்பது குறித்த மேனாட்டார் கருத்துகளையும் குறிப்பிட்டுள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 67/69)



Friday, June 04, 2021

எல்லீசின் திருக்குறள் விளக்கமும் சிலம்பின் ஒலியும் – ப.மருதநாயகம்

 

அகரமுதல


 (தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 64/69  இன் தொடர்ச்சி)




தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

65/69

எல்லீசின் திருக்குறள் விளக்கக் கையெழுத்துப்பிரதி / The Ellis’ Manuscript(2009)

தமிழார்வலராகவும் திருக்குறள் ஈடுபாட்டாளராகவும் இருந்தவர் இங்கிலாந்தில் இருந்து இங்கே அதிகாரியாக வந்த எல்லீசர்(F.W.Ellis). இவருடைய திருக்குறளின் முதல் 13 அதிகாரங்களின் மொழி பெயர்ப்பைச் சென்னைப்பல்கலைக்கழகம் ‘திருக்குறள் விளக்கம்’ என்னும் பெயரில் வெளியிட்டது. இளம் அகவையிலேயே அவர் இறந்துவிட்டதால் (அல்லது இறக்கும்படிச் செய்யப்பட்டதால்) அவர் விட்டுச்சென்ற கையெழுத்துப் படிகளை அறிஞர் போப்பு இங்கிருந்து எடுத்துச் சென்று பாடிலியன் (Bodleian) நூலகத்தில் சேர்த்தார். இதனைக் கேள்விப்பட்ட பேராசிரியர் ப.மருதநாயகம் அங்கே சென்று அக்கையெழுத்துப் படியை ஆராய்ந்தார். அதில் மேலும் மூன்று அதிகாரங்களுக்கு அவருடைய ஆங்கில மொழிபெயர்ப்பும் விளக்கக் குறிப்புகளும் இருக்கக் கண்டார். அவற்றை ஒளிப்படி எடுத்து நம் நாட்டிற்குக் கொண்டுவந்தார். அதற்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் முன்னுரைகள் எழுதி வெளியிட்டார். அதுவே இந்நூல்.

முன்னுரையில் தமிழின் தனிச்சிறப்பை உணர்த்தும் எல்லீசரின் வரிகளைப் பின்வருமாறு பேரா. ப.மருதநாயகம் குறிப்பிட்டுள்ளார்: :கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் புகழ்வாய்ந்த நூலை வெளியிடுவதற்கு அரை நூற்றாண்டிற்கு முன்னரே திராவிட மொழிகளின் தனித்தன்மை பற்றிய கருத்து எல்லீசால் அறிவிக்கப்பட்டது. தென்னிந்திய மொழிகள் யாவும் சமற்கிருதத்திலிருந்து தோற்றம் பெற்றவை என்ற எண்ணம் வேரூன்றியிருந்த காலத்தில் அவற்றை முறையாகக் கற்ற எல்லீசு, “தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் சமற்கிருதத்திலிருந்து பெறப்பட்டவையல்ல; அவற்றின் வாழ்வுக்கு அது தேவையற்றது. அவை ஒரு தனி மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை; சமற்கிருதம் அக் குடும்பத்தோடு பின்னால் கலந்து விட்டாலும் அதற்கு அக்குடும்பத்தோடு நெருங்கிய உறவு கிடையாது” (ப.V) என்று தெளிவாக அறிவுறுத்தினார். தமிழின் தொன்மையைக் கண்டறிந்த எல்லீசுக்குத் தமிழ் இலக்கியங்களின் பெருமையை உணர்வதும் எளிதாயிற்று. ஆக்குசுபோர்டு பல்கலைக்கழகத்து நூலகமான பாடிலியன் நூலகத்திலுள்ள அச்சேறாத கட்டுரையொன்றில், தமிழுக்கும் ஈபுரு மொழிக்குமுள்ள ஒற்றுமைகளைச் சுட்டும் எல்லீசு மனிதவாழ்வுபற்றிய நூல்கள் தமிழில் உள்ள அளவு வேறுஆசிய மொழி எதிலும் இல்லையென்று தெரிவிக்கிறார்.”

அல்லும் பகலும் தேடித்தேடித் தமிழ்ச்சுவடிகளை அச்சேற்றிய உ.வே.சா. அவர்கள் சில பாடல்களில் பாடபேதமுள்ள சொற்களை அச்சேற்றியிருப்பார். அவற்றைப் பாடபேதக் குறிப்புகளிலும் சுட்டிக்காட்டியிருக்க மாட்டார். அவற்றில் ஒன்று, புறநானூற்றுப்பாடல் 34இல்  இடம் பெறும்

“பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்“

என்னும் அடியாகும். எல்லீசரின் மேற்கோளில் இவ்வடி

குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்” என இடம் பெற்றிருக்கும்.

இவ்வாறு எல்லீசரின் மேற்கோள் வரிகள் நமக்குப் பயனுள்ள வகையில் அமைவதைச் சுட்டிக்காட்டியிருப்பார்.

சிலம்பின் ஒலி: ஆறு பரல்கள்(2010)

நூலில் ஆறு கட்டுரைகளை  அளித்துள்ளார். காளிதாசன் பாடல்களில் சிலம்பு ஒலிப்பதை முதல் கட்டுரையில் குறிப்பிடுகிறார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தையும் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் சாபக்கிளீசு(Sophocles) எழுதிய ஆந்திகொனி (Antigone)யையும் ஒப்பிட்டு அடுத்த கட்டுரை அமைகிறது. உருசிய அறிஞர் பகுதின்(Bakhtin) கருத்துகள் அடிப்படையில் கட்டமைப்பு, பாடுபொருள், காப்பியக்கூறுகள் யாவற்றிலும் பிறநாட்டுக் காப்பியங்களிலிருந்து வேறுபட்ட சிறந்த காப்பியமாகச் சிலப்பதிகாரம் உள்ளது என்பதை மூன்றாவது கட்டுரை நிறுவுகிறது.

நான்காம் கட்டுரையில் சிலப்பதிகாரம் குறித்த அடியார்க்கு நல்லாரின் திறனாய்வுகளையும் ஐந்தாம் கட்டுரையில் சிலம்பில் தெ.பொ.மீ. காணும் புதுமைகளையும் விளக்குகிறார். இறுதிக் கட்டுரையில் சிலப்பதிகாரத்திற்கு இராமச்சந்திர தீட்சிதர், அலெயின் தேனியலு(Alain Sanie’lou), ஆர்.பார்த்தசாரதி ஆகியோர் அளித்துள்ள ஆங்கில மொழிபெயர்ப்புப் போக்குகள் குறித்து விளக்குகிறார். அம்மூன்று மொழிபெயர்ப்புகளும் செய்துள்ள மன்னிக்க முடியாத தவறுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. நிறைவாக, “இம்மூவரின் மொழி பெயர்ப்புகளும் மூலத்தின் சிறப்பு பிற மொழியாளர்க்கு உணர்த்தப் பெறவேண்டும் என்றெண்ணும் தமிழ் ஆர்வலர்களுக்கு வெவ்வேறு காரணங்களுக்காக மன நிறைவு அளிப்பன அல்ல. மூவரில் ஒருவரும் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சி உடையவர் அல்லர்; தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் இலக்கியம், தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றில் முழு ஈடுபாடு கொண்டவர் அல்லர். பழந்தமிழ் இலக்கியப் புலமையும் ஆழமான ஆங்கில அறிவும் உண்மையான தமிழ்பற்றும் உடைய ஒருவர் சிலப்பதிகாரத்தை ஆங்கிலக் கவிதை நடையில் தர முன்வர முனைதல் வேண்டும்” எனச் சிறப்பாகத் தொகுத்துத் தந்துள்ளார். இத்தகையவர்களுக்கே நாம் மொழி பெயர்ப்புப் பணிகளை ஒப்படைக்க வேண்டும். இத்தகையோரின் மொழிபெயர்ப்புகளையே நாம் போற்ற வேண்டும்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 66/69)