Saturday, July 29, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ) – இலக்குவனார் திருவள்ளுவன்



அகரமுதல 196,  ஆடி07, 2048 / சூலை 23, 2017


தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ)

பேராசிரியர் இலக்குவனாரின் உழைப்பால் மக்களிடையே ஏற்பட்ட தமிழுணர்வை அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய தி.மு.க. ஆட்சியிலும் இதே அவலம்தான் தொடர்ந்தது. 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டிலும்,
தமிழ்மொழிப்பற்றும் தாங்கிய புலமையும்
 இல்லோரெல்லாம் இனிதிடம் பெற்றனர்
எம்போன்றோரை எள்ளியே தள்ளினர்
எனப் பேராசிரியர் இலக்குவனார் வருந்தும் அளவிற்குத் தமிழ்ப்பகைவர்க்கு முதன்மை அளிக்கப்பட்டது. பகைவரையும் நட்பாக்க வேண்டும் என உணர்ந்தவர்கள் அன்பர்களின் சிறப்பைப் புறக்கணிக்கும் போக்கு இருந்தது. இருப்பினும் கட்டணம் செலுத்திப் பேராளராகப் பங்கேற்றுத் தமிழுக்கு எதிரான கருத்துகளைத் தமிழ்ப்பகைவர்கள் ஒலிக்கும் பொழுதெல்லாம் எதிர்த்து முழங்கிய அரிமாவாகப் பேராசிரியர் இலக்குவனார் திகழ்ந்தார். குறிப்பாகப் பிரான்சு நாட்டின் பேராசிரியர் ழீன் பிலியோசா இந்தியா முழுவதும் ஆரியம் பொதுமொழியாக இருந்ததாகத் தவறான கருத்து தெரிவித்தபொழுதும் ஐராவதம் மகாதேவன் கி.மு. முதல் நூற்றாண்டில்தான் தமிழ் எழுத்து வடிவம் கண்டது என வடிகட்டிய பொய்யை உதிர்த்த பொழுதும் பேராசிரியரின் கருத்துச் சம்மட்டிகள் அவற்றைத் தவிடுபொடியாக்கின எனலாம். தமிழ் மாநாடுகளின் நிலை குறித்த பேராசிரியரின் படப்பிடிப்பு வருமாறு:

 இன்தமிழ் பற்றி எவரும் எதனையும்
 துணிந்து கூறுவர்; பணிந்து கேட்டிடத்
 தமிழரும் உண்டு, தமிழறி வின்மையால்.
 தமிழ் பழித்தோனைத் தாய் தடுத்தாலும்
 விடேன் எனும் வீறுவிட்டே வாழ்வோர்.
 உண்மை வரலாறு ஓர்ந்து அறியாப்
 புல்லறி வுடையோர், புதிய கருத்தென
 இன்றமிழ் நூல்கள் எழுந்த காலத்தைப்
 பின்னே தள்ளிப் பெருமை அடைவர்!
 பட்டமும் பதவியும் பாரில் பெறுவர்!
 சான்றுகள் காட்டி ஆன்ற உண்மையைச்
 சாற்றும் புலவரைத் தூற்றி ஒதுக்குவர்!

இன்றைக்கும் இந்த நிலையே மேலோங்கி உள்ளமையால்தான் தமிழுக்காகக் குரல் கொடுப்போர் யாருமிலர் என்னும் அவலமும் மேலோங்குகிறது.
இதற்கிடையில் கல்வியமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் தமிழ்ப்பயிற்று மொழிக்கு எதிராகப் பேசியதால், “அவர் தமிழ் நாவலரா அல்லது  ஆங்கிலக்காவலரா” எனப் பேராசிரியர் இலக்குவனார் கேட்டது அவரிடம் நடுநிலை பிறழும் உணர்வை ஏற்படுத்தியது.  நாவலர் உரைகளை ஆங்கில இதழிலும் வெளியிட்டு அவர் கருத்தைப் பரப்பிய பேராசிரியர் இலக்குவனார் தமிழ்நலம் சார்ந்து கூறிய கருத்தைத்  தனக்கு எதிரானதாக எண்ணி அவருக்கு இடையூறு தந்தார். பேராசிரியர் இலக்குவனார் மதுரைத்தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய பொழுது அங்குள்ள மாணவர்கள் நாவலரை விழா ஒன்றிற்கு அழைக்க இருந்தனர். கல்லூரி முதல்வர் இசைவு தராமல் தடுத்து விட்டார். பேராசிரியர் இலக்குவனார்,  மாணவர்கள் கருத்தைக் கேட்கும் உரிமையைப் பறிக்கக் கூடாது என்றும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதால் எல்லா வகைச் செய்திகளையும் கேட்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் நல்ல பேச்சாளர்கள் அரசியல்வாதிகளாக உள்ளமையால் அவர்களைப் புறக்கணிக்க இயலாது என்றும் கூறி நாவலரைக் கல்லூரிக்கு அழைக்கச் செய்தார். யார் வருகைக்கான தடையை நீக்கப் பேராசிரியர் முனைந்து வெற்றி கண்டு வரச் செய்தாரோ, அந்த நாவலர்தாம் பேராசிரியர் இலக்குவனார் தமிழகக் கல்லூரிகளில் பணியாற்றுவதை விரும்பவில்லை. அவர் எண்ணியிருந்தால் ஒருநாளிலேயே பேராசிரியர் இலக்குவனாரின் பணிச்சிக்கல் தீர்ந்திருக்கும்.
  தமிழன்பர்கள் சிலர், மொழிபெயர்ப்பு நூல்களுக்குப் பரிசளிக்கும் திட்டம் அல்லது நிதிஉதவித்திட்டம் மூலம் ஐந்தாயிரம் உரூபாய் நிதி உதவி கிடைக்கும் என்று பேராசிரியரிடம் கூறி விண்ணப்பிக்க வேண்டினர்.  பேராசிரியர், தாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தொல்காப்பிய நூலுக்கான நிதி உதவி  வேண்டினார். உரிய பரிந்துரையுடன் கல்வியமைச்சருக்குக் கோப்பு சென்றது. “நிதி உதவி கிடைக்கும். நூல்வெளியீட்டுக் கடனை அடைக்கலாம்” என எண்ணினார் பேராசிரியர். விதி வகை இல்லாவிட்டாலும்கூட இத்தகைய மொழிபெயர்ப்பை ஊக்கப்படுத்தித் தமிழின் பெருமையை அயல் மொழிகளில் எடுத்துரைக்கப் புலவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் அரசு. ஆனால், கல்வியமைச்சரோ, “நம்மைக்கேட்டா எழுதினார்? அவரே நூலகங்களில் வைத்திட முயலட்டும். அவர்க்கு உதவி தேவை  யில்லை” எனப் பரிந்துரையை ஏற்காமல் மறுத்து எழுதியதால் அத்தொகை கிடைக்கவில்லை.
 பேராசிரியரின் தொல்காப்பிய ஆங்கில மொழி பெயர்ப்புத் திறனாய்வு நூலுக்குப் பேரறிஞர்தான் அணிந்துரை வழங்கியிருந்தார். சென்னையில் உலகத்தமிழ்மாநாடு நடைபெற்ற பொழுது இதற்கெனத் தனி அமர்வை ஒதுக்கினார். (ஆனால் இந்நிகழ்ச்சியுடன் தமிழகப்புலவர்குழு வரவேற்பையும் இணைத்ததால் நிகழ்ச்சி திட்டமிட்டவாறு அமையாமல் திசை திரும்பியது.) ஒருபுறம் முதல்வர் இந்நூலைச் சிறப்பிக்கும் வகையில் தாம்போகும் வெளிநாடுகளில் இதனை வழங்குகின்றார். மறு புறம் அனைத்துக் கல்வி நிலையங்களையும் நூல்நிலையங்களையும்  வாங்குமாறு ஆணையிடும் அதிகாரத்தில் உள்ள அமைச்சரோ மொழி பெயர்ப்பு நூல்களுக்கு உள்ள நிதிஉதவியைக்கூடத் தர மறுக்கிறார். இவ்வாறு, தமிழின் பேரைச் சொல்லித் தகுதிகள் பெற்றவர்கள் தமிழ்நலம் நாடாமலும் நன்றி கொன்றும் நடக்கும் போக்கால் வருந்திய பேராசிரியர் இந்நிகழ்வு குறித்துப் பின்வருமாறு நாட்குறிப்பில் குறித்துள்ளார்:

(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, July 28, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (12) – வல்லிக்கண்ணன்

அகரமுதல 196,  ஆடி07, 2048 / சூலை 23, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

(12)

3.ஒருமைப்பாட்டு உணர்வுதொடர்ச்சி
  அடிமையில் மோகமும், அடிமைத்தனமும் ஒழிக்கப் படவேண்டும். அதற்கு மக்கள் விழிப்பும் எழுச்சியும் பெற்றாக வேண்டும். கொடுமைகள் நீக்கிக் கொள்கைகள் காத்து பெரிய முன்னேற்றம் ஆக்கி, விந்தைகள் நிலைக்கச் செய்து, வெற்றி மேல் வெற்றி சேர்த்து, தந்தையர் நாட்டை ஏற்றம்தனில் நிலை நாட்டி வைப்போம் என்று முழக்கமிடுகிறார் பெருங்கவிக்கோ. பாரினில் பாரதம் மேன்மை பெற்று விளங்க நாட்டில் உற்பத்தி பெருக வேண்டும்; ஓங்கிடும் நலங்கள் எல்லாம் விற்படு குறியைப் போல மேலோங்க வேண்டும்! வேண்டும்!
அற்புதம் இந்தியர்கள்
அரும்திற உழைப்பென்றேதான்
பற்பல நாடும் போற்றும்
பாய்புகழ் பெருக வேண்டும்
என்று அவர் ஆசை வளர்க்கிறார். அவரது கனவுகள் மேலும் பெருகுகின்றன. –
தன்னிறைவாக நம்மின்
 தாய்நாட்டு மக்களெல்லாம்
பன்னலம் அடையவேண்டும்!
பாரெலாம் நம் பொருட்கள்
 நன்னலப் பவனி வந்து
 நலம்தர வேண்டும்! எங்கும்
இன்னல்கள் இல்லா வாழ்க்கை
இலங்கிடச் செய்ய வேண்டும்!
தனி மனிதர் வாழ்விலும் சரி, நாட்டின் நிலைமையிலும் சரியே, வளமும் நலமும் பெருகுவதற்கு எல்லாரும் உழைத்தாக வேண்டும். இது தவிர்க்க முடியாத விதியே ஆகும். இதைக் கவிஞர் ஒவ்வொரு கட்டத்திலும் அழுத்த மாக எடுத்துக் கூறுகிறார்.
 இல்லாமை ஒழிய வேண்டும்
எல்லாரும் உழைக்க வேண்டும்
 நல்லாறாம் ஈதொன்றைத்தான்
 நாமென்றும் ஏற்கவேண்டும்!
வல்லமை சொல்லில் அல்ல,
 வற்றாத செயலில் காட்டி
வெல்லவே வேண்டும் நம்மின்
வேதனை மாற்ற வேண்டும்’
என்று அவர் அறிவுறுத்துகிறார்.
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்

Sunday, July 23, 2017

மறக்க முடியுமா? – ஔவை துரைசாமி – எழில்.இளங்கோவன்



அகரமுதல 196,  ஆடி07, 2048 / சூலை 23, 2017

மறக்க முடியுமா? – உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி


கல்வெட்டுகளைப் படியெடுத்தல், ஏடுபார்த்து எழுதுதல், செப்பேடுகளைத் தேடி ஆய்வு செய்தல் ஆகியனவற்றில் தேர்ந்த இலக்கிய – இலக்கண ஆய்வறிஞர், உரைவேந்தர், நாவலர், பேரவைத் தமிழ்ச்செம்மல், சித்தாந்த கலாநிதி என்று தமிழ் உலகத்தால் போற்றப்பட்டவர் ஔவை சு.துரைசாமி(பிள்ளை) அவர்கள்.
கவிஞர் சுந்தரம்(பிள்ளை), சந்திரமதி அம்மையாரின் ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் இவர்.
பிறந்த ஆண்டு  : ஆவணி 21, 1933 / 1902 செட்டம்பர் 5.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் சொந்த ஊர் ஔவையார் குப்பம் என்பதனால், இவர் ஔவை துரைசாமி என்று அழைக்கப்பட்டார்.
இவரின் தொடக்கக் கல்வி உள்ளூரில். அதில் திண்ணைக்கல்வியும் அடங்கும்.
திண்டிவனத்தில் அமெரிக்கன் ஆர்க்காடு நற்பணி உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு வரை பயின்றார். ஊரிசு கல்லூரியில் அவரின் கல்வி தொடர்ந்தது.
குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி. அதனால் கல்லூரி இடை நிறுத்தமாகி, ‘உடல் நலத் தூய்மை’ மேற்பார்வையாளராகப் பணியாற்றினார்.
அக்காலத்தில் ‘துப்புரவு’ பணித்துறை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பணியில் 6 மாதங்கள் பணியாற்றிப் பின் அதிலிருந்து விலகினார், காரணம் அவரின் ஆழ்ந்த தமிழ்க் காதல்தான்.
பாவரசு வேங்கடாசலம் அவர்களிடம் ஔவை துரைசாமி தமிழ் இலக்கிய, இலக்கணங்களைப் பயின்றார். நாவலர் ந.மு.வேங்கடசாமி(நாட்டார்) அவர்களிடமும் தம் தமிழ் அறிவை வளர்த்துக்கொண்டார்.
சைவ சமயம் குறித்த கல்வியைக் கந்தசாமித் தேசிகர், தவத்திரு வாலையானந்தா அடிகள் ஆகியோரிடம் பயின்றார்.
அன்றைய வட ஆர்க்காடு மாவட்டத்தில் சில பள்ளிகளில் தமிழாசிரியர் பணி;
இராணிப்பேட்டை காரைத் தொடக்கப்பள்ளியில் தமிழ் ஆசிரியர்;
1929 தொடக்கம் சில ஆண்டுகள் செங்கம், போளூர், காவிரிப்பாக்கம், செய்யாறு ஆகிய இடங்களில் பள்ளித் தலைமையாசிரியர் பணி.
கரந்தைத் தமிழவேள் உமா மகேசுவரனார் அவர்களால் கரந்தைத் தமிழ்ச் சங்கப் பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப் பெற்ற ஔவை துரைசாமி, அப்பணியில் இருந்துகொண்டே சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘வித்துவான்’ படிப்பில் தேர்ச்சி பெற்றார்.
1942ஆம் ஆண்டு திருப்பதி திருவேங்கடவன் கீழ்திசைக் கல்லூரியில் பேராசிரியர் ஆனார்.
1943 தொடக்கம் 8 ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுத்துறை விரிவுரையாளராக இருந்தபோது இவர் எழுதிய சைவ சமய இலக்கிய வரலாறு என்ற நூல் அப்பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பெற்றது.
1951ஆம் ஆண்டில் இவர் மதுரை, தியாகராயர் கல்லூரியில் பேராசிரியர் ஆனார்.
தொடர்ந்து மதுரைப் பல்கலைக்கழக ஆய்வுப் பேராசிரியராக இருந்தபொழுது இவரால் எழுதப் பெற்ற ‘ஊர்ப் பெயர் வரலாற்று ஆராய்ச்சி’ என்ற நூல் இறுதிவரை அச்சாகாமலே போய் விட்டது.
புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க இலக்கியங்களுக்கு மிகச் சிறந்த உரை எழுதியிருக்கிறார்.
திருவருட்பா 9 தொகுதிகளுக்கும், ஞானாமிர்தம், சிவஞானபோதம் ஆகியவற்றுக்கும் இவரின் உரை குறிப்பிடத்தக்கது.
யசோத காவியம்’ என்ற சமண இலக்கிய நூலை ஒலைச்சுவடியில் இருந்து ஆய்ந்து உரை எழுதியவர் ஔவை துரைசாமி.
வடமொழியில் பல்லவ மகேந்திரன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக இலக்கியத்தைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் இவர்.
சிலப்பதிகாரச் சுருக்கம் – மணிமேகலைச் சுருக்கம் – சீவகசிந்தாமணிச் சுருக்கம் – சூளாமணிச் சுருக்கம் – சிலப்பதிகார ஆராய்ச்சி – மணிமேகலை ஆராய்ச்சி – சீவகசிந்தாமணி ஆராய்ச்சி – திருவோத்தூர் தேவாரத் திருப்பதிக உலா – சைவ இலக்கிய வரலாறு – பண்டைய சேர மன்னர் வரலாறு என 34 நூல்கள் இவரால் எழுதப்பெற்றுள்ளன.
இவை தவிர ஊர்ப் பெயர் வரலாற்றாராய்ச்சி – தமிழ்த்தாமரை – மருள்நீக்கியார் நாடகம் – ஊழ்வினை என இவர் எழுதிய 7 நூல்கள் அச்சாகாமலே போய்விட்டன.
ஔவை துரைசாமி அவர்கள் தான் எழுதிய நூல்களுக்கான உரைகள் அனைத்தையும் முழுமையாக எழுதியிருந்தாலும், மணிமேகலைக்குக் கடைசி 4 காதைகளுக்கு மட்டுமே உரை எழுதினார்.
பாகனேரி மு.காசி விசுவநாதம் அவர்கள் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களைக் கொண்டு சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதச் செய்தது போல மணிமேகலைக்கும் அவரைக் கொண்டே உரை எழுதச் செய்தார்.
30 காதைகள் கொண்ட மணிமேகலையின் 26 காதைகளுக்கு மட்டுமே உரை எழுதிய நாட்டார் அவர்கள், உடல்நிலை தொய்வு காரணமாகத் தொடர்ந்து உரை எழுத இயலாநிலை ஏற்பட்டது.
இதனால் பாகனேரி காசி. விசுவனாதருடன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளராக இருந்த வ.சுப்பையா அவர்களும் இணைந்து அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பேரறிஞராக இருந்த ஔவை துரைசாமி அவர்களை வேண்டி, இறுதி நான்கு காதைகளுக்கு உரை எழுதச் செய்தனர்.
  1. சமயக் கணக்கர் தந்திரம் கேட்டகாதை
  2. கச்சிமாநகர் புக்க காதை
  3. தவத்திறம் பூண்டு தருமம் கேட்டகாதை
  4. பவத்திறமறுகெனப் பாவை நோற்ற காதை.
இந்நான்கு காதைகளில் கச்சிமாநகர் புக்க காதையைத் தவிர்த்து ஏனைய 3 காதைகளுக்கும் அவ்வளவு எளிதில் உரை எழுதிவிடமுடியாது.
சைவவாதி, பிரம்மவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி எனப் பல்வெறு சமயக் குரவர்களின் தத்துவ விளக்கங்கள் –
பௌத்தத்தின் 12 நிதானங்கள், அவற்றின் மண்டில, கண்ட, சந்தி, தோற்ற, கால வகைகள் – நால்வகை வாய்மை, ஐவகை கந்தம், அறுவகை வழக்கு போன்ற தத்துவ விளக்கங்களை, வட மொழி பௌத்த நூல்களின் நுண்மான் நுழைபுலத்துடன் உரைவேந்தர் எழுதிய உரையினைப் படித்துப் படித்து மகிழ்ந்து போற்றலாம்.
இப்படிப்பட்ட பேரறிஞருக்கு 1960 ஆம் ஆண்டு மதுரை, திருவள்ளுவர் கழகம் ‘பல்துறை முற்றிய புலவர்’ பட்டத்தையும்
1980ஆம் ஆண்டு தமிழக ஆளுநர் பிரபுதாசு பட்டுவாரி ‘பேரவைத் தமிழ்ச் செம்மல்’ பட்டத்தையும்
தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘தமிழ்த் தொண்டு செய்த பெரியார்’ பட்டத்தையும் வழங்கியிருக்கிறார்கள்.
ஔவை துரைசாமி அவர்களின் மாணவர் இராதா. தியாகராசன் ‘உரைவேந்தர்’ என்ற பட்டத்தையும், தங்கப் பதக்கத்தையும் வழங்கிப் பெருமை சேர்த்துள்ளார்.
உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் பங்குனி 21, 2014 / 1981ஆம் ஆண்டு ஏப்பிரல் 3ஆம் நாள் காலமானார்.
எழில்.இளங்கோவன்


கருஞ்சட்டைத்தமிழர் 22.07.2017