Sunday, December 31, 2017

தமிழ்ப்புலவர் சரிதம் – பரிதிமாற்கலைஞர் : 1. முகவுரையும் முன்னுரையும்

தமிழ்ப்புலவர் சரிதம்

முகவுரையும் முன்னுரையும்

ஆசிரியர் ஒரோவோர் காலத்தில் மாதாந்த பத்திரிகைகளிலும், தாம் பதிப்பித்த சில நூல்களின் முகவுரைகளிலும் எழுதியுள்ள ஒரு சில தமிழ்ப் புலவர்களின் சரிதைகளை யொரு சேரத் தொகுத்துத் தனிப் புத்தகமாக வெளியிட்டால் தமிழ் பயிலும் இளைஞர்க்குப் பயன்படுமென்று கருதி, ஆசிரியர்தம் குமாரராகிய நீ.வி.கு. சுவாமிநாதன் அவர்கள் அவற்றைத் திரட்டித் ‘தமிழ்ப் புலவர் சரித்திரம்‘ எனப் பெயர் தந்து இந்நூலைப் பிரசுரித் துள்ளார். பல வாண்டுகளுக்கு முன்னர்த் தமக்குக் கிடைத்த சில ஆதாரங்களைக் கொண்டு ஆசிரியர் வரைந்த இவ்வரலாறுகளிற் கண்ட காலவரையறை முதலிய சில விடயங்களுக்கும், அவர் காலத்தின் பின்னர் வெளிப்பட்ட பல சாசன முதலியவற்றின் துணையானெழுந்த ஆராய்ச்சிகளினாற் போந்த விவரங்களுக்கும் மாறுபாடுகள் காணப்படுதல் வியப்பன்று. இப்பொழுது ஏற்பட்டுள்ள ஆராய்ச்சிகளின் முடிவுகளும், இனிப் புதிய சான்றுகள் கிடைக்கப்பெறின், அவற்றானெழும் ஆராய்ச்சிகளால் மாறவேண்டி வரும். இவ்வுண்மையானே, முன்னாராய்ச்சிகளைப் பின்னாராய்ச்சிகளின் முடிவுகள் மறுப்பினும் அதனால் அவற்றுக்கு உளதாவதோர் இழுக் கொருசிறிதுமின்று. மேலும், முன்னாராய்ச்சி முடிவுகளே பின்ன ரொரு ஞான்று தக்க வாதாரம் பெற்று வலியுற்று நிற்றலும் கூடும். ஆகவே முன்னர் எழுந்த ஆராய்ச்சிகளே இனிப் பின்னர் எழும் ஆராய்ச்சியாளர்க்குப் பெருங் துணைக்கருவியாக நிற்றல் ஒருதலையாம்.
 இன்னோரன்ன காரணங்களால், இந் நூலினையும் உவப்புடன் தமிழுலகம் ஏற்கும் எனக் கருதியே இது வெளியிடப்பட்டது. இதுவேயுமன்றி, ஆசிரியர்தம் செவ்விய தமிழ் நடை யாவர்க்கும் இன்பமளிக்குமாதலின் இந்நூல் தமிழ் பயிலு மாணவர்க்குச் சிறந்ததொரு வசன நூலாக அமைதலும் பொருந்துவ தொன்றாம்.
ஆசிரியர், தமிழிற்கு முறைப்படவரைந்த தமிழ்ப் புலவர் சரிதமொன்று இல்லாதது பெருங்குறை வென்பதை நன்குணர்ந்தவராதலின், அக்குறை வினை நீக்குவதெங்ஙனமென்று பல்லாற்றானுஞ் சிந்திதிருந்த தொருதலை. அதுபற்றியே, அவர் தமது ஞானபோதினிப் பத்திரிகையில், தமிழ்ப் புலவர் சரிதம் என்ற தலைப்பின் கீழ் இத்தகைய நூலொன்றின் இன்றியமையாமையைக் குறித்தோர் வியாசமெழுதியுள்ளனர். அவ்வியாசமும், ஈண்டு வரையப் பெற்றுள்ள ஒரு சில புலவர்தஞ் சரிதங்கட்கு முன் பாயிரமாக நிற்றல் எவ் வாற்றானு மேற்புடைத்தென்று கருதி, இம் முகவுரையின் பின்னர் அச்சிடப் பட்டுள்ளது. அதன்கட் கூறியாங்குச் செந்தமிழ்ப் புலவர்தஞ் சீரிய சரித மெழுதும் ஆற்றல் படைத்த பெரியார், பண்டுதொட்டு இன்றளவுந் தோன்றிய தலை  சிறந்த தமிழ்ப் புலவர்தம் புலமையெல்லாந் திரண்டோ ருருவெடுத் தாற்போல விளங்கும் செந்தமிழ்ப் பேராசிரியர் மகாமகோபாத்தியாய முனைவர்(டாக்டர்) உ. வே. சாமிநாத(ஐய)ர்அவர்களே யென்பது தேற்றம். இவ்வுண்மையைப் பலவாண்டுகளுக்கு முன்னரே ஆசிரியர் கண்டறிந்தெழுதியது பெரிதும் பாராட்டற்பாலது. செந்தமிழை முன்னேற்றக் கருதி அரும்பெரும் பாடுபடும் செல்வர்கள் பலரும், புலவர் சிந்தாமணியாகிய சிரீமகாமகோபாத்தியாய(ஐய)ர் அவர்கட்கு உதவித்துணையாக வேறு சில தக்க புலவரை யமைத்துக் கொடுத்து, அன்னார் தம் மனக்குகையுட் பொதிந்துகிடக்கும் பெறலரும் மணிக்குவைகளாகிய தமிழ்ப் புலவர் வரலாறுகளை வெளிப்படுத்த முயல்வாராயின், அது தமிழகஞ் செய்த பெருந் தவப் பயனாம்.
 ஆசிரியர்தம் நால்கள் பலவற்றையும் தனித் தனியாயும் ஒரு சேரத் தொகுத்தும் குறிப்புரை முதலியவற்றோடு வெளியிடக் கருதி, அன்னர்தங் குமார் சிரஞ்சீவி வி. சூ. சுவாமிநாதன் அவர்கள் எடுத்துக்கொண்ட நன் முயற்சி பலவும் இடையூறின்றி இனிது கிறைவேற எல்லாம் வல்ல இறை வன் திருவருள் புரிவாராக.
அண்ணாமலை நகர், l   ;    7–10–1983.
                                                                                                                                       இங்ஙனம்,
                                                 ந. பலராம(ஐய)ர்

முன்னுரை*

உலகின்கணுள்ள நாகரிக நாடுகளில் வழங்கும்  மொழிகளெல்லாம் நன்னிலையிலிருக்கின்றன. அவ்வந் நாடுகளின் நாகரிக விருத்திக்கேற்றவாறு ஆங்காங்குப் பயிலுறூஉம் மொழிகளும் விருத்தியடைந்து ஒளி சிறந்து விளங்குகின்றன. அவ்வம்மொழிகளின் மகிமையுஞ் சிறப்பும் அவ்வம் மொழிகள்  வல்ல புலவர்களானும் அன்னாரியற்றிய நூற்றொகைகளாலும் புலனாம். ஆகவே ஒவ்வொரு மொழியின் சிறப்பையும் விளக்குங் கருவிகளுள் தலை நின்றது அம்மொழியின் புலவர் சரிதமென்பது துணியப்படும். படவே ஒவ்வொரு மொழிக்கும் புலவர் சரிதம் வகுக்கப் படுதல் இன்றியமையாத தொன்றாம்; எனவே புலவர் சரிதமில்லாமை மொழிக்கே யொரு குறைவாக மதிக்கப்படுதன் மட்டில் கில்லாமல் அம்மொழி பயின்ரறோர்க்கும் பயில் வோர்க்கும் உற்றதோர் பெருங் குறையாகவும் மதிக்கப்படுகின்றது.
 இத்தகைய குறைபாடு நமது தமிழ்மொழிக்கண்ணு முண்டுகொல்? இது விசயமாக ஆராய்ச்சி செய்தவழித் தோன்றுவனயாவை? ஓராற்றால் உற்று நோக்கு மிடத்து இக்குறைபாடு முன்னொரு காலத்திருந்து பின்னர்ச் சிறிது சிறிதாக நீங்கத் தலைப்பட்டு வாரா நின்றது. சில நூற்றாண்டுகட்கு முன்னர் எழுதப்பட்டதாகத் தோன்றுகின்ற ‘தமிழ் நாவலர் சரிதை‘ என்ற தோர் நூலுளது. அந்நூல் தமிழ் காவலர்களுட் சிலருடைய சரித்திரங்களைக் கூறுமுகத்தால் அவ்வந் நாவலர்கள் பற்பல வமயங்களிற் பாடிய செய்யுட் களையும் இடையே யெடுத்துரைக்கின்றது. அஃது ஒருவாறு உய்த்தறியு மிடத்துத் தற்காலத்து வெளிப்பட்டுலவும் ‘தனிப்பாடற்றிரட்டு‘ என்னும் நூலையும் போலா நின்றது. இன்னின்ன பாடல்கள் இன்னின்ன சந்தர்ப் பங்களிற் பாடப்பெற்றனவென்பது குறிக்கப்பட்டிருத்தலின், தனிப்பாடற் றிரட்டிலுந் தமிழ் நாவலர் சரிதை மேதக்கதென்பது தேற்றம். தனிப்பாடற் றிரட்டு இத்தமிழ் நாவலர் சரிதையினுதவி கொண்டே தொகுக்கப்பட்டு மிருக்கலாமென்பது தோன்றுகின்றது.
இது நிற்க. யாழ்ப்பாணத்திற் காசி(செட்டி) யென்பா ரொருவர் தமிழ்ப் புலவர் சரிதத்தைத் தொகுத்து ஆங்கில மொழியிலெழுதிப் பல்லாண்டுகட்கு முன்னர் வெளியிட்டனர். அது நூலாராய்ச்சி முறையைத் தழுவி ஒருவாறு எழுதப்பட்டுளது; அது காலக்கிரமப்படி யெழுதப்படாமை காலவரையறை காண்டலரிதாகின்றமைபற்றியே போலும். அதன்கண் நல்லிசைப்புலவர் பல ருடைய சரிதங் காணப்படாமையாற் குன்றக் கூறவென்லுங் குற்றங் தங்குவ தாயிற்று. அதன் பின்னர் யாழ்ப்பாணத்து ஆ. சதாசிவம்(பிள்ளை) யென்பார் ‘பாவலர் சரித்திர தீபகம்’ என்றதோர் நூலியற்றிப் பிரசுரித்தனர். அது தமிழ்ப்புலவர் பெயர்களை அகராதிக்கிரமப்படுத்தியெழுதியதோர் தமிழ்வசன நூலாம்; இடையிடையே அவ்வப் புலவருடைய பாடல்களும் உதாரணமாகக் காட்டப்பட்டுள. கால நிருணய விசயத்தில் இந்நூல் அதிக திருப்திகரமான தாயிருக்கவில்லை. இதன்கட் சில அருமையான விசயங்களும் கூறப்படாமற் போயின.
இனிக் கும்பகோணக் கலாசாலையில் தமிழ்ப் புலமை நடாத்திவரும் மகா வித்துவான் பிரம்மசிரீ உ.வே. சுவாமிநாத(ஐய)ரவர்கள் தாம் பதிப்பித்த சிலப் பதிகாரத்தினும்  மணிமேகலையிலும் தமிழ் நூல்கள் பலவற்றைப்பற்றிய குறிப்புக்களெழுதி யிருக்கின்றனர். இன்னும் புறநானூற்றிலும் நல்லிசைப் புலவர் பலருடைய சரித்திரக் குறிப்புகளும் அப்புலவர்களே யாதரித்தாரைப் புற்றிய குறிப்புகளும் வரையப்பட்டுள. இவையனைத்தையும் ஒருங்கு தொகுத்து இன்னுந் நாம் அருமையாகக் கண்டு குறித்துவைத்துள விசயங்களையுங் கூட்டித் தனி நூலாக வெளிப்படுத்தப் போகின்றனரெனக் கேள்வி யுற்றுக் கழிபேருவகை பூக்கின்றாம். இம்முயற்சி கைகூடுமாறு நம் ஐயரவர்கட்கு இறைவன் திருவருள் புரிவாராக.
இடையிற் பாறைக்கிணறு வெட்டப்புகுந்து முகவையம்பதி முதலிய விடங்களிற் பெரும்புகழ் படைத்தவரும், திருவாமத்துனரிலிருந்து காலங் கழித்தவருமாகிய ‘திருப்புகழ்ச் சுவாமிகள்’ என்ற முருகதாச சாமியார்இயற்றிய ‘புலவர் புராணம்+ என்றதோர் நூல் வெளிப்போந்துளது. இந் நூல் முழுதுஞ் செய்யுளானியன்றுளது. சாமானியமாகப் புலவர் வீடுகளிற் கதையாகச் சொல்லிக்கொள்ளும் விசயங்களெல்லாம் ஒருவாறு தொகுத்து இந்நூலின்கட் கூறப்பட்டுள. காலவரையறை, நூலாராய்ச்சி முதலியன இந் நூலின்கட் கண்டிலேம். இதனையொரு காப்பியமாகக் கருதி ஆராய்தல் ஈண்டு. எடுத்த விசயமன்று. தமிழ்ப் புலவர் சரிதமாகுமட்டில் இஃது ஓராற்றாற் பயன்படுவதாகும்.
 இதுகாறும் தமிழ்ப் புலவர் சரித விசயமாக வெளிப்பட்ட நூல்களைப்பற்றி யுரைத்தாம். இனிச் சிற்சில நூல்களைப் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள் அவ்வந்நூலின் பதிப்புரைக்கண் நூலாசிரியர் வரலாறுகளும் தாங்கள் ஆராய்ச்சி செய்தமட்டிற் கூறியிருக்கின்றனர். சிலர் இக்காலத்தில் வெளிப்படும் தமிழ்ப் பத்திரிகைகளில் விசயங்களாகத் தமிழ்ப் புலவர் சிலரைப்பற்றி யெழுதியிருக்கின்றனர். இதற்கிடையிற் சில்லாண்டுகட்கு முன்னர் அட்டாவதானி  வீராசாமி(செட்டியார்) என்பார் “வினோத ரசமஞ்சரி‘ என்பதோர் நூலியற்றி யிருக்கின்றனர். அஃது அதன் பெயர்ப் பொருளின்படி விநோதார்த்தமாக எழுதப்பட்டதோர் கதைத் தொகுதியெனக் கொள்ளற்பாலதே யன்றித் தமிழ்ப் புலவர்களைப் பற்றியதோர் மெய்ச் சரிதமாகக் கொள்ளப்படுவ தன்று. எனவே குறைபாடுகளினத்தும் நீங்கி, யாவரும் ஏற்று மேற்கொள்ளத் தக்கதாய் தமிழ்ப் புலவராவாரனைவரையும்பற்றி ஒருங்கே கூறுவதாய் அன்னாரியற்றிய நூல்களின் ஆராய்ச்சிகளுமுடையதாய்க் காலவரையறையும் தெளிவு பெற நியாயவாயிலாற் காட்டுவதாய் ஒரு தமிழ் நூல் இதுகாறும் இவளிப்பட்டிலது.  அத்தகைய தொன்று என்று வெளிப்படுமோ? அறியோம்.  இந்த விசயத்தைத் குறித்து நம்முடைய மதுரைப் புதுத் தமிழ்ச் சங்கத்தின் அதிகாரிகள் நன்கு கவனித்து நடப்பாராக.
 வி.கோ. சூ.
அது கணம் பொருக்திய திவான் பகதூர் வ.கிருட்டிணமாசாரியாரவர்களாற் பதிப்பிக்கப்படுகின்றது. முதற் பாகம் வெளியாயிற்று. பன்னிரண்டு பாகங்களும் விரைவில் வெளிவரும் என்று நம்புகின்றோம். இதன் முதற் பாகத்திற் சில பகுதிகள் சமது சர்வ கலாசாலையின் பிரதம கலா பரீட்சைக்கும், கலா வித்தியார்த்திபட்ட பரீட்சைக்கும், கலாநாயகபட்ட பரீட்சைக்கும், பாடமாக எற்படுத்தப்பட்டுள. (இப் பொழுது இந் நூல் முழுதும் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது.)
ஆசிரியர் ஞானபோதினிப் பத்திரிகையில் வரைந்தது.
பரிதிமாற்கலைஞர் 
-தமிழ்ப்புலவர் சரிதம்

Saturday, December 30, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 – வல்லிக்கண்ணன்



ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34


பாலல்ல வெளுத்த தெல்லாம்! உண்டுடுத்திப்
பவனிவரு வோரெல்லாம் மனிதரல்ல
ஆலல்ல மரங்களெல்லாம்! அதனைப்போல
அருங்கல்வி கற்றபுகழ் மாந்த ரெல்லாம்
சாலபெரும் நல்லோரும் அல்ல! பல்லோர்
சரியான முழுமூடக் கயவராகி
ஏலமிடு பொருள்போலே ஆனார் இன்று!
என்னென்பேன்! இது பெரிய வெட்கக்கேடு!
வானகமே மழை நீரைப் பருகிவிட்டு
வையத்தை வெறுப்பதுபோல், அறம் செய்கின்ற
தானத்தான் பொருளையெலாம் ஏப்பம்விட்டுத்
தன்கையை விரிப்பது போல், நேர்மை நெஞ்ச
மானத்தை மாவீரன் துறப்பதைப் போல்,
மாகல்வி படித்தபலர் இன்று தீய
ஈனர்க்குத் துதிபாடிக் கால் பிடித்தே
எத்தர்களாய் மாறிவிட்டார் மானக்கேடு!
வயிற்றுக்காய் எவனேனும் பிச்சைகேட்டால்
வாய்பொத்திக் கைகட்டித் தன்கழுத்தில்
கயிற்றினால் சுருக்கினையே போட்டுக் கொள்ளும்
கண்மூடிக் குருடரெனக் கற்றோர் ஆனார்!
உயிர்போன்ற தம் மொழியை, தம்மினத்தை
ஒருபோதும் எண்ணார்கள்!”
தற்கால நிலைமை கவிஞரைச் சீற்றத்தால் கொதிக்கச் செய்கிறது. அதனால் காட்டமாகவே கவிதை பாடியிருக்கிறார். பல இடங்களில் காந்தி பேரைச் சொல்லி நாட்டில் நடைபெறுகின்ற கயமைத்தனங்களை அவர் சாடுகிறார். ஓரிடத்தில் –
கொதிக்கின்றேன் தோழர்களே உள்ளம்! காலம்
கொடுமையிலும் கொடுமையாகப் போனதேடா!
மிதிக்கின்றார் உண்மை நெறி அவர்கள் இன்று
மிக்கெழுந்தார் தலைவரெனும் பேரால்! அன்னார்
விதிக்கின்ற செயல்களுக்காய்த் தம்மை ஈந்து
வீணடிமை யானார்கள் நல்லோ ரெல்லாம்
சதிச்செயல்கள் வாழ்கிறது ஐயோ! இன்று
தர்மந்தான் சாகலாமோ கொடுமை என்னே!
கதர்ச்சட்டை போடுகின்ற பலபேர் இன்று
காதகராய் இருக்கின்றார் அச்சட் டையாம்
புதர் நடுவில், கொடும் பாம்புக் கூட்டத்தார்கள்
கோயிலான நம்நாட்டைப் பணயம் வைத்தே
அதர்மத்தில் நடக்கின்றார்! உண்மைக் கோமான்
அண்ணலினை, அயோக்கியத்தை மறைப்பதற்கு
விதவிதமாய்ப் பயன்படுத்தி ஆள்கின்றார்கள்
வேசியைப்போல் ஆனார்கள் வெட்கம்! வெட்கம்!
(தொடரும்)
படைப்பு: வல்லிக்கண்ணன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33 – வல்லிக்கண்ணன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33


வள்ளுவர் வடித்த அமைச்சரின் வகை நெறி பற்றிப் பேச வந்த பெருங்கவிக்கோ இற்றைநாள் அமைச்சர்கள் குறித்துச் சிந்தனைப் பொறிகளைக் கவிதையில் சிதறியிருக்கிறார். இயல்பைக் காட்டும் படப்பிடிப்பு அவ்வரிகள். கவிஞர் பாடுகிறார்,
“அமைச்சர்தமை நினைத்தால் அடிவயிற்றில் போராட்டம்
இமைப் பொழுதும் சோராது ஏற்ற பதவியினைக்
காப்பாற்ற வேண்டுமெனும் கருத்தால் திறக்காத
தாழ்ப்பாள்தனைப் போட்டுச் சதுராடி வாழ்கின்றார்!
சமுதாயச் சாக்கடையில் தன் பதவிக் கப்பலினை
அமுதாகச் செலுத்தி ஆலவட்டம் போடுகின்றார்!
இல்லாதான் தன்னை எப்பொழுதும் வாய்வைத்துச்
செல்லாக் காசாக்கிச் செகப்புரட்சி செய்கின்றார்!
தூங்காமல் தூங்கி சுகம் பெற்றுத் தொழிலாளர்
ஏங்கும் நிலைவளர்த்து எத்திலே பிழைக்கின்றார்!
உழவர் பெருங்குடியை ஊஞ்சலாய்ப் பயன்படுத்தி
அழகாக ஆடி ஆர்ப்பரித்து வாழ்கின்றார்!
வாயடியால் கையடியால் வருகின்ற பொய்யடியால்
போயடித்து வெற்றிப் புன்னகையில் மிதக்கின்றார்!
தாமாளும் தகுதியும் தகுதியால் ஒழுக்கமும்
தூமணி போல் உள்ளமும் தொண்டுத் திருச்செயலும்
என்னவென்றே தெரியாத எத்தனையோ அமைச்சர்களை
முன்பு மிகக் கண்டோம்!
மூன்றிலொன்றை இன்று கண்டோம்!
கண்கெட்டான் சூரியனைக் கண்டு வணங்குமாப் போல்
ரெண்டுங் கெட்டாரெல்லாம் நீனிலத்தில் அமைச்சரின்று!
கட்சியெனும் முற்றத்தில் காலத்தின் இரதத்தினிலே
தட்டிப் பறித்ததுதான் சார்அமைச்சர் பதவிகளாம்!”
படித்தவர்களின் மோசமான போக்குகள் குறித்துப் பெருங்கவிக்கோ பல இடங்களில் சொற்சாட்டை சொடுக்கியிருக்கிறார். சொல் ஈட்டியாக அவர் வீசியுள்ள சில கவிதைகள் சுவைக்கப்பட வேண்டியவையாகும்.
(தொடரும்)
படைப்பு: வல்லிக்கண்ணன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்

Friday, December 29, 2017

மறக்க முடியுமா? பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் – எழில்.இளங்கோவன்

பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார்

‘‘மாணிக்கச் சிந்தனைகள், எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்தைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடம் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்’’ ஆகிய பண்புகளுக்குச் சொந்தக்காரர், பேரறிஞர் பெருந்தகை, பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் என்று நினைவு கூர்கிறார் அவரின் மாணவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.
தேர்ந்த சிந்தனையாளர், தெளிந்த உரையாசிரியர், திறன்மிகு உரைநடையாளர். ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர், பழைமை&- புதுமை இரண்டையும் ஒருமித்துப் போற்றியவர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள்.
இவர் தி.பி. 1948 சித்திரை 05 – 1917ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 17ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் பிறந்தார்.
தெய்வானை ஆச்சி, வ.சுப்பிரமணியன் இணையரின் ஐந்தாம் மகனாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர் அண்ணாமலை என்றாலும் மாணிக்கம் என்ற பெயரே நிலைபெற்று விட்டது.
தன் ஏழாம்  அகவை வரை நடேச(ஐய)ரிடம், குருகுலப் பாடம் படித்த இவர், ஏழாம் வயதில் புதுக்கோட்டை உயர்நிலைப்பள்ளியில் தன் படிப்பைத் தொடர்ந்தார்.
இவரின் 18ஆம் அகவையில் பருமாவுக்கு வேலைக்காகச் சென்றார். அங்கு வட்டிக்கடை ஒன்றில் வேலை செய்தாலும், தொடர்ந்து அங்கு நீடிக்காமல் தாயகம் திரும்பிவிட்டார்.
தமிழகம் திரும்பிய வ.சுப.மாணிக்கனாருக்கு, அறிஞர் பெருந்தகை பண்டிதமணி கதிரேசனார் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
அதன் விழைவாய்த் தமிழ்மொழியின் மீது பெருநாட்டம் கொண்ட மாணிக்கனார். பண்டிதமணியின் ஊக்குவித்தலினால் சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தில் வித்வான் தேர்வில் தேர்ச்சி அடைந்தார்.
இப்பல்கலைக் கழகத்தில் இராகவையங்கார், ந.மு.வேங்கடசாமி நாட்டார்அ.சிதம்பரநாதன் ஆகியோர் மாணிக்கனாரின் ஆசிரியர்களாக விளங்கினர்.
1945ஆம் ஆண்டு கீழ்த்திசைமொழி இளங்கலைப் பட்டமும் (பி.ஒ.எல்), 1951 ஆம் ஆண்டு முதுகலை(எம்.ஏ.) பட்டமும் பெற்றார்.
பின்னர் ‘தமிழில் வினைச் சொற்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து கீழ்த்திசைமொழி  முதுகலைப்பட்டம் (எம்.ஓ.எல்.)பெற்ற இவர், ‘தமிழில் அகத்திணைக் கொள்கை’ என்ற தலைப்பை ஆய்வுக்கு எடுத்து அதில் முனைவர் பட்டம் பெற்றார்.
1941 தொடக்கம் 1948 வரை மாணிக்கனார் தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 7 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியற்றினார். அப்பொழுது விரிவுரை பயின்ற குறிப்பிடத்தக்க இரு மாணவர்களில் ஒருவர் நாவலர் நெடுஞ்செழியன், மற்றொருவர் பேராசிரியர் க.அன்பழகன்.
1948 முதல் 1964 வரை 16 ஆண்டுகள் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார்.
1964-1970 ஆகிய 6 ஆண்டுகள் அழகப்பா கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தார் மாணிக்கனார். அப்பொழுது அக்கல்லூரியின் மாணவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.
பின்னர் 1970 தொடங்கி 1977 வரை 7 ஆண்டுகள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது, இந்திய மொழிப்புல முதன்மையாளர் பொறுப்பில் இருந்து பணியாற்றி இருக்கிறார்.
1979 முதல் 1982 வரை மூன்று ஆண்டுகள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகச் பொறுப்பேற்றுத் திறம்படப் பணியாற்றினார்.
இங்கு தமிழ்மொழியின் வளர்ச்சி, அறிவியல் துறை வளர்ச்சிக்கான இவரின் பணியை அப்போதைய தமிழக அரசு பெரிதும் பாராட்டியுள்ளது.
பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற வ.சுப.மாணிக்கனார், கேரள மாநிலம் திருவனந்தபுரம் கல்லூரியில் திராவிட மொழியியல் கழகத்தின் முதுபேராய்வாளராக இருந்து சிறப்பு வாய்ந்த இருநூல்களை ஆங்கிலத்தில் எழுதினார்.
 அவ்விரு நூல்களுள் ஒன்று ‘தமிழ் யாப்பில் வரலாறும் வளர்ச்சியும். மற்றொன்று “தொல்காப்பிய ஆய்வு!’
பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள் பல்வேறு நூல்கள் எழுதி இருக்கிறார். அவற்றுள் குறிப்பிடத்தக்க சில நூல்கள் வருமாறு:
எழுத்துச் சீர்திருத்தம் எங்கே போகிறது, – தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபும்,- மொழி மரபும், – தொல்காப்பியப் புதுமை,  தொல்காப்பியத் திறன், – தொல்காப்பியக் கடல், வள்ளுவம், ஒப்பியல் நோக்கு,- திருக்குறள் சுடர், – திருக்குறள் தெளிவுரை  (மாணிக்கவுரை).
இம்மட்டுமன்று  The Tamil Concept of Love, A Study of Tamil Verbs, Collected Papers, Tamilology ஆகிய ஆங்கில, நூல்களும் இவரால் எழுதப் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இவரின் நூல்கள் 2006 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
பேராசிரியர் மாணிக்கனார் அவர்கள் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
தமிழகப் புலவர்குழுத் தலைவராக இருந்துள்ளார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வடிவமைப்புக் குழுத்  தலைவராகவும் இருந்து இவைகளின் மூலம் தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றியிருக்கின்றார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவரின் தமிழ்ப்பணிக்காக இவருக்குச் சிறப்பு முனைவர் (டி.லிட்.) பட்டம் வழங்கி உள்ளது.
முதுபெரும் புலவர் எனற விருதை குன்றக்குடி அடிகளார் வழங்கி இருக்கிறார்.
இவரின் சொந்த ஊரான மேலைச்சிவபுரியில் இயங்கி வந்த சன்மார்க்க சபை இவருக்குத் ‘தமிழச் செம்மல்’ என்ற சிறப்பு விருதை வழங்கி இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் மறைவிற்குப் பின்னர், இவரைப் போற்றும் விதமாக இவருக்குத் ‘திருவள்ளுவர்’ விருதை வழங்கி சிறப்பித்து இருக்கிறது.
இவரின் மறைவுக்குப் பின்னர், இவர் எழுதிவைத்த இறுதிமுறியின்(உயிலின்)படி, சொந்த ஊரான மேலைச் சிவபுரி அறக்கட்டளைக்கு ஒருகுறிப்பிட்ட தொகை இவரின் சொந்தப்பணத்தில் இருந்து கொடுக்கப்பட்டு உள்ளது.
அதுபோல மேலைச்சிவபுரியில் சாதி மதவேறுபாடு இன்றி எல்லாக் குழந்தைகளின் உடல்நலம் பேண மருத்துவ உதவிக்காகவும் இவரின் பணத்தில் ஒரு தொகை வழங்கப்பட்டு உள்ளது.
இதே வழியில் சாதி மத வேறுபாடு இன்றி குழந்தைகளின் கல்விக்காக உதவும் பொருட்டும் கணிசமான தொகை ஒதுக்கித் தரப்பட்டுள்ளது.
இவரால் சேர்ந்து வைக்கப்பட்டிருந்த 4500 நூல்களைத் தான் பணியாற்றிய காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்.
 தன் ஆசிரியர் பண்டிதமணி கதிரேசனாரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக ஆக்கியவர். மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையின் மூலம் பண்டிதமணியின் நூல்களைப் பதிப்பித்தவர். பண்டித மணியின் சொந்த ஊரான மதிபாலன் பட்டியில் அவருக்குச் சிலை அமைத்த அவரின் மாணவர் – தமிழுலகப் பேரறிஞர் பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் தி.பிப. 2020 சித்திரை 13 ஆம் நாள் – 1989ஆம் ஆண்டு ஏப்பிரல் 25ஆம் நாள்,புதுவையில் இரவு 11 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.
எழில்.இளங்கோவன்

Tuesday, December 26, 2017

கா. சுப்பிரமணிய(ப் பிள்ளை) – கிஆ.பெ.

கா. சுப்பிரமணியப் பிள்ளை

 பேராசிரியர் கா. சுப்பிரமணியப் பிள்ளை எம்.ஏ. எம்.எல். அவர்களைத் தமிழ் உலகம் நன்கறியும். தமிழறிஞர்கள் பலரும் இவரைத் தமிழ்க் காசுஎன்று கூறுவதுண்டு.
  அவர் முதன்முதல் எம்.எல். பட்டம் பெற்றதால், திருநெல்வேலிச் சீமையில் உள்ளவர்கள் அவரை  ‘எம்.எல். பிள்ளை’ என்றே கூறுவர். தமிழில் ஆழ்ந்த புலமையும் அழுத்தமான சைவப் பற்றும் உடையவர். இதனால் சென்னைப் பகுதியில் உள்ளவர்கள் அவரைத் ‘தமிழச் சைவர்‘ எனக் குறிப்பிடுவர்.
  அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராயிருந்து புலவர் பெருமக்கள் பலரை  உண்டாக்கித் தமிழகத்திற்கு உதவிய பேரறிஞர்.
  1937 இல் தமிழகத்திலுள்ள நான்கு கோடி தமிழ் மக்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை இந்தியப் பேரரசுக்கு அறிவிப்பதற்கென்றே, திருச்சி தேவர்மன்றத்தில் சென்னை மாகாணத் தமிழர் மகாநாட்டை முதன் முதலாகக் கூட்டினேன். நாவலர் ச.சோமசுந்தர பாரதியார் எம்.ஏ.,பி.எல். அவர்கள் அம் மகாநாட்டிற்குத் தலைமை வகிக்க ஒப்புக் கொண்டார். அம் மகா நாட்டைத் தொடங்கி வைக்க அலைந்தும், இந்தி எதிர்ப்பு என்றிருந்ததால், ஆட்சிக்கு அஞ்சி ஒரு புலவரும் முன் வரவில்லை. பேராசிரியர் கா. சுப்பிரமணியப்பிள்ளை எம்.ஏ.எம்.எல். அவர்களுக்கு ஒரு தந்தி அடித்தேன். ஒப்புக்கொண்டு மிகத் துணிவோடு முன் வந்து அம்மகாநாட்டைத் தொடங்கி வைத்து, அவர் ஆற்றிய உணர்ச்சி கலந்த சொற்பொழிவு இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அவர் ஆற்றிய அந்தப் பேச்சினைக் கண்டு நடுநடுங்கிய புலவர்களும் அரசியல்வாதிகளும் மிகப் பலர். தலைமை வகித்த நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் முடிவுரை கூறுகிறபொழுது திரு. பிள்ளைஅவர்களின் பேச்சு உணர்ச்சியற்றவர்களுக்கெல்லாம் உணர்ச்சி யூட்டியிருக் கும்.’’ என்றார். தமிழ்க்காசுவிற்கு  ‘வீர மகன்’ என்ற பெயரும் வழங்கியது.
   அதுவேபோல தாகூர் சட்டத்தை விரித்து விளக்கி விரிவுரையாற்றத் தமிழகத்தில் எவரும் துணியாதபோது ‘எம். எல். பிள்ளை’ அவர்கள் அரசின் விருப்பத்தை யேற்றுத் துணிந்து முன்வந்து அச்சட்டத்தை விளக்கி விரிவுரையாற்றிப் பெரும்புகழ் பெற்றார். இதனால் அவரை வழக்கறிஞர்களும் நீதிமன்றத் தலைவர்களும் ‘தாகூர் சட்ட விரிவுரையாளர்’ எனக் கூறுவதுண்டு.
  திரு. பிள்ளை அவர்கள் ‘தமிழர் சமயம்’ என்று ஒரு நூலை ஆராய்ந்து எழுதியிருந்தார். அதற்கு என்னுடைய மதிப்புரையை வேண்டினார். மறைமலையடிகள், நாவலர், பாரதியார், திரு. வி. க., நாட்டாரய்யா ஆகிய சமயப்பற்று நிறைந்த பேரறிஞர்கள் நால்வருடைய மதிப்புரையே போதுமானதென்றும், சீர்திருத்தப் பற்றுள்ள என்னுடைய மதிப்புரை தேவையில்லை என்றும் தெளிவாகக் கூறி மறுத்து விட்டேன். இது அவர் உள்ளத்தை எவ்வளவு தூரம் புண்படுத்தியிருக்கிற தென்பதை நான் பின்னால் அறிந்து வருந்தினேன்.
  திரு. பிள்ளை அவர்கள் நான் பெங்களூரில் தங்கி யிருக்கிறேன் என்பதை அறிந்ததும், தன்னிடம் புலவர் வகுப்பில் பயின்று கொண்டிருந்த மாணவர் ஒருவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து அங்கு அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது இது:-
 ” . . . . என் நூல் வெளிவருவது தங்களுக்கு விருப்பம் இல்லையானால் தயவு செய்து அதைத் தெரிவித்து விடுவது நல்லது. தங்களின் மதிப்புரையின்றி நூலை வெளியிட நான் விரும்பவில்லை.”
  இது என் உள்ளத்தைச் சுட்டதால், மதிப்புரை எழுதுகிறேன் என அவரிடம் சொல்லியனுப்பிவிட்டு, அந் நூலை முழுதும் படித்து எனது கருத்தை விரிவாக எழுதி அனுப்பினேன். அதை அப்புலவர் பெருமகன் முதல் மதிப்புரையாகவும், மற்றப் பெரும் பேராசிரியர்கள் நால்வரின் மதிப்புரையைப் பின்னரும் அச்சிட்டுத் ‘தமிழர் சமயம்’ என்ற அந்நூலை வெளியிட்டிருக்கிறார்கள்.
  தன்னைத் தமிழன் எனச் சொல்லிக் கொள்கிற ஒவ்வொருவனும் அந்நூலையும், “கோடையிலே இளைப்பாறிக் கொள்ள வந்த எனக்கு இந்நூல் ஒரு குளிர் தருவாக இருந்தது” என்று தொடங்கியிருக்கும் என் முன்னுரையையும் கட்டாயம் படித்தாக வேண்டும்.
  சுருக்கமாக இங்கு கூறுவது. இந்நூல் தமிழர் சமயத்தைப் புதுமுறையில் ஆய்ந்து, கண்டு விளக்கு கிறது. இதுவரை எவரும் செய்யாத செய்யத் துணியாத ஒரு முயற்சி.
  தமிழர் சமயத்திற்கும், நூல் நிலையங்களுக்கும் இதுவரை இருந்த ஒரு பெருங்குறையை இந் நூல் போக்கிவிட்டது. தமிழக மக்கள் இதனையும் இது போன்ற அவரது பிற நூல்களையும் படித்துப் பயன்பெறுவது நல்லது. தமிழிற்கும், சைவத்திற்கும், சட்டத்துறைக்கும், அவர் செய்த தொண்டுகள் மிகப் பல. அவ்விதமிருந்தும் இவ்வுலக வாழ்வில் நல்வாழ்வு வாழ முடியாமல் வறுமை வாய்ப்பட்டும் பல ஆண்டுகள் நோய்வாய்ப் பட்டுத் தனித்துக் கிடந்தும் வருந்தி மறைந்தார்கள். இதைக் கண்டு மனம் புண்பட்டபலரில் நானும் ஒருவன். என்றாலும், தமிழும் தமிழனும் உள்ள வரை அவர் புகழ். மறையாது.
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்
எனது நண்பர்கள்