Sunday, August 30, 2015

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

   pakuththarivukavignar_ilakkuvanar_thalaippu
  சங்கப்புலவர்கள் மரபில் அகவற்பாக்கள் பலவற்றை எழுதியுள்ள பேராசிரியர்  இலக்குவனார் அவர்கள், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய பாவகைகளிலும் பாக்கள் யாத்துச் செந்தமிழ்வளர்ச்சிக்குத் தம் பங்களிப்பை அளித்துள்ளார். விருத்தம், கண்ணி, கீர்த்தனை வடிவங்களில் இசைப்பாடல்களையும் எழுதித் தமிழிசை இயக்கத்திற்கு எழுச்சியும் ஏற்படுத்தியுள்ளார். தமிழர் தலைவர்கள் பற்றியும், தமிழறிஞர்கள் பற்றியும் பாடல்கள் எழுதியுள்ளதுடன், வாழ்த்துப் பாடல்கள், இரங்கற்பாக்கள், பொங்கல் வாழ்த்துக் கவிதைகள், திருமணநாள் வாழ்த்துகள், படையல் கவிதைகள் எனப் பல்வேறு தலைப்புகளில் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களின் கவிதைப் படைப்புகளைப் பிரிக்க இயலும். தமிழினத் தந்தை பெரியார் ஈ.வெ.இரா., தமிழவேள் உமாமகேசுவரனார், தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதியார், வள்ளல் அழகப்பனார், மனிதருள் மாணிக்கம் நேரு, பேரறிஞர் அண்ணா, கருமவீரர் காமராசர், நாவலர் இரா.நெடுஞ்செழியன், பொன்மனச் செம்மல் ம.கோ.இராமச்சந்திரன், அறிவியல் அறிஞர் கோ.து.நாயுடு, முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், கல்வி வள்ளல் கருமுத்து தியாகராசர், இந்தியை எதிர்த்துத் தீக்குளித்த செந்தமிழ் மறவன் சின்னச்சாமி, முத்தமிழறிஞர் கலைஞர் என இப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஒருசாலை மாணாக்கர் கிருட்டிணமூர்த்தி போன்ற நண்பர்களுக்கும் பிற தமிழன்பர்களுக்கும் பாடிய திருமண வாழ்த்து, பணித் தோழர் அ.கி.பரந்தாமனார் முதலிய தமிழறிஞர்களுக்குப் படைத்தளித்த பிறந்தநாள் பெருமங்கல வாழ்த்து என இப்பட்டியல் மேலும் நீளும்.

      பாடல்கள் பிறந்த சூழல் எதுவாயினும், அனைத்தும் உயிரோட்டம் உள்ளவையாகவும் உயர்ந்த நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையாகவும் உணர்ச்சி மிக்கவையாகவும் தமிழ்ச் சமுதாயத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டவையாகவும் அமைந்தமையையும் தமிழ்க் கவிதை வரலாற்றில் பேராசிரியர் இலக்குவனாருக்குச் சிறப்பான ஓர் இடம் உண்டுஎன்பதையும் ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர். பேராசிரியர் பின்பற்றிய கவிதை மரபும் கையாண்ட உவமை அணிகளும் உருவகச் சிறப்புகளும் எளிய நடையும் புதிய சொல்லாக்கங்களும் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் ஆகியவற்றின் தாக்கங்களும் மரபு வழியிலான புதுக்கவிதைத் தோற்றத்திற்கு வழிகாட்டிய சூழலும் அறிஞர்களால் சிறப்பிக்கப் பெற்று, செம்மொழித்தமிழுக்கான பங்களிப்பில் அவரது முதன்மைச் சிறப்பை உணர்த்துகின்றன.
     
  பேராசிரியர் அவர்களின் கவிதைப் பணிகளைக் குறித்துப் பேராசிரியர் முனைவர் ம. இராமச்சந்திரன் என்பார், “இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வுஎன்னும் தலைப்பில் ஆய்வேட்டை அளித்து ஆய்வியல் நிறைஞர்; பட்டம் பெற்றுள்ளார். இவ்வாய்வேட்டில் இவை குறித்து அவர் விரிவாக விளக்கியுள்ளார்.

    “எழுத்து என்பது இலக்குவனாரைப் பொருத்துக் கவிதையாகும். எந்த ஒரு செய்தியையும் கேள்விப்பட்ட மாத்திரத்தில் அகவல் நடையில் எழுதிவிடுவார்என்கிறார் அவரது மாணாக்கரான கவியரசு நா.காமராசன். இலக்குவனார் உரைநடைகூடச் செய்யுள் நடைபோலத் திட்ப நுட்பம் செறிந்து விளங்குகிறது. ஓசை நயம் பொருந்திப் படிப்போர்க்குக் கழிபேருவகை ஊட்டும் தன்மை உடையதாய் விளங்குகிறது. . . . . . .அகவல் ஓசை பொருந்தி அமைந்துள்ளது. செய்யுள் நூல் போல ச் செவிக்கு இன்பம் பயக்கின்றது.…” என்கிறார் ஆய்வாளர் முனைவர் ம. இராமச்சந்திரன். இவ்வாறு பேராசிரியரின் உரைநடையே செய்யுள் இன்பம் போல் சிறந்துள்ளது எனில் அவரின் பாடல்கள் சிறப்பு பெற்றுள்ளமையில் வியப்பு எதுவும் இல்லை எனலாம்.

      செந்தமிழ்மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் சிறந்த கவித் திறனையும் தமிழ்ப் புலமையையும் தமிழ்ப் பற்றையும் சான்றாண்மையையும் தமிழுக்காக வாழும் தகைiமையையும் வறியவர்க்கு உதவும் வள்ளல் தன்மையையும் அறவுணர்வையும் பகுத்தறிவு நோக்கத்தையும் தீமைகளை எதிர்க்கும் துணிவையும் உண்மையைக் காப்பதற்கான போராட்ட உணர்வையும் குறள் நெறி வாழ்வையும் அவரது கவிதைகள் பற்றிய ஆய்வின் மூலம் பேராசிரியர் ம.இராமச்சந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar thiruvalluvan01

Friday, August 28, 2015

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்


pakuththarivukavignar_ilakkuvanar_thalaippu
      உலக மொழிகளின் தாயான தமிழ் மொழி, தனக்குரிய செம்மை நிலையைப் பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அடைந்து விட்டது. உலகின் பல பகுதிகளில் மொழியே பிறந்திருக்காத பொழுது, ஏன், மக்களினமே தோன்றியிராத பொழுது இத்தகைய உயர்தனிச் செம்மை நிலையைத் தமிழ் அடைந்து விட்டது. அத்தகைய வளர்ச்சிக்கும் அதன் தொடர்ச்சியான செம்மைக்கும் பல்வேறு புலவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், கட்டுரையாளர்கள், படைப்பாளர்கள், சொற்பொழிவாளர்கள் எனப் பல நிலையில் உள்ளவர்களும் பாடுபட்டுள்ளனர்; பாடுபட்டு வருகின்றனர்.
  இத்தகையோருள் 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்களில் குறிப்பிடத்தக்க முதன்மையானவர்களில் ஒருவராகத் திகழ்பவரே செந்தமிழ்க் காவலர் முனைவர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் ஆவார்.
   பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களைக் குறள்நெறிக் காவலராகச், சங்கத்தமிழ்ப் பரப்புநராகத், தொல்காப்பிய அறிஞராக, இலக்கிய உரையாசிரியராக, நூலாசிரியராக, மொழியறிஞராக, நற்றமிழ் நாவலராக, மொழிபெயர்ப்பு அறிஞராகச், சிறந்த கல்வியாளராக, இரு மொழி இதழாளராக, சீர்திருத்தச் செம்மலாகப், பயிற்று மொழிப் போராளியாகத், தமிழ்க் காப்புப் போரின் தலைமைத் தளபதியாக நாடு நன்கறியும். தமிழறிஞர் வ.சுப.மாணிக்கம் போன்றோர், ”பேராசிரியர் சி.இலக்குவனார் ஒரு சிறந்த கவிஞர். அகவல் பாடுவதில் வல்லவர்” எனக் கூறி இருப்பினும் பைந்தமிழ்ப் பாவலராக அவர் தமிழுக்கு அளித்த கொடையினைப் பலரும் அறியவில்லை.
  செந்தமிழ்மாமணி பேராசிரியர் சி.இலக்குவனாரின் கவிதைப் பங்களிப்பு அவரது மாணவப் பருவத்திலேயே அரும்பி விட்டது. தாய்த்தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமையாளராக விளங்கிய பேராசிரியர் பள்ளிப் பருவத்திலேயே வரவேற்புப் பாக்கள், வழியனுப்புப் பாக்கள் எனப் பலவகைப் பாக்களைப் பிற மொழிச் சொற்களைக் கலக்காமல், செந்தமிழ் நடையில் எளிமையாக எழுதியுள்ளார். இவற்றில் குறிப்பிடத்தக்கது, கல்விக்கூட ஆண்டு மலரில் இடம் பெற்ற, ஆங்கிலக் கவிதை யொன்றின் தழுவலான, ‘உலகம் நமதே! உயர்ந்தோர் நாமே!’ என்னும் அகவற்பாடலாகும். பொதுமை உணர்வையும் இன உணர்வையும் வெளிப்படுத்தும் தனித்தமிழ்ப் பாடலை இயற்றியதன் மூலம் தமது தன்மான உணர்வையும் வாழ்க்கைப் பாதையையும் உணர்த்தியுள்ளார் பேராசிரியர் அவர்கள். அகவல் பா அல்லது ஆசிரியப் பா என்பது சங்கப் புலவர்களின் நடையாகும். இதனை மாணவப் பருவத்திலேயே எளிதில் கையாண்ட பேராசிரியர், தாம் சங்கப் புலவர் வழி வந்த தங்கத் தமிழ்ப் புலவர் என்பதை உலகிற்குக் காட்டியுள்ளார்.
 பேராசிரியர் அவர்களின் படைப்புகளில் நூலாக வந்த முதல் பாவியப் படைப்பு, “எழிலரசி அல்லது காதலின் வெற்றி” என்பதாகும். புலவர் மாணாக்கராய் இருக்கும் பொழுதே இப்பாவியத்தைப் படைத்துச் செந்தமிழ் வளர்ச்சிக்குத் தம் பங்களிப்பைத் தொடங்கியுள்ளார் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள். மொழிபெயர்ப்புத்திறன் மிக்க பேராசிரியர் அவர்கள், அறிஞர் கீட்சு அவர்களின் ‘இசபெல்லா’ நூலைத் தழுவியே இதனைப் படைத்துள்ளார். இருப்பினும் மொழி பெயர்ப்புப் படைப்பு என்று உணராத அளவில், தம் தமிழ்மொழி, இன உணர்வையும் பொதுவுடைமை உணர்வையும் குழைத்து, மொழிமரபைப் பின்பற்றி, மூல நூல் போன்றே படைத்தளித்துள்ளார். எனவே, படிக்கும் பொழுதே(1933) தனித்தமிழ்க் குறுங்காவியம் படைத்த முதல்வராகப் பேராசிரியர் திகழ்கிறார் என்பதில் ஐயமில்லை. இந்நூல் பற்றிச் செல்வி கு.இராசலக்குமி என்பார், தம் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கான ஆய்வேட்டில், இதன் நடைச்சிறப்பு, பொருட் சிறப்பு பற்றிப் பாராட்டியுள்ளார்.
  திராவிட இயக்க உணர்வில் ஊறிய பேராசிரியர் அவர்கள், இப்பாவியத்தின் தொடக்கத்திலேயே,
            “பெற்றோர் ஈட்டிப் பேணிய பொருளை
          மைந்தரைப் போலவே மகளிர் தமக்கும்
          உரிமையாக்கும் ஒரு விதி”
குறித்துக் குறிப்பிட்டுப் பெண்களுக்கும் பெற்றோர் சொத்தில் உரிமையுண்டு என்பதை வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு வலியுறுத்தியுள்ளோர் பலராக இருப்பினும், அதனைச் சட்டமாகக் கொணர்ந்தவர் பேராசிரியரின் மாணாக்கரான முத்தமிழறிஞர் கலைஞர் என்னும் பொழுது இவ்வரிகளுக்குச் சிறப்பு வந்துள்ளது எனலாம்.
            “எம்முடைச் செல்வம் நும் முடைத்தாகச்
          செய்து அன்புடன் சேர்ந்தே உழைப்போம்
          உழைப்பின் பயனையும் ஒருங்கே துய்த்து
          எஞ்சிய பகுதியை எய்ப்பில் வைப்பாய்க்
          கொண்டு வாழக் கூடுவீராக!”
என்னும் வரிகள், கூட்டுழைப்பையும் சேமிப்பையும் வலியுறுத்தும் சிறந்த வரிகளாகும். பேராசிரியர் அவர்கள், எளிய நடையில் எழுதினாலும், எய்ப்பில் வைப்பு போன்ற சங்கத்தமிழ்ச் சொல்லாட்சிகளையும் மக்களிடையே உலவவிட்டுச் செந்தமிழ்ப் பணிக்குத் தம் பங்களிப்பையும் பாங்குடன் அளித்துள்ளார் எனலாம்.
       எழிலரசி படைப்பு குறித்து, “தமிழ் வளர்ச்சியில் டாக்டர் சி.இலக்குவனார் பங்களிப்பு” என்னும் தலைப்பில் அளித்துள்ள ஆய்வேட்டில், முனைவர் கா.மாரிமுத்து அவர்கள், பேராசிரியர் கையாண்டுள்ள சொல், பொருள், அணி நயங்கள், பழமொழிகள், வழக்காறுகள் முதலியவற்றின் சிறப்பை எடுத்துக் கூறி, கற்போர்க்குக் கலையின்பம் நல்கும் வகையில் காவியத்தைப் படைத்துள்ளார் என விளக்கியுள்ளார்.
     “இவர் கவிதையில் அமைந்துள்ள சமுதாய மறுமலர்ச்சிச் சிந்தனைகளும் பெண்ணுரிமை பேணலும் பழங்காலத் தமிழர்களின் ஒழுகலாறுகளும் தற்காலத்திலுள்ள சீர்கேடுகள், அறங்கூறவை நடுவரின் நிலை, பணியாளர் பொருள் வேட்கையால் கையூட்டு (இலஞ்சம்) பெற்று நீதி பிறழ்ந்து நடத்தல் போன்றன குறிக்கப் பெற்றிருப்பதும் வாழ்வியல் நன்னோக்கு அடிப்படையிலும் இக்காப்பியம் யாக்கப் பெற்றுள்ளதை விளக்கும்” எனக் காப்பியத்தின் அடிப்படையையும் முனைவர் கா.மாரிமுத்து அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
   இவ்வாறு, அயல்மொழிச் சிறு கதையைக் கவிதையில் அளித்து, மொழிபெயர்ப்புப் பணியிலும், கவிதையுலகிலும், கதையுலகிலும் தம் பங்களிப்பை ஒரு சேர அளித்துள்ளார் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்கள். எனவே, செந்தமிழ்த்தாய்க்கு நற்றமிழ் நடையில் நன்னோக்குப் பாவியம் ஒன்றை அணிவித்துக் கவிஞர் என்ற முறையில் செம்மொழித் தமிழ் வளர்ச்சிக்கான தன் பங்களிப்பை மாணாக்கர் பருவத்திலேயே பேராசிரியர் அவர்கள் அளித்துள்ளார் எனலாம்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
 

Sunday, August 02, 2015

கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இரா.மோகன்


kavimaniandiraa.mohan
  
கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை உலகில் தடம் பதித்த கவிஞர்கள் நால்வர். இவர்கள் ஒவ்வொருவாருக்கும் தனிச்சிறப்பு உண்டு. நால்வருள் மோனையைப் போல் முன்னிற்பவர் பாரதியார். இவர் 39 ஆண்டுகளே வாழ்ந்து கவிதை உலகில் சாதனை படைத்தவர். பாரதியாருக்கு அடுத்த நிலையில் புகழ் பெற்று விளங்கியவர் பாரதிதாசன்; பாரதியாருக்கு ஒன்பது ஆண்டுகள் இளையவரான இவர் 73 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர்.
   கவிமணி சி.தேசிக விநாயகம் (பிள்ளை) (1876–1954) பாரதியாரை விட ஆறு ஆண்டு மூத்தவர். தமிழில் ‘குழந்தைப் பாடல்’ என்னும் இலக்கிய வகையைத் தொடங்கி வைத்த பெருமை இவருக்கு உரியது; எனவே ‘குழந்தைக் கவிஞர்’ என்னும் சிறப்புப் பெயர் வாய்த்தது. பாரதியாருக்கு ஆறு ஆண்டுகள் பின்னவரான நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் (பிள்ளை) 84 ஆண்டுக் காலம் வாழ்ந்தார்.
  பாரதியும் கவிமணியும் : பாரதிக்கு நிகரான சொல்லாற்றல் படைத்தவராகக் கவிமணி விளங்கினார். எனினும் இருவருக்கும் இடையே பெரிய வேறுபாடும் இருந்தது. அறிஞர் சி.தில்லைநாதன் இப்படி கூறுகிறார்: “பாரதியின் சொற்கள் பகைவர்களைத் தாக்கும் போர் வீரர்களைப் போலவோ வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளைப் போலவோ செயலாற்றுகின்றன. கவிமணியின் சொற்கள் அமைதி நெறியில் சேவை செய்யப் புகுந்த தொண்டர்களைப் போல அமைதியாகத் தம் பணியைச் செய்கின்றன”.
   கவிமணி எந்த ஒரு கருத்தினையும் மென்மையான சொற்களைக் கையாண்டு அமைதியாகவே பாடுவார். ‘ஐயா’ ‘அப்பா’ ‘அம்மா’ என்பன போன்ற சொற்களே அவரது மொழி நடையில் பயின்று வரும். “பாடுபடுவருக்கே இந்தப் பாரிடம் சொந்தம் ஐயா!” என்றும் “ஏழை என்று ஒருவர் உலகில் இருக்கல் ஆகாது ஐயா!” என்றும் “மங்கைய ராகப் பிறப்பதற்கே – நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா!” என்றும் “ஊக்கம் உடையவர்க்குத் – துன்பம் உலகில் இல்லை அம்மா!” என்றும் பாடுவது கவிமணியின் முத்திரைப் பண்பு.
   கவிமணியின் வாழ்க்கை அமைதி, இனிமை, இரக்கம், எளிமை, கருணை, பொறுமை ஆகிய நற்பண்புகள் பொருந்தியது. அவர் பாடிய கவிதைகளிலும் இப் பண்புகள் கொலுவிருக்கக் காணலாம். “நீண்ட காலமாகப் பெண்கள்கல்விச்சாலையில் ஆசிரியராக இருந்தமையால் இக் குணங்கள் சிறந்து விளங்குவதற்கு இடமிருந்தது.  ஆவேசம் பரபரப்பு முதலியன சிறிதளவும் கிடையாது. கவிமணியோடு நாற்பது ஆண்டுகளாகப் பழகியுள்ளேன்; என்றாலும் ஒரு முறையாவது யாரோடும் அவர் கோபங்கொண்டதை நான் பார்த்ததே இல்லை” எனக் குறிப்பிடுவார் பேராசிரியர் வையாபுரி.
   ‘உள்ளத்தில் உள்ளான் இறைவன்!': முற்போக்கான சீர்திருத்தக் கருத்தினையும் இனிய வடிவில் படைத்துத் தரும் வல்லமை பெற்றவர். இதனை விளக்கக் ‘கோயில் வழிபாடு’ என்னும் கவிதை ஒன்றே போதும்.
கோயில் முழுதும் கண்டேன் – உயர்
கோபுரம் ஏறிக் கண்டேன்
தேவாதி தேவனை யான் – தோழி!
தேடியும் கண்டிலனே
எனத் தொடங்கும் அக் கவிதை அற்புத மூர்த்தியினை, -ஆபத்தில் காப்பவனை – கோயில் முழுவதும் தேடி அலைவதைச் சொல்கிறது. தெப்பக் குளத்திலோ சுற்றித் தேரோடும் வீதியிலோ சிற்பச் சிலையிலோ நல்ல சித்திர வேலையிலோ இறைவனைக் காண முடியவில்லையாம். இறைவன் உண்மையில் எங்கே தான் இருக்கிறான்? அவனை எப்படி காண்பது? இவ்வினாக்களுக்கு கவிமணி இக் கவிதையின் நிறைவுப் பகுதியில் தரும் விடை:

உள்ளத்தில் உள்ளான் அடி! -அது நீ
உணர வேண்டும் அடி
உள்ளத்தில் காண்பாய் எனில் – கோயில்
உள்ளேயும் காண்பாய் அடி!
  ‘இறைவன் உண்மையான அன்பு கொண்ட அடியவர்களின் உள்ளத்தில் உள்ளான்; இந்த அடிப்படையான உண்மையை உணர்ந்து கொண்டால் போதும். உள்ளத்தில் இறைவனைக் காணக் கற்றுக் கொண்டால் கோயில் உள்ளேயும் அவனைக் கண்டு கொள்ளலாம்’ என்ற முற்போக்கான இறைநெறிச் சிந்தனையை எவ்வளவு எளிய தமிழில் தெளிவாகச் சொல்லி விட்டார் என்று பாருங்கள்!
 குழந்தைப் பாடல்: கவிமணி குழந்தைகளுக்கு என்றே பல பாடல்களை எழுதியுள்ளார். அவை ‘குழந்தைச் செல்வம்’ என்ற பெயரால் தனி நூலாக வெளியிடப் பெற்றுள்ளன. அதில் மிகச் சிறந்தது ‘பசுவும் கன்றும்’ பாடல்:
தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி.
அம்மா என்குது வௌ்ளைப் பசு – உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி.
நாவால் நக்குது வள்ளைப் பசு – பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி.
முத்தம் கொடுக்குது வெள்ளைப் பசு – மடி
முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி.
இதில் கடினமான சொல் ஒன்று கூட இல்லை. பாடலின் தொடக்கமும் முடிவும் அற்புதமாக அமைந்துள்ளன.
  மொழிபெயர்ப்புத் துறைக்கும் நிலையான பங்களிப்பினை நல்கியுள்ளார். ‘ஆசிய சோதி’யும் ‘உமார் கய்யாம் பாடல்களும்’ அவரது மொழி பெயர்ப்புத் திறனுக்கு சான்று.
வெய்யிற் கேற்ற நிழலுண்டு;
வீசும் தென்றல் காற்றுண்டு;
கையில் கம்பன் கவியுண்டு;
கலசம் நிறைய மதுவுண்டு;
தெய்வ கீதம் பலவுண்டு;
தொடர்ந்து பாட நீயுமுண்டு;
வையந் தரும்இவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ?”
இத்தகைய பாடல்களைப் படிக்கும் போது மொழி பெயர்ப்பு, தழுவல் என்ற எண்ணங்களே தோன்றாத; தமிழ் மொழி கவிதைகளைப் பாடி இன்புறுவது போன்ற உணர்வே ஏற்படும். இதுவே மொழி பெயர்ப்பாளர் என்ற முறையில் கவிமணி பெற்ற இமாலய வெற்றி.
  வெண்பாவிற்கோர் கவிமணி: வெண்பா இயற்றுவதிலும் வல்லவர் கவிமணி. அவரது வெண்பாக்களின் நடையும் எவ்வகையான சிக்கலும் இல்லாமல் உணர்ச்சியும் ஓசையும் கருத்தும் கற்பனையும் கை கோத்துச் செல்லும்; படிப்பவர் நெஞ்சில் நேரடியாகச் சென்று தெளிவாகப் பதியும். இரசிகமணி டி.கே.சி.யின் ஒரே மகனான தீபன் என்னும் தீக்காரப்பன் 32 அகவையிலேயே மறைந்த போது கவிமணி டி.கே.சி-க்கு அனுப்பிய வெண்பா இவ் வகையில் குறிப்பிடத்தக்கது.
“எப்பாரும் போற்றும் இசைத்தமிழ்ச் செல்வாஎன்
அப்பா அழகியசெல் லையா – இப்பாரில்
சிந்தை குளிரச் சிரித்தொளிரும் நின்முகத்தை
எந்தநாள் காண்பேன் இனி!”

  இவ் வெண்பாவைப் படித்து உள்ளம் உருகிய இரசிகமணி “தங்கள் உள்ளத்தின் கனிவு வெண்பாவில் தெளிந்து கிடக்கிறது. தமிழுலகில் இந்த வெண்பா எழுத ஒருவர்தான். அது தாங்கள் தான்… கவிக்கு உயிரையே கொடுக்கலாம் என்று சொல்லுவது நம்மவர் மரபு. தங்கள் கவி உயிரைக் கொடுத்து வந்த மாதிரியே இருக்கிறது. தாங்களும் தமிழுமாகச் சேர்ந்து எவ்வளவோ ஆறுதலைத் தருகிறீர்கள்” எனக் கவிமணிக்கு மறுமொழி எழுதினார். ‘இப்படி ஒரு அற்புதமான கவிதை தமிழுக்குக் கிடைக்குமானால் உயிரைக் கொடுத்துக்கூட அதைப் பெறலாம்’ என இரசிகமணியைச் சொல்ல வைத்த அற்புதமான வெண்பா இது!
 “மக்களுக்கு நல்வாழ்வு வாழும் வழிகளெல்லாம்
சிக்கலறக் காட்டும் தினமலர்நீ – எக்கணமும்
வாடாது தெய்வ மலர்போல வாழ்ந்திடுக
நீடாழி சூழும் நிலத்து.”
என்பது ‘தினமலர்’ இதழை வாழ்த்திக் கவிமணி படைத்த அழகிய வெண்பா.
‘எது கவிதை?’ என்ற வினாவுக்குக் கவிமணி தரும் விடை…
உள்ளத்து உள்ளது கவிதை – இன்பம்
உருவெடுப்பது கவிதை;
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்து உரைப்பது கவிதை
கவிதைக்கு இங்ஙனம் வரைவிலக்கணம் வகுத்துத் தந்ததோடு நின்றுவிடவில்லை; அதன் படியே தெள்ளத் தெளிந்த தமிழில் – கவிதைகளைப் படைத்துத் தந்து நம் உள்ளத்தில் நிலைத்த இடத்தினைப் பெற்றவர் கவிமணி.
– முனைவர் இரா.மோகன்
எழுத்தாளர், பேச்சாளர்
94434 58286
dinamalar_muthirai-logo01