(உ.வே.சா.வின் என் சரித்திரம் 32 தொடர்ச்சி)

அத்தியாயம் 19
தருமவானும் உலோபியும்

கார்குடி சென்றது

கார்குடிக்குப் போவதில் எனக்கிருந்த வேகத்தை அறிந்து என் தந்தையார் ஒரு நல்ல நாளில் என்னையும் என் தாயாரையும் அழைத்துக்கொண்டு அவ்வூரை அடைந்தார். நாங்கள் வருவோ மென்பதை முன்னமே கத்தூரி ஐயங்கார் மூலம் அறிந்திருந்த அவ்வூர் சிரீவைணவர்கள் எங்களை உபசரித்து எங்கள் வாசத்துக்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர்.

அங்கே சிரீநிவாசையங்கார் என்ற ஒரு செல்வர் வீட்டில் நாங்கள் சாகை வைத்துக்கொண்டோம். அக்கிரகாரத்தாரிடமிருந்து உணவுப் பொருள்கள் மிகுதியாக வந்தன. அங்கிருந்த சிரீ வைணவர்கள் யாவரும் சுரோத்திரியதார்கள்.* மாதந்தோறும் எங்கள் தேவைக்குரிய நெல்லை அவர்கள். தம்முள் தொகுத்துக் கொடுத்து வந்தார்கள்.

கஸ்தூரி ஐயங்கார் பாடம் சொன்னது

கத்தூரி ஐயங்கார் நன்னூரில் நல்ல பயிற்சியுடையவர். தஞ்சாவூரில் இருந்த இலக்கணம் அண்ணாப் பிள்ளையென்ற வித்துவானும் அவரும் இலக்கண, இலக்கிய விசயமான செய்திகளை ஓலையில் எழுதி வினாவுவதையும் விடையளிப்பதையும் வழக்கமாகக்கொண்டிருந்தார்கள். அவ்வோலைகளை நானும் பார்த்திருக்கிறேன். இராமாயணம், பாரதம், பாகவதம் முதலிய நூல்களைத் தம் கையாலேயே கத்தூரி ஐயங்கார் ஏடுகளில் எழுதி வைத்திருந்தார். ஐயங்காரிடம் நான் பாடங் கேட்கத் தொடங்கினேன். குன்னத்திலிருந்தபோது தஞ்சையிலிருந்து வந்த சிரீநிவாசையங்கா ரென்பவரிடம் மகாலிங்கையர் இலக்கணத்தைப் பாடம் கேட்டேன். நன்னூல் முதலிய இலக்கணங்களைத் தொடர்ந்து கேட்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கு இருந்து வந்தது. அதனால் முதல் முதல் அவரிடம் நன்னூல் பாடங் கேட்கலானேன். விசாகப் பெருமாளையர் இயற்றிய காண்டிகையுரையை ஒருவாறு பாடம் சொல்லி அதன் கருத்துரை, விசேட உரை முதலியவற்றை எனக்குப் பாடம் பண்ணி வைத்துவிட்டார். தினந்தோறும் நன்னூல் முழுவதையும் ஒருமுறை நான் பாராமற் சொல்லி வந்தேன். நிலவில் பொருள்கள் காணப்படுவதுபோல் நன்னூலிலுள்ள இலக்கணங்கள் எனக்குத் தோற்றின; அந்நூலைச் சிக்கறத் தெளிந்துகொள்ள வில்லை. படித்தவர் யாரேனும் வந்தால் கத்தூரி ஐயங்கார் எனக்குப் பாடம் சொல்லிய நன்னூல் சூத்திரங்களையும் உரையையும் என்னைச் சொல்லும்படி செய்வார். அவற்றை நான் ஒப்பிப்பேன். இப்பழக்கத்தால் அவை என் மனத்திற் பின்னும் நன்றாகப் பதிந்தன.

அக்காலத்தில் நன்னூலுக்கு நல்ல மதிப்பு இருந்தது. ஐயமற அதனை ஒருவன் தெரிந்துகொண்டால் அவனை நல்ல புலவனென்று யாரும் கூறுவர். சூத்திரங்களில் விசேட உரைகளிலுள்ள ஆட்சேப சமாதானங்களை நன்றாகத் தெரிந்துகொண்டு விளக்குபவர்கள் சிலரே இருந்தனர். இலக்கியப் பயிற்சியிலேயே பெரும்பாலோருக்குக் கவனம் சென்றதேயன்றி இலக்கணப் பயிற்சியிற் செல்லவில்லை. இந்த நிலையில் நான் நன்னூற் சூத்திரங்களையும் உரையையும் மனனம் பண்ணித் தமிழில் ‘இலக்கண வித்துவான்’ ஆகக் கூடுமென்ற எண்ணம் என்னைக் கண்டோருக்கு உண்டாக்கினேன். அத்துறையில் நான் பின்னும் எவ்வளவோ தெரிந்துகொள்ள வேண்டியதுண் டென்பதை நான் மறக்கவில்லை. கத்தூரி ஐயங்காரிடம் நவநீதப் பாட்டியல் முதலிய பொருத்த நூல்கள் சில இருந்தன. எனக்கு அவற்றிலும் சிறிது பழக்கம் உண்டாயிற்று. இடையிடையே வேங்கட வெண்பா முதலிய சில பிரபந்தங்களையும் அவர் கற்பித்து வந்தார்.

சாமி ஐயங்காரிடம் கேட்ட பாடம்

கத்தூரி ஐயங்காருடைய நண்பரான சாமி ஐயங்காரும் எங்களிடம் மிக்க அன்போடு இருந்து வந்தார். தாம் வாக்களித்தபடியே அவரும் எனக்குப் பாடம் சொல்லலானார். கம்பராமாயணத்தில் அவர் பழக்கமுள்ளவர். என் தந்தையாரும் நானும் இராமாயண கதாப்பிரசங்கத்தில் ஈடுபட்டவர்களாதலின் கம்பராமாயணத்தைப் பாடங் கேட்கவேண்டு மென்ற விருப்பம் எனக்கு இருந்தது. இராமாயணத்திற் பாலகாண்டத்திலிருந்து தொடங்காமல் சுந்தரகாண்டத்திலிருந்து ஆரம்பிப்பது ஒரு முறை. அதன்படியே சாமி ஐயங்காரிடம் நான் சுந்தர காண்டம் பாடம் கேட்க ஆரம்பித்தேன். அவர் இசையோடே பாடல் சொல்லுவார். அது மிகவும் நயமாக இருக்கும். திருவரங்கத்தந்தாதியில் முதல் இருபத்தேழு செய்யுட்களுக்கு அவரிடம் பொருள் கேட்டுத் தெரிந்துகொண்டேன். “இதற்கு மேல் நான் பாடம் கேட்டதில்லை; அரியிலூர்ச் சடகோபையங்கார் முழுவதும் பாடம் சொல்வார்; அவரைப் பார்க்கும்போது நீ மற்றப் பாடல்களைக் கேட்டுக்கொள்ளலாம்” என்று அவர் கூறியமையால் இருபத்தெட்டாம் செய்யுள் முதலியவற்றை நான் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆயினும் யாரிடமேனும் அந்நூல் முழுவதையும் கேட்டுவிட வேண்டுமென்ற குறை மட்டும் எனக்கு இருந்தது.

புதிய நூல்களையும் புதிய விசயங்களையும் நான் தெரிந்துகொண்டே னென்பது உண்மையே. ஆனால் அவற்றை ஐயந்திரிபின்றித் தெளிவாகவும் சாங்கோபாங்கமாகவும் தெரிந்துகொள்ள வில்லை. படித்து அறிவு பெறுவது ஒரு வகை. படித்தவற்றைப் பாடம் சொல்வது ஒரு வகை. பாடஞ்சொல்லும் திறமை சிலரிடமே சிறப்பாகக் காணப்படுகின்றது.

கார்குடியில் ஆறு மாதங்கள் இருந்தோம். கத்தூரி ஐயங்காரும் சாமி ஐயங்காரும் தங்கள் தங்களால் இயன்ற அளவு பாடம் சொல்லி வந்தார்கள். அவர்களுடைய மனைவிமார்களும் படித்தவர்கள். அவர்களும் என்னிடம் பிரியமாக இருந்தார்கள். எனக்குத் தெரிந்த பல கீர்த்தனங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்துப் பாடிக் காட்டினேன்.

குன்னம் வந்தது

ஆறு மாதங்களுக்குப் பிறகு கத்தூரி ஐயங்கார் முதலியவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு நாங்கள் மீண்டும் குன்னத்திற்கே வந்து சேர்ந்தோம். தருமத்திற் சலிப்பில்லாத அவ்வூரார் எங்களை ஆதரிப்பதிலும் எங்கள்பால் அன்பு பாராட்டுவதிலும் சிறிதும் குறையவில்லை.

எனக்கு ‘மகாலிங்கையர் இலக்கணம்’ பாடஞ் சொன்ன தஞ்சை சிரீநிவாசையங்கா ரென்பவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம் என்னும் ஏழு நீதி நூல்களும் அடங்கிய புத்தகம் ஒன்று கொடுத்திருந்தார். அப்புத்தகம் மத சம்பந்தமான செய்யுட்களை மட்டும் நீக்கிப் புதுச்சேரியில் அச்சிடப்பட்டது; பதவுரை பொழிப்புரையோடு தெளிவாகப் பதிப்பிக்கப் பெற்றிருந்தது. அதிலுள்ள செய்யுட்களையும் உரைகளையும் படித்து ஆராய்ந்து மனனம் செய்துகொண்டேன். பொன்விளைந்தகளத்தூர் வேதகிரி முதலியார் அச்சிட்ட நைடத மூலமும் உரையுமுள்ள புத்தகமும் நாலடியார் உரையுள்ள புத்தகமும் கிடைத்தன. உரையின் உதவியால் இரண்டு நூல்களையும் ஒருவாறு பல முறை படித்துப் பொருள் தெரிந்துகொண்டேன். அவ்விரண்டு நூல்களும் எனக்கு மனப்பாடமாகி விட்டன. இடையிடையே சில சந்தேகங்கள் தோற்றின. கார்குடி சென்று கத்தூரி ஐயங்காரிடம் அவற்றைக் கேட்டுத் தெளிந்துகொள்ளலா மென்று எண்ணினேன்.

அன்னையாரின் அன்பு

என் கருத்தை அறிந்த தந்தையார் என்னை மாத்திரம் அழைத்துக்கொண்டு கார்குடிக்குச் சென்றார். அங்கே நான்கு தினங்கள் இருந்து கேட்கவேண்டியவற்றைக் கத்தூரி ஐயங்காரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஐந்தாம் நாட் காலையில் அவரிடம் விடைபெற்று நான் மட்டும் ஒரு துணையுடன் குன்னத்திற்கு வந்தேன். தந்தையார் சில தினங்கள் பொறுத்து வருவதாகச் சொல்லிக் கார்குடியில் இருந்தார்.

நான் குன்னத்திற்கு வந்து சேரும்போது என் தாயார் சில பெண்களுடன் ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்தார். என்னைக் கண்டவுடன் வேகமாக வந்து என்னைத் தழுவிக்கொண்டார். கண்ணீர் விட்டபடியே, “என்னப்பா, நீ ஊருக்குப் போனது முதல் நான் சாப்பிடவில்லை; தூங்கவில்லை. உன் ஞாபகமாகவே இருக்கிறேன்” என்று சொல்லித் தம்முடைய ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.