(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்
3/ 69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம் 4/ 69
ஏழு கடல்களுக்கிடையே: ஒப்பிலக்கியக்கட்டுரைகள் (Across Seven seas: Essays in Comparative Literature)(B.R.Publishing Corporation, Delhi, 1994):
இந்நூலில் 15 ஒப்பிலக்கியக் கட்டுரைகள் உள்ளன. தொல்காப்பியப் பொருளதிகாரம் கூறும் கவிதையியலை மேலைக் கவிதையியலுடன் ஒப்பிட்டு அதனினும் தொலகாப்பியப் பொருளதிகாரம் சிறந்துள்ளது என்பதை முதல் கட்டுரை ஐயந்திரிபற விளக்குகிறது. ஆப்புசின்சு என்னும் ஆங்கிலேயக்கவிஞரின் இன்சுகேப்பு(Inscape) என்னும் கோட்பாட்டை உள்ளுறையுடன் ஒப்பிட்டு ஒற்றுமை வேற்றுமைகளை இரண்டாம் கட்டுரையில் விளக்குகிறார். மணிமேகலை போற்றும் புத்த சமயக்கோட்பாட்டினை ஆராய்ந்து வடமொழிகளில் உள்ள புத்தசமயக்காப்பியங்கள் யாவற்றினும் அஃது உயர்ந்தது என்பதை விளக்கி உணர வைத்துள்ளார்.
திருஞானசம்பந்தர் தேவாரத்தில் புத்தத்தையும் சமணத்தையும் பல இடங்களில் சாடியுள்ளார். இதுகுறித்து நான்காவது கட்டுரையில் விளக்கியுள்ளார். நமக்குக் கிடைத்துள்ள அண்மைய நாட்குறிப்பு இலக்கியமாகப் போற்றப்படுவது ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பு. இதனை பீபைசு(Pepys) என்னும் ஆங்கிலேயக் கவிஞருடன்ஒப்பிட்டு ஐந்தாவது கட்டுரையை அளித்துள்ளார்.
தமிழ் இலக்கியங்கள் குறித்து அரவிந்தர் கூறியுள்ள செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்து ஆறாவது கட்டுரையாக அளித்துள்ளார். புதுமைப்பித்தன், இயேம்சு சாய்சு சிறுகதைளை ஒப்பிட்டு ஏழாவது கட்டுரையை அளித்துள்ளார். எட்டாவது கட்டுரையில் செல்லி(Shelley)யின் ‘விடுதலை பெற்ற புரோமீத்தியசு’(Prometheus Unbound) நாடகத்தையும் பாரதிதாசனின் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகத்தையும் இணைத்து இன்பச் சுவை அளிக்கிறார். பாரதிதாசனின் பாடல்களில் கோட்பாடு பெறும் இடத்தை ஆராய்ந்து அடுத்த கட்டுரையை அளித்துள்ளார். தா.இசு.எலியட்டின்(T. S. Eliot) செல்வாக்குத் தமிழ்ப்புதுக்கவிதைகளில் காணப்படுகிறது எனப் பத்தாவது கட்டுரையில் ஆராய்ந்து வெளிப்படுத்துகிறார்.
தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் ஒப்பிலக்கிய ஆய்வுத்திறனைப் போற்றிப் பதினோராவது கட்டுரையை அளித்துள்ளார். சங்க இலக்கியச் சிறப்புகளை உலக அரங்கிற்குக் கொண்டு சென்ற முன்னோடியாகத் திகழ்பவர் அ. கி. இராமானுசன். அவரின் மொழி பெயர்ப்புகளை ஆழ்ந்த கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து பன்னிரண்டாம் கட்டுரையை அளித்துள்ளார்.
புதுமைப்பித்தன் இயேம்சு சாய்சு சிறுகதைளை ஒப்பிட்டு ஏழாவது கட்டுரையை அளித்துள்ளார்.எட்டாவது கட்டுரையில் செல்லியின் புரோமீத்தியசு பற்றிய நாடகத்தையும் பாரதிதாசனின் இரணியன்பற்றிய நாடகத்தையும் இணைத்து இன்பச் சுவை அளிக்கிறார்.
தமிழ்ப்புதினங்களில்சாதி அரசியல் எவ்வாறு இடம் பெறுகிறது என்பதைத் தோலுரித்துக்காட்டுவதே பதின்மூன்றாம் கட்டுரை. பதினான்காம் கட்டுரையில் இந்திய ஒப்பிலக்கியம் குறித்தும் பதினைந்தாம் கட்டுரையில் தமிழ் இலக்கியத் திறனாய்வு குறித்தும் திறம்பட விளக்கியுள்ளார்.
(தமிழ்ப் பேரிலக்கியங்கள்: ஒப்பியல் பார்வைகள்) The Tamil Canon: Comparative Readings (The Puducherry Book Society, 1998):
இந்நூல் பதினோரு ஒப்பிலக்கியக் கட்டுரைகளை உள்ளடக்கியது. முதல் கட்டுரையில் புறநானூற்றுப் பாலொன்றைப் புது வரலாற்றியத் திறனாய்வு(New Historicism) அணுகுமுறையில் நமக்கு அளித்துள்ளார். இரண்டாவது கட்டுரை இறைச்சி, உள்ளுறை ஆகிய தமிழ்க்கோட்பாடுகளை வடநூலாரின் தொனிக்கோட்பாட்டோடு ஒப்பிட்டு அளித்துள்ளார். மூன்றாவது கட்டுரையில் நட்பைப்பற்றி அரிட்டாட்டிலும் திருவள்ளுவரும் கூறிய கருத்துகளை விளக்கியுள்ளார். நான்காவது கட்டுரையில் சிலப்பதிகாரத்தைக் கிரேக்க நாடகமான ஆந்திகொனியோடு ஒப்பிட்டு உரைக்கிறார்.ஐந்தாவது கட்டுரையில் மணிவாசகரின் திருவாசகத்தில் இடம் பெறும் வேதாந்தக் கருத்துகளைச் சுட்டிக்காட்டுகிறார்.ஆறாவது கட்டுரையில் ஒரு நாடகக்காட்சி ஓமரின் கிரேக்கக் காப்பியத்திலும் வால்மீகி இராமாயணத்தினிலும் கம்பனிலும் எவ்வாறு கவிதையாக்கப் பெறுகிறது என்பதைப் படம் பிடித்துக் காட் டியுள்ளார்.
ஏழாவது கட்டுரையில் பாரதியின் கட்டுரைகளில் மேலை அறிஞர்களின் தாக்கம் குறித்து ஆராய்ந்துள்ளார். எட்டாவது கட்டுரையில் திரெய்சர்(Dreiser) எழுதிய உடன்பிறந்தாள் கேரி(Sister Carrie), க.நா.சு.எழுதிய பொய்த்தேவு ஆகிய புதினங்களை ஒப்பிட்டுள்ளார். ஒன்பதாவது கட்டுரையில் சால்பெல்லோ(Saul Bellow)வின் எர்சாகு(Herzog), நீல.பத்துமநாபனின் பள்ளிகொண்டபுரத்தோடு ஒப்பு நோக்கியுள்ளார்.
பத்தாவது கட்டுரை, இராசம் கிருட்டிணனின் வேருக்கு நீர், இராசாராவின் கந்தப்புரம் (Kanthapura By Raja Rao) ஆகியவற்றை ஒப்பிடுகிறது. இக்கால இந்தியப் புதினங்களில் பிரான்சு எவ்வாறு படம்பிடித்துக் காட்டப்படுகிறது என்பதைப் பதினோராவது கட்டுரையில் காட்சிப்படுத்துகிறார்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment