(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

6/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம் 7/ 69

 

தொன்மமும் தொன்மத் திறனாய்வும் என்பது ஒன்பதாவது கட்டுரை.

முன்னாள் கிரேக்க மெய்யியல் சிந்தனையாளர்கள், ஏரணம்(தருக்கம்), பகுத்தறிவு  ஆகிய அடிப்படையில் தொன்மத்தைப் புறக்கணித்தனர் என்கிறார். தொன்மத்திற்கு எதிரான, ஆதரவான தொன்மத் திறனாய்வாளர்கள் கருத்துகளை விரிவாக எடுத்துரைக்கிறார்.

சம்பந்தர் தேவாரத்தில் தொன்மம் -குறித்துப் பத்தாவது கட்டுரை விளக்குகிறது.

தமிழ் இலக்கியத்தில் சங்கச் சான்றோர் பாடல்களிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் புதுக்கவிதைகள் வரையிலும் இந்தியத் தொன்மங்களின் தாக்கம் விரிவாகவும் ஆழமாகவும் தொன்மக் கதைக்கூறுகளுடனும் தமிழ் இலக்கியப்பாடல்களுடனும் இணைத்து விளக்கியுள்ளார்.

தொன்மத்தைப் பயன்படுத்தும் சங்க இலக்கிய மரபு, காலம் செல்லச் செல்ல அளவிடற்கரிய வகையில் விரிந்து பெருகியது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் இராமாயண, மகாபாரதக் கவிதைகளிலிருந்தும் பல புராணங்களிலிருந்தும் பெற்ற தொன்மங்களை யெல்லாம் தங்கள் இறைப் பாடல்களில் பலவாறாகக் கையாண்டனர்.

தொன்மக் கதைகள் இடம்பெற்ற சம்பந்தர் தேவாரப்பாடல்களைக் குறிப்பிட்டு இக்கட்டுையை விரிவாக அளித்துள்ளார்.

சிதைவாக்கம் என்பது குறித்தது, பதினொன்றாம் கட்டுரை.

இதனை அழிவு(Destruction) என்ற பொருளிலோ மீட்டுருவாக்கம் என்ற பொருளிலோ அமையாது கட்டு குலைக்கப்பட்டு மீண்டும் ஆக்கப்படுவதால் சிதைவாக்கம்(Decontruction) என்று பெயர் பெறுகின்றது என்று தலைப்பு குறித்து முதலில் விளக்குகிறார்.

சிதைவாக்கத்தாரின் கருத்தின்படி ஒரு சொல்லின் பொருள் எப்பொழுதும் தூய்மையானதாக  நிலைத்ததாக இருப்பதில்லை.அதன் வரலாறு காரணமாகப் பொருள் மாறுபாடு பெறுவதும் அதற்கு எதிரான சொல்லின் பொருளால் பாதிக்கப்படுவதும் உண்டு. ‘பகல்’ என்ற சொல்லின் பொருளை ‘இரவு’ என்ற சொல்லைப் புறக்கணித்தும் ‘நன்மை’ என்ற சொல்லின் பொருளைத் ‘தீமை’ என்ற சொல்லைப் புறக்கணித்தும் வரையறுக்க இயலாது.

எபுராம்சு பேட்டு போன்றோர் சிதைவாக்கத்திற்கு எதிராகக் குறை கூறியுள்ளனர். இதற்கு எதிராகச் சிதைவாக்கத் திறனாய்வாளர்கள் கருத்திட்டுள்ளனர். இது வேறொரு திறனாய்வு அணுகுமுறையன்று, வாழ்க்கை மெய்யியல் என்பது அவர்கள் கருத்து. இருப்பினும் திறனாய்வுத் துறையில் சிதைவாக்கம் பதித்துள்ள அழுத்தமான தடம் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்.

இனியதும் இன்னாததும் குறித்துப் பன்னிரண்டாம் கட்டுரை அமைந்துள்ளது.

வாழ்க்கையின் அவலம்பற்றிப் பேசும்

ஓரில் நெய்தல் கறங்க ஓரில்

எனத் தொடங்கும் பக்குடுக்கை நன்கணியாரின் புறநானூற்றுப் பாடலை (194) அடிப்படையாகக் கொண்டு நிலையாமைபற்றிய இனியதும் இன்னாததும் குறித்து விளக்குகிறார்.

இப்பாடல் இடையே

“படைத்தோன் மன்ற பண்பிலாளன்”

என்று இறவனைப் பண்பிலாளன் எனப் புலவர் குறிப்பிடுகிறார்.

இறைவன் கொடியவன் என்றும் அதனால் நாம் நம் வாழ்க்கையை நம் அணுகுமுறையை மாற்றி  எதிர்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை எனக் கூறுவதாகக் கொள்ளலாம்; அல்லது பழிப்பதுபோல் புகழ்வதாகவும் கொள்ளலாம் என்று கூறிப் பாடலை விளக்குகிறார். 

இலக்கியமும் உளவியலும் குறித்து அடுத்த கட்டுரை பதின்மூன்றாவதாக அமைந்துள்ளது.

“உளவியலால் இலக்கியத்திற்குக் கிடைத்த பயன்கள் பலவென்று சொல்லலாம். இலக்கியப்படைப்பு எவ்வாறு நிகழ்கிறது, இலக்கியப் படைப்பாளியின் தன்மை என்னவென்பன போன்ற கேள்விகளுக்கு உளவியல் சில விடைகளைத் தந்திருக்கிறது. கவிதையாக்கத்தை விவாதிக்கத் தேவையான ஒரு நுட்பமான மொழியையும் உளவியல் வல்லுநர் தந்திருக்கிறார்கள்.” இவ்வாறு கூறும் பேரா.ப.ம.நா. ஃபிராயிடு, (இ)யுங்கு முதலான அளவியல் வலலுநர்களின் கருத்துகளை எடுத்துக் கூறி அவற்றுடன் ஒப்பிட்டு இலக்கியப் பாடல்களை விளக்குகிறார். இவற்றின் மூலம், சங்கத்தமிழ்ப்பாடல்களிலும் பின்னர் வந்த தமிழ்ப்பாடல்களிலும் உள்ள உளவியல் அணுகுமுறையைச் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

பதினான்காவது கட்டுரை கலித்தொகையில் பாலியல் படிமங்கள் என்பதாகும்.

தமிழ் முன்னோர்களின் உளவியலறிவைப் பின்வருமாறு பேரா.ப.ம.நா.குறிப்பிடுகிறார்.

 “சங்கச் சான்றோர் பெற்றிருந்த உளவியல் அறிவு அவர் காலத்தே  உலகில் வேறு எந்த இனமும் பெற்றிருந்த உளவியல் அறிவினும் பெருஞ்சிறப்புடையது, பெருவியப்பிற்குரியது என்பதை அன்னார்தம் அகப்பாடல் மரபுகள் தெளிவாகச் சுட்டிக்காட்டும்.” பாடல் மாந்தர்கள் கூற்றின் உளவியல் சூழ்நிலைகளையும் அருமையாக எடுத்துரைத்துள்ளார்.

பதினைந்தாவது கட்டுரை பெண்ணியத் திறனாய்வு.

பெ்ண்ணியம் / ஃபெமினிசம்(Feminism) என்பது பெண்களின் பண்புகள் என்னும் பொருளில் 19ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பின்னர் பெண்ணுரிமைக்காகப் போராடும் பெண்களையும் ஆண்களையும் குறிக்கலாயிற்று.

கான்றாடு(Conrad) தன் புதினம் ஒன்றில் ஓர் ஆண் பாத்திரத்தைப் பெண்ணியலார் / ஃபெமினிசுட்டு(Feminist)  என்றே அழைக்கிறார். இவ்வாறு பெண்ணியம் சொல்லின் தோற்றம், பரவல் குறித்து  முதலில் விளக்கம் தருகிறார்.

பெரும்பாலான குடும்பங்களில் பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாய் உள்ளார்; போராட்டக்களத்திலும் பல குழுக்களாகப் பிரிந்து செயல்படுகின்றனர்.  பல குழுக்களாகத் தெரிவிக்கும் கருத்துகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடியவையாகவோ, முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டியவையாகவோ இல்லை என்கிறார். ஆனால், பெண்ணிய இயக்கம்வியத்தகு வளர்ச்சி பெற்றுள்ளதையும் பெண் எழுத்தாளர்களும் பெண்ணியத் திறனாய்வாளர்களும் படைப்பிலக்கியம், திறனாய்வு ஆகிய துறைகளில் நிகழ்த்தியுள்ள மகத்தான அருஞ்செயல்களையும் மறக்க முடியாது. இவ்வாறு பெண்ணியத் திறனாய்வில் பெண்களே ஈடுபடும் நிலைக்கு முன்னேறியதைக் குறிப்பிடுகிறார்.

 பெண்ணியமும் உளவியலும் என்பது பதினாறாவது கட்டுரை.

பெண்ணியத்திற்கும் உளப்பகுப்பாய்விற்கும் உள்ள உறவு எப்பொழுதும் ஒரே சீராக இருந்ததில்லை. இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போக வழி இல்லையென்றே கருதினர். பொருள் முதல் வாதம், அரசியல், வரலாறு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாககப்பட்ட பெண்ணியக் கோட்பாடுகள் ஃபிராய்டின்(Freud) கருத்துகளுக்கு முரண்பட்டவையாக எண்ணப்பட்டன. உளவியலின் தந்தை பெண்களுக்கு எதிரியாகவும் பெண்ணினம், பெண் எழுத்தாளர்கள், நூல் படிக்கும பெண்கள்பற்றியெல்லாம் உயர்வான எண்ணங்கள் அற்றவராகவும் பார்க்கப்பட்டார். சான்றாகக்கேட்டு மில்லட்டு (Kate Millet) இருபதாம் நூற்றாண்டுப்பாலுணர்வு அரசியல் கருத்தியலில்(Ideology of Sexual politics) ஃபிராயிடைப் பழமைக் கொள்கை கொண்ட புரட்சிக்கெதிரான ஒரு தனி ஆற்றலாகவே கொள்ள வேண்டும் என்பார். இவ்வாறு கூறும் பேரா.ப.ம.நா.,பெண்களுக்கும் மொழிக்கும் உள்ள உறவு, உரிமைப் பறிப்பிற்கு உள்ள தொடர்பு, பெண்களுக்கு ஏற்படும் இடர்கள், பெண்ணியச் செயற்பாடு தொடர்பான உளவியல் கூறுகள் முதலியவற்றை உளவியலறிஞர்கள் கண்ணோட்டத்தில் விளக்குகிறார்.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்