Sunday, August 29, 2021

ஒளவையார்: 9 : ந. சஞ்சீவி

 அகரமுதல




(ஒளவையார்: 8 : ந. சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 18

2. ஒளவையார் (தொடர்ச்சி)


மூண்டெழும் போருக்கெல்லாம் அடிப்படைக் காரணம் மண் வெறியும் புகழ் நசையுமே என்பதை நன்குணர்ந்த அச்சான்றோர், அம்மண்ணாள் வேந்தர் மனம் கொளும் வகையில் தம் இதயக் கருத்தை எடுத்துரைக்கலானார் : “தேவர் உலகை ஒத்த பகுதிப்பட்ட நாடு தம்முடையது ஆயினும், அஃது எப்போதும் தம்மோடு உரிமைப்பட்டே நடவாது; ஒருவர் அந்நாட்டிற்கு உரியவர் அல்லர். ஆயினும், நற்றவம் செய்தோராயின், அஃது அவர்க்கே உரித்தாகும். ஆகையால், நீவிர் யாசிக்கும் அறவோர் ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து, ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய தண்கமழ் தேறல் மாந்தி மகிழ் சிறந்து, இரவலர்க்கு அருகாது ஈந்து, உங்கட்கு அறுதியிட்ட வாழ் நாள் முழுதும் வாழ்தல்வேண்டும். ஒருவர் பிறவிப் பெருங் கடலைக் கடக்கத் தாம் செய்த நற்கருமமன்றி நற்புணை பிறிதொன்றுமில்லை. அந்தணர் வேள்வியில் வளர்க்கும் முத்தீப்போலக் கண்ணுக்கினிய கவின் மிக்க காட்சியுடன் ஒருங்கிருந்த கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்தர்களே, இவ்வாறு நீங்கள் கூடி உறைதலால் உண்டான பீடும் பயனும் நன்மையும் புகழும் யானறிந்து உரைக்கும் அளவினவோ? உங்கள் வாழ்நாள் விண் மீனினும், மழைத்துளியினும் சிறந்து பெருகுவதாக!” எனத் தமிழக வேந்தர் உணர்ந்து உய்யும் வகையில் அறிவுரை கூறி வாழ்த்தினார்.

‘முத்தீப் புரையக் காண்டக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்!
யானறி அளவையோ இதுவே?’         (புறநானூறு 387)

என்னும் இவ்வருமை சான்ற அடிகளைத் தன் அகத்தே கொண்டு சங்க இலக்கியத்துள்ளேயே ஒளி மிக்க மணியாய் விளங்கும் இப்புறப்பாடலைப் படிக்குங் தோறும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே பல்லாற்றானும் சிறந்திருந்த இன்பத் தமிழகத்தைச் சீரழிக்கக்கூடிய கொடு நோய் எதுவென உணர்ந்து அங்நோய் தீர மருந்தும் காட்டிய அவ்வருந்தமிழ்த் தாயரை எண்ணி எண்ணி,
‘அன்னையீர், எங்கள் தலைமுறையிலேனும் ஒற்றுமையால் உய்ந்து உலகு போற்றும் ஒப்பற்ற சாதியாய் விளங்குவோம். அதுவேயன்றி, உமக்கு வேறென்ன கைம்மாறு செய்ய வல்லேம்?’ என்று நம் தமிழ் உள்ளம் உருக்கத்துடனும் உறுதியுடனும் முழங்குகின்றது அன்றோ?

இவ்வாறு தமிழகம் அன்றும் இன்றும் உய்வதற்கு உரிய ஒரு பெருநெறியினைக் காட்டி ஒற்றுமைச் சங்கொலித்த சான்றோராகிய ஒளவையாரின் பிறப்பைப் போன்றே அவர் முடிவைப் பற்றியும் நாம் ஏதும் அறிந்திலோம்.

ஒளவைப்பிராட்டியாரின் பொன்னுடலம்-அண்ணல் அதிகமான் அளித்த அருங்கனியால் நீண்ட நாள் தமிழகத்தில் வாழ்ந்து தொண்டு புரிந்த திருவுடலம்-எங்கு-எப்பொழுது-எவ்வாறு மறைந்ததோ! அந்தோ! அருந்தமிழ்ப் பெருமாட்டியாரின் பொன்னுடலம் மாய்ந்து ‘அவருடற் பூந்துகள் ஆர்ந்தது’ம் நாம் பிறந்து வாழும் இத்தமிழ் மண்ணிலேதான் என்பதை எண்ணும் போது நம் உடலெல்லாம் சிலிர்க்கிறது! அன்னையாரின் திருவுடலம் மறைந்தாலும், அவருடைய அருந்தமிழ்க் கவிதைகள் என்றும் நமக்கு வழி காட்டும் சுடர் விளக்குகளாய்த் திகழ்வது திண்ணம்.

தமிழகம் கால வெள்ளத்தில் நீர்க்குமிழிபோல அழிந்தொழியாமல்-உலக இருள் போக்கும் ஒப்பற்ற கலங்கரை விளக்காய்த் திகழ வேண்டுமாயின், ஒற்றுமை யொன்றே அதற்குரிய வழி என்பதை இன்றும் நாம் உணருமாறு இருபது நூற்றாண்டுகட்கு முன்பே உணர்த்திய ஒளவைப் பெருமாட்டியாரின் அரியதொரு பாடல் தமிழகத்திற்கு மட்டுமன்றிக் கடல் குழ்ந்த காசினிக்கெல்லாம் அறிவுச்சுடர் கொளுத்தும் அணையா விளக்காய் ஒளிர்கிறது.

தம் வாழ்வில் எத்தனையோ மன்னர்களையும் வள்ளல்களையும் பார்த்தவர் ஒளவையார்; அவர்கள் ஆண்ட மண்ணையும் கடலையும், மலைகளையும் காடுகளையும் கண்டவர். அருமைத் தமிழகத்தின் ஐவகை நிலங்களின் அழகும் அவர் கண்ணாரக் கண்டு களித்ததே ஆகும். சோறு படைக்கும் சோழ நாடும், முத்தளிக்கும் பாண்டி நாடும், வேழம் மிகவுடைய சேரநாடும், சான்றோர் பலருடைத் தொண்டை நாடும் அவர் கண்டு பழகிய பகுதிகளே ஆகும். அத்தகையோர் தம் பரந்த அனுபவத்தில் கனிந்த உண்மை ஒன்றை உலகிற்குத் தம் வாழ்வின் காணிக்கையாக அளித்துள்ளார். “நிலனே, நீ ஒன்றில் நாடேயாக, ஒன்றில் காடேயாக! ஒன்றில் பள்ளமேயாக, ஒன்றில் மேடேயாக! எவ்வாறாயினும், எவ்விடத்து ஆடவர் நல்லரோ, அவ்விடத்து நீயும் நல்லையல்லது, நினக்கென ஒரு நலமுடையையல்லை. வாழிய நிலனே!” என்னுங் கருத்தமைய

நாடா கொன்றோ, காடா கொன்றோ
அவலா கொன்றோ, மீசையா கொன்றோ!
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே!’         (புறநானூறு, 187)

என அமைந்ததே அச்செய்யுள்.

இவ்வாறு தம்மையும், நம்மையும் ஈன்றெடுத்த மண் மகளை வாழ்த்தும் அருமையான பாடல், நாமும் வையகமும் உணர்ந்து உய்ய ஒளவையார் அளித்த சாவா மருந்தாகும்.

இருபது நூற்றாண்டுகட்கு முன்பு தாய்க்குலத்தின் பெருமையாய் வெற்றியாய்த் தமிழகத்தில் தோன்றிய ஒளவையார்- நல்லிசைப் புலமை சான்ற பெண்மணிகளுக்கெல்லாம் தலை மணியாய் விளங்கிய தமிழ்ச்சான்றோர்-உலகப் பெருமாதருள் ஒருவரென்பது தமிழகம் உலக அரங்கில் மேலும் மேலும் உயர்ந்து ஒப்பற்ற சமுதாயமாய் விளங்கும் பொன்னாளில் வையகம் முழுதும் ஏற்றுப் போற்ற இருக்கும் பேருண்மையாகும். அத்தகு பெருந் தாயரின் சான்றாண்மை மிக்க நெஞ்சின் உள்ளொளியாய் விளங்கும் அருந்தமிழ்ப் பாடல்கள் என்றென்றும் நம் வாழ்விற்கு இருள் நீக்கி ஒளி காட்டி-சிறுமை நீக்கிச் செம்மை கூட்டி-இறப்பு நீக்கி வாழ்வு ஊட்டி-வளம் புரிவதாக!

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்

Saturday, August 28, 2021

பாரி மகளிர் 2 – இரா.இராகவையங்கார்

 அகரமுதல




நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 18

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 17. தொடர்ச்சி)

4. பாரி மகளிர் (தொடர்ச்சி)

இதன்மேற் கபிலர், அவ்வூரை விடுத்து இளவிச்சிக்கோ என்பானிடஞ் சென்று இம்மகளிரது உயர்குடிப்பிறப்பு முதலியவற்றை எடுத்துரைத்து, இவர்களை மணஞ்செய்து கொள்ளும்படி அவனைப் பாடி வேண்ட, அவன் உடம்படாமையால் இருங்கோவேள் என்பானுழைச் சென்று அவனையும் அவ்வாறு வேண்ட, அவனும் அங்ஙனமே உடம்படானாய் மறுக்க, இதற்காக அவனை முனிந்துபாடி, பாரிகுடிக்கும் மூவேந்தர்க்கும் உண்டாகிய பகைமைபற்றி அரசரொருவரும் இவர்களை மணஞ்செய்துகொள்ள இயையாமையாற் கபிலர் அம்மகளிரைத் தமக்கினிய பார்ப்பார் சிலர்பாற் படுத்து, பாரியின் பிரிவாற்றாது வடக்கிருப்பாராயினர்.

இதற்கிடையிற் கபிலர் செல்வக்கடுங்கோவாழியாதன் என்னும் சேரமான்பாற்சென்று அவனைப் பத்துப் பாடல்களாற் புகழ்ந்துபாடி, நூறாயிரங்காணமும் அவன் மலையேறிக் கண்டு கொடுத்த நாடும் அவன்பாற் பெற்றனர் எனத் தெரிவது. இதுவே பதிற்றுப்பத்தினுள் ஏழாம் பத்தாவது. இவர், பாரி இறந்தபின்னேதான் அவனது நற்குணநற்செயல்கள் செல்வக்கடுங்கோவாழியாத னிடமும் இருப்பனவாகக் கேட்டு, அவனைக் காணச் சென்றனராவர். இதனை,*

பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல்
வாடை தூக்கு நாடுகெழு பெருவிற
லோவத் தன்ன வினைபுனை நல்லிற்
பாவை யன்ன நல்லோள் கணவன்
பொன்னி னன்ன பூவிற் பசியிலைப்
புன்கா லுன்னத்துப் பகைவ னெங்கோப்
புலர்ந்த சாந்திற் புலரா வீகை
மலர்ந்த மார்பின் மாரிவண் பாரி
முழவுமண் புலரா விரவல ரினைய
வாராச் சேட்புலம் படர்ந்தோ னளிக்கென
விரக்கு வாரே னெஞ்சிக் கூறே
னீத்த திரங்கா னீத்தொறு மகிழா
னமரா வள்ளிய னென்ன நுவலுநின்
னல்லிசை தரவந் திசினே

என்னும் பதிற்றுப்பத்தாலும் (8-ம் பத்து, 1), ‘படர்ந்தோன் என்பது, முற்று. அளிக்கென என்பது, நீ யெம்மை அளிப்பாயாக எனச்சொல்லி என்றவாறு. இரக்கு என்பது தன்வினை. எஞ்சிக்கூறேனென்பது உண்மையினெல்லையைக் கடந்து பொய்யே புகழ்ந்து சொல்லேன் என்றவாறு. யான், பாரி சேட்புலம் படர்ந்தான்: நீ எம்மையளிக்க எனச்சொல்லி இரக்கவென்று வந்து சில புகழ்ந்து சொல்கின்றேனு மல்லேன்; அஃதன்றி யான் உண்மையொழியப் புகழ்ந்து சொல்கின்றேனுமல்லேன்; ஈத்ததிரங்காமை முதலாகிய பாரிநற்குணங்களை நின்பாலுளவாக உலகஞ்சொல்லும் நின்புகழ் நின்பாலேதர வந்தேன்’ என்னும் அதனுரையானும் உணர்ந்துகொள்க. சேரன்பால் இவர் சென்ற காலத்தும் இப் பாரிமகளிரும் உடனிருந்தனர் போலும். இம்மகளிர் வரலாற்றினைப் புறநானூறொன்றே துணையாகக்கொண்டு ஆராயின், அதன்கண்,

(1) அற்றைத் திங்கள். . . . . . . . . .மிலமே (புறநானூறு – 112)

இது பாரிமகளிர் பாடியது.

(2) சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே
கோறிரண் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே.’ (புறநானூறு – 113)

இஃது அவன்(பாரி)மகளிரைப் பார்ப்பார்ப்படுக்கக் கொண்டுபோவான் பறம்புவிடுத்த கபிலர் பாடியது.

(3) ஈண்டுநின். . . . . . . . . .நெடியோன் குன்றே (புறநானூறு – 114)

அவன் மகளிரைக் கொண்டுபோங் கபிலர் பறம்பு நோக்கிநின்று சொல்லியது.

(4) இவரே. . . . . . . . . .பாரிமகளிர்
யானேபரிசிலன் மன்னு மந்தணன்
நீயேவரிசையில் வணங்கும் வாண்மேம் படுந
னினக்கியான் கொடுப்பக் கொண்மதி (புறநானூறு – 200)

இது பாரிமகளிரை விச்சிக்கோனுழைக் கொண்டுசென்ற கபிலர் பாடியது.

(5) இவர். . . . . . . . . .பாரிமகளிர் யானே
தந்தை தோழ னிவரென் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே (புறநானூறு – 201)

இது பாரிமகளிரை இருங்கோவேளுழைக் கொண்டுசென்ற
கபிலர் பாடியது.

(6) எவ்வி தொல்குடிப் படீஇயர் மற்றிவர்
கைவண் பாரி மகளி ரென்றவென்
றேற்றாப் புன்சொ னோற்றிசிற் பெரும (புறநானூறு – 202)

இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாகக் கபிலர் பாடியது.

(7) கலையுணக். . . . . . . . . .பாலே.‘ (புறநானூறு – 239)

வேள்பாரி துஞ்சியவழி மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்த கபிலர் பாடியது என வருவனவற்றாற் பாரிமகளிர் ஒருசிலரென்பதும், அவர் பாடவல்லவரென்பதும், அப் பாரி இறந்தபின் அவனது தோழராகிய கபிலரென்னும் புலவரந்தணரால் இளவிச்சிக்கோ, இருங்கோவேளென்னும் அரசரிடம் தம்மை மணஞ்செய்து கொள்ளும்படி வேண்டப்பட்டனரென்பதும், அவ்வரசர் அதற்குடம்படாமையாற் கபிலராற் பார்ப்பார்ப் படுக்கப்பட்டனரென்பதும், இவரைப் பார்பார்ப் படுத்தபின் கபிலர் பாரிபிரிவாற்றாது வடக்கிருந்தனரென்பதும் அறியப்படும்.
இனித் தமிழ்நாவலர் சரிதையினையும் துணைக்கொண்டு நோக்கின்,

சேரலர்கோன் சேரன் செழும்பூந் திருக்கோவ
லூரளவுந் தான்வருக வுட்காதே — பாரிமக
ளங்கவையைக் கொள்ள வரசன் மனமியைந்தான்
சங்கியா தேவருக தான்.’

என்பன முதலாக மேல் ஔவையார் வரலாற்றுள் எடுத்துக் காட்டிய பாடல்களானும், பிறவற்றானும் அப் பாரிமகளிர் அங்கவை சங்கவை என்பாரிருவரென்பதும், அவர் திருக்கோவலூரில் இருந்தனரென்பதும், அவ்வூரில் தெய்விகனென்னும் அரசனுக்கு மூவேந்தர்நடுவில் ஒளவையாருடைய நன்முயற்சியாற் சிறக்க மணஞ்செய்து கொடுக்கப்பட்டன ரென்பதும், பிறவும் புலனாகும். இத்தமிழ்நாவலர் சரிதைப் பாட்டுள், ‘பாரிமகள், அங்கவையைக் கொள்ள அரசன் மனமியைந்தான்’ என்பது, முன், அரசர் சிலர் இம்மகளிரைக் கொள்ள மனமியையாமை குறிப்பதாம். இதன் விரிவெல்லாம் ஒளஔவையார் வரலாற்றுட் காண்க.

இங்ஙனமன்றி, ‘பார்ப்பார்ப்படுத்தல்’ என்பது, பார்ப்பார்க்கு மணஞ்செய்யப்பட்டமையேயாம்: என்னை? ‘குறுந்தொடி மகளிர், நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே’ (புறநானூறு, 113) என மேல் வந்தது, பாரிமகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான் பறம்புவிடுத்த கபிலர் பாடிய தாதலான்’ எனின்;– கூறுவேன். கபிலர் பறம்பினை விடுத்தபோதே இம்மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கருதினாராயின், இளவிச்சிக்கோ, இருங்கோவே ளென்பாரிடம் இவரை மணஞ்செய்துகொள்ள வேண்டார். இவ்வரசர்பாற் சென்று வேண்ட அவருடம்படாத பின்னேதான் கபிலர்க்குப் பாரி மகளிரைப் பார்ப்பார்ப்படுக்கு மெண்ணம் உண்டாயிருத்தலாகும். அதன்பின்னரே பார்ப்பார்ப்படுத்தன ராவர்.

இம் முடிவுநிகழ்ச்சியை உட்கொண்டு, பிற்காலத்துச் செய்யுட்டொகை செய்தார், பறம்புவிடுத்தது முதலும் பார்ப்பார்ப்படுத்தது
இறுதியுமாக இவர்கள் செய்தி நிகழ்தலின் இடையினிகழ்ந்தன வெல்லாங் கூறாமல் இறுதியிற் ‘பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான்’ என்பதே குறித்துக்கொண்டார். ‘நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே’ எனப் பாட்டுட் கூறப்பட்டிருத்தலால் இம்மகளிர் மணத்தற்குத்
தக்க ஒருகுலக்கணவரைத் தேடுதலே பறம்புவிடுக்கும்போது கபிலர்க்குள தாகிய எண்ணமென்பது நன்கு புலனாம். நாறிருங்கூந்தற் கணவர் பார்ப்பாரே என முதற்கட் கருதினாரெனின் பார்ப்பார்ப் படுத்தற்குமுன் இளவிச்சிக்கோ, இருங்கோவேளென்னும் வேளிரிடஞ் சென்று வேண்டல் பொருந்தாதாகும். இம்மகளிர் வேளிர்குலக்கொடிகளாதலால் அக்குலத்து நல்லாண்மக்களையே தேடிச்சென்றன ரென்பது தெள்ளிது. ஆதலால், ‘நாறிருங் கூந்தற். . . . . .கிழவரைப் படர்ந்தே’ என்பதற்குக் கீழ்க்குறிப்பே துணையாகக்கொண்டு, பார்ப்பார்க்கு மணஞ்செய்யப்பட்டன ரென்றல் இயையாமை காண்க.

இனிப் பார்ப்பார்ப் படுத்தனெ ரென்பதுதானே, பார்ப்பார்க்கு மணஞ் செய்யப்பட்டன ரென்ப துணர்த்து மெனின் ;- அது ‘பாரிமக ளங்கவையக் கொள்ள வரசன் மனமியைந்தான்’ என்னும் ஒளவையார் பாட்டோடு மாறுகொள்ளும். இவற்றாற் ‘கபிலர் பாரிமகளிரைப் பார்ப்பார்ப் படுத்தனர்’ என்பது, அவர் அம்மகளிரை அரசரொருவரும் மணஞ்செய்து கொள்ளாமையால் தமக்கினிய பார்ப்பார் சிலரது பாதுகாப்பில் வைத்தமையே குறிக்கும். அன்றியும், பார்ப்பார்க்கும் வேளிர்க்கும் மணநிகழ்ச்சி கூறுதலும் இயையாதாம். கபிலர், மகளிரை அரசர்க்கு மணஞ்செய்யலாகாமற் பார்ப்பாரது பாதுகாப்பில் வைத்து வடக்கிருக்க, ஔவையார் அதுதெரிந்து தெய்விகன் என்னும் அரசனை, இம்மகளிரை மணஞ்செய்து கொள்ளும்படி உடம்படுவித்து அவர் மணத்தைச் சிறப்ப வியற்றினர் என்பதே இயைபுடைத்தாவது காண்க.

இம்மகளிர், புலவர் பேரணியாங் கபிலரந்தணர்பாற் பயின்றமைக் கேற்ற நல்லிசைப் புலமையே யன்றி, வரையா வள்ளியோ னாகிய பாரிமகளிர் என்றற்கேற்ற வள்ளற்றன்மையு முடையராயின ரென்பது,

மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு — நீருலையுட்
பொன்றந்து கொண்டு * புகாவாக நல்கினா
ளொன்றுறா முன்றிலோ வில்.

[* புகா என்பது உணவு. ‘புகாக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப், பகா விருந்தின் பகுதிக் கண்ணும்’ என்னுந் தொல்காப்பியத்து (களவியல், 16), நச்சினார்க்கினியர், ‘புகாக்காலை’ என்பதற்கு ‘உண்டிக்காலத்து’ எனக் கூறியவற்றா னுணர்க. ‘புகாவலை விலங்காய்’ என வளையாபதியினும் (புறத்திரட்டு, *] [* புலான்மறுத்தல், 7) வருதல் காண்க. இது நிலா நிலவு என வருதல் போலப் ‘புகவு’ எனவும் வரும். ‘அகநாட் டண்ணல் புகவே’ என்பது புறநானூறு(249). *]

என்னும் பழமொழிச் செய்யுளானும் (171), ‘மாரி யென்பதொன் றின்றி உலகம் வற்றியிருந்த காலத்தும் பாரிமடமகளிர் இரந்து வந்தானொரு பாண்மகற்குச் சோறுபெறாமையால் உலையுட் பொன்னைப் பெய்துகொண்டு திறந்து சோறாகவே நல்கினாளாதலால், ஒரு துன்பமுறாத மனையில்லை என்றவாறு. அல்லதூஉம், சோறும் அரிதாகிய காலத்துப் பொன்னே சோறாக உதவினாளாதலாற் சென்றிரந்தால் ஒரு பயன்படாத மனையில்லை என்றவாறு’ என்னும் அதனுரையானும் அறியப்படும்.

முன்னரே ஒளவையாரது வரலாற்றுள் இம்மகளிரது திருமணச்சிறப்பு முதலியன கூறப்பட்டனவாதலான், ஈண்டு வேறெடுத்தோதினேனில்லை. அதனால் ஒளவையாரென்னும் அறிவுடையாட்டி இம்மகளிர்பால் வைத்த பேரன்பு நன்குணரப்படும்.

இத்துணையுங் கூறியவாற்றால், புவிநிறை பெரும்புகழ்க் கபில ரௌவை அன்பு பாராட்டு மின்புடைப் பாரியி னருமை மகளிர் பெருமையுங் கல்வியும் ஒருவா றுணர்க.

(தொடரும்)

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்

 இரா.இராகவையங்கார்

Tuesday, August 24, 2021

ஒளவையார்: 8 : ந. சஞ்சீவி



(ஒளவையார்: 7 : ந. சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 17

2. ஒளவையார் (தொடர்ச்சி)

 

ஆனால், அந்தோ! ஒளவையாரின் கவிதையும் கண்ணீருங்கூட இனி அதிகமானை உயிர்ப்பியாவே! அதியமான் வாழ்வு அவ்வளவு கசப்பான பாடத்தைக் கடுந்துயரொடு கலந்து இவ்வுலகுக்கு உணர்த்திவிட்டது. அணுவினும் நுண்ணியதாய்-அணுவைப் பிளந்தால் தோன்றும் ஆற்றலினும் பன்னூறு மடங்கு அதிகமான பேராற்றல் படைத்ததாய் விளங்கும் இயற்கையின் ஆற்றலை-பரந்த பேரூழின் வல்லமையை-என்னென்று கூறுவது! ‘வாளெடுத்தவன் வாளால் மடிவான்,’ என்ற சான்றோரின் வாக்கு அதிகமான் வாழ்வில் எவ்வளவு துயரக் காட்சிகளோடு கலந்து மெய்யாகிவிட்டது! ‘மனிதனது ஒவ்வொரு செயலும் தன் எதிர்ச் செயலைக் கண்டே தீரும்,’ எனும் இயற்கையின் சட்டத்தை எவரே உடைக்க வல்லார்? தீயின் சுடர் வானோக்கி எரிவதும், வெள்ளம் கீழ் நோக்கி விரைவதும் போலன்றோ தவிர்க்க முடியாத தன்மையதாய் அவ்வியற்கையின் ஆற்றல் விளங்குகிறது? அதிகமான் மாண்டான். தகடூர் வீழ்ந்தது. வரலாறாகிவிட்ட இச்செய்திகளைப் பின் வரும் பதிற்றுப்பத்து அடிகள் விளங்குகின்றன:

பொய்யில் செல்வக் கடுங்கோ வுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்றமகன்
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப்
பல்வேற் றானை யதிக மானொ(டு)
இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று
முரசுங் குடையுங் கலனுங் கொண்(டு)
உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டு‘ [1]
. . . . . . . . . . . . . . . . . . . .
‘வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயில் இறும்பின் தகடூர் நூறி
பேஎ மன்ற பிறழ நோக்கியவர்
ஒடுறு கடுமுரண் துமியச் சென்று
வெம்முனை தபுத்த காலை ‘ [2]

———
[1]. பதிற்றுப்பத்து, 8-ஆம்,பத்து, பதிகம்
[2]. பதிற்றுப்பத்து, 8-ஆம் பத்து, 8-ஆம் பாடல்
———-


வீரமரணமடைந்த அதிகமான் பொன்னுடலம் ஈமச் சிதை ஏறியது. அதிகமானது அருமை மகன் பொகுட்டெழினி நீர் வடியும் கண்களோடும் குருதி கொதிக்கும் நெஞ்சோடும் தந்தையின் சிதைக்குத் தீயிட்டான். உற்றாரும் மற்றாரும், இரவலரும் இல்லோரும், பாணரும் பாடினியரும், கூத்தரும் விறலியரும் கோவெனக் கதறி அழுதனர். ஈமத்தீச் சுழன்று சுழன்று எழுந்தது; சுடர் விட்டு எரியலாயிற்று. ஒளவையாரின் அருள் உள்ளம் கொதித்துக் குமுறியது. அவர் பிள்ளையைப் பறிகொடுத்த பெற்றவளைப்போல, துடிதுடித்து அழுது அரற்றினர்.

“அந்தோ! ஈம வெந்தீயே! நீ எந்தை உடலை எரிக்காது போயினும், அன்றி விண்ணுற எழுந்து எரித்து நீறாக்கினும், அவனுடைய ஞாயிறு அன்ன புகழை உன்னால் ஒரு நாளும் எரிக்க முடியாது. அதிகர் கோமானே, அருங்கொடை வள்ளலே, ஆர்வலர் புன்கண் தீர்த்த அருமருந்தே, ஈரநெஞ்சத்தோடு மாரி போல வழங்கிய கருணை முகிலே, நீயின்றிக் கழிகின்ற காலையும் மாலையும் இனி என் வாழ்நாள் காணாது இருள் சூழ்ந்து ஒழியட்டும்; உனக்கு உற்றவர், நடுகல் நட்டு நாரால் அரிக்கப்பட்ட மதுவை நீ அருந்து வாயெனக் கருதிச் சிறு கலத்தினின்றும் உகுக்கின்றனர். கோடுயர் மலையுடன் நாடு முழுதும் கொடுப்பினும் கொள்ளாத பண்பினை உடைய நீயோ, இப்புல்லிய மதுத்துளிகளை நுகர்வாய்! ” என்னும் கருத்தமைந்த

எறிபுனக் குறவன் குறையல் அன்ன
கரிபுற விறகின் ஈம ஒள்ளழல்
குறுகினுங் குறுகுக; குறுகாது சென்று
விசும்புற நீளினும் நீள்க; பசுங்கதிர்த்
திங்கள் அன்ன வெண்குடை
ஒண்ஞாயி றன்னோன் புகழ்மா யலவே.’         (புறநானூறு, 231)

இல்லா கியரோ காலை மாலை
அல்லா கியர்யான் வாழும் நாளே;
நடுகற் பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ
கோடுயர் பிறங்குமலை கெழீஇய
நாடுடன் கொடுப்பவுங் கொள்ளா தோனே!’         (புறநானூறு, 232)

என்னும் பாக்கள் ஒளவையாரின் அரற்றலை விளக்குவன.

இவ்வாறு எழுத்தறிவார் இதயத்தையெல்லாம் பாகாய் உருக்கிக் கண்ணீர் பெருக்கெடுத்தோடச் செய்யும் கையறுநிலைப் பாடல்களைப் பாடிய ஒளவையார், அதிகமான் மறைவிற்குப் பின்னும் சிலகாலம் “இன்னும் இறப்பு வரவில்லையே! சேண் உயர் உலகிலேனும் சென்று அதிகமானைக் காணோமோ!” என்ற கலகத்துடனையே வாழ்வை நடத்தியிருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.

அதிகமான் மகன் பொகுட்டெழினி மிக இளையனாயிருந்தான். அதனால், அவனுடன் ஒளவையார் சூழ்ச்சித் துணைவராய்த் தங்கி, ‘விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோலனாய்’ அவன் விளங்க, அவனுக்கு உற்ற துணைவராய் விளங்கினார். பொய்யா ஈகைப் பொகுட்டெழினியும் தன் நிழல் வாழ்வோர் துன்ப இருள் சிறிதும் காணாதவாறு ஆட்சி புரிந்தான். மேலும், ‘இசை விளங்கு கவிதை நெடியோனா’ய் விளங்கிய அவன், தன் அருமைத் தந்தையைப் போன்றே விருந்திறை நல்கும் வள்ளியோனாயும் திகழ்ந்தான். அத்தகையோன் வீரம், கருணை, காதல் முதலிய புண்புகளையெல்லாம் போற்றியவாறு ஒளவையார் ஓரளவு தம் வாழ்வில் வீழ்ந்த பேரிடியால் விளைந்த பெருந்துயரை மறந்திருந்தார், பின்னர் அவர் ‘தமிழ் கூறும் நல்லுலக’த்தின் பல்வேறு பகுதிகளையும் காண விழைந்தார். அது காரணமாகத் தகடூரினின்றும் வெளிப்போந்தவர், வள்ளுவர் குடியில் தோன்றியவனும், நாஞ்சில் மலைக்கு உரியவனுமாகிய நாஞ்சில் வள்ளுவனைக் கண்டு, அவன் செம்மைசால் பண்பினன் என்பதை அறிந்து, அவன்பால் சென்று, பொன்னே துகிலோ ஏதும்பெற எண்ணாதவராய், உணவுக்குச் சிறிது அரிசியே வேண்டினார். அவனோ, அருந்தமிழ்ப் புலவர் வரிசை அறிந்து வழங்குபவன் ஆகலின், ஒளவையாரின் பெருமை யெல்லாம் உணர்ந்தவனாய் யானைப் பரிசில் அளித்தான். அது கண்டு ஒளவையார் அவன் கொடையை வியந்து, “செந்நாப் புலவீர், நாஞ்சில் மலை வேந்தன் மெல்லிய அறிவினனே, இஃது உறுதி. யாம் இலைக்கறிமேல் தூவச் சிறிது அரிசி வேண்டினேமாக, அவன் பரிசிலர்க்குதவும் வரிசை அறிதலால், எம் வறுமையைப் பார்த்தலே அன்றித் தன் மேம்பாட்டையும் சீர்தூக்கிப் பார்த்துப் பெரிய மலை போல்வதொரு யானையை அளித்தான். ஆதலால், ஒருவர்க்கு ஒன்றனைக் கொடுக்குமிடத்து அப்பெற்றிப் பட்டதொரு தெளியாக்கொடையும் உளதோதான்! பெரியோர் தாங்கள் செய்யக்கடவ முறைமையைத் தெரிந்து பாதுகாத்துச் செய்யார்கொல்!” எனக் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் அவனைப் புகழ்ந்தார்.

பின்னர் ஒளவையார் உறையூரின் கண் சோழ அரசன் இராயசூய வேள்வி இயற்றுகின்றான் என்பது அறிந்து ஆங்குச் சென்றார். அவன் சேரமான் மாரி வெண்கோவும் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியும் சோழ வேந்தனோடு ஒருங் கிருக்கக் கண்டார். வாழ்நாளெல்லாம் தமிழ் வேந்தரும் தமிழ் வள்ளல்களும் தங்களுள் மாறுபாடு கொண்டு போரிட்டு மடிவதையே கண்டு மனம்வெந்திருந்த ஒளவையாருக்குத் தமிழகத்து முடியுடை மூவேந்தரும் ஒருங்கிருந்த காட்சி எல்லையில்லா இன்பத்தை அளித்தது. அவர் அவ்வின்ப உணர்வின் எல்லையில்நின்று அம் மூவேந்தரையும் அருந்தமிழ்க் கவிதையால் போற்றினார்.

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்