நல்லிசைப்
 புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 22

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 21. தொடர்ச்சி)

12.குன்றியாள்

குன்றியனார், குன்றியன் (குறுந்தொகை 51) என ஆண்பாற்கண் வருதல்போலக் குன்றியாள் எனப் பெண்பாற்கண் வந்தது. இவர் பாடியது குறுந்தொகையில் 50-ஆம் பாட்டாகும். இவர் குன்றியனார் உடன்பிறந்தவரோ என ஊகிக்கப்படுகின்றார்.

13. வருமுலையாரித்தி

இவர், பெயர்க்கண் உள்ள வருமுலை யென்னும் அடையாற் பெண்பாலராகக் கருதப்படுகின்றார். இவர்பாடியது குறுந்தொகையில் 176-ஆம் பாட்டாகும். அஃதாவது,

ஒருநாள் வாரல னிருநாள் வாரலன்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்
னன்னர் நெஞ்ச நெகிழ்ந்த பின்றை
வரைமுதிர் தேனிற் போகி யோனே
யாசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
வேறுபுல னன்னாட்டுப் பெய்த
வேறுடை மழையிற் கலுழுமென் னெஞ்சே.’

என்பது. இதன்கண், வரைமுதிர் தேனிற் போகியோனே’ என்பது பாராட்டத்தக்கது.

14. நெடும்பல்லியத்தை

நெடும்பல்லியத்தனார் (புறநானூறு-64) என ஆண்பாற்கண் வருதலால் இப்பெயர் பெண்பாற்கண் வந்ததாம். இவர் பாடியன, குறுந்தொகையில் 178, 203-ஆம் பாடல்களாகும். இவர் நெடும்பல்லியத்தனார் உடன்பிறந்தவரோ என ஊகிக்கப்படுகின்றார்.

15. கழார்க்கீரனெயிற்றியார்

கழார்க்கீரனெயிற்றினார் (குறுந்தொகை-330) என ஆண்பாற்கண் வருதலால், இப்பெயர் பெண்பாற்கண் வந்ததாகும். குறுந்தொகையில் 35, 261-ஆம் பாடல்களும், நற்றிணையில் 281-ஆம் பாட்டும், அகநானூற்றில் 163, 217, 235, 294-ஆம் பாடல்களும் இவர் பாடியன. இவரது நற்றிணைப்பாட்டில் சோழர் கழாரூரும்அதன்கட் புலாற்சோற்றாற் பலியீதலும் கூறப்பட்டுள்ளன. இவர் பாடல்களிலுள்ள,

#சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி. (குறுந்-35.)

[# ‘சொல்லறுஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம்போன், மெல்லவே கருவிருந் தீன்று’ என்ற சிந்தாமணியார்க்கும் அக்கருத்து இதனடியாற் பிறந்ததாகும்.]

களிறுயிர்த் தன்ன கண்ணழி துவலை
முளரி கரியு முன்பனிப் பானாட்
குன்றுநெகிழ்ப் பன்ன குளிர்கொள் வாடை
யெனக்கே வந்தனை போறி.’ (அகநானூறு-163.)

எயிறுதிப் பிறப்பத் திருகி
நடுங்குதும் பிரியின்யாங் கடும்பனியுழந்தே.’ (அகநானூறு-217)

என்னும் அடிகள் பெரிதும் பாராட்டத்தக்கன. இவர் கழார்க்கீர னெயிற்றியனார் உடன்பிறந்தவரோ என ஊகிக்கப்படுகின்றார்.

16.அள்ளூர் நன்முல்லையார்

இவர் பெயர்க்கண் உள்ள முல்லையென்னும் சொல்லானும், குறுந்தொகையினும் அகநானூற்றினும் பெரும்பாலும் இவர்பெயர் வருமிடங்களிற் பெண்பாற்புலவரும் உடன்கூறப்படுதலாலும் இவர் பெண்பாலாராகக் கருதப்படுகின்றார். முல்லை கற்பாயின் அதுபெண்பாலையே குறிக்கும். பூவாயின், அப் பூப்பெயரெல்லாம் பெரும்பான்மையும் மகளிர்க்கே வருவனவாம் என்க.

குறுந்தொகையில் இவர்பெயர் பெரும்பாலும் ஆதிமந்தியார், ஒக்கூர்மாசாத்தியார், ஔவையார், நெடும்பல்லியத்தை என்னும் பெயர்களை அடுத்து வந்தது. அகநானூற்றில் இவர்பெயர் வெள்ளிவீதியாரை அடுத்து வந்தது. குறுந்தொகையில் 32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237–ஆம் பாடல்களும், அகநானூற்றில் 46–ஆம் பாட்டும் இவர் பாடியன. இவர் பாடிய அகப்பாட்டின்கண்,

ஒளிறுவாட் டானைக் கொற்கைச் செழியன்,
பிண்ட நெல்லி னள்ளூ ரன்னவென்

என வருதலால் இவருடைய அள்ளூர் பாண்டிநாட்டதாகும். அகநானூற்றுரைகாரர், ஈண்டு, அள்ளுர் என்பதற்கு அள்ளியூர் என உரை கூறுவர். தொல்லுரைகாரர் [‘குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி யறிதல்'(தொல்-சொல்-எச், 57) என்பதனுரையிற் காண்க.] பல்லோரானும் இடைக்குறைக்கு எடுத்துக்காட்டப்பட்ட ‘வேதின வெரிநி னோதிமுதி போத்து’ என்பது, இவர்பாடிய குறுந்தொகைப்பாட்டி னோரடியாவது. ஆசிரியம் ஓகாரத்தான் இற்றமைக்கு உரைகாரர் பலரும் எடுத்துக் காட்டுகின்ற ‘சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ’ என்பதும் இவர் பாடிய அகப்பாட்டின் ஈற்றடியேயாம்.

17. நக்கண்ணையார்

நக்கண்ணனார் (அகநானூறு,252) என ஆண்பாற்கண் வருதல்போல நக்கண்ணையார் எனப் பெண்பாற்கண் வந்ததாம். இவர் பாடியன நற்றிணையில் 16, 18 ஆம் பாடல்களாம்.

18. நன்னாகையார்

நன்னாகனார் (புறநானூறு.381) என ஆண்பாற்கண் வருதல் போல நன்னாகையார் எனப் பெண்பால்பற்றி வந்ததாம். குறுந்தொகையில் 118,325 ஆம் பாடல்கள் இவர் பாடியனவாம்.

19. கச்சிப்பேட்டு நன்னாகையார்

மேலதுபற்றி நோக்கின், இவரும் பெண்பாலராகக் கருதப்படுவர். இவர் பாடியன குறுந்தொகையில் 30, 172, 180, 192, 197, 287 ஆம் பாடல்களாம்.

20. வெண்பூதி

வெண்பூதன் (குறுந்தொகை 83) என ஆண்பாற்கண் வருதலால் இப்பெயர் பெண்பால் பற்றியதாகும். குறுந்தொகையில் 97, 174 – ஆம் பாடல்கள் இவர்பாடியன.

21. மாறோகத்து நப்பசலையார்

பிரிவுகாலத்து மகளிர்க்கெய்தும் பசலை யென்னும் நிறப்பெயரால் இவர் சிறந்து விளங்கியதாற் பெண்பாலராகக் கருதப்படுகின்றார். இவர் புறநானூற்றிற் சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனையும்மலையமான் திருமுடிக்காரியையும்அவன்மகன் மலையமான் சோழியவேனாதி திருக்கண்ணனையும் பாடியுள்ளார். இவர், புலவர்பெருமானாகக் கபிலரையே பலரினும் மீப்பட மதித்தவராவர் (129). இவரது செய்யுட்டிறம் பெரிதும் பாராட்டத் தக்கது. நற்றிணையில் 264-ஆம் பாட்டும் இவருடையதே. அதற்கண்,

புணரிற் புணருமா ரெழிலே பிரியின்
மணிமிடை பொன்னின் மாமை சாயவெ
னணிநலஞ் சிதைக்குமார் பசலை யதனா

லசுணங் கொல்பவர் கைபோ னன்று
மின்பமுந் துன்பமு முடைத்தே
தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே.

என்பதனாற், பசலையினியல்பு நன்குரைத்தவாற்றால் நப்பசலையார் எனப்பட்டாரோ என ஊகிக்கப்படுகின்றார். இவ்வாறு பசலையையே பெயராகக்கொண்டார் சிலருளர்; அவரும் பெண்பாலராவரெனக் கருதப்படுகின்றார்.

  1. போந்தைப்பசலையார்

    இவர் பாடியது 110-ஆம் அகப்பாட்டாகும்.

  2. குமிழிஞாழார் நப்பசலையார்

    இவர் பாடியது 160-ஆம் அகப்பாட்டாகும்.

  3. காமக்கணிப் பசலையார்

    இவர் பாடியது 243-ஆம் நற்றிணைப்பாட்டாகும்.

  4. பூங்கண்ணுத்திரையார்

    இவரது பெயரானும், குறுந்தொகையினும் புறநானூற்றினும் முறையே கச்சிப்பேட்டு நன்னாகையாரையும், காக்கை பாடினியார் நச்செள்ளையாரையும் அடுத்து வருதலானும், இவர் பெண்பாலாகக் கருதப்படுகின்றார். புறநானூற்றில் ‘மீனுண் கொக்கின்’ என்னும் புறப்பாட்டும், குறுந்தொகையில் 48, 171 ஆம் பாடல்களும் இவர் பாடியன. இவ்வாறே,

  5. நல்வெள்ளியார் (மதுரை)

    – நற்றிணை-7, 47. குறுந்தொகை. 365.
  6. மதுவோலைக் கடையத்தார்‘ {மதுரை ஓலைக்கடையத்தார்}

    நல்வெள்ளை: நற்றிணை-369.

  7. பொன்மணியார்

    குறுந்தொகை-391.
  8. மாறபித்தியார்

    புறநானூறு-256, 252.
  9. முள்ளியூர்ப்பூதியார்

    அகநானூறு-173.
  10. வெண்மணிப்பூதியார்

    குறுந்தொகை-299.

    என்பாரும் பெண்பாற்புலவ ராவர் என ஊகிக்கப்படுகின்றார்.

    இனி, நல்லிசைப்புலவருட் பலர், தாம்பாடியருளிய இனிய செய்யுட்களில் ஆங்காங்கு வழங்கிய அரிய சொற்றொடர்பற்றிப் பெயர்சிறந்துளார். அவர் கல்பொரு சிறுநுரையார் (குறுந்தொகை-290), தேய்புரி பழங்கயிற்றினார் (நற்றிணை-184), வில்லக விரலினார் (குறுந்தொகை-370) முதலாயோர் பலராவர். அப் பலருள்ளும் பெண்பாற் புலவர் எத்துணையரோ உளராவர் என அறிக. இனி, சைவ வைணவ சமயங்களில் பேரடியார்களாய்ப் பிற்காலத்து விளங்கிய நல்லிசைப்புலமை மெல்லியலார்கள் காரைக்காற் பேயம்மையாரும்வில்லிப்புத்தூர்க் கோதையாரும் ஆவர். இவர்கள் திப்பிய வரலாறுகளைப் பெரிய புராணம், குருபரம்பரை முதலிய நூல்களால் தமிழ்மக்கள் நன்கறிவர்.

    இத்துணையுங் கூறியவாற்றான்வான்றோய் நல்லிசைச் சான்றோர் குழீஇயதுங்கச் செந்தமிழ்ச் சங்ககாலத்துத்தீதற விளங்கிய மூதுணர்வுடைய பெண்பாற் பெருமக்களின் கல்விப்பரப்பு ஒருவாறு உணரப்படும்.

 

நூல் நிறைவுற்றது.