Saturday, May 27, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌ெ) – இலக்குவனார் திருவள்ளுவன்


தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌ெ)

  சீராட்டப்பட வேண்டியவரைச் சிறைக்கு அனுப்பிப் பணிநீக்கமும் செய்தமை குறித்துப் பின்வருமாறு பேராசிரியர் இலக்குவனாரே குறிப்பிட்டுள்ளார்:
  “தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயில வாரீர்” என மாணவரை நோக்கி அன்போடு அழைக்கப் புறப்பட்டேன். தமிழ் வழியாகப் பயிலத் தம் மக்களை ஊக்குவிக்க வேண்டும் எனப் பெற்றோரை நோக்கி உற்ற வேண்டுகோள் விடுக்க ஊர்கள் தோறும் நடக்கப் புறப்பட்டேன். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவத் தெருக்கள் தோறும் செந்தமிழ் முழங்க வேண்டுமெனச் செயப் புறப்பட்டேன். நாட்டு மக்கள் கூட்டுறவுடன் நல்வாழ்வு வாழ நற்றமிழ் மறையாம் குறள்நெறியை நாளும் போற்றுமின் என நவிலப் புறப்பட்டேன். ‘உலகக் கூட்டுறவில் உயர் பங்கு கொள்மின்’ என உரைக்க முற்பட்டேன். இன்றமிழ் நாட்டில் எல்லாம் தமிழ் எங்கும் தமிழ் எனும் நிலை ஏற்றம் பெற என்னாலியன்றதைச் செய முற்பட்டேன். அந்தோ! தமிழால் வாழும் யான் தமிழுக்காகவும் வாழ்தல் கடன் என வள்ளுவர் நெறியில், காந்தியடிகள் காட்டிய வழியில் செயல்புரியத் திட்டமிட்ட  என்னை இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்ச் சிறைப்படுத்தி விட்டனர். செந்தமிழ் காக்கப் புறப்பட்ட எனக்குச் சிறை வாழ்வு கிடைத்து விட்டது.
சிறை வாழ்வு மட்டுமா? என் பேராசிரியர் இலக்குவனார் பதவியையும் இழக்க வேண்டி நேரிட்டுள்ளது. பேராசிரியர் இலக்குவனார் பதவியால் திங்கள் தோறும் பெற்று வந்த ஏறக்குறைய எழுநூறு வெண்பொற்காசுகள் வருவாயும் நின்றுவிட்டது.
 என்னைக் கல்லூரியில் வைத்திருந்தால் கல்லூரிக்கு அரசினர் உதவி கிடைக்காதாம். ஆகவே, நான் கல்லூரியில் பணியாற்றுதல் கூடாதாம்.
 இன்று என்னைக் கண்டால் எல்லாரும் அஞ்சுகின்றனர். நண்பர்கள் நகைமுகம் காட்டி இன்னுரையாடாது மறைந்தோடுகின்றனர். அன்பர்கள் ஆறுதல் கூறாது அகன்றோடுகின்றனர். உறவினர்கள் உறவாடுதலுக்கு ஓய்வு கொடுத்துவிட்டனர். அரசே என்னைக் கண்டு அஞ்சித் தற்காப்புச் சட்டத்தின் கீழ்ச் சிறைப்படுத்தும் நிலை ஏற்பட்டு விட்டதால் இவ்வச்ச  நிலை; அவல நிலை.
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ?
(தமிழ்க்)குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு
 இவ்வளவுக்கும் நான் ஆற்ற இருந்த தொண்டுதான் என்ன? அரசின் குறிக்கோளை – கோட்பாட்டை – நாடு நன்கு கடைப்பிடிக்கச் செய முற்பட்டதுதான்.
 உதட்டளவில் தமிழ்ப்பற்றைக் காட்டிவிட்டு உலகப் புகழ் பெற நாடுகின்றீர்கள். ஆனால், உயர் தமிழைப் பின்னுக்குத் தள்ளிவிட்டீர்கள். இப்பொழுதேனும் பிழையை உணர்ந்து திருந்த முற்படுங்கள். தமிழ்ப் பயிற்று மொழித்திட்டத்தை உடனே செயற்படுத்த முனையுங்கள்.
குறள்நெறி (மலர்  2 இதழ் 12) ஆனி 17, 1996 : 1.7.65
என்று குறள்நெறியிலும் எழுதினார்.
செந்தமிழ் மொழி எல்லாத் துறைகளிலும் ஏற்றம் பெறவும் திருக்குறள் நெறியில் மக்கள் எல்லாரும் செம்மையுடன் வாழவும் உழைப்பதே என் குறிக்கோளாகும்.
(குறள்நெறி: ஆடி31,1996 : 15.8.65)
என்னும் இலக்குடன் வாழும் பேராசிரியர் இலக்குவனார் சிறைக்கு அஞ்சவில்லை. ஆனால், தமிழன்பர் ஒவ்வொருவருக்குமே தத்தமக்குத் தண்டனை வழங்கியதுபோல் கவலை.  பேராசிரியர் இலக்குவனாரைச் சிறையில் அடைத்ததால், தமிழன்பர்கள் பலர், ஒரு வேளை உணவைத் துறத்தல், தாடி வளர்த்தல் முதலான நோன்புகளைப் பின்பற்றினர். பேராசிரியர் இலக்குவனார் விடுதலை பெற்றதும்  இதனை அறிந்து அவர்களை அந்நோன்புகளைக் கைவிடுமாறு வேண்டினார். தாம் விடுதலை பெற்றாலும் தமிழ்த்தாய் விடுதலை பெறவில்லையே எனக் கவலைப்பட்டார். ஆட்சித்துறை, கல்வித்துறை, அறத்துறை என எல்லாத் துறைகளிலும் தமிழ்த்தாய் இழந்த இடத்தைப் பெற வேண்டும் என்றார். இது குறித்த ஆசிரியருரையில் மத்திய அரசு ஆரியம் முதலான வெளிநாட்டுப் புலவர்களைப் போற்றுவது போல் தமிழ்ப்புலவர்களையும் போற்ற வேண்டும் என்றார். இன்றைக்கு ஓரளவு இது நிறைவேறி உள்ளது. தமிழுக்குரிய செம்மொழித்தகுதிக்கான அறிந்தேற்பை வழங்கியதால் செம்மொழி விருதுகள் வழங்கித் தமிழ்ப்புலவர்கள் போற்றப்படுகின்றனர். ஆனால், பேராசிரியர் விழைந்தது போல் சம உரிமையில் போற்றப்படவில்லை. ஆரியம், அரபி முதலான புலவர்களுக்குத் தரப்படும் மூத்த அறிஞர் விருதுகள் தமிழுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. போராடிப் போராடிப் பெற்றாலும் ஒப்புக்குச் சப்பாணி போன்ற நிலையைத்தான் மத்திய அரசு தமிழுக்குத் தருகின்றது. இதற்கெல்லாம் காரணம் உதட்டளவில் தமிழின் உயர்வைப்பேசித்தம்மை மட்டும் உயர்த்திக் கொள்வோர் எண்ணிக்கை பெருகியதுதான் என்றார் பேராசிரியர். இவை பற்றிய ஆசிரிய உரை வருமாறு:
(தொடரும்)
-இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, May 26, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.) – வல்லிக்கண்ணன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.)

 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி)


நமது மொழி உயர் வென்று சொல்லி, நாள் கழித் தோம்; குறை களைந்தோமில்லை என்று குறிப்பிட்டார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

அதே குறையை பெருங்கவிக்கோவும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

 தமிழ் தொன்மை மொழியென்றோம்
தமிழர் முன் இனம் என்றோம்
அமிழ்தம் எம்மொழி என்றோம்
அழகாகப் பாட்டிசைத்தோம்!
புவனமிதில் நம் தமிழ்தாய்
பவனிவர என்செய்தோம்?

என்று கேட்கிறார். மேலும் அவர் சுட்டுகிறார் :

இன்றுவரைப் பழங்கதைகள்
இனிப்பாகப் பேசலன்றி
ஒன்றுபடச் செய்ததென்ன?
உலகுக் குரைத்ததென்ன?

நின்றுநீர் சிந்தித்தால்
நெடுமூச்சு விடுவதன்றி
நன்று நாம் நமைக்காட்ட
நானிலத்தில் செய்ததென்ன?
இன்றமிழ் நாட்டோரே
எண்ணுக எண்ணுகநீர்!
நாட்டின் சீர்கெட்ட நிலையைக் கண்ட மாக்கவி பாரதியார், “நெஞ்சு பொறுக்குதிலையே, இந்த நிலை கெட்ட மானிடரை நினைத்து விட்டால்: என்று வேதனைக் கண்ணிர் உகுத்தார். நாட்டு மக்களின் கேடுகெட்ட நிலை கண்ட பெருங் கவிக்கோ உளம் கொதித்துச் சீறுகிறார் :

நப்பாசையால் தமிழன் நலிந்து கெட்டான்!
நம்மொழியை நம்மினத்தை அழிக்க விட்டான்’
தப்பாக நடப்போரை மற்றார் தம்மைத்
தாள்பற்றி நடக்கின்றான்! தியாகம் செய்த
ஒப்பில்லாத் தமிழர்களை ஏசுகின்றான்!
உயிரில்லாப் படைத்தமிழா போடா போ போ!

நம்மவர்க்கும் உணர்வில்லை! உரிமை கேட்கும்
நல்லுறுதி நெஞ்சில்லை அழும் பிள்ளைக்கு

 சும்மாஒர் கிலுகிலுப்பை ஆட்டுதல் போல்
சொரணையற்று ஆட்டங்கள் காட்டுகின்றார்!
எம்மா நிலத்தானும் இங்கே வந்தே
ஏமாற்றி வாழ்கின்றார்!’
வேகமாகவே சாடுகிறார் கவிஞர்.

கிஞ்சிற்றும் சொரணையில்லை
கேடுகெட்டாய் போடாபோ !
போற்றிப் பாப் பாடியே நீ
பூமியிலே நலிந்ததன்றி
ஆற்றலைக் காட்டிட நீ
அவனிசெய்த தென்னேடா!

தூ! தூ! தூ! வெட்கமில்லை
தொல்தமிழ்ப் பரம்பரையில்
ஊதூது சங்கெனவே
உலவிய நீதமிழ்மகனா?

 பாரம் சுமந்தேநீ
பரிதவித்தாய் இன்றுவரை
சோரம் போயே நீ
தொலைந்தாயே அடடாஓ!

மாடுபோல் உழைத்தாயன்றி
மதிவன்மை காட்டினையா?
கேடுகெட்ட பிறவியா நீ
கேள்வியிலை? ஞானமில்லை!
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்

Tuesday, May 23, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (2.) – வல்லிக்கண்ணன்


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

(2.)

2.தமிழ் முழக்கம்
என்றன் இனத்தை ஒன்று சேர்க்காமல்
இறுதி எனக்கு வாராது;
என்மொழி உலகாள வைக்காமல்
என்றன் உயிரோ போகாது’
என்ற வேகமும் தாகமும் கொண்டிருப்பவர் பெருங்கவிக்கோ சேதுராமன். தமிழ் மொழியிடம் அளவிலா அன்பும் பற்றும்(பக்தியும்) ஈடுபாடும் கொண்டுள்ள கவிஞர், தமிழை அன்னையாக உள்ளத்தில் நிலைநிறுத்திப் போற்றி வணங்குகிறார். தனக்கு ஆற்றலும் துணிவும் செயலூக்கமும் தந்து தன்னை வளர்க்கும் தாய், தமிழ்தான் என்று பாடித் துதிப்பதில் அவருக்கு அலுப்பு ஏற்படுவதேயில்லை. அப்படித் தமிழன்னை வாழ்த்துப் பாடுவதிலும் அவர் புதுமைகள் நயங்கள் பல சேர்த்துத் துதிப்பது படிப்பதற்கு இனிய விருந்தாக விளங்குகிறது.
அன்னையே தமிழே இன்ப
அமிழ்தத்தின் மறுபிறப்பே!
கன்னலே என்பேன் ஆயின்
கைக்குமே அதுவும் ஒர்நாள்!

பன்னலம் சூழ்ந்த அம்மா
பாட்டிலே நிலைத்து நிற்கும்
உன்னையே வணங்குகின்றேன்
 உளத்தினால் போற்றுகின்றேன்!
தமிழ் அன்னை தான் தனக்கு வீரமும் செயல் துணிவும் தந்து அருள் பாவிப்பதாக அவர் நம்பிக்கை யோடு போற்றி வணங்குகிறார்.
யான் வணங்கும் தெய்வ நன்மகளே! ஒப்பில்லா
 நற்றவத் தவமகளே! நம்பிக்கை நெஞ்சத்தால்
செற்றார் மருளுமுன் செயல் துணிவைத் தந்தவளே!
 என்றும்
வியப்பிற்கோர் எல்லையென நின்றாய் எங்கள்
வேல்வரிசை வாள் வரிசைக் கவிதை தந்தாய்
செயற்கரிய செய்கின்ற திறங்கள் ஈந்தாய்
செப்பரிய மேல்நிலையில் நிற்க வைத்தாய்
கயவர்கள் செய்செயலைக் காலின் தூசாய்க்
கருதுகின்ற ஆண்மையெனும் வீரம் காத்தாய்
புயவலிமை தந்தவளே! அறிவின் மாட்சிப்
புடம் போட்ட தமிழ் மகளே வணக்கம் அம்மா!
  இவ்வாறு வணக்கம் கூறியே அவர் ஒவ்வொரு கவி அரங்கத்திலும் பாட ஆரம்பிக்கிறார். ஆனால், ஒவ்வொரு முறையும் தனித்தனி விதத்தில் போற்றிக் கவிதை இயற்றிக் கூறும் அவரது கவிதையாற்றல் வியத்தலுக்கு உரியது. ஒருமுறை பாடிய வணக்கப் பாடலை மறுமுறை அவர் பாடுவதில்லை. அவருடைய தமிழ்ப் பற்று(பக்தி) நவநவ மான துதிப்பாடல்களை ஆக்கும் திறனை அவருக்கு அளிக்கிறது. அதில் அவருடைய தன்னம்பிக்கையும் ஒலி செய்வதைக் கேட்க முடிகிறது.
முன்னைத் தமிழே முதன் முதலில் உலகோர்நா
தன்னை அசைத்த தண்டமிழே இன்றுவரை
உன்னைப் புறம்போக்க உட்பகை மோதிடினும்
அன்னைவேலெறிந்தே அடர்வெற்றி கண்டவளே!
அம்மா என்னுள்ள ஆலயத்தின் உயிர்ச்சிலையே!
செம்மை மகனுன்றன் சேவடியை வணங்குகிறேன்!
கூலிக்குப் பாடிக் குளிர்காய்ந்து போகாமல்
தாலிக்குப் பொன்போலத் தமிழ்க் கவிதை பாடி வையம்
பாலிக்கும் பெருங்கவிக்கோ’ பாடுகிறேன் பாடுகிறேன்!
 இதை ஓர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
மூச்சும் தமிழ், பேச்சும் தமிழ், வாழ்வதும் தமிழுக் காக என்று கருதிச் செயல் புரியும் கவிஞர் தனது இதய ஒலியை அழகாகப் பதிவு செய்துள்ளார் இப்படி:

இந்தப் பிறவி தமிழ்க்காக எடுத்துளேன்
ஈங்கெவர் மாற்றவல்லார்-வரும்
எந்தப் பிறவி எடுப்பினும் என்பணி
இனிய தமிழ்ப் பணியே!-இறை
தந்த செல்வம்தனில் சாகாத செல்வமாம்
தண்டமிழ்ச் செல்வமொன்றே-உயர்
சிந்தை உடல்பொருள் ஆவியெல்லாம் தமிழ்த்
தெய்வத் திருவடிக்கே!’
  தாய்மொழியிடம் அளவிலாப் பற்றுதல் கொண்டிருப் பதனால், அன்னைத் தமிழ்மொழி இன்றுள்ள நிலை கண்டு கவிஞர் மனம் புழுங்குவது தவிர்க்க இயலாததாகும். அவருடைய மனவேதனை கவிதைகளில் பொதிந்து கிடக்கிறது.
நேற்று தோன்றிய மொழிகள் எல்லாம்
நிலைத்து நிற்கையிலே-என்றோ
தோன்றிச் செழித்த மொழியென் தமிழ்த்தாய்,
தோற்றுப் போவதுவோ?

ஊமை கண்ட கனவாய்த்
தமிழர் உரிமை போவதுவோ?-எங்கள்
பானம் எழுத்துப் பதராய்க் காற்றில்
பறந்து சாவதுவோ?

கூவும் குரல்வளைக் கொள்கை முழக்கக்
குறிக்கோள் அஞ்சுவதோ?-இனிய
நாவுக் கன்னை நற்றமிழ் அரசி
நானிலம் துஞ்சுவதோ?

(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்