Friday, April 02, 2021

பேரா.ப.மருதநாயகத்தின் ஒப்பிலக்கியப் பார்வைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

 

அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

3/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம் 4/ 69

 

ஏழு கடல்களுக்கிடையே:  ஒப்பிலக்கியக்கட்டுரைகள் (Across Seven seas: Essays in Comparative Literature)(B.R.Publishing Corporation, Delhi, 1994):

இந்நூலில் 15 ஒப்பிலக்கியக் கட்டுரைகள் உள்ளன. தொல்காப்பியப் பொருளதிகாரம் கூறும் கவிதையியலை மேலைக் கவிதையியலுடன் ஒப்பிட்டு அதனினும் தொலகாப்பியப் பொருளதிகாரம் சிறந்துள்ளது என்பதை முதல் கட்டுரை  ஐயந்திரிபற விளக்குகிறது. ஆப்புசின்சு என்னும்  ஆங்கிலேயக்கவிஞரின் இன்சுகேப்பு(Inscape) என்னும் கோட்பாட்டை உள்ளுறையுடன் ஒப்பிட்டு ஒற்றுமை வேற்றுமைகளை இரண்டாம் கட்டுரையில் விளக்குகிறார். மணிமேகலை போற்றும் புத்த சமயக்கோட்பாட்டினை ஆராய்ந்து வடமொழிகளில் உள்ள புத்தசமயக்காப்பியங்கள் யாவற்றினும் அஃது உயர்ந்தது என்பதை விளக்கி உணர வைத்துள்ளார்.

திருஞானசம்பந்தர் தேவாரத்தில்  புத்தத்தையும் சமணத்தையும் பல இடங்களில் சாடியுள்ளார். இதுகுறித்து நான்காவது கட்டுரையில் விளக்கியுள்ளார். நமக்குக் கிடைத்துள்ள அண்மைய நாட்குறிப்பு இலக்கியமாகப் போற்றப்படுவது ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பு. இதனை பீபைசு(Pepys) என்னும் ஆங்கிலேயக் கவிஞருடன்ஒப்பிட்டு ஐந்தாவது கட்டுரையை அளித்துள்ளார்.

தமிழ் இலக்கியங்கள் குறித்து அரவிந்தர் கூறியுள்ள செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்து ஆறாவது கட்டுரையாக அளித்துள்ளார். புதுமைப்பித்தன், இயேம்சு சாய்சு சிறுகதைளை ஒப்பிட்டு ஏழாவது கட்டுரையை அளித்துள்ளார். எட்டாவது கட்டுரையில் செல்லி(Shelley)யின் ‘விடுதலை பெற்ற புரோமீத்தியசு’(Prometheus Unbound) நாடகத்தையும் பாரதிதாசனின்  இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகத்தையும் இணைத்து இன்பச் சுவை அளிக்கிறார். பாரதிதாசனின் பாடல்களில் கோட்பாடு பெறும் இடத்தை ஆராய்ந்து அடுத்த கட்டுரையை அளித்துள்ளார். தா.இசு.எலியட்டின்(T. S. Eliot) செல்வாக்குத் தமிழ்ப்புதுக்கவிதைகளில் காணப்படுகிறது எனப் பத்தாவது கட்டுரையில் ஆராய்ந்து வெளிப்படுத்துகிறார்.

தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் ஒப்பிலக்கிய ஆய்வுத்திறனைப் போற்றிப் பதினோராவது கட்டுரையை அளித்துள்ளார். சங்க இலக்கியச் சிறப்புகளை உலக அரங்கிற்குக் கொண்டு சென்ற முன்னோடியாகத் திகழ்பவர் அ. கி. இராமானுசன். அவரின் மொழி பெயர்ப்புகளை ஆழ்ந்த கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து பன்னிரண்டாம் கட்டுரையை அளித்துள்ளார்.

புதுமைப்பித்தன் இயேம்சு சாய்சு சிறுகதைளை ஒப்பிட்டு ஏழாவது கட்டுரையை அளித்துள்ளார்.எட்டாவது கட்டுரையில் செல்லியின் புரோமீத்தியசு பற்றிய நாடகத்தையும் பாரதிதாசனின்  இரணியன்பற்றிய நாடகத்தையும் இணைத்து இன்பச் சுவை அளிக்கிறார்.

தமிழ்ப்புதினங்களில்சாதி அரசியல் எவ்வாறு இடம் பெறுகிறது என்பதைத் தோலுரித்துக்காட்டுவதே பதின்மூன்றாம் கட்டுரை. பதினான்காம் கட்டுரையில் இந்திய ஒப்பிலக்கியம் குறித்தும் பதினைந்தாம் கட்டுரையில் தமிழ் இலக்கியத் திறனாய்வு குறித்தும் திறம்பட விளக்கியுள்ளார்.

 (தமிழ்ப் பேரிலக்கியங்கள்: ஒப்பியல் பார்வைகள்) The Tamil Canon: Comparative Readings (The Puducherry Book Society, 1998):

இந்நூல் பதினோரு ஒப்பிலக்கியக் கட்டுரைகளை உள்ளடக்கியது. முதல் கட்டுரையில் புறநானூற்றுப் பாலொன்றைப் புது வரலாற்றியத் திறனாய்வு(New Historicism) அணுகுமுறையில் நமக்கு அளித்துள்ளார். இரண்டாவது கட்டுரை இறைச்சி, உள்ளுறை ஆகிய தமிழ்க்கோட்பாடுகளை வடநூலாரின் தொனிக்கோட்பாட்டோடு ஒப்பிட்டு அளித்துள்ளார். மூன்றாவது கட்டுரையில் நட்பைப்பற்றி அரிட்டாட்டிலும் திருவள்ளுவரும் கூறிய கருத்துகளை விளக்கியுள்ளார். நான்காவது கட்டுரையில் சிலப்பதிகாரத்தைக் கிரேக்க நாடகமான ஆந்திகொனியோடு ஒப்பிட்டு உரைக்கிறார்.ஐந்தாவது கட்டுரையில் மணிவாசகரின் திருவாசகத்தில் இடம் பெறும் வேதாந்தக் கருத்துகளைச் சுட்டிக்காட்டுகிறார்.ஆறாவது கட்டுரையில் ஒரு நாடகக்காட்சி ஓமரின் கிரேக்கக் காப்பியத்திலும் வால்மீகி இராமாயணத்தினிலும் கம்பனிலும் எவ்வாறு கவிதையாக்கப் பெறுகிறது என்பதைப் படம் பிடித்துக் காட் டியுள்ளார்.

      ஏழாவது கட்டுரையில் பாரதியின் கட்டுரைகளில் மேலை அறிஞர்களின் தாக்கம் குறித்து ஆராய்ந்துள்ளார். எட்டாவது கட்டுரையில் திரெய்சர்(Dreiser) எழுதிய உடன்பிறந்தாள் கேரி(Sister Carrie), க.நா.சு.எழுதிய பொய்த்தேவு ஆகிய புதினங்களை ஒப்பிட்டுள்ளார். ஒன்பதாவது கட்டுரையில் சால்பெல்லோ(Saul Bellow)வின் எர்சாகு(Herzog), நீல.பத்துமநாபனின் பள்ளிகொண்டபுரத்தோடு ஒப்பு நோக்கியுள்ளார்.

பத்தாவது கட்டுரை, இராசம் கிருட்டிணனின் வேருக்கு நீர், இராசாராவின் கந்தப்புரம் (Kanthapura By Raja Rao)  ஆகியவற்றை ஒப்பிடுகிறது. இக்கால இந்தியப் புதினங்களில் பிரான்சு எவ்வாறு படம்பிடித்துக் காட்டப்படுகிறது என்பதைப் பதினோராவது கட்டுரையில் காட்சிப்படுத்துகிறார்.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்

 



Thursday, April 01, 2021

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி மருதநாயகம் 3/ 69: இலக்குவனார் திருவள்ளுவன்

 

அகரமுதல




தலைசிறந்த ஒப்பிலக்கிய அறிஞர் மருதநாயகம்

 

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

2/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம் 3/ 69

 

பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகம், தமிழ் ஆய்வின் விடிவெள்ளி எனப் போற்றப்படுபவர். இவரது ஒரு நூலைப் படித்தாலும்  இவரது ஒப்பிலா ஆய்வுச்சிறப்பைப் புரிந்து கொள்ள இயலும்.

இவரது வற்றாப் புலமை வளம் நூல்களின் வாயிலாகவும் கட்டுரைகளின் வாயிலாகவும் வெளிப்பட்டுத் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வழிவகுக்கின்றது.

ஆங்கில இலக்கியங்களைப் பயின்றவர், அவற்றிலும் சிறப்பான தொன்மை வாய்ந்த தமிழ் இலக்கியங்கள் உலக அறிஞர்களின் கருத்தினை ஈர்க்கவில்லையே என வருந்தினார். எனவே, தமிழ் இலக்கியங்களின் பெருமையை உலக இலக்கியங்களுடன் ஒப்பியல் நோக்கில் ஆய்ந்து வெளிப்படுத்தி வருகிறார். சிறப்பு மிகுந்த இவரது நூல்கள்பற்றிப் பார்ப்போம்.

கிழக்கும் மேற்கும்(1991)

இவரின் முதல் நூலான ‘கிழக்கும் மேற்கும்’ என்பதன் மூலம் மேற்கத்திய ஆங்கில இலக்கியங்களுடன் தமிழ் இலக்கியங்களை ஒப்பிட்டுத் தமிழ் இலக்கியச் சிறப்பை உலகறிய உணர்த்தினார். இந் நூலில் தொல்காப்பியர், பாரதியார், பாரதிதாசன், அரவிந்தர், டி.எசு. எலியட்டு ஆகியவர்களின் படைப்புகளை ஒப்பியல் நோக்கில் ஆராய்ந்துள்ளார். சங்க இலக்கியம் முதலான தமிழ் இலக்கியங்கள் மேலைநாட்டவர்க்கு அறிமுகமாகி இருந்தால் உலகெங்கும் அவை பரவியிருக்கும் என்பதால் தமிழ் இலக்கியச் சிறப்பையும் தமிழ்ப்புலவர்கள் ஆற்றலையும் உலகிற்கு ஒப்பியல் நோக்கில் வெளிப்படுத்தினார். அயல்நாட்டவரை மட்டுமல்ல தமிழின் பெருமையை அறியாத் தமிழர்களின் கண்களையும் இந்நூல் திறந்தது. ஆங்கிலம் தன் தாய்ப்பகுதியாகிய இங்கிலாந்துத் தீவில் செல்வாக்கு குறைந்தும் ஐரோப்பாவில் மிகக் குறைவாகப் பேசப்பட்டும் வந்த மொழி 1914 இல் வெளிவந்த நான்கு முதன்மை ஐரோப்பிய மொழிகளின் அகராதிகளில் ஆங்கிலம் இடம் பெறவில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  உலகப் பொதுமொழியாகப் பரவும் பேறு பெற்றது என்கிறார். அப்படியானால் நாம் முயன்றால் தமிழை உலகப்பொதுமொழியாக வளர்க்கலாம் அல்லவா?

‘தமிழில் இலக்கிய மொழி பெயர்ப்புப் பணி’ என்னும் கட்டுரை இந்தியச் சூழலில் மொழிபெயர்ப்பின் தேவைபற்றியும் இதுவரை வெளிவந்துள்ளஆங்கில மொழி பெயர்ப்புகளின் நிறை குறைகள் குறித்தும் பிற மொழிகளில் மொழி பெயர்க்கவேண்டிய தமிழ் நூல்கள் குறித்தும் மொழிபெயர்ப்பு எவ்வாறு அமையவேண்டும் என்பது குறித்தும் சுருக்கமாகச் சொல்கிறது.  மொழிபெயர்ப்புப் பணியில் சங்க இலக்கியங்களுக்கு முதன்மை அளிக்க வலியுறுத்துகிறார்.

இத் தொகுதியில் இடம் பெற்ற கட்டுரைகள் யாவும், இருபது நூற்றாண்டுகளுக்கு மேலான கால எல்லையைக் கொண்ட தமிழ் இலக்கியப்பரப்பை நமக்கு உணர்த்துவன. மேலும், பின்னர்ப் பேரா.ப.மருதநாயகம் எழுதிய நூல்கள் இவற்றை அடித்தளமாகக் கொண்ட விரிவாக்கங்களே.

(போற்றுதல்களும் தூற்றுதல்களும் : திறனாய்வுக் கட்டுரைகள்) Celebrations and Detractions : Essays in Criticism (Reliance Publishing House, New Delhi, 1993)

இந்நூலில் பின்வரும் பதினைந்து ஆங்கிலத் திறனாய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன:

1) இலக்கியமும் தத்துவமும், 2)ஆதாரன் (Hawthorne) என்னும் அமெரிக்கரின் (The Scarlet Letter), 3) The House of the Seven Gables என்னும் புதினத்தில் சேக்குசுபியரின் செல்வாக்கு, 4) புனைவியலும் வரலாறும், 5) மேத்தியூ அருனாலுடும் புனைவியல் கவிதையும், 6) உரைகல் அணுகுமுறை எனும் இலக்கியத் திறனாய்வு, 7) புனைவியல் காலத்தில் சேக்குசுபியர் நாடகங்கள்பற்றிய திறனாய்வு, 8) உரைகல் திறனாய்வும் மேத்தியூ அருனாலுடும், 9)எசுரா பவுண்டின் கவிதைகளில் வட்டிக்குக் கடன் தரல் எனும் பாடுபொருள், 10) எசுரா பவுண்டின் காட்சியுருக் கோட்பாடுகள், 11)ஏட்சு(W.B.Yeats)பற்றிய ஆங்கிலக் கவிதைகள்,12), டி.எசு.எலியட்டு எழுதிய The Cocktail Party எனும் நாடகம், 13) டி.எசு.எலியட்டின் கவிதையும் நாடகங்களும், 14)இலெசிலி ஃபீடுலரின் இலக்கியக்கோட்பாடு, 15)சவகர்லால் நேருவி்ன் மாந்தநேயம்.

(தொன்மத் தேடல்: இலெசுலி ஃபீடுலரின் திறனாய்வுக் கோட்பாடும் செயலாக்கமும்) Quest for Myth: Leslie Fielder’s Critical Theory and Practice  (1994)

அமெரிக்கத் திறனாய்வாளர், புதின ஆசிரியர், கவிஞர் இலெசுலி ஃபீடுலரின் திறனாய்வு நூல்களை இந்நூலில் ஆராய்ந்துள்ளார். இவர் நியூயார்க்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியவர். இவரது அமெரிக்கப் புதினங்களில் காதலும் இறப்பும் (Love and Death in the American Novel) என்னும் நூல் உலகப்புகழ் பெற்றது.பேரா.மருதநாயகம் அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பயின்றபொழுது, புதினத்தின் தன்மை என்னும் தலைப்பில் இவர் நடத்திய பாடத்தை மாணாக்கராக இருந்து கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். தம்முடைய ஆசிரியருக்கு மிக விருப்பமான தொன்மத்திறனாய்வு(Myth Criticism) குறித்தும் அவருடைய பெருஞ்சிறப்புக்குரிய திறனாய்வு நூல்கள் குறித்தும் ஆறு உட்தலைப்புகளில் இந்நூலில் ஆய்வு நிகழ்த்தியுள்ளார்.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்

 



Wednesday, March 31, 2021

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி மருதநாயகம் 2/ 69: இலக்குவனார் திருவள்ளுவன்

 

அகரமுதல



(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

1/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்  2/ 69

 

மைசூர் இந்திய மொழிகள் நிறுவனத்தில் தமிழ்ச்செம்மொழி மையம் தொடங்கிய பொழுது(2006) புதுவை நிறுவனத்தின் இயக்குநராக இருந்துகொண்டே பணியாற்றும் வண்ணம் ஆய்வுத்தகைஞர் பணி வழங்கப்பட்டது. இப்பணியைச் சிறப்பாகச்செய்ய வேண்டுமென்பதற்காகப் புதுவைப்பணியிலிருந்து விடுபட்டு 03.04.2006 இல் மைசூர் நிறுவனத்திலேயே பணியில் சேர்ந்தார். சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மாற்றப்பட்ட பொழுது அதன் பொறுப்பு அலுவலராகப் பணிப்பொறுப்பேற்றார்(9.05.2008). பின்னர்த் தமிழ்ச் செவ்விலக்கியங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புத் திட்டப்பணி இவருக்கு வழங்கப்பெற்றது. இப்பணிகளிலேயே காலத்தைச் செலவழித்த இவருக்கு இஃது எளிதாயிற்று.

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிச் சிறந்த கல்வியாளராகத் திகழ்ந்தவர்,  புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் பணிபுரிந்தார். பத்து ஆண்டுகளாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வுத்தகைஞராகச் செயல்பட்டார். மொரீசியசில் உள்ள மகாத்மா காந்தி உயர்கல்வி நிறுவனத்தின் பேரறிஞர் அண்ணா இருக்கைப் பேராசிரியராக அழைக்கப்பெற்றார். பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் சொற்பொழிவை நிகழ்த்தினார். பேரறிஞர் அண்ணாபற்றிய நூல்கள் வெளிவருவதற்கான திட்டப்பணிகளை வடிவமைத்து அளித்தார். கனடாவின் காருலெட்டன் பல்கலைக்கழகம்(Carleton University, Canada ), பிரெஞ்சு இரென்-2 பல்கலைக்கழகம்(Rennes-2 University, France), இரீயூனியன் பல்கலைக்கழகம்(Reunion University) , ஆகசுபோருடு பல்கலைக்கழகம்(Oxford University), இலண்டன் பல்கலைக்கழகம், செருமனியின் ஐடல் பெருக்கு  பல்கலைக்கழகம்( Institute of South Asian Studies of Heidelberg University, Germany), அமெரிக்காவின் ஆர்வருடு பல்கலைக்கழகம்( Harvard University, USA) ஆகியவற்றில் தமிழிலக்கிய மேன்மை குறித்த ஆய்வுரைகள் வழங்கியுள்ளார்.

         இவர் வழிகாட்டுதலில் ஆய்வுப் பட்டம் பெற்றவர்கள் முப்பது ஆசிரியர்கள் ஆவர்.

        இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளில் இருந்தும் வெளிவரும் ஆய்விதழ்கள் பலவும் இவருடைய தமிழ், அமெரிக்க, கனடா இலக்கியங்கள் தொடர்பான இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளால் சிறப்புற்றன.

பன்னாட்டுக் கருத்தரங்கங்களில் பங்கேற்றுத் தமிழ் இலக்கியங்கள் குறித்த ஒப்பாய்வுக் கட்டுரைகளை அளித்து வருகிறார்.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, பால்டிமோர், இடல்லசு. இராலே, சாருலசுடன், வாசிங்குடன் ஆகிய நகரங்களில் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கங்களில் புறநானூறு, திருக்குறள், தனிநாயக அடிகளின் தமிழ்ப்பணி போன்ற தலைப்புகளில் அவரால் கட்டுரைகள் வழங்கப்பெற்றன. ஆக்குபோருடு பாடலியன் நூலகத்திலும், இலண்டன் பிரித்தானிய நூலகத்திலும் அறிஞர் எஃப்.டபிள்யூ. எல்லிசின் கையெழுத்துப்படிகளை ஆய்வுசெய்தார். இவற்றின் மூலம் அன்னாரின் மூன்று அதிகாரத் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலையும், தமிழ் யாப்பிலக்கணம் பற்றிய ஆங்கில நூலையும் பதிப்பித்தார்.

தமிழ்க்கவிதைகள், கட்டுரைகள், புதினங்கள் தொடர்பான இவரின் மொழி பெயர்ப்பு நூல்கள் பலவும் சாகித்திய அகாதமியால் வெளியிடப்பட்டு வருகின்றன.

 

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த நூல்கள்

தமிழ் இலக்கியங்கள் உலகெங்கும் பரவ வேண்டும் என்பதற்காக அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வருகிறார். இதுவரை மொழி பெயர்த்தவை வருமாறு:

 

  • முத்தொள்ளாயிரத்திலிருந்து நாற்பது பாடல்கள் (MUTTOḶḶĀYIRAM: Text, Transliteration and Translations in English Verse and Prose), செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை, 2010
  • புறநானூறு முழுவதும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை
  • முதுமொழிக் காஞ்சி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதியார் பாடல்கள், சாகித்திய அகாதெமி
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதியார் கட்டுரைகள், சாகித்திய அகாதெமி
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிதாசன் பாடல்கள், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிதாசன் பாடல்கள், பாரதிதாசன் பல்கழைக்கழகம்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட வாணிதாசன் பாடல்கள், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட குலோத்துங்கன் பாடல்கள், நியூ சென்சுரி புக் ஹவுஸ்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட சிற்பியின் பாடல்கள், நந்தினி பதிப்பகம்

பதிப்புப் பணிகள்

அருமையான பதினைந்து ஆங்கில நூல்களையும் பதிப்பித்துள்ளார்.

 

இவர் பதிப்பித்த நூல்கள் வருமாறு:                                                                      

An Anthology of American Prose, Emerald Publishers, 1987

The Art of Prose, Pondicherry University, 1988

Sixty-Third Annual Conference of Indian Philosophical Congress Souvenir, Pondicherry University, 1988

Soul_ Animating Stories, New Century Book House, 1994

Palm-leaf and other Manuscripts in Indian Languages, Institute of Asian Studies, Chennai, 1995

Selected Poems of Bharatidasan, Pondicherry Institute of Linguistics and Culture, 2001

Selected Poems of Vanidasan, Pondicherry Institute of Linguistics and Culture, 2001

The Earliest Complete Grammar: Studies in Tolkappiyam, Sekar Pathippagam, Chennai, 2010

The Ellis Manuscript (Ellis’s Commentary on three chapters of Tirukkural in his own handwriting), Seethai Pathippagam, 2010

Kulothungan’s Maanuda Yaathirai, translated by V. Murugan, New Century Book House, 2014

  1. W. Ellis’s Memorandum on Tamil Prosody, Kaavya, Chennai, 2014
  2. W. Ellis’s Translations of Tamil Classics, International Institute of Tamil Studies, Chennai, 2015

Last four volumes of Ananda Ranga Pillai Diary, 2002-2006

Edited a few issues of the Journal of Pondicherry Institute of Linguistics and Culture, 2002-2006

Edited several issues of the Newsletter (Chemmozhi) of Central Institute of Classical Tamil, 2006-2012

தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழின் முதன்மைச்சிறப்பை உணர்த்தும் நூல் விவரங்களையும் அவற்றின் சிறப்புகளையும் இக் கட்டுரையில் பின்னர்க் காணலாம்.

 

விருதாளர்

இவரது பணிச்சிறப்புகளையும் நூற்சிறப்புகளையும் புலமை வளத்தையும் பாராட்டிப் பல்வேறு அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கியுள்ளன. தமிழக அரசு 2018 ஆம் ஆண்டு இவருக்கு முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விருது வழங்கிச் சிறப்பித்தது. தமிழின்செவ்வியல் தகுதி என்னும் இவருடைய நூலுக்கு 2015இல் சிறந்த திறனாய்வு நூலுக்கான பரிசு வழங்கியது.சேலம்தமிழ்ச்சங்கம் இவருடைய பாரதி பதினாறு நூலுக்குச் சிறந்த திறனாய்வு நூலெனப் பாராட்டிப் பரிசு வழங்கியது.

மேலும், திருக்குறள் தமிழறிஞர்(2005), மனோன்மணீயம் சுந்தரனார் விருது(2007),  மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்(பிள்ளை) நினைவுப் பொற்கிழி விருது(2013), புறநானூற்றுத்தமிழறிஞர்(2013), சிறந்த தமிழறிஞர்(2014), செம்மொழிச்செம்மல்(2016), தமிழ்ச்சான்றோர்(2016), குலோத்துங்கன் ஆய்வாளர்(2017), இலக்கியத் திலகம்(2018),    சிறந்த தமிழ்க்ல்வியாளர்(2018) முதலான பல்வேறு விருதுகளைப் பல்வேறு அமைப்புகள் மூலம் பெற்றுள்ளார்.

நுண்ணிய ஒப்பாய்வு மேற்கொண்டே இவர்  கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். தமிழுக்கு மிகவும் பிற்பட்ட, எழுத்து வடிவத்தையும் நல்லறக் கருத்துகளையும் இரவல் பெற்ற சமற்கிருதமே  மூத்த மொழி என்னும் பொய்த்தோலைக் கிழித்தெறிந்தார். வேண்டுமென்றே சமற்கிருதத்தை முன்னுக்குத் தள்ளித் தமிழைப் பின்னுக்குத் தள்ளும் நடுநிலை தவறுவோர் இவரது நூல்களைப் படித்தாவது திருந்த வேண்டும். இவரது கட்டுரைகளையும் நூல்களின் எடுபடிகளையும் பல்வேறு நிலைகளில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடங்களாக வைக்க வேண்டும். அப்பொழுதுதான் வளரும் தலைமுறையினர் சிறந்த அறிவு பெற்று விளங்குவர். 

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். (திருவள்ளுவர், திருக்குறள் 445)

என்னும் உலகமறைக்கேற்ப அரசு இவரைப்போன்ற தகைமையாளர்களைச் சூழ வைத்துக்கொண்டு அறிவுரை பெற்றுத் தமிழ்ப்பணிகளில் ஈடுபட்டால் அரசு பெருமையுறும்; இலக்கியப் பணிகள் சிறந்தோங்கும்; தமிழ் உலகெங்கும் பரவும்

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, March 30, 2021

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி மருதநாயகம் 1/ 69: இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

1/ 69

 

தமிழ்ப்பேராசிரியர், ஆங்கிலப் பேராசிரியர், கல்வியாளர், மொழிபெயர்ப்பாளர், நூலாசிரியர், திறனாய்வாளர், ஆய்வாளர், மொழியியலறிஞர், ஒப்பிலக்கிய அறிஞர், திருக்குறளறிஞர், சங்க இலக்கிய அறிஞர், பன்னாட்டு இலக்கிய அறிஞர், தமிழின் செம்மொழி அறிந்தேற்பிற்குப் பின்புலமாக இருந்தவர், செம்மொழி இலக்கியச் சொற்பொழிவாளர், செம்மொழிச் செம்மல் எனப் போற்றப்படும் பன்முகச்சிறப்பாளர் பேரா.முனைவர் ப.மருதநாயகம் நானிலம் போற்றும் நல்லறிஞர்.

பேரா.ப.மருதநாயகம் உறையூரில் மூ.பரமசிவம் – வள்ளியம்மை இணையருக்குப் பிறந்தார். பதிவேடுகளின்படி இவர் பிறந்த நாள் வைகாசி 20, 1970 இல் 03.06.1939. ஆனால், பிறப்புக் குறிப்பின்படி ஆவணி 03, 1970/19.08.1939 இல் பிறந்துள்ளார்.

இவரது தாய்வழி உறவினரான நாகராசர் என்பார் ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னிந்திய இருப்பூர்தித்துறையில் தலைமை அறிவுரைஞராக உயர் பதவி வகித்தவர்.  அவர் நினைவாக இவருக்குப் பிறப்பின்பொழுது நாகராசன் எனப் பெயர் சூட்டினர். அந்தோணியார் தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் வரை இந்தப் பெயர்தான் இவருக்கு இருந்தது. எனினும் சேச ஐயங்கார் உயர்நிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட பொழுது இவரது முப்பாட்டனார் பெயரான மருதநாயகம் என்பதைப் பெயராக இவர் தந்தை பதிந்துவிட்டார். பழைய பெயர் மறைந்து மருதநாயகம் பெயரே நிலைத்துத் தமிழ் வரலாற்றிலும் இடம் பெற்றுவிட்டது.

 

கல்வி

பள்ளிக்கல்வியில் நூலாசிரியர்களாகவும் மொழி பெயர்ப்பாளர்களாகவும் திகழ்ந்த தகுதியில் சிறந்தவர்கள் இவருக்கு ஆசிரியராக அமைந்தனர். எனவே, தமிழார்வமும் ஆங்கில ஆர்வமும் இயல்பாய் அமைந்து, இருமொழிக்கல்வியிலும் சிறப்புற்றார். பள்ளியிறுதி வகுப்பில் மயிலை சிவமுத்துவின் தமிழ் மாணவர் மன்றம் நடத்திய மானில அளவிலான பொதுத்தமிழ்த்தேர்வு, சிறப்புத் தமிழ்த் தேர்வு இரண்டிலும் மாநில முதன்மை பெற்றார்.

திருச்சி தேசியக்கல்லூரியில் புகுமுக வகுப்பும் திருச்சி தூயவளனார் கல்லூரியில் கணக்கை முதன்மைப்பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பிலும் தேர்ச்சி பெற்றார். அப்பொழுது தந்தையார் மறைந்ததால் இவரின் மேற்கல்வியும் இவரை அணுகாமல் போயிற்று. எனினும் இவரின் சிறப்பான தேர்ச்சியால் அங்கேயே ஆங்கிலப் பயிற்றுநராகச் சேர்ந்தார்.

ஆங்கில ஆசிரியப் பணியால் இவரது கணித நாட்டம் ஆங்கிலத்திற்கு மாறியது. நிலையான பணிக்கு இவர் முயன்றதால் திருச்சியில் உள்ள தொடரிப்பெட்டித் தொழிற்சாலைக்கு எழுத்தர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிரியப்பணியில் விடுவிப்பு பெற்றார். ஆனால், சீனப்போரால் புதிய பணியமர்த்தங்களுக்கு மத்தியஅரசு தடை விதித்தது. எனவே, தேர்வில் வெற்றி பெற்றும் பணியில் சேர இயலவில்லை. கல்விப்பணிக்கும் அதனால் தமிழ்ப்பணிக்கும் இவர் திரும்புவதற்கு இதுவே காரணமாக அமைந்தது.

இதன்பின்னர் சில திங்கள் கழித்துத் தஞ்சாவூர் சரபோசி கல்லூரியில் ஆங்கிலப்பயிற்றுநராகச் சேர்ந்தார். ஓராண்டுப் பணிக்குப் பின்னர் திருச்சி தூய வளனார் கல்லூரியில் புதியதாகத் தொடங்கப்பட்ட ஆங்கில முதுகலை இலக்கிய வகுப்பில் சேர்ந்து பட்டம் பெற்றார்(1965-67).

இக்காலத்தில் இவரின்மொழியியல் ஆய்வியல் கட்டுரைகளாலும் முதலாமாண்டிலேயே புதியதாக நிறுவப்பட்ட தாத்தாச்சாரியார் நினைவுப் பரிசைப் பெற்றதாலும் ஆசிரியர்கள், மாணாக்கர்களின் பாராட்டிற்கும் அன்பிற்கும் உரியவரானார்.

இங்கே ஆய்வுப்பணிக்கும் பதவி உயர்விற்கும் வாய்ப்பின்மையால் 1974 இல் விருதுநகர் செந்திற்குமார(நாடார்) கல்லூரியில் ஆங்கில இணைப்பேராசிரியராகச் சேர்ந்தார்.

அமெரிக்க அரசு இந்தியாவில் உள்ள பல்துறை ஆசியர்களுக்கும் கிழக்கு மேற்குப்பண்பாட்டு மையம் மூலமாகக் கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. இதற்கான தேர்வில் வெற்றி பெற்று, அமெரிக்க அவாய் பல்கலைக்கழகத்தில் சனவரி முதல் திசம்பர் வரை பயின்று அமெரிக்க இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 12 பாடங்கள் உள்ள இதில் முதலிடத் தேர்ச்சி பெற்றார்.  மூவாண்டு முனைவர் பட்டம் பெற வாய்ப்பிருந்தாலும் அதைக் கைவிட்டுக் குடும்பத்தாருடன் இருக்க விரும்பித் தமிழகம் திரும்பினார். மதுரை காமராசர் பல்கலைககழகத்தில் ஆங்கில இணைப்பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்(1977-1986)

அமெரிக்காவில் பயின்ற பொழுது ஆய்வுக்கட்டுரைகளும் ஆய்வுரைகளும் வழங்கினார். அதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று ‘தமிழ்க்கவிதையின் சிறப்பு’ என்பதாகும். இவரது கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தமையால் மதுரைக்கு வந்ததும் இவர் அனுப்பிய கட்டுரைகள் அமெரிக்க இதழ்களில் வெளிவந்தன. அமெரிக்காவில் வெளியிட்ட ‘எழுத்தாளர்களும் திறனாய்வாளர்களும்(Writers and Critics)’ என்னும் பட்டியலிலும் இவர் பெயர் இடம் பெற்றது.

இதுவரை விளக்க முடியாத பகுதிகளுக்கான விளக்கங்களை மட்டும் அமெரிக்காவில் ஓரிதழ் வெளியிட்டு வந்தது. அதில் இவர் கட்டுரைகளும் இடம் பெற்றன. சங்க இலக்கியங்களில் தேர்ச்சி உடையவர்களால் ஆங்கில நாடகங்களுக்கு ஆங்கில அறிஞர்களால் விளக்கம் தர முடியாத பகுதிகளுக்கும் விளக்கம் தரமுடியும் என்பதை உணர்ந்து கொண்டதாக இவர் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்(1980-82) தமிழ் இலக்கியத்திலும் முதுகலைப்  பட்டம் பெற்றார். தொன்மத்திறனாய்வு குறித்த ஆங்கில ஆய்வேட்டிற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம்(1982) வழங்கியது. அங்கேயே பிரெஞ்சு மொழிப்பட்டயம் 1986இல் பெற்றார். அதே பல்கலைக்கழகம் தெ.பொ.மீ.பற்றிய தமிழ் ஆய்வேட்டிற்காக முனைவர் பட்டம்(1996) வழங்கியது. ‘

1986இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மாலைக்கல்லூரியின் இயக்குநராகக் கூடுதல் பொறுப்பேற்றார். ஆங்கிலம், கணிதம், வணிகவியல் துறைகளில் ஆய்வியல்(எம்ஃபில்) பட்ட வகுப்பை அறிமுகம் செய்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். அப்பொழுது நடுவணரசின் பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணிவாய்ப்பு வந்தது..  அதே நேரம், (தஞ்சாவூர்) தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கியத் துறைப் பேராசிரியராகவும் பதவி ஆணை வந்தது. மதுரையிலேயே தொடருமாறு அங்குள்ளோர் வலியுறுத்தினர். இருப்பினும் நடுவணரசின் புதிய பல்கலைக்கழகம் என்பதால் புதுச்சேரியில் பணியில் சேர்ந்தார். இப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பட்டங்களுக்கு ஒப்பிலக்கியத் தலைப்புகளுக்கு முன்னுரிமை அளித்து ஆய்வாளர்களை ஒப்பிலக்கியத்திற்கு ஆயத்தப்படுத்தினார். நாடு முழுவதிலும் உள்ளவர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் ஆங்கிலத்துறையை மாற்றிச் சிறப்பான புகழ் பெற்றார்.

துணைவேந்தர் வற்புறுத்தலால் பதிவாளர் பதவியை ஏற்றுக்கொண்டார். இருப்பினும் இதில் ஈடுபாடில்லாமையால் உடல்நிலை சரியில்லை யென்று கூறி ஐந்து மாதப் பொறுப்பிலிருந்து விலகினார்(25.10.1999 – 20.3.2000). மீளவும் ஆங்கிலத்துறைக்கே சென்றுவிட்டார்.

‘தமிழ்ச்செவ்விலக்கியங்கள் – ஒப்பியல் பார்வை’  என்னும் ஆங்கிலக் கட்டுரைத் தொகுதிக்காக நடுவண் அரசின் பாண்டிச்சேரி  பல்கலைக்கழகம்  முதல் முதுமுனைவர் பட்டத்தை இவருக்கு வழங்கியது(2000). அதுவரை மதிப்புநிலை முதுமுனைவர் பட்டம்தான் வழங்கப்பெற்று வந்தது.

30.06.2001 இல் ஈராண்டு பணி நீட்டிப்பு கிடைத்தது. இருப்பினும் புதுவை மாநில முதல்வர் இரங்கசாமி அவர்களின் வேண்டுகோளால் புதுவை மொழியியல் பண்பாட்டுக் கழகத்தின் இயக்குநராகச் சேர்ந்தார். ஆய்வுரைகள், உரையரங்கங்கள், கருத்தரங்கங்கள், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், பயிற்சிப்பட்டறைகள் முதலியவற்றைத் திறம்பட நடத்தி இந்நிறுவனத்தை உயர்நிலைக்குக் கொணர்ந்தார்.

(தொடரும்)

– – இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, December 11, 2020

பாரதியிடம் கேட்டேன், இளசை சுந்தரம்

 அகரமுதல



பாரதியிடம் கேட்டேன்!

தேடிச் சோறு நிதம் தின்று – பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்

வாடித் துன்பம் மிக உழன்று – பிறர்

வாடப் பல செயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப் பருவம் எய்தி – பின்பு

கூற்றுக்கு இரையென மாயும் பல

வேடிக்கை மனிதரைப் போலே

வீழ்வேன் என்று நினைத்தாயோ!

ஆம்! பாரதியின் வாழ்க்கை வேடிக்கையானது அல்ல. வேகமானது விவேகமானது.

சொல் புதிது! பொருள் புதிது! சுவை புதிது! சோதிமிக்க நவகவிதை

என்று தன் கவிதைக்கு மகுடம் சூட்டிக் கொண்டவர்.

தாலாட்டுப் பாடல்

நேற்று இரவு பாரதி என் கனவில் வந்தார். பல நாட்களாக என் மனத்தில் தேங்கிக் கிடந்த ஒரு கேள்வியைக் கேட்டேன்.’பல்வகைப் பாடல்களைப் பாடிய நீங்கள் தாலாட்டுப் பாணியில் ஒரு பாடலும் பாடவில்லையே ஏன்?’ அதற்குப் பாரதி சொன்ன பதில் என்னைப் பிரமிக்க வைத்தது.

அடிமை இந்தியாவில் ஏற்கெனவே உறங்கிக் கிடக்கின்ற மக்களை உசுப்பி விடப் பிறந்தவன் இன்னும் உறங்க வைக்கின்ற தாலாட்டை நான் எப்படிப் பாடமுடியும்? அதனால்தான் திருப்பள்ளியெழுச்சி பாடினேன். ஆண்டவனையும் அரசனையும் துயில் எழுப்பப் பாடிய துறையை மாற்றி ஒரு நாடு துயில் எழவேண்டும் என்பதற்காகப் பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி பாடினேன். அதில் கூட ஒரு புதுமை செய்தேன். தாய்தான் குழந்தைகளை எழுப்புவாள். ஆனால் இங்கு, விடுதலை தவறிக் கெட்டு உறங்கிக் கொண்டிருந்த பாரதமாதா என்ற தாயை, விடுதலைக்குப் போராடும் தேசியத் தலைவர்கள் என்ற குழந்தைகள் எழுப்புவதாக அமைத்தேன்.

‘மதலைகள் எழுப்பவும்

தாய் துயில்வாயோ

மாநிலம் பெற்றவள்

இது உணராயோ’

– பாரதியின் விளக்கம் என்னைக் கவர்ந்தது.

முரண்பாடு

இன்னொரு கேள்வியும் கேட்டேன். பாரதி! நாய்பற்றிப் பாடியதில் குழப்பமும் முரண்பாடும் இருப்பது போல் தோன்றுகிறது. பாப்பா பாடலில் வாலைக் குழைத்து வரும் நாய்தான் மனிதருக்குக் தோழனடி என்று பாடிவிட்டு புதிய ஆத்திசூடியில் ஞமலி போல் வாழேல்; நாயைப்போல் வாழாதே என்று பாடியிருப்பது சரியா? எதை எடுத்துக் கொள்வது?

அதற்குப் பாரதி விடை சொன்னார். இதில் முரண்பாடு ஏதுமில்லை. நாயினுடைய இரு வேறு நிலைப்பாடுகளை எடுத்துக் கூறியிருக்கிறேன். நன்றி உணர்ச்சிக்கு நாய் சிறந்த எடுத்துக்காட்டு. அதற்காக அதைப் போற்றலாம்.ஆனால் நாயிடம் இன்னொரு மோசமான குணம் உண்டு. அதுதான் அடிமைப் புத்தி. தனக்குச் சோறு போடுகிறவன் கொள்ளைக்காரனாக இருந்தாலும், கொலைகாரனாக இருந்தாலும் அவனுக்காகவும் நன்றி காட்டி வாலாட்டும். இந்த அடிமைத்தனத்தை நான் வெறுக்கிறேன். எனவே எனது பாடல்களில் அடிமைத்தனம்பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் நாயைப் பற்றிச் சொல்லியிருப்பதைப் பார்க்கலாம்.நன்றி உணர்ச்சிக்கு நாயைப் பின்பற்றுங்கள். அடிமைப் புத்தியில் அதைப் பின்பற்றாதீர்கள்’ என்று இருவேறு நிலைகளில் பாடியிருக்கிறேன்.”

கம்பனுக்கு வந்த பெருமை

கனவு கலைந்துவிட்டது. எனக்கும் தெளிவு ஏற்பட்டது. இந்த அடிப்படையில் பாரதியின் பாடல்களை ஆராயலாமோ என்று தோன்றியது. முதன்மையான தமிழ்ப் புலவர்களை வரிசைப்படுத்த வந்த பாரதி,

யாமறிந்த புலவரிலே

கம்பனைப் போல், வள்ளுவன் போல் இளங்கோ போல்

பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை”

என்றார். வரிசை மாறிக் கிடக்கிறது. வரலாற்று வரிசையில் கடைசியில் வரவேண்டிய கம்பன் முதலில் வந்திருக்கிறான். இஃது ஏன்? இது தற்செயலாக அமைந்த வரிசையா? அல்லது பாரதி திட்டமிட்டு அமைத்த வரிசையா? இதுதான் ஆய்வுக்குரியது.

இது தற்செயலாக நேர்ந்த வரிசை இல்லை. ஏனென்றால் தமிழ்நாட்டின் பெருமை பற்றி பாடவந்த பாரதி,

“கல்வியிற் சிறந்த தமிழ்நாடு – புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு”

என்று கம்பனைத்தான் முதன்மைப்படுத்துகிறார். பிறகுதான்

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்று கூறுகிறான். அதன் பிறகுதான் இளங்கோ வருகிறார். ஆக, ஏதோ ஒரு வகையில் கம்பன் பாரதியைக் கவர்ந்திருக்கிறான்.

அஃது என்ன?

தமிழகத்தில் மன்னர்கள் ஆண்ட முடியாட்சிதான் நடந்து கொண்டிருந்தது. ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’. மன்னன்தான் உயிர். மக்கள் உடம்பு. அந்த உயிருக்காக உழைக்க வேண்டும். மற்ற புலவர்கள் அதை அடியொற்றித்தான் பாடினார்கள். ஆனால் கம்பன் ஒரு புரட்சி செய்தான். மக்களை உயிராக்கி மன்னனை உடம்பாக்கினான். தயரத மன்னனைப் பற்றிக் கூறும்போது ‘உயிர்கள் உறைவதோர் உடம்பு ஆயினான்’ என்று கூறுகிறான்.

மக்களாட்சி மலர்வதற்கான விதை போடப்படுகிறது. மக்களாட்சித் தத்துவத்தில் அஃதாவது சனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட பாரதிக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது.

விம்மிய பாரதி

பிசி என்ற வெளிநாட்டுத் தீவில் கரும்புத் தோட்டங்கள் அதிகம். அங்கு வேலை செய்ய தமிழகப் பெண்கள் அடிமைகளாக இறக்குமதி செய்யப்பட்டனர். அதிகமாக வேலை செய்ய அவர்களை வாட்டி வதைத்தனர். வேதனை தாங்காமல் பெண்கள் கண்ணீர் வடித்தனர். அதுகுறித்துப் பாரதி பாடல் எழுதினார்.

“அவர் விம்மி, விம்மி, விம்மி, விம்மி

அழும் குரல் கேட்டிருப்பாய் காற்றே”

இங்கே நாம் கவனிக்க வேண்டியது, ஒரு கருத்தை வலியுறுத்த மூன்று முறை சொன்னால் போதும் என்பது மரபு. ஆனால் பாரதியார் விம்மி என்ற சொல்லை நான்கு முறை பயன்படுத்துகிறார். ஏன்? அதற்குச் சொல்லப்படுகின்ற இலக்கிய நயம் என்ன தெரியுமா? பெண்கள் விம்மியது மூன்று முறை. அதை எழுதும்போது பாரதியும் விம்மியது நான்காவது விம்மல். இது வெறும் இலக்கிய நயம் மட்டுமல்ல, உண்மையும்கூட.பாரதியார் தன்னுடைய கவிதைகளில் புதையல்களைப் புதைத்து வைத்திருக்கிறார். நாம்தான் முயன்று அதைக் கண்டெடுக்க வேண்டும். மேலோட்டமாக கவிதைகளைப் படித்துவிட்டுப் போவதில் பயனில்லை.

முனைவர் இளசை சுந்தரம், வானொலி நிலைய முன்னாள் இயக்குநர், மதுரை. 98430 62817

தினமலரில் ‘புதிய நோக்கில் பாரதி’; ;இன்று (திச.11) பாரதி பிறந்த நாள்; என்னும் தலைப்பில் வந்த கட்டுரை. 11.12.2020

 

Monday, November 16, 2020

வரலாற்றில் இன்று - 17 NOV | History Today | Historical Events Happened |...

8.06 - 11.47 மணிக்கூறுகளில் தமிழ்ப்போராளி பேராசிரியர ்சி.இலக்குவனார் குறித்த தகவல் வந்துள்ளது. சத்தியம் தொலைக்காட்சிக்கு நன்றி.



Tamil Archives - ஐயா சி. இலக்குவனார் அவர்களின் தமிழ்ப் பணிகள் - பகுதி - III

பேராசிரியர் சி.இலக்குவனார் பற்றி முனைவர் ஔவை நடராசன் அவர்களும் சுப.வீரப...

நறுமுகை - இலக்குவனார்

#முன்னோர்கள் #இலக்குவனார்#தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

ஆளுமைகள் - 2 : பேராசிரியர் சி. இலக்குவனார் (அறிமுகம் : பி. பாலசுப்பிரமணி...

இந்தி எதிர்ப்பு போராளி செந்தமிழ் காவலர் இலக்குவனார்

செப்டம்பர் 3 : இலக்கணச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவு தினம் ...