Sunday, January 15, 2023

தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 2/3 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

 அகரமுதல




(தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 1/3  தொடர்ச்சி)

செஞ்சொல் நடைவேந்தர்

‘நடை’ என்பது எழுத்தாளரின் இயல்பையும், சித்தனைப் போக்கையும் வெளிப்படுத்த-வல்லது என்பர். எளிமை, அமைதி, அடக்கம் இவற்றின் வடிவானவர் திரு.வி.க. ஆனால், அவர்தம் நடை வீறுகொண்டதாய், சிந்தனையைக் கிளறுவதாய். மிடுக்கு நிறைந்ததாய் விளங்கும் தெளிந்த நடையாகும். வாழ்வையும் இலக்கியத்தையும் ஒன்றாகக் கண்டு வாழ்ந்த திரு வி. க. வுடன் நெருங்கிப் பழகிய முனைவர் மு.வ. அவர்கள், அவர்தம் நடையில் காணப்படும் வியத்தகு கூறுகளைத் தம் கட்டுரை யொன்றில், “எழுதும்போது இருந்த பண்பாடும் பேசும்போது வந்தது. பேசும்போது அமைந்த மிடுக்கு எழுதும்போதும் அமைந்திருந்தது” என்று குறிப்பிட்டுள்ளமை கருதத் தக்கதாகும். பேசுவதைப் போன்று எழுதியும், எழுதுவதைப் போன்று பேசியும் வந்தவர் திரு.வி.க. இரண்டிலும் வேறுபாடுகள் காண முடியாத அளவுக்குச் செஞ்சொற்கள் விரவி விழிப்பூட்டும் வியப்பு நடையைக் கையாண்டார்.


“அருமைத் தமிழ் மாணவர்களே! உங்கள் நாட்டை நோக்குங்கள். அஃது எப்படி இருக்கிறது? அருமைத் தமிழ்நாடு சின்னாபின்னமாகச் சிதறுண்டு கிடக்கிறது. காரணம் என்ன? தலையாய காரணம் என்ன? தாய் மொழியைப் பேணிக் காப்பாற்றாமையாகும். அதன் பால் பற்றுளங் கொள்ளாமை, ஒருபோது முடியணிந்து கோலேந்திக் கலையணிந்து அரியாசனம் வீற்றிருந்த நம் பேரன்னை-இப்போது எந்நிலையில் இருக்கிறாள்? அவள் முடியிழந்து கோலிழந்து கலையிழந்து நலமெல்லாம் இழந்து கிடக்கிறாள். அவள் உடற்கூறுகள் எல்லாம் ஊறுபட்டுக் கிடக்கின்றன. அவள் முகமெல்லாம் குறு மறுக்கள் எழுப்பட அவள் எழிலைக் கெடுத்துவருகின்றன. அவளிருக்கத் துச்சிலும் இல்லை. அவளைத் தூறும் புற்றும்மூடிக் கொள்ளுமோ என அஞ்சுகிறேன்.” (இளமை விருந்து)

எளிய சொல்லாட்சிகளில் தெளிவும், தெளிவில் ஓர் அளவையியல் அணுகுமுறையும் அணுகுமுறையில் ஓர் உறுதியும் கொண்ட தன்மை மேற்காணும் நடையிலே காண முடிகிறது. எனவேதான் “இருபதாம் நூற்றாண்டு முற்பகுதி உரை நடையின் தந்தை”யென இவர் தனிச் சிறப்புடன் கருதப்படுகின்றார்.

 –
கவிதைப் பணி


தொடக்கக் காலத்திலேயே உரைநடை எழுதியது போன்று செய்யுள் எழுதும் திறமும் அவர்க்கு வாய்த்திருந்தது. ஆனால் ஒய்வு ஒழிவற்ற அவர்தம் சொற்பொழிவுகளும், நாள்தோறும் வாரந்தோறும் தம் ‘தேச பக்தன்’, ‘நவசக்தி’ இதழ்களுக்கு எழுதவேண்டும் என்ற கட்டாயமும், இவர்தம் செய்யுள் தொண்டிற்குத் தடை விதித்து வந்தன.

உரைநடை போலவே அவருடைய கவிதைகளும் மிகத் தெளிவாக இருக்கும். அவருடைய கவிதைகள் உள்ளத்து உணர்ச்சியை எழுப்புவன. ஆராய்ந்து எடுத்த எளிய சொற்களாலே ஆக்கப்பட்டன. கருத்தை வழுவாமலே கூறுவன.

தாம் எடுத்துக்கொண்ட கருத்துக்களைத் தெளிவுபடுத்தி உரைப்பது அவருடைய நடையின் சிறப்பு. அவருடைய கருத்துகள் இயற்கைக்கு மாறாகவோ, பகுத்தறிவுக்குப் பகையாகவோ இருக்கமாட்டா.


1931ஆம் ஆண்டில் ‘உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல் என்றொரு சிறு செய்யுள் நூலினை இயற்றினார்.

தமிழினைப்போல் உயர்ந்தமொழி
தரணியில்வே றெங்குமிலை
தமிழனைப்போல் மொழிக்கொலையில்
தலைசிறந்தோர் எவருளரோ.”
– உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல்.

என்ற பாடலில் அவர்தம் மொழியார்வம் விளங்கக் காண லாம். அடுத்த ஆண்டில் அவர் இயற்றிய செய்யுள் நூல் முருகன் அருள் வேட்டல் எனும் நூலாகும். முருகன் அல்லது அழகு’ எனும் உரைநடை நூலினை 1925ஆம் ஆண்டில் எழுதினார் அவர். தம் மனத்திற்குப் பிடித்த இயற்கையில் இறைவனைக் கண்ட பாங்கில் எழுந்த நூலாகும் அது. 1938ஆம் ஆண்டில் ‘திருமால் அருள் வேட்டல்’ வெளியாயிற்று. தென்திருப்பேரை முதலாகத் திருமலை ஈறாகப் பல வைணவத் திருப்பதிகளில் கோயில் கொண்டுறையும் கோல நெடுமாலை வந்தித்து வழிபடும் நிலையில் இந்நூல் இயன் றிருக்கக் காணலாம். இப்பாடல்களில் ஒரு பொதுமை நோக்கு இலங்குவதைக் காணலாம்.

பலப்பல மொழியில் பலப்பல பெயர்கள்
பகர்ந்த சான்றோர் நுகர்ந்த இன்பம்
ஒன்றே அன்றோ நன்றே தெளியின்
ஒருவ நிற்கே மருவிய பெயர்கள்
பலவெனும் உண்மை நிலவுதல் உறுதி
எப்பெயர் நின் பெயர் எப்பதி நின்பதி
எவ்வுரு நின்னுரு எம்மொழி நின்மொழி
பேரெலாம் நீயே பேரிலான் நீயே
பதியெலாம் நீயே பதியிலான் நீயே
உருவெலாம் நீயே உருவிலான் நீயே
மொழியெலாம் நீயே மொழியிலான் நீயே
எல்லாம் நீயே
– 
திருமால் அருள்வேட்டல்.

என்று அவர் தென்திருப்பேரை யுறையும் திருமாலைப் பரவி நிற்கும் பகுதியில் பொதுமையும் இலக்கிய நுட்பமும் செறிந் திலங்கக் காணலாம்.

திருவரங்கத்தம்மானைத் துதிக்குமுகமாகத் திரு.வி.க. அவர்கள் பாடியுள்ள பின்வரும் பாடலில் செஞ்சொலின்பமும் நெஞ்சினிக்கும் நேயமும நிறைந்திருக்கக் காணலாம்.

மணிகொழிக்குங் காவிரியாய் மலர்நிறைந்த பொழிலாய்
மணங்கமழும் மதியுடையார் வாயொழுகும் யாழாய்
அணிகொழிக்கும் வேனிலிடை ஆடிவருங் காற்றாய்
அமைதியளி திங்கள் பொழி ஆனந்த நிலவாய்
பணி கொழிக்கும் அடியவர்கள் பத்திவிளை பாட்டாய்
பரந்துநிற்குங் காட்சியெலாம் பார்க்கின்ற வேளை
பிணிகொழிக்கும் ஏழையுய்யப் பேசரிய துயிலின்
பெற்றியருள் செய்பாயோ பேரரங்க வேந்தே
– 
திருமால் அருள் வேட்டல்

1942ஆம் ஆண்டில் ‘பொதுமை வேட்டல்’ எனும் பெயரிய செய்யுள் நூலொன்றினை இயற்றித் தமிழுலகிற்கு அளித்துள்ளார். இந்நூலில் இயற்கை வாழ்வு, அருளின் பெருமை, நெஞ்சின் இயல்பு, சன்மார்க்க வாழ்வு முதலிய பொருள் குறித்து இவர் பாடியுள்ள பாடல்களைக் காணலாம். “திரு.வி.க. அவர்களின் உள்ளம் எத்தகையது என்று ஒரு நூலால் அறிய வேண்டின், அது “பொதுமை வேட்டல்” என்னும் இந்த நூல் எனலாம்” என்பர் பெருந்தகை மு.வ. அவர்கள்.

காலையிலே எழுந்துலவிக் கடன்க ளாற்றிக்
கதைபேசித் தொழில்புரிந்து காசு தேடி
மாலையிலே களித்துறங்கல் வாழ்க்கை யாமோ
மக்கள் நிலை அவ்வளவில் மாய்ந்தோ போகும்
மேலையுமே தொடர்ந்துசெலும் மேன்மைத் தன்றோ
விரியுலகில் விளம்பரமே விரும்பா தென்றுங்
காலடியில் தலைசாய்த்துக் கருத்தை வைத்துக்
கடன்கள்செய அருள்புரிவாய் கருணைத்தேவே!”
– பொதுமை வேட்டல்

என்று விண்ணப்பம் என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ள பாடல் வாழும் நெறியை வகையுறப் புலப்படுத்தி நிற்பதாகும்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Tuesday, January 10, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 23

 அகரமுதல




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 22 தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 14
சடகோபையங்காரிடம் கற்றது

சடகோபையங்கார் மாநிறமுடையவர். குட்டையாகவும் பருமனாகவும் இருப்பார் பலசாலி. அவர் பேசும்போது அவரது குரல் சிறிது கம்மலாக இருக்கும்; ஆனால் பாடும்போது அது மறைந்து விடும். தமிழில் சுவை தெரிந்து படித்தவர் அவர். அவரை ஆவண்ணாவென்று யாவரும் அழைப்பர்.

அவருக்குச் சங்கீதமும் தமிழும் ஒரு தரத்திலே இருந்தன. சங்கீதப் பயிற்சி யுடையவர் தாமும் இன்புற்று மற்றவர்களையும் இன்புறுத்துவ ரென்பார்கள். சடகோபையங்காரிடமிருந்த தமிழானது சங்கீதம் போலவே அவரை முதலில் இன்புறச் செய்து பின்பு மற்றவர்களையும் இன்புறுத்தும்; சில சமயங்களில் கேட்பவர்களுக்கு இன்புறும் தகுதியில்லாமற் போனாலும் அவர் அடையும் இன்பத்திலே சிறிதும் குறைவு வராது.

பாடம் சொல்லுதல்

பாடம் சொல்வதில் அவருக்கு விருப்பம் அதிகம். காலையில் ஐந்து மணிக்கே எழுந்துவிடுவார். நித்திய கர்மானுட்டானங்களை ஒழுங்காகச் செய்வார். பின்பு புத்தகங்களை எடுத்துக்கொண்டு தம் வீட்டு வெளித்திண்ணையின் மேலைக்கோடியில் உட்கார்ந்து கொள்வார். எந்த நூலையாவது படித்து இன்புற்றுக்கொண்டே இருப்பார். அந்த வழியே போவோர் அவரைக் கண்டு வணங்குவார்கள். சிலர் திண்ணையில் வந்து மரியாதையோடு அமர்வார்கள். உடனே சடகோபையங்கார் ஏதாவது தமிழ்ப் பாடல் சொல்ல ஆரம்பித்து விடுவார்; நயமாகப் பொருள் சொல்வார். வந்தவர்கள் கேட்டு மகிழ்வார்கள். அவர் இருக்குமிடம் தேடி வந்து அவருடைய இனிய தமிழ்ப் பிரசங்கத்தைக் கேட்டுப் போவார் பலர். செவ்வைச் சூடுவார் பாகவதத்திலும் அத்வைத சாத்திரத்திலும் அவருக்கு ஆராய்ச்சி அதிகம். கம்பராமாயணத்திலும் நல்ல பழக்கம் இருந்தது. அந்த நூற் செய்யுட்களைச் சொல்லி மணிக்கணக்காகப் பொருள் கூறிக் கொண்டிருப்பார் கேட்பவர்களுக்கு நேரம் போவதே தெரியாது. ஏதோ இனிய சங்கீதக் கச்சேரியைக் கேட்பது போலவே இருக்கும்.

அவரிடம் சிலர் முறையாகப் பாடங் கேட்டு வந்தார்கள். நாள் தவறாமல் திண்ணையில் உட்கார்ந்து வந்தவர்களுக்குப் பாடஞ் சொல்வதில் அவருக்குச் சலிப்பே உண்டாவதில்லை. “கம்பத்தை வைத்துக் கொண்டாவது பாடஞ் சொல்ல வேண்டும். கேட்பவனை மாத்திரம் உத்தேசித்துச் சொல்லக்கூடாது. பாடஞ் சொல்வதனால் உண்டாகும் முதல் இலாபம் நம்முடையது. பாடம் சொல்லச் சொல்ல நம் அறிவு உரம்பெறும்” என்பார். “என் தமையனராகிய நரசிம்மையங்கார் தஞ்சாவூர் சமத்தான வித்துவான்களிடம் கற்றுக் கொண்டார். அவர் தமிழிலும் சங்கீதத்திலும் சிறந்த அறிவு வாய்ந்தவர். கல்வியில் அவர் என்னை மிஞ்சிவிட்டார். இதற்கு என் காரணமென்று கவனித்தேன். அவர் பல சிசுயர்களுக்குப் பாடஞ் சொன்னார். அவர்களைக் கேள்வி கேட்டுக் கேட்டு அவர்களுடைய அறிவை விருத்தி பண்ணியதோடு தம்முடைய கல்வியையும் பலப்படுத்திக் கொண்டார். இந்த நுட்பத்தை நானும் தெரிந்து கொண்டேன். மாணாக்கர்களைக் கசக்கத் தொடங்கினேன். இதனால் என் தமையனாரைவிட நான் சிறிதளவு உயர்ந்துவிட்டேனென்று கூடத்தோற்றியது” என்று ஒருமுறை அவர் சொன்னதுண்டு.

ஒரு நாள் அவர் தம் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து யாருக்கோ நெடுநேரம் பாடஞ் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது நாங்கள் குடியிருந்தது எதிர் வீடு. வழக்கமான குரலில் அவர் பாடஞ் சொல்லாமல் சற்று இரைந்து சொல்லிக்கொண்டிருந்தார். இடையே சிறிதும் தடையில்லாமல் அவர் சொல்லி வந்தபோது எங்கள் வீட்டுக்குள் இருந்த எனக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று; “இவர் யாருக்குப் பாடஞ் சொல்லுகிறார்? கேட்பவர் நடுவில் சந்தேகம் ஒன்றும் கேட்க மாட்டாரா?” என்று எண்ணி எட்டிப் பார்த்தேன். எனக்குப் பெரிய ஆச்சரியம் உண்டாயிற்று. கோபாலசாமி ஐயங்காரென்ற ஒருவர் சடகோபையங்காருக்கு முன் உட்கார்ந்திருந்தார். உட்கார்ந்திருந்தாரென்று மட்டும் சொல்லலாமேயன்றிப் பாடங் கேட்டாரென்று சொல்ல இயலாது அவர் முழுச் செவிடர். சடகோபையங்காருக்கும் அந்த விசயம் தெரியும். அப்போது, ‘கம்பத்தை வைத்துக்கொண்டாவது பாடஞ் சொல்ல வேண்டும்’ என்று அவர் சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது. கம்பமாயிருந்தாலென்ன? செவிடராயிருந்தாலென்ன?

செய்யுட்களும் கீர்த்தனங்களும்

ஐயங்கார் பல செய்யுள் நூல்களையும் தனிப்பாடல்களையும் கீர்த்தனங்களையும் இயற்றியிருக்கின்றார். சிரீவைணவராயினும் அவருக்கு அத்வைதக் கொள்கையிற் பற்று அதிகம். தெய்வ வழிபாட்டில் அவர் சமரசமான நோக்கமுடையவர். விநாயகர், சிவபெருமான், அம்பிகை முதலிய தெய்வங்களின் விசயமாக அவர் பல செய்யுட்களையும் கீர்த்தனங்களையும் இயற்றியிருக்கிறார். இராமாயண வண்ணம், இராமாயணச் சிந்து, சீவப்பிரம்ம ஐக்கிய சரித்திரம் முதலிய நூல்களை அவர் பாடினர். ஐந்து கன ராகங்களில் பஞ்சரத்தினக் கீர்த்தனங்களை அவர் இயற்றியிருக்கின்றார். 

அக்காலத்தே கோயில்களை நிருவாகம் செய்வதற்கு நூதனமாகத் தருமகருத்தர் நியமிக்கப்பட்டனர். ஒரு கோயிலை நிருவாகம் செய்துவந்த தருமகருத்தர் ஒழுங்காக அதனைக் கவனிக்கவில்லை. அதை உணர்ந்த சடகோபையங்கார் அத்தகையவர்களைப் பரிகசித்து ‘பஞ்சாயத்து மாலை’ என்ற ஒரு செய்யுள் நூல் இயற்றினார். அதில் தருமகருத்தர்களுடைய ஒழுங்கீனமான செயல்களைப் புலப்படுத்தினார். தருமகருத்தர்களைப் பஞ்சாயத்தா ரென்றும் சொல்வ துண்டு.

கல்வி இன்பமும் வறுமை நிலையும்

கல்வியின்ப மொன்றையே பெரிதாகக் கருதி வாழ்ந்த அவர் வறுமைநிலையில்தான் இருந்தார். அதனால் அவர் மனம் சலிக்கவில்லை. அரியிலூர் சமத்தானத்தில் நிலை வர வர சீணமடைந்தமையால் அவருக்கு அதன் ஆதரவு குறைந்து போயிற்று தம் சிசுயர்களது உதவியைக்கொண்டே அவர் சீவனம் செய்து வந்தார்.

குளிருக்குப் போர்த்திக்கொள்ளத் துப்பட்டி இல்லை. அதற்காக மல்லூர்ச் சொக்கலிங்கம் பிள்ளை என்பவருக்கு ஒரு பாட்டு எழுதி அனுப்பினார்.

“துப்பட்டி வாங்கித் தரவேண்டும் இலிங்க துரைசிங்கமே”

என்பது அதன் இறுதி அடி. அந்தக் கனவான் ஒன்றுக்கு இரண்டு துப்பட்டிகளை வாங்கி அனுப்பினார்.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.


Sunday, January 08, 2023

தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 1/3 முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

 அகரமுதல




(இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 6/6 தொடர்ச்சி)

7தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல்

வாழ்வும் பயனும்

இன்றைய சமுதாயம் எண்ணற்ற தலைமுறையினரின் உழைப்பில் மலர்ந்ததாகும். காலந்தோறும் வளர்ச்சியை உருவாக்க முன்னோடிகளாகச் சிலர் தோன்றுகின்றனர். வருங்காலச் சமுதாயத்தினர் தம் வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்கும், எளிமைப்படுத்திக் கொள்வதற்கும், கருத்து வடிவத்திலும், செயல் வடிவத்திலும் அத்தகையோர் தொண்டாற்றி வருகின்றனர். தன்னலம் கருதாத தொண்டையே தங்கள் வாழ்க்கையின் பயன் என்று கருதுகின்றனர். ‘சமுதாயப் பணியே வாழ்வின் குறிக்கோள்’ எனக் கருதிப் பணியாற்றுவோர் மிகச் சிலர். இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் இலக்கியத்தையும், அரசியலையும், சமயத்தையும், பொருளாதாரத்தையும் நாட்டுணர்வுடன் இணைத்து இழைத்துப் பார்த்த வித்தகர் திரு. வி. க மொழிக் கண்ணோட்டத்திலிருந்து உரைக்கும் போது ஒரு திருப்பு மையத்தையும், அரசியல் பார்வையிலிருந்து அணுகும்போது சமய உணர்வுடன் கலந்த விடுதலை எழுச்சியையும், பொருளாதாரக் கோணத்திலிருந்து குறிப்பிடும்போது முதலாளித்துவ எதிர்ப்புப் போக்கையும் கொண்ட எளிமை, மறுமலர்ச்சி, காந்திய தெறி ஆகியவற்றின் வடிவமாகத் திகழ்ந்தவர் எனலாம்.

பிறப்பும் கல்வியும்

திருவாரூரில் விருத்தாசல முதலியாருக்கும், சின்னம்மாளுக்கும் செங்கற்பட்டு துள்ளல் எனும் கிராமத்தில் 26.8-1883 இல் பிறந்த கலியாணசுந்தரனார் சென்னை, இராயப்பேட்டை ‘ஆரியன் பிரைமரி பாடசாலை’யிலும், வெசுலி கலாசாலை உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். யாழ்ப்பாணம் நா. கதிரைவேல் பிள்ளையிடம் தமிழ்ச் சுவையறிந்த இவர், மயிலை தணிகாசல முதலியாரிடம் சித்தாந்தம் பயின்றார். பின் மறை மலையடிகளிடம் இலக்கியத் தேர்ச்சி பெற்றார்.


சமயப் பணியும் ஆசிரியப் பண்பும்

சைவ நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த திரு.வி.க. இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த சனசபையிலும். திருவல்லிக்கேணிச் சிவனடியார் திருக்கூட்டத்திலும் சொல்லாலே உழவாரப் பணிபுரிந்த நாவுக்கரசராய்த் திகழ்ந்தார். பென்சர் கம்பெனியில் பணியாற்றியிருந்த காலத்தில், சுதந்திரப்போராட்டத்தில் தீவிரமாகச் செயலாற்றியிருந்த இவர் ‘திலகர்’ சிறைப்பட்ட செய்தியறிந்து பணியை விடுத்தார். நாட்டுணர்வில் நாட்டம் கொண்டு விடுதலை இயக்கத்தில் ஈடுபட விழைந்தார். சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் ஆதிதிராவிடர் பள்ளியில் ஆசிரியராகப் பணி ஏற்றார். தொடர்ந்து வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியர் பொறுப்பினைச் சிறப்பித்தார். இக்காலக் கட்டத்தில் சைவ சித்தாந்த மகா சமாசத்திலே இலக்கியவாணர்களும் பாமர மக்களும் போற்றும் வண்ணம் செஞ்சொல் நடையில் சொற் பொழிவுகள் நிகழ்த்தி மக்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றார்.


இல்லறமும் எழுத்துலகமும்


1912ஆம் ஆண்டு ‘கமலாம்பிகை’ என்ற அம்மையாரை மணந்து, ஆறாண்டு கால இல்லறவாழ்வை மட்டும் பெற்று. மனைவியையும், ஈன்ற ஆண்மகவு ஒன்றையும் பெண்மகவு ஒன்றையும் இழந்தார். பின் திரு.வி.க. துறவி நிலை அடைந்தார். ஆனால் சமுதாயத் தொண்டினை உயிர் மூச்சாகக் கொண்டார். 1917ஆம் ஆண்டு ‘தேசபக்தன்’ என்ற நாளிதழினைத் தொடங்கி, நாட்டுப் பற்றினைத் தமிழ் மக்கள் நெஞ்சிலே கொழுந்திடச் செய்தார், தொழிற் சங்கம் முதலாளித்துவச் சுரண்டலிலிருந்து தொழிலாளர் தம் வாழ்வில் விடிவை உருவாக்க, ‘வாடியா’ என்பவரின் துணையுடன் 27-4-1918 அன்று ஆசியாவிலே முதன் முதலாகத் தொழிற்சங்கத்தை ஏற்படுத்தினார். பின், நாளிதழ் ஆசிரியராகவும், தொழிலாளரின் ஆதரவு பெற்ற தலைவராகவும், சிந்தனையைக் கிளறும் எழுச்சியுரைப் பேச்சாளராகவும் திகழ்ந்து இவருடைய பணி காங்கிரசு இயக்கத்தில் பொலிவுற்றது. பேச்சிலும், எழுத்திலும் பெருமிதம் காட்டி. எண்ணற்றோரைத் தேசீய நீரோட்டத்தில் கலக்கச் செய்தார். மொழி வேறு, இலக்கியம் வேறு. சமயம் வேறு, அரசியல் வேறு என்ற நிலையை மாற்றி, அனைத்தையும் ஒரே பார்வையில் கொண்டுவந்து ஆற்றிய பணி அவர்தம் தனித்தன்மையைக் காட்டி நிற்பதாகும். பக்கிங்காமில் தொழிலாளர் போராட்டத்தில் பங்கேற்று, தொழிலாளர்களின் வேதனைக்கு விடிவு கண்டார். தொழிலாளர் தலைவரானார்.


வாழ்வும் தொண்டும்


அவருடைய வாழ்வும் தொண்டும் ஒரு துறையினைச் சார்ந்ததாக இல்லை. பல்வேறு துறைகளில் தனிப்புகழ் பெற்று விளங்கிய தமிழ் முனிவர் அவர். ஆம். “அவர் தொடாத துறை ஒன்றுமில்லை: தொட்ட துறைகளை அழகு படுத்தாமல் விட்டதில்லை” எனப் பாராட்டப் பெறும் அளவிற்கு அவர் அரசியல், சமயம், இலக்கியம், பொருளாதாரம், மகளிர் முன்னேற்றம், தொழிலாளர் நலம், இளைஞர் திறம், சீர்திருத்தம், நாட்டுயர்வு முதலான கோணங்களில் ஆரவாரமின்றி அமைதியாகத் தொண்டாற்றினார். மொழிப் பற்றும், சமயப் பற்றும், நாட்டுப் பற்றும் நிறைந்த அவர் நாடு விடுதலை பெற, மொழி நலம் சிறக்க, சமயப்பற்று மிளிரத் தகைசால் தொண்டாற்றினார். அவர்தம் தனித் தொண்டால் மகளிர் முன்னேற்றமடைந்தனர். இளைஞர் ஏற்றம் பெற்றனர்.


பேச்சும் எழுத்தும்


சிலருக்குப் பேச்சு கடல் மடைதிறந்தாற்போல் வரும். எழுத்து என்றால் ஒரு வரியும் ஓடாது. சிலர் எழுதி எழுதி நூல்களைக் குவிப்பார்கள். ஆனால் மேடையேறிச் சில மணித் துளிகளேனும் பேசுவதென்றால் மெய்ந்நடுக்கம் ஏற்பட்டு நாத்தழுதழுத்துச் சொற்களே வாயினின்றும் வெளிவராமல் நின்று விடுவார்கள். சிலருக்குப் பேச்சு வரும்; எழுத்து வரும்; ஆனால் பேசிய வண்ணம் எழுதியவாறு சொல்லும் எழுத்தும் செயலும் ஒத்த வாழ்க்கை-உள்ளும் புறமும் ஒன்றான வாழ்க்கையைக் காணல் அரிது. நாவும் நடப்பும் ஒன்றாக்கிச் செயல்வழிச் சான்றோராய்த் திகழ்ந்தவர் திரு.வி.ஆவார்.

திரு.வி.க, அவர்கள் நெஞ்சம் தேசியத்தில் ஊறித் திளைத்தது. அவர் காந்தியடிசுளின் கோட்பாட்டிலே கொண்டிருந்த ஆழமனஈடுபாடே. ‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’ எனும் நூலாக விரிந்தது. பெண்களின் வாழ்வு துலக்கம் பெற்றுத் துரண்டா விளக்காய்ச் சுடர்விட வேண்டுமென்ற எழுச்சியே பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை எனும் நூலாக மலர்ந்தது. இன்றைய இளைஞர்கள் வீறு கொண்டோராய் மட்டுமின்றி, விடுதலைப் பணிபுரியும் வித்ததராய் விளங்க வேண்டும் என்ற கருத்தே ‘சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எனும் நூலாகக் கனிந்தது. இலக்கியத்தை ஆய்ந்து காணும் நோக்கிற்கும், இசைவான எழில் நடைக்கும் காட்டாக நிற்பது அவர்தம் ‘நாயன்மார் வரலாறு ஆகும். பெரிய புராணத்துக்கும். காரைக்கால் அம்மையார் திருமுறைக்கும் எழுதிய குறிப்புரைகள் அவர்தம் சமய அணுகு முறையைப் புலப்படுத்த வல்லனவாகும், தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு என்னும் நூல் மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்றில் மிதந்த காலத்தின் எதிரொலி யாகும். திரு.வி.க.வின் எழுத்துப் படைப்புகளிலும். சொற் படைப்புகளிலும் முருகன் அல்லது அழகு’. ‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’, ‘பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை’, ‘பரம்பொருள் அல்லது வாழ்க்கைவழி’, ‘உள்ளொளி’ என்பவை இந்த நூற்றாண்டின் நூல்களில் சிறப்பிடம் பெற்றவை என்கிறார் முனைவர் மு.வ.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Tuesday, January 03, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 22

 அகரமுதல




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 21 தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 13
தமிழும் சங்கீதமும்

என் தகப்பனார் சொற்படி பள்ளிக்கூடத்திற் படிப்பதைவிட்டு வீட்டிலேயே படித்து வந்தேன். தெலுங்கு சமசுகிருதம் இரண்டும் என்னைவிட்டுப் பிரிந்து நெடுந்தூரம் சென்றுவிட்டன.

ஒன்றுக்கும் உதவாதவனாக நான் போகக் கூடாதென்ற கவலையினால் நான் ஏதேனும் சீவனத்துக் கேற்ற வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்று என் தந்தையார் விரும்பினார். அரியிலூரில் இருந்த தில்லைக் கோவிந்தபிள்ளை என்பவரிடம் என்னை ஒப்பித்துக் கிராமக் கணக்கு வேலையைப் பயிலுவிக்கும்படி வேண்டிக்கொண்டார். நான் அவரிடமிருந்து அவர் சொன்னபடியே நடந்து கணக்கையும் கற்றுவந்தேன்; அட்டையில் கொறுக் காந்தட்டைப் பேனாவால் எழுதும் பழக்கத்தையும் செய்து வந்தேன். இவ்வாறு எழுதிப் பழகுவது அக்காலத்து வழக்கம்.


“தீயினில் மூழ்கினார்”

இங்ஙனம் இருந்து வருகையில் ஒரு சமயம் பெரிய திருக்குன்றத்தில் என் அத்தை குமாரருக்கு உபநயனம் நடைபெற்றது. அதற்கு என் தாய், தந்தையரும் நானும் போயிருந்தோம். பந்துக்களில் பலர் வந்திருந்தனர்.

அந்த விசேடத்தில் ஒரு சங்கீத வித்துவான் வினிகை நத்தினார். அவர் கோபாலகிருட்டிண பாரதியார் யற்றிய கீர்த்தனங்களையும் பாடினார். தமிழ்நாடு முழுவதும் பரவி வந்த நந்தனார் சரித்திரத்திலிருந்தும் சில உருப்படிகளைப் பாடினார். கானடா இராகத்தில் உள்ள

“தீயினில் முழுகினார். திருநாளைப் போவார்
தீயினில் முழுகினார்”

என்ற கீர்த்தனத்தை மிக அழகாகப் பாடினார். அவர் பாடும் முறை என் மனத்தில் நன்றாகப் பதிந்தது. அக்கீர்த்தனமும் எனக்குப் பாடமாகிவிட்டது. என் தகப்பனார் கற்றுத் தராமல் சில உருப்படிகளை இவ்வாறு கேள்வியினாலேயே நான் அறிந்துகொண்ட துண்டு. அவற்றை நானே பாடிவருவேன்; வேறு யாரிடமேனும் பாடிக் காட்டுவேன். என் தகப்பனார் முன்னிலையில் மட்டும் பாடுவதற்கு அஞ்சுவேன். ‘சிறு பையன் பாடுகிறான்’ என்று சொல்லி மற்றவர்கள் என்னைப் பாராட்டி ஊக்கம் அளிப்பார்கள்.

ஒரு நாள் அந்த உபநயனத்திற்கு வந்திருந்த சிலரிடம் என்னுடைய ‘சங்கீதத் திறமை’யைக் காட்டிக் கொண்டிருந்தேன். “எங்கே, தீயினில் முழுகினார் என்பதைப் பாடு” என்றார் ஒருவர். எனக்கு அந்தக் கீர்த்தனத்தைப் பாடுவதென்றால் அதிகம் உற்சாகம் உண்டு. ஆதலின் அதைக் கூடியவரையில் நன்றாகப் பாடினேன். அதை மறைவிலிருந்தபடியே என் தந்தையார் கேட்டுக்கொண்டிருந்தார். எனது சங்கீத விருப்பமும், அதில் தனியே எனக்கு இருந்த பழக்கமும் அவருக்கு அப்போதுதான் புலப்பட்டன. தெலுங்கோடு சங்கீதத்தையும் மறந்து விடுவேனென்று அவர் நினைத்திருந்தாரோ என்னவோ அறியேன்; அன்று அவர் ஒரு புதிய திருப்தியை அடைந்தார்.

பின்பு அவர் நேரே வந்தார். நான் அச்சத்தால் பாட்டை நிறுத்தினேன். “பயப்படாதே; பாடு. உனக்கும் சங்கீதம் நன்றாக வரும்போல் இருக்கிறதே!” என்று அவர் கூறினார். அவருடைய திருப்தி அந்த வார்த்தைகளிலும் முகமலர்ச்சியிலும் வெளிப்பட்டது. அன்றே என் தந்தையாருக்கு வேறு யார் மூலமாகவேனும் எனக்குச் சங்கீதமும் தமிழும் கற்பிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று.

தமிழ் விதை விதைத்தவர்

என் பிதாவுடைய நண்பராகிய அரியிலூர்ச் சடகோபையங்கார் சங்கீதத்திலும் தமிழிலும் வல்லவர். அவர் வீணையும் வாசிப்பார். சில சமயங்களில் என் தந்தையார் பாட அவர் வீணை வாசிப்பதுண்டு. இருவரும் சங்கீத சம்பந்தமாக அடிக்கடி மனங்கலந்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அவர் வீடு பெருமாள் கோயில் சந்நிதியில் வட சிறகில் உள்ளது.

சடகோபையங்காரே எனக்கு ஏற்ற குருவென்று எந்தையார் நிச்சயித்தார். அரியிலூருக்கு வந்தவுடன் ஒரு நாள் என்னை அவரிடம் அழைத்துச் சென்று, “இவனுக்குச் சங்கீதத்திலும் தமிழிலும் பிரியம் இருக்கிறது. மற்ற விசயங்களில் இவன் புத்தி செல்லவில்லை. நான் இவ்வளவு நாள் சொல்லிக் கொடுத்தேன். மேலே கற்பிக்க என்னால் இயலவில்லை, நீங்கள் இவனை உங்கள் மாணாக்கனாகக் கொண்டு இரண்டு வகையிலும் பயிற்சி செய்விக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். உடனே அவர் மிக்க அன்போடு என்னை ஏற்றார்.

என் பிதா சடகோபையங்காரிடம் என்னை ஒப்பித்ததற்கு முக்கியமான காரணம் சங்கீதத்தில் எனக்கு நல்ல பழக்கம் உண்டாக வேண்டுமென்றும், அதற்கு உதவியாகத் தமிழறிவு பயன்படுமென்றும் எண்ணியதே. ஆனால் என் விசயத்தில் அந்த முறை மாறி நின்றது. தமிழில் அதிகப் பழக்கமும் அதற்கு உபகாரப்படும் வகையில் சங்கீதமும் இருப்பதையே நான் விரும்பினேன். சடகோபையங்காரிடம் என்று நான் மாணாக்கனாகப் புகுந்தேனோ அன்றே தமிழ்த் தாயின் அருட்பரப்பிற் புகுந்தவனானேன். எனக்குத் தமிழில் சுவை உண்டாகும் வண்ணம் கற்பித்த முதற் குரு சடகோபையங்காரே. பொம்மை (பாவை)களைக் காட்டி குழந்தைகளைக் கவர்வது போலத் தமிழ்ச் செய்யுட்களின் நயத்தை எடுத்துக்காட்டி என் உள்ளத்துக்குள் அந்த இளம்பருவத்தில் தமிழ் விதையை விதைத்தவர் அவரே.

சடகோபையங்கார் பரம்பரை

சடகோபையங்கார் பரம்பரையாக வித்துவான்களாக இருந்தோர் மரபிற் பிறந்தவர். அவர் பரம்பரையினர் யாவருக்கும் சண்பக மன்னார் என்ற குடிப்பெயர் உண்டு. அவர்கள் தென்கலை சிரீவைசுணவர்கள். அவர்களிற் பலர் சிறந்த கவிஞர்களாக விளங்கினர். அவர்களுக்குப் பாலசரசுவதி, பாலகவி என்னும் பட்டங்கள் உண்டு. அவர்களில் ஒருவர் ‘திருக்கல்யாண நாடகம்’ என்பதையும் மற்றொருவர் ‘சிவராத்திரி நாடகம்’ என்பதையும் இயற்றியிருக்கின்றனர். சடகோபையங்காருடைய பாட்டனாராகிய சிரீநிவாசையங்கார் என்பவர் சிறந்த ஞானி. அத்துவைத சாத்திரங்களில் தேர்ச்சி பெற்றவர். தமிழ்ப் புலமையும் மிக்கவர். அவர் நவராத்திரி நாடகம், சாரங்கபாணி நொண்டி நாடகம் முதலியவற்றை இயற்றியிருக்கிறார். அவருக்கு அவர் குடிப்பெயராகிய சண்பக மன்னாரென்பதே இயற்பெயரைப் போல வழங்கி வந்தது. அவரிடம் வேதாந்த சாத்திரங்களைப் பாடங்கேட்குத் திருச்சிராப்பள்ளி சில்லாவில் அங்கங்கே உள்ள ஊர்களில் மடங்களை அமைத்துக்கொண்டு அடக்கமாகக் காலங் கழித்து வந்த பரதேசிகள் பலர். அவரும் அரியிலூரில் தமக்கென ஒரு மடம் கட்டி அங்கேயே இருந்து பாடஞ் சொல்லி வந்தார். பிற்காலத்தில் அவருடைய குரு பூசை அரியிலூரிலும் அவர் மாணாக்கர்கள் இருந்த இடங்களிலும் வருடந்தோறும் நடந்து வந்தது. அவர் பேரராகிய சடகோபையங்காரை உட்கார வைத்து அந்தக் குரு பூசையில் சண்பக மன்னாராகப் பாவித்து வழிபடுவார்கள்.

ஐயாவையங்கார்

சண்பக மன்னாருடைய மூத்த குமாரராகிய ஐயாவையங்கா ரென்பவரே சடகோபையங்காருடைய தந்தையார். அவரிடம் பரம்பரை இயல்புகளாகிய தமிழ்ப் புலமையும் துறவுணர்ச்சியும் விளங்கின. சமீன்தாரது ஆசுத்தான வித்துவானாக அவர் சில காலம் இருந்தார். தியானம் செய்தல், தெய்வ கைங்கரியம் புரிதல் முதலியவற்றிலேதான் அவர் அதிகமாக ஈடுபட்டிருந்தார். அதனால் மற்றவர்களைப் போல சமீன்தாருக்குத் திருப்தி உண்டாகும்படி நடந்து கொள்ள முடியவில்லை. தம்முடைய வயிற்றுக்காக ஆத்தும நாயகனது கைங்கரியத்திற்குக் குறை உண்டாக்கிக் கொள்வதில் அவருக்கு விருப்பமில்லை. இறுதியில் சமீன் உத்தியோகத்தை விட்டுவிட்டு ஆண்டவன் அடித்தொண்டே கதியென்றெண்ணி அதில் முனைந்து நின்றார்.

அரியிலூர்ப் பெருமாள் கோயில் தசாவதார மண்டபத்தில் உள்ள நரசிங்கமூர்த்தியை அவர் உபாசித்து வந்தார். அரண்மனை உத்தியோகத்தினின்றும் நீங்கியது சிறையினின்றும் விடுபட்டது போன்ற உணர்ச்சியை அவருக்கு உண்டாகியது; ‘முன்பே இந்தக் காரியத்தைச் செய்யாமல் இருந்தோமே!’ என்று அவர் உருகினார்;

வஞ்ச மாரும் மனத்தரைக் காவென்று
        வாழ்த்தி வாழ்த்தி மனதுபுண்ணாகவே
பஞ்ச காலத்திற் பிள்ளைவிற் பார்கள்போல்
        பிரபந்தம் விற்றுப் பரிசு பெறாமலே
நெஞ்சம் வாடி இளைத்துநொந் தேனையா!
        நித்த நின்மல நின்னடி தஞ்சங்காண்
செஞ்சொல் நாவலர் போற்றவெந் நாளிலும்
        செழித்து வாழரி யில்நர சிங்கமே

என்ற பாட்டைக் கூறிக் கதறினார். பஞ்சகாலத்திற் பிள்ளை விற்பார்கள் போல் கவிதையை மனிதருக்கு வீணே அருப்பணம் செய்த குறை நீங்க அவர் தம் வாழ்வு முழுவதையும் நரசிங்க மூர்த்தியின் சேவையிலே போக்கி இன்புற்றார்.

ஐயாவையங்காருக்கு ஐந்து குமாரர்கள் இருந்தார்கள். எல்லோரிலும் இளையவரே சடகோபையங்கார். அந்த ஐவரும் தமிழிலும் சங்கீதத்திலும் பயிற்சி யுடையவர்களே!

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.

Sunday, January 01, 2023

6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 6/6

 அகரமுதல




(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-5/6 – சி.பா. தொடர்ச்சி)

6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 6/6


தொல்காப்பியப் பொருட்படலமும் புதிய உரையும்


தொல்காப்பியத்துக்கு உரை எழுதியோர் பலர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணாக்கர்க்குத் தொல்காப்பியப் பாடம் சொல்லி வருங்கால் சிற்சில இடங்களில் உரையாசிரியர்கள் தமிழ் மரபுக்கும் தொல்காப்பியர் கருத்துக்கும் மாறுபட்டு உரை எழுதியிருப்பதைக் கண்டார். இலக்கணக் கடல் சோழவந்தான் அரசஞ் சண்முகனாரோடும், இருமொழிப் புலமைப் பெருமழைப் புலவர் பண்டிதமணியுடனும் தம் கருத்துகளைக் கலந்து பேசி இறுதியாக, தொல் காப்பியம் – பொருட்படலமும் புதிய உரையும்’ எனும் நூல் எழுதினார். இந்நூலில் அகத்திணையியல், புறத்தினையியல், மெய்ப்பாட்டியல் என்னும் மூன்றியல்களின் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப் புதியவுரையின் சிறப்பினைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள், “நாவலர் இப்புத்துரை செய்ததன் வாயிலாகத் தமிழுக்கும் தமிழர்க்கும் எத்தனையோ நன்மைகள் செய்துள்ளார். தக்க மேற்கோளுடன் எவரும் மறுக்க முடியாத வகையில் பொருள் கூறித் தமிழர் பெருமையைக் காத்துள்ளார். அப் புத்துரையைப் பாராட்டி மக்களனை வரும் அதையே படிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சில நூல்கள்

மேற்கண்ட நூல்களைத் தவிர, இவர் அவ்வப்போது இதழ்களுக்கு எழுதிய கட்டுரைகளும், வானொலியில் ஆற்றிய சொற்பொழிவுகளும் நூல் வடிவம் பெற்றன. அவ்வாறு வெளிவந்த நூல்கள் ‘நற்றமிழ்’, ‘பழந்தமிழ் நாடு’ என்பனவாகும். இவர்தம் ஆங்கிலக் கட்டுரைகள் ‘தமிழ் இலக்கியங்களும் தமிழகமும்’ (Tamil Classic and Tamīlaham)பெயரில் நூலாக அமைந்தது.

மேலும் இவர் கரிகாலனும் திருமாவளவனும் ஒருவரே என்ற கருத்தை மறுத்தும், பட்டினப்பாலையின் தலைவன் கரிகாலனல்லன் திருமாவளவனே என்றும், இத்திருமாவளவன் கரிகாலனுக்கு மகன் என்றும் ஆராய்ந்து கூறியுள்ளார்.


சீத்தலைச் சாத்தனாரும், மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரும் வெவ்வேறு புலவர் என்றும், மணிமேகலை பாடிய புலவர் மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் ஆவர் என்றும், இவரின் வேறான புரவலரைப் போற்றி அவரால் பேணப்பட்டு வாழ்ந்தவரே சங்ககாலச் சீத்தலைச் சாத்தனா ரென்றும் முடிவு கட்டினார்.

மெய்கண்டார் இயற்றிய சிவஞான போதம் மொழி பெயர்ப்பு நூலன்று, அது செந்தமிழில் எழுந்த முதல் நூல் என்றும், உருத்திரனும், சிவனும் ஒருவரல்லர், வெவ்வே றானவர் என்றும், உருத்திரன் அழிக்கும் கடவுள், தமிழரின் சிவன் எல்லாம் வல்ல இறைவன் என்றும் தக்க ஏதுக்கள் காட்டி எடுத்துரைத்தார்.

இவ்வாறாகமுனைவர்நாவலர் கணக்காயர் சோமசுந்தர பாரதியார் இலக்கிய எழுஞாயிறாய் – இருபதாம் நூற்றாண்டு நக்கீரராய் இலங்கினார். நாட்டுப்பற்றில் வேர் ஊன்றி, தமிழ்ப்பற்றில் கிளைவிட்டுப் படர்ந்து, தமிழன மேம்பாட்டிற்குச் செழித்து விளங்கியது நாவலர் என்னும் நற்பயன் மரம் என்று கூறலாம்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சிபாலசுப்பிரமணியன்