(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 38/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

39/ 69

‘பக்தி இயக்கமும் தமிழ்க்கவிதை வளர்ச்சியும்'(2015) (தொடர்ச்சி)

தென்னிந்திய நாட்டுப்புறப்பாடல்களைத் தொகுத்தளித்த சாருலசு கோவர்(Charles Gover) சங்கரரின் அத்துவைதத் தத்துவத்தின் மூலங்கள் தமிழ்நாட்டுப்புறப்பாடல்களில் காணக்கிடக்கின்றன; அத்துவைதத் தத்துவத்தின் அடிக்கருத்துகள் திராவிடத் தொல்குடியினருக்கு உரியவை; தமிழ்ப்பாடல்கள் பலவற்றைச் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்து வைத்துக் கொண்டு அவையே மூலமென்று சொல்லும் வடமொழிச்சார்பாளர்கள் உண்டு; அவர்களே திருமூலரின் திருமந்திரம் போன்ற நூல்களில் இடைச் செருகல்களைப் புகுத்தி அவற்றின் மூலக்கருத்துகளுக்கு நேரெதிரான கொள்கைகளை அவை பேசுமாறு செய்தனர் என்பனபோன்ற ஆய்வுமுடிவுகளை ஆதாரங்களுடன் அறிவுறுத்துவார். முதலான பல கருத்துகளைத் கோவர் வாயிலாகப் பேரா.ப.ம.நா.எடுத்துரைக்கிறார். ஆதி சங்கரர் எழுதியதாகக் கருதப்பெறும் செளந்தர்யலகரியில் உள்ள பழந்தமிழ் இலக்கியங்களி்ன் செல்வாக்கைப் பலசங்கப்பாடல்களை எடுத்தாண்டு திறமாக விளக்குகிறார் பேரா.ப.ம.நா. இந்நூல் உருவாக்கத்திற்காகக் காரைக்காலம்மையாருக்கும் அவர் கடன்பட்டிருப்பதையும் விளக்குகிறார். தாய்மொழியாம் தமிழும் அதன் தலைசிறந்த இலக்கியங்களும் ஆதிசங்கரரின் படைப்புகளில் இயல்பான தவிர்க்க முடியாத தாக்கத்தை விளைவிததிருப்பதை நன்கு உணரலாம். 

தேவாரமும் தியாகராசரும்’ என்னும் பதினான்காவது கட்டுரை தமிழகத்தில் வாழ்ந்த தியாராசர் தெலுங்கில் எழுதியிருந்தாலும் தான் வாழ்ந்த தமிழ்நாட்டின் இலக்கியச்செல்வாக்கிலேயே அவற்றைப் படைத்துள்ளார் என்பதை வலியுறுத்துகிறது.

தியாகராசரின் கீர்த்தனைகளில் காணப்பெறும் கற்பனை வளம்,அறக்கருத்துகள், கோட்பாட்டு வரையறைகள் உபநிடத உண்மைகள், போலி வேடத்தையும் தவறான போக்கையும் கண்டித்தல், அருமையான உவமைகள், பொதுமக்களிடையே வழங்கும் பழமொழிகள், ஆன்மிகத் துய்ப்பு, புலன் இன்பங்களையும் செல்வந்தரையும் அளவின்றிப்புகழ்தலை வெறுத்தல்,   இறைவனைப் பழிப்பதுபோல் புகழ்தல் முதலான மிகுதியான கூறுகளின் மூலம் தேவாரம், ஆழ்வார் பாடலகள் ஆகியவையே! ஆனால், இவ்வுண்மையைத் தியாகராசரின் ஆன்மிகச் செல்வ மரபு(The Spiritual Heritage of Thyagaraja) என்னும் நூலுக்கு நீண்ட ஆய்வு முன்னுரை அளித்த சமற்கிருதப் பேராசிரியர் வி.இராகவன் எக்காரணம்பற்றியோ எடுத்துரைக்கவில்லை..

அறிஞர் அருணாசலம் ஆய்ந்து கூறுவதுபோல் தியாகராசர் தமிழிசை மரபிற்குப் பெரிதும் கடன்பட்டிருப்பவர்; இறைவனைக் காதலனாகவும் தன்னைக் காதலியாகவும் கருதிப்பாடும் நாயக-நாயகி அகமரபுப் பாடல்களைத் தேவாரம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலிருந்து தழுவியுள்ளார்; அப்பரையும் மணிவாசகரையும் பிறரையும் பின்பற்றித் தியாகராசர் பள்ளியெழுச்சி பாடுகிறார்; இறைவனுடைய அடியார்களை இறைவனாகவே போற்றும் மரபைப் பத்தி இலக்கியக்கப் பாடல்களில் இருந்து பின்பற்றியுள்ளார்; இத்தகைய உண்மைகளை, மூலப்பாடல்களையும் தழுவல்பாடல்களையும் ஒப்பிட்டுச்சிறப்பாகப் பேரா.ப.ம.நா.விளக்கியுள்ளார்.

வாழையடி வாழை: வள்ளலாரும் பாரதியும்‘ என்னும் 15ஆவது கட்டுரையில் பாரதியை உருவாக்கியதில் தலைமையிடம் பெறத் தக்கவர் இராமலிங்க அடிகளாரே என மெய்ப்பிக்கிறார்.

எளிய நடை, இனிய சந்தம், புதிய பாடுபொருள்கள், பல்வேறுபட்ட பா வகைகள், நாட்டார் வழக்காற்றைப் பயன்படுத்திக் கொள்ளல், பேச்சுத் தமிழிலிருந்து வேண்டிய சொற்களை எடுத்துக் கொண்டு தக்க இடத்தில் பயன்படுத்திக் கவிதைக்கு உயிரூட்டல் ஆகியவற்றிற்கெல்லாம் பாரதிக்கும் அவரது வழித் தோன்றல்களுக்கும் முன்னோடியாக இருந்து கல், முள்ளற்ற பெரும்பாதை அமைத்துக் கொடுத்தவர் அடிகளாரே; தடம் புரண்டு போய்க்கொண்டிருந்த தமிழ்க்கவிதை வெள்ளத்தை முதலில் மடை திருப்பியவர் வள்ளலார் ஆவார்; மரபு வழிவந்த எண்ணற்ற யாப்பு வகைகளுக்குத் தமது சொல்வளம், சொல்லாட்சித் திறன், கற்பனையாற்றல் ஆகியவற்றால் புத்துருவம் அளித்துப் பல்வேறு உணர்வுகளைத் தட்டி யெழுப்பும்  கவிதைகளை எளிய தமிழில் தந்தவரும் அவரே. வள்ளலாரிடம் இருந்து பாரதியார் சொற்களையும் தொடர்களையும் பாவினங்களையும் உத்திகளையும் பெற்றதால் அவரின் தாக்கம் பாரதி பாடல்களில் ஆழ்ந்து விரிந்து பரவியிருக்கக் காணலாம். இவ்வாறு ஆய்வுரை கூறும் பேரா.ப.ம.நா. எண்ணற்ற வள்ளலாரின் பாடல்களைப் பாரதியார் பயன்படுத்தியிருப்பதை நமக்குத் தந்து இவ்வுண்மையை உரைக்கிறார்.

‘பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்’

எனத் தொடங்கும் வள்ளலாரின் திருப்பள்ளி எழுச்சி

பொழுது புலர்ந்தது யாம் செய்வதவத்தால்’

எனத் தொடங்கும் பாரதியின் பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி

வள்ளலாரின் ஆனிப்பொன்னம்பலக் காட்சியில் வரும் பல்வகை இரத்தினங்களைக் குறிக்கும் பாடல் அடி ஒற்றிப் பாரதியார் பாரதமாதா நவரத்தினமாலை தந்துள்ளார்.

ஒப்பீட்டுப்பாடல்கள் மூலம், வள்ளலாரின் சொற்கள், சொற்றொடர்கள், கருத்துகள் முதலியவற்றில் மயங்கிய பாரதியார் தாமும் அவற்றைப் பயன்படுத்தியுள்ளதைப் பாங்குற விளக்கியுள்ளார்.

பிற்கால இலக்கியங்களில் திருமுறையின் செல்வாக்கு குறித்துப் பதினாறாவது கட்டுரை பேசுகிறது.

சிவப்பிரகாசர், இராமலிங்க அடிகள், பாரதியார் ஆகியோர் தேவார, திருவாசகப் பாடல்களின் சொற்பொருள்  அமைப்பினைத் தத்தம் கவிதைகளில் ஏற்றிப் போற்றியுள்ளனர். இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவில் பன்னிரு திருமுறைகளின் சொற்பொருள் நலங்கள் எங்கும் இடம்பெற்று விளங்குவதை வெள்ளைவாரணனார் தமது திருவருட்பாச்சிந்தனை என்னும் நூலில் எடுத்துக்காட்டுகிறார்.

பக்திப்பாடல்களும் இக்காலக் கவிஞர்களும்’ என இந்நூலின் நிறைவாகப் பதினேழாவது கட்டுரை அமைந்துள்ளது.

நாளும் இசையால் தமிழ் பரப்பிய நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய பத்திப்பாடல்களில அன்னார் கையாளும் நடையியல் உத்திகளை இக்காலக்கவிஞர்களும் பின்பற்றுவதை இக்கட்டுரையில் விளக்குகிறார். மாணிக்கவாசகர் நெஞ்சிடம் கொண்ட மனமுறிவு உணர்வை வெளிப்படுத்தக் கையாளும் உத்திகள் வெற்றி பெற்றன.  இவற்றை இக்காலக் கவிஞர்கள் தமிழினத்தின் செயலற்ற தன்மையால் அடைந்த மனமுறிவு உணர்வை வெளிப்படுத்தக் கையாண்டு வெற்றி பெற்றனர் என்கிறார். இவ்வழியில் தெளிதமிழில் வெளிவந்த இலெனின் தங்கப்பாவின் ஒதுங்கல் ஏனோ தலைப்பிலான கவிதையைக் குறிப்பிடுகிறார். இதுபோல் 1965இல் வேலூர்ச்சிறையில் இருந்தபோது பெருஞ்சித்திரனார் திருப்பாவை, திருவெம்பாவை வழியில் பாடிய செந்தமிழ்ப்பாவையையும் பார்க்கலாம்.

சில பாடல்களை எடுத்துக்காட்டுகளாகக் கூறிப் பழைய பத்திப்பாடல்களில் புதிய பாடுபொருளை ஏற்றி அதற்குப் புதுமைக்கோலம் புனைவதிலும் தம் கருத்தை எடுத்துரைப்பதிலும் புலவர் வெற்றி கண்டுள்ளார் என்கிறார். 

அகப்பாடல்களிலும் பத்தி இலக்கியங்களிலும் பயின்றுவரும் நெஞ்சொடு கிளத்தல் என்னும் தமிழ் இலக்கிய மரபின் பழைய உத்தியை இராமலிங்க அடிகளாரும் பாரதியும் பயன்படுத்திக் கொண்டனர்; பெருஞ்சித்திரனாரும் இவ்வழியில் தம் அயர்வுற்ற நெஞ்சிற்கு அறிவுரை கூறுவதுபோல் தமிழர் இழிநிலையையும் அவர் மேம்படத் தாம் செய்ய வேண்டிய பணிகளையும் பத்துப்பாடல்களில் ‘எழுவாய் நெஞ்சே’ எனும் தலைப்பில் தொகுத்துக் கூறியுள்ளார்.

நடவாய் எழுந்தே தமிழா இந்

நாளே எழுக எழுகவே!

எனப் பள்ளி எழுச்சிப்பாடுவதையும் அறியலாம்.

சங்கப்பாடல்கள் வழியில் பத்தி இலக்கியம் அமைந்ததையும் பத்தி இலக்கிய வழியில் பிந்தைய இலக்கியங்கள் அமைந்ததையும் இந்நூலில் இவ்வாறு பேரா.ப.ம.நா. விளக்கியுள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 40/ 69)