Friday, May 07, 2021

இந்திய இறை இலக்கியங்களுக்கு முன்னோடி, தமிழ் இலக்கியங்களே! – ப. மருதநாயகம்

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 38/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

39/ 69

‘பக்தி இயக்கமும் தமிழ்க்கவிதை வளர்ச்சியும்'(2015) (தொடர்ச்சி)

தென்னிந்திய நாட்டுப்புறப்பாடல்களைத் தொகுத்தளித்த சாருலசு கோவர்(Charles Gover) சங்கரரின் அத்துவைதத் தத்துவத்தின் மூலங்கள் தமிழ்நாட்டுப்புறப்பாடல்களில் காணக்கிடக்கின்றன; அத்துவைதத் தத்துவத்தின் அடிக்கருத்துகள் திராவிடத் தொல்குடியினருக்கு உரியவை; தமிழ்ப்பாடல்கள் பலவற்றைச் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்து வைத்துக் கொண்டு அவையே மூலமென்று சொல்லும் வடமொழிச்சார்பாளர்கள் உண்டு; அவர்களே திருமூலரின் திருமந்திரம் போன்ற நூல்களில் இடைச் செருகல்களைப் புகுத்தி அவற்றின் மூலக்கருத்துகளுக்கு நேரெதிரான கொள்கைகளை அவை பேசுமாறு செய்தனர் என்பனபோன்ற ஆய்வுமுடிவுகளை ஆதாரங்களுடன் அறிவுறுத்துவார். முதலான பல கருத்துகளைத் கோவர் வாயிலாகப் பேரா.ப.ம.நா.எடுத்துரைக்கிறார். ஆதி சங்கரர் எழுதியதாகக் கருதப்பெறும் செளந்தர்யலகரியில் உள்ள பழந்தமிழ் இலக்கியங்களி்ன் செல்வாக்கைப் பலசங்கப்பாடல்களை எடுத்தாண்டு திறமாக விளக்குகிறார் பேரா.ப.ம.நா. இந்நூல் உருவாக்கத்திற்காகக் காரைக்காலம்மையாருக்கும் அவர் கடன்பட்டிருப்பதையும் விளக்குகிறார். தாய்மொழியாம் தமிழும் அதன் தலைசிறந்த இலக்கியங்களும் ஆதிசங்கரரின் படைப்புகளில் இயல்பான தவிர்க்க முடியாத தாக்கத்தை விளைவிததிருப்பதை நன்கு உணரலாம். 

தேவாரமும் தியாகராசரும்’ என்னும் பதினான்காவது கட்டுரை தமிழகத்தில் வாழ்ந்த தியாராசர் தெலுங்கில் எழுதியிருந்தாலும் தான் வாழ்ந்த தமிழ்நாட்டின் இலக்கியச்செல்வாக்கிலேயே அவற்றைப் படைத்துள்ளார் என்பதை வலியுறுத்துகிறது.

தியாகராசரின் கீர்த்தனைகளில் காணப்பெறும் கற்பனை வளம்,அறக்கருத்துகள், கோட்பாட்டு வரையறைகள் உபநிடத உண்மைகள், போலி வேடத்தையும் தவறான போக்கையும் கண்டித்தல், அருமையான உவமைகள், பொதுமக்களிடையே வழங்கும் பழமொழிகள், ஆன்மிகத் துய்ப்பு, புலன் இன்பங்களையும் செல்வந்தரையும் அளவின்றிப்புகழ்தலை வெறுத்தல்,   இறைவனைப் பழிப்பதுபோல் புகழ்தல் முதலான மிகுதியான கூறுகளின் மூலம் தேவாரம், ஆழ்வார் பாடலகள் ஆகியவையே! ஆனால், இவ்வுண்மையைத் தியாகராசரின் ஆன்மிகச் செல்வ மரபு(The Spiritual Heritage of Thyagaraja) என்னும் நூலுக்கு நீண்ட ஆய்வு முன்னுரை அளித்த சமற்கிருதப் பேராசிரியர் வி.இராகவன் எக்காரணம்பற்றியோ எடுத்துரைக்கவில்லை..

அறிஞர் அருணாசலம் ஆய்ந்து கூறுவதுபோல் தியாகராசர் தமிழிசை மரபிற்குப் பெரிதும் கடன்பட்டிருப்பவர்; இறைவனைக் காதலனாகவும் தன்னைக் காதலியாகவும் கருதிப்பாடும் நாயக-நாயகி அகமரபுப் பாடல்களைத் தேவாரம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலிருந்து தழுவியுள்ளார்; அப்பரையும் மணிவாசகரையும் பிறரையும் பின்பற்றித் தியாகராசர் பள்ளியெழுச்சி பாடுகிறார்; இறைவனுடைய அடியார்களை இறைவனாகவே போற்றும் மரபைப் பத்தி இலக்கியக்கப் பாடல்களில் இருந்து பின்பற்றியுள்ளார்; இத்தகைய உண்மைகளை, மூலப்பாடல்களையும் தழுவல்பாடல்களையும் ஒப்பிட்டுச்சிறப்பாகப் பேரா.ப.ம.நா.விளக்கியுள்ளார்.

வாழையடி வாழை: வள்ளலாரும் பாரதியும்‘ என்னும் 15ஆவது கட்டுரையில் பாரதியை உருவாக்கியதில் தலைமையிடம் பெறத் தக்கவர் இராமலிங்க அடிகளாரே என மெய்ப்பிக்கிறார்.

எளிய நடை, இனிய சந்தம், புதிய பாடுபொருள்கள், பல்வேறுபட்ட பா வகைகள், நாட்டார் வழக்காற்றைப் பயன்படுத்திக் கொள்ளல், பேச்சுத் தமிழிலிருந்து வேண்டிய சொற்களை எடுத்துக் கொண்டு தக்க இடத்தில் பயன்படுத்திக் கவிதைக்கு உயிரூட்டல் ஆகியவற்றிற்கெல்லாம் பாரதிக்கும் அவரது வழித் தோன்றல்களுக்கும் முன்னோடியாக இருந்து கல், முள்ளற்ற பெரும்பாதை அமைத்துக் கொடுத்தவர் அடிகளாரே; தடம் புரண்டு போய்க்கொண்டிருந்த தமிழ்க்கவிதை வெள்ளத்தை முதலில் மடை திருப்பியவர் வள்ளலார் ஆவார்; மரபு வழிவந்த எண்ணற்ற யாப்பு வகைகளுக்குத் தமது சொல்வளம், சொல்லாட்சித் திறன், கற்பனையாற்றல் ஆகியவற்றால் புத்துருவம் அளித்துப் பல்வேறு உணர்வுகளைத் தட்டி யெழுப்பும்  கவிதைகளை எளிய தமிழில் தந்தவரும் அவரே. வள்ளலாரிடம் இருந்து பாரதியார் சொற்களையும் தொடர்களையும் பாவினங்களையும் உத்திகளையும் பெற்றதால் அவரின் தாக்கம் பாரதி பாடல்களில் ஆழ்ந்து விரிந்து பரவியிருக்கக் காணலாம். இவ்வாறு ஆய்வுரை கூறும் பேரா.ப.ம.நா. எண்ணற்ற வள்ளலாரின் பாடல்களைப் பாரதியார் பயன்படுத்தியிருப்பதை நமக்குத் தந்து இவ்வுண்மையை உரைக்கிறார்.

‘பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்’

எனத் தொடங்கும் வள்ளலாரின் திருப்பள்ளி எழுச்சி

பொழுது புலர்ந்தது யாம் செய்வதவத்தால்’

எனத் தொடங்கும் பாரதியின் பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி

வள்ளலாரின் ஆனிப்பொன்னம்பலக் காட்சியில் வரும் பல்வகை இரத்தினங்களைக் குறிக்கும் பாடல் அடி ஒற்றிப் பாரதியார் பாரதமாதா நவரத்தினமாலை தந்துள்ளார்.

ஒப்பீட்டுப்பாடல்கள் மூலம், வள்ளலாரின் சொற்கள், சொற்றொடர்கள், கருத்துகள் முதலியவற்றில் மயங்கிய பாரதியார் தாமும் அவற்றைப் பயன்படுத்தியுள்ளதைப் பாங்குற விளக்கியுள்ளார்.

பிற்கால இலக்கியங்களில் திருமுறையின் செல்வாக்கு குறித்துப் பதினாறாவது கட்டுரை பேசுகிறது.

சிவப்பிரகாசர், இராமலிங்க அடிகள், பாரதியார் ஆகியோர் தேவார, திருவாசகப் பாடல்களின் சொற்பொருள்  அமைப்பினைத் தத்தம் கவிதைகளில் ஏற்றிப் போற்றியுள்ளனர். இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவில் பன்னிரு திருமுறைகளின் சொற்பொருள் நலங்கள் எங்கும் இடம்பெற்று விளங்குவதை வெள்ளைவாரணனார் தமது திருவருட்பாச்சிந்தனை என்னும் நூலில் எடுத்துக்காட்டுகிறார்.

பக்திப்பாடல்களும் இக்காலக் கவிஞர்களும்’ என இந்நூலின் நிறைவாகப் பதினேழாவது கட்டுரை அமைந்துள்ளது.

நாளும் இசையால் தமிழ் பரப்பிய நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய பத்திப்பாடல்களில அன்னார் கையாளும் நடையியல் உத்திகளை இக்காலக்கவிஞர்களும் பின்பற்றுவதை இக்கட்டுரையில் விளக்குகிறார். மாணிக்கவாசகர் நெஞ்சிடம் கொண்ட மனமுறிவு உணர்வை வெளிப்படுத்தக் கையாளும் உத்திகள் வெற்றி பெற்றன.  இவற்றை இக்காலக் கவிஞர்கள் தமிழினத்தின் செயலற்ற தன்மையால் அடைந்த மனமுறிவு உணர்வை வெளிப்படுத்தக் கையாண்டு வெற்றி பெற்றனர் என்கிறார். இவ்வழியில் தெளிதமிழில் வெளிவந்த இலெனின் தங்கப்பாவின் ஒதுங்கல் ஏனோ தலைப்பிலான கவிதையைக் குறிப்பிடுகிறார். இதுபோல் 1965இல் வேலூர்ச்சிறையில் இருந்தபோது பெருஞ்சித்திரனார் திருப்பாவை, திருவெம்பாவை வழியில் பாடிய செந்தமிழ்ப்பாவையையும் பார்க்கலாம்.

சில பாடல்களை எடுத்துக்காட்டுகளாகக் கூறிப் பழைய பத்திப்பாடல்களில் புதிய பாடுபொருளை ஏற்றி அதற்குப் புதுமைக்கோலம் புனைவதிலும் தம் கருத்தை எடுத்துரைப்பதிலும் புலவர் வெற்றி கண்டுள்ளார் என்கிறார். 

அகப்பாடல்களிலும் பத்தி இலக்கியங்களிலும் பயின்றுவரும் நெஞ்சொடு கிளத்தல் என்னும் தமிழ் இலக்கிய மரபின் பழைய உத்தியை இராமலிங்க அடிகளாரும் பாரதியும் பயன்படுத்திக் கொண்டனர்; பெருஞ்சித்திரனாரும் இவ்வழியில் தம் அயர்வுற்ற நெஞ்சிற்கு அறிவுரை கூறுவதுபோல் தமிழர் இழிநிலையையும் அவர் மேம்படத் தாம் செய்ய வேண்டிய பணிகளையும் பத்துப்பாடல்களில் ‘எழுவாய் நெஞ்சே’ எனும் தலைப்பில் தொகுத்துக் கூறியுள்ளார்.

நடவாய் எழுந்தே தமிழா இந்

நாளே எழுக எழுகவே!

எனப் பள்ளி எழுச்சிப்பாடுவதையும் அறியலாம்.

சங்கப்பாடல்கள் வழியில் பத்தி இலக்கியம் அமைந்ததையும் பத்தி இலக்கிய வழியில் பிந்தைய இலக்கியங்கள் அமைந்ததையும் இந்நூலில் இவ்வாறு பேரா.ப.ம.நா. விளக்கியுள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 40/ 69)

 



Thursday, May 06, 2021

வட நூல்கள் தமிழ் நூல்களிலிருந்து அளவின்றிக் கடன் பெற்றிருக்கின்றன!- ப. மருதநாயகம்

 அகரமுதல


 



(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

37/ 69  இன் தொடர்ச்சி)

 தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

38/ 69

 ‘பக்தி இயக்கமும் தமிழ்க்கவிதை வளர்ச்சியும்(2015)’ (தொடர்ச்சி)

அப்பர் தேவாரம் : ஒரு காப்பியமாக’ என்பது பத்தாவது கட்டுரை. அப்பருடைய தசாபுராணம், இலிங்கபுராணம் ஆகியவற்றில் காப்பியக்கூறுகளைக்காணலாம் என அறிஞர்கள் கூறியதை வழிமொழிந்து பல செய்திகளைப் பேரா.ப.ம.நா. கூறுகிறார். தசபுராணப் பதிகத்திலுள்ள பத்து பாடல்களும் ஒவ்வொரு நிகழ்வை வருணிக்கும் முறை காப்பிய நயம் கொண்டு விளங்குகிறது. கடல்வணிக உருவகம், போர்க்கள உருவகம், தண்டி குறிப்பிடும் அணிகளைப் பின்பற்றல், ஐந்திணை வருணனை, நகரப் படலம், கவிதைகளிலுள்ள தெளிந்த பார்வை, ஆழ்ந்த சிந்தனை  முதலிய பலவற்றின் அடிப்படையில் அப்பர் தேவாரத்தைக் காப்பியமாகப் பார்க்க முடிகிறது. அறிஞர்கள் பலரின் கருத்துகளைக் கூறி அவற்றின் அடிப்படையில், மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் அப்பரின் செல்வாக்கு,அப்பர் பதிகங்களில் இராவணன், அப்பர் தேவாரத்தில் எண்கள், அப்பர் தேவாரத்தில் நாட்டார் வழக்காறு முதலிய பல உட்தலைப்புகள் மூலம் தம் கருத்திற்கு வலு சேர்க்கிறார்.

‘கவிதையில் வீர சைவம் : மணிவாசகரும் பசவண்ணரும்’ என ஒப்பிலக்கியக் கட்டுரையைப் பதினோராவதாக அளித்துள்ளார். ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தோன்றிய பத்தி இலக்கியம் இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் பரவியது; எனவே, தமிழ்ப்பத்தி இலக்கியங்களின் செல்வாக்கைப் பிற மொழிப் பத்தி இலக்கியங்களில் மிகுதியாகக் காணலாம்.

தமிழகத்துச் சைவ முதுகுரவர்களுக்கும் கன்னடத்துப் பசவண்ணருக்கும் பல ஒற்றுமைகள் இருப்பினும் அவர்களுடைய கவிதைகளின் பாடுபொருள்களை வைத்துப் பார்க்கும்போது வீர சைவராகிய பசவண்ணர் வீரசைவராகிய மணிவாசகருக்கே மிகவும் நெருக்கமாகக் காணப்படுகிறார். மணிவாசகரின் பாடல்களும் பசவண்ணரின் வசனங்களும் அவர்கள் “மேற்கொண்ட ஆன்மிகப்பயணத்தின் படிநிலைகளை, முருகியல் இன்பத்தைப் பெருக்கும் வண்ணம் மொழிகின்றன. ஆழ்ந்த மனத் துயரத்திலிருந்தும் சோர்வு நிலையிலிருந்தும் விடுபட்டு இறைவனோடு இரண்டறக் கலத்தலால் ஏற்படும் இன்பத் துய்ப்புபற்றி இருவரும் விரிவாகப் பேசுகிறார்கள்,” இவ்வாறு பல ஒற்றுமைகளைக் கூறும் பேரா.ப.ம.நா.. மணிவாசகர் பசவண்ணர் போன்று மன்பதைத் தீமைகளைக் கண்டிப்பவரல்லர் என்பதையும் குறிப்பிடுகிறார்.

மேலைக்கவிதையில் முதல் மூன்று ஆழ்வார்கள்’ என்பது பன்னிரண்டாவது கட்டுரை. பொய்கை ஆழ்வார், பூதத்து ஆழ்வார்,பேயாழ்வார் ஆகியோரின் பாடல்களின் தாக்கம் ஆங்கிலக்கவிதைகளில் இருப்பதை இதில் தெரிவிக்கிறார்.

‘ஆதிசங்கரரும் பக்திப்பனுவல்களும்’ என்பது பதின்மூன்றாவது கட்டுரை. வடபுலத்து இலக்கணக்காரர்கள் அவர்களுடைய மொழியை ஆய்வதற்கு முன்னரே தமிழர்கள் பிறமொழிச் சார்பில்லாத எழுத்துமுறையைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் என அறிஞர் பருனெல்(Burnell) ‘தென்னிந்தியத் தொல்லெழுத்தின் மூலங்கள்’(Elements of South Indian Paleography) எனும் கட்டுரையில் தெளிவுபடுத்துகிறார். இதன் தொடர்ச்சியாகச் சங்கரர் காலத்திற்கு முன்னமேயே தமிழ்மொழி நல்ல வளர்ச்சி பெற்றதாயும் பேரிலக்கியங்களைக் கொண்டதாயும் இருந்ததென்பதையும் வடநூல் ஒன்றிற்கும் பழந்தமிழ் நூல் ஒன்றிற்கும் ஒற்றுமை காணும் போதெல்லாம் அகச்சான்றுகள் கொண்டு வடநூலே தமிழ்நூலிலிருந்து கடன்பெற்றிருக்க வேண்டும் என்றுமுடிவு கட்டுவதில் தவறில்லை யென்பதையும் உணரலாம்.

“இராமானுசர் தமது விசிட்டாதத்துவைத் தத்துவத்தை உருவாக்குவதற்கு ஆழ்வார்களின் பாடல்களுக்குக் கடன்பட்டிருப்பதை அறிஞர்கள் கூறியுள்ளனர். சங்கரர் தமது அத்துவைதத் தத்துவத்தை மாணிக்கவாசகர் முதலான சமயக் குரவர்களின் பாடல்கள் துணை செய்திருக்க வேண்டும் என்பதை அறிஞர் எல்லீசு சான்றுகளுடன் குறிப்பிடுகிறார்.” இதனைக் குறிப்பிடும் பேரா.ப.ம.நா. பல்வேறு பாடல்களை எடுத்துக்காட்டி இக்கருத்துகளுக்கு வலு சேர்க்கிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 39/ 69)

 



Wednesday, May 05, 2021

இசைக்கலையை ஆரியர் தமிழரிடமிருந்து கற்றனர் -ப. மருதநாயகம்

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 36/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

37/ 69

‘பக்தி இயக்கமும் தமிழ்க் கவிதை வளர்ச்சியும்'(2015) (தொடர்ச்சி)

ஐந்தாவது கட்டுரையாகப் ‘பக்தி இலக்கியமும் பன்னிரு திருமுறையும்’ அமைகிறது. பாகவத புராணத்தில் முதல் அத்தியாயம் நாற்பத்தெட்டாம் பாடலில் பத்தி இலக்கியம் தமிழ்நாட்டில் தோன்றி இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியதாகக் குறிக்கப்பட்டுள்ளது.

டி.எசு.எலியட்டு, இலக்கியங்களை நல்ல இலக்கியம் என்றும் மீ உயர் இலக்கியம் என்றும் பிரிக்கிறார்.தேவாரமும் திருவாசகமும் நாலாயிரத்திவ்வியப் பிரபந்தமும் சமயம், இசை, கவிதை ஆகிய மூன்றையும் இணைக்கும் அரியபெட்டகங்களாகத் திகழ்வதால், மீவுயர் இலக்கியங்களாகும். வேற்றுச் சமயத்தினரும் இறை மறுப்பாளர்களும் போற்றிப்புகழும் வகையில் திருமுறைகள் திகழ்கின்றன.

நாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தமிழகம் முழுவதும் சென்று சைவசமயத்தைப் பரப்பியதோடு தமிழையும் தமிழ் இசையையும் அன்பு நெறியையும்பரபப்பினர் என 6 ஆவது கட்டுரையான ‘பன்னிரு திருமுறையும் தமிழும்’ என்பதில் குறிப்பிடுகிறார். ஞானசம்பந்தர் தமிழைப் போற்றினார் என்பதை அவர் தமிழுக்குத் தந்த நூற்றுக்கணக்கான அடைமொழிகளாலும் தம்மைத் தமிழ் ஞானசம்பந்தன், நற்றமிழ் விரகன், தமிழ் விரகன், தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன் என்றெல்லாம் குறிப்பிடுவதாலும் அறியலாம். பத்தி இலக்கியங்கள் தமிழ்க்கவிதை வளர்ச்சிக்கு ஆற்றிய அரும்பெரும் பங்களிப்பையும் விரிவாக நமக்கு விளக்குகிறார் பேரா.ப.ம.நா. சங்க இலக்கியப்பாடல்கள், சிலப்பதிகாரப் பாடல்களை அடிஒற்றித் திருமுறைப்பாடல்கள் அமைந்துள்ளமையைப் பாவகைகளைக் குறிப்பிட்டுச் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார். திருமுறைகள் இறைநெறிப்பாடல்களாய் அமைந்திருப்பினும் தமிழ்ப்பாநெறியில் திகழ்வதை நாம் இக்கட்டுரை மூலம் புரிந்து கொள்ளலாம்.

சங்க இலக்கியப் பாவகைகளுடன் திருமுறைப்பாக்களை ஒப்பிட்டவர் அடுத்த 7ஆவது கட்டுரையில் ‘சங்க இலக்கிய மரபும் பன்னிருதிருமுறையும்’ என்ற தலைப்பில் சில ஆய்வு முடிவுகளைத் தெரிவிக்கிறார். பாடாண்திணைக் கூறுகளைக் கையாண்டு மன்னனின் இடத்தில் இறைவனை வைத்துப் பாடத் தொடங்கின திருமுறைகள். கைக்கிளைத் திணையை இறைவன்பால் இறையன்பன் கொள்ளும் அன்பைப்பாட, நாயகநாயகி மரபோடு இணைத்துக் கொண்டன தேவாரமும் திருவாசகமும்.  சங்க இலக்கியங்களிலிருந்து சிற்றிலக்கிய வகைகள் சிலவற்றைப் பத்தி இயக்கம் புத்துருவாக்கம் செய்துகொண்டது.

அறிஞர் அருணாசலம் முதலானவர்களின் ஆய்வுரைகளையும் திருமுறையில் இடம் பெறும் பண்களையும் குறிப்பிட்டுத் தமிழிசையின் தொன்மையையும் தனித்தன்மையையும் வளர்ச்சியையும் சிறப்பையும் பேரா.ப.ம.நா. புலப்படுத்துகிறார்.

இன்றைய இசைக்கலை ஆரியர் தமிழரிடமிருந்து கற்றது என்றும் இசையறிவை ஆரியலரல்லாதவரிடமிருந்து ஆரியர் கடன்பெற்றதை மறைப்பதற்காகவே சாமவேதத்திலிருந்து இசை பிறந்தது என அவர்கள் கதை புனைந்தனர் என்றும்  அறிஞர் ஓ.கோசுவாமி, ‘இந்திய இசை வரலாறு’ என்னும் நூலில் அறிவுறுத்துகிறார்.

ஒன்பதாம் கட்டுரை சம்பந்தர் தேவாரத்தில் தொன்மம் குறித்துப்பேசுகிறது. “தொன்மங்களின் ஆழ்ந்த பொருளைத் துலக்கி அவற்றைச் சிறப்புறப் பயன்படுத்தல் தமிழ் இலக்கிய மரபிற்குப் புதியதன்று. சங்கப் பாடல்களில் சிவன், திருமால், திருமகள், முருகன், இந்திரன், இராமன், கண்ணன், பலராமன் ஆகியோர் சுட்டப் பெறுகின்றனர். .. சில பாடல்களில், தொன்ம நிகழ்ச்சிகள் பொருள் பொதிந்த உவமைகளாகிக் கவிதைக்கு அழகூட்டுகின்றன.” சம்பந்தர் தேவாரத்தில் இடம்பெற்ற தொன்மங்களை நன்கு விளக்கியுள்ளார். சம்பந்தர் கையாளும் உத்திகள் யாவும் பத்தி இயக்கத்தின் வெற்றியில் தேவாரத்திற்கான பங்கிற்கு வழி காட்டியாய் அமைந்தன என்பதுடன் இக்கட்டுரையை முடிகிறது. 

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 38/ 69)

 




Tuesday, May 04, 2021

இந்திய இறை இயக்கங்களின் முன்னோடி, தமிழ்நாடே! – ப. மருதநாயகம்

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 35/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

36/ 69

பக்தி இயக்கமும் தமிழ்க்கவிதை வளர்ச்சியும்(2015)

இந்நூலில் முன்னுரையையும் 17 கட்டுரைகளையும் அளித்துள்ளார்.

பன்னிரு திருமுறையும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும் பத்திப்பாடல்களாக மட்டுமல்லாமல் உலகத்தரம் வாய்ந்த படை்பிலக்கியங்களாகவும் பண்பாட்டுப் பெட்டகங்களாகவும் சீரிய இறையியல் கொள்கைகளை உள்ளடக்கியவையாகவும் முன்னிறுத்தப்பட வேண்டியவை என்பதை இந்நூலில் விளக்குகிறார். (பற்று> பற்றி> பத்தி> பக்தி; ‘ற்ற’, ‘த்த’ என மாறுவதற்கான எ.கா. வெற்றுவேட்டு < வெத்து வேட்டு;  முற்றம் > முத்தம்)

பத்தி இலக்கியத்தின் மூலவேர்கள் எனச் சங்கக்காலத்து இலக்கியங்களைக் குறிப்பிட்டு முதல் கட்டுரை விளக்கம் தருகிறது. “பத்தி இலக்கியம் தமிழகத்தின் தென்பகுதியில் தோன்றி இந்தியத்துணைக்கண்டம் முழுவதும்பரவியது” என்னும் முன்னோர் கருத்துகளை வழி மொழிகிறார் பேரா.ப.ம.நா.

இரண்டாம் கட்டுரை ‘பரிபாடல் முதல் பத்தி இலக்கியம்’ என்பது. பரிபாடலின் காலம் சங்கக்காலத்திற்குப் பிற்பட்டதென்று வேண்டுமென்றே வையாபுரியார் கூறியிருப்பார். அதற்கு மறுப்பாக  அறிஞர் மா.இராசமாணிக்கனார் தமது தமிழ் மொழி இலக்கிய வரலாறு எனும் நூலில் தக்கக் காரணங்களுடன் மறுத்திருப்பார். இரண்டு தரப்பையும் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பேரா.பா.மருதநாயகம் தாமும் பல சான்றுகளை அளித்துச் சங்கக்காலத்தைச் சேர்ந்தது பரிபாடல் என நிறுவியிருப்பார்.

மூன்றாவது கட்டுரையில் குமாரசம்பவத்தில் பரிபாடலின் தாக்கம் ஆராயப்படுகிறது. ‘பத்திப்பனுவல்கள்: தெ.பொ.மீ. பார்வையில்’ என்பது நான்காவது கட்டுரை.  சமற்கிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய வடமொழிகளில் எழுதப்பட்ட நூல்கள் தமிழில் பெருகின. ஆனால் இவை வறட்டு வாதமாக மக்களிடமிருந்து விலகி இருந்தன. இந்த வறட்டு வாதம் எதற்கு என ஞானசம்பந்தர் வினா எழுப்பினார். எனவே, தமிழால் இறை இலக்கியத்தைப் பரப்பினர் எனப் பேரா.ப.மருதநாயகம் விளக்குகிறார்.

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் எழுதிய நூலின் பெயர் ஆசாரிய இருதயம். மந்திரம் என்பது சமற்கிருதச்சொல் என்ற அடிப்படையிலான தவறான வாதங்களுக்கு மறுப்பு வாதங்கள் உள்ளன; ஞானசம்பந்தர் வடசொல்லும் தமிழ்ச்சொல்லும் கலந்து எழுதும் நடையைக் கண்டிக்கிறார் என இறை இலக்கியப் புலவர்கள் தனித்தமிழ் நடையையே வலியுறுத்தினர், தமிழ் மந்திரத்தையே பயன்படுத்தினர். தெ.பொ.மீ. நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் சிறப்புகளை வெவ்வேறு கட்டுரைகளில் குறிப்பிடுவதை இக்கட்டுரையில் விளக்குகிறார். கடவுளை அடையும் நெறிகளில் பாடல் நெறியும் ஒன்று என அவர் குறிப்பிடுதலையும் விளக்குகிறார்.

தமிழகப் பார்ப்பனர்கள் தாய்லாந்துவரை பரவி இருந்தனர்; சயாமில் நடைபெற்ற அரசியல் சடங்குகளில் இவர்கள் தமிழ் மந்திரத்தையும் பாலி, தாய்லாந்து மொழியையும் பன்படுத்தினர் என்கிறார் அறிஞர் வேல்சு. அஃதாவது சமற்கிருதம் ஓதப்படவில்லை. இவற்றுக்கான சான்றுகளையும் நுட்பமன விளக்கங்களையும் தெ.பொ.மீ. தருவதை ப.ம.நா. எடுத்துரைக்கிறார். தமிழ் மந்திரங்களே அங்கு ஓதப்பட்டன என்னும் அறிஞர் வேல்சு கருத்தை வலியுறுத்தும் வகையில், திருப்பாவை, திருவெம்பாவாய், ஏலோர் எம்பாவாய் என்பனச் சிதைந்து தாய்லாந்து மந்திரங்களாக விளங்குவதைத் தெ.பொ.மீ. உறுதி செய்துள்ளார். தமிழர் பண்பாடு கீழை நாடுகளில் பரவியதன் காரணம் அவர்களின் அன்புநெறியே எனத் தெ.பொ.மீ. விளக்குவார்.

பெண்களுக்கு எவ்வகை உரிமையும் இல்லை, வீடுபேறும் இல்லை எனச் சிலர் கூறிவந்த காலத்தே  பெண்கள் வீடுபேற்றிற்கும் உரியவர், எல்லா வகை உரிமைகளுக்கும் உரியவர் என மாணிக்கவாசகர் அறிவுறுத்தியதைத் தெ.பொ.மீ. சுட்டுவார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 37/ 69)



Monday, May 03, 2021

உலக நூல்களுக்கு வழிகாட்டி வரும் வள்ளுவம் – ப. மருதநாயகம்

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 34/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

35/ 69

‘மேலை மெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம்’(2014)

என்னும் இவரது மற்றொரு நூல்(2014) பிற நாட்டு அறிஞர்களுடன் ஒப்பிட்டுத் திருவள்ளுவரின் பெருமைகளை வெளிக்கொணரும் இலக்கியமாகும்.

மேலைநாட்டு நூல்களுடன் திருக்குறளை ஒப்பிட்டு நூல்கள் வந்துள்ளன. ஆனால் ஒப்புமை மட்டுமல்ல அந்நூல்களில் திருவள்ளுவரின் திருக்குறள் தாக்கம் உள்ளது என்பதை ஆராய்ந்து இந்நூலில் இவர் புலப்படுத்தி யுள்ளார்.

உரேமானிய மெய்யியல் அறிஞர் செனகா, தமது கட்டுரை ஒன்றில் திருவள்ளுவர் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இதனை பிரான்சுவா குரோ எழுதிய நூலில் கண்ட அறிஞர் ப.மருதநாயகம் செனகாவின் கட்டுரைகளைப் படித்து அவற்றில் வள்ளுவத்தின் தாக்கம் இருப்பதைக் கண்டறிந்துள்ளார். அதன் விரிவான ‘வள்ளுவரும் செனகாவும்’ என்னும் கட்டுரை இந்நூலில் இடம் பெற்றுள்ளது. செனகாவின் மடல்கள், கட்டுரைகள் வாயிலாகவும் வள்ளுவரும் மார்க்கசு அலேசியசும் என்னும் கட்டுரை மூலமாகவும் அவர்களை ஆட்கொண்ட நூற்றுக்கணக்கான திருக்குறள்களை எடுத்தாண்டு, சிறந்த ஒப்பாய்வை நமக்கு அளித்துள்ளார்.

தமிழ் நூற்கருத்துகளைத் திருடிக் கொண்டு சமற்கிருத நூல்களை உருவாக்கித் தமிழின் தொன்மையைப் பின்னுக்குத் தள்ளும் சூழ்ச்சியை எதிர்க்கவே பெரும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இந்நூலில் எண்ணற்ற மேற்கோள்களையும் ஒப்புமைக் கருத்துகளையும் தந்து, மேலை மெய்யியலுக்கு வள்ளுவம் காட்டும் சிறப்பானவழிகாட்டுதல்களை நமக்கு அளித்துள்ளார். இவை எல்லாம் பாடநூல்களில் இடம் பெற வேண்டும். வள்ளுவத்தின் சிறப்பையும் தமிழ்நெறியின் உயர்வையும் நம்மவர் உணரச் செய்ய வேண்டும்.

ஆங்கில இலக்கியங்களைப் படிக்கும் பொழுது அவற்றின் சிறப்புகளைவிடத் தமிழ் இலக்கியச்சிறப்புகளே இவர் கண்முன் நிழலாடுகிறது. மேலை ஆய்வாளர்களின் கண்கள் கொண்டு தமிழ்க்கவிஞர்களைப் பார்த்து ஒப்பியல் நோக்கில் கட்டுரைகளைப் படைத்துள்ளார். எனவே, சிறந்த ஒப்பிலக்கியக்கட்டுரைகள் மலர்ந்துள்ளன. இலக்கிய ஆய்வின் கலங்கரை விளக்கமாக அறிஞர் ப.மருதநாயகத்தைக் கவிஞர் சிற்பி போற்றுவது முக்காலும் உண்மை என்பதை இவரின் நூல்கள் மூலம் நாமறியலாம்.

ஒப்பில் வள்ளுவம்’ (2018)

விரிவாக்க மறுபதிப்பு நூல். இரு தொகுதிகளை உடையது. முதல் தொகுதியில் 15 கட்டுரைகளும் இரண்டாம் தொகுதியில் 6 கட்டுரைகளும் உள்ளன. மேலைநாட்டு அறிஞர்களான பிளேட்டோ, அரிசுட்டாடில், மார்க்கசு அரேலியசு, தாந்தே, மாக்கியவெல்லி, சுபினோசா முதலானோர்களுடன் ஒப்பிட்டுத் திருவள்ளுவரின் சிறப்புகளைப் புலப்படுத்தி உள்ளார்.  திருக்குறளை இந்திய நூல்களான தம்மபதம், மனுநூல், கெளடலீயம், சுக்கிர நீதி, பகவத்து கீதை,காமசூத்திரம் முதலியவற்றுடன் ஒப்பிட்டு ஒப்பிலா நூலாகத் திருக்குறள் அமைந்துள்ளதை விளக்கியுள்ளார். இரண்டாம் தொகுதியில் திருவள்ளுவரைப்பற்றிய செனகா குறிப்பு, எல்லீசர், அயோத்திதாசர், விபுலானந்தர், தெ.பொ.மீ., மு.வ. போன்றோரின் திருக்குறள் விளக்கங்கள், பிரான்சில் திருக்குறள் செல்வாக்கு ஆகியனபற்றி ஆழமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது பிற நாட்டார் அறிந்த அளவிற்குக்கூட நாம் திருவள்ளுவரின் சிறப்புகளை அறியவில்லை யென்பது புலனாகின்றது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 36/ 69)

 



Sunday, May 02, 2021

சமற்கிருத நூல்கள் இழிகாமத்தையே இயம்புகின்றன! – ப. மருதநாயகம்

 அகரமுதல

     03 May 2021      No Comment

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 33/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

34/ 69

பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம்(2014) (தொடர்ச்சி)

சமற்கிருதப் பேராசிரியர் திருஞானசம்பந்தன் குறுந்தொகைக்கும் சத்தசாயி தொகுதிக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பட்டியலிட்டுத் தருவதைப் பேரா.ப.மருதநாயகம் எடுத்துரைக்கிறார். குறிப்பால் பொருளுணர்த்தும் உள்ளுறை உவமம் போன்ற உத்திகள் சமற்கிருதத்திற்குச் சென்றன என்றும் அவற்றைத் தொடக்கத்தில் கடன் பெற்ற வால்மீகியும், வியாசரும் அசுவகோசரும் தங்களின் இராமாயணம், மகாபாரதம், புத்தசரிதம் ஆகியவற்றில் திறம்படக் கையாளவில்லை என்றும் சியார்சு ஆருடு கூறியிருப்பதை நினைவு படுத்துகிறார்.

சங்க இலக்கியங்களில் வரும் பெண்ணின் உடல் உறுப்பு வருணனையில் அருவருப்பை(விரசத்தை)க் காணமுடியாது. ஆனால் பிராகிருத இலக்கியங்களிலும் சமற்கிருத இலக்கியங்களிலும் பெண்களைக் கொச்சைப்படுத்திக் காமஉணர்வைத் தூண்டும் வகையில் உள்ளன என்பதையும் விளக்குகிறார். இக்கட்டுரை மூலமாக அகநானூற்றிற்கும் காதாசபுதசதிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளதைப் பேரா.ப.மருதநாயகம் எடுத்துக் காட்டியுள்ளார். 

தென்னகத்து அறிஞர்களின் சமற்கிருத நூல்களில் தமிழின் தாக்கம் மிகுதியாக உள்ளது என்பதை இறுதிக்கட்டுரையான ‘ஆதிசங்கரரும் தமிழும்’ தெளிவுபடுத்துகிறது. மேலும், சமற்கிருத நூலார், இடைச்செருகல்கள் மூலம் செய்த மோசடிகள் குறித்துச் செருமானிய அறிஞர் பருனெல் கூறியுள்ளதை நமக்கு விளக்குகிறார். எல்லாக் கூறுகளிலும் இந்தியர்கள் தயாரித்த கள்ள ஆவணங்கள் மிகவும் அலங்கோலமானவையும் திறனற்றவையும் ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் வடபுலத்து இலக்கணக்காரர்கள் தமிழர்களுடைய மொழியை ஆய்வதற்கு முன்னரே தமிழர்கள் பிற மொழிச் சார்பில்லாத எழுத்து முறையைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் என்று நம்புவதற்கு வலுவான ஏதுக்கள் இருக்கின்றன என்கிறார்.

சங்கரரின் ‘விவேகசூடாமணி’யில் பழந்தமிழ் இலக்கியங்களின் செல்வாக்கைக் காணலாம். அவர் எழுதியதாகக் கருதப்படும் ‘செளந்தரியலகரி’ பழந்தமிழ் இலக்கியங்களுக்கும்   காரைக்கா லம்மையாருக்கும் கடன்பட்டுள்ளதையும் பார்க்கலாம். மேலும், ஆதிசங்கரர் தமது தத்துவக் கோட்பாட்டை உருவாக்க நாட்டார் பாடல்களுக்கும் நாயன்மார் பாடல்களுக்கும் கடன்பட்டிருப்பதையும் உறுதியாகச் சொல்ல முடியும்.

இவ்வாறு நூல் முழுவதும் சமற்கிருத இலக்கியங்கள் தமிழுக்குக் கடன்பட்டுள்ளதை விளக்குகிறார்.  பாலி, பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய மொழிகளில் உள்ள பழம்நூல்களெல்லாம் சங்க இலக்கியங்களுக்கு முந்தையவை எனத் தவறாகவும் பொய்யாகவும் கூறிய காலம் மலையேறிவிட்டது எனப் பன்னாட்டு அறிஞர்கள் வாயிலாகப் பேரா.ப.மருதநாயகம் விளக்கியுள்ளார். சமற்கிருத நூல் ஒன்றிற்கும் பழந்தமிழ் நூல் ஒன்றிற்கும் ஒற்றுமை காணும் போதெல்லாம் அகச்சான்றுகள் கொண்டு சமற்கிருத நூலே தமிழ் நூலில் இருந்து கடன்பெற்றிருக்க வேண்டும் என்று முடிவு கட்டுவதில் தவறில்லை எனத் தெளிவுபடுத்துகிறார்.

சமற்கிருதப்புலவர்கள் கருத்துகளின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களைத் தழுவியும் கடன்வாங்கியும் சமற்கிருத இலக்கியங்கள் படைத்துள்ளனர். ஒப்பீட்டு அளவில் தமிழ் இலக்கியங்கள் சிறப்பிற்குச் சமற்கிருத இலக்கியங்கள் ஈடாகா என்பதைப் பேரா.ப.மருதநாயகம் இந்நூலில் ஆணித்தரமாக நிறுவியுள்ளார்.

இந்நூல் பாடநூலாக வைக்கப்படவேண்டும்; இந்நூல் கட்டுரைகள் வெவ்வேறு வகுப்பு மாணவர்களுக்குப் பாடங்களாக வைக்கப்பட வேண்டும்;  அப்பொழுதுதான் நம் நாட்டு மொழி வரலாற்றையும் தமிழின் முதன்மைநிலையையும் அறியும் தலைமுறை உருவாகும். இந்நூலை வெளியிட்ட  தமிழ்ப்பேராயம் பெரிதும் பாராட்டிற்குரியது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 35/ 69 )



Saturday, May 01, 2021

கெளடிலியர்தான் திருவள்ளுவருக்குக் கடன்பட்டிருக்கிறார்! – ப. மருதநாயகம்

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 32/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

33/ 69

பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம்(2014) (தொடர்ச்சி)

 அருத்தசாத்திரம் எனப்படும் கெளடலியத்தின் ஆசிரியருக்குத் திருவள்ளுவர் கடன்பட்டிருப்பதாகச் சிலர் தப்பும் தவறுமாக எழுதி வருகின்றனர். கெளடிலியர்தான் திருவள்ளுவருக்குக் கடன்பட்டிருக்கிறார் என்பதை மேலை அறிஞர்களின் கருத்துகளைக் கொண்டு சிறப்பாக நிறுவியுள்ளார் பேரா.ப.மருதநாயகம். 

விண்டர் விட்டுசன், சாலி, கீத்து முதலான மேலைக்கல்வியாளர்கள், சந்திரகுப்புதனது காலத்தில் சாணக்கியர் என்ற பொருள் நூலாசிரியர் ஒருவரும் இருந்ததில்லை எனவும் அந்நூல் கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதே என்றும் நிறுவியுள்ளதை எடுத்துரைக்கிறார். ‘அருத்த சாத்திரம் மெளரியர் காலத்து ஆவணமா?’(Is the Arthasastra a Mauryan Document?) என்னும் கட்டுரையில் மார்க்கு மக்கிளீசு (Mark Mcclish), அருத்த சாத்திரம் மெளரியர் காலத்தில் எழுதப்பெற்ற நூலன்று; அதனை எழுதியவர் சாணக்கியர் என்ற பெயரில் சந்திரகுப்புத மன்னனுக்கு அமைச்சராக இருந்தவர் என்று கருதப்படுபவர் அல்லர்; அது, சந்திரகுப்புத மெளரியனுக்குப் பல நூற்றாண்டுகள் பின்னால் அறிஞர்கள் சிலரால் தொகுக்கப்பெற்ற நூல் என நிறுவியுள்ளார். இதனை நமக்குத் தெரிவிக்கும் பேரா.ப.மருதநாயகம், கி.பி.நான்காம் நூற்றாண்டினைச் சேர்ந்த  அருத்த சாத்திரமே திருக்குறள் கருத்துகளை எடுத்தாண்டுள்ளது என்பதைச் சிறப்பாக ஆறாம் கட்டுரையில் விளக்கியுள்ளார்.

மனுசுமிருதி அருத்தசாத்திரத்திற்குப் பின் தோன்றியதென்பதையும் அதற்குக் கடன்பட்டிருக்கிறது என்பதையும் சமற்கிருத அறிஞர்களின் கருத்துகள் அடிப்படையில் நமக்கு இக்கட்டுரையில் உணரத்தியுள்ளார்.  அரசாட்சி, தூது, வினைசெயல்வகை முதலானவை குறித்த நல்ல கருத்துகள் யாவும் திருக்குறட் பாக்களை அப்படியே எதிரொலிப்பதை விளக்கியுள்ளார். அதே நேரம்,  அரசன் நிலத்தைக் கொள்ளுதல், நிலையாக வைத்துக் கொள்ளல் போன்ற அறமற்ற செயல்களையே அருத்தசாத்திரம் கூறுகிறது. நீதி முறையில் பிராமணருக்கு முதன்மை அளித்து வருண வேறுபாட்டு அடிப்படையிலான நீதி முறையையே அது கூறுகிறது.

எட்டாம் கட்டுரை அறவியலில் திருக்குறளின் சிறப்பையும் திருக்குறளைக் கையாண்டுள்ள சுக்கிர நீதியின் பகுதிகளையும் திருக்குறளுக்கு மாறாகச் சாதிவழிபட்ட சுக்கிரநீதியின் கருத்துகளையும் எடுத்துரைக்கிறது.

“மனுநீதி, சுக்கிர நீதி, கெளடலியம் ஆகிய மூன்று சமற்கிருத நூல்களில் அறவிலக்கியம் என்ற முறையில் சுக்கிரநீதி உயர்ந்தது என்று சமற்கிருத அறிஞர்கள் கருதுவர். அதுவே திருக்குறளுக்கு மிகையாகக் கடன்பட்டிருப்பது உண்மை. ஏனைய இரண்டும் வருணப் பாகுபாட்டைப் போற்றும் அளவிற்குச் சுக்கிர நீதி போற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் இம்மூன்றும் திருக்குறளைப்போல் மனித வாழ்க்கையைக் கால, இட,நிற, இன, மொழி வேறுபாடின்றி நோக்கும் முயற்சியை மேற்கொள்ளவில்லை யென்பதோடு மிகக் குறுகிய மனப்பான்மையைக் கொண்டாரால் தொகுக்கப்பட்டவை யென்பதும் நம்மவர் அறியற்பாலது”  என ஆய்வு முடிவாகப் பேரா.ப.மருதநாயகம் தெரிவிக்கிறார்.

பிராகிருதத்தில் காணப்பெறும் தமிழ் அகமரபை  எடுத்தியம்பி அகநானூறு, காதாசப்தசதி ஆகியவற்றை ஒப்பிட்டு அடுத்த கட்டுரையை எட்டாவதாக அளித்துள்ளார். தமிழுக்கு மூலங்கள் சமற்கிருத நூல்களே என்னும் ஆரியப்பொய்யைத் தழுவி, கே.எசு.சீனிவாசன் என்பாரும் நா.செயராமன் என்பாரும் இவ்விரு நூல்களையும் ஒப்பிட்டுத் தவறான கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளனர். இதனைச் சுட்டிக்காட்டும் பேரா.ப.மருதநாயகம்,  “வடமொழியாளர்கள் சிலர் சங்க அகப்பாடல்களின் தனித்தன்மையை அறியாது அல்லது அறிந்தும் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு காதாசப்தசதியே மூல இலக்கியம் எனப் பிதற்றுவதில் பொருள் இல்லை என்பதை வலியுறுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு” எனப் பேரா.வ.செயதேவன் அறிவித்த ஆய்வு முடிவையும் நமக்கு உணர்த்துகிறார்.

சில கவிதைக் கூறுகள் தமிழ்ச்சங்க இலக்கியங்களிலிருந்து மகாராட்டிரி பிராகிருதம் வழியாகச் சமற்கிருத இலக்கியங்களுக்குச் சென்றிருக்கின்றன எனச் சமற்கிருத அறிஞர்கள் கூறியதைச் சான்றுகளுடன் விளக்குகிறார். சீகுபிரைடு இலியன் ஆருடு (Siegfried Lienhard)பலதரமான கவிதை உத்திகள் தமிழிலிருந்து சமற்கிருதம் பெற்றுள்ளதை நிறுவியுள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 34/ 69 )