Saturday, February 25, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙூ)

இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி
  1952-ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குப் பெருந்தலைவர் காமராசரும் சி.டி.நாயுடு என அழைக்கப்பெறும் அறிவியல் அறிஞர் கோ.துரைசாமி அவர்களும் போட்டியிட்டனர். பெருந்தலைவர் தமிழ்நாட்டை வழி நடத்த வேண்டும் எனக் கூறிய பேராசிரியர் இலக்குவனார், அறிவியல் அறிஞர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது நாட்டிற்கே நலம் பயக்கும் என அவருக்காக முனைப்பான பரப்புரை மேற்கொண்டார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கல்லூரிச் செயலர் திரு வே.வ.இராமசாமி அவர்களும் கூட்டாதரவு முறையில் அறிவியல் அறிஞரையே ஆதரித்தார். ஆனால்,  தேர்தல் முடிந்ததும் நாடார் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டே நாடார் தலைவரை எதிர்ப்பதா எனக் கருதிய கல்லூரி ஆட்சிக்குழு பேராசிரியர் இலக்குவனாரைப் பணியில் இருந்து நீக்கியது. ஆனால், அதே போல் நாடார் தலைவரை எதிர்த்த கல்லூரிச் செயலர் நாடார் என்பதால் அவரை நீக்கவில்லை. பேராசிரியர் இலக்குவனாரைக் கருஞ்சட்டை இயக்கத்தின் தீவிரவாதி எனக் குறிப்பிட்டு வேலை நீக்கம் செய்யுமாறு முன்பு அரசு மடல் அனுப்பிய பொழுது, கல்லூரியில் தம் கடமையைச் செவ்வனே ஆற்றும் அவர் ஓய்வு நேரத்தில் மேற்கொள்ளும் பணிகளுக்காக அவரைக் கல்லூரியை விட்டு நீக்க முடியாது என எந்தக்கல்லூரி ஆட்சிக்குழு அவரை நீக்க மறுத்ததோ, அதே கல்லூரி, சாதிச் சேற்றில் உழன்று மனங் கலங்கியது; நிலை குலைந்தது; அறம் பிறழ்ந்தது; பணியில் இருந்து நீக்கியது.
 பணி நீக்கத்திற்காகக் கொடுத்த குற்றச்சாட்டுகளில் குறிப்பிடத்தக்க ஒன்று அவர் தமிழ் விழாக்களை நடத்தினார் என்பதுதான். பேராசிரியர் இலக்குவனார் நடத்திய தமிழ் தழைக்கும் விழாக்களால் புகழ் பெற்று மகிழ்ந்த கல்லூரி ஆட்சிக் குழுவினர் அவரை வேண்டாதவராகக் கருதியதும் அவற்றையே குற்றமாகக் கருதினர். போராளிகளைக் கண்டு அஞ்சுவதுதானே அரசுகளின் இயல்பு. ஒருவரை வேண்டியவராகக் கருதும் பொழுது ஒரு நிலையும்  வேண்டாதவராகப் புறக்கணிக்கும் பொழுது மறு நிலையும் எடுப்பதுதானே ஆள்வோர் இயல்பு. அதற்கேற்பவே இக்கல்லூரியினரும்  சாதித்திரையால் கண்களை மறைத்துக் கொண்டு பேராசிரியர் இலக்குவனாரைப் பணியில் இருந்து நீக்கினர். விருதுநகர் மக்கள் திரண்டு ஊர்வலமாகச் சென்று எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பெரியார் முதலான தலைவர்களும் பணி நீக்கத்தைக்  கைவிட வேண்டினர். பின்னர்ப் பேராசிரியர் இலக்குவனார் ‘துரத்தப்பட்டேன்’ என்னும் பாவியத்தையே தம் குமுறலாக எழுதி வெளியிட்டார்.
 பேராசிரியர் இலக்குவனார் தஞ்சாவூர் சென்று இலக்கியம் அச்சுக்கூடம், பெரியார் தனிப்பயிற்சிக் கல்லூரி, இலக்கியப்பண்ணை ஆகியவற்றை நிறுவியதுடன், திராவிடக் கூட்டரசு என்னும் தமிழ் இதழையும்  Dravidian Federation ஆங்கில இதழையும் நடத்தித் தம் தொண்டினைத் தொடர்ந்தார். உயர் செல்வம், உயர்பதவி உடையவராயினும் தமிழ்ப்பகைவர் எனில் அவரைத் தம் பகைவராகவும் மிகவும் எளியராக இருப்பினும் தமிழ் அன்பர் எனில் அவரைத் தம் உறவாகவும் கருதுபவர் பேராசிரியர் இலக்குவனார். எனவே, தமிழ் நலனுக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் கடுமையாக எதிர்ப்பதையே தம் கடமையாகக் கொண்டார்.
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
  தரணியொடு வானாளத் தருவரேனும்
 மங்குவார் அவர்செல்வம் மதிப்பேம்அல்லேம்
  மா(த்)  தமிழுக்கே அன்பர் அல்லராகில்
 எங்குமுள இடமெலாம் சுற்றிஓடி
  இரந்துண்ணும் இழிவாழ்க்கை உடையரேனும்
 தங்குபுகழ்ச் செந்தமிழ்க்கோர் அன்பராகில்
  அவர்கண்டீர் யாம் வணங்கும்கடவுளாரே.
எனப் பேராசிரியர் இலக்குவனாரே தமிழன்பர் எத்தகைய இழி வாழ்க்கை நடத்தினாலும் அவரே தாம் வணங்கும் கடவுளர் எனவும் தமிழன்பர் அல்லாதவர்  வான்அளவு செல்வம் தந்தாலும் அவர்களை மதியேன் எனவும் கூறியுள்ளார். அவரது இந்நெஞ்சுரத்திற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். ஒன்றைப் பார்ப்போம்.
(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, February 15, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙு] – இலக்குவனார் திருவள்ளுவன்


                    

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙு]

இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி

  நெல்லையில் பணியாற்றிய பேராசிரியர் சி.இலக்குவனார் அடுத்து விருதுநகர் செந்திற்குமாரநாடார் இந்துக்கல்லூரியில் (10.08.47 அன்று) தமிழ்த்துறைத்தலைவராகப் பணியில் சேர்ந்தார்; இக்கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் பட்டப் படிப்பின்மையால் இளங்கலையில் தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தினார். கல்லூரியிலும் தமிழ் அமைப்புகள் மூலமாக நகரிலும் தம் தமிழ்த் தொண்டினைத் தொடர்ந்தார் பேராசிரியர்.
  “பேராசிரியர் (சி.இலக்குவனார்) சென்ற இடங்களில் எல்லாம் தமிழ்த் தொண்டே நிகழ்ந்தது. தமிழுக்கு மறுமலர்ச்சி என்பதை அவ்வவ் வட்டாரங்கள் உணர்ந்து போற்றவே கல்வி வளாகங்களிலும், புறப்பகுதிகளிலும் பணிசெதார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் புதிய அமைப்புகள், மன்றங்கள், கழகங்கள் உருவாயின. இருந்த பழைய அமைப்புகளும் புதுப்பொலிவு  கொண்டன. ஏழைமை நோக்குக்கு இடமாகி இருந்த தமிழ்த் துறையும்,தமிழ் வகுப்பும் ஏறுநடையிட்டு எவரையும் ஏறிட்டுப் பார்க்க வைத்தன. பணிக்களமும் பக்கத் திடமும் செதி இதழ்களில் விளக்கமுற்றன.”
 எனப் புலவர்மணியார் (செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்: பக்கம்:மு11-12) கூறுவது போல் இங்கும் தொடர்ந்த பேராசிரியரின் பணித்தொண்டுகளால் விருதுநகரில் தமிழ் மணம் பரவியது;  பகுத்தறிவும் வளர்ந்தது.
  தனித்தமிழ் என்றாலே பிராமணர்கள் சமசுகிருத எதிர்ப்பாகவும் பிராமண எதிர்ப்பாகவும் கருதுவதுதானே இயற்கை. இது குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார் பின்வருமாறு கூறுகின்றார்:
 சொற்களில் வேரை(roots)க் கொண்டு தூய தமிழ்ச் சொற்களை அறியலாம். ஆதலின், வகுப்பில் சொற்களின் வேர் பற்றியும் அறிவித்து தமிழ் வளத்தை எடுத்துக் காட்டினேன். இதனால் மாணவர்களிடையே தூய தமிழ்ப் பற்று வளர்ந்தது. பிராமண மாணவர்கள் இதனை விரும்பினாரிலர்.
  அறிவார்வமும் பேராசிரியர் சி.இலக்குவனார் மீது மதிப்பும் கொண்ட பிராமண மாணவர்கள் சிலர் இருப்பினும் பலர் எதிராக இருந்தமையால் பெற்றோர்கள் மூலம் பேராசிரியர் சி.இலக்குவனார் மீது கல்லூரியில் அரசியல் புகுத்துவதாக முறையிட்டனர். இவ்வாறு ஒரு புறம் சாதியின் அடிப்படையிலும் மறுபுறம் கட்சிஅரசியல் அடிப்படையிலும் பேராசிரியருக்கு எதிர்ப்புகள் வந்தன; அதே நேரம் பேராசிரியரின் பாடம் நடத்தும் திறனாலும் சொற்பொழிவுப் பாங்காலும் பகுத்தறிவுச் சிந்தனையாலும் பெரும்பான்மையர் அவர் பக்கம் நின்றனர்.
   பேராசிரியர் சி.இலக்குவனார் இங்கு ‘இலக்கியம்’ என்னும் திங்களிருமுறை இதழை நடத்தி வந்தார். ‘இலக்கியம்’ விடுதலைநாள் மலரில், தமிழுக்கு விடுதலை, கல்விக்கு விடுதலை, மக்களுக்கு விடுதலை, கலைக்கு விடுதலை என்னும் தலைப்புகளில் பலரின் கட்டுரைகளைப் பெற்று வெளியிட்டார். இதன்மூலம் தமிழர்க்கு ஏற்பட்டதாகக் கூறும் அரசியல் விடுதலையால் பயனில்லை. தமிழ் முழு விடுதலையடைந்தாலன்றித் தமிழர்க்குப் பயனில்லை என்பதை உணர்த்தினார்.
 “தூயதமிழ்ப் பற்றை மக்களுடையே வளர்த்தலும் சங்க இலக்கியத்தைப் பரப்பலும் தன் கடமைகளாகக் கொண்டு இலக்கியம் தமிழ் மக்களிடையே செல்வாக்குப் பெற்று வந்தது” எனப் பேராசிரியரே இவ்விதழ் வளர்ச்சி குறித்துத் தம் வாழ்க்கை வரலாற்றில் குறித்துள்ளார். ‘இலக்கியம்’ இதழ் குறித்துத் தந்தை பெரியாரின் 20.12.47 ஆம் நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் ‘எமது தீர்ப்பு’என்னும் நூல் மதிப்பீட்டுப் பகுதியில் பின்வருமாறு செய்தி இடம் பெற்றிருந்தது.
இலக்கியம்
 (திங்கள் இருமுறை)
 ஆசிரியர் : சி.இலக்குவன்
 திருநெல்வேலி
(புல்சுகேப் 1/8, 42 பக்கங்கள். தனி இதழ் 0-4-0. ஆண்டுக்கட்டணம் 4-0-0)
  தமிழக மக்களின் பழமைக்கும் பெருமைக்குமுரிய இலக்கியங்களை – தமிழ்ப் பொதுமக்களை நீண்ட நாளாக அச்சுறுத்திக் கொண்டு வந்த இலக்கியங்களை – தமிழ் மக்கள் சுவைக்க வேண்டும்; தமிழர், தம் தனி நாகரிகம்,பண்பு முதலியவற்றை யுணர்ந்து இக்காலப் போலி மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற சிறந்த நோக்கத்தோடு   இவ்விலக்கியம் தோன்றியிருக்க வேண்டும் என மலர் 14, 15 அறிவிக்கின்றது.
  தாமரையில் தவழும் புலி, வில், கயல் அரசியல் கட்சியைத் தழுவியதா? என்பது இதிலிருந்து அறிய முடியவில்லை.
   இலக்கியத்திற்கு அடிப்படையான மக்கள் வாழ்வு வளர, ‘இலக்கியம்’ வளர்வதாக என மனமுவந்து கூறுகின்றோம். திராவிடர்கள்-சிறப்பாகத் திராவிட மாணவர்கள் தவறாது படித்துப் பயனடைய வேண்டும்.
  குடியரசு இதழின் வாழ்த்தினைப் போலத் தமிழன்பர்கள், திராவிட இயக்கத்தினர், மாணவர்கள் வரவேற்பைப் பெற்று இலக்கியம் சிறப்பாகப் பணியாற்றியது;  தமிழ் இலக்கியங்களை மக்கள் இலக்கியங்கள் என எளிமையாக மக்களிடையே பரப்பும் பணியில் வெற்றி கண்டது.
 விருதுநகரில் பேராசிரியர் சி.இலக்குவனார் ஆற்றிய அரும்பணி குறித்து அவரது வரிகளிலேயே நாம் பின்வருமாறு அறியலாம் :
“விடுமுறைக் காலங்களில் வெளியூர்கட்குச் சென்று திருக்குறள் பற்றியும் சங்க இலக்கியங்கள் பற்றியும் சொற்பொழிவு ஆற்றும் திட்டங்களையும் மேற் கொண்டேன். இராமாயணம், பாரதம் முதலிய வடமொழி சார் நூல்களைப்பற்றி மக்கள் அறிந்துள்ள அளவு பண்டைத் தமிழிலக்கியங்கள்பற்றி அறியாதிருந்தனர். மக்கள் வாழ்வுக்கு வழிகாட்டியான தமிழ் மறையாம் திருக்குறளைத் தமிழ் மக்கள் அறியாதிருந்தது மிகமிக இரங்கத்தக்கது அன்றோ? ‘வள்ளுவன் தன்னை உலகினுக்குத் தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு’ திருக்குறளைப் பற்றி அறியாமல் இருந்த அவல நிலையைப் போக்குவதற்குச் சொற்பொழிவுத் திட்டம் அமைத்துச் சிற்றூர்களிலும் பேரூர்களினும் சென்று சொற்பொழிவு ஆற்றினேன். மகிழ் உந்துகளிலும் மாட்டு வண்டிகளிலும் சென்றுள்ளேன்.  சிறு வீட்டிலும் தங்கினேன். பெருமாளிகைகளிலும் தங்கினேன். கூட்டங்கள் அமைப்பதற்குரிய வேண்டுகோள்களையும் கூட்ட நிகழ்ச்சித் திட்டங்களையும், நிகழ்ந்த கூட்டங்களின் சொற்  பொழிவுகளையும், பெரியார் அவர்களால் நடத்தப்பட்டு வந்த ‘விடுதலை’ இதழ் வெளியிட்டு வந்தது. அப்பொழுது அதன் ஆசிரியராய் இருந்த என் மதிப்புக்குரிய நண்பர் குத்தூசி குருசாமி அவர்களும் பெருந்துணையாய் இருந்தனர். பயன் கருதாமல் இப்பணியைச் செய்து கொண்டு இருந்த எனக்குப் பெரியார் அவர்களும் குத்தூசி குருசாமி அவர்களும் என்னை மேலும் ஊக்கப்படுத்துவதற்காகத், தமிழ் அன்பு பூண்ட செல்வர் ஒருவரை மாதம் ஐம்பது வெண் பொற்காசுகள் நன்கொடையாக ஓராண்டு கொடுக்கச் செய்தனர். பயன் கருதாப் பணிக்குப் பணம் பெறுவதற்கு என் உள்ளம் இடந்தரவில்லை என்றாலும், பொருள் இழப்பில் நடந்து கொண்டிருந்த ‘இலக்கியம்’ இதழைத் தொடர்ந்து நடத்த உதவியாகும் என்று கருதியும் அவர்களாகக் கொடுக்க முன் வந்த பெருந்தன்மையை இகழக்கூடாது என்று எண்ணியும் ஏற்றுக் கொண்டேன்.”
  பேராசிரியர் சி.இலக்குவனாரின் இந்தி எதிர்ப்புப் பணிகளும் பெரியார் தொடர்பும் தனித்தமிழ் உணர்வும் பேராயக்கட்சியின் வளர்ச்சிக்கு எதிரானவையெனக் கருதி அவருக்குத் தொல்லைகள் கொடுத்துப் பணியிலிருந்து நீக்க அரசு திட்டமிட்டது. மெய்யியல் அறிஞர் சாக்ரட்டீசு இளைஞர்களைக் கெடுப்பதாக அக்காலத்தில் பழமைவாதிகள் அவலக்குரல் எழுப்பினர். இக்காலத்திலோ பேராசிரியரின் தமிழியச் சிந்தனைகள் இளைஞர்களைக் கெடுக்கும் எனக் குற்றம் சுமத்திய பேராயக்கட்சியினரின் ஊதுகுழலான அரசு, அவர் கல்லூரியில் தொடர்ந்து நீடிப்பது அஞ்சத்தக்கது; இளைஞர்கள் கெட்டுவிடுவார்கள்(His Continuance in the college is dangerous; and the youngsters will be spoiled) எனக் கல்லூரிக்கு எழுதியது. இருப்பினும் கல்லூரி ஆட்சிக்குழுவினர் இதை ஏற்கவில்லை.
 இது குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார் பின்வருமாறு தம் வாழ்க்கை வரலாற்றில் குறித்துள்ளார்:
  எனது உளக் கருத்திற்கேற்பப் பெரியார் அவர்கள் திராவிடர் கழக மாநாட்டுகளுடன் திருக்குறள் மாநாடுகளையும் நடத்தினார்கள். இத் திருக்குறள் மாநாடுகளில் எனக்குச் சிறப்புப் பங்கும் பணியும் அளித்தனர். . . . பெரியார் அவர்களால் சென்னையில் நடத்தப்பட்ட திருக்குறள் மாநாட்டுக்குச் சோற்பொழிவாளராகவும் இந்தி எதிர்ப்பு மாணவர் மாநாட்டுக்குத் தலைவராகவும் சென்று வந்துள்ளேன். உள்ளூர்ப் பேராயக் கட்சியினர் என்னுடைய தொண்டினைக் காரணமின்றி வெறுக்கத் தொடங்கிவிட்டனர். உள்ளூர்ச் சுவர்களில் ‘இலக்குவனாரே உஃசார், எச்சரிக்கை’ என்றெல்லாம் எழுதி வைத்தனர். நகரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் என்னைப் பற்றித் தாக்கிப் பேசினர். அரசினர்க்கு என் இந்தி வெறுப்பைச் சுட்டிக் காட்டியும், திருக்குறள் வகுப்பில் அரசைத் தாக்கிப் பேசுவதாகக் கதை கட்டியும் கடிதங்கள் எழுதினர். அரசினரும் அலுவலர்களை அனுப்பி ஆராய வைத்தனர். அப்பொழுது கல்வியமைச்சராயிருந்தவர் அக்கல்லூரிக்கு வந்த ஞான்று என்னைக் கல்லூரியைவிட்டு விலக்கவும் அறிவுரை கூறினார். “நாங்கள் அவரை  விலக்கமாட்டோம்; விரும்பினால் நீங்கள் விலக்கி விடுங்கள்” என்று மொழிந்துவிட்டனர் கல்லூரிப் பொறுப்பாளர்கள். யான் இந்தியை எதிர்ப்பதாக சட்டமன்றத்தில் என்னைப் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. அரசு என்னைக் கல்லூரியிலிருந்து அகற்றத் திட்டமிட்டது.
 (தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, February 11, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙீ] – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙீ]

  1. இதழாயுதம் ஏந்திய போராளி

 போராளிப் பணி ஒரு துறையுடன் முடிவடைவதில்லை. போராளிக்கு ஓய்வேது? ஒழிவேது? பேராசிரியரும் கல்விநிலையம் சார்ந்த பணியுடன் நின்று விடவில்லை. இதழ்ப்பணி மூலமாகத் தம் தொண்டினைத் தமிழ் உலகம் முழுவதும் விரிவு படுத்தினார். தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக் கொண்டே தமிழைச் சிதைக்கும் பல அமைப்புகள்போன்ற ஒரு குழு (வட்டத்தொட்டி) நடத்திய கூட்டத்தில் ‘சங்க இலக்கியத்தைத் தூக்கி வங்கக் கடலில் எறிவோம்’என்று முழங்கினர். இதை அறிந்த பேராசிரியர் இலக்குவனார், தமிழ் இலக்கியத்தை அழிப்பது என்பது தமிழ்க்கலையை – தமிழ்ப் பண்பாட்டை – தமிழ் நாகரிகத்தை – அழிப்பதன் மூலம் தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் அழிப்பது என்ற உணர்வின்றி முழங்குகின்றனரே என உள்ளம் நைந்து கொதித்து எழுந்தார். ஏதோ பேசுகிறார்கள்; பேசட்டும் என்று விட்டுவிடவில்லை.  அல்லது மறுப்பு சொல்லிவிட்டு வாளா இருப்போம் என அமைதி காக்கவில்லை. சங்க இலக்கியப் பகைவர்களால் ஏற்பட்ட மாசினைத் துடைக்க வேண்டும் எனப் பேராசிரியர் இலக்குவனார் விழைந்தார்; ‘சங்கத் தமிழ் பாடித் தமிழர் புகழ் வளர்ப்போம்’ என முழங்கிச் சங்க இலக்கியப் பரப்புரையைத் தொடர்ந்தார். ‘சங்க இலக்கியம்’ என்னும் வார ஏட்டினைத் தொடங்கிச் சங்க இலக்கியங்களை எளிமையாக விளக்கினார். கதை கூறும் முறையில் புதுமையாக அவர் சங்க இலக்கியப்பாடல்களை விளக்கியமைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. கதைகளைப் படிக்கும் ஆர்வம் மிகுந்தவர்களுக்குக் கதை வடிவில் இலக்கியத்தைச் சுவைப்பது இன்பமாக இருந்தது. சங்க இலக்கியம் பெரும் புலவர்களுக்கு மட்டுமே என்ற எண்ணம் மாறி மக்களுக்கான இலக்கியம் என்ற எண்ணம் வேரூன்றியது. ‘இரும்புக்கடலை என இகழப்பட்ட பாடல் இன்சுவை அமுதமாகக் கருதப்பட்டது’ எனப் பேராசிரியரே இது குறித்துக் கூறி உள்ளார்.
 தாம் மட்டும் சங்க இலக்கியத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டால் போதாது எனக் கருதினார் பேராசிரியர் இலக்குவனார். எனவே, பிற எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள் என அனைவருக்கும் “சங்க இலக்கியக் காலம் நம்பொற்காலம். சங்கஇலக்கியங்களை மக்களிடையே பரப்பவேண்டும்”எனக் குறிப்பிட்டுச் சங்க இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு பேசுமாறும் எழுதுமாறும் மடல்கள் எழுதினார். அதன் பயனாக அறிஞர் மு.வ. முதலான பிற படைப்பாளிகள் சங்க இலக்கிய அடிப்படையில் புதினங்கள் எழுதிய நிகழ்வுகளும் விளக்க ஓவியங்கள் அமைத்த நேர்வுகளும் சொற்பொழிவுகளும் நிகழ்ந்தன. அன்றைக்குப் பேராசிரியர் இலக்குவனார்  அந்த முயற்சியை மேற்கொண்டிராவிட்டால் சங்க இலக்கியம் மறைந்து போயிருக்கும். அறிஞர்கள் சி.வை.தாமோதரனார், உ.வே.சாமிநாதனார் ஆகியோர் மீட்டுக் கொடுத்த சங்க இலக்கியங்களைத் தமிழ்ப் பகைவர்கள் புதைகுழிக்குள் அனுப்பி இருப்பர். பழந்தமிழ் இலக்கியங்கள் யாவுமே மக்கள் நலனுக்கானவையே என்பதை மெய்ப்பித்து இலக்கியப்போராளியாக வாகை சூடினார் பேராசிரியர் இலக்குவனார்.
 சங்க இலக்கியம் வார ஏட்டின் மூலம் இலக்கியப்பணி ஆற்றுவதோடு    நின்றுவிடவில்லை பேராசிரியர் இலக்குவனார். ‘தமிழர்களின் தேசிய மொழி தமிழே’ என்பதை உரைத்து வந்த பேராசிரியர் ‘சங்க இலக்கியம்’இதழ் வாயிலாகவும் அதனை உணர்த்தினார். இந்தியம் என்றும் திராவிடம் என்றும் இல்லாத இயங்களைப் பிறர் இயம்பப் பேராசிரியரோ தமிழ்த் தேசியம் என்பதை வலியுறுத்தினார்.
 இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே
 “உரிமை ஞாயிறு தோன்றுகின்றது. உறங்காதே தமிழா!
 உன்றன் நாடும் உரிமை பெற்றிட உழைத்திடு தமிழா! ”
 என்று தமிழக விடுதலை உணர்வைப் பரப்பினார்.
 “தமிழரின் அரசை ஆக்குவோம்! – இனித்
 தமிழகம் சிதைவதைத் தாக்குவோம்!
 தமிழகம் உலகத்தின் தாயகம்! – இதைத்
 தரணியோர் மதித்திடச் செய்குவோம்!”
 என்று தமிழகமே உலகத்தின் தாயகம் என்பதை உலகோர்க்கு உணர்த்த வேண்டும் என வலியுறுத்தினார். அதனை நம்மில் பெரும்பான்மையர் உணரத் தவறியதால்தானே தாய்மண்ணில் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகச் சாகடிக்கப்பட்ட அவலம் நிகழ்ந்தது.
 “தமிழா சிந்தனை செய்! வீரத்தமிழா வீறிட்டெழு! முன்னை நிலையை உன்னிப் பார்!
 நாடு – பரந்த தமிழகம் குறைந்ததேன்?
 மொழி – உலகாண்ட உன் மொழியை ஒடுக்குவதேன்?
 வீரம் – இமயம் கொண்ட ஏற்றம் எங்கே?
  ஆட்சி – பாவலனைப் போற்றிய காவலனெங்கே?
 வாணிகம் – கப்பலோட்டிய கண்ணியம் எங்கே?
 கொடை – பெருந்சோறளித்த பெருமைதான் எங்கே?
 தாமொழி உயரத் தாய்நாடு உயருமே!”
 என மொழி, இனம், நாடு, பண்பாடு, கொடை, வணிகம், ஆட்சி எனப் பலவகையிலும் தனித்து விளங்கிய தமிழர்களின் பெருமையை நினைவுறுத்தித் தமிழ்த்தேசிய உணர்வைத் தட்டி எழுப்புகிறார்.
 “அமுதம் ஊறும் அன்பு கொண்டு அரசு செய்த நாட்டிலே
 அடிமை என்று பிறர் நகைக்க முடிவணங்கி நிற்பதோ?
 இமயம் தொட்டு குமரி மட்டும் இசைபரந்த மக்கள் நாம்
 இனியும் அந்தப் பெருமை கொள்ள ஏற்றம் யாவும் செய்குவோம்!
 என இமயம் முதல் குமரிவரை வாழ்ந்த நாம் மீள்பெருமை பெற உழைக்க வேண்டுகின்றார்.
 “தமிழ் ஆய்ந்த தமிழர்களே தமிழ்நாட்டின் தலைவர்களா விளங்கும் காலம்
 இமிழ்கடல் சூழ் இவ்வுலகில் எவர்க்கும் நாம் பின்னடைந்து வாழ்தலில்லை!”
 எனத் தமிழர்களைத் தமிழர்களே ஆள வேண்டும் என்னும் தமிழ்த் தேசிய உணர்வை மலரச் செய்கிறார்.
 இந்தியவிடுதலைக்கு முன்னரே தமிழக விடுதலையை வலியுறுத்திய பேராசிரியர் இலக்குவனார் அதற்குப் பின்னரும்  மொழிவழித் தேசியக் கூட்டமைப்பையே வலியுறுத்தி வந்துள்ளார். தொடர்ந்து அவர் நடத்திய இதழ்களில் அதனை வலியுறுத்தி வந்ததற்குச் சான்றாக ஒன்றை மட்டும் பார்ப்போம். ‘திராவிடக் கூட்டரசு’இதழில் (31.10.52) ‘மொழி வழி நாடுகள் முன்னின்று அமைப்போம்’என்னும் தலைப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
 “மொழி வழியாக நாடுகள் அமைய வேண்டுமென்று கூறுகின்றோம். மாகாணங்கள் அல்ல. இன்று சிலர் மொழிவழியாக மாகாணங்கள் அமைந்து தில்லி ஆட்சியின் அடிமை யுறுப்பாய் இயங்க வேண்டுமென்று முயல்கின்றனர். ஆந்திரப் பிரிவினைக் கிளர்ச்சிக்காரர்கள்கூட ஆந்திர மாகாணம்தான் வேண்டுமென்றும் தில்லித் தலைமைக்குக் கட்டுப்பட்டுக் கிடப்போம் என்றும்தான் கூறி வருகின்றார்கள். அதை நாம் வெறுக்கின்றோம். தனி உரிமையுள்ள மொழி வழி நாடுகள் அமைய வேண்டுமென்றுதான் நாம் கூறுகின்றோம். எங்கேயோ உள்ள தில்லிக்கும் நமக்கும் தொடர்பு எதற்காக?… ஆகவே, மொழிவழி நாடுகள் அமைய முன்னின்று உழைப்போம். ஆனால் அந்நாடுகள் ஆரிய நாட்டாட்சியின் அடிமை மாகாணங்களாய் இருத்தல் கூடாது”
 இன்றைய தமிழ்த்தேசியவாதிகள் உரைப்பதை அன்றைக்கே தொலைநோக்குடன் பேராசிரியர் இலக்குவனார் உணர்த்தி உள்ளார்.
 இந்தவகையில் தமிழ்த்தேசிய முன்னோடிப் போராளியாகத் திகழ்கிறார் பேராசிரியர் எனலாம்.
 போராளிகளுக்கான  முதன்மை ஆயுதம் எழுத்து. எழுத்தினை ஒரே நேரத்தில் பலர் அறிய உதவும் கருவி இதழுலகம். தமிழுலகைச்  செதுக்கப் பேராசிரியர் எடுத்த கூராயுதமே இதழ்ப்பணியாகும். தமிழ் நலன் காக்கத் தொடர்ந்து இதழ் நடத்திய ஒரே பேராசிரியராகப் பேராசிரியர் இலக்குவனார் திகழ்கிறார்.
 இசைத்தமிழ் வளர்ச்சியில் பெரிதும் ஈடுபாடுடையவர் பேராசிரியர் இலக்குவனார்.
 தெலுங்குதமிழ் நாட்டினிலேன்? செத்தவட மொழிக்கிங்கே என்ன ஆக்கம்?
 இலங்கும் இசைப் பாட்டுகள் பிறமொழியில் ஏற்படுத்த இசைய லாமோ?        (பாவேந்தர் பாரதிதாசன்)
 என இசை என்றால் தமிழ்நாட்டில் தமிழிசைதான் என எழுதியும் பேசியும் வந்தார்.  இசைப்பாடல்கள் இயற்றிச் சிலவற்றைச் சங்க இலக்கிய இதழ்களில் வெளியிட்டும் பிறவற்றை இசைமணி சங்கரனார் பண்ணமைப்பில் மேடைகளில் பாடச்செய்தும் பேராசிரியர் இலக்குவனார் தாமும் முன்முறையாகத் திகழ்ந்து தமிழிசை எழுச்சிக்கு உதவினார்.
 (தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்