(பிசிராந்தையார் 1 : ந. சஞ்சீவி தொடர்ச்சி)
சங்கக்காலச் சான்றோர்கள் – 24
4. பிசிராந்தையார்
ஒரு நாட்டிற்கு வாழ்வளிக்கும் தலை சிறந்த செல்வம் அந்நாட்டின் மண்ணும் மலையும் அல்ல; ஆறும் அடவியும் அல்ல. அந்நாட்டின் அழியாப் பெருஞ் செல்வம் அமிழ்தொழுகும் கனிவாய்க் குழந்தைகளே ஆம். வருங்கால உலகைப் படைக்கும் தெய்வங்களல்லரோ அச் செல்வச் சிறார்கள்? இவ்வுண்மையை நாடாளும் தலைவனாகிய பாண்டிய மன்னன் உணர்ந்திருந்தான்; தான் உணர்ந்ததோடன்றித் தான் உணர்ந்த அவ்வுணர்வைத் தமிழிலக்கியம் உள்ள வரை அதைக் கற்பார் உணர்ந்து பயன் பெறுமாறு சொல்லோவியமாகவும் ஆக்கித் தந்துள்ளான் என்றால், அவன் மாட்சியினை என்னென்று போற்றுவது!
கரவற்ற குழந்தைகள் வழங்கும் பேரின்பத்தில் மூழ்கித் திளைக்கும் பண்பு பெற்று விளங்கிய பாண்டியன் கோல் கோடா ஆட்சி புரிவதிலும் கருத்துடையவனாய் விளங்கினான், அவனுக்கு அரசியல் நெறியினை நன்கு அறிவுறுத்தக் கருதிய புலவர் பெருமானார் அவனிடம் சென்றார்; தம் உள்ளக் கருத்தை எடுத்துரைக்க முனைந்தார்; சிறந்ததோர் எடுத்துக்காட்டு வாயிலாகத் தம் எண்ணத்தை விளக்கலாயினார்: ‘களிறு ஒன்று தனியே நெல் வயலில் புகுந்து உண்ணத் தொடங்கின், நூறு காணியாயினும், அழியும்; களிற்றின் வாயில் புகும் உணவினும் காலில் மிதியுண்டு பல மடங்கு உணவுப்பொருள் அழியும். ஆயின், செய்களில் உள்ள செந்நெற்கதிர்களை முற்றவிட்டுக் காய்த்த நெல்லை அறுத்து அரிசியாக்கிக் கவளம் செய்து தருவதானால், ஒரு சிறு பகுதியே அதற்குப் பல நாளுக்குப் போதுமானதாகும். அதே போல, அறிவற்ற மன்னன் தன் வலி கருதிக் குடிகளை வருத்திப் பொருள் பெறத் தொடங்கின், அவனும் வாழான்; அவனால் உலகமும் கெடும். அவ்வாறன்றி, அறிவுடை வேந்தன் வளம் நிறைந்து வாழும் குடிமக்களிடமிருந்து ஆறில் ஒன்று கடமையாகப் பெறுவானாயின், அரசும் சிறக்கும்; நாடும் செழிக்கும்,’ என்னும் கருத்தமைந்த
என்னும் பாடலைப் பாடினார்.
புலவர் பாடலில் அறத்தின் குரல் முழங்குகின்றதன்றோ? புலவரின் முழக்கம் கேட்ட புவியாள் மன்னன் கலை நெஞ்சும் கருணை உணர்வும் கொண்ட காவலன் அல்லனோ? கவிதை உள்ளத்தில் ஆழ்ந்திருக்கும் உண்மையின் ஆற்றலை அனுபவத்தால் அறிந்த தமிழரசன் அல்லனோ? அவன் சான்றோராகிய பிசிராந்தையாரின் சொற்களைப் பொன்னே போல் போற்றி நல்லாட்சி நடத்தினான். ‘அறிவுடை நம்பி’ என்ற இயற்பெயர் பெற்ற அவன், அதனையே அழியாப் புகழ்ச் சிறப்பினைக் குறிப்பதாகவும் பெற்றான், அவன் அல்லனோ மன்னன்! அவன் அரசன்றோ தமிழரசு!
அறிவுரம் பெற்ற பிசிராந்தையாரின் உடல் பாண்டி நாட்டில் உலாவிக்கொண்டிருந்தது. ஆனால், அவர் உள்ளமோ, உறந்தையிலேயே வாழ்ந்தது. அந்நாளில் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த சோழ வேந்தன் கோப்பெருஞ்சோழன். அவன் ஆட்சியில் பொன்னி வளநாடு குறையேதுமின்றிப் பொலிவுற்று விளங்கியது. பாணரும் பரிசிலரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்தனர். சோழன் தலை வாயிலை நாடி வந்த கலைஞர் அனைவரும் கைநிறையப் பொன்னும் பொருளும் மணியும் துகிலும் பரிசிலாகப் பெற்று மீண்டனர். பசியால் வாடி வந்த இரவலர்க்கெல்லாம் ஆமையின் இறைச்சியையும் ஆரல்மீனின் கொழுவிய சூட்டையும் விளைந்த வெங்கள்ளையும் அவர் வேட்கை தீருமட்டும் தருவதில் என்றும் மன்னன் சலிப்புக் கண்டதில்லை. அவன் திருவோலக்கம் எஞ்ஞான்றும் இசை முழங்கும் பெருவிழாக் காட்சியையே அளித்தது. அவன் நன்னாடோ, நாளும் வற்றாத புது வருவாய் மிக உடையது. இத்தகைய சிறப்புக்களை யெல்லாம் பெற்று விளங்கிய அக்கோப்பெருஞ்சோழன், கோழியூராம் உறையூரினைத் தலைநகராக உடைய ஒப்பற்ற வேந்தனாய் விளங்கினான்; தன் வாழ்நாள் முழுதும் பாணர் குடியை வாட்டி வதைத்து வந்த பசிப்பிணிக்குப் பெரும் பகைவனாய் விளங்கி விழுப்புகழ் பெற்றுத் திகழ்ந்தான்; அதோடு புரையில்லா நட்பினை உடைய பொத்தியார் என்னும் புலவரோடு மாறாத் தோழமை பூண்டு நாடோறும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்து இன் புற்றிருந்தான். இவ்வுண்மைகளையெல்லாம் சான்றோராகிய பிசிராந்தையார் பாடல் ஒன்றே நமக்கு உளங்கொளும் வகையில் சாற்றுகின்றது :
நட்பிலும் பெட்பிலும் சிறந்து விளங்கிய கோப்பெருஞ்சோழன் நற்பண்புகள், சான்றோராகிய பிசிராந்தையாரின் நெஞ்சைக் கவர்ந்தன. தாம் இருப்பது பாண்டி நாடே ஆயினும், அவன் வாழ்வது சோழ நாடே ஆயினும், ‘கேட்டு வேட்ட’ அவர் கலை நெஞ்சம் கோப்பெருஞ்சோழன் பால் மாறா அன்பு கொள்ளலாயிற்று. புலவரைப் போன்றே கோப்பெருஞ்சோழனும் நெடுந் தொலைவில் இருந்த புலவர் பெருமானாராகிய பிசிராந்தையாரின் இளமை தவழும் வளமை நிறைந்த வாழ்வினையும் புலமை நலங்கனிந்த கலைநெஞ்சின் ஆழத்தையும், உறுதி படைத்த ஒழுக்கத்தின் விழுப்பத்தினையும் ‘செவி வாயாக நெஞ்சு களனாக’ப் பல காலும் சான்றோர் வாயிலாகக் கேட்டு அறிந்து, அவர்பால் தீராக் காதல் கொண்டான். இருவருக்கும் இடையே எழுந்த அன்புணர்வு-ஆர்வமாய் -நட்பாய்-காதலாய்-அதனினும் சிறந்த பெரும்பேருணர்வுமாய் உருக்கொள்ளல் ஆயிற்று. இருவருக்கும் இடையே இருந்த நட்பின்-காதலின்-திறத்தையெல்லாம் அவர்கள் பாடிய அருந்தமிழ்ப் பாடல்களே இன்றும் நமக்கு எடுத்துரைக்கும் வல்லமை பெற்று விளங்குகின்றன. சான்றாக ஈண்டுப் புலவர் பிசிராங்தையார் பாடல் ஒன்றைக் காணல் சாலும்.
‘விரிகதிர் பரப்பி உலகமுழுதாண்ட ஒருதனித் திகிரி உரவோன்’ மலை வாயில் வீழ்ந்துவிட்டான். கதிரவனை விழுங்கிய காரிருளைத் துரத்திக்கொண்டே நீல வானில் பால் நிலவு தன் முழு அழகையும் காட்டிய வண்ணம் எழுகிறது. தமிழ் போல ஓங்கி உயர்ந்து விரிந்து பரந்து கிடக்கும் விண்ணில் தோன்றிய முழு நிலவை-அத்தண்ணிலவைப்-பருகிய வண்ணம் பிசிராந்தையார் தம் இல்லத்து இளமரக்காவில் வீற்றிருந்தார். கங்குல் நங்கை சூடிய மல்லிகை மலர் போல விளங்கும் அவ்வழகிய நிலா அவர் உள்ளத்தில் இன்ப வெள்ளத்தைப் பாய்ச்சியது. அஃது இன்ப உணர்வை அள்ளி வழங்கிய அந்நேரத்திலேயே துன்ப உணர்வையும் தோற்றுவித்துப் புலவர் பெருமானரின் கலை நெஞ்சை வெதுப்பத் தொடங்கியது. புலவர் பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழனது ‘ உயிர் ஒம்பும்’ உழுவல் நண்பர்-உள்ளம் காதற்கடலாயிற்று. வெண்ணிலவைக் கண்டு பொங்கும் விரிதிரைக் கடல் போல அவர் காதல் நெஞ்சில் உணர்வு அலைகள் ஓவென எழுந்து முழங்கலாயின. அம்முழக்கத்தின் எதிரொலியை இன்றும் நாம் அவர் பாடிய அழகிய பாடலில் கேட்கலாம்.
No comments:
Post a Comment