Saturday, November 28, 2015

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 08: ம. இராமச்சந்திரன்


தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu8

  பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையைப் பின்பற்றிய கவிஞர்கள் அனைவரும் தமிழ் மொழியின் சிறப்பையும் மறுமலர்ச்சியையும் சமூகச் சீர்திருத்தத்தையுமே தம்முடைய கவிதைக்குக் கருப்பொருளாகக் கொண்டார்கள். எடுத்துக்காட்டாக புலவர் குழந்தை, இ.மு. சுப்பிரமணியபிள்ளை, சாமி. சிதம்பரனார், வாணிதாசன், ச. பாலசுந்தரம் ஆகியோர் எழுதிய கவிதைகளைக் குறிப்பிடலாம். புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம்’ என்ற மிகப் பெரிய செய்யுள் நூலை எழுதி பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்கள். இராவண காவியம் கம்பன் கவிக்கு நிகரானது. புலவர்குழந்தை ஒரு தலை சிறந்த கவிஞர். அதே போல இ.மு. சுப்பிரமணியப்பிள்ளை அவர்களும் ‘வால்மீகியின் புரட்டு’ என்னும் தலைப்பில் குடியரசு இதழில் கவிதைகள் எழுதியுள்ளார்கள்.
  பார்ப்பன ஆதிக்கம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தலை விரித்தாடியது. 1924இல் திருச்செங்கோட்டில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டியில் பிராமணர்களுக்கு ஓரிடத்திலும் பிராமணர் அல்லாதவர்க்கு வேறொரிடத்திலும் உணவு பரிமாறப்பட்டது. இதனால் மனம் புண்பட்டு வெறுப்புற்ற பெரியார் ஈ.வே. இரா. அவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறினார். காங்கிரசுக்கு எதிர்ப்பாக வருணாச்சரமப்பாகுபாட்டிற்கு எதிராகச் சுய மரியாதை இயக்கத்தை உருவாக்கினார். சுயமரியாதை இயக்கம் பின்னாளில் திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றது.
  தன் மதிப்பு இயக்கத்திலும் பெரியாருடைய செயலாண்மையிலும் பற்றுக் கொண்டு பாரதிதாசனைத் தொடர்ந்து ஒரு பரம்பரையே உருவாயிற்று. பாரதிதாசன் கவிதைப் பரம்பரை என்றும் அழைக்கப்பட்டது. கவிஞர் முடியரசன், கவிஞர் சுரதா, கவிஞர் கண்ணதாசன் அப்பரம்பரையில் இடம் பெற்றுள்ளனர். பாரதிதாசனைப் போலவே இக்கவிஞர்களும் சாதிக் கொடுமைகளைச் சாடினார்கள். பகுத்தறிவுக் கொள்கையைத் தமிழ்நாடெங்கும் தம் கவிதை மூலம் பாராட்டித் தாங்களும் பாராட்டுப் பெற்றார்கள். இவர்களுள் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் திரைப்படத்துறையில் தன்னிகரற்ற கவிஞராக விளங்கினார்.
‘              கனக விசயனின் முடித்தலை நெறித்து
                கல்லினை வைத்தான் சேரன் மகன்
                இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
                இசைபட வாழ்ந்தான் பாண்டியனே’
என்று பாடினார் கண்ணதாசன். மன்னாதி மன்னன் படத்தில் புரட்சி நடிகர் எம்ஞ்சி.இராமச்சந்திரன் அவர்கள் பாடுவதாகக் காட்சி அமைந்து காண்போர் உள்ளத்தைக் கவர்ந்தது.
கவிஞர் சுரதா மறுமலர்ச்சிச் சிந்தனை பற்றிப் பாடியுள்ளார்.
‘               சம்பந்தர், அபிராமி பட்ட ரெல்லாம்
                தாய்மொழியாம் தமிழில்தான் வழிபட் டார்கள்
                எம்பெருமான், தமிழில்வழி படாதீர் என்றே
                எவரிடத்தும் இதுவரையில் சொன்ன துண்டோ’ 8
மூடக்கொள்கைகளைக் களையும் விதத்தில் மறுமலர்ச்சிக் கவிதை பாடினார் கவிஞர் முடியரசன்.
  தன்மதிப்பு இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட பேராசிரியர் இலக்குவனாரும் தேவநேயப் பாவாணர் அவர்களும் தந்தை பெரியார் அவர்களிடம் மிகுந்த பற்றுக் கொண்டு விளங்கினார்கள். பாரதிதாசனைப் போல தன்மதிப்பு இயக்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து பணியாற்றவில்லை. ஆனால், பாரதிதாசன் அவர்களைப் போலவே கொள்கையில் உறுதி படைத்தவராகவும், மறுமலர்ச்சி எண்ணம் உடையவராகவும் இலக்குவனார் விளங்கினார்.
 இலக்குவனார், பள்ளியில் படிக்கும் காலத்திலேயே கவிதை பாடும் ஆற்றல் பெற்று விளங்கினார். தாய்மொழியாம் தமிழில் புலமை பெற்றிருந்தது போல ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்றிருந்தார். பள்ளிப் பருவத்திலேயே ஆங்கிலத்திலும் தமிழிலும் சொற்போர் நிகழ்த்தியுள்ளார்.
‘கல்விக்கூட ஆண்டு மலரில் ஓர் ஆங்கிலக் கவிதையைத் தழுவி,
‘உலகம் நமதே உயர்ந்தோர் நாமே’ 9
என்று தொடங்கி அகவற்பா ஒன்று பாடியுள்ளார். இதனைக் கவிஞர் அவர்கள் தம் வரலாற்று நூலில் (என் வாழ்க்கைப்போர்) கூறியுள்ளார். இலக்குவனார் பிறமொழிச் சொற்கள் கலவாமல் செஞ்சொற்களைப் பெய்து கவிதைகள் இயற்றியுள்ளார். மாணவர் கழகம் நடத்திய சொற்பொழிவுக் கூட்டஙகளிலும் சொற்போர் அரங்குகளிலும் பங்கு கொண்டுள்ளார்.
  தலைமையாசிரியர் முதலியவர்களை வரவேற்கவும், மாற்றலாகிச் செல்லும் மற்றைய ஆசிரியர்கட்குப் பிரிவுரை கூறவும் நடந்த கூட்டங்களில் பாடல்கள் இயற்றிப் பொழிந்துள்ளார். 10
  இலக்குவனார் பாடல்களைக் கேட்ட ஆசிரியர் சாமி. வேலாயுதம் பிள்ளை மறுநாள் வகுப்புக்கு வந்தவுடன் இலக்குவனாரைப் பாராட்டி ‘நீவிர் பெரும் புலவராகப் புகழ் பெறுவீர்’ என்று தம் கையிலிருந்த எழுது கோலால் தலையில் தட்டி இலக்குவனாரை வாழ்த்தியுள்ளார்.
  சங்கப் புலவர்களைப் போன்று அகவற்பாக்களையே இலக்குவனார் மிகுதியும் பாடியுள்ளார். ஆற்றொழுக்குப் போல கருத்துக்களைத் தங்கு தடையின்றி ஒழுங்குபடச் சொல்வதற்கு ஏற்ற பாவகை ஆசிரியப்பா. 11
 சங்கச் செய்யுட்களுக்கு என்று ஒரு தனிச் சிறப்புண்டு. சங்கப் புலவர்கள் பொருளுக்கே முதல் இடம் கொடுத்து செய்யுள் செய்தனர். சங்கப் புலவர்கள் தமிழ் மக்களின் வாழ்க்கையைப் பாடினார். பொருளே வாழ்க்கை, பொருள் படைத்ததே வாழ்வு என எண்ணினார்.
 எதுகை மோனைகளுக்கும், உவமை உருவகங்களுக்கும் இரண்டாம் இடமே அளித்தனர் சங்கப் புலவர்கள். சங்கக் காலத்தில் அகவற்பாக்களே மிகுதியும் பாடப் பெற்றுள்ளன. அகவற் பாக்களுக்கு இன்னொரு பெயர் ஆசிரியப்பா. அகவல் எனினும் ஆசிரியம் எனினும் ஒன்றே.
‘அகவல் என்ப ஆசிரியப் பெயரே’ 12
 இலக்குவனார், தம் முதல் மனைவி பட்டம்மாள் அவர்கள் இறந்த பொழுது மிகவும் துன்பமடைந்தார். ஆற்றொணா அளவினது. உள்ளத் துன்பத்தை வெளிப்படுத்து முகத்தான் அகவல் ஒன்று பாடியுள்ளார். ‘அறிந்துளோர் சொன்மினோ’ என்பது அப்பாடலின் தொடக்கமாகும். கையறுநிலையில் பாடப்பெற்றது. ‘படிப்போரை கண்ணீர் உகுக்கச் செய்யும் திறம் வாய்ந்தது. அக் கவிதையைப் படித்து பல முறை கண்ணீர் வடித்திருக்கிறேன்.’13 என்று திருமதி சிவகாமி அவர்கள் ஆய்வாளர்க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்கள்.
குறிப்புகள்
  1. சுரதா, துறைமுகம், ‘தமிழில் அர்ச்சனை’, பாடல் எண்.7
  2. சி. இலக்குவனார், என் வாழ்க்கைப் போர், குறள் நெறி வெளியீடு, மதுரை 1971, பக்.56-57.
  3. சி. இலக்குவனார், என் வாழ்க்கைப் போர், குறள் நெறி வெளியிடு, மதுரை, 1971, ப.52.
  4. முனைவர் ச.சு. இளங்கோ, பாரதிதாசனின் கதைப் பாடல்கள் தமிழ்மணி, புத்தகப் பண்ணை, சென்னை, 1978, ப.286.
  5. தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருள்-‘செய்யுளியல்’ நூற்பா-81.
  6. திருமதி சிவகாமி சிதம்பரம், `நேர்காணல்-1’ நாள்; 14.5.87.

Friday, November 27, 2015

அவதானப் புலவர் அபூபக்கர் – பேராசிரியர் மு. அப்துல் சமது


தலைப்பு-அவதாதனப்புலவர் அபூபக்கர் : thalaippu_avathanapulavar-abubakker

  தமிழிலக்கியப் புலமையும் இலக்கணப் புலமையும் நினைவாற்றலும் மிக்கவர்களால் நிகழ்த்தப்படும் ஓர் அரிய கலை ‘அவதானம்’
  “வாயொன்று சொல்லவும் கையொன்று செய்யவும் வாய்த்தமிழ்
   ஆயென்ற போதாத னேர்விடை கூறவும், ஆசினிக்கு
   ஈயென்ற சொல்லை யிணைக்கலம் இட்டிசை யின்னவையோ
   டேயென்ற ஆறும் அவதானம் செய்பவர் மகியைந்தவையே
என்று சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் அவதானக் கலையை நிகழ்த்துபவர்கள் பெற்றிருக்கும் திறனை அளவிட்டுள்ளார்.
  ஒரே நேரத்தில் பல்வேறு நுட்பமான செய்திகளைக் கவனத்தில் நிறுத்தி, கேட்கும் கேள்விகளுக்கு விடைகூறும் விதத்தில் இக்கலை நிகழ்த்தப்படும். இறைநாம உச்சரிப்பு, கைப்பணி, அவையோடு உரையாடல், சுவைப் புலனறிவு, இலக்கிய இலக்கண விடை பகர்தல், கண்டப் பத்திரிக்கை, ஒலி வேறுபாடு உணர்தல், நெல்-கல்லெறிதலையும் மணியோசையையும் கணக்கிடுதல் எனப் பல அம்சங்களில் ஒரே நேரத்தில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
  இதில் எட்டுவிதமான அம்சங்களில் கவனகம் நிகழ்த்துவதை ‘அட்டாவதானம்’ என்றும், பத்து அம்சங்களில் நிகழ்த்துவதைத் ‘தசாவதானம்’ என்றும், பதினாறு அம்சங்களில் நிகழ்த்துவதை ‘சோடாவதானம்’ என்றும், நூறு அம்சங்களில் நிகழ்த்துவதை ‘சதாவதானம்’ என்றும் கூறுவர். இக்கலையில் ‘சதாவதானம்’ நிகழ்த்திய ஒரே புலவர் என்ற பெருமைக்குரியவர் கோட்டாறு செய்குத் தம்பிப் பாவலர் ஆவார். ஆனால் பாவலருக்கும் ஏனைய அவதானப் புலவர்களுக்கும் முன்னோடியாய் ‘அட்டாவதானம்’ நிகழ்த்தி இக்கலைக்கு உயிர் கொடுத்த பெருமை இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த ‘அட்டாவதானம்’ அபூபக்கர் நயினார் புலவரையே சாரும்.
  திரு.வி. கல்யாண சுந்தரனாரின் ஆசிரியரான இலங்கை மகாவித்துவான் கதிர்வேற்பிள்ளையால் அங்கீகரிக்கப்பட்டு, அழைக்கப்பட்டு இலங்கை வண்ணார் பண்ணை மண்டபத் திடலில் அபூபக்கர் நயினார் புலவர் தமது அட்டாவதானத்தை நிகழ்த்தினார்.
  இறைநாமம் கூறி அவதானப் பீடத்தில் அமர்ந்தவர் கையில் இலாடச் சங்கிலியை விரல்களுக்கிடையே சுழற்றியவராக, நாவில் ‘யாமுஃகியத்தீன்’ என்ற நாமம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க கேள்விகளுக்கு விடைதந்தார். ‘அரைக்கிறக்கத்தில் முளைக்கிறது எது? என்று ஒரு கேள்வி எழ ‘பருத்திக் கொட்டை’ என விடை தந்தார். ‘சுட்டும் முளைக்கிற விதை எது? என்று ஒருவர்; ‘பனைவிதை’ என்று விடை தந்தார். இதற்கிடையில் தம் முதுகின் மீது எறியப்படும் நெல்மணிகளை எண்ணி நினைவிருத்திக் கொண்டார். இடையிடையே ஒலிக்கும் மணியோசையையும் எண்ணி நினைவிருத்திக் கொண்டார். இறுதியில் எறியப்பட்ட நெல்மணிகள் எத்தனை, ஒலித்த மணியோசை எத்தனை என்று சரியாகக் கூறினார்.
  அறுபது வயதிற்கு மேற்பட்ட ஒருவர் தனது பிறந்த நாள், ஆண்டு கூறிப் பிறந்த கிழமை கேட்க ‘ஞாயிற்றுக்கிழமை’ எனச் சரியாகக் கணித்துக் கூறினார். நிகழ்ச்சி நாளன்று காலையில் பல்வேறு இடங்களில் உள்ள எட்டு கிணறுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரைப் புலவருக்குச் சுவைக்கக் கொடுத்து, எந்த எந்த கிணற்றுத் தண்ணீர் எனக் கூறினார். மாலையில் நிகழ்ச்சி நடைபெற்ற போது, அவற்றுள் ஒரு கிணற்றுத் தண்ணீரைக் கொடுக்க, சுவைத்து விட்டு “இது சுன்னாகத்து சோமையா கேணித் தண்ணீர்” எனச் சரியாகக் கூறிக் கைதட்டல் பெற்றார்.
  ஒருவர் எழுந்து ‘இறைவனை ஏத்தியிரந்து’ என்பதை ஈற்றடியாகக் கொண்டு வெண்பா பாடச் சொல்ல, உடனடியாக
  “ஆவெனும் ஈசன் அரவணையான் அக்காளை
  மாவேறச் செய்து வலம் வருங்கால் – நாவால்
  மறையவன் வாழ்த்தினான் வானவர்கள் சூழ
  இறைவனை ஏத்தி யிரந்து
 (ஈசன் –சிவன், அரவணையான் – திருமால், மறையவன் – பிரம்மன்)
 என்ற வெண்பா பிறந்து விட்டது.
 திருக்குறள் ஒன்றினை இறுதி இரண்டடிகளாகக் கொண்டு, விதி-ஊழ் இரண்டினையும் இணைத்து வெண்பா பாடுக என ஒருவர் வேண்ட,
தலைவிதியை மாற்ற தலைவ ரெவரேனும்
  உலகிலில்லை என்ப துறுதி – தொலைவிலா
  ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
  சூழினும் தாமுந் துறும்
  -என்று பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அவையோரின் கைதட்டல்களுக்கு இடையே மகாவித்துவான் பொன்னம்பல பிள்ளை எழுந்து,
  “பக்க மறை தேர்ந்தோர் பலரிருக்க சீருறபு
  பக்கர்நை னாப்புலவன் பண்ணிய –மிக்க நல்
  அட்டாவ தானமெனும் அற்புதத்தைப் பார்க்கிலவன்
  இட்டம் பெறாதார் எவர்”
என்று புலவர் அபூபக்கர் மீது புகழ்ப்பா பாடி ஏத்தினார்.
  அவதானக் கலையாலும் புலமைத் திறத்தாலும் முகவை மாவட்டத்திற்குப் புகழ் சேர்த்த பனைக்குளம் அபூபக்கர் நயினார் புலவர் அவதானக் கலையில் எழுதிய அரிச்சுவடிதான் பின் வந்த பலருக்கு அவதானக் கலையில் சாதனை நிகழ்த்த பாலபாடமானது.
பேராசிரியர் மு. அப்துல் சமது
 தமிழ்த்துறை
  ஃகாசி கருத்த இராவுத்தர் அவுதியா கல்லூரி
உத்தமபாளையம் – 625533
தரவு: முதுவை இதாயத்து


தமிழ்நல உறுதிமொழிஞர் 05 : வேல்முருகன் சுப்பிரமணியன்

தமிழ்நல உறுதிமொழிஞர் 05 : வேல்முருகன் சுப்பிரமணியன்

பெயர்:
வேல்முருகன் சுப்பிரமணியன்
பணி:
கணித்துறை
தமிழுக்கு ஆற்றிவரும் தொண்டுகள்:
தமிழுக்கான கணித்தளமைப்பது.
தமிழுக்கு ஆற்ற எண்ணியுள்ள செயல்கள்:
https://www.facebook.com/groups/631787513634725/

முகவரி:
கலிஃபோர்னியா, அமெரிக்கா
மின்வரி: henavel@gmail.com
தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும் என உறுதி ஏற்கிறேன்.