(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 35/ 69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
36/ 69
பக்தி இயக்கமும் தமிழ்க்கவிதை வளர்ச்சியும்(2015)
இந்நூலில் முன்னுரையையும் 17 கட்டுரைகளையும் அளித்துள்ளார்.
பன்னிரு திருமுறையும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும் பத்திப்பாடல்களாக மட்டுமல்லாமல் உலகத்தரம் வாய்ந்த படை்பிலக்கியங்களாகவும் பண்பாட்டுப் பெட்டகங்களாகவும் சீரிய இறையியல் கொள்கைகளை உள்ளடக்கியவையாகவும் முன்னிறுத்தப்பட வேண்டியவை என்பதை இந்நூலில் விளக்குகிறார். (பற்று> பற்றி> பத்தி> பக்தி; ‘ற்ற’, ‘த்த’ என மாறுவதற்கான எ.கா. வெற்றுவேட்டு < வெத்து வேட்டு; முற்றம் > முத்தம்)
பத்தி இலக்கியத்தின் மூலவேர்கள் எனச் சங்கக்காலத்து இலக்கியங்களைக் குறிப்பிட்டு முதல் கட்டுரை விளக்கம் தருகிறது. “பத்தி இலக்கியம் தமிழகத்தின் தென்பகுதியில் தோன்றி இந்தியத்துணைக்கண்டம் முழுவதும்பரவியது” என்னும் முன்னோர் கருத்துகளை வழி மொழிகிறார் பேரா.ப.ம.நா.
இரண்டாம் கட்டுரை ‘பரிபாடல் முதல் பத்தி இலக்கியம்’ என்பது. பரிபாடலின் காலம் சங்கக்காலத்திற்குப் பிற்பட்டதென்று வேண்டுமென்றே வையாபுரியார் கூறியிருப்பார். அதற்கு மறுப்பாக அறிஞர் மா.இராசமாணிக்கனார் தமது தமிழ் மொழி இலக்கிய வரலாறு எனும் நூலில் தக்கக் காரணங்களுடன் மறுத்திருப்பார். இரண்டு தரப்பையும் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பேரா.பா.மருதநாயகம் தாமும் பல சான்றுகளை அளித்துச் சங்கக்காலத்தைச் சேர்ந்தது பரிபாடல் என நிறுவியிருப்பார்.
மூன்றாவது கட்டுரையில் குமாரசம்பவத்தில் பரிபாடலின் தாக்கம் ஆராயப்படுகிறது. ‘பத்திப்பனுவல்கள்: தெ.பொ.மீ. பார்வையில்’ என்பது நான்காவது கட்டுரை. சமற்கிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய வடமொழிகளில் எழுதப்பட்ட நூல்கள் தமிழில் பெருகின. ஆனால் இவை வறட்டு வாதமாக மக்களிடமிருந்து விலகி இருந்தன. இந்த வறட்டு வாதம் எதற்கு என ஞானசம்பந்தர் வினா எழுப்பினார். எனவே, தமிழால் இறை இலக்கியத்தைப் பரப்பினர் எனப் பேரா.ப.மருதநாயகம் விளக்குகிறார்.
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் எழுதிய நூலின் பெயர் ஆசாரிய இருதயம். மந்திரம் என்பது சமற்கிருதச்சொல் என்ற அடிப்படையிலான தவறான வாதங்களுக்கு மறுப்பு வாதங்கள் உள்ளன; ஞானசம்பந்தர் வடசொல்லும் தமிழ்ச்சொல்லும் கலந்து எழுதும் நடையைக் கண்டிக்கிறார் என இறை இலக்கியப் புலவர்கள் தனித்தமிழ் நடையையே வலியுறுத்தினர், தமிழ் மந்திரத்தையே பயன்படுத்தினர். தெ.பொ.மீ. நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் சிறப்புகளை வெவ்வேறு கட்டுரைகளில் குறிப்பிடுவதை இக்கட்டுரையில் விளக்குகிறார். கடவுளை அடையும் நெறிகளில் பாடல் நெறியும் ஒன்று என அவர் குறிப்பிடுதலையும் விளக்குகிறார்.
தமிழகப் பார்ப்பனர்கள் தாய்லாந்துவரை பரவி இருந்தனர்; சயாமில் நடைபெற்ற அரசியல் சடங்குகளில் இவர்கள் தமிழ் மந்திரத்தையும் பாலி, தாய்லாந்து மொழியையும் பன்படுத்தினர் என்கிறார் அறிஞர் வேல்சு. அஃதாவது சமற்கிருதம் ஓதப்படவில்லை. இவற்றுக்கான சான்றுகளையும் நுட்பமன விளக்கங்களையும் தெ.பொ.மீ. தருவதை ப.ம.நா. எடுத்துரைக்கிறார். தமிழ் மந்திரங்களே அங்கு ஓதப்பட்டன என்னும் அறிஞர் வேல்சு கருத்தை வலியுறுத்தும் வகையில், திருப்பாவை, திருவெம்பாவாய், ஏலோர் எம்பாவாய் என்பனச் சிதைந்து தாய்லாந்து மந்திரங்களாக விளங்குவதைத் தெ.பொ.மீ. உறுதி செய்துள்ளார். தமிழர் பண்பாடு கீழை நாடுகளில் பரவியதன் காரணம் அவர்களின் அன்புநெறியே எனத் தெ.பொ.மீ. விளக்குவார்.
பெண்களுக்கு எவ்வகை உரிமையும் இல்லை, வீடுபேறும் இல்லை எனச் சிலர் கூறிவந்த காலத்தே பெண்கள் வீடுபேற்றிற்கும் உரியவர், எல்லா வகை உரிமைகளுக்கும் உரியவர் என மாணிக்கவாசகர் அறிவுறுத்தியதைத் தெ.பொ.மீ. சுட்டுவார்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 37/ 69)
No comments:
Post a Comment