Wednesday, December 06, 2017

சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை) – எழில்.இளங்கோவன்

சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை)

கவியோகி சுத்தானந்த பாரதியார் ஒருவரை இப்படிப் பாராட்டுகிறார்:
“செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை. தமிழின் இன்பம் நுகர வேண்டுமானால், சேதுப்பிள்ளையின் செந்தமிழைப் படிக்க வேண்டும்”
யார் இந்தச் சேதுப்பிள்ளை?
“தமிழறிஞர்களுள் மிகச் சிறந்த நாவீறு படைத்தவராக விளங்கியவர் ‘சொல்லின் செல்வர்’ இரா.பி.சேது(ப்பிள்ளை). சொல்மாரிச் செந்தமிழ்ச் சொற்கள் நடம் புரியும். எதுகையும் மோனையும் பண்ணிசைக்கும். சுவைதரும் கவிதைகள் மேற்கோளாகும். எடுப்பான நடையில் நின்று, நிதானித்து அவரின் சொற்பொழிவு இருக்கும்.” இப்படி அறிமுகம் செய்கிறார் சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை)யை, பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள்.
திருநெல்வேலி மாவட்டம் இராசவல்லிபுரம் என்ற ஊரில் பங்குனி 20, 1927 – 1896ஆம் அண்டு மார்ச்சு 2 அன்று பிறந்தார் இரா.பி.சேதுப்பிள்ளை.
இவரின் அன்னையார் பெயர் சொர்ணம்மாள். தந்தையார் பிறவிப்பெருமாள்(பிள்ளை).
ஐந்து வயதுக்குமேல், அக்கால வழக்கப்படி இவரின் கல்வி திண்ணைப் பள்ளியில் இருந்தே தொடங்கியது.
அதைச் தொடர்ந்து இராசவல்லிபுரம் செப்பறைத் திருமடத்தின் தலைவர் அருணாசல தேசிகரிடம்மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம் திருவாசகம் போன்ற நூல்களைக் கற்றார்.
அதன்பின் பாளையங்கோட்டை தூயசேவியர் உயர் நிலைப்பள்ளியில் இவரின் தொடக்கக் கல்வி அமைந்தது.
நெல்லை இந்துக் கல்லூரியில் இவர் இடைநிலைத் (இன்டர்மீடியட்) தேர்வில் தேறினார்.
இளங்கலைப் பட்டத்தைச் சென்னை பச்சயைப்பன் கல்லூரியில் பயின்று பெற்றார்.
அன்று இவர் படித்த தூயசேவியர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் சுப்பிரமணியமும்இந்துக் கல்லூரி பேராசிரியர் சிவராமனும் இவரின் தமிழார்வம் வளரத் தூண்டுகோலாக இருந்தனர்.
தொடர்ந்து சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து வழக்கறிஞர் தேர்வில் தேறினார்.
1923 ஆம் ஆண்டு நெல்லையில் வழக்கறிஞராகத் தன்னைப் பதிவு செய்து கொண்டு பணியாற்றத் தொடங்கினார். அப்பொழுது இவர் நகர் மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலும் பணியாற்றியுள்ளார்.
ஆயினும் வழக்கறிஞர் தொழிலில் நாட்டமில்லா இவர் தமிழை ஆய்வு செய்யவும்அதுகுறிந்து இலக்கிய மேடைகளில் பேசவும் தொடங்கினார்.
இவர் படித்த பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியாக இருந்த இவரைசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பேராசிரியராக அமர்த்தியது.
அப்பல்கலைக் கழகத்தில் அறிஞர் பெருமக்களான விபுலானந்த அடிகளார், சோமசுந்தர பாரதியார் ஆகியோரிடம் ஆறு ஆண்டுகள் பணி புரிந்து தன் தமிழ் அறிவை, புலமையை வளர்த்தெடுத்தார்.
1936ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியராகப் பொறுப்பேற்ற சேதுப்பிள்ளை அங்கு ஆய்வுத்துறைத் தலைவராக இருந்து போராசிரியர் வையாபுரி(ப் பிள்ளை)யின் கீழ் பணியாற்றினார்.
வையாபுரியார் தலைமையில் தொகுக்கப்பட்டுவந்த  தமிழ்ப் பேரகராதிப் பணியில் பெரிதும் பங்காற்றினார் இவர். வையாபுரியாரின் ஓய்வுக்குப்பின்னர், அப்பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செயலாற்றியவர் சேது(ப்பிள்ளை).
இவரின் முயற்சியினால் ‘திராவிடப் பொதுச் சொற்கள்’ – ‘திராவிடப் பொதுப் பழமொழிகள்’ ஆகிய இரு நூல்களை அப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.
இவர் பேராசிரியராகப் பணியாற்றிய காலங்களில் இவர் தன் தமிழ்ப் பேச்சு நடையால் மாணவர்களை ஈர்த்தார். இளங்கலை மாணவர்களிடம், தமிழ் மொழி நூலை ஆங்கிலத்தில் கற்பிக்கும் ஆற்றலுடன், மாணவர்களின் அறிவாற்றலைத் தமிழ் மொழியிலும், ஆங்கில மொழியிலும் வளர்த்தெடுத்தார்.
குறிப்பாகப், பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு ஆராய்ச்சி குறித்த கல்வியைச் செழுமைப்படுத்தச் சிறப்பு வகுப்புகள் எடுத்து வந்துள்ளார்.
இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய முதல் நூல் ‘திருவள்ளுவர் நூல் நயம். தலை சிறந்த இவரின் ஆய்வு நூல் ‘ஊரும் பேரும்’.
இவரால் எழுதப் பெற்ற நூல்கள் ஏறத்தாழ 34 இதில் வாழ்க்கை வரலாற்று நூல்கள் 3.
 இவரால் பதிப்பிக்கப் பெற்ற நூல்கள் 4.
வானொலியில் ஆற்றிய சொற் பொழிவுகளின் பல, இவரின் நூல் தொகுப்புகளாயின.
பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் ஆற்றிய இவரின் உரைகளின் தொகுப்புகளும் நூல் வடிவங்கள் பெற்றுள்ளன.
சிலப்பதிகார நூல்நயம், தமிழின்பம், தமிழ் வீரம், தமிழ் விருந்து, வேலின் வெற்றி, வேலும் வில்லும், வழிவழி வள்ளுவர், தமிழ்க்கவிதைக்களஞ்சியம், செஞ்சொற்கவிக்கோவை, ஆற்றங்கரையினிலே ஆகிய இவரின் நூல்கள் குறிப்பிடத்தக்கன.
இதில் ‘தமிழின்பம்’ என்ற நூல், மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுள்ளது.
இவரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பெற்றுள்ளன.
அடுக்குமொழி, எதுகை – மேனை, உவமைநயம், இலக்கியத் தொடருடன் அமையும் இவரின் பேச்சால் சொக்கிப்போனவர்கள் ஏராளம்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் கம்பராமாயணம் குறித்து மூன்று ஆண்டுகள் நடைபெற்ற சொற்பொழிவுகளில் சேது(ப்பிள்ளை)யின் சில சொற்பொழிவுகள் குறித்து அப்போது தமிழறிஞர்கள் புகழ்ந்து பேசியுள்ளார்கள்.
அதன் தாக்கம்தான் சென்னையில் கம்பன் கழகம் உருவானது.
சென்னை கோகலே மன்றத்தில் சிலப்பதிகாரம் குறித்து ஆற்றிய உரையின் மாட்சியை, இவரின் ’சிலப்பதிகார நூல்நயம்’ என்ற நூலில் காணலாம்.
சென்னை தங்கசாலை தமிழ் மன்றத்தில் 5 ஆண்டுகள் இவர் திருக்குறள் வகுப்பு நடத்தியிருக்கிறார் என்பது குறிக்கத்தக்க செய்தி.
இவரின் பேச்சாற்றல் சொல்லாற்றலைக் கண்ட தருமபுர ஆதினம்இவருக்குச்  ‘சொல்லின் செல்வர்’ என்ற பட்டத்தை வழங்கியது.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாகத் தமிழ்ப் பணி ஆற்றிய சேது(ப்பிள்ளை)க்கு ‘முனைவர்’ பட்டம் வழங்கியதோடு, வெள்ளி விழாவும் எடுத்து, கூடுதலாக ‘இலக்கியப் பேரறிஞர்’ என்ற பட்டத்தையும் அப்பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.
‘‘இரா.பி.சேதுப்பிள்ளையின் மொழிநடை ஆங்கில அறிஞர் அட்சனின் நடைபோன்றது’’ என்று வியந்து கூறுகிறார் சோமலே.
இப்படிப்பட்ட அறிஞர் பெருந்தகை, சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் சித்திரை 13, 1992 – 1961 ஏப்ரல் 25ஆம் நாள் இயற்கை எய்தினார்.
அப்போது அவருக்கு வயது 65தான்.
எழில்.இளங்கோவன்







 – கருஞ்சட்டைத்தமிழர் திச.3,201

Tuesday, December 05, 2017

தமிழ்த் தென்றல் – 2/2 : கி.ஆ.பெ.


தமிழ்த் தென்றல் 2/2

  பெரியாரைக் கொலை செய்யும்படி மறைமலையடிகள் தூண்டினார் என்று அடிகளார்மீது வழக்குத் தொடரப் பட்டிருந்தது. அதைக் கண்டு பெரிதும் கவலைப்பட்டுப் பல்லாவரத்துக்கு என்னை அழைத்துக்கொண்டு போய் மறைமலையடிகளிடம் ஒரு கடிதத்தை வாங்கச் செய்து அதைப் பெரியாரிடம் காட்டி, அவ்வழக்கைத் திரும்பப்பெறச் செய்தற்கு முதற்காரணமாயிருந்து என்னைத் தூண்டியவரும் திரு, வி. க. அவர்களே யாவார்.
  திரு.வி.க. அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள தன்னுடைய வரலாற்று நூலில் என்னைப்பற்றி நீண்ட தொரு கட்டுரை எழுதியிருக்கிறார்கள். அது அவர் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல் அமைந் திருக்கிறது. பிறகு வயது முதிர்ந்து, நடைதளர்ந்து, கண்பார்வை குறைந்து, செயல் இழந்து, அவரது இல்லத்தில் இருக்கும் பொழுது பலமுறை சென்று அவர்களைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் அவரைப் பார்க்கும்பொழுது முனைவர்(டாக்டர்) மு. வ. அவர்களையும் அங்குக் கண்டு மகிழ்வேன். முனைவர்(டாக்டர்). மு.வ. தமிழ்த் தென்றலைத் தன் தலைவராகவும் தனது ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் கருதி வந்தவர். அதுமட்டுமல்ல; இறுதிக் காலத்தில் அவரருகில் இருந்து அவருக்குத் தொண்டும் புரிந்து வந்தவர்.
  ஒரு தடவை நான் திரு. வி. க. அவர்களிடம் சென்ற ‘பொழுது, முனைவர்(டாக்டர்)  மு. வ. என்னிடம் கூறினார். ”ஐயா அவர்கள் இப்பொழுதும் ஒரு நூல் எழுதியிருக்கிறார்கள் என்றும், அந் நூலுக்கு ‘படுக்கைப் பிதற்றல்‘ என்று பெயர் வைத்து ‘உலகை நோக்குமின்’ என்று தொடங்கப் பெற்றிருக்கிறது’’ என்றும் கூறினார்கள். தமிழ்ப் புலவர்கள் தமிழகத்திலிருந்து தமிழ் மக்களுக்கென எந்த இலக்கியங்களைச் செய்தாலும், அந்நூல்களுல் முதற் பாட்டில் முதலடியில் முதற் சொல்லாக உலகத்தை வைத்துச் செய்யும் ஒரு மரபை திரு. வி. க. அவர்களின் படுக்கைப் பிதற்றலிலும் கண்டு வியந்தேன்.
  மற்றொரு முறை காணச் சென்றபொழுது கூனிக் குறுகித் தரையில் முடங்கிக் கிடந்தார்கள். அப்பொழுதும் முனைவர்(டாக்டர்)  மு. வ, அவர்களை அங்குக் கண்டேன். “காலமெல்லாம் தமிழுக்குத் தொண்டு செய்துள்ள இந்தத் தமிழ் உடல் தங்கியிருக்க ஒரு சொந்த வீடு இல்லை. வாடகை வீடு. அதிலும் வீட்டைக் காலி செய்யும்படி வீட்டுக்காரர் வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு விடுத்திருக்கிறார். என்ன செய்வதென்று தெரிய வில்லை. நாமெல்லாம் சேர்ந்து நிதி திரட்டி ஒரு வீடு வாங்கி வைப்பது நலமாகும்’ என்று முனைவர்(டாக்டர்)  மு. வ. கூறினார். அப்படியே செய்வோமென்று செட்டி நாட்டரசருக்கும், மதுரை கருமுத்து தியாகராச (செட்டியா)ருக்கும், வயவர்(சர்) பொ. தி.(பி. டி.) இராசனுக்கும், ஊ. பு. அ. (W. P. A.) செளந்திர பாண்டிய (நாடா)ர் அவர்களுக்கும் நான்கு கடிதங்களை அங்கிருந்து எழுதி அனுப்பி, திருச்சி வந்து சேர்ந்தேன். சில நாட்கள் கழித்து கருமுத்து அவர்களிடமிருந்து, ஒரு கடிதம் வந்தது. உடைத்துப் பார்த்தேன், அவர் திரு. வி.க. அவர்களுக்கு அனுப்பியிருந்த பெருந் தொகைக்குரிய காசோலை ஒன்றும், அவர் அதை ஏற்க மறுத்து திரு.செட்டி.யாருக்கே திருப்பி அனுப்பி எழுதி யிருந்த மடலின் படியும் இருந்தன. திரு.வி.க. மடலில் குறிப்பிட்டிருந்த சொற்றொடர் என்ன தெரியுமா? ”நான் வாழ்நாளெல்லாம் செய்யாத ஒரு தவற்றை இக்கடைசி நாளில் செய்யும்படி என்னை வற்புறுத்த மாட்டீர்களென நம்புகிறேன்” என்பதுதான். இதை, நான் முனைவர்(டாக்டர்)  மு. வ.வுக்கு அறிவித்தேன். அவரும் என்னைப் போலவே இம்முயற்சியைக் கைவிட்டு விட்டார்.
  கடைசியாக ஒரு முறை நான் கண்டபொழுது திரு.வி.க. அவர்கள் படுக்கையில் அசைவின்றிக் கிடந்தார். கி.ஆ.பெ. வந்திருக்கிறார்’ என்று முனைவர்(டாக்டர்) மு.வ. அவர்கள் காதருகில் சென்று உரக்கக் கூறினார். திரு.வி.க. கையை அசைத்து உட்காரச் சொன்னார். நான் அவரருகில் சென்று அவரது கையை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு,  “ஐயா! நாட்டுக்கு என்ன சொல்லுகிறீர்கள்? மொழிக்கு என்ன சொல்லுகிறீர்கள்? மக்களுக்கு என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதையே அவர் மிகவும் ஒசை குறைந்த சொற்களால் .திரும்பக் குறிப்பிட்டு ”நாடு இருக்கிறது……மொழி இருக்கிறது…… மக்கள் இருக்கிறார்கள்… நீங்களும் இருக்கிறீர்கள். பார்த்துக்கொள்ளுங்கள்’’ என்று கூறினார்கள். நாங்கள் கண் கலங்கினோம். ”இப்போது இவ்வாறு சொல்ல யார் இருக்கிறார்கள்?” என்று எண்ணும் பொழுது, உள்ளம் வேதனையையே அடைகிறது. என் செய்வது? செய்வது ஒன்றுமில்லை யென்றாலும், வாய் திறந்து வாழ்த்தவாவது செய்யலாம் அல்லவா!
வாழட்டும் திரு.வி.க. புகழ்! வளரட்டும் திரு.வி.க. மரபு!
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்
எனது நண்பர்கள்

Saturday, December 02, 2017

தமிழ்த் தென்றல் – கி.ஆ.பெ. 1/2

தமிழ்த் தென்றல் 

 தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்கள் தமிழ்த். தொண்டு, தொழில் தொண்டு, சமயத்தொண்டு, அரசியல் தொண்டு, சமூகத் தொண்டு ஆகிய ஐவகைத் தொண்டும் தன்னலங் கருதாது செய்து வந்த தமிழகத்தின் தனிப் பெருந்தலைவர். பிற்காலத்தில் இத்தனையிலிருந்தும் ஒய்வு எடுத்துக் கொண்டு, இராயப்பேட்டையிலுள்ள அச்சகத்தில் தன் தமையனார் உலகநாத(முதலியா)ர் அவர்களுடன் இருந்து, எழுத்துப்பணி புரிந்தபொழுது நான் அடிக்கடி அவர்களைச் சந்தித்துப் பேசி மகிழ்வதுண்டு. மாறுபட்ட கட்சியினரிடத்தும், மாறுபட்ட கொள் கையுடையவர்களிடத்தும் சிறிதும் வெறுப்படையாமல் மனம் திறந்து பேசி மகிழ்ச்சியடையும் பெருங்குணத்தை, அவரிடம் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். ‘தேச பக்தன்’ என்ற ஒரு நாளிதழை நடத்தி, அதன் ஆசிரியராக இருந்து, அதன் தலையங்கங்களில் சிக்கலான செய்திகளைக்கூட எளிய தமிழில் முதன் முதலாக எழுதி வெளியிட்ட பெருமை அவருக்கு உண்டு. அக்காலத்தில் அரசியல் கூட்டங்களில் பல தலைவர்கள் ஆங்கிலத்திலேயே பேசுவது வழக்கம். அத்தகையோரை மீறி, நல்ல தமிழில் அரசியல் மேடைகளில் பேசி, பொது மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து பெரும்: பாராட்டுதலைப் பெற்றவர் திரு. வி. க. அவர்கள்.
  புதுமையான கருத்துகளைக் கொண்ட சிறந்த நூல்கள் பலவற்றை அழகிய தமிழ் மொழியில் எழுதி அவர் தமிழ் மக்களுக்கு வழங்கியிருப்பது பெரிதும் பாராட்டுதலுக்குரியது. அவற்றில் மிகச் சிறந்து விளங்குவது ‘பெண்ணின் பெருமை’யும், ‘காந்தியடிகள் வரலாறு’ம். அக்காலத்தில் தமிழகத்தை அரசாண்ட ஆங்கிலேயர்கள் திரு. வி. க. அவர்கள் மீது தேசத் துரோகக் குற்றத்தைச் சாட்டிச் சிறையில் அடைத்து விட்டனர். அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவர்கள்  வயவர்(சர்) பி. தியாகராச(செட்டியா)ர் அவர்களும், வயவர்(சர்)  ப.தி.(P. T.) இராசன் அவர்களும், ஆளுநர் அவர்களிடம் தூது சென்று அவர்களை விடுவித்து மகிழ்ந்த செய்தி இன்னும் என் நினைவில் இருக் கிறது.
 ஒரு முறை குற்றாலத்தில் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம். திரு. வி. க. அவர்கள் அருகிலுள்ள வ.வே.சு.ஐயரைப் பார்க்கச் சென்றபோது, என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியபோது, அவர் சொல்லிய, சொற்களைக் கண்டு நான் பெரிதும் வியந் தேன். அச்சொற்கள் : ‘இவர் திருச்சி இளைஞர். விசுவநாதம், ஈவேரா.வின் தொண்டர். நாயக்கருக்கு செல்லுமிடமெல்லாம் இப்படிப்பட்ட நல்ல இளைஞர்கள் கிடைத்து விடுகிறார்கள், நமக்குக் கிடைப்பதில்லை. என்ன செய்வது” என்பது தான்.
(தொடரும்)
முத்தமிழ்க்காவலர் கி..பெ.விசுவநாதம்
எனது நண்பர்கள்

Friday, December 01, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 30 – வல்லிக்கண்ணன்


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 30

  சிறிதளவு உரிமை கிடைத்தால், விடைத்துக் கத்தும் இயல்பினர், அடிமைப்படுத்தினால் அடங்கி வாழும் பண்பினர், தடம் புரண்டலையும் தறுதலைக் குட்டிகள் என்றெல்லாம் வருணிக்கிறார் கவிஞர். மக்கள் மக்களாய் வாழ மக்களே தக்க தீர்ப்பைத் தருவரோ என்றும் எண்ணுகிறார்.
  எழுத்தாளர்கள் பற்றி மீண்டும் சொல் சாட்டை சொடுக்குகிறார் பெருங்கவிக்கோ.
‘ஏற்று வளர்ப்பதே வாழ்நா ளெல்லாம்
பயிலும் நெறியாய்ப் பாரில் வாழ்பவர்
உயிலில்* ஒருவர்க்கு உரிமை செய்தல் போல்
அயில்வேல் எழுத்தை அடிமை செய்பவர்
ஆளும் வர்க்க ஆட்டம் தோதாய்
நாளும் பாடும் நலிந்த பாடகர்!
சூழ்நிலைத் தோதாய் சுதிஇசை கூட்டித்
தாழ்ந்து காணும் சங்கீத வித்துவான்கள்
சமுதாயப் புண்ணைத் தரம் கீறி ஆற்றும்
அமரத்து வத்தை அறியாக் கூலிகள்
சமயம் வந்தால் தன்னினமேலேயே
இமயப் பழியை எடுத்தே எறிந்து
காட்டிக் கொடுக்கும் கயமை ஊற்றுகள்
வாட்டும் வறுமை மாற்றா வழியினர்’
இவர்களிடையிலும் ஒப்பிலா அறிஞர், உயர்ந்த சான்றோர் பற்பலர் இருக்கிறார்கள். இவர்களோ சிற்பி கையில் செயல்படா உளிபோல் வாழ்கிறவர்கள் என்று குறிப்பிடுகிறார் கவிஞர். இவர்கள் வாயில்லாப் பூச்சிகள் என்றும், தாழும் நிலையே தான் வந்த போலவும், வாயில் இல்லா வீட்டினைப் போலவும் தாயகத்தில் இருக்கும் மாயப் புலிகள் என்றும் கூறுகிறார்.
(தொடரும்)
வல்லிக்கண்ணன்: 
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்
* சொல் தெளிவாகத்  தெரியவில்லை

மறைமலையடிகள் 5/5 – கி.ஆ.பெ

     12 நவம்பர் 2017      கருத்திற்காக..


(மறைமலையடிகள் 4/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி)

 

மறைமலையடிகள் 5/5 

நூறாண்டு வாழ்வது எப்படி?’ என்று ஒரு நூலை எழுதி வெளியிட்ட அடிகளார் அவர்கள் 75 ஆண்டுகளில் இயற்கை எய்தினார்கள். அவர்களது உடலை எரியூட்ட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அவரது உடலை எரியூட்டாமல் அடக்கம் செய்து ஒரு நினைவுச் சின்னத்தை அங்கு எழுப்ப வேண்டும் என்று அவருடைய மக்கள் மாணிக்கவாசகத்திடமும், திருநாவுக்கரசிடமும் தெரிவித்தேன். அதைக் கேட்டு அவர்கள் வருந்தி
“‘அடிகளாரே தமது உடலைப் புதைக்காமல் எரியூட்ட வேண்டுமென்று கட்டளையிட்டிருக் கிறார்கள் அண்ணா” என்று கதறி அழுதார்கள். நானும் கண்ணிர் சிந்தி சென்னையிலிருந்து அங்கு வந்த முனைவர்(டாக்டர்) மு.வ. உட்பட ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள் கண்ணிர் சிந்திக்கதறி அழ, அழ, அவரது உடலுக்கு எரியூட்டப்பட்டது. நானும் கீழ்க்காணுமாறு அழுதேன்:
என்று காண்போம்?
அன்பிற்கோர் நிலைக்களமே! ஆர்வலர்க்கோர்
ஆரமுதே! அடைந்தார் தம்மைத்
தன்பிறவி பெற்ற பயன் தம்மனோர் பெற
என்றும் தகவு கூறி
அன்புருவாய்த் திகழ்ந்துவந்த ஆன்ற பெரும்
மறைமலையே! மணியே! நின்றன்
இன்புருவத் திருபுருவைத் தமிழன்பை
இன் குரலை என்று காண்போம்?
பிறகு என்னுடைய தமிழர்நாடு இதழில் கீழ்க்காணும் பாடல்களைப் பாடி வெளியிட்டேன்.
மலையே! மறையே! மறைமலையே! சாய்ந்தனையோ!
கலையே! அறிவே! கடலே மறைந்தனையோ!
தலையே! தமிழே! தவமே அழிந்தனையோ!
இலையே! என நாங்கள் ஏங்கியழிப் போயினையோ!

தமிழும் அலறியழ! தமிழ்த்தாயும் குமுறி அழ!
தமிழிளைஞர் விழ்ந்து அழ தமிழ்ப்புலவர் புலமைஅழ
தமிழ்நாடு இழந்துஅழ தமிழ் நூல்கள் தனித்து அழ
தமிழ்த்தலைவா போயினையே! தமிழ்ளங்கு போய்ச் சேரும்?
நீசாய்ந்தாய் என்றாலும் நினதுநெறி சாயவிலை
நீமறைந்தாய் என்றாலும் நின்தொண்டு மறையவிலை
நீ அழிந்தாய் என்றாலும் நின் நூல்கள் அழியவிலை
நீஒழிந்தாய் என்றாலும் நின்நாடு ஒழியவிலை!
அன்பும் அறமும் அறிவும் அருந்தமிழும்
என்பும் உருகும் இன்குரலும் நற்பண்பும்
இன்சொல்லும் ஏற்காது இழிந்த தமிழ்நாட்டில்
இன்றுவரை வாழ்ந்துவந்த தெண்ணுங்கால்வியப் பன்றோ?
பெரியாரைப் போற்றும் பெருங்குணத்தை இழந்துவிட்டு
சிறியாரைப் போற்றிச் சீரழியும் தமிழ்மண்ணில்
உரியார் புதைப்பர் என ஒர்ந்தும் அதற்கொப்பாமல்
எரிக்க உடலை, எலும்பெறிவிர் கடலினுக்கு என்றாய் அந்தோ!
தமிழ்ப்பகையை ஒழிக்காமல் தமிழ் அன்பையே ஒழித்தோம்
தமிழ்க்குறையை அழிக்காமல் தமிழ் நிறைவைத்தான் அழித்தோம்
தமிழ்மொழியை தமிழ் அறிவை தமிழ்க்கடலை வாழவைத்துத்
தமிழ் வாழ்வு வாழாமல் தமிழ் எரித்து வாழ்கின்றோம்!
  பல்லாவரத்திலுள்ள அவரது நூல் நிலையத்தை நான் பல முறை பார்த்திருக்கிறேன். நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் அவரது குறிப்புகள் இருக்கும். இதனால் அவர் அத்தனை நூல்களையும் படித்து நன்கு ஆராய்ந்திருக்கிறார் என்ப்து தெரியவரும். அவருக்குப்பின் அது ஒரு பெரிய நூல் நிலையமாக அமையவேண்டுமென்று விரும்பியவர்களில் நானும் ஒருவன். அஃது இப்போது நிறைவேறி இருக்கிறது. சென்னை இலிங்கிச் செட்டித்தெரு 105 ஆவது எண் உள்ள கட்டடத்தில் மறைமலையடிகளின் நூல்நிலையம்* நன்கு அமைக்கப் பெற்றிருக்கிறது. வெளியூரிலிருந்து சென்னைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் கட்டாயம் கண்டு களிக்கக் கடடியதாக மிகப்பெரிய கட்டடத்தில் மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளது. இதற்காகப் பெரு முயற்சி எடுத்துக் கொண்ட திரு. வ. சுப்பையா( பிள்ளை) அவர்களைப் பெரிதும் பாராட்டுகிறேன். அடிகளாரின் பிறந்த ஊராகிய நாகப்பட்டினத்தில் மறைமலையடிகளின் உருவச் சிலையொன்று புலவர் கோவை இளஞ்சேரன் முயற்சியால் நல்லதோர் இடத்தில் அமைக்கப் பெற்றிருக்கிறது. இச் சிலைத் திறப்புவிழாவில் தமிழக முதல்வர் முனைவர்(டாக்டர்) கலைஞர் மு. கருணாநிதி தலைமை வகித்தார். நான் சொற்பொழிவு நிகழ்த்தி மகிழ்ந்தேன். தமிழக அரசு சென்னையில் கட்டியுள்ள ஒரு பெரிய பாலத்திற்கு மறைமலையடிகள் பாலம் என்று: பெயரிட்டிருப்பது பாராட்டுதற்குரியது. திருச்சிராப்பள்ளிப் பெரிய கடைவீதியில் வரதராசப் பெருமாள் கோவில் தெருவில் தமிழகப் புலவர் குழு தனக்கென ஒரு பெருங்கட்டடத்தை வாங்கி, அக்கட்டடத்தின் மன்றத்திற்கு மறைமலையடிகள் மன்றம் எனப் பெயரிட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
 இவை போதா. நாடு முழுவதும் அவரது பெயரால் மன்றங்களை நிறுவியும், நகரம் முழுவதும் அவரது சிலைகளை எழுப்பி வைத்தும் வணக்கம் செலுத்தியாக வேண்டும். வாழட்டும் அவரது புகழ்! வளரட்டும் அவரது தொண்டு!
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்
எனது நண்பர்கள்

Friday, November 24, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 29 – வல்லிக்கண்ணன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 29
பகைமை வளர்த்து நாட்டு வளர்ச்சியைக் கெடுக்கிறார்கள். அரசியல்வாதிகளை நோக்கிப் பெருங்கவிக்கோ கடுமையாகக் கண்டனக்குரல் கொடுக்கிறார்.
பொய்கை போன்ற பொற்றிரு நாட்டில்
பொய்நீர்ச் சாக்கடை புகுந்திடச் செய்தீர்!
கால மெல்லாம் கட்சிகள் வளர்த்து
ஞாலம் இன்று ஏல மிடுகிறீர்!
மனச்சாட்சி கொன்று மறுபடி மறுபடி
தினச்சாட்சி பொய்மை திளைத்து மகிழ்கிறீர்!
தன்னலம் இன்றி இந்நாடு உயர
என்ன செய்தீர்? எல்லாம் சுயநல
வேட்டைக் காடாய் வேடிக்கை செய்தீர்!
ஆட்டுக்(கு) ஓநாய் காவலா? தீய
பேயை மணந்த பெரும்பிழை யாளரே,
நாயின் வால்நீர், நன்கு நிமிர்த்திட
யாரால் முடியும்?
என்று பாடுகிறார்.
  மக்களின் நிலைமையும் அவருக்கு மனக்கசப்பு அளிக்கிறது. விளக்கின் ஒளியை விரும்பிச் சுற்றும் விட்டில் பூச்சிகள் அவர்கள். அப்போதைக்கப்போது யார் சுவை தரினும் மயங்கிச் சுகிக்கும்  மூங்கை உயிர்கள்.
பெரும்பணி கொண்டலை பேதைகள், என்றும்
திருந்தா மல்வாழ் செயல்மறை கதவுகள்
வருந்தி உழையாதே வளங்கள் தேடிடும்
பொருந்தா வாழ்க்கைப் போலிகள் எவரும்
தடிஎடுத் திட்டால் சத்தமில் லாத
படிவாழத் தெரிந்த பதடிகள்!’ 
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – “வாயுள நாவுள’’ – மறை. திருநாவுக்கரசு


     19 நவம்பர் 2017      கருத்திற்காக..

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் “வாயுள நாவுள’’

தண்டலம் முதலியாரிடம் ‘கற்றுக் கொள்வன வாயுள நாவுள’’
விளக்கம்
 தண்டலம் முதலியார் என்றது தண்டலம் பாலசுந்தரம் முதலியாரை ஆம். அடிகள் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணி ஏற்றுத் தம் குடும்பத்தாருடன், சென்னையிற் குடியேறினார். அடிகளார்க்குச் சென்னை வாழ்க்கை. இனிது இயங்கியதற்குப் பேருதவி புரிந்தவர் இம்முதலியாரேயாவர். இவர் அரசாங்க மொழி பெயர்ப்பாளராய்ப் பணிபுரிந்தவர். சிறந்த குடியில் தோன்றியவர். புலமையறிந்து போற்றும் புலமையர். அடிகளைத் தன் மகனெனக் கொண்டு அவரையும் அவர் குடும்பத்தையும் தம்மில்லத்தே வைத்துச் சில காலம் பாதுகாத்தவர் ‘கண்ணை இமை காப்பதுபோல அடிகள் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தார்.அடிகள் தம் குடும்ப நகைகளை முதலியாரிடம் அடைக்கலமாக வைத்திருந்தார். முதலியாரின் குடும்பத்தாரும் அவரைப் போலவே அடிகள் குடும்பத்தாருக்குப் பேரன்புடன் உதவிகள் செய்த வண்ணமாயிருந்தனர். அடிகள் தம் நாட்குறிப்புகளில் முதலியார்தம் அன்பு, வன்மை, உதவி முதலியவற்றை அவ்வப்போது குறித்துள்ளனர். இம்முதலியாரின் பேரர்தாம், சென்னை மாநகராட்சித் தலைவராய் விளங்கிப் புகழுடன் திகழும் த.(டி.)செங்கல்வராயன் ஆவர்
  அப்பர் தேவாரப் பாட்டொன்றின் முதலடி என்பதற்குப் பஞ்சாட்சரத்தை வாயினாலும், நாவினாலும் கூறுகின்றோர் என்றேன். முதலியாரின் வினா ”‘வாயுள’ என்றாற்போதுமே! ‘நாவுள’ என்று கூற வேண்டியதேன்” என்பதாம்.
மறை. திருநாவுக்கரசு

Saturday, November 18, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (28) – வல்லிக்கண்ணன்


[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (27)   தொடர்ச்சி]

 

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (28)

அறந்தவறாமல் வாழ்ந்தால்
அகத்தினிய வலிமை ஓங்கும்
திறந்தவறாமல் வாழ்ந்தால்
செம்மைசால் நலங்கள் தேங்கும்
சிறந்தபேர் பணிகள் செய்தால்
செய்தவக் கனிபழுக்கும்
உறவெனக் கவிதை கண்டால்
உளமூன்றும் வாழ்க்கை சூடும்!”
மனிதர்களுக்குள் காணப்படும் மாறுபாடுகள் புற்றியும், அவை நீங்குவதற்கான வழிகள் குறித்தும் பெருங்கவிக்கோ சிந்தனைகள் வளர்த்துள்ளார்.
மன்பதை அல்லலில் மனவேறு பாட்டினில்
மதி கெடத் துடித்தலும் ஏன்? ஏன்?
மனிதர்கள் மனிதர்க்குள் மாவேறு பாடுகள்
மல்கிடப் பிழிந்ததும் ஏன்? ஏன்?
துன்பமும் துயரமும் மாந்தர் சுயநலமும்
தோளினில் ஏறிய(து) ஏன்? ஏன்?
துரோகமும் வஞ்சமும் பஞ்சமும் வதைத்திடத்
துன்மார்க்கம் ஓங்கலும் ஏன்? ஏன்?
வன்மனம் தன்னலம் பல்கிடும் மதங்களை
வாய்மை யென்றே நம்பியே
மனிதர்கள் தமக்குள்ளே வேற்றுமை கற்பித்தே
வழக்காடும் தன்மை யன்றோ?
உன் மதம் என் மதம் என்று பேதங்கள் வளர்க்காமல் எல்லோரும் ஒன்றாகி, மனிதர்கள் அனைவரும் சமம். என்ற உணர்வோடு ஒரு மதம் சமரசமாகி, உள்ளொளி பெற்ற வள்ளலார் காட்டிய வழியில் சென்றால் ஒரே உலகமாய் ஒரு குடும்பம் போல், வாழலாமே என்று. கவிஞர் கருதுகிறார்.
பெருங்கவிக்கோவின் சீற்றத்துக்கு ஓர் எடுத்துக் காட்டாக இவற்றைக் குறிக்கலாம்
வீரம் எங்கடா விவேகம் எங்கடா மானமின்றிச்
சோரம் போகிறாய் தூ! தூ! தூ! நீயொரு சொரணையிலா
பேரம் பேசிடும் பேடித் தமிழனே! உன்னையும் ஓர்
சேர சோழநற் பாண்டிய மறத்தியா பெற்றிட்டாள்?
கட்சிப் பெயராலே வெட்டித்தனத் திமிர் வீம்பாலே
குட்டிச் சுவராகக் கெட்டுப் போவதில் பயனென்ன?
பெட்டிப் பாம்பு போல் முட்டிப்போட்டுநீ தில்லியிலே
மட்டியான பின் கிட்டே வந்து ஏன் கதைக்கிறாய்?
என்று சாடுகிறார்.
தமிழரின் தற்கால நிலை கவிஞரின் கோபத்தை அதிகப்படுத்தக் கூடியதாகவே இருக்கிறது.
விரிந்த சிந்தையும் வெற்றித் திருநோக்கும்
புரிந்த பேரறமும் புடம்போட்ட கொள்கைகளும்
ஞாலத்தில் ஓங்க நனிபெற்ற நம்மினத்தார்
ஏலத்துப் பொருளாகி எடுப்பார் கைப்பிள்ளையாகி
தமிழ்ப் பண் பாட்டுத் தலைமையைத் தான்மறந்து
இமிழ்கடல் சூழ்வையம் இறுமாப்பாய்ப்படை யெடுத்த
அவனவனுக்கேஆம் ஆள்தோதாய் ஆளாகி
புவனத்தில் கேவலப் பொழுதுபோக்குக் கடிமையாய்
மாற்றார் தமக்கு மருக்கொழுந்து வாடையாய்
கூற்றுவன் போல் கொடியர் கொடுமைக்குக் காவலாய்
வாயடங்கி வயிற்றை வளர்த்தால் போதுமெனும்
மாயத்தில் கட்டுண்டார் மதிமறந்தார்! விதி மறந்தார்!
இச்சைத் துரோகியர்க்குப் பாய்விரித்துப் பயந்து ஒடுங்கியிங்கே
பிச்சைக்காரர் போல் பேயடிமை ஆகிவிட்டார்
வந்தவனெல்லாம். தமிழன் வாகான பிடரியிலே
குந்தினான் அவனை குப்புறத் தள்ளுகின்ற
அறிவின்றி அமர்ந்தார் நம் அறம் மறந்தார் மறம்துறந்தார்!
நெறியதுவே என்று நெடிதுநாள் கழித்து விட்டார்.

வேறொரு இடத்தில், இன்றைய இழிநிலையை இவ்விதம் விவரிக்கிறார்
கிடைத்ததைச் சுருட்டித் தம்தம்
கிழமையே வளர்க்க எண்ணும்
உடைப்பெரும் சுயநலத்தார்
உயிர்த்தமிழ் நாட்டில் இன்றோ
நடைபோடப் பெருகி விட்டார்
நானிலப் பொதுந லத்தை
விடைகூறி அனுப்பி விட்டார்,
விடிவெள்ளி மறைத்தார் அம்மா!

புரிந்தவர் கூட இந்நாள்
புரியாமல் நடிக்கின் றார்கள்.
சரியான கொள்கை நெஞ்சம்
தானேற்கும் கொள்கை கூறத்
தெரியாமல் அல்ல!
சொன்னால் தினக்கூலி கிடைக்கா (து) என்றே
உரிமையை அடகு வைத்தார்
உயிர்ப்பெரும் அறிஞர் இந்நாள்’
  நாட்டைக் கெடுப்பவர்களில் அரசியல் வாதிகள் முதன்மையானவர்கள். மொத்தமாய் நாட்டின் மோசம் நீக்கிட அவர்கள் சித்தம் வைப்பதில்லை. அவரவர் கட்சிக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்பதிலேயே அவர்கள் கருத்தாக இருக்கிறார்கள். அதற்காக அவரவர் கொள்கைகளை ஒதுக்கிவிட்டு கூட்டு சேர்கிறார்கள்
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்

Tuesday, November 14, 2017

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – மறை. திருநாவுக்கரசு

      12 நவம்பர் 2017      கருத்திற்காக.


மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் 

சூரியநாராயண சாத்திரியாரிடம் நீண்ட நேரம் பேசினேன்.
  விளக்கம்: இவர்தாம் வி.கோ. சூரிய நாராயண சாத்திரியார், என்னும் மாபெரும் புலவர், இவர் கிறித்துவக் கல்லூரியின் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் ஆவர். அடிகள் தனித் தமிழியக்கம் காண்பதற்கு முன்பே தமது வடமொழிப் பெயரைத் தனித்தமிழிற் பரிதிமாற் கலைஞன்’ என்று மாற்றிக் கொண்டவர். ‘தம் கல்லூரியிற் பணிபுரியத் தேவைப்பட்ட தமிழாசிரியரைத் தேர்ந்து கொள்ள நடைபெற்ற புலமையாளர் தேர்வில் அடிகளைத் தேர்ந்து கொண்டவர். அப்பணியை அடிகளைப் பெறச் செய்தவர். அடிகள்பால் அளவில்லா நட்பு கொண்டவர். புலமைத் தமிழில் உயர்ந்த நடையில் நாடக நூல்கள் சிலவும் எழுதியவர். பேரழகர், முப்பத்து மூன்றாம் அகவையில் மண்ணுலக வாழ்வை நீத்தவர்.
  தமிழுணர்ச்சியில் வீறு கொண்ட இவர் தம் அருமை பெருமைகளையும், அடிகளுக்கும் இவர்க்கும் நிகழ்ந்த நட்பின் இனிமைகளையும் எனது நூலில் (மறைமலையடிகள் வரலாறு பக்கம் 20, 21, 22, 23) காணலாம்.
– மறை. திருநாவுக்கரசு