(அகரமுதல 101, ஐப்பசி 1, 2046 / அக்.18, 2015 தொடர்ச்சி)
thalaippu_ilakkuvanarkavithaigal_oaraayvu_ma.rakachanthiran

4

  தமிழர் மானத்தோடு வாழ வழிகாட்டியவர் தன் மதிப்பு இயக்கத்தலைவர் பெரியார் ஆவர். அதனால் இலக்குவனாருக்குப் பெரியாரிடம் பற்று ஏற்பட்டது. தமிழறிஞர் சாமி சிதம்பரனார் இலக்குவனார்க்கு ஆசிரியர். இவர் சொல்வன்மை படைத்தவர். மாணவரிடையே தூய தமிழ்ப் பற்றை வளர்த்து வந்தார். தன்மதிப்பு இயக்கப் பற்றாளராக விளஙகினார். அதனால் ஆசிரியரைப் பின் பற்றி மாணவராகிய இலக்குவனாரும் பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அதன் வழி நடந்தார்.
  நீதிக்கட்சி பிராமணரல்லாதாரை எல்லா நிலைகளிலும் உயர்த்தவே தோன்றியது. நீதிக்கட்சியின் தலைவராக பனகல் அரசர் விளங்கினார். பிராமணர் அல்லாதாரும் கற்பதிலும் கற்பிப்பதிலும் எவருக்கும் தாழ்ந்தவர் அல்லர் என்பதனை உலகுக்கு எடுத்துக்காட்டத் தலைவர் பன்னீர்ச் செல்வம் அவர்கள் முனைந்தார்கள். இக்கொள்கைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தர்கள் தமிழறிஞர் சாமி சிதம்பரனார் இலக்குவனாரும் ஆவர்.
  அரசர் மடத்தில் எட்டாம் வகுப்புப் (மூன்றாம் படிவம்) பயின்றபின் உயர்நிலைக் கல்வி பெறுவதற்காக இலக்குவனார் ஒரத்தநாடு சென்று பயின்றார். நான்காம் படிவம் முதல் ஆறாம் படிவம் (பள்ளியிறுதி வகுப்பு) வரை இங்குப் பயின்றார். இக்காலக் கட்டத்தில் பாலசுப்பிரமணியமுதலியாரும் தொப்பையாமுதலியாரும் நீதிக்காட்சியின்பால் பற்றுக் கொண்டவர்கள். ஆகவே இருவரிடமும் இவருக்குத் தனி மதிப்பும் பற்றுமுண்டு. அவர்களும் இவரை விரும்பிப் போற்றினர்.
  ஒரத்தநாட்டில் இலக்குவனார் பள்ளியிறுதி வகுப்புப் பயின்று வந்தபோது செங்கற்பட்டில் பிராமணர் அல்லாதார் மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டில், ‘தமிழரிடையே ஒற்றுமையை நிலைநாட்ட நெற்றியில் சமயக்குறிகள் ஏதும் அணிதல் கூடாது”. என முடிவு செய்தனர். செய்தித்தாளில் படித்தவுடன் அம்முடிவு இவர்க்கு உடன்பாடாய் இருந்தது. அன்று முதல் நெற்றியில் திருநீறு பூசுவதை நிறுத்திவிட்டார்.8
  பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு எழுதி முடித்தவுடன் இலக்குவனார் அவர்கள் தம் வீட்டுக்குச் செல்லவில்லை. காரணம் வீட்டில் உள்ள வறுமை நிலைதான். தமிழாசிரியர் பொன்னண்ணாக் களத்தில் வென்றார் தம் ஊருக்கு (செங்கரையூர்) அழைத்துச் சென்றுவிட்டார். இலக்குவனார் ஆங்கிலப்புலமை பெற்றிருந்தமையால் காலையிலும் மாலையிலும் சிறிதுநேரம் களத்தில் வென்றார்க்கு ஆங்கிலம் கற்றுத் தந்தார். களத்தில் வென்றார் இலக்குவனாரின் ஒப்பற்ற நண்பராகவும் விளங்கினார். தமிழ்ப் பற்றும் தமிழ்ப் புலமையும் நிறைந்தவர் அவர். தமிழை விருப்பப் பாடமாகப் படிப்பதனால் நன்மையுண்டு; திருவையாற்றில் அரசர் கல்லூரியில் சேர்ந்து பயின்றுவித்துவான் பட்டம் பெறலாம்’9 என்று கூறி இலக்குவனாரின் தமிழ் ஆர்வத்திற்கு விதை ஊன்றினார்.
  செங்கரையூரில் தங்கியிருந்தபோது (1931) இலால்குடியில் தன் மதிப்பு இயக்க மாநாடு ஒன்று நடந்தது. இலக்குவனார், களத்தில் வென்றார் அவர்களிடம் அம்மாநாட்டிற்குச் சென்று வர விருப்பம் தெரிவித்தார். களத்தில் வென்றார் சைவ சமயப் பற்றுடையவராயினும் தன் மதிப்பு இயக்கக் கொள்கைகளில் தீண்டாமை ஒழித்தல், சாதி வேற்றுமைகளைப் போக்குதல், பிற்பட்ட இனத்தாரை முன்னுக்குக் கொண்டு வருதல் முதலியவற்றில் கருத்து ஒற்றுமை உடையவர். எனவே இலக்குவனார் மாநாட்டிற்குப் போக விரும்பியதும் வெறுப்புக் கொள்ளாமல் பணம் தந்து போய்வர உதவினார்கள்.
  மாநாட்டில் தோழர்கள் இராமநாதன், கே. எம். பாலசுப்பிரமணியன், அழகிரிசாமி, பொன்னம்பலம் முதலியோர் முதன்மையாளராக விளங்கினார்கள். தன்மதிப்பு இயக்கத் தலைவர்கள் சொற்பொழிவைக் கேட்டது இலக்குவனார்க்கு இதுதான் முதன்முறை. பிராமணியத்தால் தமிழ் மக்கள் அடைந்துள்ள இழி நிலையையும் தமிழர்கள் தன்மதிப்போடு வாழவேண்டிய இன்றியமையாமையும் சொற்பொழிவாளர்கள் எடுத்துக் கூறினார்கள்.
  பள்ளி இறுதிவகுப்பில் தேர்வு பெற்றபின் திருவையாறு அரசர் கல்லூரியில் சேர்ந்து வித்துவான் (புலவர்) நுழைவு வகுப்புப் பயின்றார். இப்பொழுது தான் இலட்சுமணன் என்ற பெயரை ‘இலக்குவன்’ என்று கூறி ஆவணங்களில் பதிவு செய்து கொள்ளச் செய்தார். இப்பெயர் மாற்றத்தால் வாழ்க்கையில் அவர் அடைந்த நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு. இப்பெயரைக் கேள்வியுற்ற வடமொழிப் பற்றாளர்கள் இவரை வடமொழிப் பகைவனாகக் கருதி வெறுத்தனர். தமிழ் வெறியன், தன்மதிப்பு இயக்கத்தினன், பெரியார் தொண்டன், கடவுள் கொள்கை இல்லாதவன் எனக் கருதிவிட்டனர். அதனால் இவர், “இலக்குவன் என்பது தனித்தமிழ்ச் சொல்லே. குறிக்கோளை உடையவன் என்பது அதன் பொருள்” என்ற கூட்டங்களில் விளக்கங் கூறினார். தமிழருக்குப் பெயர் தமிழில்தான் இருத்தல் வேண்டும். இதனை உணர மறுப்போர் தமிழ்ப் பற்றாளராக இருத்தல் இயலாது என்று கூறிவந்தார்.
  திருவையாறு அரசர் கல்லூரியில் சேர்ந்த பின்னரும் வறுமை காரணமாக சாம்பான் ஓடை என்ற ஊரில் பயிற்சி பெறாத ஆசிரியராக ஒரு திங்கள் பணியாற்றினார். பின்னர் மீண்டும் கல்லூரிக்கு வந்து பயின்றார். இறுதித் தேர்வில் கல்லூரியின் முதன் மாணவராகத் தேறி வெற்றி பெற்றார்.
குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், என் வாழ்க்கைப் போர், பக்.42, 43
  2. சி. இலக்குவனார், என் வாழ்க்கைப் போர், ப.60.
  3. சி. இலக்குவனார், என் வாழ்க்கைப் போர், ப. 52.
ஆய்வாளர் ம. இராமச்சந்திரன்
(தொடரும்)