(சங்கக்காலச் சான்றோர்கள் – 23: ந. சஞ்சீவி தொடர்ச்சி)
சங்கக்காலச் சான்றோர்கள் – 24
4. பிசிராந்தையார்
உலகின் வளர்ச்சிக்கும் வாழ்விற்கும் அடிப்படையாய் விளங்கும் உயிர் ஊற்று, அன்பு என்னும் நல்லுணர்வேயாகும். ஞாயிற்றின் ஒளியின்றேல் எவ்வாறு ஞாலம் அழிந்து ஒழிந்து நாசமாகிவிடுமோ, அவ்வாறே அன்பு என்ற உணர்வும் உயிர்கள் மாட்டு இல்லையாயின் உலகமும் உலக வாழ்வும் சீர் கெட்டுப் பாழடைந்து போதல் ஒருதலை. அதனலன்றோ வான்மறை தந்தருளிய பெரியார் வள்ளுவரும்,
என்று இயம்பல் ஆயினர்? இவ்வாறு உலக உயிர்களை நடமாடும் பிணமாக அல்லாமல், உண்மையிலேயே உயிர் படைத்த ‘நடமாடும் கோயில்’களாக விளங்கச் செய்யும் அன்பின் பெருமையைக் கூறாத நூல்கள்- கலைகள்-காவியங்கள் நானிலத்தில் உண்டோ? அவ்வன்பின் மாண்பினைப் போற்றாத கலைஞர்களும் சான்றோர்களும் வையகத்தில் உண்டோ? உலகம் தொடங்கிய நாள் தொட்டு இன்று வரை இவ்வுலகின் பல்வேறு பிணிகட்கும் உற்ற நன்மருந்தாய் விளங்குவது அன்பெனும் அமிழ்தமே அன்றோ? இத்தகு சிறப்பு வாய்ந்த அன்பெனும் உணர்வு முதிருங்கால், அந்தந்த நிலைகட்கு ஏற்ப ஆர்வம், நட்பு, காதல், பத்தி, அருள் என்றெல்லாம் பெயர் பெறல் கண்கூடு.
‘அருளென்றும் அன்(பு) ஈன் குழவி‘ (குறள், 757)
என்னும் இக்குறள் மொழிகள், பெரும்பேருணர்வுகட்கெல்லாம் அடிப்படையாய்-தாயுணர்வாய்-விளங்குவது அன்பே என்ற உண்மையை அழகுற விளக்குகின்றன அல்லவோ? இத்தகைய ஆற்றல் நிறைந்த அன்புணர்வு வளர்ச்சி பெற்ற நிலையில் அடையும் பெயர்களில் ‘நட்பு’ என்பதும் ஒன்றாகும். இந்நட்புக்குத்தான் எவ்வளவு ஆற்றல்! மனித குலத்தின் வாழ்வை ஒளியும் பயனும் நிறைந்ததாக்குவதில் இந்நட்பே தலை சிறந்து விளங்குகின்றது அன்றோ?
நட்பிற்கும் காதலுக்குமிடையே மிகச் சிறிய வேறு பாடே உள்ளது எனலாம். ஒரோவழி அவ்வேறுபாடு இல்லையாகிவிடலும் இயற்கை. ஒத்த தலைவன் தலை வியரிடை ஊறி எழும் அன்பின் முதிர்வே ‘காதல்’ ஆகும். ஆனால், நட்போ, ஆடவர் இருவர்க்கு இடையேயோ, அரிவையர் இருவர்க்கு இடையேயோ, ஓர் ஆண் ஒரு பெண் ஆகியோரிடத்தோ, அன்றிப் பலரிடமோ, தோன்றி வளரும். இத்தகு அன்பின் முதிர்வே நட்பு எனப்படும். இஃதன்றி அடிப்படையை ஆராயுமிடத்து அன்பின் முதிர்வே நட்பும் காதலும் எனலாம்.
இத்தகைய நட்பும் காதலும் நெருங்கிய பழக்கத்தாலேயே வளரும். அவ்வாறு உளங்கலந்து-உயிர் கலந்து-பழகிய நட்பே உரனுடையதாக விளங்கலும் உலக இயற்கை. ஆனால், இப்பொது விதிக்கு விலக்காய் உள்ள இன்னொரு வாய்மையினையும் வள்ளுவர் கூறியுள்ளார். ‘இரு உள்ளங்களிடையே தோன்றும் உணர்வு ஒன்றுபடுதல் போதும். புணர்ச்சியும் பழக்கமும் வேண்டுதிவல்லை. அவ்வுணர்வு ஒன்றே நட்பினை வளர்க்கும்,’ என்பது அச்சான்றோரின் கருத்து.
என்பது தமிழ் மறை.
இத்தமிழ் மறைக்குத் தக்க சான்றாய் விளங்கிய ஒரு பெரியார் சங்க காலத்தில் வாழ்ந்தார். அவரையே பிசிராந்தையார் எனப் போற்றுவர்.
சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த பெருமை தண் பாண்டி நன்னாட்டிற்கு உண்டு. அத்திரு நாட்டில் ‘பிசிர்’ என்ற ஊரில் ‘ஆந்தையார்’ என்ற புலவர் தோன்றினார். ‘ஆதன் தந்தையார்’ என்னும் பெயரே ‘ஆந்தையார்’ என மருவி வழங்கலாயிற்று. பண்டைய தமிழர் தம் கால வழக்கப்படி அவரைப் பிசிராந்தையார் என அவர் ஊர்ப்பெயரும் தோன்றி விளங்கும்படி வழங்க லாயினர். பிசிராந்தையார் வாழ்க்கை பிஞ்சிளம்பருவம் தொட்டே எல்லா நலங்களையும் எய்தியிருந்தது. அவர் கற்பன கற்றார்; கேட்பன கேட்டார்; அவற்றோடு அமையாது, தாம் கற்றனவும் கேட்டனவும் உணர்த்திய நன்னெறியில் நின்று வாழ்க்கையை நடத்தலாயினார், அஃகி அகன்ற அறிவும், ஆழ்ந்த நுண்ணுணர்வும் பெற்றவராய்த் திகழ்ந்தார். சான்றாண்மைக்குரிய எல்லாப் பண்புகளும் அவர்பால் இளமை தொட்டே அமைந்து விளங்கலாயின. இத்தகைய செம்மை சான்ற பண்பு நலனும், சீரிய புலமை வளனும் ஒருங்கே பெற்றுத் திகழ்ந்த அப்பெரியார்க்கு வாய்த்த வாழ்க்கைத் துணைவியாரும், குலமகளிர்க்கெல்லாம் மணி விளக்காய்த் திகழ்ந்தார். ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்ற அதிகாரத்தில் இல்லத்தின் அரசிக்கு இன்றியமையாது வேண்டுவன வென்று திருவள்ளுவர் எடுத்தோதியுள்ள அரும்பெறற் பண்புகட்கெல்லாம் உறைவிடமாய் அவ்வன்னை யார் திகழ்ந்தார். அதனால், ‘ஏறுபோல் பீடு நடை’யராய் விளங்கிய பிசிராந்தையார் வாழ்வில் எஞ்ஞான்றும் இன்பத் தென்றல் வீசிய வண்ணம் இருந்தது. மாசில் வீணையாய்-மாலை மதியமாய்-வீசு தென்றலாய்-வீங்கிள வேனிலாய்த் திகழ்ந்த அவர் வாழ்வு மேலும் மேலும் ஒளியும், சுவையும், பயனும் காணும் வகையில் அவர்க்கு அருமருந்தன்ன மக்கள் தோன்றினர்கள்.
என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு ஏற்ற எடுத்துக்காட்டாய்ப் பிசிராந்தையார் வாழ்க்கை பொலிவுற்றுத் திகழ்ந்தது. குழலினும் யாழினும் இனிய மழலைச் செல்வங்களைப் பெற்ற புலவர் பெருமானார் வாழ்க்கை யாதொரு குறையும் கண்டிலது. மனைவி, மக்கள், மன்னன், ஏவலர் அனைவரும் அவர் மனக்கு இனியராய் விளங்கினர். துன்பம் சிறிதும் காணாத் தண்டமிழ்ப் புலவரின் சீரிய வாழ்க்கையில் கவலைக்கு இடமேது? வாழ்வைக் கொல்லும் நஞ்சாய் விளங்கும் கவலை சிறிதும் இல்லாத களி துளும்பும் வாழ்க்கை புலவர் பெருந்தகையின் நல்லுடைமை ஆயிற்று. இதனினும் செல்வம் பிறிதுண்டோ?
இத்தகைய தமிழ்ச் செல்வர் வாழ்ந்த காலத்தில் பாண்டி நாட்டை நீதி வழுவாது ஆட்சி புரிந்து வந்த தமிழ் மன்னன், பாண்டியன் அறிவுடை நம்பி யாவான். தமிழரசோச்சித் தமிழரசு தலை நிமிர்ந்திருந்த அந்நாளில் பூவேந்தரெல்லாரும் புலமை நலமிக்க பாவேந்தராய் விளங்கியதில் வியப்பொன்றும் இல்லையன்றோ? பாண்டியன் அறிவுடை நம்பி நாடாளும் மன்னன் மட்டுமன்றி, ஏடாளும்-எண்ணமாளும்-ஆற்றல் படைத்தவனாயும் கவிச்செல்வம் நிரம்பப் பெற்றவனயும் திகழ்ந்தான். அவன் பாடிய அழகிய பாடலொன்று புறநானூற்று மணிகளுள் தலை சிறந்த ஒன்றாய் விளங்கித் தமிழ் இலக்கியத்தை அணி செய்கின்றது. ‘ஒருவர் உலகில் படைக்கப்படும் செல்வம் பலவற்றையும் படைத்துப் பலரோடு உண்ணும் வளம் செறிந்த பெருவாழ்வைப் பெற்றவராய் விளங்கலாம். ஆயினும், குறுகுறு என நடந்தும், சின்னஞ்சிறு கரம் நீட்டி உண் கலத்திலுள்ள சோற்றைத் தரையிலே இட்டும், தோண்டியும், வாயிற்கெளவியும், கையால் துழாவியும், மேலெல்லாம் நெய்ச்சோறு படுமாறு அள்ளி எறிந்தும் ஆடி மகிழும் அமிழ்தங்களை-அறிவினை இன்பத்தால் மயக்கும் செல்வக் களஞ்சியங்களை-அடையாதார்-மக்கட்பேற்றினைப் பெறாதார்-வாழ்வின் பயனையே பெறாதார் ஆவர்’ என்பதே பாண்டியன் அறிவுடை நம்பியின் அரிய பாடலின் கருத்தாகும்.
என்பது அவர் பாட்டு.
No comments:
Post a Comment