Friday, October 21, 2016

மறக்க முடியுமா? – கவிஞர் குயிலன் : எழில்.இளங்கோவன்

தலைப்பு-மறக்கமுடியுமா, குயிலன், எழில்.இளங்கோவன் ; thalaippu_markkamudiyuma_kuyilanezhililangovan

மறக்க முடியுமா? – கவிஞர் குயிலன்


அறிஞர்களுள் பன்மொழிப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். கவிஞர்களுள் அப்படி இருந்திருக்கிறார்களா?
கவிஞர் குயிலனைத் தவிர, வேறுயாரும் பன்மொழிப் புலமைக் கவிஞர்களாக இருந்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற கவிஞர் குயிலன் படித்தது, ஆறாம் வகுப்பு மட்டுமே.
இராமநாதபுரம் மாவட்டம் பூசேரி என்ற சிற்றூரில் குருமூர்த்தி (பிள்ளை)-வெயில் உவந்தம்மாள் இணையரின் மகனாகப் பிறந்த கு.இராமலிங்கம்தான் பின்னாளில் கவிஞர் குயிலனாக மாறுகிறார்.
1939இல் பருமாவில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் போதே எழுத்தில் நாட்டம் கொண்டிருந்தார் குயிலன்.
அவரின் தமிழக வருகைக்குப்பின் வ.ராவின் ‘பாரத தேவி’ இதழில் ‘காக்கை மனிதனைப்பார்த்து கேலி செய்யும்’ என்று ஒரு கவிதை எழுதினார். இதுவே இவரின் முதல் கவிதை.
 1947இல் ‘செங்குமுதம்’ எனும் இவரின் குறுங்காப்பியம் இவரைக் குயிலனாக அறிமுகம் செய்தது.
எமிலி  சோலோ எழுதிய ‘தெரசா’, பி.எசு.பெக்சன் எழுதிய ‘தி பேன்ட் மைன்ட்’ ஆகிய ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தார் குயிலன். சமற்கிருதத்தில் எழுதப் பெற்றிருந்த ‘விவேக சூடாமணி’ என்ற நூலைத் தமிழில் கவிதை நூலாக மொழிபெயர்த்தார்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இவரின் எழுத்தாக்கங்களும், மொழி பெயர்ப்பும், குறிப்பிடத்தக்கன. குறிப்பாக இம்மொழித் திரைப்படங்களின் உரை யாடல்களைத் தமிழ் மொழி மாற்றாகப் பல படங்களுக்கு இவர் எழுதியிருக்கிறார். 17 படங்களில் 52 பாடல்களை எழுதியுள்ளார்.
56 உரைநடை நூல்கள், 9 புதினங்கள், 7 கவிதை நூல்கள், 2 நாடகங்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள், “தமிழும் மலையாளமும்”, “தமிழும் கன்னடமும்” ஆகிய இரு நூல்கள் என இவர் எழுதிய நூல்கள் 116. இதில் மொழிபெயர்ப்புகளும் அடங்கும்.
 தொடக்கத்தில் இவர் பேராயக்கட்சி(காங்கிரசு)க்காரர். பிறகு பொதுவுடைமையாளராக மாறித், தன்னைக் கட்சிப்பணியில் இணைத்துக் கொண்டார்.
தொடக்கத்தில் நாமக்கல் கவிஞர் வே.இராமலிங்கம் பரிந்துரையின் அடிப்படையில், பேராயக்கட்சி (காங்கிரசு)க்காரரான சின்ன அண்ணாமலையின் தமிழ்ப் பண்ணையில், அதன் வெளியீடாக வெளி வந்த ‘மாலதி’ என்ற வார இதழின் ஆசிரியர் ஆனார்.
இவர் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்த பின், 1948இல் ‘தென்றல்’ என்ற இதழைப் பொதுவுடைமைக் கொள்கை தாங்கிய இதழாகத் தொடங்கினார்.
அந்தக் காலக்கட்டத்தில் பொதுவுடைமைக் கட்சிக்கு அரசு தடைவிதித்து,  சனசக்தி அலுவலகம் மூடிமுத்திரையிடப்பட்டது.
பொதுவுடைமைத் தலைவர்கள் தலைமறைவனார்கள். அந்தச் சமயம் ‘முன்னணி’ என்ற அரசியல் வார இதழைத் தொடங்கினார் குயிலன்.
தலைமறைவாக இருந்த தலைவர்களுக்கு இந்த இதழ் ஒரு தொடர்பு இதழாக அமைந்தது. இந்த முன்னணி இதழில் குயிலனுடன் இணைந்து பணியாற்றியவர் கவிஞர் தமிழ்ஒளி.
ஒருமுறை தேர்தலை எதிர்த்து ஒரு தலையங்கம் எழுதினார் குயிலன். அதன் தலைப்பு, “மஞ்சள் பெட்டியில் மண்ணைப் போடுங்கள்”.
இஃது ஆட்சியாளர்களின் கோபத்தைக் கிளறியது. கைது செய்யத் தேடப்பட்டார் கவிஞர். அவரோ தலைமறைவாகிப்போனார்.
ஆனாலும் பிறகு கைது செய்யப்பட்ட அவர் மூன்று மாதங்கள் விசாரணைக் கைதியாகச் சிறையில் இருந்தார்.
அப்போது அவருக்காக வாதாடிய வழக்கறிஞர், தோழர் கிருட்டிணமூர்த்தி. இவர் ஒரு தொழிற்சங்கவாதி மட்டுமல்ல, சென்னை மாநகரத்தலைவராகவும் இருந்தவர் என்பது குறிக்கத்தக்கது.
இப்படிக் குயிலன் தலைமறைவாக இருந்த போது இவருடன் தலைமறைவாக இருந்த தலைவர்கள் கே.பாலதண்டாயுதம், எம்.கல்யாணசுந்தரம், ஐ.மாயாண்டி பாரதி ஆகியோர் என்பது குறிக்கத்தக்கது.
பின் வந்த காலங்களில் முகவை இராசமாணிக்கம், கவிஞர் தமிழ்ஒளி ஆகியோருடன் இணைந்து “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்” அமைத்தார்.
  1946இல் ‘இலக்கியமன்றம்’ 1952 இல் ‘வாரம்’ இதழ் ஆசிரியர், 1961-இல் ‘குயிலன் பதிப்பகம்’ என்று குயிலனின் எழுத்துப்பணி தொடர்ந்தது.
தமிழகக் ‘காங்கிரசு’ அமைச்சரவையின் கல்வி அமைச்சர் பக்தவச்சலம் எதிரிலேயே ‘காங்கிரசை’ எதிர்த்து, விமரிசித்துக் கவிதை பாடியவர் குயிலன்.
அறிஞர் அண்ணாவின் ‘திராவிடநாடு’ இதழில் குயிலனின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. குயிலனின் கவிதைகளைக் ‘காங்கிரசுக்கு’ எதிராக மேற்கோள் காட்டி அண்ணா பேசியிருக்கிறார்.
ஒலியும் வரியும் மொழியும்” என்ற தன் நூலைத், தந்தை பெரியாருக்குக் காணிக்கை ஆக்கிய கவிஞர் குயிலன், ஆவணி 30, 1953 / 1922 ஆம் ஆண்டு செட்டம்பர் 14 அன்று பிறந்தார். கார்த்திகை 23, 2033 / 2002ஆம் ஆண்டு திசம்பர் 8 அன்று மறைந்தார்.
புதுத்தமிழ்க் கவிமலர்கள்” என்ற நூல்தொகுப்பில் இருந்து அவரின் ஒரு கவிதை :
வீர சுதந்திர நாட்டை – -ஆளும்
வீண்வெறி கொண்ட அரக்கன்
போரிட்டு மக்கள் இரத்தம் – -மிகப்
பொங்கி வழிந்திடச் செய்து
வானமெலாம் வெறும் இரத்தம் – மலை
வாவியெலாம் வெறும் இரத்தம்
ஈன இருளிடம் தோற்று -ஒளி
எங்கு மறைந்தது காணோம்?
காரிருள் போக்கிட வேண்டி – வீதிக்
கம்பங்கள் மீதிட்ட தீபம்
பேரடி மைமிகு நாட்டில் – எழப்
பெற்றது சுயேச்சையின் எண்ணம்
அடக்கு முறையென்ற காற்று – அதை
அணைக்க முயன்றது பாவம்
நடக்கும் அதன் செயல் அப்போ – மறு
நாளில் உதித்திடும் சூரியன்
– கவிதையின் தலைப்பு ‘இருளும் ஒளியும்’.

எழில்.இளங்கோவன் ; ezhililangovan
எழில்.இளங்கோவன்
கருஞ்சட்டைத் தமிழர் – ஆகத்து 1 – 2016
karunchattai-thamizhar01

Wednesday, October 12, 2016

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙி] – இலக்குவனார் திருவள்ளுவன்




முன் அட்டை -தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், திரு ; mun-attai_poaraali_ilakkuvanar_ila-thiru
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

 [ஙி] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடக்கம்
 பேராசிரியர் தந்தை மு.சிங்காரவேலர் பத்து மா நிலங்களும் கறவை மாடுகளும் உழவு மாடுகளும் மளிகைக்கடையும் உடைய செல்வத்தில் திளைத்தவரே. தாய் அ.இரத்தினம்மாள் நாட்டாண்மைப் பெருமை பெற்றிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவரே. இரு வாசல் இருப்பின் செல்வச் செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்ட அக்காலத்தில் அத்தகைய இரு வாசல் உடைய மிகச் சில வீடுகளில் இவர்களின் வீடும் ஒன்று. என்ன இருந்து என்ன? தந்தையின் இழப்பால் எல்லாம் இழந்த நிலைக்கு ஆளாயினர். இதனை அறிந்தால்தான், பேராசிரியர் எத்தகைய சூழலில் தமிழ்நலன்நாடும் போராளியாக வாழ்ந்துள்ளார் என்பதை நாம் உணர முடியும்.
 கவி வல்ல முத்து அவர்களின் மகனான சிங்காரவேலர் பேராசிரியரையும் அவரின் தமையனான நல்லபெருமாளையும் கல்வியில் உயர்நிலை யடையச் செய்ய வேண்டும் என எண்ணிக் கல்வி வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். தொடக்கத்தில் வீட்டிலேயே ஆசிரியர் ஒருவரை வரவழைத்துக் கற்பிக்கச்செய்தார். பிற பிள்ளைகளும் இங்கே வந்து கற்றுக்கொண்டனர். அவருக்கு ஒவ்வொரு வேளை ஒவ்வொரு வீட்டில் உணவு எனத் திட்டமிட்டபடி உணவு கிடைக்கவில்லை என   வேறிடம் சென்று விட்டார். அதனால் பக்கத்து ஊரான பஞ்சநதிக்குளத்தில் உள்ள சுப்பையாவாத்தியார் என்பவர் வந்து நடத்திய திண்ணைப் பள்ளிக்கூடம் சென்று பயின்றார். நன்றாகக் கற்பிக்கப்பட்டாலும் இத் திண்ணைப்பள்ளிக்கூடமும் நிலைக்கவில்லை. பின்னர் வைத்தியலிங்க(த் தேவ)ர், சீனுவாச(த்தேவ)ர் ஆகியோர் வீட்டுத் திண்ணைகளில் நடைபெற்ற பள்ளிக்கூடம் சென்று பயின்றார். இவர் தந்தையாரைப் போன்று பிள்ளைகளைக் கல்வியில் வல்லவர்களாக ஆக்குவதில் நாட்டம் கொண்ட கு.சி.அமிர்தலிங்க(த் தேவ)ர் என்பவர் தம் வீட்டையொட்டியே பள்ளிக்கூடம் ஒன்று அமைத்தார். அங்கு ஆசிரியர் கண்ணுசாமி(பிள்ளை) அனைவருக்கும் பாடங்கள் கற்பித்தார். இங்கே பேராசிரியர் தம் 7 ஆம் அகவைக்குள்ளாகவே ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நீதிசாரம், கிருட்டிணன் தூது, நிகண்டுகள், கீழ்வாய் இலக்கம், மேல்வாய்இலக்கம், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என அனைத்தும் கற்றார். மாலையில் விளையாட்டு, இரவில் நாடகப்பயிற்சி, கலைநிகழ்ச்சிகள், வழிபாட்டுப் பாடல் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்பட்டமையால் முழுமையான கல்வியாக இப்படிப்பு அமைந்தது எனலாம்.
 ஆனால், பிள்ளைகள் தொடக்கக்கல்வி பயிலும் சிறு பருவத்திலேயே, மார்கழித்திங்கள் ஒன்றில், திருவிழா ஒன்றிற்குச் சென்ற தந்தையார் – பிள்ளைகள் பிற குழந்தைகள்போல் தின்பண்டங்கள் கேட்காமல் புத்தகங்கள் கேட்டதால் மகிழ்ந்து, கேட்ட புத்தகங்களை வாங்கி வந்த தந்தையார் – உடனே வயிற்றுப் போக்கு(காலரா) நோயையும் அல்லவா காசில்லாமலே வாங்கி வந்து விட்டார். போதிய மருத்துவ உதவி இல்லாமல் அல்லலுற்ற அக்காலச்சூழல், இளமையிலேயே தந்தையாரின் உயிரைப் பறிக்க வழி வகுத்து விட்டது; மருத்துவர் வந்தும் காலம் கடந்த நிலையால் அன்பு மனைவியையும் அருமை மக்களையும் தவிக்க விட்டு இயற்கை எய்தினார். குடும்பத் தலைவரை இழந்தபின் குடும்பம் மாலுமி இல்லாத கப்பல்போல் தடுமாறத்தானே செய்யும். கடன்பெற்றோர் திருப்பித் தராததாலும் மளிகைக்கடைக்கு வரவேண்டிய வருவாய் நின்று போனதாலும் அன்றாடக் குடும்பச் செலவிற்கு மாறி மாறி மாடுகள், உடைமைமாற்றம் ஆயின. வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் தடைகளை உடைக்கக் கடன்;  கடன்சுமையில் இருந்து தப்பிக்க ஒவ்வொரு நிலமாக விற்பனை என நிலப்பரப்பும் சுருங்கியது. கூலிக்குப் போதிய ஆட்கள் அமர்த்த இயலாமையால், பேராசிரியரே களையெடுத்து, நாற்று நட்டு, அறுவடை செய்து, அனைத்து உழவு வேலைகளையும் சிறு அகவையிலேயே பார்த்துள்ளார். எனினும்  உழுவதற்கு உரிய மூத்தோர் இன்றி நிலமகளும் புறக்கணிக்க வறுமை ஆட்கொண்டது. இருப்பினும் தாயாரின் பேரார்வமும் பேராசிரியரின் கல்வி நாட்டமும் நின்று போன பள்ளி வாழ்க்கையைத் தொடரச் செய்தது. தந்தையார் இருந்தவரை கட்டணம் செலுத்திப் பயின்றவர் தமையனுடன் சேர்ந்து வாய்மேட்டுக்கடைத் தெருவில் தொடங்கப்பட்ட அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பில் சேர்ந்தார்.
  தமையனார் ஓராண்டிலேயே படிப்பை நிறுத்திக் கொண்டாலும் பேராசிரியர் கல்வியைத் தொடர்ந்தார். தலைமை ஆசிரியர்    சோம சுந்தரம்(பிள்ளை) அவர்களின் இனிய பண்பும் அன்பும் மாணவர்களைக் கவர்ந்தன. ஆசிரியர் வீரபுரம் குமாரசாமி நகர்ப்புற மாணவர்கள் போல் தோற்றப்பொலிவான உடைஒழுங்கையும் மிடுக்கான நடையையும்  ஏற்படுத்தினார். இப்பள்ளிக்கு வந்த கல்விக்கூடக் கண்காணிப்பாளர் ஒருவர்,
 “மகன்தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
 என்நோற்றான் கொல்லெனும்சொல்”
 என்னும் திருக்குறளை விளக்கி ஆற்றிய உரை பேராசிரியரின் இளம் உள்ளத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. சிறந்த சொற்பொழிவாளராக வேண்டும்; உலகம் போற்றும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்னும் உயர்வான எண்ணத்தை விதைத்தது; எண்ணிய எண்ணியாங்கு எய்தும் முயற்சியில் ஈடுபடச் செய்தது.
 ஆனால், ஐந்தாம் வகுப்பு முடிந்த பின்னர் மீண்டும் சிக்கல். கல்விக்கு முற்றுப்பள்ளி இட்டுக் குடும்பச் சுமையைத் தமையனுடன் பகிர்ந்துகொள்ளும் நிலை. கல்விக்கு ஏற்பட்ட முற்றுப்புள்ளியைத் தொடர்புள்ளியாக மாற்ற வேண்டும் என்பது பேராசிரியரின் பேரவா. அன்னையாருக்கும், மூத்தவன்தான் குடும்பச்சுமையை ஏற்றுப் படிப்பை இழந்தான் என்றால் இளையவனும்  இழக்க வேண்டுமா என்ற எண்ணம்; தன் கணவர் எண்ணத்திற்கேற்ப இளைய மகனாவது கல்வியில் உயர    வேண்டும் என்ற தளராத ஆசை.
 குடும்ப வருவாய்க்காகத் தமையன் மளிகைக்கடை நடத்தவும் பண்ணையாளை நீக்கிவிட்டமையால், இவர் மாடுமேய்க்கும் பணியில் ஈடுபடவும் வேண்டியதாயிற்று. நன்கு படிக்கும் இவர் மாடுமேய்த்தது கண்டு, ‘ஐந்தாம் வகுப்பு முடித்துவிட்டு மாடு மேய்க்கின்றானே’ என்ற வருத்த உரைகள் ஊராரிடம் ஏற்பட்டன; கல்வியால் உயரவேண்டியவன் கழனியில் உழல்கின்றானே என ஆசிரியர்களுக்கும் வருத்தம்.
 “யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
 சாந்துணையும் கல்லாத வாறு”
 என்கிறார் அல்லவா தெய்வப்புலவர் திருவள்ளுவர். தெய்வப்புலவரால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவர் நெறியை வாழ்நாள் முழுவதும் பின்பற்றிப் பரப்பிய பேராசிரியர் தொடக்கத்திலேயே தொடர்ந்து கற்க வேண்டும் என்னும் எண்ணப் பிடிப்பில் இருந்தார். பேராசிரியரின் விடாப்பிடியான எண்ணமும் மகன் கல்வியாளராக வேண்டும் என்ற அன்னையாரின் துடிப்பும் நான்காண்டுகளில் பயனை அளித்தன.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Thursday, October 06, 2016

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] – இலக்குவனார் திருவள்ளுவன்



முன் அட்டை -தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், திரு ; mun-attai_poaraali_ilakkuvanar_ila-thiru

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

[ஙா] 1.முன்னுரை – பிற்பகுதி

  தேவை உறுநருக்கு உதவுவதும் கடமை தவறுநர்க்கு இடித்துரைப்பதும் போராளியின் கடமைதானே. மாணாக்கர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் அவர் பரப்பிய தமிழுணர்வு தமிழ் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. பரப்புரைகளில் இலக்கியச் சிறப்புகளுடன் தமிழுக்கு ஏற்பட்டுள்ள தீங்கையும் காக்கும் கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உள்ளதையும் விளக்கினார் பேராசிரியர்.
தமிழ், தமிழினம், தமிழிலக்கியம் இவற்றில் ஒன்றுபோம் எனில் மற்றவும் ஒழியும்.” (பாவேந்தர் பாரதிதாசன்) என்பதையே எல்லா இடங்களிலும் தொடக்கம் முதலே வலியுறுத்தினார் பேராசிரியர்.
வண்டமிழ் நைந்திடில் எது நம்மைக் காக்கும்?” (பாவேந்தர் பாரதிதாசன்) என்பதைப் பொதுமக்களிடம் ஆழமாக விதைத்தார் பேராசிரியர்.
நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்” (பாவேந்தர் பாரதிதாசன்) என ஒவ்வொருவரும் எண்ண வேண்டும் என்பதற்கேற்ப, பேராசிரியர் செந்தமிழாய்த் திகழ்ந்தார்.
 இவ்வாறு தமிழுக்காக வாழ்ந்து தமிழாய் வாழ்ந்த பேராசிரியரின் பல்துறைப் புலமையையும் பன்முக ஆளுமையையும் தமிழ்ப்பகைக்கு எதிரான போராட்டச் செயல்பாடுகளையும் தமிழுலகம் போற்றத் தவறவில்லை. பேராசிரியரைக் குறித்த மதிப்பீடுகளே பேராசிரியரைத் தமிழுலகம் அடையாளம் தெரிந்து வணங்கியதற்குச் சான்றாகும். சான்றுக்குச் சில பார்ப்போம்.
அளப்பரிய தொண்டாற்றிய பெருமகனார்,
ஆற்றல் களஞ்சியம்,
இருபதாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள்,
இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர்,
இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர்,
இருபதாம் நூற்றாண்டு நக்கீரர்,
இலக்கணப் புலமையும் இலக்கியப் புலமையும் மிக்கவர்,
இலக்கணச் செம்மல்,
உத்தமர்,
உயர் பண்பாளர்,
உழைப்பால் உயர்ந்தவர்,
எழுத்துலகின் இளங்கோ,
எளியநடையும் புதிய நோக்கும் கொண்ட படைப்பாளர்,
குறள்நெறி பரப்பும் கொள்கைவீரர்,
குறள்நெறிக் காவலர்,
சங்கத்தமிழ் வளர்த்த சான்றோர்,
செந்தமிழ்மாமணி,
செந்தமிழ் நலம் பேணும் செல்வர்,
தமிழே மூச்சென உயிர்த்து வாழ்ந்தவர்,
தமிழர்மாண்பு பேணும் மாண்பினர்,
தமிழாக்கத் தொண்டினர்,
தமிழுலகு போற்றும் தலைவர்,
தமிழுக்காக வாழ்ந்து தமிழாய் வாழ்ந்தவர்,
தமிழுக்காக உழைத்தவர்,
தமிழுக்கும் தமிழர்க்கும் பாடுபட்டவர்,
தமிழ் வாழ்விற்காக வாழ்ந்தவர்,
தமிழ் ஞாயிறு,
தமிழ் மொழியின் தனிச்செல்வர்,
தமிழ்க் கொண்டல்,
தமிழ்க்கென வாழ்ந்து தமிழாய்ச் சிறந்தவர்,
தமிழ்க்காப்பினை இலக்காகக் கொண்டவர்,
தமிழ்த்தாயின் தவப்புதல்வன்,
தமிழை நினைந்து தம்மை மறந்தவர்,
தன்மானப் பெரும் புலவர்,
தொல்காப்பியச்செல்வர்,
தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் இரு கண்களாகக் கண்டவர்,
பண்பாட்டின் காவலர்,
பயிற்சிமொழிக்காவலர்,
பழமைக்கும் மறுமலர்ச்சிக்கும் பாலமாய் இருந்தவர்,
பழுத்த தமிழ்ப் புலமை வாய்ந்தவர்,
புலவர்சீர் பரவுவார்,
புதுமைப் பார்வை கொண்டவர்,
பைந்தமிழ் வளர்த்த ஐந்தமிழ்ப் புலவர்,
பைந்தமிழ்த்தாய் ஈன்றெடுத்த பாவலன்,
மன்பதைக்கு எடுத்துக்காட்டானவர்,
முத்தமிழ்க்காவலர்,
முத்திரை பதித்த இதழாளர்,
முதுபெரும் புலவர்
என்றும் இவை போன்று மேலும் பல்வகையாகவும் பேராசிரியரை     ஆன்றோரும் சான்றோரும் குறிப்பிடுவன பேராசிரியரின் பண்பு நலன்களுக்கும் புலமைத் திறத்திற்கும் தமிழ் நல வாழ்க்கைக்கும் எடுத்துக் காட்டாவன. பொதுவாகப் பிற அறிஞர்களைப்பற்றியும் பல்வகைப் பாராட்டுரைகள் அமைந்திருக்கலாம்; எனினும் பேராசிரியர் மக்களுக்கான அறிஞர் என்ற சிறப்பில் மிகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இவை தவிர, பேராசிரியரின் போர்க்கள வாழ்வைப் படம்பிடிப்பன போன்று அமைந்த பின்வரும் தகைமை மொழிகள் வேறு யாரையும் குறித்துச் சொல்லப்படவில்லை:
இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி,
இந்தி எதிர்ப்புப் போருக்கு மூலவர்,
எதிர்நீச்சலில் எரிகதிர் நித்திலம்,
கிளர்ச்சியாளர்,
கூண்டிலே அடைக்க முடியாத சிங்கம்,
சிறையே தவம் செய்த சீமான்,
செந்தமிழ்ப் படையின் மானச்செம்மல்,
தமிழ் இயக்கத்தின் ஆணிவேர்,
தமிழ் எழுச்சியின் உருவம்,
தமிழ் காத்தத் தானைத் தலைவர்,
தமிழ்க்காப்புத் தலைவர்
தமிழ்காக்கச் சிறை சென்றவர்,
தமிழ்த்தாய்,
தமிழ்ப்போராளி
தமிழர் தளபதி,
தமிழியக்கம்,
தமிழுக்காகத் தன் வாழ்வைப் பணயம் வைத்த அஞ்சா நெஞ்சர்,
தலைமைத் தலைவர்,
திராவிட இயக்க வெற்றிகளுக்கு வித்திட்டவர்,
புரட்சிக் கவிஞரின் தமிழ் இயக்கத்திற்குச் செயல் வடிவம் கொடுத்தவர்,
புரட்சிப் பேராசிரியர்,
புரட்சியாளர்,
போர்க்குணம் கொண்டோர்களின் வழிகாட்டி,
முத்தமிழ்ப் போர்வாள்,
மொழிக்காக வாழ்வை ஈந்த புரட்சிப்புயல்,
போர்க்குணம்கொண்டவர்,
வீரத் தமிழ்த் திருமகன்
  இவ்வாறு வெற்றியையும் தலைமையையும் புரட்சியையும் குறிப்பன புரட்சிப் போராளியாகப் பேராசிரியர் வாழ்ந்தமையை அடையாளப்படுத்துவனவே.
  இத்தகைய மொழி இனம் காத்த பெரும்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் வாழ்க்கைப் பாதையில் சிலவற்றை நாம் பார்ப்போம்.
(தொடரும்)   
– இலக்குவனார் திருவள்ளுவன்