Wednesday, August 24, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39: ம. இராமச்சந்திரன்




       21 ஆகத்து 2016      கருத்திற்காக..

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39

ஏனைய பாடல்கள்
  தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட மறைமலையடிகள், திரு.வி.கலியாணசுந்தரர்,  செந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன் சின்னசாமி, ‘கருமவீரர் காமராசர்’ நூலில் இடம் பெற்றுள்ள ‘சங்கநிதி பதுமநிதி’, ‘கருமவீரர் காமராசர்’, வள்ளல் ‘அழகப்பச் செட்டியார்’ ‘குறள் வெண்பா’ ஆகிய ஏழு கவிதைகள் இதில் இடம் பெறுகின்றன.
  இருபதாம் நூற்றாண்டில் முதன் முதலாக, தனித்தமிழில் பேச வேண்டும். தனித்தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தவர் மறைமலையடிகளார். இவரது இயற்யெர் சுவாமி வேதாசலம் என்பதாகும். தனித்தமிழ் இயக்கம் நாடெங்கும் பரவ பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார் தாம் நடத்தி வந்த ‘ஞான சாகரம்’ என்ற திங்கள் இதழை ‘அறிவுக் கடல்’ என்று மாற்றினார். தமிழனுக்குத் தமிழ் மொழியிலேயே பெயர் இருத்தல் வேண்டும என விரும்பினார். தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையைப் போற்றியதுபோலக் கவிஞர், மறைமலையடிகளாரின் தனித்தமிழ்க் கொள்கையைத் தம் எழுத்திலும் பேச்சிலும் பின்பற்றினார்.
  அறுசீர் ஆசிரிய விருத்தத்தில் கவிஞர் அவர்கள் மறைமலையடிகளாரின் சிறப்பைப் பாடியுள்ளார்கள். எட்டு அடிகளையுடையது இக்கவிதை. மாணிக்கவாசக சுவாமிகள் சிவபெருமானைக் குறித்து ‘போற்றிக் திருவகவல்’ பாடியது120போல் கவிஞர் இதனைப் பாடியுள்ளார்.
‘தனித்தமிழ் இயக்கம் தோற்றுவித்த தலைவனே போற்றி, தமிழ் காக்கும் மறவர்களின் எண்ணத்தில் நிறைந்திருப்பரே போற்றி, இந்தி மொழி என்னும் இருட்படலத்தை விலக்கிய செங்கதிர் ஒளியே போற்றி, தமிழ்நலம் நாடுவார் இதயத்தாமரையில் வீற்றிருப்பாய் போற்றி போற்றி’ என்று பாடுகிறார்.
 துள்ளி வரும் பகையைப் பொடியாக்கச் செய்யும் புயலே போற்றி, வெறுக்கத்தக்க அடிமை வாழ்கை எரித்துச் சாம்பராக்கும் நெருப்பே போற்றி, புதிதாகப் புறப்பட்டுவரும் வெள்ள நீர்ப்பெருக்கைப் போல வெற்றியை உண்டாக்கும் சொல்வன்மை படைத்த மேகமே போற்றி, வள்ளுவர் ஆண்டு தோற்றுவித்த வள்ளலே போற்றி போற்றி’ 121 எனப் பாடுகிறார் கவிஞர்.
திரு.வி. கல்யாணசுந்தரர்
  தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் பாடுபட்டவர். இவர்தம் பேச்சால் ‘தமிழ்த் தென்றல்’ என அழைக்கப்பட்டார். சைவம், வைணவம், சமணம், பௌத்தம், கிறித்துவம், இசுலாமியம் ஆகிய எல்லா மதத்தின் கருத்துகளிலும் ஈடுபாடு கொண்டவர்; அதனால் ‘பொதுமை வேட்டல்’ என்னும் செய்யுள் நூல் பாடியவர். தொழிற் சங்கம் தொடங்கித், தொழிலாளர் முனனேற்றத்திற்கு உழைத்தார்; பெண்கள் உரிமைக்குப் போராடினார்; நாட்டு விடுதலைக்காகப் போராடினார்; அரசியல் சமுதாய, பொருளாதார விடுதலையை விரும்பி தமிழ்ச் சமுதாயத்திற்குப் பாடுபட்டார்.
‘சேத பக்தன்’ ‘நவசக்தி’ என்னும் நாளிதழ்களை நடத்தினார். திருக்குறள் அறத்துப்பாலுக்கு உரை செய்தார்.
 பெண்ணின் பெருமை, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், முருகன் அல்லது அழகு, உள்ளொளி போன்ற நூல்களை எழுதினார்.
சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, என்கடன் பணிசெய்து கிடப்பதே’ என்பன போன்ற சமூகவியல் பற்றிய நூல்களையும் எழுதினார்.
மொழிக் கொள்கையில் மறைமலையடிகளைப் பின்பற்றினார்.
தீயவராயினும் அன்பராயினும் பாவம் செய்வராயினும் யாவர்க்கும் பணி செய்தவர். வழுக்கி விழுந்தவர் வாழ்க்கை செம்மைபெற தூய பல பணிகள் ஆற்றியவர். இத்தயை சிறப்புடைய அவரே அந்தணர்; அவரே முனிவர்; அவரே சித்தர்; அவரே புத்தர்; அவரே பெரியார்; அவரே தெண்டர்; அவரே இனியர்; அவரே மனிதர்க்கு வேண்டிய குணங்கள் அனைத்தும் பெற்றவர் 122 என்று கவிஞர் குறிப்பிடுகிறார்.
குறிப்புகள்:
  1. மாணிக்கவாசகர், திருவாசகம், போற்றித் திருவகவல் பன்னிருதிருமுறைப் பதிப்பு நிதி வெளியீடு,திருவைகுண்டம் 1962, ப.19-24.
  2. சி. இலக்குவனார், மறைமலையடிகள் நினைவுமலர், குறள்நெறி, மதுரை 15-7-1965, ப-1, பா.எ.2.
  3. சி. இலக்குவனார், திரு.வி.க. நினைவு மலர் ‘தலையங்கம்’ குறள்நெறி, மதுரை 1-10-1964.
பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiran

Friday, August 19, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 38: ம. இராமச்சந்திரன்




(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37 தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 38

இசைப்பாடல்
  இசைப்பாடல் என்ற பிரிவில் திருவள்ளுவர் இயற்றிய கல்வி அதிகாரத்தின் சிறப்பை விளக்கும் வகையில் ‘கல்வியைப் போல் செல்வம் காணக்கிடையாது’ என்னும் பாடலை கவிஞர் யாத்துள்ளார்.
இப்பாடலுக்கு ‘இசைமணி சங்கரனார்’ என்பவர் இசையமைத்துள்ளார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்த இசைவாணர் ஆவர்.
 வித்துவான் ந. சேதுரகுநாதன் அவர்கள், வீ. முத்துச்சாமியின் ‘இலக்குவனார் ஆய்வுப் பண்பு’ என்னும் ஆய்வேட்டிற்கு அளித்த பே ட்டியில்,
 ‘இசைப்பாடல் யாக்கும் திறமும் கைவரப்பெற்றவர்கள். இலக்குவனாரின் ‘அந்த நாள் என்று வருமோ’ என்னும் பாடலும், ‘கல்வியைப் போல் செல்வம் காணக் கிடையாது’ என்னும் பாடலும், யான் இயற்றிய கிளிக்கண்ணிகளும் இன்னும் நெல்லையில் பாடப்பட்டு வருகின்றது’117 என்று கூறியுள்ளார்.
 1945 ஆம் ஆண்டில் மேற்படி இசைப்பாடல்கள் இயற்றப்பட்டதாக வித்துவான் ந. சேதுரகுநாதன் குறிப்பிட்டுள்ளார்கள். எனினும் ‘அந்தநாள் என்று வருமோ’ என்னும் இசைப்பாடல் ஆய்வாளர் கைக்குக் கிடைக்கவில்லை. ‘கல்வியைப் போல் செல்வமும் காணக்கிடையாது’ என்ற கவிதை மட்டும் மதுரையிலுள்ள இலக்குவனார் இல்லத்தில் கிடைத்தது.
  கவிஞர் இயற்றியுள்ள, ‘கல்வியைப் போல் செல்வம் காணக்கிடையாது’ என்ற குறள் கீர்த்தனைப் பாடலை, இசைமணி சங்கரனார், சண்முகப் பிரியா பண்ணில், ஆதி தாளத்தில் இசையமைத்து  திருநெல்வேலிப் பகுதிகளில் பாடியுள்ளார்.
  கல்வியின் சிறப்பை இசைப்பாடலாக கவிஞர் பாடியுள்ளார் என்று கூறலாம்.
  மக்களுக்குப் பலவகையிலும் மிகுந்த பயனைக் கொடுப்பதால், கல்வியைப் போல் பிறிதொரு செல்வம் இவ்வுலகில் இல்லை என்கிறார்.
  கல்வி பெறாதவர் கண் பெற்றும் குருடரே. இவ்வுலகில் நல்வாழ்வை அமைத்திட கல்வி இன்றியமையாதது என்கிறார்.
  கற்கத் தகுந்த நூல்களை ஐயந்திரிபறக்கற்க வேண்டும். கற்றபின் அந்நூல்கள் குறிப்பிட்டுள்ளபடி நடக்க வேண்டும். எந்தச்திசையில் போனாலும், எந்தநாட்டுக்குச் சென்றாலும் இனிய வாழ்வைப் பெற அது உதவுகின்றபடியல் கல்வியைப் போல் பிற செல்வம் காண்பது அரிது என்று கூறுகிறார்.
கதைப்பாடல்கள்
  கதைப்பாடல்கள் வரிசையில் ‘எழிலரசி’ எனும் குறுங்காவியமும், ‘உழைப்பால் உயர்ந்தோர்’ எனும் கதைப்பாடலும் கவிஞர் இயற்றியுள்ளார். இருகதைப் பாடல்ளும் ஆய்வாளர்க்குக் கிடைக்கவில்லை.
;எழிரலசி; என்னும் கதைப்பாடல் 1933 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு 1934 இல் பதிவு செய்யப் பெற்றதாக ‘தமிழ்நூல் விவர அட்டவணை’118 தெரிவிக்கிறது.
சிலம்பொலி சு. செல்லப்பன் அவர்கள் ‘தமிழ்வளர்ச்சி இயக்குநராக’ இருந்த போது வெளியிடப்பட்ட மேற்படி அட்டவணை, ‘எழிலரசி’ பற்றிய தகவலை முழுமையாகத் தெரிவித்துள்ளது.
‘உழைப்பால் உயர்ந்தோர்’ எனும் கதைப்பாடல்பற்றி வாய்மொழிச் செய்தியன்றி விபரங்கள் ஏதும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
  ‘தமிழன்னை’ எனும் காப்பியம் எழுத முயன்று கொண்டிருந்தார். முதல் இருபது வரிகள் கையெழுத்துப படியாக உள்ளது என்று வீ. முத்துச்சாமி அவர்கள் தம் ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ளார். 119
குறிப்புகள்:
  1. வீ. முத்துச்சாமி, இலக்குவனார் ஆய்வுப் பண்பு, ‘பின்னிணைப்பு’ நேர்முகம்-3, மதுரை 1979, ப-9,
வ-ள் 3-6.
  1. சு. செல்லப்பன் (பொ.ப.ஆ) தமிழ்நூல் விவர அட்டவணை தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடு, சென்னை 1983, ப-573.
  2. வீ. முத்துச்சாமி, இலக்குவனார் ஆய்வுப் பண்பு பின்னிணைப்பு, ப-38.
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiran

Saturday, August 13, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37: ம. இராமச்சந்திரன்




(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36 தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37

  மேலும் தமிழக மக்கள் எழுத்தறிவற்ற மூடர்களாக இருக்கின்றார்களே! புதிய சிந்தனை பெற்று வாழ்வது எங்ஙனம்? என இன்றைய குடியரசு நாடு பெற்றிருக்கும் அவலத்தை கண்டித்தும் நையாண்டி செய்தும் கூறுகிறார் கவிஞர்.
‘கட்டையை நிறுத்தினும் கழுதையைக் காட்டினும்
 அதற்கே வாக்கை அளித்தல் வேண்டும்
 என்றே கூறி நன்றுதம் கட்சிப்
 பேரெண் பெற்றிடப் பெரிதும் முயன்றனர்’
 (துரத்தப்பட்டேன்: அ-ள் 42-45)
தொண்டுள்ளம் கொண்டவருக்கு வாக்குப் போட வேண்டும் என்ற நிலை மாறி தம் சாதியைச் சார்ந்த ஒருவருக்கே வாக்களிக்க முந்துகின்றனர். தொழில் காரணமாகப் பெயர் பெற்ற மக்கள், சாதியினால் பெயர் கொண்டு வேறுபடுகின்றனர்.
‘வன்னியர் வாக்கு அன்னியர்க் கில்லை
 அன்னியர் வாக்கு வன்னியர்க் கில்லை
 …………………………………..
 …………………………………..
 தேவர் வாக்கு வேறெவர்க்கு மில்லை
 முதலியார் வாக்கு முதலியார் தமக்கே’
(துரத்தப்பட்டேன்: அ-ள் 34-39)
இங்கு சாதிகள் பேரால் போரிடுகிறார்கள் என்று கவிஞர் வசைபாடுகிறார்.
தமிழ் மக்கள் தமிழ்மொழியைக் கல்லாது ஆங்கில மோகம் கொண்டு அலைவதை நையாண்டி செய்து பாடியுள்ளார் கவிஞர். இக்கவிதை இரண்டு கண்ணிகளை உடையது.
 ‘ஆங்கிலம் ஒன்றையே கற்றார்-அதற்கே
 ஆக்கையும் ஆவியும் ஈந்தார்
 தாங்களும் வேற்றவர் ஆனார் – தமிழின்
 தொடர்பற்றுப் போனார்’ 113
ஆங்கில மொழி கற்கும் தமிழர்கள் தம்மையும் உயிரையும் விட்டு விடுகின்றனர். வேற்று இனத்தவரைப் போல மாறிவிடுகின்றனர். தமிழ் பேசுவதற்கே நாணமுறுகின்றனர். தமிழ்மொழியைக் கொத்திக் குதறிப் பேசுகின்றனர். எனவே அவர்கள் தமிழ் மொழியின் தொடர்பு முழுவதும் நீங்கப் பெற்றவர் என்று சாடுகிறார் கவிஞர்.
‘யாண்டு பலவின்றியும் நரையுள வாகுதல்’ என்ற கவிதை 1962 ஆம்  ஆண்டு இயற்றப்பட்டது. ‘பழந்தமிழ்’ என்ற மொழி ஆராய்ச்சி நூலில் இன்றைய தமிழ் மக்களின் இழிநிலையை விளக்குமுகத்தான் இக்கவிதையைப் பாடியுள்ளார். இக்கவிதையை இருபது அடிகளையுடைய நிலைமண்டி ஆசிரியப்பா. புறநானூற்றில் பிசிராந்தையார் பாடிய பாடலை மாற்றிப் பாடியுள்ளார். இதனைப் பகடியம் (Prody) என்று ஆங்கிலத்தில் கூறுவர்.
  ஆண்டு பல ஆகாமல் நரை அடைந்த காரணம் என்ன என்று என்னைக் கேட்பீர்களாயின் அதற்கு விடை சொல்கின்றேன். கேளுங்கள்.
  நாட்டை ஆட்சி செய்த நம் இனமக்கள் இன்று அடிமைகளாய் இருக்கின்றனர். இதுநாள் வரை நாம் போற்றிய பண்பு இன்று போலியாகி விட்டது. தமிழர், தமிழ் மொழியை மறந்தனர். பிற மொழிப் பற்றில் வல்லவராக இருக்கின்றனர். தமிழ்நாட்டின் தெருப்பெயர் தமிழில் இல்லை. நம்முடைய ஊரும் பெயரும் ஆங்கில மொழியில் வழங்குகின்றன. இதனைக் கவிஞர் எள்ளி நகையாடுகிறார் .
‘ஆண்டநம் மக்கள் அடிமை களாயினர்
 பூண்டநம் பண்பு போலியதாகின்று
 ………………………………….
 ………………………………….
 ………………………………….
 ஊரும் பேரும் உயர்மொழி வழக்கம்
 அயல்மொழி தன்னில் அமைந்திடக் கண்டோம்’ 114
  தமிழ் மொழியைக் கற்றோர் உயர்பதவி அடைய வாய்ப்பு இல்லையாதலால் தமிழைப் பயில தமிழரே வருவதில்லை. ‘தாய்மொழி ஆட்சி மொழி’ என்பதெல்லாம் பெறும் சொல்லளவில் மட்டும் இருக்கின்றது. தமிழ் மீது பற்றிலாமல் பிறமொழி மீது நாட்டங் கொள்வோரா ஆட்சியில் உள்ளனர். உயர்கல்வியைத் தமிழ்வழிப் பற்றுவதற்குத் தடையாய் இருப்பவர் தமிழரே. தமிழ்மொழியைப் போற்றுவோர் ஆங்கில மொழிக்கு அளிக்கும் தொகையில் பாதியைக் கூட தமிழுக்கு அளிப்பதில்லை. இன்றைய நாளில் தீயவை பெருகுகின்றன. நல்லவை மறைகின்றன. மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி என்பதும் இல்லாமல் போய்விட்டது. எனவே, இளம் வயதிலேயே எமக்கு நரைமுடி தோன்றிவிட்டது’ என்று கவிஞர் தமிழ் மீதுள்ள காதலில் தம் ஆற்றாமையைப் புலப்படுத்துவதோடு தமிழ்ப்பற்றில்லாமல் திரியும் தமிழ் மக்களின் மடமையைச் சுட்டிக் காட்டுகிறார். மேலும் தமிழ் மொழி வளர்ச்சியில் கருத்துச் செலுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துகிறார்.
 ‘உயர்கல் விக்குறு ஊடக மொழியாய்த்
 தமிழ் மொழி அமையத் தடுப்பவர் தமிழரே
 ஆங்கில மொழிக்கே அளிப்பதில் பாதியும்
 தமிழ்மொழிக் களித்திலர் தமிழைப் போற்றுவோர்;
 அல்லவை பெருகவும் நல்லவை குறையவும்
 மக்கள் வாழ்வில் மகிழ்ச்சிதான் இன்றே’ 115
இன்தமிழ் காமின்” என்னும் கவிதை பதினெட்டு அடிகளையுடையது. இதில் `செல்வம் படைத்த செல்வர் சிலர் தமிழ்மொழியைப் போற்றாது இருக்கிறார்கள். பொருளையும் பொன்னையும் மட்டுமே சேர்க்கின்றனர். புகழ் வாய்ந்த செயல்களைச் செய்யாது வாணாளை வீணாகக் கழிக்கின்றனர். எமன் வந்து பற்றுங் காலத்து நடுங்கிச் சாகப் போகிறார்கள். தமிழ் நம்மொழி; தமிழ் இனிமையுடையது என்று மகிழ்ச்சி அடையாத செல்வர் உயிருடையவராயினும் நடைப்பிணமாகவே கருதப்படுவார்’ என்று வன்மையாகக் கண்டிக்கிறார்.
‘பொன்னும் பொருளும் புவியும் புகழும்
 பன்னுறு செல்வம் அனைத்தும் பாரில்
 பெற்றுள தமிழர் சற்றும் தமிழினை
 எண்ணிப் போற்றா திருப்பரேல் எல்லாம்
 …………………………………………
 …………………………………………
 …………………………………………
 உள்ளம் மகிழார் உயிருடைய ரேனும்
 நடைப்பிண மாக நாளைக் கழிப்பரே’116
செல்வர்களே தமிழ்ப்புகழ் பரப்புங்கள். அப்பொழுது தான் நாட்டுமக்கள் உங்களை வணங்கி மதிப்பார்கள்.
  பிறரைக் கெடுக்கும் கீழ்த்தரமான செல்களை நீக்கிவிடுங்கள். வானளாவியப் பெருகிய செல்வமும் பதவியும் நிலையாதது என்பதை உணருங்கள். பிறர்க்கும் அஞ்சி வாழும் அவலத்தைப் போக்குங்கள். தம்மிடம் உள்ள செல்வம் அனைத்தும் கொடுத்து தமிழ் மொழியைக் காப்பாற்றுங்கள்’ என்று கூறுகிறார் கவிஞர்.
  செல்வம் அழியக்கூடியது. மனிதர் இறக்கக் கூடியவர் அழியாது நிலைத்திருப்பது தமிழ் மொழியே. எனவே மாள இருக்கும் செல்வர்களே! அழியும் செல்வத்தைச் சேர்க்காதீர்கள்! எமன் வருமுன் நிலைத்த புகழ் கொடுக்கும் தாய்மொழியைக் காப்பாற்ற முந்துங்கள் என்று செல்வர் இழிநிலையை, மடமையைச் சுட்டிக் காட்டுகிறார்.
குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், பழந்தமிழ் நான்காம் பதிப்பு, வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, 1962, ப-12, கண்ணி 1-2.
  2. சி. இலக்குவனார், பழந்தமிழ் ப-180, அ-ள் 15-20.
  3. சி. இலக்குவனார், பழந்தமிழ் ப-180, அ-ள் 15-20.
  4. சி. இலக்குவனாh, ‘இன்றமிழ் காமின்’ ‘குறள் நெறி’ மலர்-2, இதழ்-15, ஆக°ட் 1965, அ-ள் 1-9.
பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiranதலைப்பு-தொடரும் : thalaippu_thodarum