Tuesday, December 31, 2013

தமிழ் அறிஞர்கள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்






பட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக் குரியவர், சிறந்த தமிழ் அறிஞர், பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு. இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றும் இவருடைய பாடல்கள் மனிதர்களின் எண்ணங்களில் தேரேறி இதங்களில் குடியேறி உள்ளங்களில் உறவாடி வருகின்றன.
பிறப்பு: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் பெற்றோர் அருணாச்சலம் - விசாலாட்சி ஆகியோரின் இளையமகனாக 13.04.1930 இல் பிறந்தார். இவருக்கு கணபதி சுந்தரம், வேதாம்பாள்  ஆகிய உடன்பிறப்புகள்  உள்ளனர்.
படிப்பு: தொடக்கக் கல்வியை சகோதரர் கணபதிசுந்தரத்தோடு உள்ளூர் சுந்தரம்பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டார்.
இயக்கம்: கம்யூனிச விவசாய சங்கத்தில் ஈடுபாடு கொண்டு. அச்சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அடித்தட்டு மக்களின் ஆசைகளையும், ஆவேசங்களையும் பிரதிபலித்தார்.
குடும்பம்: 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – கௌரவம்மாள் திருமணம் சென்னையில் பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது. 1958ஆம் ஆண்டு மே 3ஆம் நாள் இவர்களுக்குக் குழந்தை பிறந்தது. குழந்தைக்குக் குமாரவேலு எனக் கவிஞரின் தந்தையார் பேரனுக்குப் பெயர் சூட்டினார். அதே ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள், மக்கள் வாழ்வில் விடியலைக் கூவி அறிவித்த கவிஞரின் வாழ்வு முடிவடைந்தது.
கற்றல்:
கவிஞர் 1952 இல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய குயில் இதழில் உதவியாளராகப் பணியாற்றினார். அதன் நினைவாக கவிஞர் மனைவிக்குக் கடிதம் எழுதும்போது தனக்குத் தமிழ் கற்பித்த ''குரு பாரதிதாசன் வாழ்க'' என்று எழுதிவிட்டுத்தான் தொடருவாராம்.
பட்டுக்கோட்டையின் பன்முக பரிமாணங்கள்
தொடக்கத்தில் விவசாயி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டிக்காரர், அரசியல்வாதி, பாடகர் என பன்முக பரிமாணங்கங்களைக் கொண்டவர் நாடக நடிகராக மாறி இறுதியில் கவிஞர் என்ற பெரும் பெயரையும் புகழையும் பெற்றார்.
பட்டுக்கோட்டையாரின் வினா:
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்ன பண்ணிக் கிழிச்சீங்க? என்று சமுதாயத்தை நோக்கி பட்டுக்கோட்டையார் எழுப்பிய கேள்வி.
- 189 திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். பட்டுக்கோட்டையார் பாடல் எழுதிய முதல் படம் படித்தபெண்.
- 1955 ஆம் ஆண்டு நல்லதச் சொன்னா நாத்திகனா என்பது அவர் முதல் பாடலாகும். பாரதிதாசனை தன் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டார்.
பொதுவுடைமைச் சித்தாந்த பாடல்வரிகள்:
01. "தூங்காதே தம்பி தூங்காதே
சேம்பேறி என்ற சொல் வாங்கதே"
02. "சின்னப்பயலே சின்னப் பயலே
சேதிகேளடா ---------------
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தான்டா வளர்ச்சி"
03. "வசதி படைச்சவன் தரமாட்டான்
வயிறு பசிக்கறவன் விடமாட்டான்"
"வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுரேன்னு
வாயாலே சொல்லுவான் செய்யமாட்டான்"
04. "குறுக்கு வழியில் வாழ்க்கை தேடும் திருட்டு உலகமடா"
05. ‘காடு வௌஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்’
06. "திருடாதே பாப்பா திருடாதே
-----------
கொடுக்கிற காலம் நெருங்குவதால் இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப்
போனால் பதுக்கிற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கொடுக்கிற நோக்கம் வளராது" என்னும் பொதுவுடைமைச் சித்தாந்தங்களை காலத்தால் அழியாத பாடல்களை எளிமையாகப் பாடியவர்.
மகத்துவம்
தனது 19 வது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர் பட்டுக்கோட்டையார். இவருடைய பாடல்கள் கிராமிய மணம் கம்ழுபவை. பாடல்களில் உணர்ச்சிகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர்.
திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைக் கனவுகளையும், ஆவேசத்தையும், அற்புதப் பாடல்களாக வடித்தார். இவர் இயற்றிய கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டது.
1955ஆம் ஆண்டு 'படித்த பெண்’ திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார். உழைப்பாளி மக்களும், அறிவால் உழைக்கும் மக்களும் கூட தங்களுக்காக திரையுலகிலே குரல் கொடுத்து வாழ்வை மேம்படுத்த முன்னின்ற பாடலாசிரியராக‌ இவரைக் கண்டனர்.
பட்டுக்கோட்டை பாடுவதிலும் வல்லவர். நாடகம், திரைப்படம் பார்ப்பதிலும் ஆர்வம் மிகுந்தவர். கற்பனை வளமும் இயற்கை ரசனையும் நிறைந்தவர். இதுவே இவரை இயல்பாகவே கவிதை புனைய வைத்தது. 1946இல் தனது 15வயதில் ஏற்பட்ட அனுபவத்தை அவரே கூறுகிறார்.
'சங்கம் படைத்தான் காடு என்ற எங்கள் நிலவளம் நிறைந்த சிற்றூரைச் சேர்ந்த துறையான்குளம் என்ற ஏரிக்கரையில் நான் ஒரு நாள் வயல் பார்க்கச் சென்று திரும்பும் போது வேப்பமரநிழலில் அமர்ந்தேன். நல்ல நிழலோடு குளிர்ந்த தென்றலும் என்னை வந்து தழுவவே எதிரிலிருக்கும் ஏரியையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தேன். தண்ணீரலைகள் நெளிந்து நெளிந்து ஆடிவரத் தாமரை மலர்கள் "எம்மைப் பார், எம் அழகைப் பார்" என்று குலுங்க, ஓர் இளங்கெண்டை பளிச்சென்று துள்ளிக் கரையோரத்தில் கிடந்த தாமரை இலையில் நீர் முத்துக்களைச் சிந்தவிட்டுத் தலைகீழாய்க் குதித்தது. அதுவரை மெளனமாக இருந்த நான் என்னையும் மறந்தவனாய்ப் பாடினேன்” என்றார். அதுதான் இது.
ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே - கரை ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே - கரை தூண்டிக்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத் துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே
இவ்வாறு ஆரம்பித்த நான் வீடு வரும்வரை பாடிக்கொண்டு வந்தேன். அப்பாடலை பலரும் பலமுறை பாடச் சொல்லி மிகவும் இரசித்தார்கள் என்றார்.
இறுதிக்காலம்:
08.10.1959 ஆம் ஆண்டு தனது 29-ம் வயதில் மரமடைந்தார். திமுகவின் மேடைப் பாடகர். அவர் நடித்த நாடகம் "என் தங்கை, கவியின் கனவு".
பட்டம்: கோயமுத்தூர் தொழிலாளர் சங்கம், மக்கள் கவிஞர் என்ற பட்டத்தையும், பாவேந்தர் விருதினை தமிழக அரசும் வழங்கிக் சிறப்பித்துள்ளது. இவரது பாடல்கள் தமிழகத அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
திரைப்பட உலகில் 180 பாடல்கள்தான் எழுதினார் என்றாலும் அவற்றில் பல காலத்தால் அழியாதவை. கால் நூற்றாண்டுகளாக புகழ்பெற்ற திரையுலக சகாப்த கவிஞர்.
1959ஆம் ஆண்டு கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் அவருக்கு மக்கள் கவிஞர் என்று அளித்த பட்டம் மிகப் பொருத்தமாய் நிலைத்தது.
1981ஆம் ஆண்டு தமிழக அரசு, கவிஞருக்கு பாவேந்தர் விருது வழங்கியது. மறைந்த முன்னாள் முதல்வரும் மக்கள் கவிஞரின் நெருங்கிய நண்பருமான எம்.ஜி.ஆர். அவர்களிடமிருந்து கவிஞரின் மனைவி கௌரவம்மாள் பாவேந்தர் விருதைப் பெற்றுக் கொண்டார்.
1993ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தவாறு கவிஞரின் அனைத்துப் பாடல்களும் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
மணி மண்டபம்:
தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் 2000 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை, அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள், கையெழுத்துப் பிரதிகள் அங்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Thursday, December 26, 2013

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பேராசிரியர் சி.இலக்குவனார் - Dr.S.Ilakkuvanar by Dinamani


தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பேராசிரியர் சி.இலக்குவனார்








தமிழையும், தன்மான இயக்கத்தையும் தனது மூச்சாகக் கொண்டவர் செந்தமிழ் மாமணி பேராசிரியர் இலக்குவனார்.
பிறப்பு: அப்போதைய தஞ்சை மாவட்டம் (இன்று நாகை மாவட்டம்) வேதாரண்யம் வட்டம்(திருகத்துறைப்பூண்டி வட்டம்) வாய்மைமேடு என்னும் ஊரின் பகுதியான கீழக்காடு என்னும் ஊரில் திருமிகு. மு. சிங்காரவேலர் -  திருவாட்டி அ. இரத்தினம் அம்மையார் ஆகியோருக்கு திருவள்ளுவர் ஆண்டு 1940, கார்த்திகை 1 (17.11.1909) இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
பதிவேடுகளில் 1910 என இருப்பினும், பேராசிரியர் அவர்கள் அறிஞர் அண்ணா பிறந்த அதே சௌமிய ஆண்டில்தான் நானும் பிறந்தேன் எனப் பெருமகிழ்வுடன் தன் வாழ்க்கைப் போரில் குறிப்பிட்டுள்ளமையால் 1909 என்பதே சரியானதாகும்.
பெயர் மாற்றம்: இவரது இயற்பெயர் இலட்சுமணன். இப்பெயரை அரசர் இராசா மடத்தில் நடுநிலைப்பள்ளியில் பயின்ற பொழுது அங்குத் தமிழாசிரியராகத் திகழ்ந்த அறிஞர் சாமி, சிதம்பரனார் "இலக்குவன்" என மாற்றினார். இலட்சுமணன் என்பது வடமொழி அதன் தமிழ்ப் பெயரை இலக்குவன் என்பதாகும். அப்பொழுது முதலே தனித்தமிழ் மீது நாட்டமும் தமிழில் பிறமொழிக்கலப்பைத் தவிர்க்கும் முனைப்பும் இலக்குவனார்க்கு ஏற்பட்டது.
கல்வி: திண்ணைப் பள்ளியில் தன் கல்வியைத் தொடங்கிய இலக்குவனார். தஞ்சை சரபோஜி மன்னர் அறக்கட்டளைப்பள்ளி, ஒரத்தநாடு உயர்நிலைப்பள்ளியில் பயின்று தமது ஆசிரியர்களின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றார்.
திருவையாறு அரசர் கல்லூரியில் மேல்நிலைக் கல்வியைத் தொடர்ந்து 1936-ல் வித்துவான் பட்டமும் அதனைத் தொடர்ந்து 1942-ல் கீழ்த்திசை மொழியியல் இளங்கலை (B.O.L.) பட்டமும், 1946-ல் கீழ்த்திசை மொழியியல் முதுகலை (M.O.L.) பட்டம் பெற்றார்.
மெய்யியல் முனைவர் (Ph.D.) பட்டம்:  காலப்போக்கில் பி.ஓ.எல்.எம்.ஏ. ஆகிய பட்டங்களைத் தனித்தேர்வராகப் பயின்று பெற்ற இலக்குவனார், மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, விரிவாக ஆய்வும் நிகழ்த்தி தமது முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டை அளித்தார்.
தமது பல்வேறு பணிகளின் காரணமாகவும், பணியிழப்புகளின் காரணமாகவும் காலந்தாழ்த்து அகவை 53-ல் (1963-இல்) முனைவர் பட்டம் பெற்றார்.
காலம் கடந்து பெற்றாலும் தமிழ்நெஞ்சங்கள் மகிழ்ந்து தமிழகமெங்கும் பாராட்டு விழாக்கள் நடந்தின. ஒரு பேராசிரியர் முனைவர் பட்டம் பெற்றமைக்காகத் தமிழகெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்த நிகழ்வு இதற்கு முன்புமில்லை, பின்புமில்லை.
பணி: வித்துவான் பட்டம் பெற்று, தஞ்சை மாவட்டம் நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
அதன்பிறகு தான் பயின்ற திருவையாறு அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.
அதன்பிறகு அன்றைய சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவராகிய செ.தெ.நாயகம், குலசேகரன்பட்டினத்தில் தொடங்கிய தமிழ்க்கல்லூரியில் முதல்வராகப் பணியமர்த்தப் பட்டார்.
பின்னர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றினார்.
1947-இல் விருதுநகரில் தொடங்கப்பெற்ற வி.இ.செந்திற்குமார நாடார் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகவும் பணிபுரிந்தார்.
ஈரோடு காசனக்கல்லூரி, நாகர்கோயில் தெ.தி. இந்துக்கல்லூரி, மதுரை தியாகராசர் கலைக்கல்லூரி என இவர் பணியாற்றிய கல்லூரிகளின் பட்டியல் பெரிதாக நீண்டு கொண்டே செல்கிறது.
அதாவது இவரது அஞ்சாநெஞ்சமும், தன்மான உணர்வும் எவ்விடத்தும் இவர் தொடர்ந்து பணிபுரிய இடமளிக்கவில்லை. மாணவரிடையே தமிழுணர்வை இவர் ஊட்டியதால், இவர் மாணவர்களைப் புரட்சிக்குத் தூண்டுவதாகக் கல்லூரியின் பொறுப்பாளர்களைக் கருதச் செய்தது.
1967-இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபின்னர் அறிஞர் அண்ணா அவர்களால், மீண்டும் இலக்குவனார் பணிபுரியும் வாய்ப்பைப்பெற்றார்.
சென்னை மாநிலக்கல்லூரியில் தலைமைத் தமிழ்ப்பேராசிரியராகப் பணியேற்ற இவரால் ஓராண்டுக்கு மேல் அப்பணியிலும் நீடிக்கமுடியவில்லை.
அன்றைய கல்வியமைச்சரிடம் தமிழைப் பயிற்சிமொழியாக்குமாறும் ஆங்கிலத்துக்குச் சார்பாக நடக்க வேண்டாம் என்றும்  இவர் கூறியமையே இவரது வேலைக்கு உலைவைத்தது என்பதை தமிழ்நாடு அறிந்த ஒன்றே.
அதன்பின்னர் ஐதராபாது உசுமானியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இரண்டாண்டுகள் பணியாற்றியபின்னர் தமது நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க நாகர்கோயில் இந்துக்கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து 1970 டிசம்பரில் ஓய்வு பெற்றார்.
மற்றவர்களின் மனதில்...
பேராசிரியரின் தொல்காப்பிய ஆங்கில நூலுக்கு அணிந்துரை வழங்கிப் பாராட்டிய அறிஞர் அண்ணா அவர்கள்,  பின்னர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றபோது, தமது அயல்நாட்டுச் சுற்றுப்பயணத்தில், இந்நூலைப் போப் ஆண்டவர் அவர்களுக்கும், அமெரிக்க நூகலகங்களுக்கும் தமிழக அரசின் சார்பில் அன்பளிப்பாக அண்ணா வழங்கினார்.
கலைஞர் மு. கருணாநிதி திருவாரூரில் பள்ளி இறுதி வகுப்புப் பயின்றபோது அவரது ஆசிரியராகத் திகழ்ந்தவர். தமக்குத் தமிழுணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் ஊட்டியவர்' என்று இவரைப் பற்றித் தமது தன்வரலாற்று நூலாகிய 'நெஞ்சுக்கு நீதி'யில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.
1944-இல் இவர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இவரிடம் தமிழ் பயின்ற, இன்றைய இந்தியப் பொதுவுடைமைக் கட்சித்தலைவர்களில் ஒருவராகிய தோழர் நல்லகண்ணு இவரது அஞ்சாநெஞ்சத்தையும் தமிழுணர்வையும் சிறப்பாகப் பாராட்டுகிறார். அன்றைய தமிழ் வகுப்புகளில் வருகைப்பதிவை ஆங்கிலத்தில் மாணவர்கள் கூறிவந்த நிலையை மாற்றி உளேன் ஐயா எனக் கூறவைத்தவரும் பிற்காலத்தில் தமிழகமெங்கும் இம்மாற்றம் ஏற்படவும் காரணமாக இருந்தவர் இலக்குவனாரே என நல்லுகண்ணு அவர்கள் கூறுகிறார்.
இந்தி எதிர்ப்பு: தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபோது அறிஞர் அண்ணா "தத்துவப்போர்" என்னும் தலைப்பில் பேசினார். அப்போது இலக்குவனார் இந்தி எதிர்ப்பை முழக்க வேண்டும், நம்மொழி காக்க வேண்டும் என்ன அறிஞர் அண்ணாவிடம் கோரிக்கை வைத்தார். அதன்பிறகு மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத் தலைவராய்ப் பணியாற்றி மொழிக் காவலர் என்னும் பட்டத்திற்கு உரியவரானார்.
1965-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இருமுறை கைது செய்யப்பட்டு சிறைவாழ்வும் பணிநீக்கமும் பெற்ற இலக்குவனார், 1965 மே முதல் திசம்பர் வரை ஏழு மாதங்கள் தமது ஏட்டை நாளிதழாகவும் நடத்தினார். விற்பனையாளர்கள் உரியமுறையில் பணம் கொடுக்காத ஒரே காரணத்தாலேயே இவ்விதழ் நிறுத்தப்பட்டது.
தமிழ் பணிகள்: செய்யதது எல்லாம் தமிழ் பணிதான் என்றாலும் பின்வரும் சந்ததியினருக்காக  பதினான்கு தமிழ் நூல்களையும், ஐந்து ஆங்கில நூல்களையும் எழுதி வெளியிட்யுள்ளார் என்று கூறலாம். அவைகள்:
01. எழிலரசி
02. மாணவர் ஆற்றுப்படை
03. துரத்தப்ப்டேன்
04. அண்ணாவிற்கு பாவியல் வாழ்த்து
05. வள்ளுவர் வகுத்த அரசியல்
06. வள்ளுவர் கண்ட இல்லறம்
07. தொல்காப்பிய ஆராய்ச்சி
08. பழந்தமிழ்
09. தமிழ் கற்பிக்கும் முறை
10. இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்
11. கரும வீரர் காமராசர்
12. என் வாழ்க்கைப் போர்
13. திருக்குறள் எளிய வழிப்புரை
14. தொல்காப்பிய விளக்கம் ஆகியவை
இதழ்கள் வெளியிடல்:
இலக்குவனார் தாம் பணியாற்றச் சென்ற இடமெல்லாம் தமிழ்மன்றங்களை நிறுவியும் இதழ்களை நடத்தியும் மக்கள் மனத்தில் தமிழ் எழுச்சியும் ஆர்வமும் ஏற்பட அரும் பாடுபட்டார்.
1944 முதல் 1947 வரை இவர் நடத்திய "சங்க இலக்கியம்" வார இதழ் புலவருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டு வந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ வழிவகுத்தது.
சிறுகதை வடிவிலும் ஓரங்க நாடகங்களாகவும் சங்கப்பாடல்களை அறிமுகம் செய்த இலக்குவனாரின் முயற்சியே பின்னாளில் மு. வரதராசன், மு. கருணாநிதி ஆகியோரின் முயற்சிகளுக்கு முன்னோடி என்பதுதான் வரலாறு.
விருதுநகரில் இருந்தபோது இலக்கியம் (மாதமிருமுறை), தஞ்சாவூரில் இருந்தபோது திராவிடக்கூட்டரசு மதுரையிலிருந்த போது குறள்நெறி எனப் பல்வேறு இதழ்களை நடத்தினார்.
1965-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இருமுறை கைது செய்யப்பட்டு சிறைவாழ்வும் பணிநீக்கமும் பெற்ற இலக்குவனார், 1965 மே முதல் திசம்பர் வரை ஏழு மாதங்கள் தமது ஏட்டை நாளிதழாகவும் நடத்தினார். விற்பனையாளர்கள் உரியமுறையில் பணம் கொடுக்காத ஒரே காரணத்தாலேயே இவ்விதழ் நிறுத்தப்பட்டது.
தமிழ்க் காப்புக்கழகம்:மொழிக்காவலர் என்ற பெருமைக்குரியவர் தமிழைக் காப்பதற்கும் பல துறைகளில் வளர்ப்பதற்கும் மதுரையில் பணிபுரிந்தபோது தமிழ்க் காப்புக் கழகத்தை உருவாக்கி பணிக நிறுவனங்கள், விற்பனையகங்கள், கடைகள் ஆகியவற்றின் பெயர் பலகைகளில் உள்ள பெயர்களைத் தமிழில் எழுதும்படி கோரினார். புரட்சிக்கவிஞரின் தமிழியக்கம் கூறும் கருத்துக்களையே இவரது கழக்ததின் கொள்கைகளாக மாற்றினார். தமிழ் இயக்கத்தின் வேர் என்னும் சிறப்புக்குரியவர்.
பெற்ற பட்டங்கள்: முத்தமிழ்க் காவலர், செந்தமிழ் மாமணி, பயிற்சி மொழிக் காவலர், தமிழர் தளபதி, தமிழ்காத்த தானைத் தலைவர், இலக்கணச் செம்மல், தமிழ்க் காப்புத் தலைவர்.
அடைமொழிகள்: தமிழ் அரிமா, தமிழ்ப் போராளி, இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர், இருபதாம் நூற்றாண்டுத் செந்நாப் போதார், இருபதாம் நூற்றாண்டு நக்கீரர்,
இரண்டாம் நக்கீரர், இருபதாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள், பெரும் பேராசிரியர், தன்மானத் தமிழ் மறவர், இந்தி எதிர்ப்புப் படைத் தளபதி, செந்தமிழ்ப் படையின் மானச் செம்மல், குறள் நெறிக் காவலர், சங்கத்தமிழ் காத்த சான்றோர், மொழிப்போர் மூலவர், முதுபெரும் புலவர், முத்தமிழ்ப் போர்வாள்.
மறைவு: 1970-ல் மீண்டும் குறள்நெறி இதழைத் தொடங்கி நடத்தியும் நாடெங்கும் சென்று சொற்பொழிவாற்றியும் தமது தமிழ்ப்பணியைத் தொடர்ந்த இலக்குவனார் நீரிழிவு நோய் காரணமாக 1973-ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

நன்றி :  தினமணி 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தொடர்ந்து தமிழறிஞர்களைப் பற்றிய குறிப்புகளை இக்காலத் தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் திரு வெங்கடேசனுக்கும் தினமணிக்கும் பாராட்டுகள்.
தமிழ்ப்போராளி இலக்குவனார் பற்றிய இப் படைப்பில்,
< 1967-இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபின்னர் >  எனத் தொடங்கும் பத்தியில் இருந்து 4 பத்திகள்,  <1965->எனத்தொடங்கும் பத்திக்குப் பின்னர் அமைந்திருந்தால் கோவையாக இருந்திருக்கும்.
இலக்குவனார் இலக்கிய இணயைம் சார்பிலும் தமிழ்க்காப்புக்கழகம் சார்பிலும் மீண்டும் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, September 17, 2013

செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க.வைப் போற்றுவோம் Thiru.vi.ka. by Dr.S.Ilakkuvanar



 

செந்தமிழ்ப் பெரியார்
 திரு.வி.க.வைப் போற்றுவோம்

- தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்


  செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க. முத்தமிழ் வித்தகராய், தமிழ் உரை நடைத்தந்தையாய், சொற்பொழிவுக் கொண்டலாய்,  செய்தி இதழ் ஆசிரியராய், தொழிலாளர்களின்  தோழராய், அரசியல் அறிஞராய், மார்க்சியம் போற்றுபவராய், பெண்மை போற்றும் பெருந்தகையாய், மாணவர் நண்பராய், சமரச சன்மார்க்க  அருங்குணக்குன்றாய், அடக்கத்தின் எடுத்துக்காட்டாய் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் செப்டம்பர்த் திங்களில் (17.9.53) செந்தமிழ் நாட்டைவிட்டு மறைந்து விட்டார்.

 தமிழை வளர்க்கும் தலையாய பணியில் ஈடுபட்டு அருந்தொண்டாற்றிய பெருமை அவர்க்கு நிறைய உண்டு. அவர்தம் தொண்டால் இன்று நாடு முழுவதும் அரசியல் மேடைகளில் தமிழ் மணம் வீசுகின்றது. எங்கும் தமிழ்ப் பேச்சுக் கேட்கின்றது. தமிழ்! தமிழ்! என்னும் முழக்கம் யாண்டும் வானைப் பிளந்து எழுகின்றது.

  திரு.வி.க. வினுடைய எழுத்துக்களில் அழகு ததும்பும். இனிமை சொரியும். இசை நடனமிடும் அவர் எழுத்தோவியங்கள் உயர்தனிச் செம்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இலங்குவன. அவர் இயற்றியுள்ள ஒவ்வொரு நூலும் ஒவ்வோர் இலக்கியமாகத் தோன்றும். ஒவ்வொரு குறிக்கோளை விளங்கி நிற்கும்.  அவர் யாத்த நூல்களுள் பெண்ணின் பெருமை, மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்னும் பாரதி கருத்துக்கு ஏற்புடையது.  சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து. கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக என்னும் இராமலிங்க அடிகளாரின் அடியொற்றியது. கடுவன் காட்சியும் தாயுமானாரும், அறிவே தெய்வம் என்று கூறிய தாயுமானாரின் பொன்மொழியை விளக்கும் பான்மையது. கிருத்துவின் அருள்வேட்டல், அன்பே கடவுள் எனும் இயேசுநாதரின் கட்டளைக்குரியது. இங்ஙனம் பல உயர் குறிக்கோள்களை விளக்குவதற்கு எழுந்த நூல்கள் யாவும் இலக்கியம் என்னும் பெயருக்கேற்ப அமைந்தனவாம். இலக்கியம் என்றால் குறிக்கோளை இயம்புதல் என்று தானே பொருள்.

  அவர் வழிநின்று நற்றமிழ்த் தொண்டாற்றுதல் நம்மனோர் கடனாகும். புலவரைப் போற்றும் நாடே பொன்னாடாகும். செந்தமிழ்ப் புலவராம் திரு.வி.க.வைப் போற்றுவோம். நம் செந்தமிழ் காப்போம் என உறுதி பூண்போம். வாழ்க திரு.வி.க.வின் புகழ்! வளர்கதமிழ்!

- குறள்நெறி(மலர்1 இதழ்18): 01.10.1964

Thursday, September 12, 2013

ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார்




ஏடுகாத்த பீடுடைச்  செல்வர் தாமோதரனார்

-          இலக்குவனார் திருவள்ளுவன், thiru2050@gmail.com

  பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையும் முதன்மையும் உடைய தமிழ் இலக்கியங்கள் இயற்கையாலும் வஞ்சகத்தாலும் அழிந்து போயின. என்றபோதும் மூவாயிரம் ஆண்டுகளுக்குள் உட்பட்ட சில இலக்கியங்களையாவது அழிவிலிருந்து மீட்ட  அறிஞர்கள் சிலரால் செந்தமிழ் இலக்கியங்களை நாம் படித்து இன்புறும் பேறு பெற்றுள்ளோம். அச்சுப்பொறி நம் நிலப்பகுதியில் அறிமுகமானபோது முதலில் (1557) அச்சேறியவை தம்பிரான் வணக்கம் முதலான தமிழ் நூல்களே. இதன் பயனாய்  அங்கும் இங்குமாய் ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்கள் எங்கெங்கும் புகழ்மணக்க அச்சுச்சுவடிகளில்  அரங்கேறின. இத்தகைய அரும் பணியில் ஈடுபட்ட அறிஞர் பெருமக்களுள் முதன்மையானவர்களுள் ஒருவராகத் திகழ்பவரே ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார்.



  அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு ஓலைச்சுவடிகளைத் திரட்டி அச்சேற்றியவர் என்றால் அனைவரும் குறிப்பிடுவது அறிஞர் .வே.சா. அவர்களைத்தான். அவரது பணி போற்றுதற்குரியது என்றாலும் அவருக்கும் முன்னோடியாகப் பதிப்புச் செம்மல்கள் பலர் இருந்துள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் இலங்கையைச் சேர்ந்த ஆறுமுக நாவலரும் சி.வை.தாமோதரனாரும் ஆவர். பதிப்புப் பணியில், உலகில்  நமக்குக் கிடைத்துள்ள முதல் வாழ்வியல் அறிவியல் நூலான தொல்காப்பியத்தை  முழுமையாகப்பதிப்பித்த, தாமோதரனாரே முன்னோடி என்றும் அவர் யாழ்ப்பாணத்துக்காரர் என்பதால் புறக்கணிக்கப்பட்டு .வே.சா. குறிப்பிடப்படுவதாகவும் பலருக்கு வருத்தம் உண்டு. உண்மையில் இலங்கை அல்லது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் புறக்கணிக்கப்படவில்லை. பொதுவாகவே பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களையே முன்னிலைப்படுத்தி மகிழும் போக்கு அவ்வகுப்பினருக்கு வழங்கப்படும்  முதன்மையால்  நிலவுகின்றது.   மேலும் தமிழ் வரலாறு இந்தியத்தால் மறைக்கப்பட்டு  உலகு தழுவிய தமிழ் வரலாறு  உணர்த்தப்படாமையாலும் பிற நாட்டு நல்லறிஞர் வரலாறு மறைவாகப் பேசப்படும் நிலை உள்ளது. தாமோரதரனார்தான் தன்  வழிகாட்டி என்று கூறும் அறிஞர் .வே.சா. அவர்களே, "தமது ஓய்வு நேரத்தைத் தமிழ் ஆராய்ச்சியிற் பெரும்பாலும் செலவிட்டு, வீரசோழியம், தொல்காப்பியச் சொல்லதிகாரம், தொல்காப்பியப் பொருளதிகாரம், கலித்தொகை, இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம் என்பனவற்றின் மூலங்களையும், உரைகளையும் பல ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு பரிசோதித்து முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டவர் இவரே. இக்காலத்தில் தமிழில் பல துறைகளில் ஆராய்ச்சி செய்வோருக்குப் பெருந்துணையாக இருப்பன இவர் வெளியிட்ட புத்தகங்களாகும்.’’ என  டி.. இராசரத்தினம் பிள்ளை அவர்களின்  'தாமோதரம் பிள்ளை அவர்கள் சரித்திரம்' (சென்னை, 1934) என்னும் நூலுக்கு அளித்துள்ள அணிந்துரையில் கூறியுள்ளமையால், அறிஞர் தாமோதரனாரின் பதிப்புப்பணியைப் பாராட்ட வேறு சான்று தேவையில்லை.



 உண்மையில், திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் (முதல் நூல் பதிப்பாண்டு 1812), .முத்துசாமிப் பிள்ள(1816), புதுவை நயனப்ப முதலியார் (1835), முகவை இராமாநுசக் கவிராயர் (1840), களத்தூர் வேதகிரி முதலியார் (1832), மழவை மகாலிங்கையர் (1847), தாண்டவராய முதலியார்  (1824), திருத்தணிகை .விசாகப் பெருமாளையர்  (1828), திருத்தணிகை .சரவணப் பெருமாளையர்  (1830),  திருவேங்கடாசல முதலியார்  (1830), காஞ்சிபுரம் மகாவித்துவான் சி.எசு. சபாபதி முதலியார் (1837), தொண்டை மண்டலம் இராசநல்லூர் இராமச்சந்திர கவிராயர்(1824), மகாவித்துவான் சி.மீனாட்சிசுந்தரம் பிள்ளை(1851), யாழ்ப்பாணம் நல்லூர் .ஆறுமுக நாவலர் (1849), வடலூர் இராமலிங்க அடிகள் (1851), காயல்பட்டினம் செய்குஅப்துல் காதிரு நயினார் லப்பை ஆலிம் (1842), என அறிஞர் தாமோதரனாருக்கு முன்னரே அறிஞர் பலர் பதிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆறுமுகநாவலரின் வழிகாட்டுதலால் தாமோதரனார் பதிப்புப்பணியில் முனைப்பாக  ஈடுபட்டார். தாமோதரனாரின் தூண்டுதலால் .வே.சா. பதிப்புப்பணியி்ல் தளராமல் ஈடுபட்டார். எனவேதான்,  தமிழ்த்தென்றல்  திரு.வி.. அவர்கள்  பதிப்புப்பணிக்கு அடித்தளம் அமைத்தவர் ஆறுமுகநாவலர். சுவர்களை எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை. கட்டமைத்தவர் சுவாமிநாத அய்யர்எனப் பதிப்புப்பணிகளைப் பாராட்டி உள்ளார்.



  அறிஞர் சி.வை.தா. பதிப்பித்த நூல்கள்  நீதிநெறி விளக்கம் (1852), தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம்(1868),  வீரசோழியம்(1881), இறையனாரகப்பொருள்(1883), தணிகைப்புராணம்(1883),  தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம்(1885), கலித்தொகை(1887), இலக்கண விளக்கம்(1889),  சூளாமணி (1889), தொல்காப்பியம்எழுத்ததிகாரம்(1891),  தொல்காப்பியம் சொல்லதிகாரம்(1892) ஆகியனவாகும். பதிப்புப்பணியுடன் கட்டளைக் கலித்துறை, வசன சூளாமணி, சைவ மகத்துவம், நட்சத்திரமாலை, காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (புதினம்) முதலிய நூல்களைத் தாமே எழுதி வெளியிட்டார்.



  அறிஞர் சி.வை.தாமோதரனார் அவர்களைப்பற்றிய அறிஞர்கள் சிலரின் பாராட்டுரைகள் வருமாறு: அறிஞர் கா.சு.பிள்ளை, ‘‘தமிழ் நூல்களை அச்சியற்ற முயன்றவருள் மிக உழைத்தவர்’’ எனப் பாராட்டி உள்ளார். ‘‘தொல்காப் பியமுதலாந் தொன்னூல்க ளைப்பதிப்பிதது ஒல்காப் புகழ்மேவியவர் ’’ என அறிஞர் .வே.சா. அவர்கள் பாராட்டி உள்ளார்கள்.

‘‘ஏட்டி லிருந்த வருந்தமிழ் நூல்க ளெனைப்பலவுந்

தீட்டி வழுக்களைத் தச்சினி லாக்குபு செந்தமிழ்சேர்

நாட்டி லளித்துயர் தாமோ தரேந்திர னண்ணுபுகழ்

பாட்டி லடங்குந் தகைத்தோ புலவர்கள் பாடுதற்கே ’’

என்கிறார் சுன்னாகம் .குமாரசாமிப்புலவரவர்கள்

‘‘உண்மையான அன்போடு உண்மையான தமிழ்த் தொண்டு புரிதலே பிள்ளையவர்களின் பெருநோக்கமா யிருந்தது என்கிறார் வையாபுரியார். ‘‘கோடி புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறரிதே  என்கிறார் மேதை வேதநாயகம்பிள்ளை அவர்கள்
தாமோ தரம்பிள்ளை சால்பு எடுத்துச் சாற்ற எவர்
தாமோ தரம் உடையார்என்கிறார் செம்மொழிஅறிஞர் பரிதிமாற்கலைஞர் எனப்படும்
வி. கோ. சூரியநாராயணசாத்திரியார்.


  அறிஞர் தாமோதரனார் இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சிறுப்பிட்டி என்னும் ஊரில் வைரவநாதப் பிள்ளை- பெருந்தேவி அம்மாள்  ஆகியோர்  மகனாக, 1832 ஆம் ஆண்டில் பிறந்தார். தொடக்கத்தில் 12  ஆம் அகவைக்குள்ளாகத் தம் தந்தையாரிடமே வாக்குண்டாம், நன்னெறி, திவாகரம் முதலான இலக்கிய இலக்கண நூல்கள் சிலவற்றை முறையாகப் பயின்றார். சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர் என்பவரிடம் நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியங்களையும் மேலும் சில இலக்கண நூல்களையும்  கற்றுக் கொண்டார். இதன்பின்னர் தெல்லிப்பளை அமெரிக்க ஊழியக் கல்லூரியில் (மிசின் பாடசாலையில்) சேர்ந்து ஆங்கிலம் பயின்றார். தொடர்ந்து வட்டுக்கோட்டைப் பல்கலைக் கல்லூரியில் (யாழ்ப்பாணத்தில் 'செமினறி' சாத்திரக் கலாசாலையில்) 9 ஆண்டுகள் ஆங்கிலம், கணக்கு,அறிவியல், தத்துவம் கற்றுத் தேர்ச்சி பெற்றார். கோப்பாய் சக்தி வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.  இங்குதான் இவரது முதல்பதிப்புப்பணி அரங்கேறியது(1852 ஆம் ஆண்டு: நீதிநெறி விளக்கம்). ஆங்கிலக்கல்வி  பயிலக் கிறித்துவராக  மாறி, சி.எல். டபிள்யூ. கிங்க்சுபரி  எனப்பெயர் சூட்டிக் கொண்டவர் மீண்டும் சைவச்சமயத்திற்கு மாறினார்.



  யாழ்ப்பாணத்துப் பாதிரியார்  'பேர்சிவல்', சென்னையில் இருந்து வெளியிட்ட , 'தினவர்த்தமானி' எனும் தமிழ் இதழின் ஆசிரியர்  பொறுப்பேற்றார். இக்  காலத்தில், ஆங்கிலேயர் பலருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலிரண்டு பட்டதாரிகளும் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்நத சி.வை. தாமோதரனாரும்  டி.சி.டபிள்யூ விசுவநாதரும் ஆவர். அறிஞர் தாமோதரனார்  பல்கலைக்கழகப்பட்டம் பெற்றதும் கள்ளிக்கோட்டை அரசுப் பள்ளியில் உதவியாசிரியாராகப் பணியில் சேர்ந்தார். கல்விப்பணியுடன் பணியாட்சியிலும் (நிருவாகத்திலும்) சீர்திருத்தங்கள் செய்து சிறந்து விளங்கியமையால், அரசாங்க வரவு செலவுக்கணக்குச்சாலையில் கணக்காய்வாளர் பணிகிடைத்து அப்பதவியிலும் சிறந்து விளங்கினார். இதன்  தொடர்ச்சியாக கேட்பாளர் (விசாரணைக் கர்த்தர்) என்னும் பணியில் சேர்ந்தார். 1871 ஆம் ஆண்டில் சட்டத்துறையில் பட்டம் (பி.எல்.) பெற்றார். இவரின்  தமிழ்ப்புலமை பாராட்டப்பட்டுச்  சென்னை அரசினர் மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார்.



1882 இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் கும்பகோணத்தில் வழக்குரைஞராகத் தொழில் புரிந்து 1887ஆம் ஆண்டில் புதுக்கோட்டை அரசில் சில ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றினார்.  அப்பொழுது தலைமை நீதிபதி என்ற முறையில மன்னருக்கு மாற்றாக அவர்சார்பில் தலைமை ஆட்சியாளராகவும் இருந்தார். 1895 ஆம் ஆண்டில் அரசினர் 'இராவ் பகதூர்' பட்டமளித்துப் பாராட்டினர்.



பணி ஓய்விற்குப்பின்பு பதிப்புப்பணிகளில் முழுமையாக ஈடுபட்டார். இவர் வழங்கிய பதிப்புரைகள் ஆராய்ச்சித் திறனும் புலமைச்சிறப்பும் மிக்கன.  தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம்  பெறுவன. இவரது உரைநடைகளைத் தொகுத்துத் தாமோதரம் என்னும் பெயரில் நூல் வந்துள்ளது. இவரைப்பற்றிய வரலாற்று நூல்களும் ஆராய்ச்சி நூல்களும் வந்துள்ளன.



  ஓலைச்சுவடிகளின் பதிப்புப்பணியின் துயரம் குறித்து அறிஞர் தாமோதரனார், ‘‘என் சிறு  பருவத்தில் எனது தந்தையார் எனக்குக் கற்பித்த சில நூல்கள் இப்போது தமிழ் நாடெங்கும் தேடியும் அகப்படவில்லை. ஒட்டித் தப்பியிருக்கும் புத்தகங்களுங் கெட்டுச் சிதைந்து கிடக்கும் நிலைமையைத் தொட்டுப் பார்த்தாலன்றோ தெரிய வரும்! ஏடு எடுக்கும்போது ஓரஞ் சொரிகின்றது; கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகின்றது; ஒன்றைப் புரட்டும்போது துண்டாய்ப் பறக்கிறது. இனி, எழுத்துகளோவென்றால் வாலுந் தலையுமின்றி நாலுபுறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது ’’ எனத் தம் கலித்தொகைப் பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்.   



    அக்காலச் சூழலாலோ இதழாசிரியராக இருந்ததாலோ தாமோதரனாரின் நடையில் அயற் கலப்பு இருக்கும். எனினும் உள்ளம் தூய தமிழைக்காப்பதாகவே இருந்தது. எனவேதான், 'தமிழ் மாது நும் தாயல்லவா? அவள் அங்கம் குலைந்து அழிகின்ற தருணத்திலும் நமக்கென்னவென்று நாம் இருக்கலாமா?' எனத் தமிழறிஞர்களிடம் வினவித் தமிழ்த்தாயைக் காக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தினார். தம்ஆராய்ச்சிகள் மூலம் இந்தியாவின் ஆதி மொழி தமிழே என்றும் சங்க இலக்கியம் யாவும் தனித்தமிழ் நூல்களே என்றும் இவர் நிறுவுகிறார். ஆரிய சம்பந்த மின்றித் தமிழ்க் கிரந்தங்கள் கிடையாஎன்போருக்கு, ‘‘இது பிறவிக் குருடன் சூரிய சந்திர ருண்மையை மறுத்த தொக்கும். இதனை முன்னரே நிராகரித்திருக்கின்றேன். இதன் பொய்மையை மதுரைச் சங்கத்து நூல்களுள் ஒன்றையாவது பார்த்து உணர்வாராக. இக் கலித்தொகையே இதற்குச் சான்று பகரும்’’ என்கிறார். ஆரியர்கள் வடமேற்குத்திசையிலிருந்து வந்தவர்கள் அவர்கள் வரும் முன்னர் இந்நாடு முழுவதும் இருந்தவர்கள் தமிழர்களே, தொல்காப்பியம் இயற்றிய பின் சென்ற காலம் எவ்விதத்தானும் பன்னீராயிரம் வருடத்திற் குறையாது, என்பனவெல்லாம் அறிஞர் தாமோதரனாரின் ஆய்வுரைகளாகும்.



  ‘‘தமிழ் என்பது தூய தமிழ்ச் சொல்லே. 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு மொழிக்கு ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட மொழியால் பெயர் இடப்பட்டது  எனச் சொல்வது ஏற்கத்தக்கதா’’ என வினவுகிறார். ஐந்தெழுத்தால் ஒரு பாடையாகுமா என்று சொல்வோருக்கு ‘‘8 எழுத்தால் சமசுகிருதததை ஒரு மொழி எனச் சொல்ல முடியுமா? 2 எழுத்தால் ஆங்கிலத்தை ஒரு மொழி எனச் சொல்ல முடியுமா’’ என விளக்கித் தமிழ், தனித்தியங்கும்  மூல மொழி எனத் தெளிவுபடுத்துகிறார். சிலர் தமிழ் மொழிக்கான பெயர் திராவிடம் என்றும் அதிலிருந்துதான் தமிழ் வந்ததென்றும் குப்பைகளைக் கொட்டுகிறார்கள் அல்லவா? அவர்களுக்கும் தெளிவாகப் பின்வருமாறு விடை பகர்கிறார் தாமோதரனார்.



இகழ் இமிழ் உமிழ் கமழ் கவிழ் குமிழ் சிமிழ் என ழகரப் பேறு பெற்ற பதங்கள் போலத் தமிழ் என்னுஞ் சொல் தனிமைப் பொருள் குறித்த தமியென்னும் வினை அடியாற் பிறந்து, வினை முதற் பொருண்மை உணர்த்திய விகுதி குன்றித், தனக்கிணையில்லா மொழி என்னும் பொருள் பயப்பது. அங்ஙனமாயின், தமியேன் என்பது போல இழிவுபொருளன்றோ பயக்கு மெனின், அற்றன்று, ஒரே தாதுவிற் பிறந்தும் அடியேன் அடிகள் எனவும் அளியேன் அளியாய் எனவும் நிற்பனவற்றுள் ஒன்று இழிவு பொருளும் மற்றையது உயர்வு பொருளும் உணர்த்தினவென்க. செவிக்கினிமை பயத்தலான் மதுரம் என்னும் பொருட்பேறுடைத்தாகித் தமிழென வழங்கிய தென்பாருமுளர். அஃதெவ்வாறாயினும் ஆகுக. தமிழ் என்பது தென்மொழிக்குத் தென் சொல்லாகிய பெயரே யாமெனக் கொள்க. இதை ஒழித்துத் திராவிடமென்னும் வடமொழியே தமிழென்றாகியதெனச் சற்று ஆலோசனையின்றிக் கூறுவாருமுளர். அவர் மதஞ் சாலவும் நன்றாயிருந்தது!! தமிழிலே தமிழ் என்னும் பதம் வருமுன்னர்ச் சமசுகிருதத்திற் றிராவிடம் என்னும் மொழி உளதாகில் இப் பெயர் எப்பொருளை உணர்த்திற்றோ? உலகத்தில் எஞ்ஞான்றும் பெயரா பொருளா முந்தியது? பொருளெனில் அப்பொருள் இருக்கும் இடத்தா அஃதில்லாத பிறிது தேயத்திலா அதன் பெயர் முன்னர் நிகழும்? இஃதுணராது தமிழ் வழங்கிய இடத்திற் றமிழுக்கோர் பெயரிருந்ததில்லை யென்றுஞ் சமசுகிருதத்திலிருந்து அதற்குப் பெயர் வந்ததென்றுஞ் சொல்வது யார்க்கும் நகைவிளைக்குமே. இஃதொன்றோ! யாதொரு தமிழ்மொழியில் இரண்டோரெழுத்துச் சமசுகிருத மொழிக்கொப்ப நிகழுமாயின் அது சமசுகிருதத்தினின்று பிறந்ததெனச் சாதிக்கின்றனர். மேலைத்தேயவாசிகளின் இங்கிலீசு முதலிய அந்நிய மொழிகளில் இன்றியமையா வீட்டுச் சொற்களாகித் தந்தை தாயரைக் குறிக்கும் பாதர் மதர் என்பனவாதியும் வடமொழி அடியாய்ப் பிறந்த தென்பரா? அப்படியாயின் வடமொழியைக் காணுமுன் அத்தேசத்தா ரெல்லாந் தாய் தந்தையரை அழைத்தற்கோர் வீட்டுச்சொல் இல்லாதிருந்தனரென் றன்றோ முடியும்? ஆண்டுள்ள பாதர் மதர் ஒப்ப ஈண்டும் பிதா, மாதா ஆயிற்றெனில் யாது குற்றம்? தருக்கத்திற் காகதாலீய நியாயத்தினுண்மை அறியாமலும் ஆரியமொழிக்கும் அதன் அயல் நாட்டு மொழிகளுக்கும் உள்ள சம்பந்த சார்புகளின் காரணத்தை ஆராயாமலும் இவ்வாறு கழறும் இவர் கற்பனைக்கு யாது செய்யலாம். இவர் வாய்க்கு விலங்கிட யாராலும் முடியும்!



  இன்னொரு சாரார் தமிழ் என்னுந் தென்மொழி பதமே வடமொழியிற் றிராவிடமென மரீஇயது என்பர். இவரும் உண்மை கண்டவரல்லர். இரு கூற்றாறுந் திராவிடமென்னுஞ் சொல் வந்த வரலாறும் அதன் பொருளும் அதன் வழக்கியலும் அறியாராயினார். இருவருந்தம் மனத்தின்கண் நிகழும் ஒரோர் துணிவுபற்றி, வல்லார்பாற் புல்லும் ஆயுதமென்றாற் போலத், தமது துணிவை நாட்டுவான் புக்கு மிக்கிடர்ப்பட்டுப் போலி யாதாரங்கள் காட்டி வாய்வல்லான் சொல்லே மன்று கொளுமென்று வாளா நம்பித் தம் வன்மை காட்ட முயன்ற யுத்திமான்களன்றி ஆகமப் பிரமாணங் கொண்டு சாதித்தவரல்லர். ஏமசந்திரநாநார்த்தத் தின்படி திராவிடம் என்னுஞ் சொல் திரா என்னும் அடியாற் பிறந்து ஓடிவளைந்தது என்னும் பொருளுடையது. இது மகாநதி முதற் குமரியீறாக ஓடிவளைந்த கோடி மண்டலத்தை உணர்த்துவது. . . . . . . . மேலுந் திராவிடம் மென்ப தென்னை? தமிழ் தெலுங்கு கன்னடம் மராட்டிரம் கூர்ச்சரம் என்னும் ஐந்து மொழியையுந் திராவிடமெனவே அஃது இவ்வைந்து மொழியும் வழங்கும் நிலத்தின் பெயரென்பது தானே போதரும். ஆகவே இச்சொற் வடமொழியிற் கோடி மண்டலத்தின் குறியீடாகவே நின்றதென்க. அன்றியும் ஈராயிர ஆட்டைமொழியையா பதினாறாயிர வருடப் மொழிக்கிட்ட பெயரென்பது? இவற்றாற் றமிழ் திராவிடமாயதூஉந் திராவிடந் தமிழாயதூஉம் இரண்டுந் தவறென் றுணர்க.


 
தற்காலத்தில் இங்கிலீசு பிராஞ்சியாதிக்க மொழிகள் சேர்ந்த தமிழ்ச் செய்யுட்குள்ள ஊனம் அக்காலத்தில் வடமொழிச் செறிவுக் குளதாயின் வடமொழி தமிழுக்குத் தாய்மொழி யென்றெவ்வாறு பெறப்படும். குறள் ஒளவையாடல் திரிகடுகம் நான்மணிக்கடிகை பஞ்சமூலம் ஏலாதி பழமொழி முதலியவற்றில் வரும் ஆரிய மொழி எத்துணைச் சிறுபான்மைய?....இவையெல்லாஞ் சம்சுகிருதத்தினின்று பிறந்தனவாமே!! இவ்வாறு மயங்குவார் கல்வியறிவில்லாதார் மாத்திரமன்று. தமிழிலக்கணக் கடன் முழுதுண்டு, இலக்கணக்கொத்து ஏப்பமிட்டு வடிந்து, நிலம் நீர் எனப் பொதுவெழுத்தான் வரினுந் தமிழ் தமிழே என்று வற்புறுத்துவான் பொதுவெழுத்தானுஞ் சிறப்பெழுத்தானு மீரெழுத்தானு மிலங்குந் தமிழ்மொழிஎன்று சூத்திர மியற்றிய சுவாமிநாதசேதிகரே, தம்மரபின் முன்னோர் மதத்தையும் மறந்து, “நூலுரை போதகா சிரியர்மூவரு முக்குண வசத்தான் முறைபிறழ்ந் தறைவரேஎன்னுந் தன்விதிக்குத் தன்னையே இலக்கியமாக ஒப்பித்தாற் போல, ‘அன்றியு மைந்தெழுத் தாலொரு பாடையென் - றறையவு நாணுவ ரறிவுடையோரேயென்று மாழ்கினர். இது வடமொழிப் பயிற்சியே மிக்குடையராய் அதன்மேற் கொண்ட பேரபிமானத்தானும், அம்மொழியின்மேற் றென்மொழியன்றிப் பிறிதுமொழி தெரியாக் குறைவானும் நேர்ந்த வழுவன்றோ? உலகத்தில் எம்மொழிக்குஞ் சிறப்பெழுத்துச் சில்லெழுத்தேயாம். உரப்பியும் எடுத்துங் கனைத்தும் ஒவ்வொன்றையே வேறு மும்மூன்றாக விகற்பித்துச்சரிக்கும் ஐவர்க்கத்தையுங் கூட்டெழுத்தையும் ஒழித்தால் எட்டெழுத்தாலொரு மொழி யின்றேயென்று சம்சுகிருதத்தையும் புரட்டிவிடலாமே. இங்கிலீசு மொழியில் வடமொழிக்கில்லாத எழுத்துக்கள் F,Z  இரண்டாதலால் இரண்டெழுத்தாலொரு மொழியின்றேயென அதனையும் மறுப்பார்போலும். இரண்டுக்குப் பொதுவாயுள்ளனவற்றை ஒன்றற்கே உரியனவாகத் தீர்த்து நடுவுநிலைமை குன்றல் இவர் போலியர்க்குப் பெருங் குற்றமாம். உண்மை உரைப்பின் உரோமாபுரிமொழியாகிய இலத்தீனுக்கும் இங்கிலீசுக்குமுள்ள சம்பந்தமே சம்சுகிருதத்திற்குந் தமிழுக்குமுள்ளதெனக் கொள்க. அளவில்லாத கிரந்தங்களை யுடையதாயினும் இலத்தீன்மொழி விரவாத கிரந்தமொன்றும் இங்கீலீசில் இல்லாதவாறு போலவே சம்சுகிருதமொழி சுற்றிலும் விரவாத கிரந்தந் தமிழுக்கில்லாத திருக்கலாமாகவே, “அன்றியுந் தமிழ்நூற் களவிலை யவற்று ளொன்றே யாயினுந் தனித்தமிழுண்டோஎன இலக்கணக் கொத்துடையார் முழங்கிய முழக்கம் வெற்றொலியாயினமை அறிக. அன்றியும் வடமொழியில் இல்லாத புணர்ச்சி யிலக்கணங்களுங் குறியீடுகளும் வினைத்தொகை குறிப்புவினை முதலிய சொல்லிலக்கணங்களும் உயர்திணை அஃறிணைக் கூறுபாடும் பால் விதிகளும் அகம் புறம் என்னும் பொருட் பேதங்களும் ஐந்திணை யியல்புகளும் அவற்றின் துறைகளும் வெண்பா கலிப்பா கலித்துறை முதலிய செய்யுளிலக்கணங்களும் இவைபோல்வன பிறவுங் காலத்திற்குக் காலம் பிற்றை நாளிற் றோன்றாது ஆதியிலக்கணமாகிய அகத்தியத்தில் முற்ற உரைக்கப்பட்டமையால் தமிழ் சம்சுகிருதத்தினின்று பிறவாத தன்மொழி(தற்பாசை) என்பது பசுமரத் தாணிபோல் நாட்டப்படும். இவை யெல்லாம் ஒருவர் காலத்தில் அவ்வொருவராலேயே நூதனமாகப் படைக்கப்படற் பாலனவா? அகத்தியர் மகாரீசுவரர், அன்னோர் இவற்றைக் கற்பித்தல் எளிதன்றே யெனின், நன்று கடாயினாய், ஐந்திர பாணிநீய வியாகரணங்களை நன்குணர்ந்தும், அவற்றுள்ள அதிகார முறைமை ஒத்து முறைமை சூத்திர முறைமைகளின் சிறப்பினைச் சீரிதிற் கண்டும். யாதொருகிரமமும் முன்னெடுபின் சம்பந்த சார்புமின்றித் தமிழுள் இயல் இசை நாடக இலக்கண விதிகளும் இயற்றமிழுள்ளும் எழுத்துச் சொற்பொருள் யாப்பு அணிவிதிகளும் நெறிமுறை பிறழக் கண்டபடி விரவத் தமது இலக்கணநூல் இயற்றியமையானே அஃது எத்துணை வல்லாராயினும் ஒருவருக்கரிய தென்று உணர்க. அன்றியும் இஃது எத்தேசத்து எந்தப் மொழியினது அநுபவத்திற்கும் யுத்திக்கும் முழு விரோதமென்க.

இவை போலும் அறிஞர்.வை சி.தாமோதரனாரின் ஆழமான கருத்துகள் தமிழுக்கு என்றும் வலிவும் பொலிவும் நல்குவனவன்றோ!

  அறிஞர் தாமோதரனார், தன்னரிய தமிழுக்குப் பன்னலம் பெருகச் செய்து, பதிப்புத் துறையின் 'முன்னோடி' எனப் புகழ் பெற்றுத் தமது அறுபத்து ஒன்பதாம் அகவையில், 1901ஆம் ஆண்டு தைத்திங்கள் முதல் நாள், இவ்வுலக வாழ்வை நீத்தார்.



நற்புலவர் ஏடெல்லாம் நாடிநலங் காணாமல்
உற்றசெல் உள்நுழைந் துய்ந்திடும் - பெற்றியைக்
காணாமற் காத்திட்ட சி. வை. தா மோதரனைப்
பேணுதலே நம்பெற்றிப் பேறு. (புலவர். நா. சிவபாதசுந்தரனார்)

என நாம் அறிஞர் சி.வை.தாமோதரானரின் பார்புகழ் போற்றிப் பைந்தமிழ் காப்போம்!





---000---


நன்றி : இலக்கியப்பூக்கள் தொகுப்பு 2  (தொகுப்பாசிரியர் : முல்லை அமுதன்) பக்கம் 69-80