Monday, May 08, 2023

சான்றோர் பெருந்தகை மு.வ. – 1/3- முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

 




(சொல்லின்செல்வர்சேதுப்பிள்ளை 5/5 தொடர்ச்சி)

10. சான்றோர் பெருந்தகை மு.. 1/3


வடார்க்காடு மாவட்டத்திவ் வாலாசா என்னும் ஊர் உளது. அவ்வூரின் அருகில் அழகுற வேலமலை நிமிர்ந்து நிற்கின்றது. வேலமலையின் அடிவாரத்தே வேலம் என்னும் எழிற் சிற்றுார் அமைந்துள்ளது. அச்சிற்றுாரே சிற்றுாரும் பேரூரும் தமிழ்கூறும் நல்லுலகும் ‘முவ’ என்ற இரண்டு எழுத்துக்களால் ஒருமுகமாக மாண்புடன் போற்றும் முனைவர்மு. வரதராசனார் அவர்களின் சொந்த ஊராகும்.

பிறப்பு

சொந்த ஊர் வேலம் என்றாலும், முனைவர் அவர்கள் பிறந்தது வடார்க்காடு மாவட்டத் திருப்பத்துார் ஆகும். 1912ஆம் ஆண்டிலே பிறந்த முனைவர் அவர்களின் தொடக்கக் கல்வி திருப்பத்துாரிலும், பின்னர் வாலாசாவிலும் கழிந்தது. இவர்களின் பாட்டியாரே இவர்களைப் பாராட்டிச் சீராட்டிச் செல்லமாக வளர்த்தவர்கள். இவர்களின் இனிய நினைவினை நினைவுகூர எழுந்ததே முனைவர்அவர்களின் ‘விடுதலையா?’ என்ற சிறுகதை. தம்மை அன்புடன் வளர்த்து ஆளாக்கிய பாட்டியாரை நினைத்துக் கொண்டால், முனைவர் அவர்கள் பழைய நினைவுகளையெல்லாம் உணர்ச்சியோடு பேசுவார். முனைவர் அவர்களின் குடும்பம் ஊரில் செல்வாக்காக விளங்கிய குடும்பம். மேலும் முனைவர் அவர்கள் குடும்பத்திற்கு ஒரே ஆண்மகனாராவர். உடன் பிறந்தவர் இருவரும் தமக்கையும் தங்கையும் ஆவர். தந்தையாரின் அறிவுத் திறமும் அன்னையாரின் உறுதி நெஞ்சமும் முனைவர் அவர்கள் பெற்ற குடும்பச் சொத்து ஆகும். முனைவர் அவர்கள் படிக்கும் நாளில் கணக்குப் பாடம் சிறப்பாக வந்தது. அப்பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்து முதன்மையாகத் தேர்வு பெறுவார்கள். திருப்பத்துர் நகராண்மை உயர்நிலைப் பள்ளியில் 1928ஆம் ஆண்டு பெரும் பள்ளி இறுதித் தேர்வு (S.S.L.C) எழுதி வெற்றி பெற்றார்கள்.

முதற் பணி

அக்காலத்தில் இந்த நாள் போன்று ஆங்காங்கே கல்லூரிகள் அமைந்திருக்கவில்லை. கல்லூரிக் கல்வி யென்றால் சென்னைக்கே வந்து படித்தல் வேண்டும். வீட்டிற்கு ஒருமகன் என்ற நிலையில் முனைவர் அவர்கள் தொடர்ந்து கல்லூரிக்கல்வி கற்க இயலவில்லை. குடும்பச் சூழல் காரணமாக வரி வருவாய்த்துறையில் (Revenue Department) எழுத்தராகச் (Clerk) சேர்ந்தார்கள். ஏறத்தாழ அப்பணியினைத் திறம்பட மூன்று ஆண்டுகள் ஆற்றினார்கள். உயர் அலுவலர்களின் ஒருமித்த பாராட்டுக்கு உரியவரானார்கள். மனச்சான்றை மதித்துக் கடமை உணர்வோடு பணியாற்றிய காரணத்தால் வேலைப் பளு இவர்களுக்கு மிகுதியாகத் தரப்பட்டது. இதனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வேலைப்பளுவும் அதன் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறையும் இவரை அந்தப் பணிக்கு ஒரு முழுக்குப் போடச் செய்தன. 1931ஆம் ஆண்டு முதல் 1934 வரை மூன்றாண்டுகள் ஊருக்கு வந்து ஓய்வு பெற்று உடல் நலத்தினைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

தமிழ்க் கல்வி

உடலை ஓம்பிய நேரத்தில் பேரறிஞர் கூன் இயற்கை மருத்துவம் பற்றிய நூல் ஒன்றினை இவர்கள் படித்தார்கள். அந்நூல் இவர்கள் வாழ்வில் நல்ல திருப்பத்தினைத் தந்தது. அதன்வழித் தம் உடல் நலம் காத்துக் கொண்ட இவர்கள் உளநலத்திற்குரிய தமிழ்க் கல்வியினை மேற்கொண்டார்கள். இளமை தொட்டே இவர்கள்பால் குறைவற நிரம்பயிருந்த தமிழார்வம் தொடர்ந்து தமிழ் நூல்களைக் கற்றுவரச் செய்தது. யாழ்ப்பாணம் திரு. முருகேச பண்டிதர் அவர்களின் மாணவர் திரு. முருகைய முதலியார் அவர்களிடம் இவர்கள் தமிழ் நூல்களைக் கற்று வரலானார்கள். 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் முதல்னிலைத் தேர்வு (Vidwan preliminary) எழுதி வெற்றி பெற்ற இவர்கள், திருப்பத்துார் நகராண்மை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியரானார்கள். இருபத் திரண்டு வயதில் தமிழாசிரியர் பணி தொடங்கிய இவர்கள், மறு ஆண்டிலேயே (1935) வித்துவான் நிறைநிலைத் (vidwan Final) தேர்வு எழுதிச் சென்னைப் பல்கலைக் கழகத்திலேயே முதலாமவராகத் தேறித் திருப்பனந்தாள் காசிமடத்தின் ஆயிரம் ரூபாய்ப் பரிசினைப் பெற்றார்கள். ஆசிரியப் பணியோடு தேர்விற்கும் படித்துச் சிறப்பாகத் தேறியமை எடுத்த செயலைத் திறம்படச் செம்மையுற நிறைவேற்றும் இவர்கள் ஆற்றலை இனிமையுறப் புலப் படுத்தும். தொடர்ந்து கல்வி பயின்று பி.ஓ.எல். (B.O.L) தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்கள்.

பச்சையப்பன் பணி

1939ஆம் ஆண்டில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியப் பணி ஏற்றார்கள். அக்காலை பின்னாளில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் இலக்குமணசுவாமி முதலியார் அவர்கள் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக இருந்தார்கள். அவர்கள் இவர் தம் வளர்ச்சிக்கு வாய்ப்புத் தந்து ஊக்கமூட்டி வந்தார்கள். 1945ஆம் ஆண்டில் வினை சொற்களைப் (Verbs) பற்றி ஆங்கிலத்தில் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிப் (M.O.L.) பட்டம் பெற்றார்கள். அது பொழுது தமிழ்த் துறையினைத் தலைமை தாங்கி நடத்திய மோசூர் கந்தசாமி முதலியா ரவர்கள் இவர்கள்பால் பேரன்பு செலுத்தி இவர்களை வழிப்படுத்தி வந்தார்கள். அவர்கள் மறைவிற்குப் பிறகு 1946ஆம் ஆண்டில் இவர்கள் தமிழ்த்துறைத் தலைவராக நியமிக்கப் பெற்றார்கள். 1948ஆம் ஆண்டில் ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’ (The treatment of Nature in Sangam Literature) என்ற பொருள் குறித்து ஒர் ஆராய்ச்சிக் கட்டுரையினை எழுதிச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் ழுதன் முதலில் ‘முனைவர்(டாக்டர்)’ பட்டம் பெற்றார்கள்.

வகுப்பறையில்

முனைவர் அவர்கள் எந்தப் பாடத்தை எடுத்துக் கொண்டாலும் அதனை மாணவர் மனங்கொளக் கற்பிப்பார்கள். சங்க இலக்கியத்தில் நல்ல புலமை அவர் களுக்குச் சிறப்பாக அமைந்திருந்தது. சங்க இலக்கிய மாந்தரின் நுண்மையான உள்ளத்தினை, அதிலும் குறிப்பாகத் தலைவியின் நெஞ்சப்பாங்கினை, அவர்கள் அமைதியோடும் உணர்ச்சியோடும் உணர்த்தும் பொழுது வகுப்பறையில் இருந்து கேட்கவேண்டும். இலக்கணப் பாடத்தைத் தெளிவாக நடத்துதல், மொழி நூலின் திறம் காட்டல், இலக்கிய ஆராய்ச்சியின் சிறப்பைப் புலப்படுத்துதல், ஆக இப்படிப் பல துறைகளிலும் அவர்தம் சொற்பொழிவு கருத்திற்கு விருந்தாக அமைந்தது. ஆரவாரமின்றி அமைதியாகக் கருத்துகளை எடுத்து மொழிவார். அவர்களுடைய சொற்பொழிவிற் கருத்தலைகள் வந்து போகும். நல்ல சிந்தனைச் சிற்பி. அவர்கள் வாழ்க்கையில் உணர்ச்சிக்கு அதிகம் இடம் கொடாமல் உண்மைக்கும் நடுவு நிலைமைக்கும், அறிவிற்கும் இடந்தந்து வாழ வேண்டும் என்பதனை அவர்கள் பெரிதும் வற்புறுத்துவார்கள். சுருங்கச் சொன்னால். அவர்கள் நிகழ்த்தும் சொற்பொழிவுகள் மன நலம் சேர்ப்பன வாகும். பொது மன்றங்களில் அமையும் இவர்தம் சொற் பொழிவுகளும் அவ்வாறே ஆரவாரத்திற்கிடமின்றி அமைதியுடன் கருத்தாழத்துடன் அறநெறியில் அமைந்து துலங்கக் காணலாம். 1953ஆம் ஆண்டு சென்னை-தேனாம்பேட்டை யில் நடைபெற்ற ஐந்தாம் தமிழ் விழாவின் போது இலக்கிய அரங்கிற்குத் தலைமை தாங்கிய இலங்கை அமைச்சர் திரு. நடேசப் பிள்ளை அவர்கள், இவர்களைத் ‘தமிழ்நாட்டின் இலக்கிய நோபெல் பரிசாளர்’ என்று அவையோருக்கு அறிமுகப்படுத்திய காட்சியும், அதுபொழுது இவர்கள் ‘செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி’ இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தென, இல்லவர் அறிதல் அஞ்சி, மழலை மென்சொல் பயிற்றும் நாணுடை அரிவை என்ற அகநானுாற்றுத் தொடர்களை விளக்கிப் பேசிய இலக்கியப் பேச்சும், இன்றும் பலர் கண்களிலும் செவிகளிலும் நிறைந்துள்ளன. 1957ஆம் ஆண்டு கொண்டாடப் பெற்ற முதல் இந்தியச் சுதந்திரப்போர் நூற்றாண்டு விழாவில் சென்னை அரசு இயல்துறை வல்லுநரென இவர்களைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டும் பரிசும் வழங்கியது.

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Saturday, May 06, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 35: விவாகமுயற்சி

      07 May 2023      அகரமுதல



(உ.வே.சா.வின் என் சரித்திரம் 34 தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 20

விவாகமுயற்சி

வெண்மணியில் இராமாயணப் பிரசங்கம் நிறைவேறியவுடன் நாங்கள் மீண்டும் குன்னத்திற்கே வந்து சேர்ந்தோம். எங்களுக்குத் தலைமையான பற்றுக்கோடாக அந்த ஊர் இருந்தது. கணக்குப் பிள்ளை சிதம்பரம் பிள்ளையும் அவருடைய அன்பர்களும் குன்னத்தில் எங்களுக்கிருந்த பற்றைத் தங்கள் ஆதரவினால் பின்னும் உறுதி பெறும்படி செய்து வந்தனர். சிதம்பரம் பிள்ளையினிடம் பல ஏட்டுச்சுவடிகள் இருந்தன. அவற்றைத் தனியே ஓர் அறையில் தொகுத்து வைத்துக் கருத்துடன் அவர் பாதுகாத்து வந்தார். அச்சுவடிகளிற் சிலவற்றை நான் சில சமயங்களிற் படித்துப் பார்ப்பேன். ஒருநாள் பெரும்புலியூர் (பெரம்பலூர்)ப் பள்ளிக்கூடத்துத் தலைமை உபாத்தியாயராகிய இராயர் ஒருவர் குன்னத்திற்கு வந்திருந்தார். அவர் தமிழ்ப்பயிற்சி உடையவர். நான் தமிழ் நூல்களைப் படிப்பதையும் புத்தகங்கள் இல்லாமல் துன்புறுவதையும் உணர்ந்தார். முத்தப்பிள்ளையிடம் இரவலாகப் பெற்றிருந்த திருக்குறள் உரைப் புத்தகத்தை நான் படித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து அந்தப் புத்தகம் இரவலென்பதைத் தெரிந்துகொண்டு, “என்னிடம் இந்தப் புத்தகம் ஒன்று இருக்கிறது; அங்கே வந்தால் தருகிறேன்” என்று சொன்னார். அவருடைய இரக்கத்தைக் கண்டு நான் ஆறுதலுற்றேன். குன்னத்தில் இருந்த காலத்தில் சில முறை பெரும்புலியூர் போக முயன்றும் அங்ஙனம் செய்ய இயலவில்லை. முத்தப் பிள்ளையின் புத்தகத்தை அவரிடமே கொடுத்துவிட்டேன்.

செய்யுள் இயற்றல்

சதகங்கள், மாலைகள் முதலிய நூல்களைப் படித்துப் படித்து உண்டான பழக்கத்தால் அவற்றின் ஓசையைப் பின்பற்றி நான் செய்யுள் இயற்றத் தொடங்கினேன். எதுகை மோனைகள் அமைய வேண்டுமென்பது பழக்கத்தால் ஒருவாறு தெரிய வந்தது. ஆனால் அசை, சீர், தளை, தொடை முதலிய பாகுபாடுகளோ வேறுவகையான யாப்பிலக்கண விதிகளோ எனக்குத் தெரியா. சதகப் பாட்டுக்களைப் போன்ற விருத்தங்களைப் பாடலானேன். குன்னத்திலுள்ள ஆதி கும்பேசுவரர் விசயமாகவும், மங்களாம்பிகை விசயமாகவும், ஆயிரவல்லி என்னும் துர்க்கையின் விசயமாகவும் சில பாடல்களை இயற்றினேன். தாயுமானவர் பாடல், பட்டினத்துப்பிள்ளையார் பாடல் முதலியவற்றிலே கண்ட கருத்துகளை அவற்றில் அமைத்தேன். “நான் பெண்களின் அழகிலே ஈடுபட்டுக் காலத்தைக் கடத்தி விட்டேன். அவர்கள் மயக்கத்திற்பட்டு வாழ்க்கையை வீணாக்கினேன்” என்றும், “செல்வரைப் புகழ்ந்து பாடி அலைந்து துன்புற்றேன்” என்றும் கருத்துகளை அமைத்துச் செய்யுட்களை இயற்றினேன். பழம்பாடல்களின் ஓசையை மாதிரியாக வைத்துக்கொண்டதைப்போலவே அவற்றின் கருத்துகளையும் அப்படியே அமைத்துக்கொள்வதை ஒரு பெருமையாக நான் கருதினேன்.

ஒரு நாள் நான் இயற்றிய செய்யுட்கள் சிலவற்றை என் பிதாவினிடம் சொல்லிக் காட்டினேன். அவர் அவற்றைக் கேட்டு என்னைப் பாராட்டி எனக்கு உத்சாகத்தை உண்டாக்குவாரென்று எண்ணினேன். அவரோ, “அட பைத்தியமே! இப்படியெல்லாம் பாடாதே” என்றார்.

“அவர்களெல்லாம் பாடியிருக்கிறார்களே; நான் பாடுவதில் என்ன தவறு?” என்று நான் கேட்டேன்.

“நீ சிறு பையன்; அவர்கள் உலக அனுபவத்தில் கட்டப்பட்டவர்கள். அவர்கள் சொன்னவற்றை யெல்லாம் நீயும் சொல்வது பொருத்தமன்று, பெண்மயலிற் சிக்கி வருத்தப்பட்டே னென்று அவர்கள் சொல்லலாம்; நீ சொல்லலாமா?” என்றார்.

அவர் சொன்ன தடை அப்போது எனக்கு நன்றாக விளங்கவில்லை. என் பாட்டில் என் அனுபவந்தான் இருக்க வேண்டுமென்பதை நான் தெரிந்துகொள்ளவில்லை. பெண்மயலிற் சிக்குவதற்குரிய பிராயமே வராத நான் அதிற் சிக்கி உழன்று வைராக்கியம் பிறந்தவனைப்போலே பாடுவது பேதமையென்பதை நன்றாக உணரவில்லை. அவர்கள் பாடினார்கள்; நானும் பாடினேன். அவர்கள் பாட்டை அடிக்கடி சொல்லுவது, அதன் ஓசையை ஒட்டி நானும் பாடுவது, அவர்கள் பாட்டிலுள்ள கருத்தைச் சிறிது மாற்றி வைப்பது என்னும் இந்த முயற்சிகளைத் தவிர, என் மனத்தில் யோசித்துக் கற்பனை செய்து ஒரு கருத்தை அமைக்க நான் முயலவில்லை: நான் இயற்றிய செய்யுட்களைப் பல முறை சொல்லிச் சொல்லி இன்புறுவேன்; அவற்றைச் சொல்லும்போது ஒரு வகையான பெருமிதத்தை அடைவேன்.

கல்யாணக் கவலை

வர வர எனது கல்வி அபிவிருத்தியடைந்து வருவதை என் தந்தையார் கவனித்து வந்தார். என்னைப் பற்றிய ஞாபகமே அவருக்கு நாளுக்கு நாள் அதிகமாயிற்று. என் கல்வியைப் பற்றிய முயற்சிகளைச் செய்துகொண்டு வந்த அவருக்கு என் விவாகத்தைப் பற்றிய எண்ணமும் உண்டாயிற்று. பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் இளம்பருவத்திலேயே கல்யாணம் செய்துவிடும் வழக்கம் அக்காலத்தில் அதிகமாகப் பரவியிருந்தது. ஒரு குறிப்பிட்ட பிராயத்திற்குள் கல்யாணமாகாவிட்டால் பெரிய அகௌரவமென்று கருதி வந்தார்கள்.

எனக்குப் பதின்மூன்றாம் பிராயம் நடந்தபோதே என் தந்தையாருக்கு என் விவாகத்தைப் பற்றிய கவலை உண்டாகிவிட்டது. அக்காலத்தில் பெண்ணுக்காகப் பிள்ளையைத் தேடும் முயற்சி பெரும்பாலும் இல்லை; பிள்ளைக்காகப் பெண்ணைத் தேடும் முயற்சியே இருந்தது. “பெண்ணுக்கு வயசாகி விட்டதே” என்ற கவலை பெற்றோர்களுக்கு இருப்பதில்லை; “எங்கே இருந்தாவது ஒருவன் வந்து கல்யாணம் பண்ணிக்கொண்டு போவான்” என்ற தைரியம் இருந்தது. பிள்ளையைப் பெற்றவர்களோ தங்கள் பிள்ளைகளுக்குத் தக்கபருவம் வருவதற்கு முன்பே நல்ல இடத்தில் பெண் தேடி விவாகம் செய்விக்கவேண்டுமென்ற கவலையுடன் இருப்பார்கள்.

இத்தகைய கால நிலையில் என் தந்தையாரும் எனக்கு ஏற்ற பெண்ணைத் தேடத் தொடங்கினர். கல்யாணத்தில் பிள்ளை வீட்டினருக்கே செலவு அதிகம். குன்னத்தில் பெற்ற ஆதரவினால் ஊக்கமடைந்த என் தந்தையாருக்கு முன்பெல்லாம் குடும்பக்கடனை அடைக்க வேண்டுமென்ற நோக்கம் இருந்து வந்தது. நாளடைவில் அந்த நோக்கம் மாறி, “நிலத்தையேனும் விற்றுக் கடனை அடைத்து விடலாம்; இவனுக்கு எப்படியாவது கல்யாணத்தைப் பண்ணி வைத்துவிட வேண்டும். வரும் பணத்தை அதற்காகச் சேர்க்க வேண்டும்” என்ற எண்ணமே வலியுற்றது. ஒருபால் பெண்ணைத் தேடும் முயற்சியும், ஒருபால் என் கல்யாணத்துக்குரிய பொருளைத் தேடும் முயற்சியும் நடைபெற்று வந்தன. இந்த முயற்சிகளில் தந்தையாரோடு என் சிறிய தந்தையாரும் சேர்ந்துகொண்டனர்.

களத்தூர் சென்றது

பெரும்புலியூர்த் தாலுகாவிலுள்ள களத்தூரினராகிய இராமையங்கா ரென்பவர் குன்னத்திற்கு அடிக்கடி வருவார். அவர் நாங்கள் வசித்து வந்த வீட்டினருக்கு உறவினர்; சுரோத்திரியதார்; நல்ல செல்வாக்குடையவர்; தமிழிலும் பழக்கமுள்ளவர். என் தந்தையாருக்கும் அவருக்கும் பழக்கம் உண்டாயிற்று; இருவரும் சிநேகிதராயினர். அக்கனவான் என் தந்தையாருக்கு என் விவாகத்தைப்பற்றிய கவலை இருப்பதை நன்கு உணர்ந்து, “நீங்கள் களத்தூருக்கு வந்தால் விவாகத்திற்கு வேண்டிய அனுகூலங்கள் கிடைக்கும். பணம் வேண்டுமேயென்று நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்று சொல்லி அழைத்தார். தமக்குச் சங்கடங்கள் நேரும்போதெல்லாம் இவ்வாறு அன்பர்கள் உதவ முன் வருவதைக் கடவுளின் திருவருளாகவே எண்ணி மகிழும் தந்தையார் அவர் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

இராமையங்கார் தம் ஊருக்குச் சென்று சில தினங்களுக்குப் பிறகு எங்களை அழைத்து வரும்படி ஒரு வண்டியை அனுப்பினார். நாங்கள் அவ்வண்டியிற் சென்று களத்தூரை அடைந்தோம். எங்களுடன் சிறிய தந்தையாரும் சிறிய தாயாரும் வந்தனர்.

எங்களை வருவித்த ராமையங்கார் தனிகர். அவருக்கு ஒரு பெரிய மெத்தை வீடு உண்டு. அதில் ஒரு பாகத்தை ஒழித்துக் கொடுத்து எங்களை இருக்கும்படிச் சொன்னார். நாங்கள் அதில் தங்கினோம். எல்லா வகையான சௌகரியங்களும் அங்கே கிடைத்தன.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.

Monday, May 01, 2023

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 5/5 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

 


(சொல்லின்செல்வர்சேதுப்பிள்ளை 4/5 தொடர்ச்சி)

9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 5/5

நடை நலம்

1. சேதுப்பிள்ளை அவர்களின் நடை கலைபயில் தெளிவும். கட்டுரை வன்மையும் கொண்டது.

2. செய்யுளின் இனிமை கொண்ட செந்தமிழ் நடை. இதனை நாவலர் சோமசுந்தர பாரதியார் ‘செய்யுளோசை ஒழுகுகின்ற அவரது தெள்ளிய தமிழ் நடை’ என்று போற்றுகின்றார்.

3. இவர்தம் உரைநடையில் மேடைப் பேச்சின் எதிரொலியை ஆங்காங்கே காணலாம்.

4. இரா. பி. சேதுப்பிள்ளையின் பேச்சு நடையும்.கட்டுரை நடையும் ஏறக்குறைய திரு. வி. க. அவர்களின் பேச்சு நடையையும் எழுத்து நடையையும் ஒத்ததாகவே இருக்கும்,

‘உரைநடையில் தமிழைப்போல் நுகரவேண்டுமானால் திரு. வி. க., சேதுப்பிள்ளை ஆகிய இருபுலவர்களின் செந்தமிழைச் செவியில் மடுக்க வேண்டும்.’

என்ற யோகி சுத்தானந்த பாரதியின் கூற்றும் இதனை உண்மைப்படுத்துகிறது.

5. இவர்தம் நடை தனித்தமிழ் நடையாகும். எதுகை மோனை இன்பத்திற்காகக்கூட இவர் வடமொழிச் சொற்களைக் கையாள்வதில்லை. இவர்தம் தனித் தமிழ் ஆரவாரமற்றது. திட்ப நுட்பம் சான்றது.

அருமையான தமிழ்ச்சொல் ஒன்றிருக்க ஆங்கிலத்தை எடுத்தாளுதல் அறிவீனம் அல்லவா? கரும்பிருக்க இரும்பைக் கடிப்பாருண்டோ?
– அலையும் கலையும், ப. 32.

என்ற வினா, இவர்தம் தமிழ் ஆர்வத்தை அன்றோ புலப்படுத்துகின்றது.

6. இவர்தம் நடையில் எதுகையும் மோனையும் மிகுதியாக இடம் பெறும். சான்றாகப் பின்வரும் பகுதியைப் காட்டலாம்.

“காஞ்சி மாநகரம் தெய்வம் மணக்கும் திருநகரம். எம்மருங்கும் கோயில்களும், கோட்டங்களும் நிறைந்து, இறையொளி வீசும் இந்நகரில் “கச்சி ஏகம்பா!” என்று கைகூப்பித் தொழுவோரும், “கஞ்சி வரதப்பா!” என்று கசிந்துருகி நிற்பாரும எண்ணிறந்தவர். கண்ணுக்கினிய பூஞ்சோலையின் இடையே, ஒரு மாவின் கீழ்க் கோயில் கொண்ட மங்கை பங்கனை “ஏகம்பத்துறை எந்தாய் போற்றி” என்று அருந்தமிழ் மலரால் அருச்சனை செய்தார் மாணிக்கவாசகர்.”
– ஆற்றங்கரையினிலே. ப. 9.

7. பழந்தமிழ் இலக்கிய நூலின் கருப்பொருளை நுட்பமாக ஆய்ந்து அதன் சொற்பொருள் நயங்களை எளியோரும் எளிதில் உணரும்வண்ணம் திட்பமாகக் கூறும் பாங்கினை இவர் நடையில் காணலாம்.

8. முன்னோர் மொழி பொருளைப் பொன்னே போல் போற்றும் திறத்தினையும் இவர் நடையில் காணமுடிகிறது.

9. ஏற்ற இடங்களில் சிறந்த இலக்கியப் பகுதிகளை அளவறிந்து மேற்கோளாகக் காட்டும் நோக்கினையும் உடையதாக அமைகிறது.

10. அழகு தமிழினை மட்டுமின்றிப் பழகு தமிழின் இனிமையையும் காணலாம். இலக்கியச் சுவையும், ஆராய்ச்சிக் குறிப்புகளும், அனுபவ உண்மைகளும் ஆங்காங்கே இணைந்து படிப்போர் நெஞ்சத்தில் தமிழின் இனிமையைப் பதிக்கும் உயர் நடை இவர் நடை.

11. இவர்தம் உரைநடைத் தமிழுக்கு ஒளியும் உயிரும் ஊட்டும் உயர் பண்புகள் எளிமையும் இனிமையும் தெளிவும் திண்மையும் ஆகும்.

12. தமிழ் மொழியின் சொல் வளத்தினை—அதன் பெருமையை அருமையை அறிவிக்கும் உயர்ந்த நடை இவர் நடை.

13. சொல்லொடு சொல்லையும் கருத்தொடு கருத்தையும் ஒப்புநோக்கிச் சுவையையும் பயனையும் இணைக்கும் உன்னத நடை

14. பேராசிரியரின் உரைநடை பயிலுவோர் உள்ளத்தில் தமிழார்வத்தைப் பெருக்கெடுக்க வைப்பது. சேதுப்பிள்ளை அவர்கள் காலத்தில் தமிழார்வம் குறிப்பிடத் தக்க (அல்லது) பாராட்டும் அளவில் இல்லை. ஆயின் அதனைத் தட்டி எழுப்பி அந்த ஆர்வத்தை வளர்த்த பெருமை சேதுப்பிள்ளையின் நடைக்கு உண்டு.

15. தக்க இலக்கியச் சொற்களையும் வழக்குச் சொற் றொடர்களையும் மணிமிடை பவளம் போலக் கட்டுரைகளில் எடுத்தாண்டமையால் இவர்தம் நடை படிப்பவரின் தமிழ் உரைநடைத் திறத்தை உயர்த்தியது. தனித்தமிழின் இனிமை யையும் ஏற்றத்தையும் நிலைபெறச் செய்தது. தமிழ்ச் சொற்கள் சிலவற்றின் வரலாற்றையும் சிறப்பையும் உலகுக்கு அறிமுகப்படுத்தியது.

கொடை வள்ளல்

தமிழ்ப் புலவர்கள் என்றால் வறுமையில் வாடுபவர்கள் என்ற ஒரு நிலை இருந்தது. இந்நிலையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொடை வள்ளலாகத் திகழ்ந்தார் சேதுப் பிள்ளை.

அண்ணாமலை, சென்னைப் பல்கலைக் கழகங்களுக்குத் தனித்தனியே இருபத்தையாயிரம் வெண்பொற்காசுகள் வழங்கினார். இதன்படி ஆண்டுதோறும் இப்பல்கலைக் கழகங்களில் தமிழ் இலக்கியம், சமயம் பற்றிய சொற்பொழிவுகள் நடைபெற வேண்டும். வட்டித் தொகையாக வரும் ஆயிரத்தில் ஒரு பாதி சொற்பொழிவாளருக்கும் மறுபாதி பொழிவை நூலாக்கவும் பயன்பட வேண்டும் என்றும் திட்டமிட்டார். இராசவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் திருக் கோவிலைப் புதுப்பிக்கும் பணிக்கு 2000 வெண்பொற்காசுகள் வழங்கினார். அக்கோயிலின் குடமுழக்கு விழா நாளில் எண்ணுாறு வெண்பொன் மதிப்புள்ள பெருமனி ஒன்றை வாங்கிக் கோவிலின் முன் மண்டபத்தில் தொங்கவிட்டார்.

திருநெல்வேலி நகர்மன்றத்தைச் சார்ந்த மகப்பேறு மருத்துவமனைக்குப், பின்னாளில் தம் நூல்களுக்கு வரும் வருவாய்த் தொகையை எழுதி வைத்தார்.

பெற்ற சிறப்புகள்

1. ‘தமிழகம்—ஊரும் பேரும்’ என்ற நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசாக ஐந்நூறு வெண்பொற்காக களைப் பெற்றார்.

2. ‘தமிழின்பம்’ நூலுக்காக மத்திய அரசிடம் ஐயாயிரம் வெண்பொற்காசுகளைப் பரிசாகப் பெற்றார்.

3. 1950ஆம் ஆண்டின் தருமபுர ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களால் ‘சொல்லின் செல்வர்’ என்று பாராட்டப் பெற்றார்.

4. 1957இல் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் ‘இலக்கியப் பேரறிஞர்’ (டி.லிட்) என்ற பட்டம் வழங்கப் பெற்றுப் பாராட்டப் பெற்றார்.

5. 1961இல் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் இலட்சுமணசாமி முதலியார் தலைமையில் வெள்ளி விழாக் கண்டார். வெள்ளிவிழாத் தலைவர் இரா.பி.சே. அவர்களின் திருவுருவப் படத்தை அன்று திறந்து வைத்தார். வெள்ளிவிழா நினைவு மலர் ஒன்று முனைவர் தனிநாயக அடிகள் அவர்களால் வெளியிடப்பெற்றது.

6. தம் அறுபத்தைந்தாவது வயதுவரை பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பணியேற்ற சேதுப்பிள்ளை, இருபத்தைந்து ஆண்டுகளாக இணையிலாத் தமிழ்ப் பணியாற்றியுள்ளார். அவர் விளம்பரத்தை விரும்பாமல் கடமையுணர்ச்சியுடன் பலருடைய அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்மதிப்பிற்கும் உரியவராக அரிய பணி ஆற்றினார். அவர் தமிழ் மொழியிடத்து அளவிறந்த பற்றுப் பூண்டவர். எனினும் பிறமொழிகளைச் சிறிதும் வெறுப்பவரல்லர். இஃது இவரிடம் விளங்கும் மிகவும் போற்றத்தக்க அம்சம். அவர் தமக்காகவோ தம்மைச் சார்ந்தவருக்காகவோ என்பால் உதவி நாடி எந்த நாளும் வந்ததில்லை.”

என்னும் துணைவேந்தரின் உரை, இவர்தம் பெருமைக்குப் பெருமை சேர்க்கிறது.

பண்பு நலன்கள்

1. இறையுணர்வு மிக்கவர்-சைவரான இவர் தஞ்சை நாட்டு அன்னப்பன் பேட்டைத் திருமடத் தலைவராய் விளங்கிய சபாபதி தாயுமானவர் என்பவரிடம் சைவ சமய தீக்கை பெற்றுத் தாம் ஒர் உண்மைச் சைவர் என்பதை உ ண்மைப்படுத்தினார்.

2. செப்பறை அடிகளார் சிவஞான தேசிகர், திருமணம் செல்வகேசவ முதலியார் இவர்களைச் சிந்தை மறவாத தன்மையினால் குருபக்தி மிக்கவர் என்பது புலனாகிறது.

3. அன்னை சொர்ணம்மாள் பெயரில் பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியதால், தாயிடம் இவர் கொண்ட அன்பும் மதிப்பும் புலனாகின்றன.

4. தாய்மொழிப் பற்று மிக்கவர். நாட்டுப்பற்றும் மிக்கவர்.

தமிழுக்கு ஒரு நல்லது என்றால் அவர் உடலிலே தெம்பு, முகத்திலே உவகை; தமிழுக்கு ஓர் இடையூறு என்றால் அவர் உடலிலே தளர்ச்சி, முகத்திலே கவலை இப்படியாக அவர் தமிழைத் தம் வாழ்வோடு வாழ்வாக இணைத்து வாழ்கிறார்.

என்ற மு.வ. அவர்களின் போற்றுதல் மொழி இவர்தம் தமிழ்மொழிப் பற்றின் மேன்மையை அறிவுறுத்துகின்றது.

மறைவு

தமிழுக்காக வாழ்ந்து தமிழ் உலகிற்குச் சீரும் சிறப்பும் தேடித்தந்த இரா.பி. சேதுப் பிள்ளை அவர்கள், 1961ஆம் ஆண்டு வெள்ளிவிழாக்கண்ட பன்னிரண்டாம் நாள் மண்ணுலக வாழ்வை நீத்து விண்ணுலகம் எய்தினார்.

நிறைவுரை

இவ்வாறாக இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் வாழ்க்கை ஏற்றமும் வீறும் உடையதாகத் துலங்கச் சொற் பொழிவுகள் நிகழ்த்தியும், நூல்கள் வழங்கியும், கட்டுரைகள் எழுதியும், ஆய்வுக்கு வழிகாட்டியும் அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டு சொற்களால் வடித்துக்கூற இயலாச் சீர்மை வாய்ந்ததாக விளங்குகின்றது.

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Saturday, April 29, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 34

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 33 தொடர்ச்சி)

அத்தியாயம் 19: தருமவானும் உலோபியும்தொடர்ச்சி

அது வரையில் அவர் என்னைப் பிரிந்து இருந்ததேயில்லை. அப்போது எனக்குப் பிராயம் பன்னிரண்டுக்கு மேலிருக்கும். நான் அறிவு வந்த பிள்ளையாக மற்றவர்களுக்குத் தோற்றினும், என் அன்னையாருக்கு மட்டும் நான் இளங்குழந்தையாகவே இருந்தேன். தம் கையாலேயே எனக்கு எண்ணெய் தேய்த்து எனக்கு வேண்டிய உணவளித்து வளர்த்து வந்தார். தமது வாழ்க்கை முழுவதும் என்னைப் பாதுகாப்பதற்கும் என் அபிவிருத்தியைக் கண்டு மகிழ்வதற்குமே அமைந்ததாக அவர் எண்ணியிருந்தார். தாயின் அன்பு எவ்வளவு தூய்மையானது! தன்னலமென்பது அணுவளவுமின்றித் தன் குழந்தையின் நலத்தையே கருதி வாழும் தாயின் வாத்துசல்யத்தில் தெய்வத்தன்மை இருக்கிறது.

என் அன்னையார் என்னைத் தழுவிப் பிரிவாற்றாமையினால் உண்டான வருத்தத்தைப் புலப்படுத்தியபோது அங்கு நின்ற பெண்மணிகள் சிரித்தார்கள். நான் ஒன்றும் விளங்காமல் பிரமித்து நின்றேன். நான் வந்த சில தினங்களுக்குப் பிறகு என் தந்தையாரும் குன்னத்துக்கு வந்து சேர்ந்தார்.

வெண்மணிக்குச் சென்றது

குன்னத்தில் இருந்தபோது மத்தியில் அதன் கிழக்கேயுள்ள வெண்மணி யென்னும் ஊரில் இருந்த செல்வர்கள் எங்களை அங்கே அழைத்துச் சென்றனர். அவர்கள் விருப்பத்தின்படியே அங்கு அருணாசலகவி ராமாயணப் பிரசங்கம் நடந்தது. அது நிறைவேறிய காலத்தில் என் தகப்பனாருக்கு இருபது வராகன் சம்மானம் கிடைத்தது.

அமிர்த கவிராயர்

வெண்மணிக்கு அமிர்த கவிராய ரென்ற ஒருவர் ஒரு நாள் வந்தார். அப்போது அவருக்கு எழுபது பிராயமிருக்கும். அவர் அரியிலூர்ச் சடகோப ஐயங்காரிடத்தும் அவருடைய தந்தையாரிடத்தும் சில நூல்களைப் பாடம் கேட்டவர். பல நூல்களைப் படித்திராவிட்டாலும் படித்த நூல்களில் அழுத்தமான பயிற்சியும் தெளிவாகப் பொருள் சொல்லும் ஆற்றலும் அவர்பால் இருந்தன. சங்கீதப் பயிற்சியும் அவருக்கு உண்டு. அவர் இசையுடன் பாடல் சொல்வது நன்றாக இருக்கும். அவரை நான் அரியிலூரிலிருந்தபொழுதே பார்த்திருக்கிறேன். அவர் வெண்மணியில் ஊர் மணியகாரர் வீட்டில் தங்கியிருந்தார். அங்கே சிலர் முன்னிலையில் அவர் சில பாடல்களைச் சொல்லி உபந்நியாசம் செய்தார். அப்போது இடையிலே உதாரணமாக, “அக்கரவம்புனை” என்ற பாடலைக்கூறி அதற்குப் பொருளும் சொன்னார். அது திருவரங்கத்தந்தாதியில் உள்ள 28-ஆம் செய்யுள். அதற்கு முந்தி 27 செய்யுட்களில் பொருளையும் நான் கார்குடி சாமி ஐயங்காரிடம் கேட்டிருந்தேனல்லவா? “மேற்கொண்ட செய்யுட்களின் பொருளை யாரிடம் கேட்டுத் தெளியலாம்?” என்ற கவலையுடன் இருந்த நான் அமிர்த கவிராயர் 28-ஆம் செய்யுளுக்குப் பொருள் கூறியபோது மிகவும் கவனமாகக் கேட்டேன். “இவர் இந்நூல் முழுவதையும் யாரிடமேனும் பாடம் கேட்டிருக்கக்கூடும். நம் குறையை இவரிடம் தீர்த்துக்கொள்ளலாம். ஏதேனும் பொருளுதவி செய்தாவது இவரிடம் பொருள் தெரிந்து கொள்ளலாம்” என்று எண்ணினேன். உடனே தலைதெறிக்க எங்கள் வீட்டுக்கு ஓடிச் சென்று திருவரங்கத் தந்தாதியை எடுத்து வந்தேன். இருபத்தொன்பதாம் செய்யுளாகிய “ஆக்குவித்தார் குழலால்” என்பதைப் படித்துப் பொருள் சொல்லும்படி அவரைக் கேட்டேன். அதற்கும் விரிவாக அவர் பொருள் உரைத்தார். மிக்க கவனத்தோடு கேட்டு என் மனத்திற் பதித்துக்கொண்டேன். பிறகு முப்பதாவது செய்யுளைப் படித்தேன். அவர் சொல்லுவதாக இருந்தால் அந்த நூல் முழுவதையுமே ஒரே மூச்சிற் படித்துக் கேட்கச் சித்தனாக இருந்தேன். ஆனால் என் விருப்பம் அவ்வளவு சுலபத்தில் நிறைவேறுவதாக இல்லை.

“பல பாடல்களுக்கு இன்று பொருள் தெரிந்து கொள்ளலாம்” என்ற ஆவலோடு முப்பதாவது பாடலைப் படித்து நிறுத்தி அவர் பொருள் சொல்லுவார் என்று எதிர்பார்த்து வாயையே நோக்கியிருந்தேன்.

“திருவரங்கத் தந்தாதி யமகம் அமைந்தது. எல்லோருக்கும் இது சுலபமாக விளங்காது. மிகவும் கட்டப்பட்டுப் பாடங் கேட்டால்தான் தெரியும். மற்ற நூல்களில் நூறு பாடல்கள் கேட்பதும் சரி; இதில் ஒரு பாடல் கேட்பதும் சரி” என்று அவர் எதற்கோ பீடிகை போட ஆரம்பித்தார்.

ஒரு நூலைப் பாடம் சொல்லும்போது அந்நூலின் அமைப்பைப் பற்றியும் அந்நூலாசிரியர் முதலியோரைப் பற்றியும் கூறுவது போதகாசிரியர்கள் வழக்கம். அம்முறையில் அவர் சொல்லுவதாக நான் எண்ணினேன். திருவரங்கத் தந்தாதியைச் சுலபமாகத் தெரிந்துகொள்ள இயலாதென்பதை அவர் சொன்னபோது அதனை நான் அனுபவத்தில் அறிந்தவனாதலால், “உண்மைதான்; கார்குடி சாமி ஐயங்காரவர்களே இருபத்தேழு பாடல்களுக்கு மட்டுந்தான் பொருள் நன்றாகத் தெரியுமென்று சொன்னார்கள்” என்றேன்.

“பார்த்தீர்களா? அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். எவ்வளவோ தனிப்பாடல்களுக்கு அருத்தம் சொல்லிவிடலாம். நைடதம் முழுவதையும் பிரசங்கம் செய்யலாம். இந்த அந்தாதி அப்படி ஊகித்து அர்த்தம் சொல்ல வராது. அழுத்தமாகப் பாடம் கேட்டிருக்க வேண்டும். நான் எவ்வளவோ சிரமப்பட்டுக் கேட்டேன். ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு புதையலுக்குச் சமானம்”.

“புதையலென்பதில் சந்தேகமில்லை” என்று நான் என் மனத்துள் சொல்லிக்கொண்டேன்.

“இவ்வளவு பிரயாசைப்பட்டுக் கற்றுக்கொண்டதை இந்தத் தள்ளாத காலத்தில் சுலபமாக உமக்குச் சொல்லிவிடலாமா? கட்டப்பட்டுத் தேடிய புதையலை வாரி வீசுவதற்கு மனம் வருமா? மேலும், எனக்குத் தொண்டை வலி எடுக்கிறது. நான் போய் வருகிறேன்” என்று சொல்லி உடனே எழும்பிப் போய்விட்டார். நான் பெரிய ஏமாற்றத்தை அடைந்தேன். “கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லையே!” என்று வருத்தமுற்றேன்; “அக்கவிராயர் அவ்வளவு நேரம் பேசியதற்குப் பதிலாக இரண்டு செய்யுட்களுக்கேனும் பொருள் சொல்லியிருக்கலாமே!” என்று எண்ணினேன்.

உடனிருந்து எங்கள் சம்பாசணையைக் கவனித்தவர்கள் என் முகவாட்டத்தைக் கண்டு, “பாவம்! இந்தப் பிள்ளை எவ்வளவு பணிவாகவும் ஆசையாகவும் கேட்டார்? அந்தக் கிழவர் சொல்ல முடியாதென்று சிறிதேனும் இரக்கமில்லாமற் போய்விட்டாரே! திருவரங்கத்தந்தாதி புதையலென்று அவர் கூறியது உண்மையே; அதைக் காக்கும் பூதமாக வல்லவோ இருக்கிறார் அவர்?” என்று கூறி இரங்கினார்கள்.

கவிராயர் ஒரு வேளை திரும்பி வருவாரோ என்ற சபலம் எனக்கு இருந்தது. அவர் போனவர் போனவரே. நாங்கள் அந்த ஊரில் இருந்த வரையில் அவர் வரவேயில்லை.

கரும்பு தின்னைக் கூலி கொடுப்பதுபோல எனக்குப் பாடமும் சொல்லி எங்கள் குடும்பத்திற்கு வேண்டிய உதவியும் செய்த கத்தூரி ஐயங்கார் முதலியோரின் இயல்புக்கும் அமிர்த கவிராயர் இயல்புக்கும் உள்ள வேறுபாட்டை எண்ணி எண்ணி வியந்தேன். பொருட்செல்வம் படைத்தவர்களிலேதான் தருமவானும் உலோபியும் உண்டு என்று நினைத்திருந்தேன். கல்விச்செல்வமுள்ளவர்களுள்ளும் அந்த இரண்டு வகையினர் இருப்பதை அன்றுதான் நான் முதலில் அறிந்துகொண்டேன்.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.

Monday, April 24, 2023

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 4/5 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

      25 April 2023      அகரமுதல



(சொல்லின்செல்வர் சேதுப்பிள்ளை 3/5 தொடர்ச்சி)

9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 4/5


ஆய்வு நூல்கள்

நெல்லையில் வழக்கறிஞராக இருந்தபோதே இவரது ஆய்வுப்பணி முகிழ்ந்துவிட்டது. முதன்முதலில் 1926ஆம் ஆண்டில் திருக்குறளை ஆராய்ந்து ‘திருவள்ளுவர் நூல் நயம்’ என்ற நூலை வெளியிட்டார். இந்நூலின் மேன்மையினையும், ஆசிரியரின் ஆய்வுத் திறனின் மாண்பினையும் திரு. கா. சு. பிள்ளை அவர்கள்,

உலகமெலாம் உய்வான் பொதுமறை வகுத்த ஆசிரியர் திருவள்ளுவனாரது அளப்பரிய மாண் பினைப் பாவலரும் நாவலரும் கற்றோரும் மற்றோரும் இந்நாள்வரை பொதுவகையாற் பலபடப் பாராட்டிச் சீராட்டிப் போந்தனர். ஆசிரியரது நூலின் பிண்டப் பொருளை நுணுகி ஆய்ந்து, அதன் சொற்பொருள் நயங்களை யாவருக்கும் எளிதில் விளங்கும் வண்ணம் தெள்ளென வகுத்தோதி ஊக்கமூட்டும் செவ்விய உரைநடை நூல் ஒன்று இல்லாத குறையை நிறைவுசெய்த பெரும் புலவர் இத் ‘திருவள்ளுவர் நூல் நயம்’ எழுதிய திருவாளர் சேதுப்பிள்ளையேயாவர்.

திருக்குறட் பெருநூலை நன்கு கற்றாராய்ந்து உணர விரும்பும் மாணவர் யாவருக்கும் அந்நூற் சொற்பொருள் வளப் பண்டகசாலைக்கு நயமிக்க தோர் திறவுகோலாக இவ்வுரைநடைச் செந்தமிழ்ச் சீரிய நூலை இயற்றிய தமிழ்வாணர்க்குத் தமிழுலகு என்றும் கடப்பாடுடையது”

என்று அந்நூலுக்குத் தாம் வழங்கிய முன்னுரையில் போற்றியுரைக்கின்றார்.

இதே ஆண்டில் வெளிவந்தது ‘சிலப்பதிகார நூல் நயம்’ என்ற மற்றொரு நூல். ஆசிரியர் பெருமை, அரச நீதியும் அரசியலும், ஆரிய அரசரும் தமிழரும், கண்ணகியின் கற்பின் திறம். வினைப்பயன், பண்டைத் தமிழ் மக்கள் நாகரிகம், சிலப்பதிகார நூல்நயம் என்னும் ஏழு தலைப்புகளில் இந்நூல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து 1932ஆம் ஆண்டில் வெளிவந்த ‘வீரமாநகர்’ என்னும் நூல் கம்பராமாயணம் பற்றிச் செய்த அரியதோர் அருமையான ஆய்வு நூல், இந்நூலின் இனிமையை நூலுக்கு முன்னுரை வரைந்த வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் அவர்கள்,

பலர்க்கும் தெரிந்த பழங்கதைகளை, ஆசிரியர் தம் புலமைத் திறமையால் புதுமையானவையாக்கிப் படிப்பவர் மனத்தை மகிழ்விக்கிறார். கதைப் போக்கில் வரும் தக்க இடங்களில் தக்க அறிவுரைகள் இலக்கியச் சுவையோடு இனிது கலந்தூட்டி இன்பமும் பயனும் எய்தச் செய்தல் இந்நூலிற் பல இடங்களில் காணலாம். இதில் ஒவ்வொரு பக்கமும் இனிமையா யிருப்பதை வாசிப்போர் சில பக்கங்கள் வாசித்த அளவில் தெரிந்துகொள்வர் என்பது திண்ணம். இந்நூலின் இனிமை நுனியிலிருந்து நுகரப்படும் கரும்பின் இனிமை போன்றிருக்கின்றது.”

என்று எடுத்துரைக்கின்றார்.

அடுத்து 1945இல் வெளிவந்த ‘தமிழ் விருந்து’ தமிழர்தம் கலைத்திறன், தமிழரின் வாழ்க்கை மேன்மை, தமிழ் மொழி யின் செம்மை, தமிழ் இலக்கியத்தின் சீர்மை ஆகியவற்றை எடுத்தியம்புகிறது.

அடுத்த ஆண்டில் 1946இல் வெளிவந்த ‘தமிழகம் ஊரும் பேரும்’ என்ற நூல், இவர்தம் ஆய்வின் மணி முடியாகத் திகழ்வது. ஆயிரத்து முந்நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்கள் இந்நூலில் ஆய்விற்குட்பட்டுள்ளன. தமிழ்ப் பண்பாட்டு நூலாகவும் வரலாற்று நூலாகவும் இந்நூல் துலங்குகின்றது. இந்நூல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின பரிசு பெற்ற பெருமை உடையது. திரு. வி. க. அவர்களின் மதிப்புரை இந்நூலின் தரத்திற்கும் ஆசிரியர்தம் ஆய்வுத் திறனுக்கும் உரை கல்லாக ஒளிாகின்றது.

“ஆசிரியர், நிலம்- மலை-காடு-வயல்-ஆறு-கடல்-நாடு-நகரம்-குடி-படை-குலம்-கோ-தேவு-தலம் முதலியவற்றை அடியாகக் கொண்டு இந்நூற்கண் நிகழ்த்தியுள்ள ஊர்பேர் ஆராய்ச்சியும், ஆங்காங்கே பொறித்துள்ள குறிப்புகளும் பிறவும் தமிழ்ச் சரித்திர உலகுக்குப் பெருவிருந்தாகும் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டில் சில ஊர்ப் பேர்கள் சிதைந்தும், திரிந்தும், மருவியும், மாறியும் தத்தம் முதல் நிலையை இழந்துள்ளன. அவை மீண்டும் பழைய நிலை எய்திப் பண்புறுதற்கு இந்நூல் பெருந்துணை செய்தல் ஒருதலை. இந்நூலுள் பொலிதரும் சில ஊர்ப் பேர்களின் வரவாறு, சாம்பியும் சோம்பியும், நலிந்தும் மெலிந்தும் கிடக்கும் நம் மக்கட்கு அமிழ்தாகிப் புத்துயிர் வழங்கல் உறுதி. நூலின் நடைக்கண் நடம் புரியும் பீடும் மிடுக்கும் வீறும் நாட்டின் சவலையை நீக்கி, அதன் மாட்டு வேட்கையை எழுப்பி, அதை ஊக்குவனவாகும்.”

1947இல் வெளிவந்த ‘தமிழர் வீரம்’ என்னும் பெயரிய நூல் தமிழர்தம் போர்த் திறத்தையும், படைத் திறத்தையும் விளக்குகிறது.

அடுத்த 1948இல் வெளியிடப் பெற்ற ‘தமிழின்பம்’ பாரதப் பேரரசின் சார்பில் இயங்கும் சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்றது. இந்நூலுக்கென வழங்கப்பட்ட ஐயாயிரம் வெண்பொற் காசுகளுடன் பத்தாயிரம் வெண்பொற் காசுகளைச் சேர்த்துப் பல்கலைக்கழக நிதி வளர்ச்சிக்காக இவர் கொடுத்தார். இதனால் பலரும் இவரைப் பாராட்டினர்.

ஐந்தாண்டுகள் இடைவெளிக்குப்பின் வந்த ‘வழி வழி வள்ளுவர்’ வள்ளுவரைப் பிற புலவர்கள் எடுத்தாளும் திறனை விளக்கி நிற்கிறது.

இறுதியாக 1958இல் வெளிவந்த ‘தமிழகம் அலையும் கலையும்’ தமிழ்நாட்டின் கலைச்சிறப்பையும். கலை வளர்த்த நகரங்களின் நல்லியல்புகளையும் ஆய்கின்றது.

ஆய்வு நூல்களாக அன்றிக் கட்டுரைத் தொகுப்புக்களாக வந்தவை ‘கடற்கரையிலே’, ‘ஆற்றங்கரையினிலே,’ வேலும் வில்லும்’ என்பன. ‘வேலும் வில்லும்’ என்ற நூல் கம்பரும் கச்சியப்பரும், மூவர் தமிழும் முருகனும், திருச்செந்துார் முருகன் என்ற மூன்று கட்டுரைகளின் தொகுப்பாகும். கவிஞரும் கலைஞரும் உரையாடுவது போன்று அமைந்தது ‘கடற்கரையிலே’ என்ற நூல். விருதைத் தமிழ்க் கழகத்தின் சார்பில் வெளிவந்த தமிழ்த் தென்றல் என்ற இதழில் வெளி வந்த தொடர்கட்டுரைகள் இருபதின் தொகுப்பு நூல் இது. தமிழக ஆறுகளின் சிறப்பு, அவற்றின் கரைகளில் அமைந்த நகரங்களின் வரலாற்றுச் சிறப்பு, இலக்கியச் சிறப்பு இவற்றை எடுத்துக் கூறும் ‘ஆற்றங்கரையினிலே’ கல்கியில் வெளிவந்த தொடர் கட்டுரைகள் நாற்பத்தெட்டின் தொகுப்பு நூல் ஆகும். இது 1961 இல் வெளிவந்தது.

‘வேலின் வெற்றி’, ‘திருக்காவலூர்க் கலம்பகம்’ என்ற இரு நூல்களும் முறையே கந்த புராணத் திரட்டையும் திருக்காவலூர்க் கலம்பகத்தையும் தழுவி எழுதப்பட்ட உரை நூல்கள் ஆகும்.

Words and their Significance. Dravidian Comparative Vocabulary, Common Dravidian Proverbs என்பன இவர் ஆங்கிலததில் எழுதி வெளியிட்ட நூல்கள் ஆகும்,

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Saturday, April 22, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 33

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 32 தொடர்ச்சி)

அத்தியாயம் 19
தருமவானும் உலோபியும்

கார்குடி சென்றது

கார்குடிக்குப் போவதில் எனக்கிருந்த வேகத்தை அறிந்து என் தந்தையார் ஒரு நல்ல நாளில் என்னையும் என் தாயாரையும் அழைத்துக்கொண்டு அவ்வூரை அடைந்தார். நாங்கள் வருவோ மென்பதை முன்னமே கத்தூரி ஐயங்கார் மூலம் அறிந்திருந்த அவ்வூர் சிரீவைணவர்கள் எங்களை உபசரித்து எங்கள் வாசத்துக்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர்.

அங்கே சிரீநிவாசையங்கார் என்ற ஒரு செல்வர் வீட்டில் நாங்கள் சாகை வைத்துக்கொண்டோம். அக்கிரகாரத்தாரிடமிருந்து உணவுப் பொருள்கள் மிகுதியாக வந்தன. அங்கிருந்த சிரீ வைணவர்கள் யாவரும் சுரோத்திரியதார்கள்.* மாதந்தோறும் எங்கள் தேவைக்குரிய நெல்லை அவர்கள். தம்முள் தொகுத்துக் கொடுத்து வந்தார்கள்.

கஸ்தூரி ஐயங்கார் பாடம் சொன்னது

கத்தூரி ஐயங்கார் நன்னூரில் நல்ல பயிற்சியுடையவர். தஞ்சாவூரில் இருந்த இலக்கணம் அண்ணாப் பிள்ளையென்ற வித்துவானும் அவரும் இலக்கண, இலக்கிய விசயமான செய்திகளை ஓலையில் எழுதி வினாவுவதையும் விடையளிப்பதையும் வழக்கமாகக்கொண்டிருந்தார்கள். அவ்வோலைகளை நானும் பார்த்திருக்கிறேன். இராமாயணம், பாரதம், பாகவதம் முதலிய நூல்களைத் தம் கையாலேயே கத்தூரி ஐயங்கார் ஏடுகளில் எழுதி வைத்திருந்தார். ஐயங்காரிடம் நான் பாடங் கேட்கத் தொடங்கினேன். குன்னத்திலிருந்தபோது தஞ்சையிலிருந்து வந்த சிரீநிவாசையங்கா ரென்பவரிடம் மகாலிங்கையர் இலக்கணத்தைப் பாடம் கேட்டேன். நன்னூல் முதலிய இலக்கணங்களைத் தொடர்ந்து கேட்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கு இருந்து வந்தது. அதனால் முதல் முதல் அவரிடம் நன்னூல் பாடங் கேட்கலானேன். விசாகப் பெருமாளையர் இயற்றிய காண்டிகையுரையை ஒருவாறு பாடம் சொல்லி அதன் கருத்துரை, விசேட உரை முதலியவற்றை எனக்குப் பாடம் பண்ணி வைத்துவிட்டார். தினந்தோறும் நன்னூல் முழுவதையும் ஒருமுறை நான் பாராமற் சொல்லி வந்தேன். நிலவில் பொருள்கள் காணப்படுவதுபோல் நன்னூலிலுள்ள இலக்கணங்கள் எனக்குத் தோற்றின; அந்நூலைச் சிக்கறத் தெளிந்துகொள்ள வில்லை. படித்தவர் யாரேனும் வந்தால் கத்தூரி ஐயங்கார் எனக்குப் பாடம் சொல்லிய நன்னூல் சூத்திரங்களையும் உரையையும் என்னைச் சொல்லும்படி செய்வார். அவற்றை நான் ஒப்பிப்பேன். இப்பழக்கத்தால் அவை என் மனத்திற் பின்னும் நன்றாகப் பதிந்தன.

அக்காலத்தில் நன்னூலுக்கு நல்ல மதிப்பு இருந்தது. ஐயமற அதனை ஒருவன் தெரிந்துகொண்டால் அவனை நல்ல புலவனென்று யாரும் கூறுவர். சூத்திரங்களில் விசேட உரைகளிலுள்ள ஆட்சேப சமாதானங்களை நன்றாகத் தெரிந்துகொண்டு விளக்குபவர்கள் சிலரே இருந்தனர். இலக்கியப் பயிற்சியிலேயே பெரும்பாலோருக்குக் கவனம் சென்றதேயன்றி இலக்கணப் பயிற்சியிற் செல்லவில்லை. இந்த நிலையில் நான் நன்னூற் சூத்திரங்களையும் உரையையும் மனனம் பண்ணித் தமிழில் ‘இலக்கண வித்துவான்’ ஆகக் கூடுமென்ற எண்ணம் என்னைக் கண்டோருக்கு உண்டாக்கினேன். அத்துறையில் நான் பின்னும் எவ்வளவோ தெரிந்துகொள்ள வேண்டியதுண் டென்பதை நான் மறக்கவில்லை. கத்தூரி ஐயங்காரிடம் நவநீதப் பாட்டியல் முதலிய பொருத்த நூல்கள் சில இருந்தன. எனக்கு அவற்றிலும் சிறிது பழக்கம் உண்டாயிற்று. இடையிடையே வேங்கட வெண்பா முதலிய சில பிரபந்தங்களையும் அவர் கற்பித்து வந்தார்.

சாமி ஐயங்காரிடம் கேட்ட பாடம்

கத்தூரி ஐயங்காருடைய நண்பரான சாமி ஐயங்காரும் எங்களிடம் மிக்க அன்போடு இருந்து வந்தார். தாம் வாக்களித்தபடியே அவரும் எனக்குப் பாடம் சொல்லலானார். கம்பராமாயணத்தில் அவர் பழக்கமுள்ளவர். என் தந்தையாரும் நானும் இராமாயண கதாப்பிரசங்கத்தில் ஈடுபட்டவர்களாதலின் கம்பராமாயணத்தைப் பாடங் கேட்கவேண்டு மென்ற விருப்பம் எனக்கு இருந்தது. இராமாயணத்திற் பாலகாண்டத்திலிருந்து தொடங்காமல் சுந்தரகாண்டத்திலிருந்து ஆரம்பிப்பது ஒரு முறை. அதன்படியே சாமி ஐயங்காரிடம் நான் சுந்தர காண்டம் பாடம் கேட்க ஆரம்பித்தேன். அவர் இசையோடே பாடல் சொல்லுவார். அது மிகவும் நயமாக இருக்கும். திருவரங்கத்தந்தாதியில் முதல் இருபத்தேழு செய்யுட்களுக்கு அவரிடம் பொருள் கேட்டுத் தெரிந்துகொண்டேன். “இதற்கு மேல் நான் பாடம் கேட்டதில்லை; அரியிலூர்ச் சடகோபையங்கார் முழுவதும் பாடம் சொல்வார்; அவரைப் பார்க்கும்போது நீ மற்றப் பாடல்களைக் கேட்டுக்கொள்ளலாம்” என்று அவர் கூறியமையால் இருபத்தெட்டாம் செய்யுள் முதலியவற்றை நான் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆயினும் யாரிடமேனும் அந்நூல் முழுவதையும் கேட்டுவிட வேண்டுமென்ற குறை மட்டும் எனக்கு இருந்தது.

புதிய நூல்களையும் புதிய விசயங்களையும் நான் தெரிந்துகொண்டே னென்பது உண்மையே. ஆனால் அவற்றை ஐயந்திரிபின்றித் தெளிவாகவும் சாங்கோபாங்கமாகவும் தெரிந்துகொள்ள வில்லை. படித்து அறிவு பெறுவது ஒரு வகை. படித்தவற்றைப் பாடம் சொல்வது ஒரு வகை. பாடஞ்சொல்லும் திறமை சிலரிடமே சிறப்பாகக் காணப்படுகின்றது.

கார்குடியில் ஆறு மாதங்கள் இருந்தோம். கத்தூரி ஐயங்காரும் சாமி ஐயங்காரும் தங்கள் தங்களால் இயன்ற அளவு பாடம் சொல்லி வந்தார்கள். அவர்களுடைய மனைவிமார்களும் படித்தவர்கள். அவர்களும் என்னிடம் பிரியமாக இருந்தார்கள். எனக்குத் தெரிந்த பல கீர்த்தனங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்துப் பாடிக் காட்டினேன்.

குன்னம் வந்தது

ஆறு மாதங்களுக்குப் பிறகு கத்தூரி ஐயங்கார் முதலியவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு நாங்கள் மீண்டும் குன்னத்திற்கே வந்து சேர்ந்தோம். தருமத்திற் சலிப்பில்லாத அவ்வூரார் எங்களை ஆதரிப்பதிலும் எங்கள்பால் அன்பு பாராட்டுவதிலும் சிறிதும் குறையவில்லை.

எனக்கு ‘மகாலிங்கையர் இலக்கணம்’ பாடஞ் சொன்ன தஞ்சை சிரீநிவாசையங்கா ரென்பவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம் என்னும் ஏழு நீதி நூல்களும் அடங்கிய புத்தகம் ஒன்று கொடுத்திருந்தார். அப்புத்தகம் மத சம்பந்தமான செய்யுட்களை மட்டும் நீக்கிப் புதுச்சேரியில் அச்சிடப்பட்டது; பதவுரை பொழிப்புரையோடு தெளிவாகப் பதிப்பிக்கப் பெற்றிருந்தது. அதிலுள்ள செய்யுட்களையும் உரைகளையும் படித்து ஆராய்ந்து மனனம் செய்துகொண்டேன். பொன்விளைந்தகளத்தூர் வேதகிரி முதலியார் அச்சிட்ட நைடத மூலமும் உரையுமுள்ள புத்தகமும் நாலடியார் உரையுள்ள புத்தகமும் கிடைத்தன. உரையின் உதவியால் இரண்டு நூல்களையும் ஒருவாறு பல முறை படித்துப் பொருள் தெரிந்துகொண்டேன். அவ்விரண்டு நூல்களும் எனக்கு மனப்பாடமாகி விட்டன. இடையிடையே சில சந்தேகங்கள் தோற்றின. கார்குடி சென்று கத்தூரி ஐயங்காரிடம் அவற்றைக் கேட்டுத் தெளிந்துகொள்ளலா மென்று எண்ணினேன்.

அன்னையாரின் அன்பு

என் கருத்தை அறிந்த தந்தையார் என்னை மாத்திரம் அழைத்துக்கொண்டு கார்குடிக்குச் சென்றார். அங்கே நான்கு தினங்கள் இருந்து கேட்கவேண்டியவற்றைக் கத்தூரி ஐயங்காரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஐந்தாம் நாட் காலையில் அவரிடம் விடைபெற்று நான் மட்டும் ஒரு துணையுடன் குன்னத்திற்கு வந்தேன். தந்தையார் சில தினங்கள் பொறுத்து வருவதாகச் சொல்லிக் கார்குடியில் இருந்தார்.

நான் குன்னத்திற்கு வந்து சேரும்போது என் தாயார் சில பெண்களுடன் ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்தார். என்னைக் கண்டவுடன் வேகமாக வந்து என்னைத் தழுவிக்கொண்டார். கண்ணீர் விட்டபடியே, “என்னப்பா, நீ ஊருக்குப் போனது முதல் நான் சாப்பிடவில்லை; தூங்கவில்லை. உன் ஞாபகமாகவே இருக்கிறேன்” என்று சொல்லித் தம்முடைய ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.