Sunday, September 19, 2010

"உவமைக் கவிஞர்' சுரதா


இந்த யுகத்தின் சிறந்த கவிஞரான "சுரதா'வை அறியாதவர்கள் இருக்க முடியாது. மரபில் தோய்ந்தவர்களாக இருந்தாலும் சரி, புதுக்கவிதைப் படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, உவமைக் கவிஞரின் கவிதைகளில் ஒரு கவிதையையாவது ரசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.மனதில் தனக்குச் சரியெனப்பட்டதை பளிச்சென்று வெளியிடும் துணிவு மிக்கவர். கவிஞர் சுரதா, தஞ்சை மாவட்டத்துப் பழையனூரில், திருவேங்கடம்-சண்பகம் தம்பதிக்கு 1921-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி பிறந்தார். இயற்பெயர் இராசகோபாலன். பெரும்பாலும் கவிஞர்கள் பிறரைப் பின்பற்றி எழுதும் வழக்கமுடையவர்கள். அதை சுரதா விரும்பாதவர். ""தனக்கு அதில் உடன்பாடில்லை, "அந்த நிழல் வழி வாசலை' விட்டு நீங்கி எழுதும் கவிஞன் நான். இவரையோ, அவரையோ பின்பற்றி எழுதப் பிரியப்படாதவன்'' என்று மார்தட்டிக் கொள்வதில் தவறில்லை என்பதை நிரூபித்தவர்.ராஜகோபாலன், "சுரதா' ஆன வரலாறு சுவை மிக்கது. ராஜகோபாலன், பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கவிதை நூல்களை விரும்பிப் படிப்பாராம். ஒருமுறை, டீக்கடைக்காரர் ஒருவர், பாரதிதாசன் கவிதைப் புத்தகம் ஒன்றைக் கொடுத்துப் படிக்கச்சொன்னார். அந்தக் கணம் முதல் பாரதிதாசனின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். புதுவைக்குச் சென்று, பாரதிதாசனைச் சந்திக்கும் துடிப்பு ஏற்பட்டது. செல்வதற்குப் பணம் வேண்டுமே...? ஒரு வீட்டுக்குச் சுண்ணாம்பு பூசும் வேலை செய்து ஆறணா கூலி பெற்று, பாரதிதாசனார் வீட்டை அடைந்தார். இளைஞர் ராஜகோபாலனின் வேட்கையை அறிந்த பாரதிதாசன், பெற்றோருக்குத் தெரிவிக்காமல் தன்னைக் காண வந்ததறிந்து, ""பெற்றோரின் அனுமதி பெற்றுப் பிறகு வா! என்னுடன் பல நாள் தங்கலாம்'' என்று வலியுறுத்தி, அவருக்குச் சிறு தொகையும் கொடுத்து அனுப்பி வைத்தார்."இவரன்றோ பண்பு மிக்க கவிஞர்' என்று முடிவு செய்து, அந்தக் கணம் முதல் பாரதிதாசனுக்கு அடிமையானார்.1941-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி முதல் பாவேந்தரது தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. பாரதிதாசனாரின் இயற்பெயர் சுப்புரத்தினம். அதனால், "சுப்புரத்தினதாசன்' என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். கடிதம் எழுதிக் கையெழுத்திடும்போது இட வசதிக்காக "சு ர தா' என்று இடம்விட்டு எழுதுவார். அந்த மூன்று எழுத்துகளே "சுரதா' ஆனது. சுரதாவின் முதல் கவிதை "கவி அமரன்', "பிரசண்ட விகடன்' இதழில் வெளிவந்தது. பல ஆண்டுகள், பாரதிதாசனின் வீட்டிலேயே தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிகளுக்கு உதவியாக இருந்தார்.  நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளையுடன் பல மாதங்கள் தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிகளுக்கும் உதவியாக இருந்தார்."உவமைக் கவிஞர்' என்று மக்கள் அளித்த விருது அவரிடம் பிரிக்க முடியாமல் ஒட்டிக்கொண்டது. தன்னைப்போன்று "உவமை கொட்டி' எழுதுபவரை ஆதரித்தாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கவியரங்க நிகழ்ச்சிகளுக்குத் தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கவிஞர்கள், இவர் தலைமையில் பாடியிருக்கிறார்கள். உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையைத் தொடங்கிய இவர், தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிலும் புதுமை, புரட்சி செய்வதில் நாட்டம் கொண்ட சுரதா, வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலாக் கவியரங்கம், படகுக் கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம் எனப் பல்வேறு கவியரங்க நிகழ்ச்சிகளை நடத்தி, இளங்கவிஞர்களை ஊக்குவித்துள்ளார்.சுரதாவின் கொள்கைகள் வித்தியாசமானவை. ஆனால் அழுத்தமானவை. ""கணக்கைப் போன்றதே கவிதை என்பதால், கவிதை புனைந்திடக் கற்பனை வேண்டும் என்னும் கருத்தை ஏற்பதே இல்லை'' என்று அவர் தம் கவிதை ஒன்றில் கூறுவதற்கும் துணிவு வேண்டும்.புகழைத் தேடி அவர் சென்றதில்லை; அவரைத் தேடித் தேடிப் புகழ் வந்தது. அறிஞர் வ.ரா.வை முதன் முதலில் சந்தித்தபோது கவிதை ஒன்றைப் பாடுங்கள் என்று வ.ரா. சொல்ல, உவமைக் கவிஞரின் கவிதையைக் கேட்டவுடன், ""மற்றொரு பாரதி பிறந்து விட்டான்'' என்று பலர் முன்னிலையில் மனமாரப் பாராட்டியிருக்கிறார். "சிவாஜி' ஆசிரியர் திருலோக சீதாராம், தம் இதழில் உவமைக் கவிஞரின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கிறார். முரசொலி நாளிதழும் சுரதாவின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.1944-ஆம் ஆண்டு "மங்கையர்க்கரசி' என்ற திரைப்படத்துக்கு சுரதா முதன் முதலில் வசனம் எழுதிக்கொடுத்தார். மிகக் குறைந்த வயதில் திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் "சுரதா' என்றே கூறலாம். சுரதாவின் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை.திரைப்படங்கள் பலவற்றில் சுரதாவின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஜெனோவா, நாடோடி மன்னன், அமரகவி, தை பிறந்தால் வழி பிறக்கும், தலை கொடுத்தான் தம்பி, நீர்க்குமிழி, மறக்க முடியுமா, நேற்று இன்று நாளை முதலிய படங்களின் பாடல்கள் என்றுமே மறக்க முடியாதவை.எழுதாமல் இருப்பவர்களைப் பார்த்தாலும், எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தாலும் ""எழுதுக! எழுதுக! இன்னும் எழுதுக! விழுதின் ஆலமரம்போல் விரிந்து பரவும் பான்மையில் எழுதுக'' என்று ஊக்கப்படுத்துவார்."மங்கையர்க்கரசி' வசனம் மிகவும் புகழ் பெறவே, அதை நூலாக வெளியிட்டார். திரைப்பட உரையாடல் (வசனம்) கதைப் புத்தகமாக முதன் முதலில் வெளிவந்தது கவிஞர் சுரதா எழுதியதே. 1946-இல் "சாவின் முத்தம்' என்ற நூலை எழுதினார். வி.ஆர்.எம்.செட்டியார் அதை வெளியிட்டார். 1955-இல் "பட்டத்தரசி' என்ற சிறு காவிய நூல் வெளிவந்தது.சுரதா, "உவமைக் கவிஞர்' என்ற புகழ் பெற்றவுடன், "காவியம்' என்ற பெயரில் கவிதை வார இதழ் ஒன்றைத் தொடங்கினார். முதன் முதலில் கவிதையிலேயே வார இதழ் நடத்தியவர் என்ற பெருமையும் பெற்றார். பிறகு, "இலக்கியம்', "ஊர்வலம்', "விண்மீன்' எனப் பல இலக்கிய ஏடுகளை நடத்தினார்.வெள்ளையாம்பட்டு சுந்தரம், சுரதாவின் "தேன் மழை' என்ற கவிதை நூலை வெளியிட்டார். அதற்குத் தமிழக அரசு 1969-ஆம் ஆண்டு பரிசளித்தது. ஆனந்த விகடனில் வாரம்தோறும் கவிதைகள் எழுதினார். திரைப்பட நடிகைகளைப் பற்றி அவர் எழுதியது பலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அதற்கு சமாதானமான பதிலைச் சாதுர்யமாக அளித்திருக்கிறார்.1972-ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றம் பெருமை பெற்றது. 1982-இல் எம்.ஜி.ஆர்., பாவேந்தர் விருதும், பத்தாயிரம் ரூபாயும், தங்கப்பதக்கமும் வழங்கிச் சிறப்பித்தார். 1990-இல் இன்றைய தமிழக முதல்வர், பாவேந்தர் விருது வழங்கிச் சிறப்பித்தார். 1995-இல் அன்றைய தமிழக முதல்வரான ஜெயலலிதாவால், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் "இராஜராஜன்' விருது வழங்கப்பட்டது.20-க்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரை நூல்களும் 100-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களும், நான்கு திரைப்படங்களுக்கு வசனம்மும் எழுதிப் புகழைச் சேர்த்துக்கொண்டார். சுரதா, தன் சகோதரியின் மகள் சுலோசனாவை மணந்தார். அவர்களுக்கு ஒரு மகன். பெயர் கல்லாடன். ஒழுக்க சீலரும், வாழ்க்கைநெறியைச் சற்றும் மீறாதவருமான கவிஞர் சுரதா, 2006-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி நள்ளிரவு காலமானார். மணிவிழா, பவழவிழா, முத்துவிழா கண்ட உவமைக் கவிஞர் 85 ஆண்டுகள் தன் கவிதையின் வலிமையால், நல்ல நண்பர்களின் நட்பால் உயிர் வாழ்ந்தவர். தமிழ் உள்ளவரை வாழ்வார்.""உண்மையில் அவர் மறையவில்லை; உவமைகள் உள்ளவரையில் வாழ்வார்'' என்று எழுதிய கவிஞர் சுரதாவின் கவிதையும் அழியாது.

Saturday, September 04, 2010

மணிக்கொடியை உயர்த்திய பி.எஸ்.ராமையா


த்தலகுண்டு' தமிழ்நாட்டில் உள்ள சிறு கிராமம். அந்த மண்ணுக்குத் தனி மகிமை உண்டு. படைப்பிலக்கிய எழுத்தாளர்களால்தான் இலக்கியத்தில் அந்தப் பெயர் பதிக்கப்பட்டது.வத்தலகுண்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய ஐயர் - மீனாட்சியம்மாள்  தம்பதிக்கு கடைக்குட்டிமகனாக, 1905-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி பி.எஸ்.ராமையா பிறந்தார்.படிக்க வசதியில்லை. ஆனால், படிப்பில் ஆர்வம் கொண்ட ராமையா, வாரச் சாப்பாடு சாப்பிட்டும், உபகாரச் சம்பளம் பெற்றும் நான்காவது படிவம் வரையில் படித்தார். வேலை தேடி சென்னைக்குப் புறப்பட்டார். படித்த படிப்பு நாலாவது பாரத்துக்கு (ஒன்பதாம் வகுப்பு) மதிப்பு இருந்தாலும், அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. ஊருக்குத் திரும்பலாம் என்று நினைத்தபோது, திருச்சியில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை கிடைத்தது. ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. பிறகு கடலூரில் சிறு சிறு பணிகள் செய்தார். அதுவும் ஒத்துவரவில்லை.மீண்டும் சென்னைக்குத் திரும்பி பற்பல இடங்களில் பணியாற்றி, ஆர்யபவன் உணவுச்சாலையில் சர்வர் வேலையில் சேர்ந்தார். 18 வயது வாலிபரான ராமையா, செய்யாத தொழிலில்லை. பார்க்காத வேலையில்லை.முன்பே நெஞ்சில் கனலை வளர்த்துக்கொண்டிருந்த தேசிய இயக்கம், ராமையாவைச் சிலிர்த்து எழச் செய்தது. காந்தி தொடங்கிய உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டதால், கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்றார். அப்போதுதான் அவரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.சிறையில், வ.ரா., ஏ.என்.சிவராமன், சங்கு சுப்பிரமணியம் முதலியவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது. சிறைத் தண்டனை முடிந்தவுடன் கதர் விற்பனை நிலையத்தில் வேலை கிடைத்தது. கதர் ஆடைகளைத் தோளில் சுமந்தபடி விற்பனை செய்தார். மனதில் புதுத் தெம்பு ஏற்பட்டது.காந்திஜியின் நிர்மாணத் திட்டங்களில் ஈடுபாடு ஏற்பட்டது. தொண்டர் படை முகாமிலிருந்து தொண்டாற்றினார். ஓரணா விலையுள்ள சுதந்திர இயக்கப் புத்தகங்களை விற்பனை செய்தார். தூத்துக்குடி, ராஜபாளையம், திருநெல்வேலி, மதுரை, ஈரோடு முதலிய ஊர்களுக்குச் சென்று தொண்டர் படை முகாம்கள் அமைத்தார்.1932-இல் மீண்டும் சென்னைக்கு வந்த ராமையாவுக்கு அடுத்து என்ன செய்வதென்ற  குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் இயக்கத்து ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டார்.முன்பே ஜே.ஆர்.ரங்கராஜு நாவல்கள், ராஜம் ஐயர், கமலாம்பாள் சரித்திரம் முதலியவற்றைப் படித்திருந்ததால், படைப்பிலக்கிய ஆர்வமும் சேர்ந்திருந்தது."ஆனந்த விகடன்' சிறுகதைப் போட்டி அறிவிப்பைப் பார்த்தார். அதற்குக் கதை எழுதத் தூண்டியவர் சங்கு சுப்பிரமணியம்தான். அவர் தீவிர தேசிய இயக்கக் கொள்கை உடையவர். பாரதி பக்தர். ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டிக்குக் கதை அனுப்பினார் ராமையா. முதலிடம் பெற்ற கதைக்கு நூறு ரூபாய் பரிசு கிடைத்தது. ராமையா எழுதிய "மலரும் மணமும்' கதைக்கு ஆனந்த விகடனின் ஊக்கப்பரிசாக பத்து ரூபாய் சன்மானம் கிடைத்தது.கதையை அனுப்பிய அவசரத்தில் எழுதியவர் பெயரை எழுத மறந்துவிட்டார் ராமையா. கதையை வெளியிட்டு, எழுதியவர் பெயரைத் தெரிவிக்கவும் என்று பத்திரிகையில் எழுதிய பிறகே, எழுதியது தான்தான் என்று தெரிவித்து அந்தப் பத்து ரூபாயைப் பெற்றார்.அதன்பிறகு, பத்திரிகை உலகப் பணி அவரைக் கவர்ந்தது. "ஜயபாரதி' இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். எழுத்தாளர்களின் லட்சியத்தை வெளியிடும் ஜயபாரதி, சுதந்திரச் சங்கு, காந்தி ஆகிய இதழ்களைப் பற்றி இந்தத் தலைமுறையினர் அவசியம் அறிந்து கொள்ளவேண்டும். 1933-ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டதுதான் மணிக்கொடி. ஸ்டாலின் சீனிவாசனின் ஆர்வமும், லட்சியமும்தான் மணிக்கொடி பிறக்கக் காரணம். "மணிக்கொடி' இதழ் பி.எஸ்.ராமையாவை மிகவும் கவர்ந்தது. "மணிக்கொடி'க்குத் தொடர்ந்து எழுதினார். மணிக்கொடிக்கு விளம்பரம் சேகரித்துக் கொடுக்கும் பணியிலும் இறங்கினார்.""மணிக்கொடி காலத்துக்குப் பின் தமிழ்நடையில் படிப்பவர், கேட்பவர் உள்ளங்களில் கனல் மூட்டும் விசையும் வேகமும் திராவிட முன்னேற்றக் கழக எழுத்தாளர் சிலரிடம் இருக்கின்றன. இந்த வகையில், அறிஞர் அண்ணாதுரை மற்றவர்களுக்கு ஒருபடி மேலே நிற்கிறார். ப.ஜீவானந்தத்துக்கு எழுத்திலும் பேச்சிலும் விசையும் வேகமும் கொண்ட தமிழ்நடை கூடியிருக்கிறது; கனல் இருக்கிறது'' என்ற தம் தூய கணிப்பை தாம் எழுதிய "மணிக்கொடி காலம்' என்ற தொடரில் எழுதி, தமிழுக்குப் பெரும் தொண்டு செய்திருக்கிறார் பி.எஸ்.ராமையா. "மலரும் மணமும்' வெளிவந்தபோது அவருக்குச் சிறுகதை எழுதும் நுணுக்கங்கள் தெரியாது. "மலரும் மணமும்' பிரசுரமான பிறகு அவருக்குப் புதிய உற்சாகம் ஏற்பட்டது. "மணிக்கொடி'யின் வளர்ச்சியில் நகமும் சதையுமாக இருந்த ராமையா, பல சிறுகதைகள் எழுதிக் குவித்தார்.ராஜாஜியிடமிருந்து கட்டுரை வாங்கி "மணிக்கொடி'யில் வெளியிட்டார் ராமையா. பலருக்கு அதில் அதிருப்தி. "கல்கி'யைத் தவிர வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதாத ராஜாஜி, "மணிக்கொடி'யில் தொடர்ந்து எழுதுவதாக வாக்களித்தார். ஆனால், அதை வெளியிடும் பேறு "மணிக்கொடி'க்கு இல்லை.சிறுகதை இலக்கியத்தைப் பற்றி பி.எஸ்.ராமையா அழுத்தமான கொள்கை உடையவர். "இலக்கியம் என்ற ஆலமரத்தின் ஒரு கிளையாக சிறுகதையைச் சொல்லலாம்' என்றார்.சி.சு.செல்லப்பா, பி.எஸ்.ராமையாவின் பண்பு, எழுத்து, வாழ்க்கை மூன்றையும் அறிந்தவர். தன் புதினம் வெளிவருவதற்கு முன்பே தன் சொந்தச் செலவில், "ராமையாவின் சிறுகதைப் பாணி' என்ற நூலை வெளியிட்டார். சிறுகதை இலக்கியத்தைப் பெரிதும் விரும்புபவர்கள் அந்த நூலைக் கட்டாயம் படிக்க வேண்டும். ராமையாவின் வாழ்க்கைச் சரிதத்தை விவரமாக அறிய, சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற "மணிக்கொடி காலம்' என்ற நூலைப் படிக்க வேண்டும்.அவர் வளர்த்த, தியாகம் செய்த, சிறிது காலத்துக்குக் (மணி) கொடியைத் தாங்கிப்பிடித்த "மணிக்கொடி' என்று வாசகர்களும் எழுத்தாளர்களும் விமர்சகர்களும் மார்தட்டிக் கொள்பவர்களும் பேசும்படியாகச் செய்த "மணிக்கொடி'யிலிருந்து அவர் நீக்கப்பட்டார். பின்னர், ராமையா தன் புது வாழ்க்கையை முடிவு செய்துவிட்டார். திரைப்படத் துறையில் கவனம் செலுத்தினார்; நாடகம் எழுதினார்; திரைப்படத் தயாரிப்புக்கு உதவினார். ஆனால், அவர் வாழ்க்கையை நடத்தியது, சிறுகதைக் கலைக்குத் தொண்டு செய்வதன் மூலமாக ஆனந்த விகடன், தினமணி கதிர் (முதல் ஜன்மம்), குமுதம் பத்திரிகைகளில் வாராவாரம் கதைகள் எழுதி, சன்மானத் தொகையைப் பெற்றார். சி.சு.செல்லப்பாவின் பட்டியல்படி அவர் 304 சிறுகதைகள், மூன்று நாவல்கள், ஆறு நாடகங்கள் எழுதியுள்ளார்.1957-இல் "பிரசிடென்ட் பஞ்சாட்சரம்' என்ற நாடகம் எழுதியுள்ளார். அந்த நாடகம், திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு பெரும் வெற்றிகண்டது. "போலீஸ்காரன் மகள்' என்ற நாடகம், மேடையில் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்த நாடகமும் திரைப்படமாக எடுக்கப்பட்டது.பி.எஸ். ராமையா, வெற்றிலை, சீவலுடன் புகையிலை போடும் பழக்கத்தால், அவரது தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டது.பி.எஸ்.ராமையா, 1983-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி (78வது வயதில்) காலமானார் என்ற செய்தியைக் கேட்டு எழுத்துலகமும், வாசகர் உலகமும் கண்ணீர் விட்டது.சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டதையும் மணிக்கொடிக்காக அவர் செய்த தியாகத்தையும் எழுத்தில் அடக்கிவிட முடியாது.
தத்துவ மேதை டி.கே.சீனிவாசன்


1951-52-ஆம் ஆண்டுகளில் தமிழ் இலக்கிய உலகில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. பாரத நாட்டில் விடுதலைக்காக அந்நியரை எதிர்த்துப் போராடும் இயக்கங்களின் லட்சியம் ஒன்றானாலும், பல்வேறு பாதைகளில் அவை இயங்கிக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அந்நியர் ஆதிக்க எதிர்ப்பைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் - நம்மிடையே உள்ள பிற்போக்குக் கொள்கைகளை, மூடப் பழக்க வழக்கங்களை, சாதி ஏற்றத் தாழ்வுகளை, வர்ணாசிரமக் கொள்கையை ஒழிக்கப் போராடுவது முதல் கடமை என்று வீறு கொண்டெழுந்து அதற்காகப் புது இயக்கத்தைத் தொடங்கினர்.மேடைப்பேச்சு மட்டும் போதாது; படித்த வகுப்பாரிடையே - சிந்திக்கும் சக்தி உடையவரிடையே திராவிடக் கழகத்தின் கொள்கையைப் பரப்ப, பத்திரிகைகள் வேண்டும்; பத்திரிகைகளில் எழுதப் பல படைப்பிலக்கிய எழுத்தாளர்கள் தோன்ற வேண்டும் என்ற அறிஞர் அண்ணாவின் திட்டப்படி பல கொள்கை ஏடுகள் தோன்றின. அவை பல எழுத்தாளர்களை உருவாக்கின.அறிஞர் அண்ணாவின் பேச்சால், எழுத்தால் ஈர்க்கப்பட்டு சிறந்த பேச்சாற்றலால் மேடையில் கனல் கக்கிய இளைஞர்களுள் டி.கே.சீனிவாசனும் ஒருவர்.1952-ஆம் ஆண்டு வழக்கமான எழுத்தாளர்களுக்கு ஒரு சவால்போல் "பஞ்சும் பருத்தியும்' எழுதிய தொ.மு.சி.ரகுநாதனும் "ஆடும் மாடும்' எழுதிய தி.கோ.சீனிவாசனும் புத்திலக்கியத்தால் பிரபலமானவர்கள்.தி.கோ.சீனிவாசன், திருச்சியில், 1922-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் கோதண்டபாணி. தாயார் பெயர் ஆனந்தவல்லி. ஊர்ப்பெயரின் முதல் எழுத்தையும், தந்தை பெயரின் முதல் எழுத்தையும் இணைத்து தி.கோ.சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார். ஆனால், தி.கோ.சீனிவாசன் என்பதைவிட டி.கே.சீனிவாசன் என்று சொன்னால்தான் பலருக்குப் புரியும்.டி.கே.சீனிவாசன் என்ற பெயரைக் குறிப்பிட்டவுடனே, ""ஓ! ஆடும் மாடும் எழுதிப் புகழ் பெற்றவரா?'' என்று மாற்றுக் கொள்கை உடையவர்களும் பெருமையுடன் கேட்கும் அளவுக்கு எழுத்தால் புகழ்பெற்றவர் அவர். தொடக்கக் கல்வியைத் திருச்சி மற்றும் பசுமலையிலும் கற்ற அவர், ராமநாதபுரத்தில் பள்ளி இறுதிப் படிப்பைத் தொடர்ந்தார். அதை முடிக்கும் முன்பே 1941-இல் அவருக்கு ரயில்வே துறையில் வேலை கிடைத்தது. 17 ஆண்டுகள் ரயில்வே பணியில் தொடர்ந்தார். இளைஞராக இருந்தபோதே எழுத்துப் பணியில் ஈடுபாடும், அரசியலில் ஆர்வமும் ஏற்பட்டன. தன் வயதொத்த இளைஞர்களை ஒன்றுசேர்த்து படிப்பகம், கழகங்கள் அமைத்தார். புதிய கட்சி தொடங்க வேண்டும் என்ற ஆர்வமும் எழுந்தது. ரயில்வே துறையில் எழுத்தாளராக இருந்த அவருக்கு அந்தப் பணி நிறைவைத் தரவில்லை. எழுத்தரைவிட எழுத்தாளராக இருப்பதே அவர் விருப்பம்.1944-இல் சரசுவதி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அவரது பெயரால்தான் புத்தகங்கள் வெளிவந்தன. தத்துவமேதை டி.கே.சீனிவாசன் என்றே நூலில் பெயர் அச்சிடப்பட்டிருக்கும்.ரயில்வே பணியில் ஈடுபட்டிருந்தபோதே, நீதிக்கட்சி, சுய மரியாதை இயக்கம், திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று அவர் அந்த நாளிலேயே சீர்திருத்த மனப்பான்மையில் பேசியும் எழுதியும் வந்தார். வாழ்க்கை அவருக்குப் போராட்டமானதால் அரசியல் இயக்கமா, ரயில்வே பணியா என்ற மனப் போராட்டம் ஏற்பட்டபோது முழுநேர அரசியல் அவரை ஆட்கொண்டது. ஆனால், குடும்ப வாழ்க்கையையும் நடத்த வேண்டுமே! எனவே, ரயில்வே பணியைத் துறந்தார். எழுத்தை நம்பி, தன் பேச்சுத் திறமையை நம்பி சென்னைக்குக் குடியேறினார்.1.11.1951-இல் "ஞாயிறு' என்ற இதழில் அவரது சிறுகதை "பதிவு செய்யப்படாதவள்' வெளிவந்தது. பிறகு, தஞ்சையிலிருந்து ஏ.கே.வேலன் நடத்தி வந்த "ஞாயிறு' என்ற இதழின் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.அவருடைய சிறுகதைகளின் முக்கிய கருவே விதவை மறுமணம். விதவைக்கு மறுவாழ்வு என்ற கொள்கையை அவர் பல கதைகளில் வற்புறுத்தியிருக்கிறார். பலத்த எதிர்ப்பு அந்தக் கதைகளுக்கு இருந்தது. மிகத் துணிவுடன் கதையின் கருவை மிக அழுத்தமாக வெளியிட்ட கொள்கை வீரர் அவர். "மஞ்சளோடு மங்களமும் மறைய வேண்டும்' என்று விதண்டாவாதம் பேசிய பழைமைவாதிகளுக்குப் பதில் கூறுவதுபோல், "மலரும் பூவின் மணத்தைத் தடுக்க எந்த வேலியும் பயன்படாது' என்று எழுதினார்.""கண்டதும் தோன்றுவதற்குப் பெயர் காதலன்று; உடற்கவர்ச்சி. யாராவது ஒருவருடைய ஏதாவது சில நடவடிக்கைகள் நமக்குப் பிடித்துப் போகின்றன. அப்போது பிறக்கிறது அன்பு. அதே நடவடிக்கைகள் தொடர்ந்து நம் வாழ்க்கையில் குறுக்கிடும்போது நட்பு உருவாகிறது. அந்த நடவடிக்கைக்குரியவரைச் சந்திக்காவிட்டால் என்னவோபோலத் தோன்றும் போதுதான், அது காதல் என்ற பெயரை அடைகிறது'' என்று காதல் தத்துவத்தை டி.கே.சீனிவாசனைப்போல் எளிமையாக விளக்கியவர் யாருமில்லை.1960-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தது முதல் கழகத்தில் செயற்குழு உறுப்பினராக இருந்தார். தி.மு.க. நடத்திய போராட்டங்களில் அவர் பங்கு குறிப்பிடத்தக்கது. தொழிலாளர் உரிமைக்காகப் பல போராட்டங்கள் நடத்தினார். திராவிட முன்னேற்றக் கழகம் அகவிலை உயர்வை எதிர்த்து நடத்திய போராட்டத்துக்குத் தலைமை வகித்தார். மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் பெற்றார்.பேச்சுக் கலையில் வல்லவரான அவர், பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார்.திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. இரண்டாவது மாநில மாநாட்டில், "தத்துவ வரலாறு' என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலைநாட்டுத் தத்துவங்களைக் கீழை நாட்டுத் தத்துவங்களோடு ஒப்பிட்டுப் பேசினார். அதுமுதல் அவரை "தத்துவ மேதை' என்றே அழைத்தனர்.அறிஞர் அண்ணாவின் மீது பெருமதிப்பு உடையவர். அண்ணாவின் பேச்சையும் கருத்துகளைக் கூறும் திறனையும் கணித்தறிந்து அவரைப்போலவே பேசும் திறன் பெற்றவர். தொலைவிலிருந்து அவரது பேச்சைக் கேட்போர் அண்ணாதான் பேசுகிறாரோ என்று ஐயப்படும் அளவுக்கு அவரது பேச்சிலும் ஒற்றுமை இருந்தது. ஒரு முறை இவரது பேச்சை வீட்டிலிருந்தபடி கேட்ட அண்ணாவின் துணைவியாரே அண்ணாதான் பேசுகிறாரோ என்று நம்பும்படியானதாம்.கொள்கை விளக்க மேடைப் பேச்சுகள் மூலமாக மட்டுமல்லாமல் இவரது இலக்கியப் படைப்புகள், கழகத்தின் பிற்காலப் படைப்பாளிகளுக்கு மிக உதவியாக இருந்தன. டி.கே.சி.யின் புதினம், சிறுகதை, கட்டுரைகள் மிக்க பலமாக அமைந்தன. திராவிட இயக்கத்துக்கென்று தனி படைப்புக்கலை உருவானது. திராவிட இயக்கக் கொள்கைகளை, சிந்தனைகளை, சமூக மறுமலர்ச்சியை, தன்மான உணர்வை வளர்த்தன. அதற்குக் கதைகள், புதினங்கள் உதவின. சிறுகதை இலக்கியத்தின் மூலம் சீர்திருத்தக் கொள்கைகளை விளக்கலாம் என்று உறுதியாக நம்பி கதைகள், நாடகங்கள் எழுதிவந்த அறிஞர் அண்ணாவின் சமகாலத்தவர்கள் வரிசையில் டி.கே.சீனிவாசனின் எழுத்துப் பணியை மறக்க முடியாது. முழுக்க முழுக்க கொள்கைப் பிடிப்பாளரான அவர், எக்காலத்திலும் எதற்காகவும் முற்போக்குக் கொள்கைகளை விட்டுக் கொடுத்தாரில்லை. திராவிட இயக்கப் புதினப் படைப்பாளிகளாலும் மற்ற விமர்சனம் செய்பவர்களாலும் தத்துவ மேதை டி.கே.சீனிவாசனின் "ஆடும் மாடும்' புதினம் இன்றும் பேசப்படுகிறது. "ஆடும் மாடும்' அவருக்குப் பெருமை சேர்த்த நாவல். அவருடைய முதல் நாவல். "கதைக்காக ஒருமுறை - கருத்துக்காக ஒருமுறை - நடைக்காக ஒருமுறை என்று படித்து ரசிக்கக்கூடிய புதினம்'  என்று விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. தத்துவ மேதை தன் கதைகளிலும், புதினங்களிலும் பாரதிதாசனாரையும் திருவள்ளுவரையும் வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் சாட்சியாக நிற்க வைக்கத் தவறியதில்லை.தன் பேனா நர்த்தனத்தைப் பல பத்திரிகைகளில் பணியாற்றி புலப்படுத்தியதோடு "தாய்நாடு' என்ற இதழையும் சில காலம் வெளியிட்டார். இழப்பு நேர்ந்ததால் அந்தப் பத்திரிகையை நிறுத்திவிட்டார்.பாடநூல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும், தமிழகத் திட்டக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.தத்துவ மேதை டி.கே.சீனிவாசன், 1989-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி இயற்கை எய்தினார். திருச்சி கோதண்டபாணி சீனிவாசனின் இரு புதல்வர்களான நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவனும், பேராசிரியர் வில்லாளனும் தந்தையின் புகழும் பெயரும் நிலைத்து நிற்கச் செய்கிறார்கள்.
கருத்துக்கள்

தத்துவமேதை தி.கோ.சீனிவாசன் அவர்களைப் பற்றி நன்றாக நினைவு கூர்ந்துள்ளார் கலைமாமணிவிக்கிரமன் அவர்கள்.அரசுப் பொறுப்புகளில் இருந்த போதும் நேர்மையும் துணிவும் மிக்கவராகச் செயல்பட்டவர்; அவரது தோற்றமும் எழுத்தும் அவரை இளைய அண்ணாவாகப் பலரால் கருதவைக்கப்பட்டன. அரசு நினைவுகூர வேண்டிய ஒருவரைப் படிப்போருக்கு நினைவுபடுத்திய கலைமாமணி விக்கிரமனுக்கும் தினமணிக்கும் பாராட்டுகள். தத்துவ மேதையின் நாடாளுமன்றப் பணிச் சிறப்பையும் குறிப்பிட்டிருக்கலாம். தந்தை வழியில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் திரு இளங்கோவன், கல்வித்துறையில் செயலாற்றும் பேராசிரியர் வில்லாளன் ஆகியோர் தத்துவ மேதையின் புகழைச்சிறக்கச் செய்வார்களாக! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/5/2010 5:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

Tuesday, August 17, 2010

தேசத்தின் சொத்து ஜீவா கலைமாமணி

வீரத்துறவி விவேகானந்தருக்குப் பிறகு இளைய சமுதாயத்தை வசீகரித்தவர் ஜீவா என்று அழைக்கப்படும் ப.ஜீவானந்தம். நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி, பட்டப்பிள்ளை-உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து. ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து. அவர்கள் குல தெய்வம் அது.வெள்ளையரை எதிர்த்துப் போராடிய காலம். திராவிடர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இளம் வயதினராய் இருந்த அவரது உள்ளத்தில் எரிமலையாய் புகையச்செய்தது. இளம் வயதில் அவரைக் கவர்ந்தது மகாத்மாவின் கொள்கைகள். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப, நேர்மை தவறாத ஒழுக்க குணம், தனக்குச் சரியெனப் படாததை எதிர்க்கும் போர்க்குணம், அஞ்சா நெஞ்சம், அறிவு, ஆற்றல் போன்றவற்றை இளம் வயதிலேயே வாய்க்கப் பெற்றார்.அந்த நாளில் நாடகம் நடத்திவந்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாúஸôடு, ஜீவா நெருங்கிப் பழகினார். சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார். நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது படிக்கும்போதே முதல் கவிதையை எழுதினார். அந்தக் கவிதை காந்திஜியையும், கதரையும் பற்றியது.பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது "சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்' என்ற நாவலை எழுதினார். ஞானபாஸ்கரன் என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றினார். அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார்.காந்திய வெளியீடுகளைப் படித்தார். காந்திஜியிடமிருந்து ஒத்துழையாமை இயக்க அழைப்பு வந்தது. காந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிராசாரக் கூட்டம் நடைபெற்றது. அவருடைய பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது. அன்னியத் துணிகளைத் தீயிட்டுக் கொளுத்தி, வெறும் கோவணத்துடன் வீடு திரும்பினார். அது முதல் அவர் கதர் அணியத் தொடங்கினார். பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலம் அது. வாலிபர் உலகம் கொந்தளித்து எழுந்தது. வன்முறையில் நம்பிக்கையற்றவராயிருப்பினும் பகத்சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை அவரால் ஏற்க முடியவில்லை. ஜீவா சீறி எழுந்தார். அனல் கக்கும் அவர் பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது. சிறையிலிருந்து பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்?' என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா. ஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். அதற்காக ஜீவாவைக் கைதுசெய்து, கை-கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க சோஷலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார். பொதுத் தொண்டில் சிறு வயதிலிருந்தே நாட்டம் கொண்ட ஜீவாவுக்கு, தீண்டாமை ஒழிப்பைப் பற்றியே எப்போதும் சிந்தனை. ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகன் போக்கிற்கு தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் தந்தை மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதற்கு ஜீவா ஒப்புதல் தரவில்லை. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க ஜீவா இசையவில்லை. இறுதியில் அவர் குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 17.ஜாதி வித்தியாசம் பாராமல் ஆசிரமம் நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியுடன் நிதி சேர்க்கப்பட்ட வ.வே.சு.ஐயரால் சேரன்மாதேவியில் நடத்தப்பட்ட தேசிய குருகுலத்தில் ஜாதி பாகுபாடு காட்டப்பட்டது என்ற புகார் எழுந்து வ.வே.சு.ஐயரைக் கண்டித்து கிளர்ச்சி நடத்தது. இதை அறிந்த ஜீவா மற்றும் பெரியார் போன்றோர் கடுமையாக எதிர்த்தனர்.வ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர் பணி ஏற்றிருந்தார். தீண்டாமையை ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த ஜீவா, ஐயரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்கவில்லை. அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார். அந்த ஆசிரமத்தையும் அதன் செயல்பாடுகளையும் வ.உ.சி. போன்றவர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர்.ஆசிரமம் அமைக்கும் முன்பே ஜீவாவுக்குத் தனித் தமிழிடம் அதிகப் பற்று ஏற்பட்டது. தூய தமிழில் பெயரிட வேண்டும் என்ற ஆவலில் தனது பெயரை "உயிர் இன்பன்' என்று மாற்றிக்கொண்டார். ஜீவாவின் ஆசிரமத்துக்கு வந்த வ.ரா., ஆசிரமக் கொள்கையையும் நடைமுறையையும் பாராட்டினார். ஜீவாவின் சொற்பொழிவுகளைக் கேட்டு அவர் மீது பெரும் மதிப்பு கொண்ட வ.ரா., ஜீவாவுக்கு ஆலோசனை கூறினார்: ""உங்களை நான் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் நன்மையையும் வளர்ச்சியையும் கருதியாவது தனித் தமிழில் பேசுவதை விட்டுவிடுங்கள். நீங்கள் என்னதான் அபூர்வமாகப் பேசிய போதிலும் உங்களுடைய தனித் தமிழைப் பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியுமா?'' என்ற வ.ரா.வின் அறிவுரையை சிந்தித்த ஜீவாவுக்கு தனித்தமிழில் உள்ள வெறி நீங்கியது.  "உயிர் இன்பன்' என்று மாற்றிக்கொண்ட தனது பெயரை, மீண்டும் ஜீவானந்தமாக மாற்றினார். இறுதிவரை ப.ஜீவானந்தம் - ஜீவா என்றே அழைக்கப்பட்டார்.ஜீவா நடத்திய காந்தி ஆசிரமத்துக்கு ஜீவா அழைப்பின்பேரில் மகாத்மா காந்தி விஜயம் செய்தார். ஜீவானந்தத்தின் இளமைத் தோற்றமும், வாதத் திறமையும் காந்தியை வியக்கவைத்தன. ஆசிரமப் பணிகளையும் சேவையையும் பாராட்டிய காந்தி, ஜீவாவைப் பார்த்து,""உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது?'' என்றார்.""இந்த தேசம்தான் எனக்குச் சொத்து'' என்று ஜீவா பதிலளித்தார்.ஜீவாவின் பதிலைக் கேட்டு காந்திஜி திகைத்தார். பிறகு ""இல்லையில்லை, நீங்கள்தான் இந்த தேசத்தின் சொத்து'' என்றார்.கம்பனிலும் பாரதியிலும் அவர் கண்ட புரட்சிக்கொள்கை, அவரை இலக்கியங்களில் ஈடுபாடு கொள்ளச் செய்தது.கடலூர் சட்டமன்றத் தொகுதி ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948-ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர். அவ்வப்போது போராட்டங்களில் கலந்து கொண்டு ஜீவா பலமுறை சிறை சென்றுவிடுவார். கட்சி, கொள்கை, போராட்டம், சிறைவாசம் என்று வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்த அவர், குடும்பம் ஒன்று உண்டு என்பதை மறந்துவிடவில்லை.கொள்கையைப் பரப்ப "ஜனசக்தி' நாளிதழைத் தொடங்கிய ஜீவா, "தாமரை' என்ற இலக்கிய இதழை 1959-இல் தொடங்கினார். அதில், "தமிழ் மணம் பரப்ப' என்று பாராட்டி கவிதைகள் எழுதினார், பொதுவுடைமைக் கொள்கைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.1933-இல் ஜீவா எழுதிய "பெண்ணுரிமை கீதாஞ்சலி' என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுதான் ஜீவா எழுதிய முதல் நூல். அப்போதிலிருந்து இந்த நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஜீவா எழுதிய பாடல்கள், தொழிலாளர்களை எழுச்சி பெறச்செய்தன.கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பதவி வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கடும் பிரசாரம் செய்தார். சீன சோஷலிச அரசு இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஜீவா முக்கிய பங்கேற்றார்.1963}ஆம் ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி அந்த மாவீரன் மரணமடைந்தார். மரணமா? அவருக்கு மரணமேது? நாட்டில் சமத்துவம் நிலவும் வரை, தீண்டாமை ஒழியும் வரை, ஒற்றுமையான குடியரசு அமையும் வரை அவர் ஜீவனுக்கு அழிவேது? மகாத்மா காந்தி கூறியதுபோல் அவர் இந்தியாவின் சொத்து.
"நாடகக்கலைப் பிதாமகர்' பம்மல் சம்பந்த முதலியார்


தமிழுக்குப் பெருமை தருவது நாடகக்கலை. முத்தமிழில் நாடகம் இயலையும், இசையையும் தன்னகத்தே கொண்டது. நாடகத்தின் வெற்றிக்குக் காரணம், நல்ல கதை, கதைப் பாத்திரங்களுக்கேற்ற நடிப்பு, உணர்ச்சியைத் தக்க சமயத்தில் வெளிப்படுத்தும் ஆற்றல்.நாடகக்கலையின் அறிவுபூர்வமான வளர்ச்சியே திரைப்படம். மேடையில் வெற்றிபெற்ற நாடகங்களின் உரிமையை விலைக்கு வாங்கித் திரைப்படமாகத் தயாரித்தனர். ஆனால், மேடையில் நடிக்கப்பட்ட நாடகங்கள் சிற்சில தவிர, மற்றவை சிறப்பாகப் பாடக்கூடியவர்களால் வெற்றியடைந்தன. பெண் பாத்திரங்களை ஆண்களே ஏற்கும் நிலை இருந்தது. பெரும்பாலும் புராணப் படங்களே மேடையில் நடிக்கப்பட்டன.சங்கரதாஸ் சுவாமிகளும், பம்மல் சம்பந்த முதலியாரும் நாடகத் துறையில் காலடி எடுத்து வைத்தபிறகே நாடகத்துக்கு மதிப்பு ஏற்பட்டது.சென்னையில் பம்மல் என்ற கிராமத்தில் 1873-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் விஜயரங்க முதலியார். தாயார் பெயர் மாணிக்கவேலு அம்மாள்."நாடக உலகப் பிதாமகர்' என்று அழைக்கப்பட்டு நடிகர்களால், நாடகத் தயாரிப்பாளர்களால் போற்றப்பட்ட சம்பந்த முதலியார், பிறந்த சிற்றூரான பம்மலுக்குப் பெருமையும் புகழும் சேர்த்தவர்.  சென்னை, மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். சட்டம் படித்து வழக்குரைஞரானார்.தந்தை, சிறுவயதில் பயிற்றுவித்த ஒழுக்கம், கட்டுப்பாடு, சத்தியம் தவறாமை இவற்றை என்றும் விடாது கடைப்பிடித்தார். அதனால், அவர் 1924-ஆம் ஆண்டு சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியானார்.வழக்குரைஞராக, நீதிபதியாக புகழ் பெறுவதற்கு முன்பாகவே அவர் நாடகத்துறையில் பேரும் புகழும் பெறவேண்டியிருக்கும் என்று அவரோ, வீட்டில் உள்ளவர்களோ நினைத்துப் பார்த்தது கிடையாது. 1891-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அவர் வாழ்க்கையில் முக்கியமான நாள். அவர் தமிழ் நாடகங்கள் எழுதுவதற்கும் நடிப்பதற்கும் உந்து சக்தியாக இருந்த "சுகுண விலாஸ சபை' அன்றுதான் நிறுவப்பட்டது.பல்லாரி கிருஷ்ணமாச்சாரி என்பவர் ஆந்திர மாநிலம் பல்லாரி என்ற ஊரிலிருந்து சென்னைக்கு வந்து, விக்டோரியா நினைவு மண்டபத்தில் (மெமோரியல் ஹால்) தெலுங்கு மொழியில் நான்கைந்து நாடகங்கள் நடத்தினார். அவை இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தன. இதனால், நாடக சபை ஒன்றைச் சென்னையில் நிறுவ வேண்டும் என்று சில இளைஞர்கள் விரும்பினார்கள். அதுபோன்ற எண்ணம் கொண்டவருள் சம்பந்த முதலியாரும் ஒருவர்.அவர் எண்ணத்தை ஊக்குவிக்க, அவரின் இளம் வயது நண்பர் வெங்கட கிருஷ்ணநாயுடு என்பவர், (சிறுவயதிலிருந்தே நாடகம் பார்ப்பதில் ஈடுபாடு கொள்ளாத சம்பந்தனாருக்கு, பல்லாரி நாடகமே காரணம் என்பதை அறிந்தார்) சம்பந்தனாரின் ஆவலுக்குத் தூண்டுகோலாக இருந்தார். அவர்கள் எண்ணம் நிறைவேறத் தொடங்கப்பட்டதுதான் "சுகுண விலாஸ சபை'. அச்சமயம் சம்பந்தனார், "சகுந்தலா' என்ற நாடகத்தைத் தமிழாக்கம் செய்துகொண்டிருந்தார். அந்த நாடகத்தைத் தயாரித்து, சுகுண விலாஸ சபையில் அரங்கேற்ற அன்பர்கள் ஆதரவு தந்தார்கள். அப்போது, அவருக்கு வயது பதினெட்டு. பி.ஏ. தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தார்.அங்கத்தினர்கள் ஒத்துழைப்போடு சுகுண விலாஸ சபை சிறப்பாக வளர்ந்தது. சம்பந்தனாரின் நாடகக் கனவு நிறைவேறி வந்தது. நாடகத்தில் நடிப்பவர்களின் தரம் குறைந்திருந்த காலத்தில் சம்பந்தனாரின் நாடகங்கள் கண்ணியமானவை என்ற பெயர் பெற்றது. பாடல்கள் நிறைந்தனவாகவும், உரையாடல்கள் பெரும்பாலும் செய்யுள் நடையிலும் இருந்தன. சமூகத்துக்கு நீதி புகட்டும் கதையைத் தேர்ந்தெடுத்தே நாடக வடிவமாக்கினார் சம்பந்தனார். அதை, சமூகத்தில் உயர் தட்டில் உள்ளவர்கள், அறிஞர்கள், புலவர்கள் பாராட்டி வாழ்த்துக் கடிதங்கள் எழுதினார்கள்.மனோன்மணீயம் நாடகம் எழுதிய சுந்தரம்பிள்ளை, சி.வை.தாமோதரம் பிள்ளை, அஷ்டாவதானம் பூவை.கலியாணசுந்தரம் பிள்ளை முதலிய அறிஞர்கள் சம்பந்தனாரின் நாடகத்தைப் பார்த்துப் பெரிதும் பாராட்டினார்கள். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் "சாற்றுக் கவிதை' எழுதி அனுப்பினார்.  சம்பந்தனாரைவிட பரிதிமாற் கலைஞர் வயதில் இளையவர் என்றாலும், அவர் நாடகம் நடத்தும் முறை, உரையாடல்கள் போன்றவற்றைப் பாராட்டினார்.நாடகம் வெற்றியடைய ஒவ்வோர் நிலையிலும், சம்பந்தனார் மிகவும் கவனம் செலுத்தினார். நாடகத்தில் தந்திரக் காட்சிகள் அமைத்து, நாடகம் பார்க்க வருவோரின் கரவொலியையும் பாராட்டுதலையும் பெற்றதனால் சம்பந்தனாரின் புகழ் பரவியது. கதைக்கேற்ற பாத்திரங்களைத் தேடி அவர்களுக்குச் சிறப்பாக ஒத்திகை செய்வித்த பிறகே மேடை ஏற்றுவார்.அவரது முதல் நாடகம் "புஷ்பவல்லி'. அவர் எழுதிய நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவையாக இருந்தாலும், மிகவும் புகழ்பெற்ற நாடகம் "மனோகரா'.மனோகரா நாடகத்தை எழுதத் தொடங்கியபோது அவரது தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு ஏதாவது நேர்வதற்குள் நாடகத்தை எழுதி அரங்கேற்றிவிட வேண்டும் என்று தீவிர முயற்சியில் இருந்தார். ஆனால், முதல் காட்சி எழுதியவுடனேயே தந்தை உயிர் நீத்தார். மறுநாளே சம்பந்தனார் நாடகத்தின் இரண்டாவது காட்சியை எழுதுவதில் முனைந்தார். இதுபோலத்தான் தன் தாயும், மனைவியும் இறந்தபோதும் செய்தார்.""என் துக்கத்தை மறக்க, நாடகம்தான் சிறந்த மருந்து'' எனக் கூறி, தான் எழுதிய காட்சிகளை வழக்கம்போல் நண்பர்களுக்குப் படித்துக் காட்டத் தொடங்கிவிடுவாராம். நாடகம் அவருடைய லட்சியமாக - உயிராக விளங்கியது.மனோகராவின் நாடகக் காட்சி ஒவ்வொன்றையும் அவர் மிகக் கவனத்துடன் அமைத்தார். கதை அவருடைய சொந்தக் கற்பனை. நாடக ஆசிரியர் சம்பந்த முதலியார், தன் "நாடக நினைவுகள்' வரலாற்றில் குறிப்பிட்டதை அவர் எழுத்திலேயே தருவதில் தான் சிறப்பு இருக்கிறது.""என் நண்பர் ஜெயராம நாயகருடைய வீட்டில் முழு ஒத்திகை நடைபெற்றது. அதில் முக்கியமாக எனக்கு ஞாபகம் இருக்கும் விஷயம் என்னவென்றால், இந்த நாடகத்தில் தற்காலத்தில் "இரும்புச் சங்கிலிக் காட்சி' என்று வழங்கிவரும் முக்கியக் காட்சியில் என் முழு தேக வலியுடன் மிகுந்த உரத்த சப்தத்துடன் "ஆக்ட்டு' செய்ததனால், அக்காட்சியின் முடிவில் சற்றேறக்குறைய வாஸ்தவத்திலேயே மூர்ச்சையானேன். அவ்வளவு நாள் தேக சிரமப்பட்டது அனாவசியம் என்றே இப்பொழுது யோசிக்கும்போது தோன்றுகிறது'' (நாடக மேடை நினைவுகள் - நூலை வெளியிட்ட ஆண்டு 1932).மனோகரா நாடகம் சுகுண விலாஸ சபையாரால் 1895-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் நாள் விக்டோரியா நினைவு அரங்கில் நடைபெற்றது. நாடகத்தைக் கண்டு களித்த பெருமக்கள் மிகவும் பாராட்டினர். அந்தப் பாராட்டுதலும் வரவேற்பும் திரைப்படமாக ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்தபோதும் ஏற்பட்டன. இந்த நாடகம் பல நாடகச் சங்கங்களால் நடிக்கப்பட்டது.சம்பந்தனார் எழுதிய  நாடகங்கள் மொத்தம் 94. அவைகளில் வெற்றிகரமாகத் திரையேறிய நாடகம் சபாபதி. பம்மல் சம்பந்த முதலியார் வாழ்ந்த காலத்தில் நாடகத் தொழிலுக்கு மரியாதை குறைவு.நடிப்பவர்களை கூத்தாடிகள் என்றே அழைப்பார்கள். நாடகங்களில் பாடல்கள் அதிகம். நாடகத்துக்குச் சென்றுவந்தால் இசைக் கச்சேரிக்குச் சென்றுவந்த உணர்வுதான் ஏற்படும். அந்தச் சூழலை - நிலையை மாற்றியவர் சம்பந்தனார்தான்."நாடகத் தந்தை' என்று அவரைக் கூறுவதைவிட "நாடகக்கலைப் பிதாமகர்' என்று அழைப்பதே பொருத்தமாகும். அந்த அளவுக்கு மிக கவனத்தோடு நாடகக்கலையை வளர்த்தார். 1959-ஆம் ஆண்டு இவருக்கு "பத்மபூஷண்' விருதை பாரத அரசு வழங்கிச் சிறப்பித்தது. (முன்பே ஆங்கில அரசு ராவ் பகதூர் பட்டத்தை வழங்கியிருந்தது).தெய்வ பக்தியும், பெற்றோரிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த ஒழுக்க சீலரான பம்மல் சம்பந்த முதலியார், 91-வது வயதில், 1964-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்.நாடகக் கலைக்கே தனிச் சிறப்பும் மரியாதையும் ஏற்படுத்திய பம்மல் சம்பந்த முதலியார் நினைவு, நாடகக்கலை உள்ளளவும் அழியாது.

Saturday, June 12, 2010

தமிழ் வளர்த்த அறிஞர்கள் ..சி.இலக்குவனார்

தொல்காப்பியத்தையும், திருக்குறளையும் இரண்டு கண்களாகவே கருதி அந்நூல்கள் சொன்ன கருத்துப்படியே தம் வாழ்வை அமைத்துக் கொண்ட பேராசிரியர் சி.இலக்குவனார்(1910-1973). இவர் தமிழில் மட்டுமல்லாமல், ஆங்கிலத்திலும் பெரும் புலமை கொண்டவர். இலக்குவனார் தமிழ் வளர்ச்சியின் பொருட்டு 'தமிழ்க் காப்புக் கழகம்' என்னும் ஒரு தமிழ்க் கழகத்தை மதுரையில் துவங்கி தமிழ்ப் பணி ஆற்றினார். இவர் எழிலரசி, மாணவர் ஆற்றுப்படை, துரத்தப்பட்டேன், பழந்தமிழ், வள்ளுவர் கண்ட இல்லறம், அம்மூவனார் போன்ற கவிதை நூல்களையும், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், என் வாழ்க்கைப் போர், கரும வீரர் காமராசர் ஆகிய வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். இலக்குவனார் ஆற்றிய தமிழ்ப் பணியை பாராட்டி, 'முத்தமிழ்க் காவலர்', 'செந்தமிழ் மாமணி', 'பயிற்சி மொழிக்காவலர்', 'இலக்கணச் செம்மல்' போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டன.

Tuesday, April 06, 2010

இன்று ஏப்ரல் 6 
பெயர் : மீனாட்சிசுந்தரம் பிள்ளை ,
பிறந்த தேதி : ஏப்ரல் 6, 1815

சிறந்த தமிழறிஞர். உ. வே. சாமிநாதையரின்
ஆசிரியர். அந்தாதி என்று சொல்லும்
போதெல்லாம் உங்கள் ஞாபகம் தான்
வருகிறது. இவர் 65 மேற்பட்ட தமிழ் நூல்களை
எழுதியுள்ளார். உ.வே.சா -வை தமிழுக்காகத் தந்த
உங்களுக்கு என்றும் எங்கள் நன்றிகள்.

Monday, April 05, 2010

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... நாவலர் சோமசுந்தர பாரதியார்

வ.உ.சி.,யால் 'தமிழ்க் கப்பல்' என்று வர்ணிக்கப்பட்டவர் நாவலர் சோமசுந்தர பாரதியார் (1879 - 1959). வழக்கறிஞராகப் பணியாற்றி மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்தவர். வ.உ.சி.,யின் அழைப்பை ஏற்று மாதம் 100 ரூபாய் ஊதியம் பெற்று கப்பல் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வந்தார். தேசப்பற்று காரணமாக அவர் அதை செய்தார்.இந்தி எதிர்ப்புத் தந்தை என்று இவரைக் குறிப்பிட்டால் மிகையில்லை. ராஜாஜி இந்தியை தேசிய மொழி என்ற போது, நாவலரோ 'இந்தி தேசிய மொழியா' என்று கேள்வி எழுப்பி புத்தகம் வெளியிட்டார். சிறிய நூல் என்றாலும் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. கட்டாய இந்தி திணிப்பு, தமிழ் மொழிக்கு எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு வெளிப்படையான கடிதம் எழுதினார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மறைமலை அடிகள்

பெற்ற தாய் தனை மக மறந்தாலும்... உற்ற தேகத்தை உடல் மறந்தாலும்... எனும் வள்ளல் ராமலிங்க அடிகளாரின் பாடலை பாடிக் கொண்டிருந்த மறைமலை அடிகளார் (1876-1950), இடையில் நிறுத்தி - 'உற்ற யாக்கையை உடல் மறந்தாலும்' என்று பாடியிருந்தால் சிறப்பாக இருக்குமே என்று கருதினார். தேகம் என்ற வடமொழிச் சொல் நீங்கி, யாக்கை எனும் தூய தமிழ் சேரும் என்பதால் மகிழ்வுற்றார். அந்த தினத்திலிருந்து வேற்று மொழி கலவாமல் தமிழ் பேசுவோம் என்று தன் குடும்பத்தாரிடம் கூறினார். இதுவே, அவரது தனித்தமிழ் இயக்கத்தை வலுவூட்டியது. சுவாமி வேதாச்சலம் என்ற தனது பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் என்றிருந்த அவரது அமைப்பை 'பொது நிலைக்கழகம்' என்றும் மாற்றிக் கொண்டார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் (1876-1954) சொற்பொழிவுகளும், உரைநடைகளும் 'கவிமணியின் உரைமணிகள்' என நூல் வடிவம் பெற்றன. உமார்கய்யாம், ஆசியஜோதி ஆகியன இவரது மொழிபெயர்ப்புப் பாடல்கள். நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் எனும் பழமைவாதத்துக்கு எதிராக கவிதை பூண்டவர் கவிமணி. கவிதைக்கு இலக்கணம் சொன்ன கவிமணி... கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று பாடியிருக்கிறார்...


உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை.
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அறிவோம்... அறிஞர் கால்டுவெல்

உலக மொழிகளில் முதன்முதலில் கிரேக்கமும் லத்தீனும்தான் செம்மொழியாகக் கருதப்பட்டன. கி.பி. 1800 1900களில் வில்லியம் ஜோன்ஸ், மாக்ஸ் முல்லர் உள்ளிட்டோர் சமஸ்கிருத படைப்புகளை ஆங்கிலத்தில் வெளியிட்டனர். இது சமஸ்கிருதத்தை செம்மொழியாகக் ஏற்கும் நிலை உருவானது.

1816ல் எல்லிஸ் எனும் அறிஞர் தென் மாநில மொழிகள் வடமொழி அல்லாத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதை நிரூபித்தார். 19ம் நூற்றாண்டின் இறுதியில் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பத்தின் சிறப்பியல்புகளை ஆராய்ந்து, அவற்றில் தமிழ், வடமொழியினின்று தனித்து இயங்கும் ஆற்றலை நிரூபித்தார். தமிழ் மொழி செம்மொழி ஆவதற்கு இதுவே முக்கிய காரணம்.

++++++++++++++++++++++++++

அறிவோம்... உயர்தனிச் செம்மொழி

அறிஞர் ராபர்ட் கால்டுவெல், வடமொழியிலிருந்து, தென் மொழிகள் தனித்து நிற்கக் கூடியவை என்று நிகழ்த்திய ஆராய்ச்சியின் அடித்தளத்தில்தான், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, தமிழ்த்தெய்வ வணக்கம் பாடியதும், பரிதிமாற்கலைஞர் எழுதிய ' தமிழ் மொழியின் வரலாறு' எனும் நூலில் தமிழ் மொழி உயர் தனிச் செம்மொழி கருத்தினை வலியுறுத்தவும் காரணமாக அமைந்தன. இவர்களைத் தொடர்ந்து மறைமலை அடிகளார் தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார்.
++++++++++++++++++++++++++

அறிவோம்... மாதவ சிவஞான முனிவர்

அறிஞர் கால்டுவெல், வடமொழி மற்றும் தென் மொழி ஆய்வுக்கு முன்பே, வடமொழியில் காணப்படாத தமிழ் மொழியின் தனி இயல்புகளை வடமொழியில் புலமை பெற்ற தமிழறிஞர்கள் கண்டறிந்தனர். அவர்களில் மாதவ சிவஞான முனிவர் முதன்மையானவர். இதுபோன்ற ஆய்வுகள்தான் தமிழ் மொழியினை செம்மொழி என்று நிலை நாட்டுவதற்கு அடிப்படையான காரணங்களாக அமைந்தன.
+++++++++++++++++++++++++++

அறிவோம்... வேதங்களிலும் தமிழ்

இந்திய மொழிகளில் தேர்ச்சிப் பெற்ற, பேராசிரியர்கள் டி.பர்ரோ, எம்.பி.எமனோ வடமொழி வேதங்களில் தமிழ்ச் சொற்களை கண்டறிந்து வெளியிட்டனர். கிரேக்கம், ஹீப்ரு, சீனம், ஜப்பானியம், கொரியம், மலாய் உள்ளிட்ட சர்வதேச மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் காணப்படுவதை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இது பல்வேறு நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த பண்பாட்டு, வணிகத் தொடர்பை வெளிக்காட்டுகிறது. நாணயவியல், கல்வெட்டியல் மற்றும் இலக்கிய ஆதாரங்களுடன் ஆராய்ச்சி அறிஞர்களும் நிரூபித்துள்ளனர்.

இயல், இசை, நாடகம் என எந்த வடிவில் இருந்தாலும், தமிழின் சுவை குறைவதில்லை. ஆடலும், பாடலும் தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த கலை வடிவங்கள்.
++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வீரமாமுனிவர்

தமிழில் வீரமாமுனிவர் என்று அழைக்கப்படும் பெஸ்கி பாதிரியார் (1680- 1746) இத்தாலியில் பிறந்தவர். கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் பொருட்டு, 1710ம் ஆண்டில் தமிழகத்துக்கு வந்தார். தமிழின் மீது இருந்த பற்றால் தனது பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார். எழுத்து, அகரமுதலி, மொழிபெயர்ப்பு, உரைநடை, இலக்கணம், காவியம், பிரபந்தம் என்று பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். திறக்குறளை லத்தீனுக்கு மொழி பெயர்த்தார்.

++++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறுமுக நாவலர்

தமிழ், ஆங்கிலம், வடமொழிகளில் திறம் பெற்றவர் ஆறுமுக நாவலர் (1822 1879). யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். பாதிரியார் பீட்டர் பெர்சிவல் பைபிளை தமிழில் மொழிமாற்றம் செய்ய இவரிடம் கோரினார். இப்பணிக்கு ஆறுமுக நாவலரே தகுதியுடையவர் என்று அவர் தீர்மானித்தார். சைவ சிந்தாந்தத்தில் கைதேர்ந்த ஆறுமுக நாவலரின் பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு அறிஞர்களை வியப்புறச் செய்தது. தொல்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்களை அச்சேற்றியவர் ஆறுமுக நாவலர்.

+++++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... உ.வே.சா.,

தமிழ்த்தாத்தா என்று அன்புடன் அழைக்கப்பட்ட, உ.வே.சாமிநாத அய்யர் (1855-1942), அழியும் நிலையில் இருந்த, பண்டைய இலக்கிய நூல்களைத் தேடி அச்சிட்டு தமிழின் தொன்மையையும் புகழையும் உலகறியச் செய்தார். 90 புத்தகங்களுக்கு மேல் அச்சிட்ட இவர், 3 ஆயிரம் ஏட்டுச்சுவடி, கையெழுத்தேடுகளையும் வைத்திருந்தார்.
சீவக சிந்தாமணி எனும் சமண இலக்கியத்தின் செழுமையை முழுதாக உணர்ந்ததால், இது போன்ற அரிய படைப்புகளை அழிய விடாமல் காக்க வேண்டும் என்று உறுதி கொண்டார். சீவக சிந்தாமணிக்குப் பின்னர், பத்துப்பாட்டு நூலையும் இவர் வெளியிட்டார்.
++++++++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சோழவந்தான் அரசஞ் சண்முகனார்

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய அரசஞ் சண்முகனார் (1862-1909), பள்ளியில் ஆங்கில வகுப்புகளை அதிகப்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெளியேறினார். தலைமை ஆசிரியர் எவ்வளவோ முயன்றும், மீண்டும் பணிக்குத் திரும்ப மறுத்துவிட்டார். மதுரை பாண்டித்துரைத் தேவர், நான்காவது தமிழ்ச்சங்கத்தில் பணியாற்ற அழைத்தார். 1902 முதல் 1906 வரை நான்காண்டுகள் அச்சங்கத்தில் அரும்பணி ஆற்றினார். சிதம்பர விநாயகர் மாலை எனும் நூல் இவரால் இயற்றப்பட்டது.

++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சங்கரதாஸ் சுவாமிகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலே, ஆங்கில மோகத்தில், தமிழில் பேசுவது கூட கவுரவக் குறைவு என்று கருதிய போது, சங்கரதாஸ் சுவாமிகள் (1866 - 1931) மேடைகளில் தமிழ் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்பட்டார். அப்போது இசையரங்குகளில் தெலுங்கு ஆதிக்கம் இருந்தது. இனிய செந்தமிழ்ப் பாடல்களை இவர் இயற்றி, தமிழுக்குப் பெருமை சேர்த்தார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இவரது, பாடல்களை, வசனத்தை உச்சரிக்காத நடிகர்கள் இல்லை என்று கூறலாம். தூத்துக்குடியில் பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள், மதுரையில் 'தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா' நாடக சபா மூலம் அற ஒழுக்கத்தையும் கடவுள் உண்மையையும் வளர்த்தார்.

++++++++++++++++++++

பரிதிமாற் கலைஞர்

கல்லூரியில் படிக்கும் போதே, ஆசிரியர்களால் வியந்து பாராட்டப்பட்டவர் சூரியநாராயண சாஸ்திரி (1870-1903). மதுரைக் கல்லூரியில் இவர் படித்த போது, இயற்றிய மாலா பஞ்சகம் என்ற நூலை பார்த்த பாஸ்கர சேதுபதி, அவருடைய உயர்கல்விக்கான செலவை ஏற்றுக் கொண்டார்.சென்னை கிறிஸ்தவ கல்லூரி தலைவர் டாக்டர் மில்லர், டென்னிசன் இயற்றிய ஆர்தரின் இறுதி எனும் நூலின் ஒரு பகுதியை விளக்கினார். 'துடுப்புகள் இருபுறமும் தள்ள, நீரில் மிதந்து செல்லும் படகு, அன்னப்பறவை தன் சிறகு விரித்து விசிறிக் கொண்டு நீந்துவது போல் இருக்கிறது' என்ற உவமை வேறு எந்த மொழியிலும் இடம் பெற்றிருக்குமா என்பது சந்தேகம், என்றார்.வகுப்பில் இருந்த சூரிய நாராயண சாஸ்திரி, 'முடிகின நெடுவாய் முரிதிரை நெடுநீர்வாய்க் கடிதினின் மடவண்ணக் கழியது செல நின்றார்' எனும் 9 நூற்றாண்டுக்கு முந்தைய கம்பரின் உவமை நயத்தை டென்னிசனுக்கு,சாஸ்திரி விளக்கினார். அதைக்கேட்ட மில்லர் அவருக்கு கைகொடுத்துப் பாராட்டினார். மதுரை அருகே வீராச்சேரியில் பிறந்த அவர், கல்லூரி பேராசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியராகவும் விளங்கிய அவர், தனித்தமிழ் உணர்வுக்கு வித்திட்டவர் ஆவார். தமிழ் தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றது என்று உரை நிகழ்த்தினார். எழுதி வந்தார். தன்னுடைய பெயரையும் தூய தமிழில் பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக் கொண்டார்.

+++++++++++++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பாம்பன் சுவாமிகள்

முருகப்பெருமான் மீது பாட வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பாம்பன் சுவாமிகள் (1851-1929) பாடிய 'பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்' பாடினார்.சிவஞான தீபம் வேதாந்த சித்தாந்தப் பாட்டினை திறம்படவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் நூல் 1922 அச்சிடப்பட்டு வெளியானது. ஆயிரத்து 101 பாடல்களுக்கு பாம்பன் சுவாமிகளே உரை எழுதி 'திட்பம்' என்று பெயர் சூட்டி வெளியிட்டார்.ராமநாதபுரம் பாம்பனில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே ஏட்டில் முருகப்பெருமான் பற்றி பாடல்களை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வடசொல் இல்லாத 'சேந்தன் செந்தமிழை' இவர் படைத்தார்.

++++++++++++++++++++++++++

நா.கதிரைவேற்பிள்ளை

நா.கதிரைவேற்பிள்ளை (1874-1907) யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் வந்து, தமிழ்ப்பணிக்கும் சைவப்பணிக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இரு மொழி அகராதி இருந்தபோதிலும், தமிழுக்கு ஒரு மொழி அகராதி வெளிவராமல் இருந்தது. அந்த குறையை போக்கும் வண்ணமாக அவர் வெளியிட்ட அகராதி, தமிழ் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது. கதிரைவேற்பிள்ளையின் 'சுப்பிரமணிய பராக்கிரமம்' என்ற நூலின் அடிப்படையில் தான் பழநி தண்டாயுதபாணி கோயிலில் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு தலப்புராணங்களை இவர் இயற்றியுள்ளார். மதுரை தமிழ்ச்சங்கப் புலவராகவும் அவர் இருந்துள்ளார்.

+++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.உ.சிதம்பரனார்

பாரதியின் 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள், தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும். இறவாத புகழுடைய புது நூல்கள், தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்' என்பதற்கேற்ப வ.உ.சி., (1872-1936) ஜேம்ஸ் ஆலன் எழுதிய சில நூல்களை தமிழில் மொழி பெயர்த்தார்.மனம்போல் வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம் என பெயர்சூட்டி வெளியிட்டார். மூல நூல்களைப் போலவே இந்த மொழிபெயர்ப்பு நூல்களைப் படிப்பவர்களும் அருமையை உணர்ந்து கொள்ளலாம். திருக்குறளின் அறத்துப்பாலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் வ.உ.சி., சிறையிலிருந்த போது அதற்கு உரையும் எழுதினார். நெகிழ்ச்சியான கவிதைகளையும் அப்போது அவர் படைத்தார். செக்கிழுத்து சிறையிலிருந்து அவர் வெளியேறிய போது, சுப்பிரமணிய சிவா தவிர, அவரை வரவேற்க யாரும் வரவில்லை.

+++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பம்மல் சம்பந்த முதலியார்

எழுபது ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடக வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றி தமிழ் மக்களால் 'தமிழ் நாடகத் தந்தை' என்று அழைக்கப்பட்டவர் பம்மல் சம்பந்த முதலியார் (1873-1964).வழக்கறிஞர் தொழில் செய்து கொண்டே, வாடி வதங்கிப் போய் இருந்த நாடகத் துறைக்கு புத்துயிர் ஊட்டியவர் இவர். மேலை நாட்டு நாடகங்கள், வடமொழி நாடகங்களை ஆழமாகப் படித்தார். மொழிநடை மற்றும் உரையாடல்களில் வித்தியாசமான பாணியைப் பின்பற்றினார். தொடர்ந்து நாடகக் கலைக்கு தெம்பூட்டி வந்தார். இவர் எழுதிய முதல் நாடகம் 'புஷ்பவல்லி' மக்கள் ஆதரவைப் பெற்றது. அதன் பின்னர் அவர் ஏராளமான நாடகங்களை எழுதிக் குவித்தார்.

++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... :சதாவதானி செய்குத்தம்பி பாவலர்

முகமதியப் புலவராக இருந்து, அனைத்து சமயத் தத்துவ ஆழங்களை உணர்ந்து உரைக்கும் செறிவு கொண்டவராக செய்குத்தம்பி பாவலர் (1874-1950) விளங்கினார்.கதராடை மற்றும் காந்தி குல்லாயும் அணிந்து, விடுதலை உணர்வையும் பரப்பினார். இசுலாமிய மித்திரன் எனும் இதழை நடத்தினார். சீறாப்புராணத்துக்கு உரை எழுதினார். அந்தாதிகள், கோவைகள், பாமாலை, மஞ்சரி, நீதி வெண்பா மற்றும் பல்வேறு உரைநடை நூல்களையும், ஆனந்த களிப்பு எனும் மொழிபெயர்ப்பையும், சாற்றுக் கவிகள், வாழ்த்துக்கவிகள், சிலேடைக் கவிகள், சீட்டுக் கவிகள் எனப் பன்னூறு பாக்களையும் அளித்துள்ள பாவலரின் பெருமை தமிழின் பெருமையாகவே உள்ளது.

++++++++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... திரு.வி.க.,

பெரிய புராணத்துக்கு குறிப்புரையும் வசனமும் எழுதியவர் திரு.வி.க., (1883-1953). யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை மீது கொண்டிருந்த பற்றால், அவர் கதிரைவேற்பிள்ளை சரிதம் என்ற நூலை எழுதினார். பட்டினத்துப் பிள்ளையார் பாடல் திரட்டு, தேச பக்தாமிர்தம், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், நாயன்மார் திறம், தமிழ்நாடும் நம்மாழ்வாரும், முருகன் அல்லது அழகு, திருக்குறள் விரிவுரை, உள்ளொளி உள்ளிட்ட ஏராளமான படைப்புகளை வழங்கியவர். மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும். மேலும், மேலும் தமிழகத்துக்கு தொண்டாற்ற வேண்டும். தமிழர்களை ஒருமுகப்படுத்த வேண்டும் என்று கருதிய அவர் தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்பட்டார்.


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியாரை (1882-1921) அறியாத தமிழ் மக்கள் இருக்க முடியாது. தமிழ்ப் பணியையும் விடுதலைப் பணியையும் ஒன்றாக பார்த்த அவர், மொழிப்பற்றை வளர்த்தவர். குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய மூன்று குறுங்காவியங்களை அவர் இயற்றினார். வ.வே.சு. ஐயர் இவரது பாடல்களை அட்சரம் லட்சம் பெறுமான பாக்கள்... அவை மனதை ஈர்க்கும் மாணிக்கங்கள் என பாராட்டினார். மகாகவி பாரதியார் ஆங்கிலக் கவிஞரான ஷெல்லியிடம் பேரார்வம் கொண்டிருந்தார். எங்கள் தமிழ்மொழி, எங்கள் தமிழ் மொழி என்று மொழியின் மீது தீராப்பற்றுக் கொண்டிருந்தவர் அவர்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை (1888 - 1972) தெய்வ பக்தியும் தேச பக்தியும் நிறைந்தவர். காந்தியக் கவிஞர் என்று போற்றப்பட்டவர். ''கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது... சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்'' என்று பாடியவர். ''தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய மொழியாகும், அன்பே அவனுடை வழியாகும்'' என்று பாடியவர். தமிழருக்கும் விடுதலை வீரர்களுக்கும் பாடிப் பெருமை சேர்த்தவர் அவர். காவலரின் மகனாகப் பிறந்த கவிஞர், தமிழ்க் காவலராக விளங்கினார்.

++++++++++++++++++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்...வ.வே.சு. ஐயர்

தமிழில் திறனாய்வுத் துறை வளம் பெறவும், சிறுகதைத் துறை வளரவும் உந்து சக்தியாக விளங்கியவர் வ.வே.சு.ஐயர் (1881 -1925). புதுச்சேரியில் இவர் அமைத்த, கம்ப நிலைய இயக்கத்தில் பாரதியாரும் சேர்ந்தார். கம்ப நிலையத்திலிருந்து ஏராளமான நூல்கள் வெளியாகின. மொழிபெயர்ப்புகளும் வெளிவந்தன. தேச விடுதலைக்காக எழுதிய இவர், பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்ட போது, கம்பராமாயணம் குறித்த ஆங்கில திறனாய்வை எழுதினார். ஆங்கிலத்தில் குறுந்தொகையை எழுதினார். 44 வயதிலேயே அவர் மறைந்துவிட்டார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



இன்று ஏப்ரல் 13 
பெயர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ,
பிறந்த தேதி : ஏப்ரல் 13, 1930

புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்.
எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக்
கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய
சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை
ஆக்கப்பட்டுள்ளன. பாடல்கள் மூலம் சமூகத்தை
சீர்திருத்த முயன்ற உங்களுக்கு நன்றி.




இன்று ஏப்ரல் 5 
பெயர் : க. கைலாசபதி ,
பிறந்த தேதி : ஏப்ரல் 5, 1933

இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய
விமர்சகர், திறனாய்வாளர்.ஈழத்துத் தமிழ்
இலக்கியத் துறைக்கு இவர் ஆற்றிய பங்கு
முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியத்
திறனாய்வுத் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு
மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக்
கருதப்படுகின்றது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்று ஏப்ரல் 4
பெயர்:மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை,
பிறந்த தேதி : ஏப்ரல் 4, 1855

மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக
நூலைப் படைத்தவர். மனோன்மணீயத்தில்
இடம்பெற்ற தமிழ்த் தெய்வ வணக்கப்
பாடலான நீராருங்கடலுடுத்த நிலமடந்தைக்
கெழிலொழுகும் என்றபாடல் தமிழ்நாடு அரசினரால் தமிழ்
வணக்கப் பாடலாக ஜூன் 1970 இல் உத்தியோகபூர்வமாக
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்று ஏப்ரல் 2
பெயர் : வ. வே. சுப்பிரமணியம் ,
பிறந்த தேதி : ஏப்ரல் 2, 1881

இந்திய விடுதலைக்காக முதன்மை
பங்காற்றியவரும், சிறந்த இலக்கியவாதியும்,
மொழி பெயர்ப்பாளரும் ஆவார். 1922ல்
சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற
கல்வி நிலையத்தை தொடங்கினார். தமிழ் குருகுலத்தில்
அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான முறையில்
நன்னெறிகளும், அறிவியலும், கலை இலக்கியங்களும்,
உடல் வலிவுப் பயிற்சிகளும் போதித்தார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்று ஏப்ரல் 1
பெயர் : தி.வே.கோபாலையர் ,
மறைந்த தேதி : ஏப்ரல் 1, 2007

பதிப்பாசிரியராக, உரையாசிரியராக,
சொற்பொழிவாளராக, பேராசிரியராக மிளிர்ந்த
தமிழறிஞர். தமிழ்நூற்கடல் என அழைக்கப்
பட்டவர்.தமிழ், பிரெஞ்சு, சமஸ்கிருதம்,
ஆங்கிலம் முதலான மொழிகளில் வல்லவர். இலக்கணம்,
இலக்கியம், சமயநூல்கள் குறிப்பாக வைணவ
இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க புலமையுடையவர்.

Sunday, January 24, 2010

'கொங்குக் குலமணி' - சி.எம்.இராமச்சந்திரன் செட்டியார்



செந்தமிழ்ப் புலவராய் இருந்து தமிழை வளர்த்தோரைக் காட்டிலும், வேறு வேறு துறைகளில் புலமை பெற்றவரே தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாய் இருந்துள்ளனர்.
ந.மு.வேங்கடசாமி நாட்டார், உழவுத்தொழிலில் ஈடுபட்டிருந்து பின் புலவராகப் பொலிந்தவர். பண்டிதமணி கதிரேசச் செட்டியார், வணிகராய் இருந்து பின்னர் புலமை நலங்கனிந்தவர். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், கா.சு.பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை முதலான பெருமக்கள், வழக்கறிஞர் தொழில் புரிந்து வண்டமிழில் தேர்ச்சி பெற்றவராவர். பா.வே.மாணிக்க நாயக்கர், பொறியாளராய் இருந்து, பின் மொழித்தேர்ச்சி பெற்றவர். புலவரேறு வரதநஞ்சைய பிள்ளை, ஊர்க்காவலராய் இருந்து, பின் ஒண்டமிழில் தேர்ச்சி பெற்றவர். சைவ ஞாயிறு கோவைக்கிழாரும் வழக்குரைஞராய் இருந்து, பிறகு தண்டமிழில் மேதையானவர். கோவைக்கிழார் கல்லூரியில் கற்றபாடம், இயற்பியல், சட்டவியல்.
கோவைக்கிழார் தமிழ் இலக்கண, இலக்கியங்களை, திருச்சிற்றம்பலம் பிள்ளை, சபாபதிப் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர் போன்றோரிடம் கற்றுக்கொண்டார். கோவைக்கிழாரின் இயற்பெயர், இராமச்சந்திரன் செட்டியார்.
1888-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி மருதாசலம் செட்டியார்-கோனம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
தொடக்கக்கல்வியை கோவை நகராட்சிப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை லண்டன் மிஷின் பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை சென்னை மாநிலக் கல்லூரியிலும் கற்றுத் தேர்ந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் 1912-இல் பி.எல். பட்டமும் பெற்றார். கோவையில் வழக்குரைஞராய் பல்லாண்டுகள் பணிபுரிந்தார். அத்தொழிலில் அவர் மனம் ஈடுபடவில்லை. தமிழ்த் தொண்டிலும் சமயத் தொண்டிலும் ஆர்வத்தோடு ஈடுபாடு கொண்டார்.
சென்னையில் படிக்கும் காலத்திலேயே சமுதாயப் பணியிலும் ஈடுபட்டார். தாம் வழக்குரைஞர் தொழிலுக்குச் சென்றபிறகு, தம் குலத்துச் சிறுவர்களுக்குப் பணிபுரிய விரும்பி, "தேவாங்கர் சிறுவர் சபை' என்ற ஓர் அமைப்பை நிறுவி, அதன் செயலராக இருந்து பணிபுரிந்தார். ஏழைப் பிள்ளைகளுக்கு உதவுவதற்கு நிதி திரட்டிப் பணிபுரிந்தார். அச்சபை இன்றும் கோவை-சுக்கிரவாரப்பேட்டையில் இயங்கிவருகிறது.
கோவைக் கிழார், 1918-ஆம் ஆண்டில் கோவை நகராட்சியின் துணைத் தலைவரானார். 1943, 1946 ஆகிய ஆண்டுகளில் பட்டதாரித் தொகுதியில் நின்று சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுபினராக வெற்றி பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தமிழ் வளர்ச்சி ஆலோசகராக இருந்தார்.
கோவையில் தேவாங்கர் உயர்நிலைப் பள்ளியைத் தோற்றுவித்தார். அதன் ஆட்சிக்குக்குழு உறுப்பினராய் இருந்தார். கோவைத் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி, சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார் தலைமையில் செயலாளராகப் பணிபுரிந்தார்.
சென்னை சுவடிச்சாலை, தஞ்சை சரஸ்வதிமகால் புத்தகசாலை ஆகியவற்றிலும் இவர் உறுப்பினராய் இருந்தார். கோவை-அரசுக் கல்லூரி பழைய மாணவர் கழகத்திலும், கோவை-காஸ்மோபாலிடன் கிளப்பிலும் (இறுதிக்காலம் வரை) தலைவராய் இருந்தார். இவர் இடம்பெறாத கல்விக் கழகங்களோ, பொதுப்பணி மன்றங்களோ, சமயச் சபைகளோ, பொழுதுபோக்கு அமைப்புகளோ, பொதுமாநாடுகளோ இல்லை என்றே கூற வேண்டும்.
தம் குலத்தினர் நெசவுத் தொழில் ஒன்றிலே நின்று, உயரும்போது உயர்ந்தும், தாழும்போது தாழ்ந்தும் துன்புறுதலைக் கண்டு உள்ளம் வருந்தினார். அத்தொழிலை வளமுடையதாக்கப் பல கைத்தறிக் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கினார். மாநாடுகள் பலவற்றை நடத்தினார். அவர்களின் குறைகளைப் போக்க முயன்றார்.
கோவைக்கிழார், சென்னை-ராஜதானியின் அறநிலையத்துறை ஆணையாளராக இருந்தபோது, கோயில்களின் வருவாயில் ஒரு பகுதியை, சமய வளர்ச்சிக்கென ஒதுக்க வேண்டும் என்றும், அதன் மூலம் சமயச் சொற்பொழிவுகள், நூல்கள் வெளியிடுதல், நூல் நிலையங்கள் அமைத்தல் ஆகியவற்றுக்காகத் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்தினார். கோயில்களில் திருமுறைகள் ஓதுதல், திருமுறைப் பதிகங்களைக் கல்லில் பதித்தல், தல வரலாறுகள் எழுதுதல், கோயில் குடமுழுக்குகளை ஆகம முறைப்படி செய்தல் ஆகியவற்றுக்காக அயராது உழைத்தார். தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் சேர்ந்து தமிழ் நாடெங்கும் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறப் பாடுபட்டார்.
சமய ஆதீனங்களான தருமபுரம், திருப்பனந்தாள், திருவாவடுதுறை, மயிலம் முதலியவற்றில் தமிழ்க் கல்லூரிகள் தோன்றக் காரணமாக இருந்தார். கொங்குநாட்டுப் பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் சார்பிலும் தமிழ்க்கல்லூரி ஒன்றைத் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளாருடன் சேர்ந்து தோற்றுவித்தார், அக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். திருமடத்தின் சார்பில் உயர்நிலைப் பள்ளி தோன்றவும் காரணமாக இருந்தார்.
கோவைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக கோவைக்கிழார் இருந்தபோது, "கொங்குமலர்' என்னும் திங்கள் இதழை நடத்தினார். சைவசித்தாந்த சமாஜத்தின் இதழான, "சித்தாந்தம்' இதழுக்கும் ஆசிரியராக இருந்து அரும் பணியாற்றினார்.
தஞ்சை சரஸ்வதி மகாலில் உறுப்பினராய் இருந்தபோது, "இராமப்பய்யன் அம்மானை' என்ற நூலையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழியாக "தமிழிசைக் கருவிகள்' என்ற நூலையும் பதிப்பித்து வெளிப்படுத்தினார்.
கோவைகிழார், தமிழ் நாட்டின் வரலாற்றையும், புலவர்களின் வரலாற்றையும், கல்வெட்டு-செப்பேடுகளின் துணையால் ஆராய்ந்து தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுவரையிலும் யாரும் அறிந்து எழுதாத "கொங்குநாட்டு வரலாற்றை' பலரும் போற்றும் வண்ணம் எழுதியுள்ளார். ஏறக்குறைய எண்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இன்னும் அச்சில் ஏறாத நூல்களும் பல உள்ளன.
கோவைக்கிழாரின் பணியைப் பாராட்டி ஆங்கில அரசு, 1930-இல் "இராவ்சாகிப்' என்ற பட்டத்தையும் 1938-இல் "இராவ்பகதூர்' என்ற பட்டத்தையும் அளித்துச் சிறப்பித்தது. சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம், "செந்தமிழ்ப்புரவலர்' என்ற பட்டத்தையும் சென்னை மாநிலச் தமிழ்ச்சங்கம், "சிந்தாந்தப்புலவர்' என்ற பட்டத்தையும் மதுரை ஆதீனம் "சைவஞாயிறு' என்ற பட்டத்தையும் வழங்கிப் பாராட்டியது. கொங்குநாட்டு வரலாறு என்ற நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக்கழகம் பரிசளித்துப் போற்றியது. கோவை நன்நெறிக்கழகம் பொற்பதக்கம் வழங்கிப் போற்றியது. தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம் என எட்டு மொழிகளில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.
இச்சான்றோர், 1969-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி இயற்கை எய்தினார். இவரின் சமாதி பேரூர் தமிழ்க்கல்லூரித் தோப்பில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறளாக வாழ்ந்தவர் திருக்குறள் வீ.முனிசாமி



னொலியில் திருக்குறள் அமுதம் பருக அதிகாலையில் நம்மை எழுப்பிய ""ஏ மனிதா'' என்ற முதல் குரலை யாரும் மறந்திருக்க முடியாது. இந்தக் கணீர் குரலுக்குச் சொந்தக்காரர் திருக்குறளார் வீ.முனிசாமி.விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி கிராமத்தில் 1913}ஆம் ஆண்டு செப்டம்பர் 26}ஆம் தேதி வீராசாமி பிள்ளை}வீரம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.திருச்சியில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே முனிசாமிக்கு திருக்குறளின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்த அவர், திருக்குறளை நகைச்சுவையாகவும் நயமாகவும் அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்குமாறும் மக்களுக்குச் சொல்ல வேண்டும் எனும் முயற்சியில் ஈடுபட்டார்.1935}ஆம் ஆண்டில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் தொடங்கிய திருக்குறள் பரப்பும் திருக்குறளாரின் பணி, அரை நூற்றாண்டையும் கடந்தது.1941}ஆம் ஆண்டு முதன்முதலாக சேலத்தில் இவர் நடத்திய திருக்குறள் மாநாட்டில் தேவநேயப்பாவாணர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பங்கேற்றனர். சென்னை புரசைவாக்கத்தில் தங்கி, சட்டப் படிப்பினை மேற்கொண்டு திருக்குறள் வகுப்பினையும் நடத்தியபோது தமிழறிஞர்கள் அ.கி.பரந்தாமனார், நடேசனார், வடிவேலனார் ஆகியோருடன் இணைந்து குறட்பாக்களை அட்டைகளில் எழுதி தெருக்கள் தோறும் தமிழ் முழக்கம் செய்யும் தொண்டிலும் திருக்குறளார் ஈடுபட்டார். தொடர்ந்து சென்னையில் இவர் முன்னின்று நடத்திய திருக்குறள் மாநாட்டில், பேராசிரியர்கள் ரா.பி.சேதுப்பிள்ளை, சுப்பிரமணியப்பிள்ளை, இராசாக்கண்ணனார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.தந்தை பெரியார் 1948}இல் சென்னை ராயபுரத்தில் நடத்திய திருக்குறள் மாநாட்டில் திரு.வி.க., தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், கல்விக்கடல் சக்ரவர்த்தி நயினார், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோருடன் பங்கேற்று திருக்குறளார் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.புராண, இதிகாச நூல்களை சோறு, குழம்பு போலவும், திருக்குறளை ஊறுகாய் போலவும் வைத்துக்கொண்டிருந்த அக்காலத்தில், திருக்குறளை சோறாகவும் குழம்பாகவும் வைத்துக்கொண்டு, புராண இதிகாசங்களை ஊறுகாயாக வைத்துக்கொள்வதுதான் முறையான செயல் என்பதை மெய்ப்பிக்க வேண்டும் என்பதையே தனது வாழ்வின் அடிப்படை நோக்கமாகக் கொண்டார் திருக்குறளார் வீ.முனிசாமி.பல்பொடி, கண்ணாடி, கடிகாரம் போல் திருக்குறளும் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்பிய திருக்குறளார், தமிழகத்தின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து திருக்குறள் பரப்பும் பணியில் ஈடுபட்டார். பாமரர்களும் புரிந்து கொள்ளும் எளிய நடையிலான அவரது பேச்சில் நகைச்சுவை ததும்பியது.""இந்த உலகத்தில் எல்லா செல்வங்களும் அழிந்துவிடும். ரொம்ப வருடங்களாக இங்கிருந்த ஆலமரம் புயல் காற்றிலே விழுந்துவிட்டது. இங்கிருந்த பெரிய கட்டடம் மழை பெய்து இடிந்துவிட்டது. அதோ போகிறாரே 10 வருடங்களுக்கு முன்பு அவர் லட்சாதிபதியாக இருந்தார். இப்போ, எல்லாம் செலவழித்து ஏழையாகிவிட்டார். இது அழியும் செல்வம். ஆனால் கல்வி அப்படிப்பட்டதல்ல. அவர் 10 வருடங்களுக்கு முன்பு எம்.ஏ., பாஸ் செய்திருந்தார். இப்போது அது எல்லாம் செலவாகி எஸ்.எஸ்.எல்.சி. ஆகிவிட்டார் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்'' கேடில் விழுச்செல்வம் என்ற குறளுக்கு, திருக்குறளார் அளித்த எளிய விளக்கம் இது.அதே போல் ""எல்லோரிடத்திலும் எல்லாவிதமான கேள்விகளும் கேட்டுவிடக்கூடாது. எந்த வருடத்தில் பிறந்தீர்கள் என்று கேட்கலாம். எத்தனை வருடங்கள் இருக்கலாம் என்று இருக்கிறீர்கள் என்று கேட்கக்கூடாது. யார் யாரோ போய்விட்டாங்களே, நீங்க எப்போது பேறதாயிருக்கீங்க என்று கேட்டுவிடக்கூடாது'' என்கிற திருக்குறளாரின் பேச்சு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே நேரம், சிரித்து மறக்கப்படாது சிந்திக்க வேண்டும்'' என வலியுறுத்தினார் திருக்குறளார்.இலக்கியம், இலக்கணம் என்றாலே முகத்தைத் திருப்பிக் கொண்டவர்கள் கூட, திருக்குறளாரின் பேச்சின் ரசிகர்களானார்கள். வள்ளுவரின் குறள் மக்களிடம் வேகமாகப் பரவியது. இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும் தமிழ்ப் பாதுகாப்பு உணர்ச்சியும் மேலோங்கியிருந்த அக்காலக்கட்டத்தில் திருக்குறளாரின் திருக்குறள் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்பனையாயின.பெரியார், பாரதிதாசன், ப.ஜீவானந்தம், காமராசர், டாக்டர் மு.வ., கி.ஆ.பெ.விசுவநாதம், ரா.பி.சேதுப்பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார், கவியோகி சுத்தானந்த பாரதி, உ.வே.சா., மகாவித்வான் தண்டபாணி தேசிகர், சுவாமி சகஜானந்தா, சுவாமி விபுலானந்த அடிகளார், சர்.பி.டி.இராசன், சி.பா.ஆதித்தனார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட தமிழறிஞர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார் திருக்குறளார்.திருக்குறளாரின் பணியை ""குறட்பயன் கொள்ள நம்திருக் குறள்முனிசாமி சொல் கொள்வது போதுமே'' என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (1948) பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.1949}ஆம் ஆண்டு கடலூரில் கூட்டுறவு முறையில் திருக்குறள் அச்சகம் தொடங்கப்பட்டு, அதனைப் பொறுப்பேற்று நடத்தினார் திருக்குறளார். மேலும், "குறள் மலர்' இதழ் மூலம் மக்களிடையே திருக்குறள் பரவுமாறு செய்தார். தமிழகத்தில் மட்டுமல்லாது தலைநகர் தில்லியிலும், மும்பையிலும், கடல்கடந்து மலேசிய, சிங்கப்பூர் நாடுகளிலும் திருக்குறளாரின்÷திருக்குறள் பரப்பும் பணி தொடர்ந்தது.நாடாளுமன்ற உறுப்பினராக (1952}1957) இருந்தபோது, நாடாளுமன்றக் கூட்டங்களில் திருக்குறளுடன் பேச்சைத் தொடங்கினார். நாடாளுமன்றப் பதிவேடுகளில் தனது பெயருக்கு முன்பு திருக்குறளார் என்பதை இடம்பெறச் செய்தார். நாடாளுமன்றத்தில் அப்போது மக்களவைத் தலைவராய் (சபாநாயகர்) இருந்த அனந்தசயனம் அய்யங்கார், திருக்குறளார் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நல்ல ஆர்வமும் ஊக்கமும் கொடுத்தார். இக்காலகட்டத்தை தில்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் வாழும் தமிழர்களிடையே குறட்பாக்களை எடுத்துப் பேசுவதற்கு திருக்குறளார் பயன்படுத்திக் கொண்டார்.1981}ஆம் ஆண்டு மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், திருக்குறளுக்காக ஒரு நாளை ஒதுக்கிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., அந்த அரங்கிற்கு திருக்குறளாரை தலைமையேற்று நடத்தச் செய்தார். தமிழக அரசு தொடங்கிய திருக்குறள் நெறி பரப்பு மையத்திற்கு தொடர்ந்து நான்கு முறை இயக்குநராக நியமிக்கப்பட்டார் திருக்குறளார்.வள்ளுவர் வழிப்பயணம், வள்ளுவர் வகுத்த வாழ்க்கைப் பாதை, வள்ளுவர் பூங்கா, வள்ளுவரும் பரிமேலழகரும், திருக்குறள் இன்பம், வள்ளுவரைக் காணோம், திருக்குறள் காமத்துப்பால் பொழிப்புரை, வள்ளுவர் ஏன் எழுதினார், வள்ளுவர் காட்டிய வழி என 30 நூல்களைப் படைத்திருந்தாலும், உலகப் பொதுமறை}திருக்குறள் உரைவிளக்கம், திருக்குறளாருக்கு அழியாப்புகழைக் கொடுத்தது. இதுபோன்ற விளக்க நூல் இதுவரை திருக்குறளுக்கு வெளிவரவில்லை என்ற சிறப்பைப் பெற்றது.தமிழ்மறைக்காவலர், திருக்குறள் கேசரி, முப்பால் வித்தகர், திருக்குறள் இரத்தினம், நகைச்சுவை இமயம் என ஏராளமான பட்டங்கள் உலகத் தமிழர்களால் வழங்கப்பட்டன. ஆனாலும், 23.1.1951}இல் குடந்தை மாநகரில் உடையார்பாளையம் குறு நிலமன்னர் கச்சியுவரங்க காளாக்க தோழ உடையார் முதன் முதலில் அளித்த பட்டமான "திருக்குறளார்' எனும் பட்டமே இவருக்கு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியும் திருக்குறளுக்காக, திருக்குறளாகவே வாழ்ந்து, வள்ளுவர் வழி நடந்த திருக்குறளார் வீ.முனிசாமி 1994}ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.திருக்குறள் உள்ளவரை திருக்குறளார் வீ.முனிசாமியின் பெயரும் புகழும் நின்று நிலைக்கும்.
கருத்துக்கள்

I HAVE TRIED MY BEST TO GET HIS AUDIOS ON "THIRUKKURAL". IN HIS WORDS, "A MANITHA - WHILE SOWING A SEED ITSELF WE CAN SAY THAT THIS WILL GROW AS MANGO TREE OR NEEM TREE. BUT IN THE CHILD STAGE, WE CAN NOT SAY THAT HE WILL BECOME AN ENGINEER, A DOCTOR OR A TEACHER." I LOVE TO HEAR THIS IN HIS VOICE IN A HUMOROUS TONE. T.L. SUBRAMANIAM, SHARJAH, UAE

By T.L. SUBRAMANIAM
1/24/2010 12:48:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
அருந்தமிழ்த் தொண்டர்-அரங்கசாமி நாயக்கர்



தமிழ் மொழிக்குத் தொண்டாற்றியவர் மிகப்பலர். அவருள் ஒரு சிலரையே இன்று நாமறிந்து போற்றி வருகிறோம். எஞ்சியுள்ளோரின் தமிழ்த் தொண்டும் அவர்தம் வரலாறும் வெளிப்படாமல் இருக்கின்றன. அத்தமிழ்த் தொண்டர்கள் தம் வரலாறு முழுவதுமாக வெளிப்பட்டாலன்றி, தமிழிலக்கிய வரலாறும் முற்றுப்பெறாததாகவே அமையும். ஆதலால், தமிழன்பர்கள் தாமறிந்த தமிழ்ச் சான்றோர்களின் வரலாற்றை வெளிப்படுத்த முன்வர வேண்டும். இதுவும் ஒருவகைத் தமிழ்த்தொண்டே.அரங்கசாமி நாயக்கர்,1884-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி பிறந்தார். இவரது தாய், தந்தை பற்றிய விவரம் அறியக்கிடைக்கவில்லை. சு.அரங்கசாமி நாயக்கர், மேனாள் பிரெஞ்சிந்தியப் பகுதியான காரைக்காலைச் சேர்ந்த திருநள்ளாறு வட்டம், இளையான்குடி என்னும் சிற்றூரில் வாழ்ந்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திலும், குறிப்பாகப் பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்திலும் பெரும் பங்காற்றியவர். பிரெஞ்சுக்காரர்களை எதிர்த்துப் பல போராட்டங்களைத் தலைமையேற்று நடத்திய பெருந்தகை. இவர் திருநள்ளாறு நகர மன்றத் தலைவராக நெடுங்காலம் பணியாற்றினார். ஏழைகள் மீது இரக்கம் மிக்கவர். தந்தை பெரியாரிடம் கொண்ட ஈடுபாட்டால் தம் இல்லத்திலேயே தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட அனைவருக்கும் சமபந்தி உணவளித்து மகிழ்ந்தவர்.மணியாச்சியில் ஆஷ்துரையைச் சுட்டுக்கொன்ற வீரவாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கி அனுப்பி உதவியவர் இப்பெருமகனாரே ஆவார் என்ற செவிவழிச் செய்தியும் உண்டு.இவரும் மற்றும் விடுதலைப்போராட்ட வீரர்கள் சிலரும் சேர்ந்து, "பிரெஞ்சிந்தியக் குடியரசுப் பத்திரிகை' என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை நடத்தி வந்தனர். விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகளோடு, தமிழ்மொழி பற்றிய கட்டுரைகளும் இப்பத்திரிகையில் இடம்பெற்றன. குறிப்பாக தமிழ்மொழி பற்றியும், தமிழிலக்கணம் பற்றியும் அரங்கசாமி நாயக்கர் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இக்கட்டுரைகளை நூல் வடிவாக்கி வெளியிட்டோர் அரங்கசாமியின் நண்பர்களும் விடுதலைப் போராட்ட வீரர்களுமாகிய, காரைக்கால் வ.பொன்னையா மற்றும் திருநள்ளாறு, தேனூர் பாலசுப்பிரமணிய பிள்ளை அவர்களுமாவர். இந்நூல் பொறையாறு, "ரத்னா விலாஸ் பிரஸ்' என்ற அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டு 3.2.1944-இல் வெளியிடப்பட்டது. "குடியரசு தமிழ் ஆரம்ப இலக்கணம்' என்பது நூலின் பெயர். நூலின் முகவுரையில் தமிழின்கண் வடமொழிக் கலப்புப் பற்றிய கருத்தினை வெளியிட்டுள்ளார். தொல்காப்பியர் காலத்திலேயே வடசொற் கலப்பு ஏற்பட்டுவிட்டது என்கிறார் அரங்கசாமி நாயக்கர். மேலும் தெய்வத் தொடர்பிற்கு வடமொழி உதவியது என்ற கருத்தினையும் வெளியிட்டுள்ளார். ""தெய்வ சம்பந்தங்களுக்கு மாத்திரம் வடசொற்களை வைத்துக்கொண்டு தமிழைத் தனித் தமிழாக்கிப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருக்கிறது'' எனவும் அரங்கசாமி நாயக்கர் குறிப்பிட்டுள்ளது கவனத்திற்குரியது.அத்துடன், ""ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்'' என்ற தொடரினைக் குறித்து தம் கருத்தினைச் சுட்டியுள்ளார். ""அது "ஐந்திரம் அல்ல', "ஐந்திறம்', ஆகவே இருக்க வேண்டும். அதன் விவரம் வேறு கூறுவாய்'' என்று கூறியுள்ளார் (ஆனால் இந்நூலில் இதுபற்றிய செய்தி ஒன்றும் இடம் பெறவில்லை). மற்றும் வீரசோழிய இலக்கணம் பற்றியும் தம் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். "பிழைகளைத் திருத்தி அமைப்பதுவே நமது இவ்வாரம்ப இலக்கணத்தின் நோக்கம்'' என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்நூலின் நோக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் எழுத்திலக்கணம் மட்டுமே இயம்புகிறது என்பதையும் சுட்டியுள்ளார்.தமிழின் ஒலிப்புமுறை, நகர, னகர பேதங்கள், லகர, ளகர பேதங்கள், ழகர, ளகர பேதங்கள், மயக்கம் (மெய்ம்மயக்கம்), முதலிடை, கடைநிலை எழுத்துகள், புணர்ச்சி என்ற தலைப்புகளில் எடுத்துக் காட்டுகளுடன் இந்நூலாசிரியர் பல செய்திகளை விளக்கிக் கூறியுள்ளார். இதுவே இந்நூல் தரும் செய்தியாகும். நூல் சிறிதாயினும், முறையாக மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுமானால் மொழிப் பிழைகள் குறைந்து பிழையின்றி எழுதும் திறம் பெறுவர் என்பதில் ஐயமில்லை.அரங்கசாமி நாயக்கர், தம் வாழ்நாளில் பெரும் பகுதிகளை விடுதலைப் போராட்டத்திலும், சமுதாய மேம்பாட்டுப் பணிகளிலும் செலவிட்டார் என்றாலும் தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது கொண்டிருந்த நீங்காப் பேரன்பினால், தாம் நடத்திய பத்திரிகையில், தமிழின் முன்னேற்றத்திற்கான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகள் பலவற்றையும் வெளியிட்டுத் தொண்டாற்றியுள்ளார்.இப்போது இந்நூல் கிடைத்தற்கரியதாய் இருப்பதால், தமிழக அரசும், தமிழ்ப் பல்கலைக்கழகமும் இதுபோன்று மறைந்து கிடக்கும் நூல்களை வெளியிடும் பணிகளை மேற்கொள்ளல் வேண்டும்.இவ்வாறு வெளிச்சத்திற்கு வராத தமிழ்த் தொண்டர்களையும், தமிழ் நூல்களையும் தமிழன்பர்களும், தமிழ் ஆர்வலர்களும் வெளிப்படுத்துவாராக! அயராமல் உழைத்த அரங்கசாமி நாயக்கர், 1943-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.
தமிழவேள் உமாமகேசுவரனார்



பண்டைக் காலத்தில் பெருமை பெற்றுத் திகழ்ந்த வள்ளல் பெருமக்களில் "வேள்' என்னும் சிறப்பு அடைமொழி பெற்றவர் இருவராவர். ஒருவர், "வேள்' பாரி; மற்றொருவர் "வேள்' "எவ்வி'. சங்க காலத்துக்குப் பிறகு முதன்முதலாக "வேள்' எனும் பட்டத்தைப் பெற்றவர்தான் உமாமகேசுவரனார்.தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கிளை ஆறுகளான வடவாற்றுக்கும் வெண்ணாற்றுக்கும் இடையில் உள்ள "கருந்திட்டைக்குடி' எனும் கிராமத்தில், 1883-ஆம் ஆண்டு மே 7-ஆம் நாள் வேம்பப்பிள்ளை-காமாட்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.÷வல்லத்திலும், கும்பகோணத்திலும் மூன்றாம் படிவம் வரை படித்தார். உமாமகேசுவரனாருக்குப் பன்னிரண்டு வயதாகும் போது, அவரது அன்னை காலமானார். எனவே, கரந்தையில் உள்ள அவரது சிற்றன்னையான பெரியநாயகத்தம்மையாரின் பொறுப்பில் விடப்பட்டார். தஞ்சாவூர் தூய பேதுரு கல்லூரியில் உமாமகேசுவரனார் நான்காம் படிவத்தில் சேர்க்கப்பட்டார். அவரது படிப்பு முடிவதற்குள் தந்தை வேம்பப்பிள்ளையும் காலமானார். உமாமகேசுவரனாரின் சிற்றன்னை இவரைத் தம் மூத்தமகன் போலவே வளர்த்துவந்தார். தஞ்சைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற உமாமகேசுவரனார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.நேர்மையான வழியில் செல்ல விரும்பிய அவருக்கு, அப்பணியில் நீடிக்க விருப்பமில்லை. எனவே, சட்டப்படிப்பு படிக்க சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். அக்கல்வியில் தேர்ச்சி பெற்ற பின்னர், தஞ்சை கே.சீனிவாசப் பிள்ளையிடம் சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார். பிறகு தாமே வழக்குரைஞர் தொழிலைச் செய்யத் தொடங்கினார்.தம் இருபத்தைந்தாம் அகவையில், உலகநாயகி எனும் அம்மையாரை மணந்தார். இவருக்கு பஞ்சாபகேசன், மாணிக்கவாசகம், சிங்காரவேலு என்ற மூன்று பிள்ளைகள். மூன்றாவது பிள்ளை, பிறந்து நான்கு மாதங்கள் ஆனபோது மனைவி உலகநாயகி காலமானார். தமது மனைவி இறந்த பின் மறுமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தார் உமாமகேசுவரனார்.துன்பத்துக்கு மேல் துன்பமாக, அவரது மூத்தமகன் பஞ்சாபகேசன் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது இறந்தார். அவரது பெயரில் கரந்தைக் கல்லூரியில் ஒரு நினைவு நிதியை ஏற்படுத்தினார். அதன் வழியாக ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்குப் பொருள் வசதி செய்ய வழிவகுத்தார்.உமாமகேசுவரனாரின் பேச்சாற்றல் வளர, அவரது வழக்குரைஞர் பணி மிகவும் உதவியாக இருந்தது. தம்மிடம் வரும் கட்சிக்காரர்களிடம் ""இவ்வளவு தொகை தர வேண்டும்'' எனக் கேட்கமாட்டார். பணம் கொடுக்க இயலாத நிலையில் உள்ள ஏழைகளுக்கு இலவசமாக வழக்காடி வெற்றி தேடித்தந்தார். இவரது நேர்மையை அறிந்த அன்றைய அரசு, அவரை "அரசு கூடுதல் வழக்குரைஞர்' பணியில் அமர்த்தியது.தஞ்சை வட்டக்கழகத்தின் முதல் அலுவல் சார்பற்ற தலைவராகவும் தொண்டாற்றியுள்ளார். அவரது பதவிக்காலத்தில் வரகூர்-அம்பது மேலகரச்சாலை மற்றும் ஆலங்குடி-கண்டியூர்ச் சாலைகள் போடப்பட்டன. மேலும் நாகத்தி, தொண்டரையன்பாடி என்னும் சிற்றூர்களுக்குச் செல்ல ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்ட ஏற்பாடு செய்தார். இவர் பொறுப்பேற்ற போது நாற்பது அல்லது ஐம்பது தொடக்கப்பள்ளிகள் தான் இருந்தன. உமாமகேசுவரனார் அந்த எண்ணிக்கையை நூற்று எழுபதாக உயர்த்தினார்.கூட்டுறவு இயக்கத்தில் அவருக்கிருந்த ஆர்வத்தால், 1926-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் நாள், கூட்டுறவு நிலவள வங்கி ஒன்று தொடங்க முயற்சி எடுத்தார். 16.2.1927 முதல் கூட்டுறவு அச்சகம் ஒன்றை ஏற்படுத்திச் செயல்படுத்தினார். இதேபோல 1938-இல் கூட்டுறவு பால் உற்பத்தி விற்பனைக் கழகத்தையும் தொடங்கினார். இவற்றுக்கெல்லாம் உமாமகேசுவரனாரின் சிறந்த நிர்வாகத் திறனே காரணம்.1911-ஆம் ஆண்டு மே 14-ஆம் நாள் தொடங்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவராக உமாமகேசுவரனாரைத் தேர்ந்தெடுத்தனர். இன்று ஆயிரக்கணக்கான நூல்களைப் பெற்று விளங்கும் கரந்தைத் தமிழ்ச் சங்க நூல் நிலையம் அவர் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டதாகும். அன்றே தொழிற்கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்த உமாமகேசுவரனார், தமிழ்ச் சங்கம் சார்பில் 6.10.1916-இல் செந்தமிழ்க் கைத்தொழிற் கல்லூரியைத் தொடங்கினார். மேலும், சங்கத்தின் சார்பில் 1928-29-இல் கட்டணம் இல்லா மருத்துவமனை தொடங்கப்பட்டது. உமாமகேசுவரனார் சங்கம் தொடங்கிய நான்காவது ஆண்டிலேயே "தமிழ்ப்பொழில்' என்னும் மாத இதழ் தொடங்கப்பட்டது. தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பல அரிய நூல்களை வெளியிட்டார். 1915-இல் கட்டணமில்லாப் படிப்பகம் ஒன்றையும் தொடங்கினார். இவரது பெரும் முயற்சியின் விளைவாக தமிழ்ச் சங்கத்திற்காக 1928-30-இல் "கரந்தைத் தமிழ்ப் பெருமன்றம்' எனும் கட்டடம் கட்டப்பட்டது.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா 1938 ஏப்ரல் 15,16,17 ஆகிய நாள்களில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் முதல் நாளன்று ஞானியாரடிகள் தலைமையில், நாவலர் சோமசுந்தர பாரதியார் முன்மொழிய உமாமகேசுவரனாருக்குத் "தமிழவேள்' பட்டம் வழங்கப்பட்டது. அவ்விழாவின் இரண்டாம் நாளில், கரந்தைத் தமிழ்க் கல்லூரியை தொடங்க வழிவகுத்தார் உமாமகேசுவரனார்.துறையூரில் நடைபெற்ற மாவட்டத் தமிழர் மாநாட்டில் நிகழ்த்திய வரவேற்புரை, நெல்லைப்பாலம் இந்துக் கல்லூரியில் நடந்த சென்னை மாகாணத் தமிழர் முதல் மாநாட்டில் ஆற்றிய தலைமை உரை போன்றவை உமாமகேசுவரனாரின் பேச்சாற்றலை விளக்குவன. "தமிழ்ப்பொழில்' இதழில் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும், தலையங்கங்களும் அவரின் எழுத்தாற்றலுக்குச் சான்று பகர்வன. இவரது முயற்சியால்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றத்திலும், கலை மன்றத்திலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் ஓர் இடம் கிடைத்தது.தமிழில் நிறைய கலைச்சொற்கள் உருவாக வேண்டும் என்னும் விருப்பம் கொண்ட உமாமகேசுவரனார், தமிழ்ப்பொழில் இதழில் சாமிவேலாயுதம் பிள்ளை என்பவரைக் கொண்டு, கணக்கு, அறிவியல் ஆகிய பாடங்களுக்கு நல்ல கலைச்சொற்களை உருவாக்கித் தந்தார்.ஞானியாரடிகளின் மணிவிழாவின் போது, "செந்தமிழ்ப் புரவலர்' எனும் பட்டத்தை ஞானியாரடிகள் அவருக்கு அளித்தார். சைவசமயத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த இவர், மற்ற சமயங்களை வெறுக்கவோ, எதிர்க்கவோ இல்லை. மாறாக பிற சமயங்களின் வளர்ச்சிக்கு உதவி புரிந்துள்ளார்.தாகூரால் உருவாக்கப்பட்ட சாந்திநிகேதன் போல, தம்மால் உருவாக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கமும் விளங்க வேண்டும் என்று எண்ணினார். அதன் பொருட்டுத் தம் நண்பர் அ.கணபதிப் பிள்ளை என்பவருடன் வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார். கொல்கத்தா சென்று சாந்திநிகேதனைப் பார்வையிட்டார்.பிறகு காசி இந்துப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டார். அப்போது அவரது உடல்நிலை குன்றியதால், அயோத்தியின் அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி 1941-ஆம் ஆண்டு மே 9-ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.கரந்தைத் தமிழ்ச் சங்கம், ராதாகிருஷ்ணன் தொடக்கப் பள்ளி, உமாமகேசுவரர் மேல்நிலைப் பள்ளி, கரந்தை கலைக் கல்லூரி, திக்கற்ற மாணவர் இல்லம், தமிழ்ச் சங்க நூல் நிலையம், படிப்பகம், தமிழ்ப்பெருமன்றம், தமிழ்ப்பொழில்-இதழ் ஆகியவை அனைத்தும் அவரது நினைவைப் பெருமையுடன் நிலைநிறுத்துகின்றன.