(உ.வே.சா.வின் என் சரித்திரம் 33 தொடர்ச்சி)

அத்தியாயம் 19: தருமவானும் உலோபியும்தொடர்ச்சி

அது வரையில் அவர் என்னைப் பிரிந்து இருந்ததேயில்லை. அப்போது எனக்குப் பிராயம் பன்னிரண்டுக்கு மேலிருக்கும். நான் அறிவு வந்த பிள்ளையாக மற்றவர்களுக்குத் தோற்றினும், என் அன்னையாருக்கு மட்டும் நான் இளங்குழந்தையாகவே இருந்தேன். தம் கையாலேயே எனக்கு எண்ணெய் தேய்த்து எனக்கு வேண்டிய உணவளித்து வளர்த்து வந்தார். தமது வாழ்க்கை முழுவதும் என்னைப் பாதுகாப்பதற்கும் என் அபிவிருத்தியைக் கண்டு மகிழ்வதற்குமே அமைந்ததாக அவர் எண்ணியிருந்தார். தாயின் அன்பு எவ்வளவு தூய்மையானது! தன்னலமென்பது அணுவளவுமின்றித் தன் குழந்தையின் நலத்தையே கருதி வாழும் தாயின் வாத்துசல்யத்தில் தெய்வத்தன்மை இருக்கிறது.

என் அன்னையார் என்னைத் தழுவிப் பிரிவாற்றாமையினால் உண்டான வருத்தத்தைப் புலப்படுத்தியபோது அங்கு நின்ற பெண்மணிகள் சிரித்தார்கள். நான் ஒன்றும் விளங்காமல் பிரமித்து நின்றேன். நான் வந்த சில தினங்களுக்குப் பிறகு என் தந்தையாரும் குன்னத்துக்கு வந்து சேர்ந்தார்.

வெண்மணிக்குச் சென்றது

குன்னத்தில் இருந்தபோது மத்தியில் அதன் கிழக்கேயுள்ள வெண்மணி யென்னும் ஊரில் இருந்த செல்வர்கள் எங்களை அங்கே அழைத்துச் சென்றனர். அவர்கள் விருப்பத்தின்படியே அங்கு அருணாசலகவி ராமாயணப் பிரசங்கம் நடந்தது. அது நிறைவேறிய காலத்தில் என் தகப்பனாருக்கு இருபது வராகன் சம்மானம் கிடைத்தது.

அமிர்த கவிராயர்

வெண்மணிக்கு அமிர்த கவிராய ரென்ற ஒருவர் ஒரு நாள் வந்தார். அப்போது அவருக்கு எழுபது பிராயமிருக்கும். அவர் அரியிலூர்ச் சடகோப ஐயங்காரிடத்தும் அவருடைய தந்தையாரிடத்தும் சில நூல்களைப் பாடம் கேட்டவர். பல நூல்களைப் படித்திராவிட்டாலும் படித்த நூல்களில் அழுத்தமான பயிற்சியும் தெளிவாகப் பொருள் சொல்லும் ஆற்றலும் அவர்பால் இருந்தன. சங்கீதப் பயிற்சியும் அவருக்கு உண்டு. அவர் இசையுடன் பாடல் சொல்வது நன்றாக இருக்கும். அவரை நான் அரியிலூரிலிருந்தபொழுதே பார்த்திருக்கிறேன். அவர் வெண்மணியில் ஊர் மணியகாரர் வீட்டில் தங்கியிருந்தார். அங்கே சிலர் முன்னிலையில் அவர் சில பாடல்களைச் சொல்லி உபந்நியாசம் செய்தார். அப்போது இடையிலே உதாரணமாக, “அக்கரவம்புனை” என்ற பாடலைக்கூறி அதற்குப் பொருளும் சொன்னார். அது திருவரங்கத்தந்தாதியில் உள்ள 28-ஆம் செய்யுள். அதற்கு முந்தி 27 செய்யுட்களில் பொருளையும் நான் கார்குடி சாமி ஐயங்காரிடம் கேட்டிருந்தேனல்லவா? “மேற்கொண்ட செய்யுட்களின் பொருளை யாரிடம் கேட்டுத் தெளியலாம்?” என்ற கவலையுடன் இருந்த நான் அமிர்த கவிராயர் 28-ஆம் செய்யுளுக்குப் பொருள் கூறியபோது மிகவும் கவனமாகக் கேட்டேன். “இவர் இந்நூல் முழுவதையும் யாரிடமேனும் பாடம் கேட்டிருக்கக்கூடும். நம் குறையை இவரிடம் தீர்த்துக்கொள்ளலாம். ஏதேனும் பொருளுதவி செய்தாவது இவரிடம் பொருள் தெரிந்து கொள்ளலாம்” என்று எண்ணினேன். உடனே தலைதெறிக்க எங்கள் வீட்டுக்கு ஓடிச் சென்று திருவரங்கத் தந்தாதியை எடுத்து வந்தேன். இருபத்தொன்பதாம் செய்யுளாகிய “ஆக்குவித்தார் குழலால்” என்பதைப் படித்துப் பொருள் சொல்லும்படி அவரைக் கேட்டேன். அதற்கும் விரிவாக அவர் பொருள் உரைத்தார். மிக்க கவனத்தோடு கேட்டு என் மனத்திற் பதித்துக்கொண்டேன். பிறகு முப்பதாவது செய்யுளைப் படித்தேன். அவர் சொல்லுவதாக இருந்தால் அந்த நூல் முழுவதையுமே ஒரே மூச்சிற் படித்துக் கேட்கச் சித்தனாக இருந்தேன். ஆனால் என் விருப்பம் அவ்வளவு சுலபத்தில் நிறைவேறுவதாக இல்லை.

“பல பாடல்களுக்கு இன்று பொருள் தெரிந்து கொள்ளலாம்” என்ற ஆவலோடு முப்பதாவது பாடலைப் படித்து நிறுத்தி அவர் பொருள் சொல்லுவார் என்று எதிர்பார்த்து வாயையே நோக்கியிருந்தேன்.

“திருவரங்கத் தந்தாதி யமகம் அமைந்தது. எல்லோருக்கும் இது சுலபமாக விளங்காது. மிகவும் கட்டப்பட்டுப் பாடங் கேட்டால்தான் தெரியும். மற்ற நூல்களில் நூறு பாடல்கள் கேட்பதும் சரி; இதில் ஒரு பாடல் கேட்பதும் சரி” என்று அவர் எதற்கோ பீடிகை போட ஆரம்பித்தார்.

ஒரு நூலைப் பாடம் சொல்லும்போது அந்நூலின் அமைப்பைப் பற்றியும் அந்நூலாசிரியர் முதலியோரைப் பற்றியும் கூறுவது போதகாசிரியர்கள் வழக்கம். அம்முறையில் அவர் சொல்லுவதாக நான் எண்ணினேன். திருவரங்கத் தந்தாதியைச் சுலபமாகத் தெரிந்துகொள்ள இயலாதென்பதை அவர் சொன்னபோது அதனை நான் அனுபவத்தில் அறிந்தவனாதலால், “உண்மைதான்; கார்குடி சாமி ஐயங்காரவர்களே இருபத்தேழு பாடல்களுக்கு மட்டுந்தான் பொருள் நன்றாகத் தெரியுமென்று சொன்னார்கள்” என்றேன்.

“பார்த்தீர்களா? அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். எவ்வளவோ தனிப்பாடல்களுக்கு அருத்தம் சொல்லிவிடலாம். நைடதம் முழுவதையும் பிரசங்கம் செய்யலாம். இந்த அந்தாதி அப்படி ஊகித்து அர்த்தம் சொல்ல வராது. அழுத்தமாகப் பாடம் கேட்டிருக்க வேண்டும். நான் எவ்வளவோ சிரமப்பட்டுக் கேட்டேன். ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு புதையலுக்குச் சமானம்”.

“புதையலென்பதில் சந்தேகமில்லை” என்று நான் என் மனத்துள் சொல்லிக்கொண்டேன்.

“இவ்வளவு பிரயாசைப்பட்டுக் கற்றுக்கொண்டதை இந்தத் தள்ளாத காலத்தில் சுலபமாக உமக்குச் சொல்லிவிடலாமா? கட்டப்பட்டுத் தேடிய புதையலை வாரி வீசுவதற்கு மனம் வருமா? மேலும், எனக்குத் தொண்டை வலி எடுக்கிறது. நான் போய் வருகிறேன்” என்று சொல்லி உடனே எழும்பிப் போய்விட்டார். நான் பெரிய ஏமாற்றத்தை அடைந்தேன். “கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லையே!” என்று வருத்தமுற்றேன்; “அக்கவிராயர் அவ்வளவு நேரம் பேசியதற்குப் பதிலாக இரண்டு செய்யுட்களுக்கேனும் பொருள் சொல்லியிருக்கலாமே!” என்று எண்ணினேன்.

உடனிருந்து எங்கள் சம்பாசணையைக் கவனித்தவர்கள் என் முகவாட்டத்தைக் கண்டு, “பாவம்! இந்தப் பிள்ளை எவ்வளவு பணிவாகவும் ஆசையாகவும் கேட்டார்? அந்தக் கிழவர் சொல்ல முடியாதென்று சிறிதேனும் இரக்கமில்லாமற் போய்விட்டாரே! திருவரங்கத்தந்தாதி புதையலென்று அவர் கூறியது உண்மையே; அதைக் காக்கும் பூதமாக வல்லவோ இருக்கிறார் அவர்?” என்று கூறி இரங்கினார்கள்.

கவிராயர் ஒரு வேளை திரும்பி வருவாரோ என்ற சபலம் எனக்கு இருந்தது. அவர் போனவர் போனவரே. நாங்கள் அந்த ஊரில் இருந்த வரையில் அவர் வரவேயில்லை.

கரும்பு தின்னைக் கூலி கொடுப்பதுபோல எனக்குப் பாடமும் சொல்லி எங்கள் குடும்பத்திற்கு வேண்டிய உதவியும் செய்த கத்தூரி ஐயங்கார் முதலியோரின் இயல்புக்கும் அமிர்த கவிராயர் இயல்புக்கும் உள்ள வேறுபாட்டை எண்ணி எண்ணி வியந்தேன். பொருட்செல்வம் படைத்தவர்களிலேதான் தருமவானும் உலோபியும் உண்டு என்று நினைத்திருந்தேன். கல்விச்செல்வமுள்ளவர்களுள்ளும் அந்த இரண்டு வகையினர் இருப்பதை அன்றுதான் நான் முதலில் அறிந்துகொண்டேன்.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.