(உ.வே.சா.வின் என் சரித்திரம் 29 தொடர்ச்சி)

என் சரித்திரம் தொடர்ச்சி

அத்தியாயம் 17


தருமத்தை இவ்வாறு வளர்த்து வந்த கிராமங்களுள் குன்னம் ஒன்று. அங்கே அடிக்கடி புலவர்களும் கவிராயர்களும் பாகவதர்களும் இவர்களைப் போன்றவர்களும் வந்து சில தினம் இருந்து தங்கள் தங்கள் ஆற்றலைக் காட்டிப் பரிசு பெற்றுச் செல்வார்கள்.

புலவர் வருகை

திருநெல்வேலியைச் சார்ந்த புளியங்குடி முதலிய இடங்களிலிருந்தும் கோயம்புத்தூர், சேலம் முதலிய இடங்களிலிருந்தும் கூட்டம் கூட்டமாகவும் இருவர் மூவராகவும் தனியாகவும் புலவர்கள் வருவார்கள். எல்லாரும் இலக்கண இலக்கியப் பயிற்சி நிரம்ப உடையவர்க ளென்று சொல்ல முடியாது. சிலருக்கு எளிய நடையில் விரைவாகச் செய்யுள் இயற்றும் பழக்கம் இருக்கும். சிலருக்குச் சில நூல்களில் மாத்திரம் பயிற்சி இருக்கும். ஆனால் எல்லாரும் தனிப் பாடல்கள் பலவற்றைப் பாடஞ்செய்து சமயத்துக் கேற்றபடி அவற்றைச் சொல்லிக் கேட்போரை மகிழ்விப்பார்கள். சிலர் மிக்க ஆடம்பரத்தோடு சில பேரைக் கூட்டிக்கொண்டு ஆரவாரம் செய்துகொண்டு வருவார்கள். வேறு சிலர் அடக்கமாக வருவார்கள். அவர்களுக்குக் கிராமத்தார் அளிக்கும் சம்மானம் ஒரு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரையில் இருக்கும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றபடி புலவர்களின் நடையுடை பாவனைகளில் வேறுபாடு காணப்படும். புளியங்குடியிலிருந்து வரும் புலவர்கள் ஆடம்பரத்தோடு வருவார்கள். பூவந்திக் கொட்டைச் சாயம் ஏற்றிய தலைக்குட்டையும் துறட்டுக் கடுக்கனும் அணிந்து கொண்டிருப்பார் புலவர் தலைவர். அவர் தம் கையில் ஒரு தடி வைத்திருப்பார். அவரோடு சிலர் மாணக்கர்களென்று சொல்லிக்கொண்டு வருவார்கள். ஒருவிதமான இசையோடு புலவர் சடசடவென்று சலிப்பின்றித் தனிப்பாடல்களைச் சொல்லுவார். தென்பாண்டி நாட்டுக் கவிராயர்கள் பாடல் சொல்லும் இசை ஒருவிதம்; கொங்கு நாட்டுப் புலவர்கள் சொல்லும் இசை ஒருவிதம்; திருச்சிராப்பள்ளியைச் சார்ந்தவர்கள் சொல்லுவது ஒருவிதம்.

இத்தகைய புலவர்கள் குன்னத்திற்கு வந்தால் முதலில் சிதம்பரம் பிள்ளையைப் பார்ப்பார்கள். பிறகு பலருடைய முன்னிலையில் தங்கள் புலமையை வெளிப்படுத்தி நன்கொடை பெற்றுச் செல்வார்கள். புலவர்கள் வருடந்தோறும் வந்து செல்வார்கள். இக்கிராமங்களை நம்பியே அவர்கள் புலவர்களாகவும் கவிராயர்களாகவும் வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறு புலவர்கள் வரும்போது அவர்கள் கூறும் செய்யுட்களைக்கேட்டு நான் பாடம் பண்ணிக்கொள்வேன். அவர்களுடைய பழக்கம் என் தமிழ்ப் பசியை அதிகமாக்கிற்று.


ஆடம்பரப் புலவர்

ஒரு நாள் ஒரு புலவரும் அவரைச் சேர்ந்த பரிவாரங்களும் பெரிய ஆரவாரத்துடன் குன்னத்திற்கு வந்தார்கள். புலவர் ஒரு சிவிகையில் ஏறிவந்தார். அவரைச் சேர்ந்த மாணக்கர்களும் ஏவலாளர்களுமாகப் பத்துப் பதினைந்து பேர் ஒரு கூட்டமாக உடன் வந்தனர். பழங்காலத்தில் புலவர்களுக்கு அரசர் பல்லக்கு அளித்தனரென்று நான் கேட்டிருந்தேன். “இக்காலத்திலும் இந்தச் சிறப்பைப்பெற்றுள்ள இவர் பெரும்புலவராகத்தான் இருக்க வேண்டும். இவரிடமிருந்து பல விசயங்களை நாம் தெரிந்துகொள்ளலாம்” என்று நான் சந்தோசம் அடைந்தேன்.

சிவிகை சிதம்பரம் பிள்ளை வீட்டு வாயிலில் வந்து நின்றது. அதிலிருந்த புலவர் கீழே இறங்கினார். அதற்குள் அவருடைய மாணாக்கர் சிலர் தாம் கொணர்ந்திருந்த ஒரு விரிப்பை எடுத்துத் திண்ணையில் விரித்தார். ஒருவர் திண்டைக் கொணர்ந்து சாத்தினார். புலவர் மிகவும் கம்பீரமாகத் திண்ணையில் வந்து அமர்ந்தார். மற்றவர்கள் கை கட்டிக்கொண்டு நின்றார்கள். சிலர் வாரிய பனையேடும் கையுமாக நின்றார்கள். இக்கூட்டத்தைக் கண்டு ஊரார் கூடி விட்டனர்.

சிதம்பரம் பிள்ளை வந்து புலவரைக் கண்டார். “நீங்கள் எந்த ஊர்?” என்று விசாரித்தார்.

அவர், “நாம் பிறந்தது திரிபுவனம்; பிரதாப சிம்ம மகாராசாவின் ஆசுத்தான வித்துவான்; வரகவி” என்று கூறினார். அப்பால் சிதம்பரம் பிள்ளை விசயமாகத் தாம் இயற்றி வந்த செய்யுட்களை அவர் சொன்னார்.

அவருடைய ஆடம்பரமும் தொனியும் சூழ்ந்திருக்கும் பரிவாரத்தின் படாடோபமும் அவர் ஒரு சமத்தானத்து வித்துவானாகவே இருக்க வேண்டுமென்ற எண்ணத்தை யாவருக்கும் உண்டாக்கின. ஆனால் அவர் கூறிய செய்யுட்கள் அவருடைய உண்மையான சக்தியை வெளிப்படுத்தின. சிதம்பரம் பிள்ளை நல்ல தமிழறிவுடையவராதலின், “இவர் வெறும் ஆடம்பரப் புலவர்” என்பதை உணர்ந்து கொண்டார். அவர் கூறிய விருத்தம் ஒன்றில் நாலடிகளும் ஒத்து இராமல் இரண்டு அடிகள் அளவுக்கு மேற்பட்ட சீர்களை உடையனவாக இருந்தன. சிதம்பரம் பிள்ளை அப்புலவரை நோக்கி, “இவற்றில் சீர்கள் அதிகமாக இருக்கின்றனவே!” என்று கேட்டார்.

அவர் சிறிதும் அஞ்சாமல், “தங்களுக்குச் சீர் அதிகமாக வேண்டுமென்று பாடியிருக்கிறேன். சீரைக் குறைத்து விடலாமோ?” என்று விடை கூறினார். கூறிவிட்டு அயலில் நின்றவர் முகங்களை நிமிர்ந்து பார்த்தார். சிதம்பரம்பிள்ளை மேலும் சில கேள்விகளைக் கேட்டார். புலவரோ சம்பந்தமில்லாத விடைகளை உரத்த குரலிற் சொன்னார். சிலருக்குச் சிதம்பரம் பிள்ளை கேட்ட வினாக்களுக்கு அப்புலவர் அநாயாசமாக விடை சொல்லுகிறா ரென்றே தோன்றியது. சிதம்பரம் பிள்ளைக்கு ஒருபால் சிரிப்பும் ஒருபால் கோபமும் உண்டாயின.

அப்புலவர் இலக்கண இலக்கியப் பயிற்சி சிறிதும் இல்லாதவர். பழம் பாடல்களைச் சொல்லி இடையிடையே தாம் காணும் பிரபுக்களின் பெயர்களைச் செருகித் தாம் பாடியனவென்று ஏமாற்றிப் பணம் பறிப்பவர். சில இடங்களில் பொருள் தராதவரை வைது பாடுவதும் உண்டு “அறம் வைத்துப் பாடுவோம்” என்று பயமுறுத்தி சனங்களை நடுங்கச் செய்வதிலும் வல்லவர். ஒருவர் மேல் அறம் வைத்துப் பாடினால் அவர் இறந்து விடுவாரென்ற நம்பிக்கையொன்று அக்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்தது. அவர் பெரும்பாலும் கல்விமான்கள் இல்லாத கிராமங்களாகப் பார்த்துச் சென்று சனங்களை மருட்டிப் பணம் ஈட்டி வருவார். இந்த ஊரையும் அப்படியே நினைத்து வந்தார் போலும்!

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.