நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 21

 

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 20. தொடர்ச்சி)


6. காக்கைபாடினியார் நச்செள்ளையார்


[ மகாமகோபாத்தியாயர் பிரும்ம சிரீ முனைவர் உ.வே. சாமிநாதையரவர்கள் செவ்வனம் ஆராய்ந்து வெளியிட்ட பதிற்றுப்பத்துள் ‘நூலாசிரியர்கள் வரலாறு’ பார்க்க. ]

இவர் பதிற்றுப்பத்தின்கணுள்ள ஆறாம்பத்தால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னுஞ் சேரனைப் புகழ்ந்து பாடி, அவனாற் கலனணிக என்று ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரங்காணமும் அளிக்கப் பெற்று, அவன் பக்கத்து வீற்றிருத்தற் சிறப்பும் எய்தியவர். பாடினி, செள்ளை என்னும் பெண்பாற்பெயர்களானும் கலனணிதற்குப் பொன்பெற்றமை யானும் பெண்பாலாராகத் தெளியப்படுகின்றார். பதிற்றுப்பத்து, 6-ஆம் பத்துப் பதிகத்தி னிறுதியில், யாத்த செய்யுளடங்கிய கொள்கைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் என வருவதன்கண் உள்ள அடங்கிய கொள்கை என்ற விசேடணமும் இவர் பெண்பாலார் என்பதனையே வலியுறுத்துவது காண்க. குறுந்தொகையில் 210-ஆம் பாட்டும், புறநானூற்றில் 278-ஆம் பாட்டும் இவருடையன. இவரது குறுந்தொகைப்பாட்டில் நள்ளி என்னும் வள்ளல் கூறப்பட்டுள்ளான் இம் மெல்லியலாரது நல்லிசைப்புலமைமாட்சி அளத்தற்கரியதே.

000

7. குறமகள் இளவெயினி


இவர் குன்றுறை வாழ்க்கைய ராகிய குறவர் குடியினராவர். விற்றூற்றுமூதெயினனார் (அகநானூறு-37), இளவெயினனார் (நற்றிணை- 263), கடுவன் இளவெயினனார் (பரிபாடல்) என ஆண்பாற்கண் வருதல்போல, இளவெயினி எனப் பெண்பாற்கண் வந்ததாகும். குறமகள் குறியெயினி என்னும் நல்லிசைப் புலமை மெல்லியலார் ஒருவ ருளரென் றறியப்படுதலால், இவர் அவர்க்கிளையராதல் பற்றி இளவெயினி என வழங்கப்பட்டனரெனக் கொள்ளலுமாம்.

இவர், தம்குறவர்குடிக்குத் தலைவனாய்ச் சிறந்த ஏறை என்பானைத் ‘தமர்தற் றப்பின்’ என்னும் புறப்பாட்டாற் (157) புகழ்ந்து பாடினர். அப்பாட்டால், அவ் வேறைக்கோன், தன்னிற் சிறந்தோர் தனக்குத் தவறிழைப்பின் அதனைப் பொறுத்தலும், பிறருடைய வறுமைக்குத் தான் நாணுதலும், படையிடத்துப் பிறராற் பழிக்கப்படாத வலியுடையனாதலும், அரசுடை அவையத்து ஓங்கி நடத்தலும் இயல்பாகவே பொருந்தினோன் என்பதும், குறவர்தலைவன் என்பதும், காந்தட்பூவாற் செய்த கண்ணியை யுடைய னென்பதும், பெரிய மலைநாடுடைய னென்பதும் அறியப்படுவன. ‘வந்து வினை முடிந்தனன்’ என்னும் அகப்பாட்டான், ஏறை என்பான், சேரன்படைத்தலைவருள் ஒருவனாக அறியப்படுதலால், இவனது பெருங்குன்றநாடு சேரநாட்டின் கண்ணதாகுமெனக் கருதப்படுவது. இந் நல்லிசைப் புலமை மெல்லியலாரும் அச் சேரநாட்டாரே யாவர்.


000

8. பேய்மகள் இளவெயினி


இவர் நல்லிசைப்புலமைச் செல்வவேந்தனாய்ச் சிறந்த பாலைபாடிய பெருங்கடுங்கோ என்னுஞ் சேரமானைப் பாடியவர். இவர் பாடியது, ‘அரிமயிர்த் திரண்முன்கை’ என்னும் புறப்பாட்டாகும் (11). இப்பாட்டின் கருத்து, ‘வஞ்சிவேந்தனாகிய சேரன் வலியோடெதிர்ந்தவருடைய புறக்கொடையைப் பெற்றான்; அப் புறக்கொடையைப் பெற்ற வலிய வேந்தனது வீரத்தைப் பாடிய பாடினியும் பொன்னாற் செய்த இழைபல பெற்றாள்; அவளுக்கேற்பப் பாடவல்ல பாணனும் வெள்ளிநாராற் றொடுத்த பொற்றாமரைப்பூப் பெற்றான்‘ என்பதனால், யானொன்றும் பெறுகின்றிலேன் என்று அவ்வரசன்பாற் பரிசில் வேண்டியதாகும். இதுவே புறப்பாட்டுரையாசிரியர் கருத்தாகும்.

இனி, அவ்வுரையாளர் பட்சாந்தரங் கூறுவாராய், ‘இவள் பேயாயிருக்கக் கட்புலனாயதோர் வடிவு கொண்டு பாடினாளொருத்தி யெனவும், இக் களத்து வந்தோர் யாவரும் பரிசில் பெற்றார்கள்; ஈண்டு நின்னோ டெதிர்த்துப் பட்டோரில்லாமையால் எனக்குணவாகிய தசை பெற்றிலேன் எனத் தான் பேய்மகளானமை தோன்றப் பரிசில் கடாயினாளெனவும் கூறுவாரு முளர்’ என வுரைத்தார். இதனால் அப் பட்சாந்தரமுடையார் கருத்து, பெண்வடிவிற் றோன்றியதோர் பேய், தனக்குணவாகிய மக்கட்டசை வேண்டிச் சேரன் பாலைபாடிய பெருங்கடுங்கோவைப் போர்க்களத்தே பாடியதாகும் என்பதாம்.

போர்க்களத்தே ஒரு வீரனைப் பேய் தனக்குணவாகிய மக்கட்டசை வேண்டியதாக ஒரு புலவர் புனைந்து பாடிய தென்பதல்லது, அது வேண்டி அப்பேயே உருக்கொடு தோன்றிப் பாடிற்றென்றல் சிறிது மியையாதாகும். அவர், இதுபாடினார் பேய்மகள் என்பது பற்றியும் பேயெல்லாம் மக்கட்டசையுணவின என்பது பற்றியும் அவ்வாறு கருதினா ராவர். இவர், பெயராற் பேய்மகளெனப்படுதலோடு இச் சிறந்த பாடலால் விழுமிய பேரறிவுடையராகவும் கருதப்படுகின்றாராதலின், இப் பெருந்தகையாளரது நல்லறிவினைக்கெடுத்துப் பேய்மகள் என்னும் பெயரேகொண்டு பேயென்றலும், அது தசை வேண்டிற்றென்றலும் பொருந்தாவாம். அன்றியும், இப்பெயர்க்கண் பேய்மகள் என்பது இளவெயினி யென்பதனோடு இணைந்துநின்ற தல்லது அதுவே தனித்திவர்க்குப் பெயராகாமையுங் காண்க. அப் புறப்பாட்டின்கண்ணும்,

‘அரசன் புறக்கொடை பெற்றான்;
பாடினி இழை பெற்றாள்;
பாணன் பூப்பெற்றான்’

எனப் பிறர் பெற்றனவே கூறியவாற்றாற்றாம் ஒன்றும் பெறாமையே குறித்தாராவர். ‘கொடுப்பவர், தாமறிவர் தங்கொடையின் சீர்’ என்பவாகலின், தாம் வேண்டுவது இஃதென்று கூறினாரில்லை யென வுணர்க. மற்று இத்தகைப் பெருநாகரிகரைப் பேய்மகள் என்றது என்னையெனில், தேவராட்டி, அணங்காட்டி என்றாற்போலத், தம் மந்திரவலியாற் பேயைத் தமக்குரியதாகப் பெற்ற மகள் இவர் ஆவர்; அது பற்றிக் கூறப்பட்டதா மென்க. இதனால் இவர் பேயையும் ஏவிக் காரியங்கொள்ள வல்லர் என்பதறிக.

9. காவற் பெண்டு


இவராற் பாடப்பட்டது, ‘சிற்றி னற்றூண்’ என்னும் புறப்பாட்டு (86). இதனை உற்றுநோக்கின், இவர் ஒரு மறமகளாவார் என்பதும், புலியொத்த போர்வீரனொருவனை மகனாகவுடையர் என்பதும், அத்தகை வீரமகனைப் போர்க்களத்தே போக்கியபின் அவனைப் பெற்ற தம்வயிற்றினைப் புலிகிடந்துபோன கன்முழையாகக் கருதினாரென்பதும் புலனாகும்.

இனி, காவற்பெண்டு என்பது செவிலித்தாயைக் குறிக்குமென்பது, ‘காவற் பெண்டும் அடித்தோழியும்’ என்ற சிலப்பதிகாரத்து உரைப்பாட்டு மடைத்தொடரால் அறியப்படுதலின், இவர், தலைவனொருவனை வளர்த்த செவிலிபோலும் என்று கருதலாகும். இவ்வாறின்றி, அரசனது மெய்காவல், மனைகாவல், ஊர்காவல், பாடிகாவல் இவற்றி லொன்றிற்குரிய காவற்குடிக்கண்ணே பிறந்த பெண்டு ஆவளெனினும் அமையும்.


10. குறமகள் குறியெயினி


இவரும் குறவர்குடியின ராவர். இவர் குறி சொல்லும் வழக்குடையராதலிற் குறியெயினி என்று பெயர் பெற்றனர். இக் குறக்குடிமகளிரே கட்டுவித்தியாய்த் தோன்றிக் குறியிறுத்தல் பண்டைவழக்கு. முற்காலத்து இக்குடிச்சிறாரும் குறியிறுக்க வல்லரா யிருந்தன ரென்ப. இதனைக் ‘குறமக ளீன்ற குறியிறைப் புதல்வரொடு’ என்னுங் குறுந்தொகையானும் (394) உணர்க. இவர் பாடியது,

நின்குறிப் பெவனோ தோழி யென்குறிப்
பென்னொடு நிலையா தாயினு மென்று
நெஞ்சுவடுப் படுத்துக் கெடவறி யாதே
சேணுறத் தோன்றுங் குன்றத்துக் கவாஅற்
பெயலுழந் துலறிய மணிப்பொறிக் குடுமிப்
பீலி மஞ்ஞை யாலுஞ் சோலை
யங்க ணறைய வகல்வாய்ப் பைஞ்சுனை
யுண்க ணொப்பி னீல மடைச்சி
நீரலைக் கலைஇய கண்ணிச்
சார னாடனோ டாடிய நாளே.’

என்னும் நற்றிணைப் பாட்டாகும் (357).

000

11.ஒக்கூர்மாசாத்தியார்


ஒக்கூர்மாசாத்தனார் (புறநானூறு-248. அகநானூறு-14) என்னும் பெயரில் ஓராண்பாற் புலவருளராதலாலும், சாத்தியென்னும் பெண்பாற்பெயர் புனைதலாலும் இவர் பெண்பாலாராகத் தெளியப்படுகின்றார். புறநானூற்றில் 279-ஆம்பாட்டும், குறுந்தொகையில் 126, 139, 186, 220, 275-ஆம் பாடல்களும், அகநானூற்றில் 324, 384-ஆம் பாடல்களும் இவர்பாடியனவாம்.

இவற்றுட் பெரும்பாலன, முல்லைத்திணைபற்றியே வருவன. பாண்டிநாட்டுத் திருக்கோட்டியூர்ப் புறத்தும், திருப்பெருந்துறைப்புறத்தும் இரண்டூர்கள் ஒக்கூர் என்னும் பெயரான் வழங்குவன. இவர் ஒக்கூர்மாசாத்தனார் உடன்பிறந்தவரோ என ஊகிக்கப்படுகின்றார். இவருடைய பாடல்களில்,

அருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை
வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணிக்
குறுமுகை யவிழ்ந்த நறுமலர்ப் புறவின்.’ (குறுந்-220)

தளிரியற் கிள்ளை யினிதினி னெடுத்த
வளராப் பிள்ளைத் தூவி யன்ன
வுளர்பெயல்வளர்த்த பைம்பயிர்ப்புறவின்.’ (அகநானூறு-324)

நேமிதண்ணில மருங்கிற் போழ்ந்த வழியு்ணிரைசெல்
பாம்பின் விரைபுநீர் முடுகச்செல்லு நெடுந்தகை தேரே.’ (அகநானூறு)

. என வருவன பெரிதும் பாராட்டத்தக்கனவாம்.

(தொடரும்)
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்
 இரா.இராகவையங்கார்