Saturday, October 22, 2022

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 2/5 – ப. மருதநாயகம்

 அகரமுதல




(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 1/5 தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

பின்னிணைப்பு

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்

2/5

  • 3. அறிஞர் பரிதிமாற்கலைஞர்

பாவேந்தர் பாரதிதாசன், கவிஞர் முடியரசன் ஆகியோர் பாடலடிகளுடன் அறிஞர் பரிதிமாற்கலைஞர் குறித்த கட்டுரையைத் தொடங்கியுள்ளார். இலக்கிய இலக்கண நாடக அறிஞரான பரிதிமாற்கலைஞர் தமிழே உயர்தனிச் செம்மொழியென்று நாளும் முழங்கியதோடு அமையாமல் அதற்குத் துறைதோறும் செய்ய வேண்டிய பணிகளையெல்லாம் தொடங்கி வைத்தார் என்பதைப் பாராட்டுகிறார் ஆசிரியர்.

ஆசிரியர் மேற்கோளாகக் காட்டும் பரிதிமாற்கலைஞரின் வரிகள், அவரைத் தமிழாய்ந்த நற்றமிழறிஞராக நமக்குக் காட்டும். இதனை உணராத சிலர்தான் அவரை வேறுவகையாகக் கூறுவர். காலம் உள்ளளவும் தமிழுலகம் போற்றப்பட வேண்டிய அறிஞர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் பரிதிமாற்கலைஞர் என்பதை  ஆசிரியரின் கட்டுரை நன்கு உணர்த்தும். 

தமிழை உயர்தனிச் செம்மொழி என ஆணித்தரமாக அறிஞர் பரிதிமாற்கலைஞர் தெரிவித்த பலவற்றையும் நமக்கு எடுத்துரைக்கிறார். “தொன்றுதொட்டுத் தமிழ்மொழி ‘செந்தமிழ்’ என நல்லிசைப் புலவரால் நவின்றோதப் பெறுவதாயிற்று. ஆகவே தென்னாட்டின்கட் சிறந்தொளிராநின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும் ‘உயர்தனிச் செம்மொழி’ யேயாம் என்பது நிச்சயம்.” என முடியும் கட்டுரைப்பகுதி மூலம் உயர்தனிச் செம்மொழி எனத் தமிழுக்குக் குரல் கொடுத்த அவர் முழக்கத்தை நமக்கு எடுத்துத் தந்துள்ளார்.

ஆரியரின் நடுவுநிலையின்மையைப் பல இடங்களில் ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

“தமிழர்க்கு ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னரே எழுதப் படிக்கத் தெரியும். ‘எழுத்து’, ‘சுவடி’ என்பன தனித்தமிழ்ச் சொற்களாதலும் காண்க. இதனால் அகத்திய முனிவர் தமிழ்ப்பாசைக்கு நெடுங்கணக்கு வகுத்தனர் என்பதும், ஆரியரோடு கலந்த பிறகே தமிழர் தங்கள் பாசைக்கு நெடுங்கணக்கு ஏற்படுத்திக் கொண்டனரென்பதும் பொருந்தாமை யறிக”. (தமிழ்மொழியின் வரலாறு, பக்கம் 25)

“தமிழர் இடத்திருந்த பல அரிய விசயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தனபோலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்”(வடமொழி வரலாறு, பக்கம்27)

வடசொற்கள் தமிழில் எவ்வாறு புகுந்தன என்றும் வடமொழி பேச்சுவழக்கற்றுப் போனமையால் தமிழ்ச்சொற்கள் ஏராளமாகக் கலக்க வழியில்லாமல் போனது என்றும் மணிப்பிரவாளம் ஆபாச நடை யென்றும் வடமொழி இலக்கணத்தைக் கலந்து தமிழ் இலக்கணத்தை வகுக்கப் புகுந்தாரின் செயலும் கூற்றும் ஏற்புடைத்தன்று என்றும் வடமொழி இலக்கணத்தைக் காட்டிலும் தமிழ்மொழி இலக்கணம் எவ்வாறெல்லாம் சிறந்து விளங்குகின்றது என்றும் அகப்பொருளும் அதன் துறைகளும் புறப்பொருளும் அதன் துறைகளும் இவ்விருவகைப் பொருளின் இயைபுகளும் வடமொழியினின்றும் என்றென்றும் கிடைத்தல் இயலாத அரிய தனித்தமிழ்ச் சிறப்புகள் எனவும் பழைய இசைத்தமிழ் நூல்கள் எவ்வாறு அழிந்தன என்றும் நாடகத்தமிழின் தோற்றம் வீழ்நிலம குறித்தும் அறிஞர் பரிதிமாற்கலைஞர் தெரிவித்த கருத்துகளை எல்லாம் எடுத்துரைத்துள்ளார்.

பரிதிமாற்கலைஞர் மதிநுட்பம் நூலோடு உடையவராய் இருந்ததோடு கவிதையுணர்வு மிக்கவராய், உயர்ந்த கவிதையைத் தாழ்ந்ததினின்றும் தரம் பிரித்துக் காணுதலிலும் வல்லுநராய் இருந்தமைக்கு அவர் சொல்லணி, பொருளணிபற்றிக் கூறும் முடிவுகள் மூலம் நம்மை அறியச் செய்துள்ளார்.

மேற்புல அறிவியல் அறிஞர் ஆக்கெல்(Hoekel), இலெமூரியா நிலப்பரப்பைப்பற்றிச் சொல்லியுள்ளவற்றைக் கூறி அதனை வலியுறுத்தும் இலக்கியச் சான்றுகளைத் தருவதையும் ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்தும் தமிழரசு கணக்கறிவின் உயர்வு குறித்தும் பரிதிமாற்கலைஞர் பல கட்டுரைகளில் விளக்கியுள்ளதையும் நமக்கு ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

சொல்லின் கூறுகளும் சொற்களும் சொற்றொடர்களும் நாளடைவில் தத்தமக்குரிய பொருள் தன்மை விரித்தும் குறைத்தும் வேறுபட்டும் போவதைப் பரிதிமாற்கலைஞர் சுட்டிக்காட்டுனவற்றை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

தமிழ்மொழியில் ஏன் சீர்திருத்தங்கள் தேவை என்பதையும் எத்தகைய சீர்திருத்தங்கள்  செய்யப்படவேண்டும்  என்பதையும் அறிவுறுத்தும் கருத்துகளை அவரின் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாகக் கருதி  ஆசிரியர் நமக்கு உணர்த்துகிறார்.

தமிழில் அகரமுதலிகள் தேவை பற்றியும் அகராதி எவ்வாறெல்லாம் அமையவேண்டும் என்பதையும் தமிழ் அகராதி கட்டுரை மூலம் பரிதிமாற்கலைஞர் உணர்த்துவதை ஆசிரியர் உரைக்கிறார்.

உள்நாட்டு மொழிகளாகிய தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றை யெல்லாம் சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகளினின்றும் நீக்கிவிட வேண்டுமென்ற பேச்சு நிலவியது. தமிழை நீக்கி அதனிடத்தில் வடமொழியை வைத்துப் பயிற்றுவிக்க வேண்டுமென்று சிலர் முயன்றனர். அப்பொழுது பரிதிமாற்கலைஞர் உள்ளத் துடிப்புடன் கொதித்தெழுந்து ‘சுதேசப்பாசை நீக்கம்’, ‘சுதேச பாசையாக்கம்’, ‘சர்வகலாசாலை விசாரணை’ என்னும் தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி மக்களிடையே விழிப்புணர்வைஏற்படுத்தினார்.

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் தமிழை விலக்கி வடமொழியை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. ஆனால் பரிதிமாற் கலைஞரின் உறுதியான எதிர்ப்பால் பல்கலைக்கழகம் அம்முடிவை கைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னைப் பல்கலைக்கழக விசாரணைக் குழுவின் தலைவர், உள்நாட்டு மொழிகள் கெளரவம் சான்றன அல்லவென்றும் இவற்றைக் கிரேக்க, இலத்தீன் மொழிகளோடு ஒருங்கெண்ணுதல் தவறாகுமென்றும் இவற்றில் தூயநூல் தொகுதிகள் இல்லாமையானும், இவை காலத்திற்கேற்ப வளர்ச்சி பெறாமையானும் நாளடைவில் அழிந்து போகக்கூடியவை யாதலானும் இவற்றைப் பல்கலைக்கழகத் தேர்வுகட்குக் கற்றதற்கு உரியனவாய் அமைக்காமல் அறவே ஒழித்து விடல் வேண்டுமென்றும் பரிந்துரை செய்தார். இதற்கு மனம்நொந்து பரிதிமாற்கலைஞர் விடையிறுத்தார்.

“அந்தோ! வாய் கூசாது தம் உட்கிடை உரைத்தார். என்னே இவர்தம் கருத்து! எல்லாப் பாசைகட்கும் பெருந்துணைவராய் நின்று உதவ வேண்டிய தலைவரே பேதுற்றுப் பிறிதுபட உரைத்தால் என் செய்வது!”

“.. ..  .. .. கெளரவம் சான்றனவற்றை அத்தகைய அல்லவென்று உரைத்தல் பெற்ற தாயை மலடி யென்று உரைத்தலோடு ஒக்கும் ஆதலானும் வடமொழிபோல் அழிந்துபடாது தக்கன தங்கல்(survival of the fittest) முறைப்படி இவை யனைத்தும் மிக்க பயன்பாடு உடையவாய் நிற்றலானும் பிறவாற்றானும் வித்தியா விசாரணைத் தலைவர் உரைத்தது போலியென்று ஒதுக்கற்பாலதாமாறு தெற்றென விளங்கும்”  என்பதே பரிதிமாற்கலைஞரின் வாதம்.

கிரேக்கம், இலத்தீன் ஆகியவற்றோடு வடமொழியையும் செம்மொழியென்று சேர்த்தவர்கள் தமிழைச் சேர்க்காதது மன்னிக்க முடியாத குற்றமென்று பரிதிமாற்கலைஞர்  வெகுண்டெழுந்து சாடியுள்ளதையும் நமக்கு ஆசிரியர் அளித்துள்ளார்.

“தமிழை நீக்கி அதனிடத்து வடமொழியை வைத்தலால், பிராமணர் ஆயினார்க்கு விசேடமான அனுகூலமும் ஏனையோர்க்கு விசேடப் பிரதிகூலமும் விளையுமென்க. . . . . எனவே, தென்மொழி நீக்கமும் வடமொழி ஆக்கமும் பட்ச பாதகமாக முடிகின்றமை காண்க” எனப் பரிதிமாற்கலைஞர், பிராமணர்க்கு நன்மை விளைவிப்பதற்காகத் தமிழை நீக்கிச் சமற்கிருதத்தைத் திணிப்பதற்கே என நடுவுநிலையுடன் ஆராய்ந்து தெரிவிக்கிறார். சென்னைப் பல்கலைக்கழகம் தமிழை நீக்காமல் போற்றத்தலைப்பட்டதும் “தமிழ்ப்பெருந்தெய்வத்தை வாழ்த்தி இறைவர்க்குத்

தெள்ளேணம் கொட்டுவே மாக” என்கிறார் அவர்.

தனிப்பாசுரத் தொகை நூலில் பல பொருள்பற்றிய சிறிய எளிய தனித்தனிப்பாடல்களைப்பரிதிமாற்கலைஞர் அளித்துள்ளார் அவற்றில் சிலவற்றை ஆசிரியர் நமக்குத் தந்துள்ளார். அறிஞர் சி.வை.தாமோதரம் பிள்ளை, தனிப்பாயிரத்தொகையின் சிறப்புப் பாயிரத்தில் பரிதிமாற்கலைஞரைக் கலைவலாளன்,குணக்குன்று, கற்றாரும் கல்லாரும் முதியோரும் இளையோரும் போற்றும் கவிஞன் என்றும் பாராட்டியுள்ளார். உயர்தனிச் செம்மொழிக்கு உரத்த குரல் கொடுத்த முன்னோடி மூதறிஞர் பரிதிமாற்கலைஞரை எவ்வாறு பாராட்டினாலும் தகும் என்னும் உண்மையைக் கூறிக் கட்டுரையை முடித்துள்ளார் ஆசிரியர்.

  • 4.தனித்தமிழ்க் கடல் மறைமலையடிகள்

தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஆழங்கால்பட்ட தனித்தமிழ்க் கடல் மறைமலையடிகள் குறித்தது நான்காம் கட்டுரை.

இலக்கியத்தில் மட்டுமின்றிச் சமயம், தத்துவம், வரலாறு, ஆய்வியல், பண்பாட்டியல், மருத்துவம், மறைபொருள் ஆகிய துறைகளில் எல்லாம் கடும் பயிற்சி மேற்கொண்டு 54 அரிய நூல்களை அவர் படைத்தார். அடிகளார் தமிழுக்குச் செய்த தொண்டுகளிலெல்லாம் தலையாயது அவர் தோற்றுவித்து வளர்த்த தனித்தமிழ் இயக்கமே என்கிறார் ஆசிரியர்.

“‘தூய தமிழ்’ என்ற பெயரில் பொருத்தமற்ற சொற்களை அவர் எச்சூழலிலும் பெய்வதில்லை. தக்க சொற்களைத் தக்க இடத்தில் இணைத்து முருகிலின்பத்தைக் கூட்டும் நடை அவருடையது. கட்டுரையானாலும் கதையானாலும் இதனை அவர் செம்மையாகச் செய்திருக்கக் காணலாம்” என்கிறார் ஆசிரியர்.

ஒரு மொழி வளரவேண்டுமானால் பிற மொழிக்கலப்பும் மாற்றமும் தேவையென்பார்க்கு அடிகளார் தந்த மறுமொழி பாராட்டுக்குரியது என்கிறார் ஆசிரியர். சில விளக்கங்களை அளித்துத், “தம் நிலை குலைந்து மாறுதலாகிய வேண்டாத தொன்றைக் கடைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு அதன்படி நமது அருமைச் செந்தமிழ் மொழியும் தனது தூய நிலை குலைந்து மாறுதல் அடையவேண்டுமென்று உரைப்பது அறிவுடையோரால் ஏற்றுக்கோடற்பாலமாமோ?” என்று அடிகளார் குறிப்பதைக் கூறுகிறார்.

தனித்தமிழைப் பரிந்துரைத்ததும் பேசியதும் எழுதியதும் அடிகளார் செய்த அரும்பணியாயினும் அதுமட்டுமே அவர் வாழ்நாள் பங்களிப்பன்று என்கிறார் ஆசிரியர். அடிகளாரின் மொழிபெயர்ப்புப் படைப்புச் சிறப்புகள், புதின இலக்கியத்திறன்கள், மாணிக்கவாசகர் காலம் முதலிய கால ஆராய்ச்சிப் படைப்புகள், பட்டினப்பாலை ஆராய்ச்சி, முல்லைப் பாராட்டாராய்ச்சிபோன்ற சங்க இலக்கிய ஆராய்ச்சிகள், சொற்பொழிவுகள், பலபொருள் பற்றிய கட்டுரைகள் முதலியவற்றின் மூலம் செந்தமிழை எவ்வாறு கையாளுவதென்பதில் தமிழறிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர் என்பதையும் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

 இலக்குவனார் திருவள்ளுவன்

உயர்தனிச் செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்

ப.மருதநாயகம்

செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை 600 100

விலை உரூபாய் 500/-



Wednesday, October 19, 2022

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் -ப. மருதநாயகம்

 அகரமுதல




தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

பின்னிணைப்பு

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்

1/5

செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வெளியீடாகப்(2022) பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகத்தின், ‘உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்’ நூல் வந்துள்ளது. இந்நூல் குறித்து அணிந்துரையில் நிறுவன இயக்குநர் பேரா.இரா.சந்திரசேகரன், “உயர்தனிச்செம்மொழித் தமிழின் உயர்வுக்கு உழைத்த சான்றோ்கள் பலராவர். அவர்களின் உண்மை உழைப்பை முறையாக எடுத்துச்சொல்ல வேண்டியது காலத்தின் தேவையாகும். அந்தத் தேவையை உரிய முறையில் செய்தளித்துள்ளார் பேராசிரியர் ப.மருதநாயகம் அவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலில் தமிழ், செம்மொழியேயென்று முதற்குரல் கொடுத்த மூதறிஞர்கள் பதினால்வர் பங்களிப்பு குறித்தும் பதினைந்தாவதாக அகழ்வாராய்வாளர்கள் குறித்தும் நமக்கு நுண்மையாகவும் ஆழமாகவும் பேரா.ப.மருதநாயகம் விளக்கியுள்ளார்.

இந்நூலில் இடம் பெற்றுள்ள படைப்புகளுக்கான அறிஞர்கள் வருமாறு: -1. எல்லீசர், 2. போப்பு அடிகளார், 3. பரிதிமாற்கலைஞர், 4. மறைமலை அடிகள், 5. விபுலானந்த அடிகள், 6. திரு.வி.கல்யாணசுந்தரம், 7. தெ.பொ.மீனாட்சிசுந்தரன், 8. இலக்குவனார், 9. தனிநாயக அடிகள், 10. தேவநேயப் பாவாணர், 11. கைம் இராபின், 12. ஏ.கே.இராமானுசன், 13. பிரான்சுவா குரோ, 14. சியார்சு ஆர்த்து, 15. அகழ்வாராய்வாளர்கள்.

  1. அறிஞர் எல்லீசர்

காலுடுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை வெளியிடுவதற்கு அரை நூற்றாண்டிற்கு முன்னரே தமிழ்க்குடும்ப மொழிகளின் தனித்தன்மையை அறிவித்தவர் அறிஞர் எல்லீசர். திருக்குறளின் முதல் பதின்மூன்று அதிகாரங்களிலிருந்து தெரிந்தெடுத்த சில குறள்களுக்குக் கவிதை நடையில் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தந்துள்ளார். இவற்றை விளக்க அவர், தொல்காப்பியம், சங்க இலக்கியம், நீதி இலக்கியம், காப்பிய இலக்கியம், இலக்கணம், பிற்கால இலக்கியங்கள் எனப் பலவற்றிலிருந்தும் மேற்கோள்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கும் இவர் புலமை நயத்தை ஆசிரியர் பாராட்டுகிறார். 

புலமைத் திறனும் தமிழ்ப்பற்றும் இருப்பினும் அவற்றை விஞ்சிய சாதிப்பற்றும் இனப்பற்றும் உள்ளோர் உள்ளனர். எனவேதான், திருவள்ளுவர்,

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர் (திருக்குறள் 514)

என்றார். அவ்வாறு திகழும் அறிஞர்களுள் ஒருவராக எடுத்துக்காட்டாக அறிஞர் உ.வே.சா. விளங்குகிறார் என்பதை எல்லீசரின் மேற்கோள் பாடல் நமக்கு விளக்குகிறது.

அறம்பாடிற்றே ஆயிழை கணவ” என்னும் அடி வரும் புறநானூற்றுப்பாடலில் (361)

குரவர்த்தப்பிய கொடுமையோர்க்கும்

என இடம் பெற்றுள்ளது. ஆனால், உ.வே.சா. பதிப்பில்,

பார்ப்பார்த் தப்பிய” என இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் இடம் பெற்றுள்ள வேறு சில பாட பேதங்களைக் குறிப்பிடும் உ.வே.சா. குரவர் என்பது குறித்து ஒன்றும் குறிப்பிடவில்லை.

பரிமேலழகரின் உரையில் காணும் தவறுகளை அவ்வப்போது தயங்காது சுட்டிக்காட்டும் எல்லீசர், பரிமேலழகர் உரையில் வரும் அழகிய பகுதிகளை மதி நுட்பத்தோடு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் என இவரின் நடுவுநிலைமையைப் பாராட்டுகிறார்.

திருக்குறளில் இடம் பெறும் சில சொற்களையும் சில தொடர்களையும் கொண்டு கீழை மேலை மொழிகளின் தனித்தன்மைகளை விளக்குகிறார். எல்லீசரின் தமிழ் யாப்பிலக்கணம் குறித்த ஆங்கிலக் கையெழுத்துப்படி மூலம் அவரது இலக்கணப் புலமையையும் வியந்து போற்றுகிறார் ஆசிரியர். மொழியியல் வல்லுநர் ஏ.சி.பருனல், எல்லீசு உண்மையிலேயே ஒரு பெருங்கல்வியாளர் என்கிறார். போப்பு அடிகள், வியத்தகு திறன பெற்ற கீழ்த்திசையாளர் என எல்லீசைப்போற்றுகிறார். இவையாவும் உயர்வு நவிறசி அன்று என்று ஆசிரியர் கூறுகிறார்.

இவ்வாறு எல்லீசரின் திறனாய்வுத் திறனையும் மொழிபெயர்ப்புச் செம்மையையும் புலமைநயத்தையும் ஆசிரியர் நன்கு விளக்குகிறார்.

நிறைவாக, “எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லீசர் தமிழைச் செம்மொழித் தகுதியுடையதென்று கண்டு கொண்டதும், அதனை இந்திய நிருவாகப் பணித்துறைக்கு வரும் ஆங்கிலேயருக்கு நவீன மொழியாகவும் செம்மொழிகளில் ஒன்றாகவும் அறிமுகப்படுத்தியதும் வியற்து போற்றற்குரியதாகும்” என்கிறார் ஆசிரியர்.

  • போப்பு அடிகளார்

போப்பு அடிகளார் ஆக்குசுபோர்டு பல்கலைக்கழகத்துப் பேராசிரியராக இருந்தவர்; மொழிபெயர்ப்பு, அகரமுதலி, இலக்கணம், மொழியியல், வரலாறு, சமயம் ஆகிய துறைகளிலெல்லாம் அவர் இயற்றிய நூல்கள் தமிழ் அறிஞர்களுக்கு முன்மாதிரிகளாகத் திகழ்ந்தன என இரண்டாவது கட்டுரையில் போப்பு அடிகளார் குறித்து விளக்குகிறார்.

திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போப்பு அடிகளார் தமிழின் தனித்தியங்கும் ஆற்றலையும் சொல்வளத்தையும் பாராட்டி தமிழ் செழுமையான, மூலச் சொற்களஞ்சியம் கொண்ட தனித்தியங்கும் மொழி (Tamil is an independent language with a copious and original vocabulary) என்று குறிப்பிடுகிறார்.

தமிழ் அறநூல்கள் கையாளும் வெண்பா யாப்பை சமற்கிருத யாப்புகளோடு ஒப்பிட்டுத் தமிழ்யாப்பிலக்கணத்தின் சிறப்பைப் போப்பு தெளிவாக எடுத்துக்காட்டுவதைக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.இலக்கண விளக்கங்கள், மொழிபெயர்ப்புகள் மூலம் போப்பு அடிகளாரின் சிறப்பை ஆசிரியர் நன்கு விளக்குகிறார்.

தனிப்பாசுரத் தொகையின் ஆங்கில மொழிபெயர்ப்பு முன்னுரையில் , ஆக்குசுபோர்டு பல்கலைக்கழகத்தில் நன்னூல், குறள், நாலடியார், திருவாசகம் ஆகிளவற்றை மொழிபெயர்த்து ஆய்வுப்பதிப்புகளாக வெளியிட்டதன் மூலம், அச்செவ்விலக்கியங்களை உலக இலக்கிய அரங்கிற்குக் கொண்டு செல்ல என்னால் ஆனதை எல்லாம் செய்துள்ளேன். தமிழ்க்கவிதை உலகில் ஓரளவு வெற்றியோடு நான் கால்பதிக்காத மூலை முடுக்கு ஏதும் இல்லை. தமிழ்மொழி, தமிழ்க்கவிதை, தமிழ் மக்கள் மீதெல்லாம் நான் பேரன்பு உடையேன் என்பது பொய்நடிப்பன்று. எனப் போப்பு அடிகள் குறிப்பிட்டதையே நிறைவாகத் தந்துள்ளார். அன்னார் தமிழுக்குச் செய்துள்ளது, இதனைப் போல்பல மடங்கு பாராட்டுக்குரியது என இக்கட்டுரையை ஆசிரியர் முடிக்கிறார்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

உயர்தனிச் செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்

ப.மருதநாயகம்

செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை 600 100

விலை உரூபாய் 500/-

(தொடரும்)



Tuesday, October 18, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம் 12

 அகரமுதல





(உ.வே.சா.வின் என் சரித்திரம், 11 இன் தொடர்ச்சி)

அத்தியாயம் 7
கிருட்டிண சாசுதிரிகள்
 (தொடர்ச்சி)

வாழ்நாள் முழுவதும் சிவ பூசையும் சபம் முதலிய கருமானுட்டானங்களுமே புரிந்து வந்து வேறு எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் உள்ளும் புறமும் தூய்மையுடன் ஒரு கிருகசுதர் வாழ்க்கை நடத்துவதென்றால் அது சாத்தியமென்று இக்காலத்தில் தோன்றாது. ஆனால், எங்கள் மாதாமகர் (தாயாரின் தகப்பனார்) அவ்வாறு இருந்தவர். அவர் பெயர் கிருட்டிண சாசுதிரிகளென்பது.

அவர் காவிரியின் வடகரையில் கஞ்சனூரென்னும் தலத்துக்கு வடகிழக்கே ஒன்றரை மைலிலுள்ள சூரியமூலை யென்னும் ஊரில் இருந்தார். அவர் ருக்வேதத்திற் பாரங்கதர்; சிவ பக்தியிற் சிறந்தவர். அரதத்த சிவாசாரியார், அப்பைய தீட்சதர், நீலகண்ட தீட்சதர், திருவிசைநல்லூர் ஐயா அவர்களென்னும் ஸ்ரீதர வேங்கடேசர் முதலிய பெரியோர்கள் இயற்றிய சிவ தோத்திரங்களிலும் நூல்களிலும் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு. எப்பொழுதும் அவருடைய வாயிலிருந்து சிவநாமம் இனிய மெல்லிய தொனியிலே வெளிவந்து கொண்டிருக்கும். வண்டின் (இ)ரீங்காரத்தைப் போல உள்ள அந்தச் சிவநாமத்திலே நான் இளமையிலே ஈடுபட்டேன். என்னை அறியாமல் நானும் சிவநாம சபம் என் ஆறாம் பிராய முதலே செய்யத் தொடங்கினேன். இன்றளவும் ‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ அந்த சபத்தைச் செய்து கொண்டுவருகிறேன்.

இளமையில், கிருட்டிண சாசுதிரிகளுடைய திருவாக்கிலிருந்து எழுந்த அந்த நாமத்தின் இனிமை என் கருத்தில் மிகவும் நன்றாகப் பதிந்து விட்டது. பிறகு நான் முறையாகப் பல மந்திர சபங்களை உபதேசம் செய்து கொண்டேன். எல்லாவற்றிற்கும் முன் எனக்கு முதல் உபதேசமாக என் நெஞ்சில் தானே ஊன்றியது சிவநாமத்தான்; அதை ஊன்ற வைத்த முதற் குரு என் மாதாமகராகிய கிருட்டிண சாசுதிரிகளே யாவர்.

புதுக்கோட்டையைச் சார்ந்த ஆரணப்பட்டி என்னும் ஊரில் அவர் இருந்தார்; பதினான்கு பிராயத்தில் தம் தந்தையாரிடம் பார்த்திப பூசையும் படிகலிங்க பூசையும் பெற்றுக்கொண்டனர். அந்த படிகலிங்கமாகிய மூர்த்திக்குச் சிதம்பரேசரென்பது திருநாமம். அவர் நாள்தோறும் இலட்சம் சிவநாம சபம் செய்வார். ஆருணம் சொல்லி 124 சூரிய நமசுகாரம் செய்து சகசுரநாம பாராயணம் பண்ணுவார். விடிய நான்கு நாழிகை தொடங்கி இரவு பத்து நாழிகை வரையில் பெரும்பாலும் வைதிக மார்க்கத்திலேயே அவருடைய காலம் செல்லும்.

தம்முடைய தந்தையார் காலஞ்சென்ற பிறகு ஆரணப்பட்டியிலே இருந்து வருகையில், அவருடைய மூத்த சகோதரியார், புருசர் காலஞ் சென்றதனால் தம் குழந்தைகளுடன் பிறந்த வீட்டிற்கு வந்து விட்டார். அது முதல் அவரே குடும்பத்தின் பொறுப்பை வகித்து நடத்தத் தொடங்கினார். சிவ பூசா துரந்தரராகிய கிருட்டிண சாசுதிரிகள் தம்முடைய தமக்கையார் அடைந்த கோலத்தைக் கண்டு வருந்தினாலும், ‘எல்லாம் ஈசன் செயல்’ என்று எண்ணுபவராதலால் ”நமக்குக் குடும்பத் தொல்லை இராவண்ணம் திருவருள் இவ்வாறு செய்வித்தது போலும்” என்று ஒருவாறு ஆறுதலுற்றார். சில காலம் அங்கே இருந்து வந்தபோது தம்முடைய பந்துக்கள் நிறைந்துள்ள சோழ நாட்டில் காவிரிக் கரையை அடுத்துள்ள ஊர்களில் ஈசுவர ஆராதனம் செய்துகொண்டு காலங் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று. குடும்ப நிருவாகத்தில் தமக்கு ஒரு சம்பந்தமும் இல்லாமையால் எந்தச் சமயத்திலும் புறப்படும் நிலையில்தான் அவர் இருந்தார்.

அவருக்குத் தம் நிலங்கள் முதலியவற்றைப் பற்றியே ஞாபகம் இல்லை. வீடு, நிலம் எல்லாவற்றையும் தமக்கையாரிடமே ஒப்பித்து விட்டு அவற்றிற்கு ஈடாக ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு செல்லலாமென்று எண்ணித் தமக்கையாரிடம் தம் கருத்தைச் சொன்னார். அவர் தம் தம்பியாருடைய மனோபாவத்தை உணர்ந்து ஐந்நூறு உரூபாயை அவரிடம் கொடுத்து அவர் விருப்பப்படியே செல்லும்படிக் கூறினர்.

கிருட்டிண சாசுதிரிகள் அத்தொகையில் செலவுக்கு வேண்டியதை வைத்துக்கொண்டு எஞ்சியதைக் காவிரியின் வடபாலுள்ள கோட்டூரென்னும் ஊரில் இருந்த தம் முதல் மைத்துனி குமாரர்களுக்கு அனுப்பிவிட்டு ஆரணப்பட்டியை விட்டுப் புறப்பட்டார். தம்முடைய பூசையுடன் மனைவியாரை அழைத்துக்கொண்டு சோழ நாட்டை நோக்கி வருகையில் இடையிடையே பல ஊர்களில் தங்கினர். சிவ பூசையும் வைதிக ஒழுக்கமும் உடைய அவரை அங்கங்கே உள்ளவர்கள் ஆதரித்து உபசரித்தனர்.

அக்கிரகாரங்களில் அத்தகைய பக்தரைக் கண்டுவிட்டால் சிவகணத்தைச் சேர்ந்த ஒருவரே வந்ததாகக் கருதி அவரை உபசரித்துப் பாராட்டுதல் அக்காலத்து வழக்கம். தெய்வ பக்தியும் உபகார சிந்தையும் உடையவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தனர். எல்லா வகை வருணத்தினரும் பக்தியுடையவர்களிடத்தில் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். ஆதலின் கிருஷ்ண சாஸ்திரிகளுக்குப் பிரயாணத்தில் எந்தவிதமான இடையூறும் நேரவில்லை.

அவருக்கு உலக வியாபாரம் ஒன்றும் தெரியாது. செல்வம், அதிகாரம், கல்வி முதலியன அவருக்கு இல்லை. ஆனாலும் அவருடைய சிவபக்தி நிறைந்த மனமும், கவலையின் தோற்றம் இல்லாமல் கடவுள் திருவருளையே நம்பியிருக்கும் தெளிவைக் காட்டும் முகமும், சாந்த நடையும் அவருக்கு மதிப்பை உண்டாக்கின. அவர் ஒரு முயற்சியும் செய்யாமலே பெருமையை அடைந்தார்; அவருடைய மௌனமே புலவர் பேச்சைவிடக் கவர்ச்சி தந்தது; அலங்காரமற்ற அவரது உருவத்தின் தூய்மையே அவருக்கு மிக்க அழகை அளித்தது.

இடையிடையே சில தலங்களைத் தரிசித்துக்கொண்டு கிருட்டிண சாசுதிரிகள் உடையார்பாளையம் வந்து சேர்ந்தார். அங்கே அப்பொழுது கச்சிக் கலியாணரங்கப்ப உடையார் சமசுதானாதிபதியாக இருந்தார். தானாதிகாரியாக இருந்த சிரீ சுப்பராய சாசுதிரிகளென்பவர் என் மாதாமகருடைய இயல்பை அறிந்து அவரைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று உபசரித்தார். அப்பால் அந்த சமசுதானத்தைச் சார்ந்த இடத்தில் அவரைச் சௌக்கியமாக இருக்கச் செய்ய வேண்டுமென்று எண்ணிய தானாதிகாரி அருகிலிருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள சிவாலயத்தில் அவரை அத்தியாபகராக நியமித்தார். கிருட்டிண சாசுதிரிகள், “பரமசிவனது கைங்கரியம் கிடைத்தது ஈசுவர கிருபையே” என்று எண்ணி அங்கே இருந்து வரலானார்.

கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள சிவாலயம் இராசேந்திரனென்னும் சோழ சக்கரவர்த்தியால் அமைக்கப் பெற்றது. அந்த ஆலயத்தின் பெயர் கங்கைகொண்ட சோழீச்சுரமென்பது. கோயில் மிகப் பெரியது. அந்தப் பெரிய கோவிலுக்கு ஏற்றபடி சிவலிங்கப் பெருமானும் மிகப்பெரிய திருவுருவத்தை உடையவர். அங்கே சாரத்தில் ஏறித்தான் அபிசேகம் முதலியன செய்வார்கள். அரிய சிற்பத் திறன் அமைந்த அவ்வாலயம் சரித்திரப் பிரசித்தி பெற்றது. வடநாட்டுக்குச் சென்று வெற்றிகொண்ட இராசேந்திரசோழன் வடநாட்டு அரசர்கள் தலையில் கங்கா சலத்தை ஏற்றிக் கொணர்ந்தானென்றும் அதனால் அவனுக்குக் கங்கைகொண்ட சோழனென்னும் சிறப்புப் பெயர் வந்ததென்றும் சொல்வர். தனது வடநாட்டு வெற்றிக்குப் பின் அச்சக்கரவர்த்தி கங்கைகொண்ட சோழபுரத்தை நிருமாணம் செய்து அங்கே சிவாலயத்தையும் அரண்மனையையும் அமைத்தான். பழைய காலத்தில் சோழ இராசதானியாக இருந்த அந்நகரம் இப்போது சிற்றூராக இருக்கிறது. ஆலயம் பழைய நிலை மாறிப் பல இடங்களில் குலைந்து காணப்படுகின்றது.

அந்த ஆலயத்தில் சிங்கக் கிணறு என்ற ஒரு தீர்த்தம் உண்டு. சிங்கத்தின் வாய்க்குள் புகுந்து செல்வதுபோல அதன் படிகள் அமைந்துள்ளன. வட நாட்டு அரசர்களால் எடுப்பித்து வந்த கங்கா சலத்தை அந்தக் கிணற்றில் விடும்படி அரசன் கட்டளையிட்டான். அதனால் அதனைக் கங்கையென்றே கூறுவார்கள். பிற்காலத்தில் கங்கை அதில் ஆவிர்ப்பவித்தாக ஓர் ஐதிகம் ஏற்பட்டு விட்டது.

கிருட்டிண சாசுதிரிகள் தமக்கு அளிக்கப் பெற்ற ஒரு வீட்டில் இருந்து தமக்குரிய வருவாயைப் பெற்றுத் திருப்தியுற்றார். தம்முடைய நித்திய கருமங்களைத் தவறாமல் முடித்துக்கொண்டும், ஆலயத்திற்குச் சென்று தம்முடைய கடமையைச் செய்துகொண்டும் வாழ்ந்து வந்தார். சிங்கக் கிணற்றில் விடியற் காலம் ஸ்நானம் செய்வது அவர் வழக்கம். ஆலயத்தின் தேவகோட்டத்தைச் சூழ்ந்து சுவரில் அமைந்துள்ள சிவபெருமானுடைய அறுபத்து நான்கு மூர்த்தங்களையும் தரிசித்து இன்புறுவர். தேவகோட்டத்தின் முன்பு தெற்கும் வடக்கு முள்ள வாயில்களில் கீழ்ப் பக்கத்துச் சுவரில் மேற்கு முகமாக மிகப் பெரியனவாகவும் அழகுடையனவாகவும் இலட்சுமி வடிவமும், சரசுவதி வடிவமும் உள்ளன. அவ்விரண்டு தேவிகளிடத்தும் அவருக்கு அன்பும் ஈடுபாடும் அதிகம்.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.

Sunday, October 16, 2022

குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5 – சி.பா

 அகரமுதல

.





(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5  தொடர்ச்சி)

குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5

அம்புயம் வாடித் தளர்ந்ததம்மா!-அயல்
ஆம்பலும் கண்டு களிக்குதம்மா!
இம்பருலகின் இயல்பிதம்மா!-மதிக்கு
இன்னார் இனியாரும் உண்டோ அம்மா?

மாற்றம் உலகின் இயற்கையெனஇங்கு
மாந்தரும் கண்டு தெளிந்திடவோ,
போற்றும் இறைவன் இம் மாமதியம்விண்ணில்
பூத்து கிலவ விதித்தனனே!

என்ற பாடல்களில் சிறந்த கருத்தும்,

கூனக் கிழவி நிலவினிலேராட்டில்
கொட்டை நூற்கும்பணி செய்வதை இம்
மாநிலம் கண்டு மகிழ்ந்திடவேகாந்தி
மாமதி யோங்கி வளருதம்மா!

என்ற பாடலில் காந்தியமும் அமைந்து துலங்குவதைக் காணலாம்.

காட்சி இன்பம்

ஒர் ஏழைப்பெண் தன் தாயிடம் கடிகாரம் வாங்கித் தரும்படி கேட்கிறாள். அதற்கு அந்த ஏழைத் தாய், “மகளே! நேரத்தை அறிவதற்கு இயற்கையிலேயே பல வழிகள் இருக்க நமக்குக் கடிகாரமும் வேறுவேண்டுமா?” என விடையிறுக்கிறாள். சேவற் கோழியும் காகமும், செங்கதிரும் செந்தாமரையும், தன் நிழலும் நேரத்தைச் சரியாக உணர்த்துமே என்று அந்தத் தாய் இயற்கையின் இனிய பெற்றியை எடுத்து இயம்புகின்றாள்.

சுற்றுப் பொருளெல்லாம் உற்றுநோக்கிஅவை
சுட்டும் மணிநேரம் கண்டறிவாய்!
பெற்ற முத்தேஇந்த உண்மை அறிவோருக்குப்
பின்னும் கடிகாரம் வேண்டுமோடி?

என்று இறுதியாகக் கூறி, மனித வாழ்விற்கு இயற்கை பின்னணியாகப் பொலிவதனை எடுத்து மொழிகின்றார்.

அடுத்து, அவருடைய ‘சைக்கிள்’ பாட்டு குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான பாட்டு.

தங்கையே பார்! தங்கையே! பார்
சைக்கிள் வண்டி இதுவே பார்!

என்று தொடங்கி,

ஒன்றன் பின் ஒன்றாக
உருளும்பை தாக்களைப் பார்!
அக்காளும் தங்கையும் போல்
அவைபோகும் அழகைப் பார்!

என்று குழந்தைகளுக்குப் பாட்டிலேயே ஒற்றுமை உணர்ச்சியினை ஊட்டுகின்றார்.

கதைப்பாட்டில் கருத்து

‘ஊகம் உள்ள காகம்’ ‘நெற்பானையும் எலியும்’ ‘அப்பம் திருடின எலி’ முதலிய கதைப் பாடல்கள் குழந்தைகளுக்குக் கதையின் வாயிலாக அரிய கருத்துகளை உணர்த்தி நிற்கின்றன. தண்ணிர்த் தாகத்தால்,அலைந்து திரிந்த காக்கை மண்ணாற் செய்த ஒரு சாடியின்:அடியில் சிறிது தண்ணிரைக் கண்டு, அந்தச் சாடியினுள் சிறு சிறு கற்களைப் பொறுக்கி வந்து இட்டு, தண்ணிர் மேலே வர, நீரைக் குடித்துத் தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டது என்று கதை சொல்லி, கதையின் இறுதியில்,

ஊக்க முடையவர்க்குத்துன்பம்
உலகில் இல்லைஅம்மா!
ஆக்கம் பெருகும்அம்மா!-இதை நீ
அறிய வேண்டும்அம்மா!

என்று கூறி, ‘ஊக்கம் உண்மை வாழ்வுக்கு ஆக்கம்’ என்பதனை உணர்த்தியுள்ளார்.

‘நெற்பானையும் எலியும்’ என்ற கதைப் பாட்டில் ஓசை நயத்தோடு மலைவீழ் அருவி போன்று சொற்கள் குதித்து வருவதையும் காணலாம்.

பாட்டியின் வீட்டுப் பழம்பானை-அங்தப்
பானை ஒருபுறம் ஓட்டையடா!
ஓட்டை வழியொரு சுண்டெலியும்-அதன்
உள்ளே புகுந்துநெல் தின்றதடா!

பாட்டி வீட்டில் ஒரு பழைய பானையில் நெல் இருந்தது. பானையின் ஒருபுறம் ஒட்டை, அந்த ஒட்டையின் வழியே உள்ளே சென்ற சுண்டெலி ஒன்று நெல் தின்றது. அளவுக்கு மீறித் தின்றதால் வயிறு புடைத்தது. எனவே உள்ளே சென்ற எலி ஒட்டை வழியே வெளியே திரும்பி வர முடியாமற் போயிற்று. மறுநாள் பாட்டி பானையின் மூடியைத் திறந்தாள். எலி வெளியே வந்தது. ஆனால் பாவம், அந்த வேளை பார்த்துப் பூனை ஒன்று அங்கே வந்து விட்டது. பூனை எலியைத் தின்று விட்டது. இந்தக் கதையைக் கூறி, இறுதியில்,

கள்ள வழியினிற் செல்பவரைஎமன்
காலடி பற்றித் தொடர்வானடா!
உள்ள படியே நடப்பவர்க்குத்தெய்வம்
உற்ற துணையாக நிற்குமடா!

என்று கள்ள வழியில் சென்றால் காலன் விடமாட்டான்; கள்ள வழியில் சென்றால் பூனைக்கு இரையான சுண்டெலியின் கதியே நம் கதியும் என்று குழந்தைகள் கூறிக் கொள்ளும். இவ்வாறு கதையும் கருத்தும் இணைந்துள்ள இத்தகைய கதைப் பாடல்கள் குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் துணை நின்று, பண்பு நிலைக்குப் படிப் படியாகக் கொண்டு செல்லும்.

அப்பம் திருடின எலி, திருட்டில் பெற்ற அப்பத்தைத் தான் மட்டுமே தின்று இறப்பது உறுதியாயிற்று என்று கூறி, அளவு கடந்தால் ஆரமுதும் நஞ்சு என்ற கருத்தையும், கிட்டிய பொருளை எட்டிய மட்டும் எல்லார்க்கும் கொடுத்து உண்ணவேண்டும் என்ற கருத்தினையும் கவிமணி புலப் படுத்தியுள்ளார்.

‘ஒளவையும் இடைச்சிறுவனும்’ என்ற பாடல், ஆழக் கற்றாலும் அடக்கம் மிகத்தேவை என்பதனையும் ‘புத்தரும் ஏழைச் சிறுவனும்’ என்ற பாடல் பிறருக்கு நன்மை செய்பவர் மேற்குவத்தார் என்றும், தீமை செய்பவர் தீண்ட ஒண்ணாதார் என்றும் குறிப்பிடுகின்றன.

பெரியோரைப் போற்றுதல்

குழந்தைகளுக்குப் பெரியோர்பால் பேரன்பும் மதிப்பும் பெருக வேண்டும் என்பதனைச் சில பாடங்களில் கவிமணி வற்புறுத்துகின்றார். ஒளவைக் கிழவியின் அருமையினை,

கூழுக் காகக் கவிபாடும்
கூனக் கிழவி அவளுரையை
வாழும் வாழ்வில் ஒருநாளும்
மறவோம் மறவோம் மறவோமே!

என்றும், திருவள்ளுவரை,

சாதி ஒன்றேயாம்தமிழர்
சமயம் ஒன்றேயாம்
நீதி ஒன்றேயாம்என்று
நிலைநிறுத்தி நின்றோன்

என்றும், கம்பனை,

ஆரியம் நன்குணர்ந்தோன்தமிழின்
ஆழம் அளந்துகண்டோன்;
மாரி மழைபோலக்கவியின்
மழைபொழிந் திடுவோன்

என்றும், அமரகவி பாரதியினை,

ஊரறிய நாடறிய உண்மை யெல்லாம்
ஒருவரையும் அஞ்சாமல் எடுத்து ரைத்தோன்
ஆரமுதம் அனையகவி பாடித் தந்தோன்
அமரகவி யென்றெவரும் புகழ்ப் பெற்றோன்

என்றும் பாடியுள்ளார்.

வாழ்க்கை நீதிகள்

வளரும் இளம்செடிக்கு உரம் ஊட்டிக் களை களைந்து நீர்பாய்ச்சி காவல் செய்தால் கதிரவன் ஒளியின் துணையுடன் அப் பயிர் நன்கு செழித்து வளரும். இம்முறையில் இளம் நெஞ்சில் உயரிய கருத்துகளை எளிய சொற்களால் புகுத்தி, அரிய வாழ்க்கைத் தத்துவங்கள் வெளிப்படுத்தியுள்ளார். வாழ்க்கைத் தத்துவங்கள் என்ற தலைப்பமைந்த கவிதையில், ‘நாமே நமக்குத் துணையானால், நாடும் பொருளும் நற்புகழும், தாமே நம்மைத்தேடிவரும்’ என்றும் ‘நெஞ்சிற் கருணையும் நேயமும் விஞ்சும் பொறுமையும் கொண்டவர்க்கு வெல்லும் படைகள் வேறு வேண்டா’என்றும், உள்ளம் பொருந்தி ஊக்கம் பெருக உழைத்தால் தடைகள் பொடியாகிப் பள்ளம் உயர்மேடாகும் என்றும் கூறி, இறுதியில்,

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சிபாலசுப்பிரமணியன்