(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 34/ 69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
35/ 69
‘மேலை மெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம்’(2014)
என்னும் இவரது மற்றொரு நூல்(2014) பிற நாட்டு அறிஞர்களுடன் ஒப்பிட்டுத் திருவள்ளுவரின் பெருமைகளை வெளிக்கொணரும் இலக்கியமாகும்.
மேலைநாட்டு நூல்களுடன் திருக்குறளை ஒப்பிட்டு நூல்கள் வந்துள்ளன. ஆனால் ஒப்புமை மட்டுமல்ல அந்நூல்களில் திருவள்ளுவரின் திருக்குறள் தாக்கம் உள்ளது என்பதை ஆராய்ந்து இந்நூலில் இவர் புலப்படுத்தி யுள்ளார்.
உரேமானிய மெய்யியல் அறிஞர் செனகா, தமது கட்டுரை ஒன்றில் திருவள்ளுவர் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இதனை பிரான்சுவா குரோ எழுதிய நூலில் கண்ட அறிஞர் ப.மருதநாயகம் செனகாவின் கட்டுரைகளைப் படித்து அவற்றில் வள்ளுவத்தின் தாக்கம் இருப்பதைக் கண்டறிந்துள்ளார். அதன் விரிவான ‘வள்ளுவரும் செனகாவும்’ என்னும் கட்டுரை இந்நூலில் இடம் பெற்றுள்ளது. செனகாவின் மடல்கள், கட்டுரைகள் வாயிலாகவும் வள்ளுவரும் மார்க்கசு அலேசியசும் என்னும் கட்டுரை மூலமாகவும் அவர்களை ஆட்கொண்ட நூற்றுக்கணக்கான திருக்குறள்களை எடுத்தாண்டு, சிறந்த ஒப்பாய்வை நமக்கு அளித்துள்ளார்.
தமிழ் நூற்கருத்துகளைத் திருடிக் கொண்டு சமற்கிருத நூல்களை உருவாக்கித் தமிழின் தொன்மையைப் பின்னுக்குத் தள்ளும் சூழ்ச்சியை எதிர்க்கவே பெரும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இந்நூலில் எண்ணற்ற மேற்கோள்களையும் ஒப்புமைக் கருத்துகளையும் தந்து, மேலை மெய்யியலுக்கு வள்ளுவம் காட்டும் சிறப்பானவழிகாட்டுதல்களை நமக்கு அளித்துள்ளார். இவை எல்லாம் பாடநூல்களில் இடம் பெற வேண்டும். வள்ளுவத்தின் சிறப்பையும் தமிழ்நெறியின் உயர்வையும் நம்மவர் உணரச் செய்ய வேண்டும்.
ஆங்கில இலக்கியங்களைப் படிக்கும் பொழுது அவற்றின் சிறப்புகளைவிடத் தமிழ் இலக்கியச்சிறப்புகளே இவர் கண்முன் நிழலாடுகிறது. மேலை ஆய்வாளர்களின் கண்கள் கொண்டு தமிழ்க்கவிஞர்களைப் பார்த்து ஒப்பியல் நோக்கில் கட்டுரைகளைப் படைத்துள்ளார். எனவே, சிறந்த ஒப்பிலக்கியக்கட்டுரைகள் மலர்ந்துள்ளன. இலக்கிய ஆய்வின் கலங்கரை விளக்கமாக அறிஞர் ப.மருதநாயகத்தைக் கவிஞர் சிற்பி போற்றுவது முக்காலும் உண்மை என்பதை இவரின் நூல்கள் மூலம் நாமறியலாம்.
‘ஒப்பில் வள்ளுவம்’ (2018)
விரிவாக்க மறுபதிப்பு நூல். இரு தொகுதிகளை உடையது. முதல் தொகுதியில் 15 கட்டுரைகளும் இரண்டாம் தொகுதியில் 6 கட்டுரைகளும் உள்ளன. மேலைநாட்டு அறிஞர்களான பிளேட்டோ, அரிசுட்டாடில், மார்க்கசு அரேலியசு, தாந்தே, மாக்கியவெல்லி, சுபினோசா முதலானோர்களுடன் ஒப்பிட்டுத் திருவள்ளுவரின் சிறப்புகளைப் புலப்படுத்தி உள்ளார். திருக்குறளை இந்திய நூல்களான தம்மபதம், மனுநூல், கெளடலீயம், சுக்கிர நீதி, பகவத்து கீதை,காமசூத்திரம் முதலியவற்றுடன் ஒப்பிட்டு ஒப்பிலா நூலாகத் திருக்குறள் அமைந்துள்ளதை விளக்கியுள்ளார். இரண்டாம் தொகுதியில் திருவள்ளுவரைப்பற்றிய செனகா குறிப்பு, எல்லீசர், அயோத்திதாசர், விபுலானந்தர், தெ.பொ.மீ., மு.வ. போன்றோரின் திருக்குறள் விளக்கங்கள், பிரான்சில் திருக்குறள் செல்வாக்கு ஆகியனபற்றி ஆழமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது பிற நாட்டார் அறிந்த அளவிற்குக்கூட நாம் திருவள்ளுவரின் சிறப்புகளை அறியவில்லை யென்பது புலனாகின்றது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 36/ 69)
No comments:
Post a Comment